அந்த பிரமாண்டமான கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு வகுப்புக்கு செல்ல வேண்டிய வானதி, அங்கே செல்லாமல் அங்கிருந்த மரங்களுக்கு பின்பக்கமாக மறைந்து நின்று கொண்டு எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.அவளுடைய வகுப்பறை வாசலில் நேற்று இருந்த அதே கூட்டம் நின்று கொண்டிருந்தது.
சற்று முன் வரை அவன் அளித்த உபதேசங்கள் எல்லாம் காற்றோடு காற்றாக கரைந்து போயிருக்க,மரத்தில் பல்லி போல ஒட்டிக்கொண்டு இருந்தவளைப் பார்த்ததும் அவனது பார்வை கனிவானது.
‘பாவம் ரொம்ப பயப்படுறா போல’ என்று எண்ணியவன் ‘அவளை மாற்றியே தீர வேண்டும்’ என்று முடிவோடு அவள் பின்னால் நின்று லேசாக தொண்டையை செருமினான்.
“ஹுக்கும்...”
லேசான அவனுடைய செருமலுக்கே பயந்து போனவள் கீழே தடுமாறி விழப் போக ஒற்றைக் கையால் அசால்ட்டாக அவளை பிடித்து நிறுத்தினான் சம்ஹார மூர்த்தி.
“காலேஜ்க்கு படிக்க வந்தா கவனம் முழுக்க படிப்பில் இருக்கணும்.இப்படி கண்ட நினைப்பில் இருக்கக் கூடாது”என்று கண்டிப்புடன் பேசியவனைக் கண்டு மீண்டும் அவள் கண்களில் கண்ணீர் உற்பத்தியாக ஆரம்பித்தது.
“ம்ச்...அது என்ன எப்ப பாரு அழுதுகிட்டு...கண்ணுல டேம் கட்டி வச்சு இருக்கியா?அழுறது கோழைத்தனம்ன்னு உனக்கு யாரும் சொல்லித் தரலையா?”
ஒன்றும் பதில் பேசாமல் அமைதியாக நின்றவளை என்ன செய்வது என்று யோசித்தவன் முன்னே நடக்குமாறு அவளிடம் சைகை காட்டி விட்டு அவளுக்கு சற்று இடைவெளி விட்டு பின் தொடர்ந்தான்.
பிறந்த குழந்தை எப்படி பயந்து பயந்து தத்தி தத்தி தன்னுடைய முதல் அடியை எடுத்து வைக்குமோ அது போல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து சென்றவளை கண்டு அவனது கோபம் எல்லையைக் கடந்தது.பல்லை கடித்தபடி மெதுவாக அவளைப் பின் தொடர்ந்தவன் வகுப்பு வாயிலுக்கு செல்லும் பொழுது பயத்துடன் தன்னை திரும்பி திரும்பி பார்த்தபடியே செல்பவளை மேலும் பின் தொடராமல் அங்கேயே நின்று கொண்டான்.
அவனைப் பொறுத்தவரை இது வேண்டாத வேலை தான்.யாரோ ஒரு பெண் எப்படிப் போனால் என்ன என்று அவனால் இருக்க முடியவில்லை.தலைக்கு மேலே குவிந்து கிடக்கும் ஆயிரம் வேலைகளை முடிப்பதற்கு நேரம் இல்லாமல் இருப்பவன் இந்தப் பெண்ணிற்காக இவ்வளவு தூரம் இறங்கி இருப்பது நிச்சயம் உலக அதிசயம் தான்.ஏதோ ஒன்று அவனை மேலும் அவளை நெருங்க சொல்லி உத்தரவிட ,ஆழ்மனதின் அந்த குரலை மீற முடியாமல் இப்பொழுது அவளைத் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறான்.
நிச்சயம் வகுப்பு வரை தன்னை பின் தொடர்ந்து வருவான் என்று எண்ணி நடந்து கொண்டே இருந்தவள் எதேச்சையாக திரும்பிப் பார்க்க அவன் தொலைவிலேயே தன்னுடைய நடையை நிறுத்தி இருந்தான்.அந்த வம்பர் கூட்டத்திற்கு அருகில் வந்து விட்டாள் அவள்.பேசாமல் அப்படியே திரும்பி விடலாம் என்று நினைத்தால் அதற்கு வழியின்றி தூரத்தில் இருந்தபடியே அவன் கண்களால் மிரட்ட நொந்து போனாள் வானதி.
