தீண்டாத தீ நீயே tamil novels 43

 

அத்தியாயம் 43

முகத்தில் சூரியனின் கதிர்கள் பட்ட பிறகு சோம்பலுடன் கண்களை திறந்து பார்த்தவள் புதிய இடத்தில் இருப்பதைக் கண்டு வேகமாக எழுந்து அமர்ந்தாள்.

‘நேற்று அவரோடு கிளம்பினோம்... எப்பொழுது இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்... இது எந்த இடம்?’ என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே அறைக்கதவை திறக்கும் சத்தம் கேட்க வேகமாக திரும்பியவளின் பார்வையில் பட்ட கணவனைக் கண்டதும் இமைக்க மறந்து போனாள் வானதி.

‘என் புருஷனா இது?’ என்று எண்ணி வியந்தபடி ஆவென்று வாயை பிளந்து கொண்டு பார்த்தாள் வானதி.

“எப்பொழுதும் கோட்,சூட்... அது இல்லையென்றால் முழுக்கை சட்டையுடன் அலுவலகம் செல்வதற்கு தோதான உடையிலேயே அவனைப் பார்த்து பழகி இருந்தாள் வானதி.

இன்றோ... அவனது தோள்களை இறுக்கமாக கவ்விய ஒரு சாதாரணமான டிஷர்ட் ... முட்டியைத் தொடும் ஒரு ஷார்ட்ஸ்... தலையில் ஒரு தலைப்பாகை... இது அத்தனைக்கும் மேலாக கையில் காபி ட்ரே...

அவனையே விழி எடுக்காமல் பார்த்தவளின் அருகில் பவ்யமாக வந்து நின்ற ஈஸ்வர்... கையில் இருந்த காபி கப்பை அவளிடம் நீட்டி அதை விட அதிக பவ்யத்துடன் தலையை குனிந்து, “குட் மார்னிங் முதலாளியம்மா” என்று நீட்ட... வானதிக்கு சிரிப்பு வந்தாலும்... முகத்தை கெத்தாக வைத்துக் கொண்டு காபியை வாங்கிக் கொண்டாள் வானதி.

கையில் வைத்துக் கொண்டு அவனையே ஆராய்ச்சி பார்வை பார்க்கவும் தானே தொடர்ந்து பேசினான் ஈஸ்வர்.

“சூடு ஆறிப் போறதுக்குள்ளே குடிச்சுப் பார்த்து எப்படி இருக்குனு ஒரு வார்த்தை சொல்லுங்க எசமானியம்மா”

ஈஸ்வர் சொல்லவும்... ஏதோ அவனுக்காக குடிப்பது போன்ற பாவனையுடன் முகத்தை வைத்துக் கொண்டு குடித்தவளின் முகம் மலர்ந்தது ருசியால்...

“சூப்பரா இருக்கு... யார் போட்டது?”

“நான் தான்”

“நீங்களா? ஏன் இங்கே சமையலுக்கு யாரும் இல்லையா?” என்றாள் கேள்வியாக...

“இங்கே... உனக்கு எல்லாமும் நான் தான்... சமையல்காரன்... டிரைவர்... வாட்ச்மேன் எல்லாமே ஐயா தான்” என்றவனின் முகத்தில் கடுகளவு கூட அதை எண்ணி வருத்தம் இல்லாததால், நிதானமாக வீட்டை கண்களால் அளவிட்டாள்.

ஆடம்பரம் இல்லாத எளிமையான வீடு... அவள் இருப்பது மாடியில் என்பது வெளியே தெரிந்த காட்சிகளை வைத்து உணர முடிந்தது. பெரும்பாலும் மூங்கிலை பயன்படுத்தி இருந்தார்கள். ஜன்னல், கதவு என்று எல்லாமே மூங்கிலால் அழகுற அமைக்கப்பட்டு இருந்தது.

