Theendatha Thee Neeye Tamil Novels 10

 



முகம் சுண்ணாம்பாக வெளுக்கத் தொடங்கி இருந்தது வானதிக்கு.இப்பொழுது அவள் தப்பிக்க வேண்டுமென்றால் இரண்டு வழி தான் உள்ளது.ஒன்று அவனது காரைத் தாண்டிக் கொண்டு போய் சாரதாவின் வீட்டிற்குள் புகுந்து கொண்டால் தப்பிக்கலாம்.ஆனால் அதற்கு வழியில்லை.அவனது கார் தான் வழியை மறைத்துக் கொண்டு நிற்கிறதே…சாரதாவின் வீட்டிற்கு செல்ல அந்தக் கார்க்காரன் மனது வைத்தால் மட்டுமே முடியும்.அவனைத் தாண்டி உள்ளே செல்ல நிச்சயம் அவன் விடமாட்டான் என்பதை வானதியின் அறிவு அவளுக்கு அறிவுறுத்த தவறவில்லை.
அப்படியென்றால் மீதம் இருக்கும் இன்னொரு வழி அன்று போல இன்றும் ஓட வேண்டியது தான்.அப்படி ஓடினால் மட்டும் விட்டு விடுவானா என்ன? அன்று போல இன்றும் துரத்துவான்.கீழே விழுந்து அடி பட்டால் அதையும் கூட குரூரமாக ரசிப்பான். எவ்வளவு வேகத்துடன் நான் ஓடினாலும் எளிதாக என்னை பிடித்து விட முடியுமே.
அன்று கூட இவன் ஏதோ ஒரு சைக்கோ என்று மட்டும் தானே நினைத்தேன்.இன்று கண் முன்னே டிரைவரை அவன் காரில் அடித்துப் போட்டதைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லையே.
காரின் முன் பக்கக் கண்ணாடிகளை உற்றுப் பார்த்து உள்ளே அமர்ந்து இருப்பவனின் முகத்தைப் பார்க்க முயற்சி செய்தாள்.ஆனால் அன்று போலவே இன்றும் உள்ளே அமர்ந்து இருப்பது யார் என்று அவளால் பார்க்க முடியவில்லை.
டிரைவரின் மீது கண் இமைக்கும் நேரத்தில் காரை ஏற்றியவன் அவளை மட்டும் ஏனோ நெருங்கவே இல்லை.காரின் ஆக்சிலேட்டரை மட்டும் உறும விட்டுக் கொண்டிருந்தான்.அவள் அசையாமல் நிற்பது அவனுக்கு ஆத்திரத்தை கொடுத்ததோ என்னவோ விடாமல் மேலும் ஆக்சிலேட்டரை முறுக்கினான்.
இப்பொழுது அவள் அவனிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஓடியாக வேண்டும்.ஆனால் ஓடி என்ன பயன்? அன்றாவது காப்பாற்ற சம்ஹார மூர்த்தி வந்து சேர்ந்தான்.இன்று அதற்கும் வழி இல்லையே…அவன் தான் இப்பொழுது அருகில் இல்லையே என்று எண்ணியவள் சோர்ந்து போனாள்.
அவன் மட்டும் அருகில் இருந்திருந்தால் இந்த ஆபத்து தன்னை நெருங்கி இருக்காதே.தன்னை தனியே விட்டு செல்வதற்கு அவன் தயங்கியதற்கு இது தான் காரணமோ….ஒருவேளை போக வேண்டாம் என்று அவள் தடுத்து இருந்தால் அவன் அவளைப் பிரிந்து போய் இருக்க மாட்டானோ…
அது எப்படி போகாமல் இருப்பான்? நான் யார் அவனுக்கு?ஏதோ நம்மை பாட்டு கிளாசுக்கு சேர்த்து விட்டு இருப்பதாலும்,தன்னுடைய படிப்பு செலவை ஏற்றுக் கொண்டு இருப்பதனாலும் தான் நம்மிடம் தினமும் இரண்டு வார்த்தை பேசுவதே…அப்படி இல்லை என்றால் அவர் எல்லாம் என்னிடம் நின்று பேசக் கூட மாட்டாரே..அந்த தகுதி கூட எனக்கு இல்லையே…
என்னைப் பற்றி அவர் ஏன் வருத்தப் படப் போகிறார்?முதலில் அவர் எதற்கு வருத்தப்பட வேண்டும்? கோடிகோடியாக லாபம் வரும் பிசினஸா அல்லது நானா என்றால் அவர் பிசினெஸ்சை தானே பார்ப்பார்…
யாரோ ஒரு அனாதைக்காக அவர் எதற்கு தனக்கு வரும் லாபத்தை இழக்க வேண்டும்’என்று தன்னைத்தானே கேள்வி கேட்டு உள்ளுக்குள் கண்ணீர் வடித்தாள் வானதி.