‘இவனுங்க கேலி பேசறாங்கன்னு இவர் கிட்டே சொன்னா...இவர் கண்ணாலேயே மிரட்டுறார்.’என்று எண்ணியவள் வேறு வழியின்றி அவர்களை தாண்டி செல்ல முயல அவளை அடையாளம் கண்டு கொண்ட அந்த கும்பல் முன் தினத்தைப் போலவே இன்றும் சுற்றி வளைத்துக் கொண்டது.
“ஹே...எங்கே நைஸா ஓடப் பார்க்கிறே...இங்கே இருந்து ஒரு அடி எடுத்து வைக்கக் கூடாது புரிந்ததா?”என்று அவர்களில் ஒருவன் முந்திக்கொண்டு அவளை மிரட்ட சற்று நேரம் முன் வரை அவளுக்குள் கொஞ்சமாக ஒட்டிக் கொண்டு இருந்த தைரியமும் துணி கொண்டு துடைத்தது போல காணாமல் போய் விட்டது.கண்களில் மிரட்சியுடன் புத்தகப்பையை நெஞ்சோடு அழுத்திக் கொண்டு இதழ் கடித்து அழுகையை அடக்கியவாறு அவள் நின்ற கோலம் சம்ஹார மூர்த்தியை அசைத்துப் பார்த்தது.
“நேத்து பச்சை கலர் சுடிதார்ல வந்து இருந்த...இன்னைக்கு சிவப்பு கலர்ல அப்படியே தக்காளிப்பழம் மாதிரி இருக்க...இந்த காலேஜில் எத்தனையோ பணக்கார பொண்ணுங்க எவ்வளவோ செலவு பண்ணி தன்னை அழகா காட்டிக்க முயற்சி செய்றாங்க.ஆனா ஒத்த காசு கூட செலவளிக்காம நீ எப்படித்தான் இப்படி செழிப்பா இருக்கியோ...
ஆமா இந்த டிரஸ் யார் வாங்கிக் கொடுத்தா...ஆசிரமத்துக்கு வர்றவங்க வாங்கி தருவாங்களா...இல்லை நீயே எதுவும் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டியா?”என்று கோணல் சிரிப்புடன் ஒருவன் கேட்க சுற்றி நின்றவர்கள் அவன் சொன்னதின் அர்த்தம் உணர்ந்து கொல்லென சிரித்து வைத்தார்கள்.
அவர்கள் என்ன அர்த்தத்தில் பேசுகிறார்கள் என்று புரியாமல் முழித்துக்கொண்டு நின்றாள் வானதி.இவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது என்பது ஒன்று மட்டுமே அவளது சிந்தனையாக இருக்க அவர்கள் சொன்னதின் அர்த்தம் என்ன என்பதை எல்லாம் அவள் யோசித்துக் கொண்டு இருக்கவில்லை.
அவர்களின் கேலியிலும் கிண்டலிலும் அவளது இதயம் தொம்தொம் என அதிர்ந்து கொண்டிருந்தது.நேரம் கூடக்கூட அதன் வேகம் அதிகரித்து எங்கே தன்னுடைய இதயம் அங்கேயே வெடித்து விடுமோ என்று அஞ்சத் தொடங்கினாள் வானதி.உடலெங்கும் பயத்தில் வேர்த்து வடிந்து கண்களை இருட்டத் தொடங்கியது.
இதோ...இப்பொழுது ...இந்த நிமிடம் தான் மயங்கி விழப் போகிறோம் என்று எண்ணிக் கொண்டிருந்தவள் தனக்கு பின்னால் கேட்டால் அதட்டலான குரலில் பயம் நீங்கி லேசாக திரும்பிப் பார்த்தாள்.
“என்ன நடக்குது இங்கே”தன்னுடைய அகலக் கால்களால் அந்த இடத்தை குறுக்கியபடி வந்து நின்றான் சம்ஹார மூர்த்தி.
