தீண்டாத தீ நீயே Tamil Novels 46

 

அத்தியாயம் 46

விடிந்ததும் வானதிக்கு முன்பாகவே எழுந்த ஈஸ்வர் அவளுக்காக காபி போட்டு எடுத்துக் கொண்டு போனான். ‘நேற்றே உடம்பு அசதியா இருக்குன்னு சொன்னாளே’ என்ற நினைவுடன் வேகமாக காபியை எடுத்துக் கொண்டு போனான்.

இந்த வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் ஆகி விட்டது. கையில் இருக்கும் மளிகை சாமான் இன்னும் ஒரு மாதத்திற்கு வரும். ஆனால் காய்கறிகள் தான் வாங்க வேண்டிய சூழ்நிலை. அவன் மட்டுமாக இருந்தால் நிச்சயம் காய்கறிகள் இல்லாமல் கூட அவனால் சமாளிக்க முடியும். வானதி உடன் இருக்கும் பொழுது அப்படி இருக்க முடியாதே...

அவளுக்கு சத்தான உணவுகளாக கொடுத்தால் தான் உடம்பு சீக்கிரம் தேறும். அவளை தனியே விட்டு செல்வதும் முடியாது. அதே நேரத்தில் அவளை உடன் அழைத்து செல்வதும் ஆபத்தாய் முடியக்கூடும். வேறு வழியில்லை. வேறு ஆட்களை விட்டு காய்கறிகள் , பழங்கள் வாங்கி வந்து கொடுக்க சொல்ல வேண்டும். ஆனால் இங்கே இல்லாமல் வெளி இடத்தில் வைத்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டவன் வானதியின் உடல்நிலையை எண்ணி கவலை கொண்டான்.

நேற்று இரவு முழுக்க... புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தாள். நள்ளிரவுக்கு மேல் அவள் படும் அவஸ்தை தாங்க முடியாமல் எழுப்பி என்னவென்று கேட்க... கால்கள் வலிப்பதாக கூறவே, எழுந்து அமர்ந்து அவள் கால்களை பிடித்து விடத் தொடங்கினான். கணவனின் இந்த செய்கையில் பதறிப் போய் வானதி தடுத்தாலும் இதமாக மறுத்து விட்டான் ஈஸ்வர்.

“தனியா இருக்கோம் சில்லக்கா.... இங்கே உன்னைப் பார்த்துக்கிறது என்னோட பொறுப்பு.. இங்கே யார் இருக்கான்னு இவ்வளவு பயம்? என்னோட பொண்டாட்டிக்கு நான் கால் பிடிச்சு விடறேன்.. யார் கேள்வி கேட்பாங்க? பேசாம படுத்து தூங்கு...” என்று அவளை அமைதிப்படுத்த அவளையும் அறியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

அவளது கண்ணீரை துடைத்து விட்டவன் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு அவளை உறங்க வைத்தது நினைவுக்கு வர... ‘இப்பொழுது அவளுக்கு எப்படி இருக்கிறதோ’ என்ற யோசனையுடனே அவளை தேடிப் போனான்.

“சில்லக்கா... எழுந்திருடா... காபி குடிச்சுட்டு மறுபடி தூங்கிக்கோ.. நைட்டு கூட சரியா சாப்பிடல” என்று பேச்சுக் கொடுத்தபடி அவளை எழுப்பினான். சோர்வாக கண் விழித்தவள் அவனைப் பார்த்து சோகையாக புன்னகைத்தாள். கஷ்டப்பட்டு எழுந்தவளை கைகளில் தாங்கிக் கொண்டவன் தோளில் சாய்த்துக் கொண்டு அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக காபியை புகட்டத் தொடங்கினான்.

“படுத்துக்கோ சில்லக்கா”

“இல்லை...கொஞ்சம் அசதியா இருக்கு... நான் போய் குளிச்சுட்டு வர்றேன்.” என்றவள் மெல்ல அடி எடுத்து வைத்தவள் அங்கிருந்து நகர முயன்றாள். உடலில் ஏற்பட்டு இருந்த மாற்றம் அவளை அதிர்ச்சி அடைய செய்ய... வேகமாக திரும்பி படுக்கையைப் பார்த்தவள் அதிர்ந்து போனாள். அவளது அதிர்ந்த தோற்றத்தை கண்டவன் அவளின் பார்வையை தொடர்ந்து தானும் பார்வையை செலுத்தியவனின் முகத்தில் முதலில் மகிழ்ச்சியும், சூழலை சமாளித்து ஆக வேண்டுமே என்ற கவலையும் தோன்றியது.

