தீண்டாத தீ நீயே Tamil Novels Final

 

அத்தியாயம் 50

“சில்லக்கா..போதும்...”

“மூச்..இந்த ஜூசை முதலில் குடிங்க...”

“எனக்கு எதுவும் வேண்டாம் சில்லக்கா..என்னைப் பாரு..நான் ரொம்ப தெம்போட தான் நல்லா இருக்கேன்.இப்படி சாப்பாடு போட்டே அப்புறம் நான் குண்டோதரன் மாதிரி ஆகிடுவேன்”என்று அவன் சோகம் போல கேலி பேச... இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள் வானதி.

“ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு போற வரைக்கும் நான் சொல்றதை ஒழுங்கா கேட்கணும். புரிஞ்சுதா?”

“இல்லைன்னா என்ன செய்வீங்க மேடம்?” என்று அவன் கிண்டலாக...

“பூபதி தாத்தாவை இன்னிக்கு நைட் உங்களுக்கு பாட்டு பாடி தூங்க வைக்க சொல்வேன்”என்று அவள் கித்தாய்ப்பாக புருவத்தை ஏற்றி இறக்க...ஈஸ்வர் உடனடியாக அவளிடம் சரண்டர் ஆகி விட்டான்.

“ராட்சசி....ஏன்டி இந்த கொலைவெறி உனக்கு.நீ பாடினா எனக்கு அத்தை பாடுற மாதிரியே இருக்கும்.அதனால தான் உன்னை பாட சொல்லி கேட்பேன்.நீ என்னடான்னா இப்படி மாட்டி விடறியே?”

“பொண்டாட்டி பேச்சு கேட்கலைனா அப்படித்தான்...”என்று அவள் பொய்யாக மிரட்ட அவளைப் பார்த்து கனிவாக புன்னகைத்தான் ஈஸ்வர்.

“என்னை கவனிச்சது போதும் சில்லக்கா..நீயும் கொஞ்சம் ஓய்வு எடு...உனக்கும் உடம்பு இன்னும் முழுசா குணமாகலை...”

“உடம்பெல்லாம் குணமாகிடுச்சு... மனசு தான்...”என்று இழுக்க...படுத்து இருந்தவன் எழுந்து அமர்ந்தான் .

“என்னடா... என்ன உன் மண்டையை போட்டு குழப்புது?...”

“எப்படி நான் தான் உங்க அத்தை மகள்னு உறுதி செஞ்சீங்க?”

“அதை தெரிஞ்சுகிட்டு என்ன செய்யப் போற?”

“யாரும் இந்த விஷயத்தை சொல்ல மாட்டேங்கிறாங்க..அன்னிக்கு பூபதி தாத்தா கிட்டே கேட்டேன்...ஏதோ சொல்ல வந்தவர் அப்படியே மௌனமாகிட்டார்..யாருமே சொல்லலைன்னா எனக்கு எப்படி தெரியும்?”

“ம்ம்ம்ம்... தெரிஞ்சே ஆகணுமா?”

“ஆமா... இல்லேன்னா எனக்கு ஒரு மாதிரி உறுத்தலா இருக்கும்...”

“என்ன உறுத்தல்?”

“இப்போ நீங்க என்னை காப்பாத்தி கல்யாணம் செஞ்சது ..அதுக்கு அப்புறம் உங்க மனைவியா என்னை ஏத்துகிட்டு என்னோட முழுமனசா குடும்பம் நடத்துறது எல்லாமே நான் உங்க அத்தை மகள்ங்கிறதால தானே? ஒருவேளை அப்படி இல்லைனா?”

“அடப் பைத்தியம்... இங்கே வா...”என்று அவளை கை நீட்டி அழைத்தவன் அவனது படுக்கையில் அவளை அருகில் அமர வைத்து அவளது கையோடு தனது கைகளை பிணைத்துக் கொண்டு பேசத் தொடங்கினான்.