கழுகிடமிருந்து தப்பி வந்த கோழிக் குஞ்சு எந்த அளவுக்கு பரிதவிப்போடு தாயின் முகத்தை பார்க்குமோ...அதற்கு சற்றும் குறைவில்லாத வானதியின் பார்வையில் அவனது மனம் கனிந்தது.
வானதியை ஒரு அழுத்தமான பார்வையில் அமைதிப்படுத்தியவன் அவனை கண்டதும் கை,கால்கள் தந்தியடிக்க நின்ற மாணவர்களை நோக்கி தன்னுடைய பார்வையை திருப்பினான்.இப்பொழுது அந்த மாணவர்கள் கூட்டம் மயக்கம் போடும் நிலைக்கு போய்க் கொண்டு இருந்ததை யாரும் சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன...
சம்ஹார மூர்த்தியின் கூர் பார்வை அங்கிருந்த ஒவ்வொருவராக கூறு போட்டுக் கொண்டு இருந்தது.அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் அவனைப் பற்றி நன்றாகவே கேள்விப்பட்டு இருக்கின்றனர்.
என்னதான் சொந்த கல்லூரியாக இருந்தாலும் அதில் அடிக்கடி சம்ஹார மூர்த்தியை பார்க்கவே முடியாது.அத்திப் பூத்தாற் போல எப்பொழுதாவது தான் ஏதேனும் விழாவிற்கு மட்டும் வந்து தலையைக் காட்டி விட்டு போவான்.அந்த நினைப்பில் தான் இந்த கூட்டம் அவளை வம்பிழுக்க ஆரம்பித்தது.இப்பொழுது நேருக்கு நேராக அவனைப் பார்க்கவும் அவர்களுக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போனது.
அவர்கள் புறமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே கையில் கட்டி இருந்த வாட்சை சரி செய்தவாறே பேசத் தொடங்கினான்.
“என்ன பதிலைக் காணோம்”
“சு...சும்மா தான் சார்...கிளாசுக்கு வழி...”பேசிக் கொண்டிருந்தவன் வாய் தானாகவே மூடிக் கொண்டது அவனுடைய துளைக்கும் பார்வையால்.
“படிக்க தானே வந்து இருக்கீங்க?”என்ற அதட்டலான அவனது கேள்வியில் அவர்களது தலை தானாகவே ஆடியது.
“அப்போ..அந்த வேலையை மட்டும் பாருங்க...இல்லைன்னா...என்னைப் பத்தி தெரியும் இல்லையா?”என்று தாடையை தடவியபடி அவன் கேட்க அங்கிருந்தவர்களின் நடுக்கம் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கியது.
“கிளாஸ்க்கு போறோம் சார்...”என்று பயத்துடன் சொன்னவர்கள் அதற்கு மேலும் நொடி கூட தாமதிக்காமல் அந்த இடத்தை விட்டு சிட்டாக பறந்து விட்டார்கள்.
அவர்கள் சென்ற பிறகே வானதிக்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.அது நேரம் வரை பயத்தில் இருந்தவள் இயல்புக்கு திரும்பி சம்ஹார மூர்த்தியிடம் நன்றி உரைக்க திரும்பியவள் அரண்டு தான் போனாள் அவனது அனல் கக்கும் பார்வையில்...
“எத்தனை முறை உனக்கு சொல்லி அனுப்பினேன்.அதுக்கு அப்புறமும் இப்படி பயந்துக்கிட்டு நின்னா என்ன அர்த்தம்...அவனுங்க எவ்வளவு மோசமா பேசறாங்க... பசங்க அப்படி பேசும் பொழுது அங்கேயே மரம் மாதிரி நின்னுக்கிட்டு இருக்க ...அவனுங்களை எதிர்த்து அடிக்க வேண்டாம்...அட்லீஸ்ட் அவங்க அவ்வளவு மோசமா பேசும் பொழுது அந்த இடத்தை விட்டு நகரக் கூட செய்யாம அப்படியே இருக்கியே...இப்படி வம்பிழுத்தா அந்த இடத்திலேயே நிற்க சொல்லித் தான் உங்க அம்மா சொல்லிக் கொடுத்தாங்களா...இது கூட தெரியாம என்ன பொண்ணோ..சே!...உன்னை எல்லாம்...” என்று பேசிக் கொண்டே போனவனின் பேச்சு அப்படியே அந்தரத்தில் நின்று போனது அவளது கண்ணீர் வழியும் முகத்தைப் பார்த்து...