அவள் மனம் இந்த நொடி சம்ஹார மூர்த்தியை நாடியது.அவன் மடி சாய்ந்து கதறத் துடித்தாள்.
ஆனால் எப்படி நடக்கும்? இதோ கண் முன்னால் எமனைப் போல நிற்கிறானே இவனைத் தாண்டி நான் எப்படி அவரைப் பார்ப்பேன்?இனியொருமுறை என் வாழ்க்கையில் அவரை சந்திக்க முடியுமோ முடியாதோ தெரியவில்லையே…என்று கண்ணில் கலக்கத்துடன் நின்ற தோற்றம் அந்த கார்க்காரனுக்கு நிச்சயம் மகிழ்ச்சியைத் தான் கொடுத்து இருக்கும் என்பதை அவளால் உணர முடிந்தது.
அவள் அந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை.அப்படி அவனிடம் இருந்து தப்பிக்க முயலுவதால் மட்டும் என்ன பிரயோஜனம் இருந்து விடப் போகிறது?என்று எண்ணியவள் சோர்வுடன் கண்களை மூடிக் கொண்டு அப்படியே நின்றாள்.
‘டிரைவரின் மீது காரை ஏற்றித் தள்ளியதைப் போல என் மீதும் காரை ஏற்றித் தள்ளட்டும்.’என்ற முடிவுக்கு வந்தவளாக அப்படியே நின்று விட்டாள் வானதி.
“அசையாதே வானதி”என்ற சம்ஹார மூர்த்தியின் குரலில் தாங்க முடியாத ஆச்சரியத்துடன் திரும்பியவளின் பார்வையில் ஒரு மரத்தின் பின்னால் இருந்து துப்பாக்கியால் அந்தக் கார்க்காரனை குறி வைத்தபடி நின்று கொண்டு இருந்தவன் சாட்சாத் சம்ஹார மூர்த்தியே தான்.
‘இவர் எப்படி வந்தார்…வெளியூர் போவதாகத் தானே சொல்லி இருந்தார்?’என்பது போன்ற அவளின் கேள்விகளை சம்ஹார மூர்த்தி உணர்ந்தாலும் இப்பொழுது அவனுடைய கவனம் முழுக்க அந்தக் கார்க்காரனின் மீது மட்டுமே இருந்தது.
அவன் கைகளில் இருந்த துப்பாக்கி கொஞ்சமும் ஆடவில்லை.அதன் முனை சரியாக அவனைக் குறிபார்த்துக் கொண்டு இருந்தது.சம்ஹார மூர்த்தியின் பின்னால் இருந்த அவனது ஆட்கள் வேகமாக முன்னேறி காரின் உள்ளே இருந்த மனிதனை வேகமாக இழுத்து வெளியே போட்டனர்.
அவர்களை முந்திக் கொண்டு அவன் முகத்தை பார்க்க முயன்றாள் வானதி.முகத்தில் கோமாளியின் முகமூடியை அணிந்து இருந்தான் அவன்.சம்ஹார மூர்த்தியின் ஆட்கள் அவனது கைகளை பின்னுக்கு கட்டி விட்டு அவனது முகமூடியை கழட்ட முயல அதை தடுத்து நிறுத்தி விட்டான் சம்ஹார மூர்த்தி.
“இங்கே வைத்து எதுவும் வேண்டாம்…நம்ம இடத்துக்கு கூட்டிட்டு போங்க…அங்கே போய் விசாரிச்சுக்கலாம்.இங்கே வேற யார் கண்ணுலயும் படறதுக்கு முன்னாடி அவனை வண்டியில் ஏத்தி நம்ம இடத்துக்கு கொண்டு போய் சேருங்க”என்று உத்தரவாக சொன்னவன் அவர்கள் அவனது கை,காலை கட்டி ஒரு மூட்டை போல காருக்குள் ஏற்றும் வரையிலும் தன்னுடைய துப்பாக்கியை கீழே இறக்கவில்லை.