“சில்லக்கா உனக்கும் அந்த மூர்த்திக்கும் அறிமுகமான கொஞ்ச நாளில் அந்த ரெட் காரில் உன்னை ஒருமுறை துரத்தினப்போ... உனக்கு அடிபட்டு உடலில் காயம் ஏற்பட்டது இல்லையா? அப்போ கூட உன்னை ஹாஸ்பிடலில் ஒரு வாரம் வச்சு இருந்தாங்க இல்லையா?”

“ஆ..ஆமா”

“அந்த சம்பவம் வெறுமனே உன்னை பயமுறுத்த மட்டும் நடத்தல...அந்த சம்பவத்தை சாக்கா வச்சு... உன்னை டெஸ்ட் செய்ய பயன்படுத்திக்கிட்டான் அந்த ராஸ்கல்...”

“எ..என்ன டெஸ்ட்?”

“டிஎன்ஏ டெஸ்ட்”

“ஆங்.. ஆனா? அது எப்படி முடியும்?” திகைத்து விழித்தாள் வானதி...

“ஏன் முடியாது?” என்று எதிர்க்கேள்வி கேட்டான் ஈஸ்வர்.

“என்னுடைய DNA டெஸ்ட் செய்யணும்னா அதுக்கு அம்மாவோ, அப்பாவோ இருக்கணுமே..இரண்டு பேரும் தான் இப்... இப்போ இல்லையே”

“யார் சொன்னா?” என்று கேட்டு அவளை கலங்கடித்தான் ஈஸ்வர்... வானதி பேச்சு வராமல் திணறிக் கொண்டு இருக்க... ஈஸ்வர் தொடர்ந்து பேசினான்.

“உங்க அப்பன்..ஹுக்கும்..அப்பா இன்னும் உயிரோட தான் இருக்கார்”என்று மின்னாமல் முழங்காமல் அவள் தலையில் இடியை இறக்கினான் ஈஸ்வர்.

“எ..என்ன? அ..அவர் உயிரோட...” வார்த்தைகள் வராமல் அவள் போராட அவளின் முகத்தையே சலனமின்றி பார்த்தான் ஈஸ்வர்.

“ரொம்ப உணர்ச்சிவசப்படாதே சில்லக்கா..நீ வேணா பாசத்தில் பொங்கலாம்..உன்னைப் பார்த்தா அந்த ஆள் அடுத்த நிமிஷமே கொல்லத் தான் நினைப்பார். ஏன்னா அந்த ஆளுக்கு உன்மேல கடுகளவு கூட பாசம் இல்லை.உடம்பு முழுக்க ஜாதி வெறி மட்டும் தான் இருக்கு”

“...”

“உங்க அப்பாவை பார்க்கணும்னு ரத்தம் துடிக்குதோ”

“...”

“ஒருவேளை உனக்கு பார்க்கணும்னு தோணினா சொல்லு... நானே ஏற்பாடு செய்றேன்..போய் பார்த்துட்டு வா..தனியா மட்டும் கிளம்பி போயிடாதே”. அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் தனக்காகத் தான் சொல்கிறான் என்பது அவளுக்கு புரியாமல் இல்லை...சிரித்துக் கொண்டே தலை அசைத்து மறுத்தாள்.

“நான் போகலை..வேணும்னா அவரை வீட்டுக்கு வர சொல்லுங்க..விருந்து போட்டு கவனிச்சு அனுப்புவோம்” என்றாள் விளையாட்டாக...

“அவனா...ம்ச்... அவரால எங்கேயும் வர முடியாது” என்று சொல்ல வானதியின் முகத்தில் கேள்விக்குறி

“கொஞ்சம் நஞ்சமா பாவம் செஞ்சு இருக்கான் அந்த ஆள்? அன்னைக்கு பஸ் காரில் மோதின ஆக்சிடெண்டில் அவருக்கு உயிர் மட்டும் தான் மிச்சம்... கை,கால் எதுவுமே விளங்கல...”என்றான் ஈஸ்வர் முகத்தில் திருப்தியான புன்னகையுடன்...