கண்களில் இருந்து துடைக்க துடைக்க கண்ணீர் பெருகினாலும் அதை ஒரு கையால் துடைத்துக் கொண்டே பேச ஆரம்பித்தாள்.
“நான் வளர்ந்த ஆசிரமத்திலயும் பசங்க இருக்காங்க...அவங்க யாரும் இப்படி எந்தப் பொண்ணுகிட்டேயும் மோசமா நடந்துகிட்டது இல்லை...பசங்க இப்படி மோசமா நடந்துக்கிட்டா அடுத்து என்ன செய்யணும்ன்னு எனக்கு யாரும் சொல்லித் தரலை...உங்களுக்கு எல்லாம் அதை சொல்லித் தர அம்மாவோ,அப்பாவோ இருக்காங்க...எனக்கு யாருமே இல்லையே...
சுந்தரேசன் அய்யாவும் எங்களுக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்ததாலே இதெல்லாம் எங்களுக்கு சொல்லித் தரலை...தெரிஞ்சிருந்தா கண்டிப்பா சொல்லித் தந்திருப்பார்.ஒருவேளை எனக்கும் உங்களுக்கு இருக்கிற மாதிரி அம்மா இருந்து இருந்தா சொல்லி இருப்பாங்க”என்று சொன்னவள் கழிவிரக்கத்தில் முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.
அவளது அழுகையையே ஒரு சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவன் தன்னுடைய அமர்த்தலான குரலில் தொடர்ந்து பேசினான்.
“இதுக்குக் காரணம் உனக்கு அம்மா இல்லாதது இல்லை...நீ இத்தனை நாளாய் வெளி உலகத்தை பத்தியே தெரிஞ்சுக்காம இருந்தது தான்.கூட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தா நீ எப்பவும் வெறும் புழுவாத் தான் இருக்கணும்...நீ பட்டாம்பூச்சி ஆகணும்னா கூட்டை விட்டு வெளியே வா”என்று சொல்லி விட்டு அவளது கண்களை உற்று நோக்க அவனது கண்களை நேருக்கு நேராக ஒரு நிமிடம் பார்த்தவளின் உள்ளம் சிலிர்த்து போனது.அவளது கண் வழியே தன்னுடைய எண்ணங்களை அவளுக்கு செலுத்த முயன்றவனின் தீர்க்கமான பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை.
“நா...நான் கிளாசுக்கு போகட்டுமா...”தலையை கீழே குனிந்தபடியே கேட்டாள்.
“ஒவ்வொரு நாளும் உனக்குத் துணைக்கு நான் வந்துக்கிட்டு இருக்க முடியாது.உன் பாதுகாப்பை நீ தான் பார்த்துக்கணும்.புரிஞ்சுதா?”என்ற அவனது அதட்டலுக்கு வேகமாக தலையை ஆட்டினாள் வானதி.
“எது தெரியுதோ இல்லையோ...தலையை ஆட்ட மட்டும் நல்லா கத்து வச்சு இருக்க...”என்று கிண்டலாக சொன்னவன் அங்கிருந்த கிளம்பி தன்னுடைய அலுவலகத்திற்கு செல்லத் தொடங்கினான்.வளைவில் திரும்பும் முன் எதேச்சையாக திரும்பியவனின் பார்வையில் அதே இடத்தில் நின்று கொண்டிருந்த வானதி படவும் அதற்கு மேல் செல்லாமல் அப்படியே நின்று விட்டான்.
அவன் அவளைக் கேள்வியாக பார்க்கவும் நின்ற இடத்தில் இருந்தே அவனுக்கு கண்களால் ஒரு நன்றியை சொன்னவள் அதற்கு மேல் அங்கே நில்லாமல் தன்னுடைய வகுப்பிற்குள் நுழைந்து கொண்டாள்.