அவர்களின் படுக்கையில் ஆங்காங்கே திட்டு திட்டாக ரத்தக் கறைகள்... வானதியின் கண்கள் பயத்துடன் ஈஸ்வரைப் பார்த்தது.

“என் குழந்தை... என்ன ஆச்சு? ஏன்? எனக்கு என்னோட குழந்தை வேணும்” என்று அலறியவள் வயிற்றில் கைகளை அழுத்தமாக பதித்தபடி அப்படியே மயங்கி சரிந்த நொடி... அவளை கைகளில் ஏந்திக் கொண்டான் ஈஸ்வர்.

இப்படி நடக்கும் என்பது ஏற்கனவே அவனுக்கு தெரிந்து தானிருந்தது. அவன் முகத்தில் அசாத்திய அமைதி வந்து இருந்தது. கொஞ்சமும் பதட்டம் இல்லாமல் அவளை மீண்டும் படுக்கையில் கிடத்தியவன் அறையை விட்டு வெளியேறி டாக்டருக்கு போன் செய்தான்.

“டாக்டர் நீங்க சொன்ன மாதிரியே அவளுக்கு பீரியட்ஸ் வந்துடுச்சு.... அடுத்து என்ன செய்யணும்?”

“...”

“நோ டாக்டர்... கண் முழிச்சா அவ கேள்வி கேட்பா... வயித்தில குழந்தை இல்லைங்கிற உண்மையை அவளால தாங்கிக்க முடியாது. எக்காரணம் கொண்டும் நான் சொல்லவும் மாட்டேன்....”

“....”

“அவ எழுந்தா தானே அவளுக்குத் தெரியும்... இந்த நாட்கள் முடியற வரை அவளுக்கு நினைவு வரவே விட மாட்டேன்....”

“...”

“கண்டிப்பா இல்லை டாக்டர்... நான் அவளுக்கு நல்லது தான் நினைக்கிறேன். கண் முழிச்ச பிறகு... தொடர்ந்து மூணு நாள் இதே மாதிரி இருந்தா அவளுக்கு புரிஞ்சுடும். ஆனா அவ என்ன நினைப்பா தெரியுமா? குழந்தைக்கு எதுவோ ஆகிடுச்சுன்னு தானே நினைப்பா? அவ கர்ப்பமா இருக்கிறதே  பொய் அப்படிங்கிற விஷயத்தை எப்படி நான் சொல்லுவேன்? அவளால தாங்கிக்க முடியாது டாக்டர்.. வரிசையா அவளும் எத்தனை முறை இப்படி ஏமாறுவா? நோ டாக்டர்.. நீங்க எவ்வளவு சொன்னாலும் சரி... நான் இந்த விஷயத்தைப் பத்தி அவ கிட்டே வாயே திறக்க மாட்டேன்”

“...”

“உண்மை தான் டாக்டர்.. அவ எழுந்தா கண்டிப்பா அவளுக்கு உண்மை தெரியும் தான்.. ஆனா அவ கண் முழிக்க நான் விட மாட்டேன்... மூணு நாள் அவளை மயக்கத்திலேயே தான் வச்சு இருக்க போறேன்... ஹ... ஏற்கனவே பலமுறை அவளுக்கு மயக்க மருந்து கொடுத்தவன் தானே நான்.. கடைசி முறையாக இப்பவும் கொடுத்திடறேன்” என்றான் கசப்புடன்...

“...”

“நோ.. நோ.. டாக்டர்.. நர்ஸ் எல்லாம் தேவை இல்லை... என்னுடைய மனைவியை நான் பார்த்துக் கொள்வேன்... அவ என்னோட உயிர்... அவளுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்.. ஒரு மூணு நாள் அவளை பார்த்துக்க மாட்டேனா என்ன?”

“...”