வானதியின் முகத்தில் சலனமேயில்லை.

“என்ன வானதி அந்த ஆளுக்காக வருத்தப்படறியா?”

“இல்ல...ஒண்ணே ஒண்ணு கேட்கலாமா?”

“கேளு”

“அவர் இப்போ எங்கே இருக்கார்?”

“அவரை வீட்டில் வச்சு கூட யாரும் பார்க்கலை...ஹாஸ்பிடலில் தான் இருக்கார்.அவரை மத்தவங்க யாரும் போய் பார்க்கக் கூட இல்லை....அவங்க வீட்டில் இருந்து வருஷாவருஷம் அவரோட ஹாஸ்பிடல் பில் அமௌன்ட்க்கு செக் மட்டும் வரும்..மற்றபடி வந்து பார்க்கவோ,ஆறுதலா பேசவோ அந்த வீட்டில் யாரும் இல்லை அவருக்கு...ஜாதி,ஜாதின்னு வெறி பிடிச்சு திரிஞ்ச அந்த ஆளுக்கு இப்போ இந்த நிலைமையில் அந்தாளோட ஜாதிக்காரன் எவன் வந்து பார்த்தான்?...படுக்கையில் தான் எல்லாமும்... நல்லவேளை அந்தாளுக்கு கடவுளே இப்படி ஒரு தண்டனையை கொடுத்துட்டார்..இல்லேன்னா நான் சீக்கிரம் சாகுற மாதிரி செஞ்சு அந்தாளை அவரோட கடைசி காலத்தை ஈசியா முடிச்சு இருப்பேன்.இப்போ பாரு...ஒவ்வொரு நாளும் அந்த ஆளு செத்து செத்து பொழைக்கிறான்...சாகணும்னு தோணும்.ஆனா முடியாது..கொஞ்சமாவா ஆடினான்...”ஈஸ்வரின் முகத்தில் அத்தனை ஆத்திரம் இருந்தது.

“மூர்த்தி செஞ்ச DNA டெஸ்டை அப்படியே நீங்களும் நம்பிட்டீங்களா? ஒருவேளை அது போலியா இருந்தா?”பேச்சை மாற்றினாள் வானதி.

“நானும் ஒருமுறை டெஸ்ட் செஞ்சேன் சில்லக்கா...ஏன்னா..அப்போ இருந்த சூழ்நிலையில் எனக்கும் கூட அந்த குழப்பம் இருந்தது. அதனால நானும் அதை செஞ்சேன்”

“எப்போ? எப்படி?”

“கப்பலில் உன்னை கடத்திட்டு போன பிறகு... ஆரம்ப நாட்களில் உனக்கு சாப்பாடு போடாமல் பட்டினி போட்டேனே...அதில் நீ மயங்குவன்னு நினைச்சேன்...ஆனா நீ மயங்கல..அதுக்கு அப்புறம் தான் அந்த பாம்பை கொண்டு வந்து உன்னை பயமுறுத்தி மயக்கமடைய வச்சேன்...நீ மயங்கினதும் டாக்டர் கிட்டே பேசி...அவர் சொன்ன மாதிரியே எல்லாம் செஞ்சு சாம்பிள் எல்லாத்தையும் அவங்களுக்கு அனுப்பி வச்சேன்...அதுலயும் முடிவு தெரிஞ்ச பிறகு தான் நீ தான் என்னோட தேவின்னு உறுதி செஞ்சேன். அது மட்டும் இல்லாம இன்னொரு ஆதாரமும் இருக்கு...”

“என்ன? என்றாள் பரபரப்பாக...

“உன்னோட செயின்...நியாபகம் இருக்கா?”

“ஆ..ஆமா...”

