ஒருநாள் காலையில் அவளை அழைத்து செல்வதற்காக வந்த சம்ஹார மூர்த்தி கொஞ்சம் பதட்டத்துடனே இருந்தான்.அவன் கண்களில் ஏதோ ஒரு தயக்கம்…காரை ஓட்டிச் செல்லும் வழியெல்லாம் அவள் புறம் திரும்பி எதையோ பேச வருவதும்,பின் பேசாமல் காரை ஓட்டுவதுமாக இருந்தான்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவனது தவிப்பை தாங்க முடியாமல் அவளே வாய் விட்டு கேட்டு விட்டாள்.
“என்கிட்டே எதுவும் சொல்லணுமா?” அவளது கேள்வியில் அவன் முகம் சட்டென்று கேலியான சிரிப்பு ஒன்றை உதிர்த்தது.
“பரவாயில்லையே…முகத்தைப் பார்த்தே நான் உன்கிட்டே எதையோ சொல்ல நினைக்கிறேன்னு புரிஞ்சுகிட்டியே…நல்ல முன்னேற்றம் தான்..”என்று கூறி கண்களால் சிரிக்க அவளுக்கும் லேசாக சிரிப்பு வந்தது.
“என்ன விஷயம்னு இன்னும் நீங்க சொல்லலையே?”என்று அவள் மீண்டும் நினைவுறுத்தவும் அவன் முகம் சீரியசாக மாறியது.
“ஆமா வானதி…இப்போ வேண்டாம்..காலேஜ் வந்துடுச்சு..சாயந்திரம் காபி ஷாப்பில் வைத்து பேசலாம்…”என்று அவன் சொல்லி முடிப்பதற்கும்…கல்லூரி வருவதற்கும் சரியாக இருக்க மறுத்து பேச முடியாமல் இறங்கி சென்று விட்டாள் வானதி.ஆனால் அவளின் மனம் முழுக்க இந்த கேள்வி வண்டாக குடைந்து கொண்டே இருந்தது.
‘அப்படி என்ன விஷயமாக இருக்கும் ‘என்று…வகுப்பறையில் அவளுக்கு கவனமே இல்லை…நினைவு முழுக்க சம்ஹார மூர்த்தி மாலையில் சொல்லப் போகும் விஷயம் என்ன என்பதிலேயே இருந்தது.அதுவும் அவனே பதட்டம் அடையும் அளவுக்கு என்ன விஷயமாக இருக்கும் என்பதும் மண்டையைப் போட்டு குடைய எப்பொழுதடா கல்லூரி முடியும் கிளம்பி செல்லலாம் என்று அவளுக்கு தோன்ற ஆரம்பித்தது.
அவளுக்கு இருந்த பதட்டத்தில் கல்லூரி முடிந்ததும் நொடி கூட எங்கேயும் தாமதிக்காமல் வேகமாக வந்து காரில் ஏறி அமர்ந்தவள் ஆவலுடன் அவன் முகம் பார்த்தாள்.அவளுடைய வேகத்தைப் பார்த்தவன் அவளைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை கேலியாக ஏற்றி இறக்கினான்.
“இன்னைக்கு காலேஜ்ல ஒழுங்கா படிச்சியா இல்லையா?இன்னைக்கு பூரா இதே நினைப்பாவே இருந்து இருப்ப போலவே…”என்று கேலியில் இறங்க அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
அவன் சரியாகத் தானே சொல்கிறான்.இன்று முழுக்க அவள் பாடத்தை ஒழுங்காக கவனிக்கவே இல்லை தானே…’ என்று எண்ணியவள் லேசான குற்ற உணர்வுடன் தலையை குனிந்து கொள்ள அவனும் வேறு எதுவும் பேசாமல் காபி ஷாப்புக்குள் நுழைய இவளும் பின்னாலேயே சென்று எப்பொழுதும் அமருமிடத்தில் அமர்ந்து கொண்டாள்.
காபி வரும் வரை அவளால் அமைதியாக இருக்க முடியாமல் வாயைத் திறந்து கேட்டு விட்டாள்.
“என்ன விஷயம்?”