மெல்ல படுக்கையில் இருந்து எழுந்தவள் காபியை பருகியவாறே ஜன்னலின் அருகில் சென்று வேடிக்கைப் பார்க்கத் தொடங்கியவள் மெய் மறந்து போனாள். அவள் இருந்த வீடு ஆற்றின் மேலே அமைந்து இருந்தது. ஆர்வம் தாங்க முடியாமல் அறையை விட்டு வெளியே வந்து பால்கனியில் நின்று பார்த்தவளின் புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்தது.

ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டு இருந்தது அந்த வீடு... ஆற்றின் அந்தப்பக்கம் சின்ன சின்னதாய் குன்றுகள்... அதை தாண்டினால் அந்த குன்றுகளின் தாய் போல பெரிதாக ஒரு மலை... மலையின் உச்சியில் வெள்ளிக் கம்பியால் வண்ணம் தீட்டியது போல அருவி வழிந்தோடிக் கொண்டு இருக்க... அந்தக் காட்சியை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவளுக்கு...

“பிடிச்சு இருக்கா?” காதோரம் கேட்ட கணவனின் கிசுகிசுப்பான குரலில் விதிர்த்துப் போய் நெஞ்சம் படபடக்க வேகமாக இரண்டடி பின்னோக்கி நகர்ந்து நின்றாள் வானதி.

“ம்ஹும்.. இது சரி இல்லையே சில்லக்கா” என்றான் லேசாக தலையை சாய்த்து...

“எது?”

“இப்படி நீ தள்ளிப் போறது?”

“ஆங்” என்று வாயைப் பிளந்தாள் வானதி...

“என்ன இப்படி வாயை பிளக்கிற... என்னோட குழந்தையை சுமக்கிறவளுக்கு நான் பக்கத்தில் வந்தா என்னவாம்?” என்று அவன் நியாயம் கேட்ட விதத்தில் வானதியின் முகம் அந்தி வானமானது. அவளது வெட்கத்தை ரசித்தபடியே மெல்ல அவளை நெருங்கி வந்தவன் மென்மையாக அவளின் நெற்றியில் முத்தத்தை பதித்தான்.

“ஒரு முறை மாமான்னு சொல்லேன்” வழக்கமாக அவன் கண்களில் தேங்கி நிற்கும் அதே எதிர்பார்ப்பு...

மறுப்பாக தலையை அசைத்தவள் மெல்ல அவனிடம் இருந்து விலக முற்பட ஒரு பெருமூச்சுடன் அவளிடம் இருந்து விலகினான் ஈஸ்வர்.

“சரி வா குளிச்சுட்டு வரலாம்” என்று அவளை நோக்கி கையை நீட்ட... மலங்க மலங்க விழித்தாள் வானதி...

‘என்ன? வா ஒண்ணா போகலாம்னு சொல்ற மாதிரி கூப்பிடறார்... ஒருவேளை ஒண்ணா குளிக்கணும்னு சொல்லிடுவாரோ’ என்ற ஏடாகூடமான எண்ணம் மனதில் தோன்ற அதே திகிலுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் வானதி. அவளது பார்வையின் பொருளை உணர்ந்து கொண்டவன் உல்லாச மனநிலையோடு சில்மிஷப் பார்வை ஒன்றை அவள் பக்கம் வீசவும் தயங்கவில்லை.

சட்டென்று பார்வையை வேறுபுறம் திருப்பியவள் பொறுமையாக காபியை குடித்து முடிக்க... அவளின் கை பிடித்து தானே அவளை அழைத்து சென்றான் ஈஸ்வர்...

ஆற்றில் தண்ணீர் அதிக ஆழமில்லை... முழங்கால் அளவு தண்ணீர் தான் இருந்தது. அதை கடந்து மறுபுறம் அவளை அழைத்து சென்றவன் மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒற்றையடி பாதையில் அவளை கைப்பற்றி பத்திரமாக அழைத்து சென்றான் ஈஸ்வர்.

