வனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3



விடியற்காலையில் இத்தனை ஆண்டுகளாக எழுந்த பழக்கத்தினால் எப்பொழுதும் போல நாலு மணிக்கு எழுந்தவள் அதிர்ந்தாள் தன்னை அணைத்திருந்த அந்த வலிமையான கரத்தைப் பார்த்து…

சில நொடிகள் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகு தான் நினைவு வந்தது முதல் நாள் அவளுக்கும், அவனுக்கும் திருமணம் நடந்ததும்… அருகில் தன்னை அணைத்தபடி படுத்து இருப்பவன் தன்னுடைய கணவன் பாண்டியன் என்பது.

அவன் தூக்கம் கலைந்து விடாதபடி மெல்ல அவன் அணைப்பில் இருந்து விலக முயன்றாள் ராசாத்தி.

“என்னடி… மறுபடியும் ஓட்டமா?” என்று காதுக்கு அருகில் கேட்ட குரலில் திகைத்துப் போய் அவனைப் பார்த்தாள் ராசாத்தி.

“சொல்லுடி…” குரலில் கொடுத்த அழுத்தத்துடன் அவன் கைகள் அவள் இடையைப் பிடித்து இறுக்க… பயத்தில் வார்த்தைகள் வராமல் தத்தளித்தாள் அவள்.

“நேரமாச்சு…”

“நேரமாச்சா? ஏன் ட்ரைன் ஏறி ஓடப் போறியா?” என்றான் ஒரு மாதிரிக் குரலில்.

“இ.. இல்லை… வேலை நிறைய இருக்கு…”

“என்ன வேலை? அதுவும் இந்த நேரத்தில்?” நம்பாமல் வெளிவந்தது அவன் குரல்.

“வாசல் தெளிச்சு கோலம் போடணும்… மாட்டு கொட்டகையை சுத்தம் செஞ்சுட்டு பால் கறக்கணும், தீவனம் வைக்கணும், அப்புறம் வீட்டில் இருக்கிற எல்லாருக்கும் டிபனுக்கு பொங்கல், இட்லி, வடை, சட்னி, சாம்பார் செய்யணும்… எல்லாரும் சாப்பிட்டதும் பாத்திரத்தை எல்லாம் விளக்கிட்டு மதியத்துக்கு குறும்பாட்டு குழம்பும், கோழி வறுவலும், ஆட்டுக்கால் சூப்பும், சுறா புட்டும் செய்யணும்… அப்புறம் துணி துவைக்கணும்…சாயந்திரமா எல்லாருக்கும் பலகாரம் செஞ்சு தரணும்.

சமைச்ச பாத்திரத்தை எல்லாம் விளக்கணும். அப்புறம் ராத்திரிக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரின்னு யாருக்கு என்ன வேணுமோ செஞ்சு கொடுத்துட்டு… அடுத்த நாள் டிபனுக்கு மாவு அரைச்சுட்டு வந்து படுக்க வேண்டியது தான்” என்று வரிசையாக ஒப்பித்தவளை கண்டு அவன் மனம் பாகாய் உருகியது. இதில் இடையில் எங்கேயும் அவள் தன்னுடைய சாப்பாட்டு நேரத்தைப் பற்றி சொல்லவில்லை என்பதை உணர்ந்தவனின் மனம் அவளுக்காக வருந்தியது.

“நீ வேலை செய்வ தெரியும்.. ஆனா இத்தனை வேலையா? தனியாவா செய்வ?… ஏன் உன்னோட அத்தைகள் செய்ய மாட்டாங்களா?”

“அவங்க ரெண்டு பேரும் பாவம்…. வேணி அத்தைக்கு மாசத்தில் முக்கால்வாசி நாள் கையும், காலும் குடைச்சல் எடுத்துக்கும்… சந்திரா அத்தைக்கு தலைவலி வந்துடும்” என்று அறியாமையுடன் சொன்னவளை அத்தனை பிடித்தது அவனுக்கு.