“நான் நாளையில் இருந்து ஒரு வாரம் வெளியூர் போக வேண்டி இருக்கு வானதி…தவிர்க்க முடியாத பயணம்” மின்னாமல் முழங்காமல் அவள் தலையில் இடியைப் போட்டவன் அவளின் முக பாவனைகளையே கூர்ந்து பார்க்கத் தொடங்கினான்.
“ஒரு வாரமா?” என்று அதிர்ச்சியாக கேட்டவள் தன்னுடைய ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு பேசினாள்.
“இவ்வளவு தானா? இதுக்குத் தான் இவ்வளவு பில்ட் அப் கொடுத்தீங்களா? நான் கூட என்னமோ ஏதோன்னு நினைச்சு பயந்துட்டேன்”என்று அவள் கேலி பேச அவன் முகமோ தீவிர யோசனையில் இருந்தது.
“உனக்கு நான் ஊருக்கு போறதில் ரொம்ப சந்தோசம் போல…” என்று ஒரு மாதிரி குரலில் கேட்டவன் அவள் தன்னை கேள்வியாக பார்ப்பதை உணர்ந்து உடனடியாக பார்வையை மாற்றிக் கொண்டான்.
“இதோ பார் வானதி…நான் சொல்வதை கவனமாக கேள்…இப்போ நான் போறது ரொம்ப முக்கியமான வேலை..போகாம இருக்க முடியாது.அதே நேரம் உன்னை என்னோட அழைச்சுக்கிட்டும் போக முடியாது.அதனால நான் திரும்பி வர்ற வரை நீ பத்திரமா இருந்துக்கணும்…இருந்துப்ப தானே…”என்றான் பரபரப்பாக…
“இது என்ன புதுசா இருக்கு…நீங்க ஊருக்கு போனா என்ன? எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க? நீங்க இல்லேன்னா எப்பவும் போல நானே காலேஜ்க்கு போய்ட்டு வந்துடுவேன்..பாட்டு கிளாஸ் மட்டும் நீங்க வந்த பிறகு பார்த்துக்கலாம்” என்றவளின் மனதில் பாட்டு கிளாசுக்குப் போகாமல் ஒரு வாரம் தப்பித்துக் கொள்ளலாம் என்ற சந்தோசம் இருந்தது.
சம்ஹார மூர்த்தி இருந்த டென்ஷனில் அதைக் கவனிக்கவில்லை.அவனோ அவளின் பேச்சின் முன்பாதிக்கு மட்டும் வேகமாக மறுத்து பதில் சொல்லத் தொடங்கினான்.
“அப்படி எதுவும் செய்யாதே வானதி…இந்த ஒரு வாரம் மட்டும் எனக்கு பதிலா டிரைவர் கூட போயிட்டு வா…தனியா எங்கேயும் போயிடாதே..புரிஞ்சுதா?”என்றான் அழுத்தம் திருத்தமாக…
“சரி” என்றவள் வேகமாக தலையை இடமும் வலமுமாக ஆட்ட அதுவரை இருந்த பதட்டம் காணாமல் போய் சம்ஹார மூர்த்தியின் முகத்தில் லேசான இளநகை அரும்பியது.
“எது தெரியுதோ இல்லையோ…நல்லா தலையை ஆட்ட தெரிஞ்சு வச்சு இருக்க”என்று சொல்லி விட்டு காபியை அருந்த அவளுக்கு ரோஷம் வந்தது.
“அது என்ன அபப்டி சொல்றீங்க? எனக்கு எல்லாமே தெரியும்…எங்க ஆசிரமத்தில் உள்ள பிள்ளைகளுக்கு எல்லாம் இப்பொழுதே எல்லா கைத்தொழிலும் சொல்லித் தந்து இருக்கிறார்கள் தெரியுமா…எனக்கு தையல்,எம்பிராய்டரி,மெழுகுவர்த்தி செய்வது…இப்படி எல்லா வேலையும் தெரியும்…அங்கே எல்லாருக்கும் நான் தான் சொல்லித் தருவேன் தெரியுமா?”