சுற்றுப்புறத்தை ஆர்வத்துடன் ரசித்துக் கொண்டே வந்தவள் மேனியில் சில்லென்று நீர் தெறிக்கவும் பார்வையை சுழற்றியவளின் கண்களில் பட்டது சின்னஞ்சிறிய அருவி ஒன்று...

“வீட்டில் இருந்து பார்த்தோமே அது பெரிய அருவி... இது அதை விட ரொம்ப சின்னது... பெரிய அருவிக்கு இன்னொரு நாள் கூட்டிட்டு போறேன். அங்கே போக இன்னும் கொஞ்ச தூரம் உள்ளே போகணும். இன்னைக்கு இங்கேயே குளி” என்றவன் அவளின் பதிலை எதிர்பாராமல் சட்டையை கழட்டிவிட்டு குளிக்க ஆயத்தமாக அவனது செய்கையில் வெட்கம் கொண்டவள் வேகமாக திரும்பி நின்று கொள்ள... அவளது வெட்கத்தை உள்ளுர ரசித்தபடியே அருவிக்குள் ஆட்டம் போடத் தொடங்கினான் ஈஸ்வர்.

ஈஸ்வர் தண்ணீருக்குள் ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்க... எப்படி அவனை வைத்துக் கொண்டே குளிப்பது என்று தெரியாமல் திருதிருவென முழித்தபடி அப்படியே தேங்கி நின்றாள் வானதி.

“ஹே... சில்லக்கா எவளோ நேரம் அப்படியே நிற்ப... குளிக்கலையா? நேரம் ஆகுது பார்... சீக்கிரம் குளிச்சுட்டு வா...”

“நீங்க குளிச்சுட்டு வீட்டுக்கு போங்க... நான் பின்னாடியே வர்றேன்” என்றாள் பார்வையை எங்கோ பதித்து...

“நான் கிளம்பி போய்ட்டா... வீட்டுக்கு வர உனக்கு வழி தெரியுமா?” என்று அவன் திருப்பிக் கேட்க... வழி தெரியாததால் கையைப் பிசையத் தொடங்கினாள் வானதி.

“இதோ பார் சில்லக்கா... இங்கே இருக்கிற வரை... இப்படி தான் குளிச்சாகணும்... சோ... ரொம்ப யோசிக்காம சீக்கிரம் குளிச்சுட்டு கிளம்பு என்றவன் கரை ஏறி துண்டினால் உடலை துடைக்கத் தொடங்க... அவன் பார்த்து விடுவானோ என்ற பதட்டத்துடனேயே அருவியில் இறங்கியவள் உடையை களையாமல் அப்படியே நீருக்கு அடியில் நிற்க... அவளது செய்கையை எண்ணி ஒரு புறம் அவனுக்கு சிரிப்பும்... ஒருபுறம் கோபமும் வந்தது.

‘இந்த விஷயத்தில் இனி பொறுமையாக இருந்தால் வேலைக்கு ஆகாது’ என்று எண்ணியவன் இருந்த இடத்தில் இருந்தே அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து வைத்தான். அவனது பார்வை உச்சி முதல் பாதம் வரை அவளது மேனியில் அலை பாய... நீரின் குளுமையையும் தாண்டி அவளுக்கு உடல் நடுங்கக் காரணமாக இருந்தவன் ஈஸ்வர் தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை... மாற்றுடையை மாற்றாமல் ஈர உடையுடன் மீண்டும் அருவிக்குள் நுழைந்தவன் அதிர்ச்சியுடன் முட்டைக்கண்ணை விரித்து அவள் பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுதே அவளை நெருங்கினான்.

“இப்படித் தான் குளிப்பாங்களா”

“...”

“உன்னைத் தான் கேட்கிறேன்... புடவையோடயே தினமும் குளிக்கிற எண்ணமா உனக்கு?” என்று அதட்டல் போட... வானதியின் கண்கள் கலங்கத் தொடங்கியது.