பேசிக்கொண்டே அவனை விட்டு விலகி செல்வதற்காக எழுந்தவள் அவன் மீதே மீண்டும் விழுந்தாள்… அவன் சுண்டி இழுத்ததில்… புடவை முந்தானை இன்னமும் அவன் கரங்களோடு முடிச்சிடப்பட்டு இருப்பதை அறிந்ததும் பரிதாபமாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“நான் போகணும்”

“அதெல்லாம் வேண்டாம்… படுத்து தூங்கு”

“இல்ல.. போகலைனா மாமாவுக்கும், அத்தைங்களுக்கும் கோபம் வரும்.. மாமா அடிப்பார்…” ஏற்கனவே உடலில் சூடு வாங்கியாச்சு.. இனி பெல்ட் அடியும் வாங்கினால் உடம்பு புண்ணாகி விடுமே… அதையும் விட பெரிய பிரச்சினை… அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு அவள் தான் எல்லா வேலையையும் செய்தாக வேண்டும்… அவளுக்கு அந்த வீட்டில் மருந்து போடவும் ஆள் இல்லை.. உதவி செய்யவும் ஆள் இல்லை… அந்த நொடியில் முதல் நாள் இரவு அவள் கால் காயத்திற்கு பாண்டியன் மருந்திட்டது ஏனோ மனக்கண்ணில் மின்னி மறைந்தது. இதை எல்லாம் இவனுக்கு சொல்லி புரிய வைக்கவும் இப்பொழுது அவளுக்கு நேரமில்லையே… குளித்துவிட்டு வேலைகளை ஆரம்பித்தால் தான் அத்தையும், மாமாவும் கேட்கும் நேரத்தில் காபியும், டிபனும் கொடுக்க முடியும்.. தாமதமாக கொடுத்தால் அதற்கும் திட்டு விழும்.. கண்கள் கலங்கத் தொடங்கியது அவளுக்கு. “அதெல்லாம் யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.. நல்லா படுத்து தூங்கு…” என்றவனின் குரலை அவளால் மீற முடியவில்லை. அதே நேரம் அவனது வார்த்தையை அப்படியே பின்பற்றவும் முடியாமல் தவித்தாள் ராசாத்தி. “இல்ல… நான்” “இப்போ நீ தூங்கப் போறியா இல்லையா?” அதட்டினான் “எனக்கு தினமும் இந்த நேரத்தில் முழிப்பு வந்துடும்.. அதுக்கு அப்புறம் தூங்க மாட்டேன்” “இதுவரை அப்படி இருந்து இருக்கலாம்.. இனி அப்படி இருக்கணும்னு அவசியம் இல்லை… இனி நான் எழுந்திரிக்கும் பொழுது தான் நீயும் எழுந்திரிக்கணும்” என்று உத்தரவிட்டவன்  மீண்டும் அவளை கைகளுக்குள் இழுத்துக் கொண்டு உறக்கத்தை தொடர்ந்தான். ராசாத்தியால் அதன்பிறகு துளி கூட உறங்க முடியவில்லை. தாமதமாக எழுந்து போனால் என்னென்ன வகையான சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டுமோ என்று புழுவாக துடித்துக் கொண்டிருந்தாள். அவளது வேதனையை உணர்ந்தாலும் பாண்டியன் அதை மறுத்து பேசவோ… அவளுக்கு ஆறுதல் சொல்லவோ முனையவில்லை.

‘அதெல்லாம் நான் சொல்லித் தான் அவளுக்கு தெரிய வேண்டுமா?… என்னிடம் ஒரு துளி கூட அவளுக்கு நம்பிக்கை இல்லையே’ என்று எண்ணியவன் முசுட்டுத் தனத்துடன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டபடியே மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தான்.

நகங்களை கடித்து துப்பியபடியே… நேரத்தை கடத்தினாள் ராசாத்தி… ஒரு வழியாக பாண்டியன் துயில் கலைந்து எழுந்த பொழுது மணி ஏழு. அவன் எப்பொழுது விழிப்பான் என்று காத்துக் கொண்டு இருந்தவள் போல.. அவன் கண் விழித்ததும் வேகமாக கேட்டாள்.