“ஓ…இவ்வளவு தெரியுமா உனக்கு?…தப்பாச்சே”
“ஏன்? இதில் என்ன தப்பு இருக்கு”
“அது இருக்கு நிறைய… ஆனா உனக்கு தான் புரியாது.”என்றான் கண்களில் ஒருவித பளபளப்புடன்
“ஏன் புரியாது…உங்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியலேன்னா அதுக்கு இப்படி ஒரு பேச்சா?”
“இந்த வார்த்தைக்கு எல்லாம் பின்னாடி நீ ரொம்பவே வருத்தப்படப் போற சொல்லிட்டேன்”என்று விளையாட்டாய் விரல் உயர்த்தி எச்சரித்தவனைக் கண்டு அவள் கலகலவென்று சிரித்தாள்.
அவளது சிரிப்பையே ஒரு கணம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவனின் பார்வை ஒரு நொடி தீவிரமாகி பின் இயல்பானது.
“பேச்சு எல்லாம் சரி தான் வானதி..ஆனா கவனம்..நான் வரும் வரை எந்த அசட்டுத்தனமான வேலையையும் செஞ்சு வைக்காதே…புரிஞ்சுதா? என்னோட டிரைவர் இல்லாம தனியா எங்கேயும் போகக்கூடாது புரிஞ்சுதா?”
“சரி” என்று சொன்னவளைக் பார்த்து திருப்தி அடைந்தவன் பாட்டு கிளாசுக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் ஆசிரமத்தில் இறக்கி விட்டான்.கிளம்பும் பொழுதும் மீண்டும் அவளை மறக்காமல் எச்சரித்தவன் மனமே இல்லாமல் கிளம்பி செல்ல,எப்பொழுதும் போல ஒரு ஓரமாக மறைந்து இருந்து அவனுடைய கார் கண் பார்வையில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தாள் வானதி.
இரவுத் தூக்கமும் பிடிக்கவில்லை…விடிந்ததும் எழவும் அவளுக்கு விருப்பமில்லை.ஏனோ மனம் அமைதியின்றி அலை பாய்ந்தது. ஒருவாறாக கிளம்பித் தயாரானவள் சம்ஹார மூர்த்தியின் கார் வந்ததும் முன் புறம் அமர்ந்து இருந்த டிரைவரைப் பார்த்து முகம் சுளித்தாள்.
முன் தினம் சம்ஹார மூர்த்தி சொல்லும் பொழுது இயல்பாக ஏற்றுக் கொள்ள முடிந்தவளால் இப்பொழுது முடியவில்லை.அவனைப் பார்க்காமல் இன்னும் ஒரு வாரத்தை ஓட்டியாக வேண்டும் என்ற எண்ணம் வேப்பங்காயாக கசந்து வழிந்தது அவளுக்கு.
அதற்காக ‘கல்லூரி செல்லாமல் இருக்க முடியாதே..போய்த் தானே தீர வேண்டும்’ என்று பெருமூச்சுடன் நினைத்துக் கொண்டவள் மௌனமாக காரில் ஏறி அமர்ந்தாள்.
அவள் அமர்ந்ததும் அவள் புற கதவை பணிவாக சாத்திய டிரைவர் காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்ததும் அவளிடம் போனை நீட்டினான்.
“அய்யா…நீங்க காரில் ஏறியதும் உங்களுக்கு போன் செஞ்சு தர சொன்னாங்க…”என்று சொல்லியவாறே போனை அவளிடம் நீட்ட ஆவலுடன் வாங்கிப் பேசத் தொடங்கினாள் வானதி.
இரண்டாவது ரிங்கிலேயே போனை எடுத்து விட்டான் சம்ஹார மூர்த்தி.
“வானதி” அவன் குரல் கரகரப்புடன் ஒலித்தது.
“ம்”அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியாமல் வெறுமனே இம் கொட்ட
சம்ஹார மூர்த்தி தன்னுடைய குரலை சமாளித்துக் கொண்டு பேசினான்.
“இன்னும் கொஞ்ச நேரத்தில் பிளைட் ஏறிடுவேன்…மறுபடி சாயந்திரம் பேசுறேன்…சொன்னது நியாபகம் இருக்கட்டும் ..தனியா எங்கேயும் போகக்கூடாது”என்று மீண்டும் அறிவுறுத்தி விட்டு போனை வைத்து விட அவளுக்கு என்னவோ போலிருந்தது.