“நீங்க கொஞ்சம் அந்தப் பக்கமா போங்களேன்... நான் குளிச்சிட்டு வர்றேன்” என்று தாள முடியாத தவிப்புடன் கலங்கத் தொடங்கிய கண்களை பெரும்பிரயத்தனம் செய்து அடக்கிக் கொண்டாள்.

“ஏன்” என்றான் ஒற்றை சொல்லாக...

“நா.. நான் குளிக்கணுமே”

“அதுக்கு நான் எதுக்கு போகணும்?” என்று அவன் நியாயம் கேட்ட விதத்தில் அவள் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்க... அழுத்தமான காலடியுடன் அவளை நெருங்கியவன் அவளது தாடையை அழுந்தப் பற்றினான்.

“நான் உன்னோட புருஷன் வானதி... அது உனக்கு நியாபகம் இருக்கா?”

“...”

“சொல்லுடி... எனக்குத் தெரியாம மறைக்க உன்கிட்டே எந்த ரகசியமும் இல்லை.. எல்லாமே எனக்குத் தெரிஞ்சது தான்... “என்றான் அழுத்தம் திருத்தமாக...

“...”

“எதுக்கு இப்படி தவிக்கிற வானதி... எதை நான் பார்க்கக் கூடாதுன்னு இப்படி துடிக்கிற... உன்னோட வலது காலில் முழங்காலுக்கு மேலே உள்ள மச்சத்தை நான் பார்த்துடுவேன்னு நினைச்சு பயப்படுறியா? இல்ல உன்னோட முதுகில் ஒரே வரிசையில் இருக்கிற மாதிரி இரட்டை மச்சம் இருக்கே அதை நான் பார்த்துடுவேன்னு பயப்படுறியா? இல்லை... உன்னோட நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் நடுவுல இருக்கிற தழும்பை நான் பார்த்துடுவேன்னு நினைச்சு ஒதுங்கி போறியா? இன்னும்....” என்று அவன் மேலே என்ன சொல்லி இருப்பானோ அவனது வாயை தன்னுடைய மலர் கரங்களால் அடைத்து இருந்தாள் வானதி.

“போதுமே... ப்ளீஸ்!” இதழ் மடித்து கடித்தபடி தவிப்புடன் அவள் பார்வை அலை பாய அவள் கன்னங்களை ஏந்தியவன் கண்ணோடு கண் கலந்தவாறு பேசத் தொடங்கினான்.

“இல்லை சில்லக்கா ... ஏற்கனவே ரொம்ப நாள் நான் அமைதியா இருந்துட்டேன்.. அதனால தான் உனக்கு இப்படி எல்லாம் தோணுது.. என்னோட தப்பை எல்லாம் இனி நான் சரி செய்யப் போறேன்” என்ற அவனது அறிவிப்பில் அவளது இதயம் தடதடத்து ஓடும் ரயில் வண்டியானது.

“நான் இங்கே தான்.. உன்னைப் பார்த்தபடி தான் இருக்கப் போகிறேன்... ஒழுங்கா குளிச்சுட்டு வந்து சேர்” என்றவனின் குரலில் இருந்த அதிகாரத் தோரணை அவன் பார்வையில் இல்லை. மாறாக தனக்கு மிகவும் பிடித்த தின்பண்டத்தை எப்பொழுது ருசிக்கலாம் என்று காத்துக் கிடக்கும் குழந்தையின் ஆர்வத்தையும், தேடலையும் கண்களில் காட்டியவன் கொஞ்சமும் மனம் இறங்காமல் அங்கே அவளை பார்க்க தோதாக இருந்த குன்றின் மீது ஏறி தோரணையாக அமர்ந்து கொண்டான். அங்கிருந்தபடியே அவளிடம் பேச்சுக் கொடுக்கவும் அவன் தவறவில்லை...