“அது உனக்கு நான் போட்டு விட்டது.கடைசியா நாம எல்லாம் ஒண்ணா சேர்ந்து இருக்கும் பொழுது உன்னோட பிறந்த நாளை  கொண்டாடினப்போ என்னோட கழுத்தில் இருந்த அந்த செயினை நீ கேட்டனு நான் தான் உனக்கு அதை போட்டு விட்டேன்”

“ஓ...”

“வேற எதுவும் சந்தேகம் இருக்குதா மேடம்?”

“இன்னும் ஒண்ணே ஒண்ணு...”என்றாள் பரிதாபமாக...

“அதையும் கேட்டுடு...”

“ஏன் என்னைத் தேடி நீங்க முன்னாடியே வரலை..சரியா என்னோட கல்யாணத்துக்கு முதல் நாள் நைட் வந்து நின்னீங்களே?கொஞ்சம் முன்னாடியே வந்து இருந்தா..பொறுமையா என்கிட்டே பேசி எல்லா விளக்கத்தையும் கொடுத்து இருந்தா... இவ்வளவு தூரம் கஷ்டப்பட வேண்டி இருந்து இருக்காதே...”

“உண்மை தான் சில்லக்கா..அப்படி நடந்து இருந்தால் எவ்வளவோ நல்லா இருந்து இருக்கும்..ஆனா நீ உயிரோட இருக்கிற விஷயமே எனக்கு உன்னோட கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னாடி தான் தெரிஞ்சது”என்று கூறி அவளை அதிர வைத்தான் ஈஸ்வர்.

“...”

“வைத்தீஸ்வரன் தாத்தா அந்த ப்ளைட் ஆக்சிடெண்டில் கோமாவில் விழுந்தவர் கண் முழித்தது உன்னோட கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னாடி தான்...கண் முழிச்சதும் எனக்குத் தகவல் வர..நான் கிளம்பி வந்தேன். அப்போ தான் என்கிட்டே உன்னைத் தேடித்தான் அப்பாவும் அவரும் போனதா சொன்னார்..இறந்து போன மகனைப் பத்திக் கூட அவர் கவலைப்படலை...”என்றவனின் குரலில் தன்னுடைய தந்தையை எண்ணி வேதனையின் சாயல் மின்னி மறைந்தது.

“அதுக்கு அப்புறம் உன்னை தேடி அலைஞ்சுக்கிட்டு இருக்கிறப்ப தான் அந்த மூர்த்தி யாரோ ஒரு அனாதைப் பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கப் போறான்னு தெரிஞ்சது...அவன் அந்த அளவுக்கு நல்லவன் இல்லைன்னு எனக்குத் தெரியும்.அதனால தான் அந்த பொண்ணைப் பத்தி விசாரிக்க சொன்னேன். அந்தப் பெண்ணோட பேர் வானதின்னு தெரிஞ்சதும் சத்தியமா அந்த நிமிஷம் எனக்கு உயிரே போய்டுச்சு சில்லக்கா..ஒருவேளை நீ என்னோட தேவியா இருப்பியோன்னு ஒரு சந்தேகம் வந்தது...உன்னோட ஆசிரமத்துக்கு ஆட்களை அனுப்பி விசாரிச்சு நீ எப்போ அங்கே வந்தன்னு விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன்...அந்த செயின் பத்தி சொல்லவும் எனக்கு ஐம்பது சதவீதம் உறுதியாகிடுச்சு..முழுசா உறுதி செய்யத் தான் அந்த DNA டெஸ்ட்...”

“ஒருமுறையாவது அந்த மூர்த்தியைப் பத்தி என்கிட்டே சொல்லி இருக்கலாமே...”

“எப்படி சொல்றது சில்லக்கா..நானும் பலமுறை மறைமுகமா உனக்கு அவனைப் பத்தி சொல்லி இருக்கேன்.ஆனா கடைசியா உன்னை இறக்கி விடும் பொழுதும் கூட உன்கிட்டே எவ்வளவோ சொன்னேன்..ஆனா..நீ அவனை கல்யாணம் செஞ்சுக்கிற முடிவில் இருந்து மாறவே இல்லையே...”

“நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க..ஒருவேளை அப்படியே எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்து இருந்தா தான் என்ன? மிஞ்சிப்போனால் அந்த சொத்தை எல்லாம் அவரோட பேருக்கு மாத்தி எழுதி இருப்பார்..அவ்வளவு தானே...அதுக்காகவா அன்னிக்கு நைட்...”மேற்கொண்டு பேச முடியாமல் உதடு கடித்து அவள் நிறுத்த... கண்களில் வலியோடு அவளை பார்த்தான் ஈஸ்வர்.

“சில்லக்கா..உன்னோட ஆதங்கம் எனக்குப் புரியுது..அந்த சொத்துக்களை விட என்னோட கற்பு முக்கியம் தானேடான்னு நீ கேட்கிறது எனக்குப் புரியுது...அந்த ராஸ்கல்க்கு வெறுமனே சொத்தில் மட்டும் குறி இல்லையே..கல்யாணம் முடிஞ்ச பிறகு தினம் தினம் உன்னை எப்படி எல்லாம் சித்ரவதை செய்யலாம்னு அவன் முடிவு செஞ்சு இருந்தான் தெரியுமா?...அது மட்டும் இல்லாம உங்களுக்கு குழந்தை பிறந்ததும் சொத்தை எல்லாம் அவன் பேருக்கு மாத்திட்டு உன்னை கொன்னுட்டு நீ எவன் கூடவோ ஓடிப் போனதா....”என்று சொன்னவன் அதற்கு மேல் சொல்ல முடியாமல் ஆத்திரத்துடன் கட்டிலில் ஓங்கி குத்தினான்.

“அப்படி ஒரு கேடு கெட்ட எண்ணத்தோட இருக்கிறவன் கிட்டே உன்னை அனுப்பிட்டு நான் எப்படி சும்மா இருக்க முடியும் சில்லக்கா? காயத்ரி அத்தையோட ஆத்மா அதை ஏத்துக்குமா? எனக்கு கண் முன்னே அப்போ அவங்களோட சொத்து தெரியல... என்னோட தேவி மட்டும் தான் தெரிஞ்சா...அதனால தான் உன்னை ஊரை விட்டு அனுப்ப பார்த்தேன்.நீ ஒத்துக்கலை. உன்னைக் காப்பாத்த எனக்கு மிச்சம் இருந்த ஒரே வழி... நீயாவே அந்த கல்யாணத்தை நிறுத்திட்டு என்னை கல்யாணம் செஞ்சுக்கணும்.அதுக்கு எனக்கு வேற வழி தெரியல”

“அது தான் ஏன்?”

“அது தான் உங்க பாட்டியோட உயில்... உனக்கு நடக்கிற கல்யாணம்...முழுக்க முழுக்க நீ விரும்பி செய்யுற கல்யாணமா இருக்கணும்.யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் நடக்கக் கூடாது.அப்படி உன்னோட சம்மதத்தின் பேரில் நடந்தா மட்டும் தான் உனக்கு குழந்தை பிறந்ததும் சொத்துக்கள் எல்லாமே உன்னோட பேருக்கு மாறும்.அதுவரை உனக்கு அதை அனுபவிக்கும் உரிமை மட்டும் தான்.விற்கவோ..வேறு யாருக்கும் மாத்தி எழுதவோ முடியாது.”

“அவங்க ஏன் அப்படி ஒரு உயில் எழுதினாங்க?”

“தெரியலை..ஒருவேளை சொத்துக்காக அந்த வீட்டு ஆட்கள் உன்னை யாராவது ஒரு கேடு கெட்டவனுக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டா என்ன ஆகுறதுன்னு நினைச்சு..இப்படி செஞ்சு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.”

“அப்போ இதை மனசில் வச்சு தான் நான் கர்ப்பமா இருக்கேன்னு பூபதி தாத்தா நாடகம் நடத்தினாரா?”