அந்தக் கார்க்காரனை காருக்குள் ஏற்றி அனுப்பியதும் தன்னுடன் இருந்த மற்ற ஆட்களையும் அனுப்பி வைத்த பிறகே ஒரு பெருமூச்சுடன் துப்பாக்கியை கீழே இறக்கினான்.
வானதிக்கு உள்ளுக்குள் ஏகப்பட்ட கேள்விகள் அவனிடம் கேட்பதற்கு தயாராக இருந்தது.சுற்றிலும் யாருமே இல்லை.அவனும்,அவளும் மட்டும் தான் தனியாக இருந்தார்கள்.அவள் புறம் திரும்பியவன் மென்நகை புரிந்தவாறே அவளிடம் பேசினான்.
“ரொம்ப பசிக்குது வானதி..வாயேன் எப்பவும் போற ஹோட்டலுக்கு போகலாம்”என்று இலகுவாக பேசியவன் அவளுக்கு முன்னால் நடக்க அவளும் பதில் பேசாது காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.காரில் இருந்து இறங்கி காபி ஷாப்பில் அவன் காபி அருந்தி முடிக்கும் வரையிலும் அதே மௌனம் தான் அவர்கள் இருவருக்கு இடையிலும் இருந்தது.
வரிசையாக கேள்விகள் கேட்க துடித்துக் கொண்டு இருந்த அவளது முகத்தைப் பார்த்தவன் அவளை ரொம்பவும் சோதிக்காமல் பேசத் தொடங்கினான்.
“நான் ஊருக்குப் போகலை வானதி”
“என்ன?ஆனா…ஏன்? இன்னைக்கு காலையில் கூட போனில் என்கிட்டே பேசினப்போ…”
“நான் ஊருக்கு நிஜமாகவே போகலை வானதி..போன மாதிரி செட் பண்ணினேன்”
“ஏ…ஏன்?”
“நான் சொல்லி முடிக்கும் வரை முழுசா கேளு…இடையில் பேசாதே”என்ற கட்டளையுடன் பேசத் தொடங்கினான்.
“இதுக்கு முன்னாடி இந்தக் கார்க்காரனை என்னுடைய ஆட்கள் பிடிக்க முயற்சி செஞ்சப்போ…எப்படியோ அவங்க கண்ணில் மண்ணைத் தூவிட்டு தப்பிச்சுட்டான்.சரி அன்னிக்கு நடந்த சம்பவம் ஏதோ எதேச்சையா நடந்த சம்பவமா இருந்து இருந்தா நான் அப்படியே விட்டு இருப்பேன்.
ஆனா சமீபமா கொஞ்ச நாள் இந்த கார் நம்மளை பின் தொடர ஆரம்பிச்சது…அதாவது உன்னை…. உன்னை நான் எங்கே கூட்டிக்கொண்டு போறேனோ அங்கே எல்லாம் இந்த கார் நம்ம பின்னாடி வந்துச்சு.ஒருவேளை என்னைத் தான் யாரோ தொடர்ந்து வர்றாங்களோன்னு நான் சந்தேகப்பட்டேன்.அப்படி எல்லாம் எதுவுமே இல்லைன்னு அடுத்த இரண்டாவது நாளில் எனக்குத் தெரிஞ்சுடுச்சு.அவன் உன்னை மட்டும் தான் தொடர்ந்து வந்தான்.
ஆனா நான் உன் பக்கத்தில் இருக்கும் பொழுது அந்தக் கார்க்காரன் உன்னை நெருங்கல..அதே சமயம் நீ எப்பவும் என்னோடவே இருந்ததால அவனுக்கு சரியான சந்தர்ப்பம் கிடைக்கலை.அந்த சந்தர்ப்பத்தை அவனுக்கு உருவாக்கிக் கொடுத்தா அவன் நிச்சயம் மாட்டுவான்னு நினைச்சேன்.அதனால தான் ஊருக்கு போற மாதிரி அவனை நம்ப வைக்க இந்த நாடகம்.இப்போ நான் நினைச்ச மாதிரி அவனையும் பிடிச்சாச்சு…இனி எந்தப் பிரச்சினையும் இல்லை”
“அப்போ எனக்கு ஆபத்து வரும்னு தெரிஞ்சு தான் தனியா அவன்கிட்டே மாட்டி விட்டீங்களா?”அவள் குரலில் அழுகை எட்டிப் பார்க்கத் தொடங்கியது.
ஒரு நிமிடம் மௌனித்தவன் தொடர்ந்து பேசினான் சம்ஹார மூர்த்தி.