“ஏன் சில்லக்கா இந்த கிராமத்தில் எல்லாம் பெண்கள் பாவடையை கட்டி குளிப்பாங்களே... அந்த மாதிரி சீன் எல்லாம் இங்கே நடக்காதா?” என்றான் விஷமத்தனமாக

அவனது பேச்சுக்கள் அனைத்தும் அவளுக்குள் ஏதேதோ மாயம் செய்ய... முடிந்தவரை அவனுக்கு தெரியாதபடி உடலை அருவியில் மறைத்துக் கொண்டவள் வேறு வழியின்றி பாவாடையை நெஞ்சு வரை ஏற்றிக் கட்டிக் கொண்டு அவசர அவசரமாக குளித்து முடித்தாள்.

‘ஈர ட்ரெஸ்சோட அவர் முன்னாடி நிற்பதா?’ வெட்கம் பிடுங்கித் தின்றது அவளை...

புடவையை எடுத்து தோளில் போட்டு... உடல் முழுக்க சுற்றிக் கொண்டவள் எதிரில் அமர்ந்து கொண்டு பார்வையாலேயே தன்னை ஸ்பரிசிக்கும் ஈஸ்வரின் பார்வையை சந்திக்கும் தைரியமில்லாமல் அவன் முன்னால் நடக்கத் தொடங்க... இரண்டே எட்டில் அவளை அணுகியவன் அவளது தோளை சுற்றி இருந்த ஈர புடவையை எடுத்து விட்டு அதற்கு பதிலாக காய்ந்த டவலை அவளுக்கு போர்த்தி விட்டான்.

“வேகமா நட...ரொம்ப நேரம் ஈரத்தில் இருந்தா நல்லது இல்லை “ என்றவன் அவளது புடவையை பிழிந்து கையில் எடுத்துக் கொண்டு தன்னிடம் இருந்த மற்றொரு துண்டால் அவளது தலையில் ஈரம் போவதற்கு கட்டி விட்டு அவள் கைகளை பிடித்து வேகமாக நடக்கத் தொடங்கினான்.

வீடு வந்த பிறகும்கூட அவன் முகம் பார்க்க முடியாமல் அவள் அறைக்குள் பதுங்கி விட... சில நிமிட இடைவெளிக்குள் மீண்டும் அவள் முன் பிரசன்னமானான் ஈஸ்வர்.

“டிபன் ரெடி மேடம்... சூடா இருக்கும் பொழுதே சாப்பிடலாம் வாங்க...” என்றவன் அவளை கைப்பற்றி கீழே அழைத்து செல்ல... மூங்கிலில் செய்யப்பட்ட டேபிளில் உணவு அவளுக்காக காத்துக் கொண்டு இருந்தது.

எப்பொழுதும் ஈஸ்வர் வீட்டில் இருப்பது போன்ற வகை வகையான உணவுகள் இல்லை. சப்பாத்தியும்,குருமாவும் மட்டும் தான்.

ஒரு தட்டை மட்டும் எடுத்து வைத்து அவளுக்கு, ஊட்டி விட்டு, தனக்கு அவளை ஊட்டி விட வைத்து ஒரு வழியாக காலை டிபனை உண்டு முடித்தார்கள். ஈஸ்வரை விட்டு தள்ளி ஓடுவதிலேயே அவள் குறியாக இருக்க... எந்நேரமும் பசை போட்டது போல அவளை ஒட்டிக் கொண்டே ஈஸ்வர் சுற்றினான். அவனது அருகில் இல்லாமல் அவள் விலகிப் போனாலும் கூட பார்வையாலேயே அவளைத் துண்டாட... இதற்கு அவனது ஆவேசம் மிகுந்த அணைப்புகளே மேல் என்று அவளுக்கு தோன்றும் அளவுக்கு இருந்தது அவனது பார்வைகள்.

‘இங்கே வந்ததில் இருந்தே அவர் சரியில்லை... ஆளும் சரியில்லை... பேச்சும் சரியில்லை... பார்வை... ஷ்ஷ்.. அப்பப்பா.. என்ன மாதிரியான பார்வை அது... ஆளைத் தின்னும் பார்வை... ஊரில் இருந்த பொழுது கூட அவர் இப்படி அழிச்சாட்டியம் செஞ்சது இல்ல.. இங்கே வந்ததும் ஓவரா சேட்டை செய்றார்.. சீக்கிரமே இங்கே இருந்து கிளம்பிடணும்.’ என்று அவள் எண்ணியதற்கு காரணம் இல்லாமல் இல்லை...