“சில்லக்கா..உனக்கு..நான்...”என்று ஈஸ்வர் திணற...

“எல்லாம் தெரியும்...ஏற்கனவே கொஞ்சம் சந்தேகம் இருந்தது..கொஞ்ச நேரம் முன்னாடி பூபதி தாத்தாவும் சொன்னார்”

“என்ன சொன்னார்?”

“என்கிட்டே மன்னிப்பு கேட்டார்..ஒருவேளை எங்க அப்பா மாதிரி நானும் குணம் கெட்டவளா இருந்து குழந்தை வந்ததும் சொத்து எல்லாத்தையும் என்னோட பேரில் மாத்திக்கிட்டு உங்களை விட்டுட்டு போய்டுவேன்னு அவருக்கு சந்தேகம்..அதை தெளிவுபடுத்திக்கத் தான் அப்படி செஞ்சாராம்..என்னோட நடவடிக்கையில் எந்த மாறுதலும் இல்லாம இருந்தாலும் அவருக்கு நான் நடிக்கறேன்னு ஒரு உறுத்தல் இருந்து இருக்கு...அதனால தான் அவர் என்னை நம்பவே இல்லை.எப்போ உங்களுக்காக நான் விஷம் குடிச்சேன்னு தெரிஞ்சதோ அப்பவே அவருக்கு எல்லாம் கிளியர் ஆகிடுச்சாம்...”

“குழந்தை இல்லையேனு உனக்கு வருத்தம் இல்லையா சில்லக்கா”

“சுத்தமா இல்லை...எனக்கு அந்த வீட்டில் படுக்கையில் ரத்தத்தை பார்த்ததில் இருந்தே உண்மையில் நான் கர்ப்பமாகத் தான் இருக்கிறேனான்னு சந்தேகம் வர ஆரம்பிச்சுது.ஆனா உங்களை வருத்தப்பட வைக்க வேண்டாம்னு தான் அதை பத்தி நான் எதுவுமே கேட்கலை. சீக்கிரமே ஒண்ணு பெத்துகிட்டா போச்சு..அதுக்காக எல்லாம் வருத்தபட முடியுமா?”

“சரி தான்...குழந்தை பெத்துக்கலாம்ன்னு சொல்லிட்டு இப்படி தள்ளி நின்னா எப்படி...கொஞ்சம் கிட்டே வாயேன்...மாமா உனக்கு ஒண்ணு தர்றேன்”

“ஹ்ம்...ஆசை,தோசை..அப்பளம்,வடை..உடம்பு தேறி வீட்டுக்கு வாங்க..அப்புறம் அதெல்லாம் பார்த்துக்கலாம்.”என்று சொன்னவள் நாணசிகப்புடன் அறையை விட்டு வெளியேறினாள்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு...

“டேய்! ஓடாதே..ஒழுங்கா நில்லு...பார்த்து சிரிச்சுகிட்டே நிற்கறீங்களே..அவனை கொஞ்சம் பிடிங்களேன்”என்று வானதி முறையிட..தன்னுடைய மகன் சர்வேஸ்வர் தன்னுடைய மனைவியை படுத்தும் பாட்டை ரசித்துக் கொண்டு இருந்தான் ஈஸ்வர்.

ஓடி வந்த மகன் நேராக தந்தையின் கால்களைக் கட்டிக் கொள்ள அவனை தூக்கி தட்டாமாலை சுற்றி தோளின் மீது அமர வைத்துக் கொண்டான்.

“இன்னிக்கு அவனோட முதல் வருஷ பிறந்த நாள்..எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவாங்க..இவன் என்னடான்னா காலையில் இருந்து ஒரே சேட்டை..குளிக்க மாட்டேன்...புது டிரஸ் போட மாட்டேன்னு... நீங்களாவது கொஞ்சம் உதவி செய்யக் கூடாதா?”

“உதவி தானே? செஞ்சிட்டா போச்சு...”