“ஹ... நல்ல கேள்வி தான் டாக்டர்... ஆனா இங்கே தான் கேலண்டர் எதுவுமே இல்லையே... மூணு நாள் முடிஞ்சாலும் அது அவளுக்கு தெரியவும் போறது இல்ல... அப்புறம் என்ன? நான் பார்த்துக் கொள்வேன் டாக்டர்.. என்னோட பொண்டாட்டியோட சந்தோசத்துக்காக என்ன வேணா செய்வேன்” என்று சூளுரைத்தவன் போனை அணைத்து விட்டு மீண்டும் அவள் அருகில் வந்தான்.

உறங்கிக் கொண்டு இருந்தவளின் கரங்களைப் பற்றியவன் மயக்க மருந்தை ஊசியில் ஏற்றி அவள் உடலுக்குள் செலுத்தினான். அவளை பக்கத்து அறையில் படுக்க வைத்து... அவளை சுத்தப்படுத்தி... ரத்தக்கறை படிந்த படுக்கையை சுத்தமாக துவைத்து வைத்தான். வரிசையாக மூன்று நாள் மயக்கத்திலேயே இருந்தால் உணவு சாப்பிட முடியாதே என்று எண்ணியவன் உணவிற்கு பதிலாக க்ளுகோசை அவள் உடலில் செலுத்தினான்.

அவளுக்காக எந்த அளவுக்கு கஷ்டப்படவும் அவன் தயாராக இருந்தான். அவளது நிம்மதி ஒன்று மட்டுமே தன்னுடைய குறிக்கோள் என்பதாக இருந்தது அவனது செய்கை...

ஆண்கள் செய்யத் தயங்கும் வேலையைக் கூட மனைவி மீது வைத்திருந்த அன்பினால் முகம் சுளிக்காமல் அவனே செய்தான். முழுதாக நான்கு நாட்கள் கழிந்தது. அவளது உடல்நிலை சாதாரணமாக மாறிய பிறகு... மயக்க ஊசி போடுவதை நிறுத்தி விட்டான். மயக்க மருந்து, ஊசி போன்றவற்றையும் அப்புறப்படுத்தி விட்டு  அவள் முழிப்பதற்குள் வெளியே சென்று காய்கறிகளை வாங்கி வரச் சென்றவன்... திரும்பி வந்த பொழுது வானதி கட்டிலில் அமர்ந்து இருந்தாள்.

“சில்லக்கா முழிச்சிட்டியா? மதிய சமையலுக்கு கொஞ்சம் காய்கறி வாங்கிட்டு வரப் போய் இருந்தேன்டா...” என்று கையில் இருந்த பைகளை கீழே வைத்தவன் அவளது கன்னம் தாங்கி அவள் முகத்தை அளவிட்டான். அவள் முகத்தில் உணர்வுகளே இல்லாமல் சலனமற்று இருப்பதைக் கண்டு ஒரு நிமிடம் துணுக்குற்றான். அடுத்த நொடியே கலகலப்பாக பேசத் தொடங்கினான்.

“நேத்து ஏன் சில்லக்கா அப்படி மயங்கி விழுந்த?” விளையாட்டு போல அவன் கேட்க.. அவள் முகத்தில் பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது. பயத்துடன் அவளது  கைகள் அவளது வயிற்றை கெட்டியாக பிடித்துக் கொள்ள... முகம் மாறாமல் காப்பதற்கு வெகுவாக திணறினான் ஈஸ்வர்.

“என்னடா பசிக்குதா? நான் போய் சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா?” இயல்பாக இருப்பது போல காட்டிக் கொள்ள வெகுவாக கஷ்டப்பட்டான் ஈஸ்வர்.

“அது... அ.. அன்னிக்கு படுக்கையில் ரத்தம்... பா.. பாப்பாவுக்கு என்ன ஆச்சு?”

“பாப்பாவுக்கு ஒண்ணுமில்லைடா... நல்ல ஆரோக்கியமா இருக்கு... உனக்கு உடம்பில் கொஞ்சம் தெம்பு இல்லைன்னு செக் பண்ணிட்டு டாக்டர் சொன்னார்... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும்.. வேற ஒண்ணும் இல்லைடா... பயப்படாதே”

“டாக்டர் எப்போ வந்தார்? எத்தனை நாள் இப்படி இருக்கேன்”

“நேத்து நீ மயங்கி விழுந்ததும் டாக்டரை வரவழைச்சேன்.. டாக்டர் உனக்கு நல்லா ஓய்வெடுக்க சொல்லிட்டு கிளம்பிட்டார்...”