இன்றைய நாள் விடிந்ததில் இருந்து அவள் பார்க்கும் கணவன் அவளுக்கு புதிதாக தெரிந்தான். அவன் காட்டும் நெருக்கம் புதிது... அவன் கண்கள் பேசும் பாஷை புதிது... உரிமையான வேட்கை நிறைந்த அவன் பார்வை புதிது... அவளை அள்ளி அணைக்க ஆவல் காட்டும் அவனது கரங்களின் முரட்டுத்தனம் புதிது.

“இரண்டு பேரும் சேர்ந்தே சமைக்கலாம் வா” என்று கூறி அவளை அவ்வபொழுது சீண்டி சிவக்க வைத்துக் கொண்டே சமையலை முடித்தான். அரைமணி நேரத்தில் முடிய வேண்டிய சமையல் அவனது சேட்டைகளால் இரண்டு மணி நேரமாக மாறிப் போனது.

வானதியின் உள்ளம் நேரம் கூடக்கூட தடுமாறத் தொடங்கியது. கணவனின் அன்பிலும், ஆசையிலும், காதலிலும், தாபத்திலும் தன்னை மறந்து சின்னாபின்னமாகிக் கொண்டு இருந்தாள் வானதி. பகலில் நேரம் போவதே தெரியாமல் அவன் பார்த்துக் கொள்ள மெல்ல மாலை மயங்கி வீடு முழுவதும் இருள் பரவத் தொடங்கியது.

வீடு முழுக்க மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மதியம் செய்த சமையலையே இரவுக்கும் இருவரும் சாப்பிட்டுக் கொள்ள.... மாடியில் உள்ள படுக்கை அறைக்கு செல்ல பயந்து கொண்டு கிச்சனிலேயே தேங்கி நின்று விட்டாள் வானதி.

அவள் அப்படி நின்று விட்டால்...அவன் விட்டு விடுவானா என்ன? அவளைத் தேடி வந்தவன் அவள் கரங்களில் ஒரு கவரை நீட்டினான்...

“இதை கட்டிக்கிட்டு சீக்கிரமா மாடிக்கு வா” என்றவனின் பார்வை அவள் மேனியில் அழுத்தமாக பதிய.... தயங்கி தயங்கி கவரை வாங்கிக் கொண்டாள் வானதி.

“ரொம்ப நேரம் காக்க வைக்காதே” என்று செல்லமாக விரல் உயர்த்தி மிரட்டியவன் அவசர முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு மாடியேறி சென்று விட வானதியின் உடல் வெளிப்படையாகவே நடுங்கத் தொடங்கியது.

நடுங்கும் கரங்களால் மெல்ல கவரை பிரித்துப் பார்த்தாள். ரோஜா வண்ணத்தில் அழகான புடவை ஒன்று அவளுக்காகவே நெய்ததை போல இருந்தது.

புடவையைக் கட்டிக் கொண்டு தேவதையை மிஞ்சும் எழிலுடன் மாடிக்கு அடி மேல் அடி வைத்து நடந்து சென்றாள் வானதி. மேலே அவளுக்காக காத்திருப்பது அவளது கணவன்... இப்பொழுது அவனது தேவை என்ன என்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்தது.அவனது தேவையை தன்னால் தீர்க்க முடியுமா முடியாதா என்ற குழப்பம் அவளை மெலிதாக ஆட்டுவிக்கத் தொடங்க... மத்தளமாய் அடிக்கத் தொடங்கிய இதயத்துடன் அறையை சென்று சேர்ந்தாள் வானதி.

தீ தீண்டும்...

Post a Comment

புதியது பழையவை