“எனக்கு வேற வழி இல்லை வானதி..அதை நீ புரிஞ்சுக்கணும்.நாம அவனைப் பிடிக்க முயற்சி செய்றோம்னு கொஞ்சம் சந்தேகம் வந்தாக் கூட அவனோ அல்லது அவனை அனுப்பியவர்களோ உஷார் ஆகி வேற ஏதாவது வழியில் உனக்கு ஆபத்து ஏற்படுத்த முயற்சி செய்வாங்க…அதுவும் இல்லாம நம்மகிட்டே அவனைப் பத்தின எந்த தகவலும் இல்லை.வெறுமனே சிகப்பு கலர் கார் அப்படிங்கிற அடையாளத்தை தவிர வேற எதுவும் நம்ம கையில் இல்லையே.அவனோட காரோட நம்பர் ப்ளேட் கூட டுப்ளிகேட் தான்.அதனால தான் நான் இப்படி ஒரு ரிஸ்க்கை எடுக்க வேண்டியதா போச்சு”
“என்கிட்டே முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே…நான் இப்படி பயந்து இருக்க மாட்டேனே…”
“இல்லை வானதி…உனக்கு முன்னாடியே சொல்லி இருந்தா உன் முகத்தில் பயம் இருந்து இருக்காது.அதைப் பார்த்து அவனுக்கு சந்தேகம் வந்துட்டா காரியம் கெட்டுடும்…அதனால தான் உனக்கு எதையுமே சொல்லலை.”
“நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? என் கண்ணு முன்னாடியே டிரைவர் மேல காரை ஏத்திக் கொன்னுட்டான் அவன்…”
“டிரைவரை என்னோட ஆட்கள் தான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் இருக்காங்க…ஒண்ணும் பயமில்லை…கையிலும்,காலிலும் லேசான அடி அவ்வளவு தான்.ஒரு இரண்டு மாசம் ரெஸ்ட் எடுக்கக் சொல்லி டாக்டர் சொல்லி இருக்காங்களாம்…எனக்கு மெசெஜ் வந்துச்சு”
“இருந்தாலும்…”
“வானதி கொஞ்சம் நிலைமையை புரிஞ்சுக்க முயற்சி செய்…அவன் எவ்வளவு ஆபத்தானவன்னு உனக்கோ இல்லை எனக்கோ தெரியாது…அப்படி இருக்கும் பொழுது அவனை பிடிச்சு உன்னை பாதுகாப்பா வைக்கிறது பத்தி மட்டும் தான் நான் யோசிச்சேன்.உன்கிட்டே சொல்லாமல் விட்டது கூட அவனை எந்தக் காரணத்தைக் கொண்டும் தப்பிக்க விடக்கூடாதுன்னு தான்.”
“ஒருவேளை டிரைவரை காரில் ஏத்தின மாதிரி என் மேலயும் அவன் காரை ஏத்தி இருந்தா”
“கண்டிப்பா செய்ய மாட்டான்.அப்படி செய்யுறதா இருந்தா அதை அவன் அன்னிக்கே செஞ்சு இருப்பான்…கண்டிப்பா அவனோட நோக்கம் உன்னை கொல்றது இல்லை…வேற எதுவோ…”என்றான் உறுதியாக.
“எ..எப்படி சொல்றீங்க?”அவள் குரல் நடுங்கியது.
அவளைப் பார்த்தவனின் பார்வையில் ஒரே ஒரு நொடி வந்து போன பாவனையின் அர்த்தம் புரியாமல் அவனையே பார்த்தாள்.
‘என்னைப் பார்த்து பரிதாப்பட்டாரோ..’
“இப்போதைக்கு இதெல்லாம் ஒரு அனுமானம் தான் வானதி..அதான் இப்போ கையில சிக்கிட்டான்ல…இனி விசாரிக்கிற விதத்தில் விசாரிச்சா எல்லாத்தையும் சொல்லிடுவான்.இனி அந்தக் கார்க்காரனைப் பத்தியோ,இந்த விஷயத்தை பத்தியோ நீ யோசிக்க வேண்டாம்.நீ எப்பவும் போல படிப்பிலயும்,பாட்டுலயும் கவனத்தை வச்சு ஒழுங்கா கத்துக்கோ”
“அவனை என்ன செய்யப் போறீங்க?”