“பவுனம்மா..இவனை குளிக்க வச்சு புது டிரஸ் போட்டு கூட்டிட்டு வாங்க...” என்று கூறி அவனை அவருடன் அனுப்பி வைக்க... வானதியின் முகம் வருத்தமானது.

“என்னங்க அவனை எப்பப்பாரு பவுனம்மா கிட்டயே கொடுக்கறீங்க? என்னோட அப்புறம் குழந்தை ஒட்டவே மாட்டான்” என்றாள் வருத்தமாக...

“அட மண்டு... உன்னை நம்பி தான் புதுசா ரெண்டு கம்பெனி ஆரம்பிச்சு இருக்கேன்.அதை எல்லாம் நீ தான் பார்த்துக்கணும்..பிள்ளை பின்னாடியே ஓடிக்கிட்டு இருந்தா..அதை சமாளிக்கிறது கஷ்டம்...அதுவும் இல்லாம குழந்தையும் தனியா இருந்து பழகினா தான் நல்லது”

“என்ன நல்லது?”

“அப்போ தான் நமக்கு இப்படி...” என்று சொன்னவன் அவள் சுதாரிப்பதற்குள் அவளை இழுத்து அணைத்து இருந்தான்.

“குழந்தை பிறந்த பிறகு தான் இன்னும் அழகா இருக்கடி...” அவள் காதோரம் மீசை உராய பேசியவனின் செய்கையில் உடல் சிலிர்த்தவள் அவனை தள்ளி நிறுத்த முயன்றாள்.

“அய்யே..விடுங்க..குழந்தை வந்துடப் போறான்...”

“வர மாட்டான்... பவுனம்மா வர விட மாட்டாங்க” என்று சொன்னவன் விஷமமாக கண்ணடிக்க...வானதியின் முகம் அந்தி வானமானது...

“பிராடு..பிராடு... விடுங்க என்னை...”பொய்யாய் சிணுங்க...

“இப்போ எல்லாம் நீ ஒழுங்கா மாமனை கவனிக்கிறதே இல்லை” அவன் பொய்யாய் குற்றம் சாட்ட... அவளோ அவனை முறைத்து பார்த்தாள்.

“நேற்று ராத்திரி கூட என்னை தூங்க விடாம..”பேசிக் கொண்டே போனவள் அவனது ரகசியப் பார்வையில் கப்பென்று வாயை மூடிக் கொள்ள...அவளை மேலும் சீண்டினான் ஈஸ்வர்.

“ராத்திரி...நானா? என்ன செஞ்சேன் சில்லக்கா... கொஞ்சம் சொல்லேன்” சரசமாக அவன் கேட்க..வானதியை வெட்கம் பிடுங்கித் தின்றது.

“சொல்ல மாட்டேன் போடா” என்றவள் அவனை தள்ளி விட்டு ஓட முயல..நொடியில் அதை தகர்த்து இருந்தான் ஈஸ்வர்.

என்னை விட்டு ஓடி போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா தெரியுமா

அவள் காதோரம் அவன் பாட..மெல்ல அவனிடம் இருந்து விலகி அவன் முகம் பார்த்தாள் வானதி.

“ஏன் மாமா..பாட்டி மூலமா வந்த என்னோட சொத்தை எல்லாம் இன்னிக்கு விழா முடிஞ்சதும் சுந்தரேசன் அய்யாவோட ஆசிரமத்துக்கு கொடுக்க சொல்லிட்டீங்களே..உங்களுக்கு அதில் எதுவும் வருத்தம் இல்லையா? பல நூறு கோடி மதிப்புள்ள சொத்து மாமா”

“அட பைத்தியமே... என்னோட உண்மையான சொத்து நீ தான்டி.. இன்னிக்கு பேப்பரில் வந்திருக்கும் செய்தியை பார்த்தியா?....