“இப்போ நான் கிளம்பட்டுமா?”

“இரு… என்ன அவசரம்?” என்று கடிந்தவன்  முதல் வேலையாக அவள் காலில் இருந்த காயத்தை பார்த்தான்.

“பரவாயில்லை.. கொப்புளம் எல்லாம் இல்லை.. இரண்டு நாள் தொடர்ந்து இந்த மருந்தைப் போட்டா சரியாகிடும்” என்று சொன்னவன் குனிந்த தலை நிமிராமல் இருந்தவளை யோசனையுடன் பார்த்தான்.

“இப்போ வெளியே போனதும் மத்தவங்க ஏதாவது கேட்டா.. என்ன சொல்வ?”

“எதைப்பத்தி?”

“நேத்து ராத்திரியைப் பத்தி” என்று கேட்டவனின் பார்வை கூர்மையாக அவளை அளவிட… அவள் முகமோ குழப்பத்தை பிரதிபலித்தது.

“அதைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு?” என்று புரியாமல் கேட்டவளை ஒரு நொடி கூர்ந்து பார்த்தவன் அடுத்த நொடி அவளை கைகளில் ஏந்தி அவள் முகமெங்கும் முத்திரையை பதிக்கத் தொடங்கினான்.

முதல் நாள் இரவைப் போல வன்மையாக இல்லாமல் மென்மையாக அவன் நடந்து கொண்டதில் முதன்முறையாக அவள் உடலில் சிலிர்ப்பு ஏற்பட்டது. நெற்றி…

கண்…

கன்னம்… என்று ஒவ்வொரு இடத்திலும் முத்திரையை பதித்தவன் அவளது இதழ்களில் சில நொடிகள் இளைப்பாறினான்.

இடையில் பதிந்த அவன் கரங்கள் கொடுத்த அழுத்தமும்… உதடுகளால் அவன் வரைந்த கோலமும் ராசாத்தியை வேறு எதைப் பற்றியுமே யோசிக்க விடவில்லை. செவ்வானம் போல சிவந்து நின்றவளை ரசனையுடன் பார்த்துக் கொண்டே விடுவித்தவன் சரசக் குரலில் பேசினான்.

“நேற்று ராத்திரியைப் பற்றி யாராவது கேட்டா இப்போ நடந்தது தான் உனக்கு நியாபகம் வரணும்… புரிஞ்சுதா?” என்றான் கிசுகிசுப்பாக… புரிந்தும் , புரியாமலும் தலையை ஆட்டினாள் ராசாத்தி..

“முதலில் நீ குளிச்சிடு… காபி எடுத்துட்டு இங்கே வா… இரண்டு பேரும் சேர்ந்து குடிக்கலாம்.” அவள் கன்னங்களில் ஒற்றை விரலால் கோலம் போட்டபடி அவன் பேச… பொம்மை போல தலையை ஆட்டி வைத்தாள். இன்னமும் அவளது அத்தைகளோ… மாமாவோ எழுந்திரிக்கவில்லை என்பதே அவளுக்கு நிம்மதியை அளிக்க… அவசரமாக குளித்து முடித்தவள் பாண்டியனுக்கும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் காபியை கலக்கத் தொடங்கினாள்.

மணி எட்டை நெருங்கும் வரையில் யாருடைய அரவமும் கேட்காததால் ‘முதலில் கணவனுக்கு காபியை கொடுத்து விடுவோம்’ என்ற எண்ணத்துடன் வேகமாக அவன் இருந்த அறையை நோக்கி சென்றாள்.

“ஏய்! நில்லுடி… மகாராணிக்கு இப்போ தான் பொழுது விடிஞ்சுதா? தலையில் ஈரம் காயாம நிற்கிறதைப் பார்த்தா இப்போ தான் குளிச்சியா? அடிப்பாவி அப்படின்னா இன்னும் எந்த வேலையும் பார்க்கலையா நீ… விடிய விடிய அந்த பயலோடு ரொம்ப கொட்டம் அடிச்சுட்ட போல” என்று இஷ்டத்திற்கு பேசிய வேணியின் பேச்சில் முகம் சுளித்தாள் ராசாத்தி.

