தீண்டாத தீ நீயே Tamil Novels 33

 

அத்தியாயம் 33

“நீங்க கொஞ்சம் கூட மாற மாட்டீங்க இல்லையா?”

“நான் எதுக்கு மாறணும் சில்லக்கா?” என்றான் அவனும் விளையாட்டாக...

“அடுத்தவங்க மனசைப் பத்தி எப்பவுமே கவலைப் பட மாட்டீங்களா?”என்றாள் குத்தலாக...

ஒரேயொரு நிமிடம் சரேலென்று பார்வையை உயர்த்தி அவளைப் பார்த்தவனின் கண்களில் ஏதோவொரு தவிப்பு. அடுத்த நிமிடமே தன்னை சமாளித்துக் கொண்டவன் எப்பொழுதும் போல கம்பீரத்துடன் பேசத் தொடங்கினான்.

“உன்னோட மனசை புரிஞ்சு வச்சு இருக்கிறதால தான் நேத்து நைட் முழுக்க சும்மா இருந்தேன்... அதுவும் நல்ல பிள்ளையாக” என்றான் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு.

‘நான் எதைப் பேசினால் இவன் எதைப் பற்றி பேசுகிறான் பார்’ பற்களை கடித்தாள் வானதி.

“என்னோட மனசு என்னன்னு தெரிஞ்சு தான் என்னோட வாழ்க்கையை கெடுத்தீங்களா? என்னோட மனசில் யார் இருந்தாங்கன்னு தெரிஞ்சு தானே என்னோட வாழ்க்கையை நாசம் செஞ்சீங்க?” என்றாள் ஆத்திரம் அடங்காமல்...

“அதுதான் நீயே சொல்லிட்டியே சில்லக்கா... இருந்தாங்க அப்படின்னு...அதாவது இப்ப இல்ல... இப்போ நீ என்னுடைய மனைவி... நான் உன்னோட கணவன்.. அதை மட்டும் நினைவில் வை..தேவை இல்லாத குப்பை எல்லாம் தூக்கி தூரப் போடு” என்றான் அவன் அசட்டையாக

“அதனால் பாதிக்கப்பட்டவள் நான் தான்.. அது எப்படி பேசாமல் இருக்க முடியும்?”

“பேசுவதால் எதுவும் மாறப்போவதில்லை சில்லக்கா... அப்புறமும் ஏன் வீண் விவாதம்?”

“இப்படி எல்லாம் பேசி செஞ்ச தப்பை சரி செய்ய பார்க்காதீங்க”

“ஏற்கனவே நான் செஞ்ச தப்பை சரி செஞ்சுட்டேன் சில்லக்கா... ஆனா அது ஏத்துக்கவோ... ஒத்துக்கவோ முடியாம தடுமாறிக்கிட்டு இருக்கிறது நீ தான்... என்னோட மனசில் வந்த பெண் நீ மட்டும் தான். ஆனா உன்னோட மனசில் தான் குழப்பம். மூர்த்தியை நினைச்சுக்கிட்டு என்னோட வாழ மாட்டேன்னு அடம் பிடிக்கிற?”

அவனது குற்றச்சாற்றில் அவளது உடல் கோபத்தில் நடுங்கத் தொடங்கியது.

‘என்ன சொல்கிறான் இவன்... அந்த மூர்த்தியை போய் நான் இன்னும்..சை!’ அந்த எண்ணமே வெறுப்பாக இருந்தது அவளுக்கு.அவளைப் பொறுத்தமட்டில் என்றைக்கு ஈஸ்வரின் கையால் அவளுக்கு தாலி ஏறியதோ அன்றைக்கே மூர்த்தியை அவளது மனதில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கி வைத்து விட்டாள். அப்படி இருக்கும் பொழுது இது என்ன அபாண்டமான குற்றசாட்டு... அவளுக்கு கொதித்துக் கொண்டு வந்தது.

“வாயை மூடுங்க...நான் போய்... அந்த மூர்த்தியை.... என்னுடைய கன்னித்தன்மையை பரிசோதிக்க எண்ணியவனைப் போய் இன்னும் நினைச்சுக்கிட்டு இருக்கேனா... இப்படி பேச வெட்கமா இல்லை உங்களுக்கு. கட்டிய பொண்டாட்டி இன்னொருத்தனை மனசாலும் நினைக்க மாட்டான்னு உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டாம்... ஊருக்குள்ளே பெரிய மனுஷனா இருந்து என்ன பிரயோஜனம்? கட்டின பொண்டாட்டியைப் பத்தி ஒரு மண்ணும் தெரியாது” என்று அவள் பொறியத் தொடங்க அவன் முகத்தில் திருப்தியான முறுவல் வந்தது.

