“அந்த குடிசையில் அவ்வளவு பணம் வச்சு இருந்தீங்களே… அது எப்படி வந்துச்சு? அந்த அளவுக்கு லட்சக்கணக்கான பணம் எப்படி வந்தது?”
“நான் ஸ்கூல் படிக்கும் பொழுதே நிறைய வேலை பார்த்தேன் ராசாத்தி… அதுல ஒண்ணு தான் ரியல் எஸ்டேட்டில் ப்ரோக்கர் வேலை. எனக்கு கிடைச்ச கமிஷன் பணத்தை எல்லாம் சேர்த்து ஒரு நிலத்தை வாங்கினேன். உங்க ஊருக்கு வரும்போது அந்த இடத்தோட விலை பலமடங்கு அதிகமா இருந்துச்சு. அந்த இடத்தை விற்ற பணம் தான் அது. ஒருவேளை உன்னைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் உடனடியா நிறைய பணம் தேவைப்பட்டா அதை எடுத்துக்கலாம்னு தான் அங்கே வச்சேன். குடிசை வீட்டில் கோணிப் பையில் அவ்வளவு பணம் இருக்கும்னு யாரும் எதிர்பார்க்க மாட்டாங்கன்னு தான் அங்கே ஒளிச்சு வச்சேன்.”
“அவ்வளவு பணத்தை அத்தை கிட்டயோ இல்ல பேங்க்லயோ போட்டு வச்சு இருந்தா பாதுகாப்பா இருந்து இருக்குமே…”
“அதெல்லாம் யோசிக்காமலா… ஒருவேளை நடுராத்திரியில் உன்னை இழுத்துக்கிட்டு ஓடுற நிலைமை வந்தா அந்த நேரத்தில் பேங்குக்கு போக முடியாது இல்ல.. அதான்”
“அப்பாடா…” என்றாள் நிம்மதியாக
“ஏய்! பொண்டாட்டி.. உன் புருஷன் எப்பொழுதும் நேர் வழியில் போய் சம்பாதிக்கிறவன்… இடையில் நடந்த தகிடுதத்தங்கள் எல்லாமும் கூட நல்லவர்களின் நன்மைக்காகத் தான்.”
“யார் அந்த நல்லவர்கள்? உங்க பொண்டாட்டியும், அம்மாவுமா?” என்றாள் விளையாட்டாக.
“இல்லை அம்மணி… அந்தாளு கிட்டே வட்டிக்கு பணம் வாங்கி நிலத்தை, சொத்துக்களை பறி கொடுத்தவங்க மொத்தம் இருபதுக்கும் மேல…”
“அத்தனை பேரா?” என்று வாய் பிளந்தாள் ராசாத்தி.
“இதுவே கம்மி… எங்களைப் போல வெளியே சொல்ல முடியாம ஊரை விட்டு ஓடிப் போன ஆட்களும் இருக்காங்களே…”
“ஆனா அத்தை எப்படி என்னை அவங்களோட மருமகளா ஏத்துக்கிட்டாங்க… நான் இன்னார்னு அவங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?”
“நான் அம்மா கிட்டே நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் தகவல் சொன்னேன் ராசாத்தி. எனக்கு அம்மாவைப் பத்தி தெரியும். அந்தாளு செஞ்ச தப்புக்கு உன்னை வெறுக்கிற அளவுக்கு சின்ன புத்தி அவங்களுக்கு கிடையாது. ஆனா கல்யாணத்தை நேரில் பார்க்க ஆசைப்பட்டு அவங்க வந்துட்டா அதனால எதுவும் குழப்பம் வர வாய்ப்பிருக்குன்னு தான் கல்யாணம் முடிஞ்ச பிறகு அவங்களுக்கு சொன்னேன்.”
“கல்யாணம் முடிஞ்சதும் வேணும்னு தானே சண்டை போட்டு அந்த வீட்டில் இருந்து கிளம்புனீங்க?”
“என்னோட கோபம் நடிப்பு இல்லை ராசாத்தி… அது உண்மை தான். அந்த வீட்டில் என்னோட வேலை எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே முடிஞ்சு போச்சு. கொஞ்ச நாள் அந்த வீட்டில் இருந்து அவங்க எல்லார் கண்ணுலயும் விரலை விட்டு ஆட்டணும்னு நினைச்சேன். ஆனா என்னோட கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அன்னிக்கு காலையில் செஞ்ச மாதிரி எதுவும் செஞ்சிடுவேனோன்னு தோண ஆரம்பிச்சுது. அதே நேரம் நான் இல்லாத நேரம் பார்த்து உன்னை எதுவும் செஞ்சுட்டா என்ன ஆகும்ங்கிற பயத்தில் தான் உடனே அந்த வீட்டை விட்டு கிளம்பிட்டேன்”
“இப்ப தான் மனசுல இருக்கிற பாரமே இறங்கின மாதிரி இருக்கு.”என்று சொன்னவள் அவனது தோளில் வாகாக சாய்ந்து கொண்டாள்.