“கண்டிப்பா பாப்பா நல்லா இருக்கு தானே”

“ஹே... பாப்பா விஷயத்தில் நான் பொய் சொல்லுவேனா?... சரி என்ன சாப்பிடற... தோசை சுட்டு எடுத்துட்டு வர்றேன்... நீ போய் பல்லு விலக்கிட்டு... குளிச்சுட்டு வந்துடு... அதுக்குள்ளே டிபனும் , காபியும் ரெடியா இருக்கும்” என்றவன் ..அவளது முகத்தை பார்க்காமல் ஏதேதோ பேசியபடி... அவளது மனதை திசை திருப்ப... அவன் முகத்தையே ஒரு சில நொடிகள் கூர்ந்து பார்த்தவள் வேறு எதுவும் பேசாமல் அமைதியாகி விட ஈஸ்வருக்கு உள்ளுக்குள் வலித்தது.

‘நான் சொல்வதை மறுகேள்வி கேட்காமல் அப்படியே நம்புகிறாள் என்றால் என் மீது எத்தனை நம்பிக்கை இருக்க வேண்டும். இறைவா... இந்த சோதனையில் இருந்து அவளை காப்பாற்றி விடு’ என்று மனமார வேண்டிக் கொண்டான் ஈஸ்வர்.

சில மணி நேரத்திலேயே வானதி சரியாகி விட... முன் போலவே வீட்டில் பழைய நிலை திரும்பியது. அவ்வபொழுது வானதியின் பார்வை ஈஸ்வரின் மீது கூர்மையாக படிந்தாலும் அடுத்த நொடியே சாதாரணமாக மாறி விடும். மீண்டும் அருவியில் குளியல்... மீன் பிடித்தல்... ஆட்டம் பாட்டம் என்று பொழுதுகள் முன் போலவே காதலுடன் அமைதியாக கழிந்தது.

ஒவ்வொரு விடியலையும் ஈஸ்வரின் காதலுடனே எதிர்கொண்டாள் வானதி. ஒவ்வொரு நாள் இரவும் அவனது மோகத்துடனே முற்று பெற்றது. அவளுக்கு எல்லாமுமாய் அவன் ஆகிப் போனான். மெல்ல மெல்ல தன்னுடைய கூட்டை விட்டு வெளியே வந்தாள் வானதி.

ஈஸ்வர் சில நேரங்களில் கண்களில் சோகத்துடன் இருந்தால் தயக்கமே இல்லாமல் அவனை மடி தாங்கி அவனுக்கு பிரியமான பாடலை பாடத் தொடங்குவாள் வானதி. அந்தப் பாடலை கேட்டதும் ஈஸ்வரும் சற்று நேரத்தில் தெளிவாகி விடுவான். வானதியிடம் ஈஸ்வரின் அன்பு குறித்து உண்டாகி இருந்த தெளிவின் காரணமாக அவன் எது செய்தாலும் கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்க பழகிக் கொண்டாள்.

இது அத்தனைக்கும் இடையிலும்... நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவளை மாமா என்று அழைக்க சொல்லி எத்தனையோ முறை கேட்டு விட்டான் ஈஸ்வர்.ஆனால் வானதியால் அவனை அவ்வாறு அழைக்க முடியவில்லை.ஏதோவொன்று தடுத்தது. அப்படி அழைக்காமல் விடப் போவதில்லை என்று ஈஸ்வரும் விளையாட்டாகவே சபதம் எடுக்க... நாட்கள் ஒவ்வொன்றும் தித்திப்பாகவே நகர்ந்தன அவர்கள் இருவருக்கும்...