“கண்டிப்பா கொல்ல மாட்டேன்…அவ்வளவு சீக்கிரம் அவனை விட்டுடுவேனா…உன்னை பயமுறுத்தி இருக்கான்…உனக்கு அடிபட காரணமா இருந்து இருக்கான்…அவனை”என்று ஆத்திரத்தோடு அவன் பற்களை கடித்த விதத்தில் அவளின் முதுகுத்தண்டு ஜில்லிட்டது.
“எனக்கு யாரும் எதிரி இல்லையே….”
“ம்ம்ம்… இந்த உலகத்தில் காந்திஜியைக் கொல்லக் கூட ஒருத்தன் இருந்தான் அப்படிங்கிறதை மறந்துடக் கூடாது வானதி.உன்னை அழிக்க நினைக்கிறவங்களுக்கு நீ அவங்களோட எதிரியா இருக்கணும்ன்னு அவசியம் இல்லை…அவங்க தரப்பில் அதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்.உன்னோட வளர்ச்சி அவங்களுக்கு பிடிக்காம இருக்கலாம்.அல்லது உன்னோட இருப்பே அவங்களோட கண்ணை உறுத்தலாம்.அதுக்காக எதையும் செய்ய துணிவாங்க”
“நான்..அப்படி யாரையும்…”
“ஷ்…நான் தான் சொல்லிட்டேனே…நீ நேரடியா யாரையும் எதுவும் செய்யாமலே இருக்கலாம்.ஆனா இப்போ நடக்கிறதுக்கு எல்லாம் நிச்சயம் ஏதோ காரணம் இருக்கு.அது என்ன காரணம்னு அந்தக் கார்க்காரன் தான் சொல்லணும்”
“அவன் சொல்லுவானா?”
“சொல்லாம நான் விட மாட்டேன்…”என்று சூளுரைத்தவன் அவளின் வெளுத்த முகத்தைப் பார்த்து கேலியில் இறங்கினான்.
“என்ன மேடம் உங்களை ஏதோ ஜான்சி ராணின்னு நினைச்சா…இப்படி பயந்து நடுங்கறீங்க?”
“யாரு..நானா? நீங்க வேற…இனி நீங்களே சொன்னாலும் தனியா எங்கேயும் போக மாட்டேன்”என்று அவசர வாக்குறுதி ஒன்றைக் கொடுத்தவளை ஒரு விசித்திரமான திருப்தி நிறைந்த புன்னகையுடன் எதிர்கொண்டான் சம்ஹார மூர்த்தி.
“ஹம்…இப்போ தான் பாதி கிணறு தாண்டி இருக்க…இன்னும் மிச்ச கிணறு எப்பத் தாண்டப் போறியோ தெரியலை…”என்றான் முணுமுணுப்பாக
அதை அறை குறையாக காதில் வாங்கிக் கொண்டு பெருமையாக பேசத் தொடங்கினாள் வானதி.
“எனக்கு கிணத்துல நீச்சல் அடிக்க தெரியுமே…சூப்பரா அடிப்பேன்”என்றாள் முகமெல்லாம் பல்லாக.
அவளது பதிலைக் கேட்ட சம்ஹார மூர்த்தியோ வாய் விட்டு சிரித்தான்.
“நீ எல்லாம் மாஸ்டர் பீஸ் வானதி…எப்பவும் இப்படியே இரு”என்றவன் மீண்டும் சிரிக்கத் தொடங்க அவளுக்குத் தான் அவனது சிரிப்பின் காரணம் புரியாமல் ‘ஞே’ என்று முழித்தாள்.
“இப்படி எல்லாம் பார்த்து வைக்காதே வானதி…இன்னும் உன்னுடைய படிப்பு முடியவில்லை…”என்று சொன்னவன் தொடர்ந்து பேசும் முன் அவனது மொபைல் ஒலித்து அவனது கவனத்தை திசை திருப்பியது.
“சை! கொஞ்ச நேரம் நிம்மதியா பேச முடியாதே…” என்று சலித்துக் கொண்டவன் வேண்டா வெறுப்பாக எடுத்து பேச அதில் அந்தப் பக்கம் சொன்ன சேதியில் மொபைலை ஆத்திரத்துடன் சுவற்றில் வீசி சுக்கு நூறாக உடைத்து விட்டான்.
அவனுடைய செயலில் அதிர்ந்து போன வானதி நடுக்கத்துடன் மென்குரலில் பேசத் தொடங்கினாள்.
“எ…என்ன ஆச்சு?”
“அந்தக் கார்க்காரன் தப்பிச்சுட்டான்”

தீ தீண்டும்….

Post a Comment

புதியது பழையவை