“எனக்கு உன்னைப் பத்தி எதுவும் தெரியாதுன்னு சொல்றியா? சரி உன்னோட பேச்சுக்கே வர்றேன்... உன்னைப் பத்தி நீயே எனக்கு சொல்லு... உன் மனசில் எனக்கு இடம் இருக்கா சில்லக்கா” குளிர்நிலவை நினைவுறுத்தும் அமைதியான குரலில் அவன் கேட்க... சாப்பிட்டுக் கொண்டு இருந்த உணவு தொண்டையில் சிக்கியது அவளுக்கு.

இப்படி ஒரு கேள்வியை அவள் நிச்சயம் எதிர்பார்த்து இருக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை ஈஸ்வர் ஒரு நண்பனைப் போல... அவனுடன் ஒன்றாக இருந்த நாட்களில் ஆரம்பத்தில் மட்டும் தான் அவன் அவளிடம் கொஞ்சம் கடுமை காட்டினான்.

அவள் அவனுடன் இருக்க சம்மதித்த பிறகு அவளிடம் நல்ல முறையில் தான் நடந்து கொண்டான். நேரத்திற்கு உணவு தருவதும், இயல்பாக பேசுவதும் அவளிடம் இதமாகத் தான் நடந்து கொண்டான். அவளிடம் அவனுக்கு மெல்லிய நட்பு உண்டு.

செய்த தவறுக்காக அவன் தாலி கட்டி இருக்கலாம். அதற்காக அவளால் அவனிடம் காதலை சொல்லி விட முடியுமா? அவள் மனம் அவன் செய்த தவறான காரணத்தினால் ரணமாகி இருக்கிறது. அந்த காயம் ஆறுவதற்கு வாய்ப்புகளே இல்லை என்று அவள் நினைத்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு கேள்வி அவளை நிலைகுலைய செய்தது என்பது தான் நிஜம். அவனது கேள்விக்கு பதில் சொல்லாமல் இருந்தால் கண்டிப்பாக அவன் கேலி செய்து சிரிப்பான் என்றே அவளுக்குத் தோன்றியது.

எனவே கேள்வியை அப்படியே அவன்புறம் திருப்பினாள் வானதி.

“என்னை கேள்வி கேட்கிறது அப்புறம்.... நீங்க சொல்லுங்க என்னை காதலிச்சா நீங்க கல்யாணம் செஞ்சுகிட்டீங்க?”

‘ஒரு பேச்சுக்காவது தன்னை காதலித்ததாக சொல்லிவிட மாட்டானா என்று ஏங்கினாள் வானதி. அதற்கு ஒரு காரணமும் உண்டு. அவனோடு அவள் ஒன்றாக இருந்த அத்தனை நாட்களிலும் அவனைப் பற்றி அவளுக்கு உயர்வான எண்ணங்கள் மட்டுமே உண்டு. அப்படி இருக்கையில் அவன் செய்த தவறையும், அதற்கு பிராயசித்தமாக தன்னை அவன் மணந்து கொண்டதற்கும் ஏதாவது காரணம் கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும் என்று அவளது ஆழ்மனம் அடித்துக் கூறியது. அதை தெரிந்து கொள்வதற்காக அவன் வாயை கிளற முடிவு செய்தாள்.

“இல்லை சில்லக்கா...ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை முழுமனசா காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்”என்று அவன் சொல்ல அவளுக்கு சொத்தென்று ஆனது.

“ஹ...எப்போ நேத்து என்னோட கழுத்தில் தாலி கட்டினதுக்கு அப்புறமாவா?”

“இல்லை ... உன்னோட கையில் மோதிரம் போட்ட அப்புறமா...”

“அதனால தான் என்னை நடு ரோட்டில் தனியா இறக்கி விட்டு போனீங்களோ?” அவள் குரலில் இருந்த குற்றசாற்று அவனுக்கு புரியாமல் இல்லை.

“எனக்கு வேற வழி தெரியலை ... என்னோட வாழ்க்கையில் இதுவரை நான் எடுத்த எந்த முடிவும் யாரையும் பாதிச்சது இல்லை... முதன்முறையா என்னால... நான் எடுத்த முடிவால உன்னோட வாழ்க்கை பாதிச்சது... அதுக்கு அப்புறம் உன்னோட வாழ்க்கையில் நான் இருக்கணுமா வேண்டாமா அப்படிங்கிற முடிவை நீ தான் எடுக்கணும்னு நினைச்சேன்”

“ஒருவேளை நான் உங்களை மூர்த்தியிடம் சொல்லி போலீசில் மாட்டி விட்டு இருந்தா?”

“கண்டிப்பா அந்த தண்டனையை ஏத்துகிட்டு இருந்து இருப்பேன்...”