“என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டதால உனக்கு ரொம்ப கஷ்டம் இல்லையா கண்ணு?” அவளது தாடையை நிமிர்த்தி கண்ணோடு கண் கலந்தவாறு கேட்டான்.
“இதே கேள்வியை நானும் கேட்கலாமே…”
“நீ வந்த பிறகு என்னோட வாழ்க்கையில் சந்தோசம் மட்டும் தான் ராசாத்தி. முன்னாடி எல்லாம் தூக்கமே இல்லாம எத்தனையோ நாள் பேய் மாதிரி ஊரை சுத்தி இருக்கேன்.”என்றவன் அவளை சுற்றி கைகளை போட்டு லேசாக அணைத்துக் கொண்டான்.
“வீட்டுக்கு போகலாமா?அத்தை பாவம் நமக்காக காத்துக்கிட்டு இருப்பாங்களே”
“ஆனாலும் ராசாத்தி… நீ எப்பவுமே என்னை ஒதுக்கி தான் வைக்குற” என்றான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.
“நானா?”
“ஆமா கல்யாணம் ஆன புதுசுலயும் அப்படித்தான்.. இப்பவும் உங்க அத்தை மேல தான் உனக்கு அன்பும் கூட… நான் தான் இறுக்கி கட்டிக்கிட்டா பாப்பாவுக்கு வலிக்குமோனு உன் பக்கத்தில் வரக் கூட பயந்துக்கிட்டு இருக்கேன்.” என்றான் சோகமாக…
“ஆமாமா.. அப்படியே முழுசா பட்டினி கிடக்கிறது போல தான் பேச்சு” என்று சடைத்தவள் அவனது கன்னத்தில் குத்த… அந்த கைகளைப்பிடித்து அப்படியே முத்தம் கொடுத்தான் பாண்டியன்.
“முதல் தடவைடி?”
“எது பொண்டாட்டி கிட்டே அடி வாங்குறதா?”
“நீயா என்னைத் தொடுறது?”
“சீ! இதை எல்லாமா கணக்கு வச்சு இருப்பீங்க?”
“பின்னே… நீ தான் என்னோட பக்கத்தில் கூட வராம இருந்தியே… அப்போ உனக்கு என்னை பிடிக்கலை தானே?”
“ஆமா.. இவர் ரொம்ப கண்டார்… பிடிக்காமத் தான் உங்க பிள்ளையை சுமந்துகிட்டு இருக்கேனா?” என்று கேட்க… ஏனோ அவளது அந்த பதிலில் அவன் சமாதானம் அடையவில்லை.
“மச்சாஆஆஆஆன்”என்று குரலை குழைத்து அவன் காதோரம் அவள் கிசுகிசுக்க… பாண்டியனின் முகத்தில் உயிர்ப்பு வந்தது.
“சொல்லுடி” என்று ஆவலாக அவள் முகம் பார்த்தான்.
“நான் மாசமா இருக்கிறது தெரிஞ்சதில் இருந்தே ராத்திரியில் நீங்க என்னை விட்டு தள்ளித்தானே இருந்தீங்க… அப்போ நானும் இதையே சொல்லலாமா?”
“ஏய்! நீ ரொம்ப வீக்கா இருக்கிறதா டாக்டர் சொன்னாங்கடி..அதுக்கு அப்புறம் எப்படி உன் பக்கத்தில் வர்றதாம்… உன்னை பக்கத்தில் வச்சுக்கிட்டு சும்மா இருக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? ஏதாவது செஞ்சுட்டா அப்புறம் உனக்கும் , குழந்தைக்கும் ஏதாவது ஆகிடுச்சுன்னா என்னால எப்படிடி தாங்க முடியும்?”
“அது எல்லாம் சரி தான்… லேசா ஒரு பார்வை.. சின்னதா ஒரு முத்தம்.. அது கூட இல்லாம போச்சே.. அதுக்கு முன்னாடி எப்பவும் என்னோட முந்தானையை பிடிச்சுகிட்டே சுத்தின மனுஷன் அப்புறம் கண்டுக்கவே இல்லைனு ஆனதும் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?”