‘என்ன மாதிரியான பெண்ணிவள்...ஏன் என்னால் இந்தப் பெண்ணை அப்படியே விட்டு விட முடியவில்லை.இவளுக்கு ஒன்று என்றால் என் உள்ளம் ஏன் பதற வேண்டும்...அவளின் கண்ணீர் என்னை அசைத்துப் பார்க்கிறதே ஏன்?’என்று தனக்குள்ளேயே சிந்தித்துக் கொண்டவன் அதற்குப் பிறகு வந்த நாட்களில் வானதியைப் பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லை.
அதற்காக வானதியை சுத்தமாக மறந்து விட்டான் என்று அர்த்தமில்லை.வேலைகளுக்கு இடையில் அவள் முகம் அவ்வபொழுது அவனுக்கு எதிரில் தோன்றி மறையத் தான் செய்யும்.அதைக் குறித்து வீணாக எந்த ஆராய்ச்சியும் செய்ய அவன் விரும்பவில்லை.
யாரோ ஒரு பெண் அவளைப் பற்றி அதற்கு மேலும் சிந்தித்துக் கொண்டிருக்க அவனது வேலைகள் அவனுக்கு இடம் கொடுக்கவில்லை.ஏகப்பட்ட தொழில்களை அவனைப் பெற்றவர்கள் உருவாக்கி கொடுத்திருக்க,அதை முறையாக பராமரிக்கவே அவனுக்கு நேரம் போதவில்லை.அப்படி இருக்கையில் வானதியை பற்றி தான் ஏன் நினைக்க வேண்டும் என்று தன்னைத் தானே சமாளித்துக் கொண்டவன் அப்பொழுது அறியவில்லை.
பிற்காலத்தில் அவளை தன்னுடைய இணையாக மாற்றிக் கொள்ள தான் எப்பேர்பட்ட காரியங்களை எல்லாம் செய்யப் போகிறோம் என்று...
என்ன தான் அவனுக்கு அவனே சமாதானங்கள் செய்து கொண்டாலும் அதன்பிறகு கல்லூரிக்கு செல்ல வேண்டிய சமயங்களில் ஏனோ அவன் மனம் அதை தவிர்த்து விட்டது.அதற்குக் காரணம் வானதி என்பதை அவன் நன்றாகவே அறிவான்.ஏதோ ஒரு ஈர்ப்பு அவனுக்கு அவளிடத்தில் தோன்றி இருந்ததை அவன் உணரவே செய்தான்.அவனது நிலை அப்படி இருக்க இங்கே வானதியின் நிலை தலைகீழாக இருந்தது.
ஒவ்வொரு நாளும் அவனைக் காண்பதற்காகவே ஆவலுடன் கல்லூரிக்கு வரத் தொடங்கினாள்.அன்று அந்த மாணவர்களிடம் இருந்து அவளைக் காப்பாற்றிய பிறகு கல்லூரி முழுக்க விஷயம் பரவி, மற்ற மாணவர்கள் அவளை கொஞ்சம் மரியாதையாகவே பார்த்தார்கள்.அந்த மரியாதை அவனால் வந்தது என்பது வானதிக்கு தெளிவாகவே புரிந்தது.
மற்ற பெண்களிடமும் அவளே தேடிப் போய் பேச வேண்டிய தேவையின்றி அவளது அழகான முகமும், மென்மையான சுபாவமும்,படிப்பில் அவளுக்கு இருந்த திறமையும் பிடித்துப் போன அவளது வகுப்புப் பெண்கள் தானாகவே விரும்பி வந்து அவளிடம் நட்பு பாராட்டினார்கள்.
பெண்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பாக பழகத் தொடங்கிய வானதியால் ஆண் தோழர்களிடம் இயல்பாக பேச முடியவில்லை.அதற்கு காரணம் அந்த ரேகிங் சம்பவமே...ஓரிருவர் இயல்பாக பேச முன்வந்தாலும் அதை ஏற்க அவள் பயந்தாள்.
இருவரும் தங்களது போக்கில் நாட்களை கடத்திக் கொண்டிருக்க அவர்கள் வாழ்க்கையை மாற்றியே தீருவதற்காக விதி செய்த செயலால் இருவரும் மீண்டும் சந்தித்தனர்.அவளது கல்லூரி விழாவில்...அந்த நாள் அந்த இருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள்...
தீ தீண்டும்...
கருத்துரையிடுக