“ஹ...உங்களுக்கு நான் அப்படி செய்ய மாட்டேன்னு தைரியம்... அதுவும் இல்லாம பத்திரிக்கை நிரூபர்கள் கிட்டே ஏற்கனவே நீங்க பரப்பி விட்ட கதையை ஒத்துப் பேசி நான் சொல்லவும் தானே வேற வழி இல்லாம என்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டீங்க”

“நிச்சயமா இல்லை சில்லக்கா... என்னைப் பொறுத்தவரை எப்போ உன் கையில் மோதிரம் போட்டு விட்டேனோ அப்பவே நம்ம கல்யாணம் முடிஞ்சது... அப்போ உனக்கு என்னை பிடிக்காமல் போய் இருந்தால் கூட அதை நான் மனசார ஏத்துகிட்டு உன்னை விட்டு ஒதுங்கிப் போய் இருப்பேன். உன்னோட நல்வாழ்வுக்காக உனக்கே தெரியாம என்ன செய்யணுமோ அத்தனையும் செஞ்சு இருப்பேன்”

“ஒருவேளை அந்த மூர்த்தியையே நான் கல்யாணம் செஞ்சுக்க முடிவு செஞ்சு இருந்தா?” என்றாள் கூர்பார்வையுடன்.

“நோ....” என்றான் ஒற்றை சொல்லாக...ஆனால் அந்த ஒற்றை வார்த்தையில் தான் அத்தனை தீர்க்கமும், தெளிவும் நிறைந்து இருந்ததை அவளால் உணர முடிந்தது.

“அந்த மூர்த்தியை நீ கல்யாணம் செஞ்சுக்க கூடாதுன்னு தான் இத்தனை தூரம் செஞ்சு இருக்கேன். அதையும் மீறி நீ அவனை கல்யாணம் செஞ்சுக்க முயற்சி செஞ்சு இருந்தா....”

“மறுபடியும் என்னைக் கடத்தி இருப்பீங்களோ?”

“இல்லை... கொன்னு இருப்பேன்...உன்னை இல்ல...அவனை”

அவனது பதிலில் அதிர்ந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை அவள்.

“உங்களுக்கு வேற என்ன தெரியும்?”என்றாள் கண்களில் கனலுடன்...

“எனக்கு காதலிக்கத் தெரியும்... ரொம்ப நல்லாவே ரொமான்ஸ் பண்ணுவேன் தெரியுமா? எங்கே நீ தான் கொஞ்சம் கூட கோ-ஆபரேட் செய்ய மாட்டேங்கிற” என்றான் குறைபடுவது போல.

சற்று நேரம் முன்பு வரை தீவிரமான முகபாவனையுடன் பேசிக் கொண்டிருந்தது இவன் தானா என்ற சந்தேகம் வானதிக்கு வந்தது. அந்த அளவிற்கு குறும்பு கூத்தாடியது அவன் முகத்தில்.

“ஹுக்கும்...அது ஒண்ணு தான் குறைச்சல்” என்று கழுத்தை நொடித்துக் கொண்டவள் எழுந்து கை கழுவ செல்ல... அவனும் அவளோடு எழுந்து அவள் பின்னாலேயே சென்றான்.

அவள் கை கழுவிக் கொண்டு இருக்கும் பொழுது அவளுக்கு பின்னாலேயே சென்றவன் அவளுக்கு தெரியாமல் அவளது புடவை முந்தானையை எடுத்து அவனது சட்டையுடன் முடிச்சு போட்டு விட்டு ஒன்றுமறியாதவன் போல நின்று கொண்டான்.

கை கழுவி விட்டு திரும்பியவள் அவளுக்கு வெகு அருகில் நின்று கொண்டு இருந்தவனைக் கண்டு முதலில் அதிர்ந்து பின் ஆத்திரம் கொண்டாள்.

“இப்படியா இடிக்கிற மாதிரி நிற்பீங்க? கொஞ்சம் தள்ளி நில்லுங்க” என்றாள் சுள்ளென்று.

“சரி சரி என்று நல்ல பிள்ளை போல சொன்னவன் வேண்டுமென்றே பின்னால் நகராமல் முன்னால் நகர்ந்து அவனை நெருங்கி நிற்க... ஆத்திரத்துடன் அங்கிருந்து நகர முற்பட்டவளை தடுத்து நிறுத்தினான் ஈஸ்வர்.

“என்னை விட்டு தள்ளிப் போகாதே சில்லக்கா”

“நீ சொன்னா நான் கேட்கணுமா?’ என்று அவனை முறைத்தவள் வேகமாக அங்கிருந்து நகர முற்பட்டவள் பூமாலையாக மீண்டும் அவன் தோளிலேயே தஞ்சம் அடைந்தாள்.

கை கழுவி முடித்து , அவள் தன் மேல் விழும் அந்த தருணத்திற்காகவே காத்திருந்தவன் பூவைப் போல அவளை கைகளில் அள்ளிக் கொண்டான்.