‘இரண்டு வார்த்தை பேசிட்டு உடனே வைக்குறதுக்கு எதுக்கு போன் செய்யணுமாம்’என்று எண்ணிக் கொண்டே போனை டிரைவரிடம் கொடுத்தவள் அதன்பிறகு மௌன விரதம் ஏற்றுக் கொண்டவளைப் போல அமைதியாகவே வந்தாள்.
கல்லூரியிலும் ஒரு வித அமைதியுடனே இருந்தவளை அவளது தோழிகளும்,சுதாவும் எவ்வளவோ முயன்றும் இயல்புக்கு கொண்டு வர முடியவில்லை.சற்று நேரம் முயன்று பார்த்து விட்டு அவரவர் தாங்கள் வேலையை பார்க்கத் தொடங்கி விட…வானதி தான் எதையும் கண்டு கொள்ளும் நிலையிலேயே இல்லை.
கல்லூரி முடிந்ததும் வேண்டா வெறுப்பாக காரில் ஏறி அமர்ந்தவளை எப்பொழுதும் சம்ஹார மூர்த்தி அழைத்து செல்லும் அதே காபி ஷாப்பிற்கு அழைத்து சென்றான் டிரைவர்.
கேள்வியாக பார்த்தவளுக்கு உடனடியாக பதிலும் சொன்னான்.
“அய்யா..தினமும் உங்களுக்கு காலேஜ் முடிந்ததும் இங்கே வந்து உங்களை ஏதாவது சாப்பிட வச்ச பிறகு தான் பாட்டுக் கிளாசுக்கு கூட்டிட்டுப் போகணும்ன்னு சொல்லி இருக்காருமா…அய்யாவோட கார்ட் கூட கொடுத்து இருக்கார்..”என்று சொல்லி சம்ஹார மூர்த்தியின் கிரெடிட் கார்டை நீட்ட அவளுக்கு கண்ணைக் கரித்துக் கொண்டு அழுகை வரும் போல இருந்தது.
‘தூரத்தில் இருந்தால் கூட இதை எல்லாம் எதுக்கு இப்படி பார்த்து பார்த்து செய்றார்’என்று எண்ணியவள் இருக்கும் இடம் கருதி அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு அங்கிருந்து கிளம்ப சொன்னவளை பணிவோடு மறுத்து விட்டான் டிரைவர்.
“மன்னிச்சுக்கோங்கம்மா…உங்களை சாப்பிட வச்சு தான் கிளாசுக்கு கூட்டிட்டு போகணும்ன்னு சொல்லி இருக்கார்.நீங்க சாப்பிடலைன்னா என்னோட வேலை போயிடும்”என்று கெஞ்ச அவரின் கெஞ்சலுக்காக வேண்டா வெறுப்பாக எதையோ பேருக்கு கொறித்தவள் அடுத்து பாட்டு கிளாசில் சாராதாவை எதிர்கொண்டாள்.
வழக்கமாக வானதி வந்ததுமே இருவருமே தரையில் அமர்ந்து கொண்டு ஸ்வரங்களைப் பாடத் தொடங்குவார்கள். வானதிக்கு அதெல்லாம் எப்பொழுதுமே அலர்ஜி தான்.
இசையை நேசித்தவளால் அவ்வளவு எளிதாக சுவரங்களைக் கற்றுக் கொள்ள முடியவில்லை.எப்பொழுதும் வேறு வழியின்றி கடனே என்று செய்பவள் இன்று இருக்கும் மனநிலையில் அதைக் கூட செய்ய முடியாது என்று தோன்றி விட இறுக்கமான முகத்துடன் வந்து அமர்ந்தவளை கூட்டிக் கொண்டு போய் சேரில் அமர வைத்த சாரதா இயல்பாக பேசிய படியே வானதிக்கு பிடித்த பாடலை பாட சொன்னாள்.
எப்பொழுதும் இருப்பதை விட இன்று அளவுக்கு மீறிய சாராதாவின் கனிவு அவளுக்கு புரியவே இல்லை.அவளுக்கு பிடித்த பாடல்களை பாடும் பொழுது மனம் தானாகவே அமைதி அடைவது தெரிந்ததும் நன்றி உணர்ச்சியுடன் சாரதாவின் கைகளைப் பற்றிக் கொண்டாள் வானதி.