“எல்லாம் சரி தான்டி… ஆனா நீ சொல்ற மாதிரி உன்னைப் பார்த்துக்கிட்டே இருந்தா நான் சும்மா இருப்பேனா… முத்தம் கொடுக்கலாம்னு தோணும்.. அப்படி நினைச்சு உன் பக்கத்தில் வந்து உன்னை தொட்டா.. அத்தோட நிறுத்தி இருப்பேனா நான்.. எனக்கே பயமா இருந்துச்சுடி. அதான்… ராத்திரியில் உன் பக்கத்தில் வரலை” என்றவனின் பேச்சில் வெட்கம் வர அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் ராசாத்தி.
“இங்கே இருந்து கிளம்பிடலாம் ராசாத்தி…”
“ஏன் மச்சான்?” என்றாள் குழைவாக…
“இதுக்கு மேலே தனியா இருந்தா சரிப்பட்டு வராதுடி… நீ ஒதுங்கிப் போனப்பவே என்னால உன்னை விட்டு தள்ளி இருக்க முடியலை.. இப்படி நீ உரசிக்கிட்டு இருந்தா… அப்புறம் நான் ஏதாவது ஏடாகூடமா செஞ்சிடுவேன்” என்று சொன்னவன் அத்தோடு நில்லாமல் மனைவியின் கேலிச் சிரிப்பை புறக்கணித்து விட்டு அவள் கைகளைப் பற்றி வீட்டை விட்டு வேகமாக வெளியில் வந்தான்.
மாதங்கள் கழிந்தது… பாண்டியனின் வாரிசு பூமியில் அவதரித்தான்.
இதற்கு இடையில் எத்தனையோ முறை அந்த வீட்டு வாசலில் மன்னிப்பு வேண்டி வந்த தயாளனை வீட்டின் உள்ளே கூட பாண்டியன் அனுமதிக்கவில்லை. எங்கேனும் வெளியில் செல்லும்போது கண்ணில் படும் வேணியும், சந்திராவும் ராசாத்தியை பார்வையாலேயே கொல்லத் துடிக்க… அவளுக்கு அருகில் நிற்கும் பாண்டியனின் ஒற்றைப் பார்வை போதுமானதாக இருந்தது அவர்களை பின்னங்கால் பிடரியில் தெறிக்க ஓட விடுவதற்கு.
வேணியும், சந்திராவும் எந்த நேரம் சொத்துக்களை பாண்டியன் பிடுங்கிக் கொண்டு தங்களை நடுத்தெருவில் நிற்க வைத்து விடுவானோ என்ற பயத்துடன் கழித்தனர். தயாளன் தன்னுடைய ரத்தத்தில் உருவான தன்னுடைய மகனிடமும், ரேவதியிடமும் காலில் விழுந்து கெஞ்சவும் தயாராக இருந்தார். அவரது இந்த மனநிலையாலேயே வீட்டில் இருந்த இரண்டு மனைவிகளின் அதிருப்திக்கும், கோபத்திற்கும் ஆளாகி வீட்டிலேயே இருக்க முடியாமல் தவித்தார்.
பாண்டியன் சொன்னதைப் போலவே ரேவதிக்காக பெண்கள் மறுவாழ்வு மையம் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தான். அவர்களுக்கென்று ஒரு தனி தொழிலும், அந்த தொழிலில் இருந்து வந்த வருமானமும் அவர்களுக்கே மீண்டும் செலவிடப்பட்டது. ரேவதியின் வாழ்நாள் பேரக் குழந்தையுடனும், மனதுக்குப் பிடித்த சேவையை செய்ததால் மகிழ்வுடனே கழிந்தது.
ராசாத்தியைப் பொறுத்தவரை அவளுக்கு தன்னுடைய குடும்பத்தைத் தாண்டி வேறு எதுவுமே இல்லை என்பதைப் போல நடந்து கொண்டாள்.
ஒரு காலத்தில் யாரை கொடிய வனம் போல நினைத்து பயந்தாளோ அவனே அவளின் வானமாக மாறிப் போனான். ஆனந்தத்தை ஒவ்வொரு நாளும் மழையாக அவள் மீது பொழிந்தான் பாண்டியன்.
***** சுபம்*****
எந்த
மனிதனைப் பார்த்தால் பயத்தின் உச்சிக்கே செல்வாளோ அதே மனிதனை திருமணம் செய்து
கொள்கிறாள் நாயகி ராசாத்தி. அதன் பின்னர் என்ன நடக்கிறது. பாண்டியன் அவளின் மனதில்
இடம் பிடித்தானா? அல்லது அவனது
முரட்டுத்தனம் கண்டு அவள் அவனை விட்டு ஒதுங்கினாளா? பாண்டியன்
அவளை திருமணம் செய்து கொண்டதின் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? என்பதை என்னுடைய பாணியில் சொல்லி இருக்கிறேன்.படித்து தங்களின்
கருத்துக்களை சொல்லுங்க மக்களே...
Mail
id: madhumathibharath@gmail.com
கருத்துரையிடுக