“எனக்கு நேரமாச்சு அத்தை.. நான் போய் அவருக்கு காபி கொடுத்துட்டு டிபன் வேலைகளை பார்க்கணும்” அவளுக்கு அருகில் இருந்த டேபிளில் காபி டம்ளரை வைத்து விட்டு அவள் நகர முயல, அவளது தலைமுடி பின்னால் இருந்து கொத்தாக பற்றப்பட்டது வேணியால்.

வேணி இழுத்த வேகத்தில் ராசாத்தியின் கையில் இருந்த சூடான காபி டம்ளர்கள் அத்தனையும் அவள் முகத்திலேயே கொட்டி விட… வலியில் துடித்துப் போனாள்.

“என்னடி ஒரே நாள் ராத்திரியில்  உனக்கு உடம்பில் திமிர் கூடிப் போச்சா? பேசிக்கிட்டு இருக்கும் பொழுதே… நீ பாட்டுக்கு போற…”

“இ.. இல்லை அத்தை.. அவருக்கு காபி..”

“அந்த ஒண்ணுமில்லாத பயலுக்கு இப்போ என்னடி காபிக்கு அவசரம்… முதலில் போய் எனக்கு குளிக்க சுடுதண்ணி போட்டு வை போ”

“அ.. அவருக்கு காபி கொடுத்துட்டு…”

“ஏன் அந்த வெறும் பயலுக்கு இதுநாள் வரை நீ தான் உன் கையால காபி கொடுத்துட்டு இருந்தியா? நேத்து வரை ரோட்டுக் கடையில் தானே குடிச்சான்… இனியும் அப்படியே இருந்துப்பான்.. நீ போய் நான் சொன்னதை செய்.. இல்ல உன்னை அப்படியே ஆஞ்சுடுவேன் ஆஞ்சு” என்று ஆங்காரமாக சொல்ல.. அதுநாள் வரை அவரது பேச்சை மீறி பழக்கம் இல்லாத ராசாத்தி அழுது கொண்டே  அவருக்காக சுடுதண்ணி வைக்க திரும்பி நடந்தாள்.

இரண்டு அடி தான் எடுத்து வைத்திருப்பாள்…

“ராசாத்தி… உன்கிட்டே காபி கேட்டு எவ்வளவு நேரம் ஆச்சு? இன்னும் என்ன செய்ற?”என்று அழுத்தமான குரலில் கேட்டபடி அங்கே வந்து நின்ற கணவனின் குரலைக் கேட்ட பொழுதும் அவள் திரும்பவில்லை. அவள் மனதுக்குள் கசந்து வழிந்தது.

சூடாக முகத்தில் ஊற்றிக் கொண்ட காபியோடு அவன் முன்னால் நிற்க வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க… அவன் மட்டும் என்ன செய்து விடப் போகிறான்… அத்தை எப்படி காயப்படுத்தினாளோ அதே போல அவனும் அவளைப் போட்டு அடிக்கப் போகிறான்.

இந்த நரகத்தில் இருந்து எனக்கு விடுதலையே கிடையாது போல என்ற எண்ணியவள் அவனை திரும்பியும் பாராமல் மேலே தொடர்ந்து நடக்க… வேணியின் முகத்தில் தெரிந்த வெற்றிக்குறியை பொறுத்துக்கொள்ள முடியாமல் இரண்டே எட்டில் அவள் முன்னால் வந்து நின்றவன் அதிர்ந்து போனான் அவள் முகத்தைப் பார்த்து… முகத்தில் ஆங்காங்கே திட்டு திட்டாய் காபி… கொதிக்க கொதிக்க ஊற்றியதால் அவள் முகமெங்கும் சருமம் சிவப்பாக இருந்தது.

அவன் பார்வை பதட்டத்துடன் மனைவியை ஆராய்ந்தது. அவனுக்கு முகத்தை காட்ட விரும்பாமல் தலை குனிந்து இருந்தாலும் அவள் கண்ணிலிருந்து வந்த கண்ணீர் அவளது நிலையை சொல்லாமல் சொல்ல… வெறி கொண்டவனாக மாறினான் பாண்டியன்.