“தேங்க்ஸ் டீச்சர்…மனசு ஒரு மாதிரியா இருந்துச்சு…இப்போ தான் கொஞ்சம் நல்லா இருக்கு”என்று சொன்னவளை பார்த்து இதமாக சிரித்தார் சாரதா.
“இன்னைக்கு காலையிலேயே சார் எனக்கு போன் செஞ்சு பேசினார் மா…இந்த வாரம் முழுக்க உன் இஷ்டத்துக்கு விட்டுடணுமாம்…உனக்கு பிடிக்காத ஸ்வரங்களை எல்லாம் சொல்லித் தந்து உன்னை தொந்தரவு செய்யக்கூடாதுன்னு ஸ்டிரிக்ட் உத்தரவு”என்று சொல்லி விட்டு சிரிக்க அவளுக்கு மறுபடியும் அழுகை வரப் போவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தது.
அதன் பிறகு அவளால் அதிலும் கவனம் செலுத்த முடியாமல் போக நேரத்தை நெட்டித் தள்ளிவிட்டு வேகமாக காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.காரில் அவள் மட்டுமே இருந்தாள்.டிரைவரைக் காணவில்லை.
‘எங்கே போய் இருப்பார்?’என்ற யோசனையுடன் கீழே இறங்கி அவரைத் தேடிக் கொண்டே வெளியே வந்தவளின் பார்வையில் ரோட்டின் எதிர்ப்பக்கம் இருந்த டீக்கடையில் அவர் டீ குடித்துக் கொண்டு இருப்பது தெரிந்து கொஞ்சம் ஆசுவாசமானாள்.நின்ற இடத்தில் இருந்த அவருக்கு கையாட்ட அவளைக் கவனித்த டிரைவரும் வேகமாக டீ கிளாசை கீழே வைத்து விட்டு அவளை நோக்கி வரத் தொடங்கினார்.
பாதி ரோட்டில் அவர் வந்து கொண்டு இருக்கும் பொழுதே எங்கிருந்தோ புயல் வேகத்துடன் வந்த கார் அந்த டிரைவரின் மீது ஏற்றித் தள்ளி விட்டு நிற்காமல் சென்று விட வானதி அப்படியே திக் பிரமை பிடித்தவள் போல நின்று விட்டாள்.
கண் முன்னே அவளை அழைத்து செல்வதற்காக வந்திருந்த டிரைவர் அடிபட்டுக் கிடக்கிறார்.என்ன செய்ய வேண்டும் ஏது செய்ய வேண்டும் என்பது கூட தோன்றாமல் அப்படியே உறைந்து போய் நிற்க…அதற்குள் ரோட்டில் இருந்த மற்றவர்கள் அந்த டிரைவரை காப்பாற்ற உதவி செய்யத் தொடங்கினார்கள்.அடுத்த சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்து சேர,அங்கே இருந்த ஒரு சிலரும் அந்த டிரைவரோடு ஆம்புலன்சில் ஏறி சென்ற பிறகே அவளுக்கு சூழ்நிலை உறைத்தது.
‘சே…அவரோடு துணைக்காவது சென்று இருக்கலாமே’என்று வருந்தியவள் ‘இப்போ எந்த ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் இருக்காங்கனு தெரியலையே’ என்ற யோசனையுடன் மீண்டும் சாரதாவின் வீட்டை நோக்கி நடக்கும் பொழுது அவளுக்கு முன்னே ஒரு கார் அரை வட்டமடித்துக் கொண்டு வந்து நின்றது.
அந்தக் காரைப் பார்த்த மாத்திரத்தில் அவளுக்கு சர்வமும் நடுங்கிப் போனது…அது… அந்தக் கார்… அதே சிவப்பு நிறக் கார்…சற்று முன் டிரைவரை அடித்துப் போட்டக் காரும் அது தான் என்பது கொஞ்சம் தாமதமாகவே அவளது மூளையில் உறைத்தது.
தீ தீண்டும்….
கருத்துரையிடுக