பிரபல தொழிலதிபர் ருத்ரேஸ்வரின் மனைவி வானதி தன்னுடைய தந்தை வழி பாட்டியின் சொத்துக்கள் அனைத்தையும் அனாதை ஆசிரமத்துக்கு தானமாக கொடுத்தார்”

என்று எல்லா பத்திரிக்கையிலும் முதல் பக்கத்தில் வந்து இருக்க..வானதியின் கண்கள் கலங்கி இருந்தது.

“எனக்கு இது போதும் வானதி..காயத்ரி அத்தையோட ஆத்மா நிச்சயம் சாந்தி அடையும்...”என்று சொன்னவன் அவளை தோளில் சாய்த்துக் கொள்ள வானதியின் மனம் நிம்மதியில் நிறைந்து போனது.

“சரி சரி... சென்டிமென்ட் சீன் எல்லாம் போதும்..நீ கொஞ்சம் ரொமாண்டிக் மூடுக்கு வா” என்று அவளை ஆவலுடன் நெருங்க... அவள் விலகுவது போல நடித்து அவனுடன் வாகாக ஒண்டிக் கொண்டாள்.

“கீழே எல்லாரும் வந்து இருப்பாங்க...”

“பரவாயில்லை”

“போய் அவங்களை எல்லாம் வரவேற்கணும்”

“அதெல்லாம் மத்தவங்க பார்த்துப்பாங்க”

“குழந்தை நம்மை தேடுவான்...”

“அதெல்லாம் தேட மாட்டான்..”

“ஐயோ..நேரம் ஆகுது”

“அதைத் தான் நானும் சொல்றேன்..நேரம் ஆகுது..கிடைச்ச நேரத்தை வேஸ்ட் செய்யக்கூடாது”என்றவன் அவளுள் முழுகத் தொடங்க...எந்த வித மறுப்பும் இன்றி அவன் கைகளில் கரைந்தாள் வானதி.

முத்த சத்தங்கள் காதை கூச செய்ய...அவளின் மெல்லிய சிணுங்கல்கள் அறை முழுவதும் நிரம்பி வழிய... ஆண் அவனின் வேட்கை மிகுந்த ஆலிங்கனமும்,தாபம் நிறைந்த முத்தங்களும் அவர்களை மாய உலகுக்குள் அழைத்து சென்றது.

காதோரத்தில் அவன் பேசிய பேச்சில் அவள் உடல் சிலிர்க்க...அவனுள் அவளும்...அவளுள் அவனுமாக நிரப்பிக் கொண்டார்கள்.

“அடுத்ததா உன்னை மாதிரியே ஒரு பொண்ணு வேணும்டி...”

“நான் இன்னும் பத்து பெத்துக்கலாம்ன்னு இருக்கேன்.. நீங்க என்ன கம்மியா சொல்றீங்க”

“என்னது பத்தா? பத்து எனக்கு ராசி இல்லை...இருபது பெத்துக்கலாம்...”

“என்னது இருபதா?”

“ஏன்டி.. வாயைப் பிளக்கிற..மாமன் உன் மேல வச்சு இருக்கிற காதலுக்கு அதெல்லாம் ரொம்ப கம்மி...என்னை விட்டா ஆயிரம் பிள்ளைகள்னா கூட அய்யா ரெடி...”

“அம்மாடி..அத்தனை பிள்ளையா..நான் வரல...”

“சரி அப்போ உனக்கும் வேணாம் எனக்கும் வேண்டாம்..ஒரு ஐம்பது..ஒரு இருபத்து அஞ்சு...ஒரு பதினைஞ்சு...”என்று அவன் பேரம் பேச...

“உங்களுக்கு என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா”

“இல்லடி காதலா இருக்கு...” என்று சொன்னவன் அதற்கு மேலும் அவளை பேச விடாமல் அவள் இதழ்களை சிறை செய்ய... அங்கே ஒரு அழகிய காதல் சங்கமம் மீண்டும் நடக்கத் தொடங்கியது.

******சுபம்*****

Post a Comment

புதியது பழையவை