“என்னடி நடந்துச்சு?”

“அவளை ஏன் கேட்கிற.. என்கிட்டே கேளு… மகாராணி ஆடி அசைஞ்சு லேட்டா வந்தா… எனக்கு சுடுதண்ணி போட்டுக் கொடுத்துட்டு அப்புறம் எவனுக்கு வேணும்னா காபி கொண்டு போய் கொடுன்னு சொன்னேன்… அவ கேட்கல… தலைமயிரை கொத்தா பிடிச்சு இழுத்தேனா… காபியை கூட ஒழுங்கா பிடிக்க துப்பில்லாமல் அவள் மேலேயே ஊத்திக்கிட்டா. என்ன பொம்பளையோ?” என்று கழுத்தை நொடித்துக் கொள்ள.. என்ன நடந்திருக்கக்கூடும் என்பது அவனுக்கு நொடியில் புரிந்து போனது.

ஒரு நொடி கூட தாமதம் செய்யாமல் அவருக்கு அருகில் வந்தவன் ராசாத்தி அவருக்காக வைத்திருந்த காபி டம்ளரை கையில் எடுத்து அவர் ஊகிக்கும் முன்னரே அவரது முகத்தில் ஊத்தினான்.

“ஆ… அம்மா… யாராவது ஓடியாங்க… இந்த பயல் என் மேலே காபியை ஊத்திட்டானே… ஐயோ அம்மா..எரியுதே…” என்று கத்திக்கொண்டே வீட்டுக்குள் ஓடியவரை அலட்சியம் செய்தவன் அவனது செய்கைகளை திறந்து வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த மனைவியை கையோடு இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

பிரமிப்பு கொஞ்சமும் அடங்காமல் ராசாத்தி அவனையே பார்த்துக் கொண்டிருக்க… தன்னுடைய சைக்கிளில் அவளை முன்னால் அமர வைத்துக் கொண்டு ஊர் ஆற்றங்கரைக்கு போனான் பாண்டியன். கணவன் தனக்காகத் தான் செய்தான் என்பது புரிந்தாலும் உள்ளுக்குள் எதுவோ அவளைப் போட்டு அழுத்தியது.

‘என்னதான் வேணி செய்தது தவறாகவே இருந்தாலும் அதற்காக பாண்டியன் அவர் மீது காபியை ஊற்றியது அவசியம் தானா? என்ன இருந்தாலும் அவர் ஒரு பெண்.. அதிலும் வயதில் பெரியவர்… அவரிடம் இப்படி நடந்து கொண்டானே… ஒருவேளை இவன் பெண்களையே மதிக்க மாட்டானோ’ என்று எல்லாம் எண்ணி கலங்கினாள்.

முதல் நாள் இரவு தன்னுடைய காயத்தைப் பார்த்ததும் அவளுக்காக அவன் ஒதுங்கிக் கொண்டது பேதையவளுக்கு அந்த நொடி நினைவில் வரவில்லை. ஆற்றங்கரை வந்த பிறகும் கூட இறங்காமல் தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்தான்.

“என்ன ராசாத்தி… இந்த உலகத்திலேயே இல்லை போல” என்றவனின் கேலிக்குரலில் அவசரமாக சைக்கிளை விட்டு கீழே இறங்கினாள். வெகுநாட்களுக்குப் பிறகு ஆற்றங்கரைக்கு வந்திருப்பதால் கண்களை நாலாபுறமும் சுழற்றி அதன் அழகை கண்களால் பருகினாள் ராசாத்தி.

‘எத்தனை வருடம் ஆச்சு … இப்படி வெளியுலகை பார்த்து’ அவளையும் அறியாமல் பெருமூச்சு விட்டாள்.