மூர்த்தியும், பூபதியும் ஈஸ்வர் இருந்த இடத்தின் எல்லை வரை வந்து விட்டார்கள். ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் எங்கே போய் இருப்பார்கள் என்பதை அறியத் தான் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டி இருந்தது. ஏனெனில் கடைசியாக ஈஸ்வரை பார்த்தது காட்டின் எல்லைப் பகுதியில்... அதே தாண்டி உள்ளே போக வேண்டுமெனில் அடர்த்தியான காட்டுப் பகுதியை தாண்டியாக வேண்டும். விவரம் அறியாதவர்கள் உள்ளே சென்றால் திரும்பி வரவே முடியாது... அத்தனை ஆபத்து நிறைந்த இடம் அது. காட்டில் நன்கு பழகிய அந்த ஊரை சேர்ந்த ஒரு சிலரை கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக அலசினார்கள். காட்டிலேயே கூடாரம் அமைத்துக் கொண்டு தன்னுடைய ஆட்களின் மூலம் அவர்களை தேடினான் மூர்த்தி.

அப்படி அவன் காட்டையே சல்லடை போட்டு தேடிக் கொண்டு இருக்கும் பொழுது தான் ஒருநாள் ஈஸ்வர் அவன் கண்ணில் பட... சற்று இடைவெளி விட்டே அவனைப் பின்தொடர்ந்தான் மூர்த்தி . வீட்டில் வானதியை தனியாக விட்டு வந்திருக்கும் அவசரத்தில் மூர்த்தி தன்னை தொடர்ந்து வருவதை உணராமல் போன ஈஸ்வர். தானாகவே அவர்கள் இருவரும் தங்கி இருக்கும் இடத்தை மூர்த்திக்கு தெரியப்படுத்தி விட்டான்.

ஈஸ்வரும், வானதியும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த மூர்த்திக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடியது.

‘கண்டுபிடித்தாயிற்று... இதற்காகத் தானே... இத்தனை பாடும்... எத்தனை நாட்கள் ஆயிற்று இதற்கு... இந்த முறை சிறுபிசகு கூட நேர்ந்து விடக்கூடாது’ என்பதில் கவனமாக இருந்தான். ஈஸ்வரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அவனுக்கு தெரியாமல் கண்காணித்ததில் வாரத்தில் ஒருநாள் உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்வதை கண்டுகொண்டவன் அவன் இல்லாத நேரமாக பார்த்து வீட்டுக்குள் நுழைய திட்டமிட்டான்.

என்ன தான் காட்டுக்குள் தனியாக இருந்தாலும்.. ஈஸ்வர் இருக்கும் பொழுது அவள் விரல் நகத்தை தொடக் கூட தன்னால் முடியாது என்பது மூர்த்திக்கு நன்றாகத் தெரியும். அதே போல தகுந்த ஆயுதங்களோ.. பாதுகாப்பு ஏற்பாடுகளோ இல்லாமல் இப்படி காட்டுக்குள் தனித்து  ஈஸ்வர் இருக்க மாட்டான் என்பதும் மூர்த்திக்கு திண்ணம்.

மனதில் இத்தனை நாட்களாக அவன் தேக்கி வைத்திருக்கும் வெறி தீர வேண்டுமெனில் அவனுக்கு வானதியை தனியாக சந்திக்க வேண்டும்... முதலில் வானதி... அதன்பிறகு அந்த ஈஸ்வரின் கதையை  பொறுமையாகக் கூடப் பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது இவனுடன் இருக்கும் ஆட்களில் ஒரு சிலர் பூபதியின் ஆட்கள்... ஈஸ்வருக்கு ஆபத்து விளைவிக்கும் வண்ணம் நான் ஏதாவது செய்தால் நிச்சயம் பூபதிக்கு தகவல் போய்விடும். அதனால் காரியம் கெட்டு விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு

அது போல... தன்னுடைய இரையை கவ்விப் பிடிப்பதற்கு காத்திருக்க தொடங்கினான் மூர்த்தி. அவன் எதிர்பார்த்ததைப் போலவே ஈஸ்வரும் கிளம்பி வெளியே போக.. பூபதியின் ஆட்களை ஈஸ்வரின் பின்னால் அனுப்பி வைத்து விட்டு தனியாக இருக்கும் வானதியை தேடி வீட்டிற்குள் நுழைந்தான் மூர்த்தி.

தீ தீண்டும்...

Post a Comment

புதியது பழையவை