“அடேங்கப்பா… மூச்செல்லாம் பலமா இருக்கு… என்ன விஷயம்னு என்கிட்டயும் சொல்றது?” என்று கேட்க… மடை திறந்த வெள்ளம் போல கொட்டினாள் ராசாத்தி. அந்த வீட்டில் அவளிடம் பேசவோ… அவளது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவோ யாருமே இல்லாத நிலையில் இப்படி ஒருவர் கேட்டதுமே வரிசையாக எல்லாவற்றையும் கொட்டத் தொடங்கினாள். அந்த ஒரு வார்த்தையை யாராவது கேட்க மாட்டார்களா என்று ஏங்கி கிடந்தவள் ஆயிற்றே… தடை இல்லாமல் பேசினாள்.

“ரொம்ப வருசத்துக்கு முன்னாடி… சரியா சொல்லணும்னா மாமா வீட்டுக்கு நான் வந்த புதுசுல வீட்டு வேலைக்கு ஒரு பாட்டி இருந்தாங்க…. பேரு  தங்கம்… ரொம்ப நல்லவங்க. அவங்களோட சேர்ந்து சில முறை இங்கே நான் வந்து இருக்கேன். ஆத்தில் எல்லா துணியையும் துவைச்சுட்டு… அப்படியே அந்த பாட்டியும் நானும் இங்கேயே  குளிச்சுட்டு அப்புறமா தான் வீட்டுக்குப் போவோம்.

வாரம் முழுக்க சேர்ந்த துணிகளை எடுத்துட்டு வாரத்தில் ஒருநாள் இங்கே வந்து துவைச்சு ,உலர்த்தி காய வச்சு எடுத்துட்டு போவோம். வீட்டிலேயே துவைச்சா அவங்களுக்கும் வேலை மிச்சம்… ஆனா எனக்காக அவங்க தினமும் துவைக்காம விட்டு வச்சு ஆத்துக்கு எடுத்துட்டு வருவாங்க… அப்படி அவங்க என் மேல பாசம் காட்டுனதே அவங்களுக்கு வினையா போச்சுது.”

“என்னாச்சு?”என்றான் அக்கறை இல்லாதவன் போல…

“அவங்களை வீட்டை விட்டு துரத்திட்டாங்க”

“எதுக்கு துரத்தினாங்க?”

“என் மேலே அக்கறையா இருந்தது மாமா வீட்டில் இருந்தவளுக்கு பிடிக்காமல் போய் இருக்கலாம்”

“அப்படின்னு உனக்கு யார் சொன்னது?” என்றவனின் கண்கள் சொன்ன சேதியை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“மத்த வேலைக்காரங்க பேசிக்கிட்டதை கேட்டேன்” என்று சொன்னவள் எதேச்சையாக அவனைப் பார்க்க அவன் முகம் இறுகிப் போய் இருந்தது. அதைக் கண்டதும் அவளுக்குள் லேசாக சந்தோசம் துளிர் விட்டது.

‘இவரது இந்த கோபம் எனக்காக ஏற்பட்டது அல்லவா’என்று நினைத்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டாள் ராசாத்தி.

“அதுக்கு அப்புறம் நீ இங்கே வரவே இல்லையா?” என்ற கேள்விக்கு உதட்டைப் பிதுக்கினாள்.

“எனக்கு வீட்டு வேலை செஞ்சு முடிக்கவே ராத்திரி பன்னிரெண்டு மணி ஆகிடும். அதுக்கு அப்புறம் கிளம்பி எப்படி இங்கே வர்றது?”

“இன்னிக்கு வரல.. அதே மாதிரி இதுக்கு முன்னாடியும் வந்து இருக்க வேண்டியது தானே”

“இன்னிக்கு நீங்க கூட்டிட்டு வந்ததால தான்… அதுவும் இங்கே தான் போகப் போறோம்னு தெரியாமத் தான் வந்தேன்… வந்ததும் மனசு அமைதியாகிடுச்சு.. ஏதோ சுதந்திர காற்றை சுவாசிச்ச மாதிரி இருக்கு” என்று சொன்னவளின் முகத்தில் தெரிந்த நிம்மதியை ரசித்துக் கொண்டே அவளை நெருங்கியவன் அவள் எதிர்பாரா நேரத்தில் அவளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு தண்ணீரில் விழுந்தான்.              

Post a Comment

புதியது பழையவை