“என்ன சில்லக்கா..திடீர்னு என் மேலே இவ்வளவு ஆசை உனக்கு... உன்னோட புடவை முந்தானையில் தான் நான் கை துடைச்சுக்கணும்ன்னு நீ சொன்னா மறுத்து பேசிடப் போறேனா நான்... அதுக்காக இப்படியா? அதுவும் நாலு பேர் வந்து போகும் இடத்திலா... ஆனாலும் உனக்கு இம்புட்டு ஆசை இருக்கக் கூடாது இந்த மச்சான் மேல”

அவனது அடாவடித்தனம் நிறைந்த விவரணையில் கோபமாக அவனை முறைக்கத் தொடங்கியவள் அப்பொழுது தான் கவனித்தாள் அவளது புடவை அவனது சட்டையுடன் முடிச்சிடப்பட்டு இருப்பதை.

அவனை முறைத்தவாறே அவள் முடிச்சினை அவிழ்க்க அவனோ பார்வையாலேயே தன்னுடைய காதலை அவளுக்கு உணர்த்த முயன்றான்.

“ஏன் சில்லக்கா நீ என்னை எப்படி கூப்பிடுவ? அத்தான் அப்படின்னு பழைய கால ஹீரோயின் மாதிரியா? இல்லை சுவாமி அப்படின்னு மூக்கில் ராகம் போட்டா... அதுவும் இல்லேன்னா மாமான்னா? இல்லை மச்சான்னா?” என்று அதிமுக்கிய கேள்வி ஒன்றை அவன் ஆர்வத்துடன் கேட்க அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

“ஏன் ஈஸ்வர்னு பேர் சொல்லி கூப்பிட்டா ஒத்துக்க மாட்டீங்களோ?” என்றாள் சீண்டலாக...

ஒருநொடி முகம் சுணங்கினாலும் அடுத்த நொடியே அவன் முகம் தெளிந்து விட்டது.

“கூப்பிடேன்...என்னுடைய பெயரை என்னோட எதிரில் தைரியமா சொல்றதுக்கும் இந்த உலகத்தில் ஒரு ஆள் இருக்கிறதை நினைச்சு சந்தோசபட்டுப்பேன்”என்று அவன் கூறிய விதத்தில் அவளுக்கு கோபம் பெருகியதே ஒழிய குறையவில்லை.

‘உன்னோடு எனக்கென்ன பேச்சு...’ என்ற ரீதியில் அவனை முறைத்து விட்டு நகர முற்படும் பொழுது தான் அவள் உணர்ந்தாள் இவ்வளவு நேரமும் அவனது கையணைப்பில் தான் இருக்கிறோம் என்ற உண்மையை.

வேகமாக அவனை விட்டு தள்ளி நின்றவள் அவனுக்கு ஒரு முறைப்பை பரிசாக அளிக்க... அவனோ அவளை அள்ளி அணைக்கும் வேகத்துடன் நெருங்கி வர நொடி கூட தாமதிக்காமல் அங்கிருந்து வெற்றிகரமாக ஓடி வந்து விட்டாள் வானதி.

முறைப்பைக் காட்டினால் அவளும் பதிலுக்கு கோபத்தை காட்டுவாள்...ஆனால் அவன் காதலை அல்லவா காட்டுகிறான்.நினைவு தெரிந்த நாளில் இருந்தே தனக்கென்று ஒரு குடும்பம்...அன்பும், காதலும் நிறைந்த கணவன் என்ற வரத்தை ஆசையுடன் எதிர்பார்த்து காத்து இருந்தவளால் இப்பொழுது கைகளில் கிடைத்து இருக்கும் அந்த வரத்தை அனுபவிக்க முடியவில்லை.

‘ஈஸ்வர் சொல்வதைப் போல இப்பொழுது அவன் அவளை விரும்புகிறான் தான்... அதற்காக எல்லாம் அவளால் அவனையோ அவனது காதலையோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அவளைப் பொறுத்தவரை காதல் என்பது தானாக வரவேண்டும். தானாக மலர் மலர்ந்து மணம் வீசுவதைப் போல... தடியால் அடித்து பூக்களை மலரச் செய்ய முடியுமா என்ன? அவன் செய்த தவறுக்காக மணந்து கொண்டவனின் மீது எப்படி காதல் வரும்?’ என்று ஏதேதோ எண்ணியபடி ஜன்னல் ஓரம் சென்று இலக்கில்லாமல் வேடிக்கைப் பார்த்தவள் ஒரு சில நொடிகள் கழித்து தான் பார்த்த காட்சியில் மின் அதிர்ச்சியால் தாக்கப்பட்ட நிலைக்கு உள்ளானாள்.

‘இவனை எப்படி மறந்து போனேன் நான்’ என்ற எண்ணத்துடன் அவளது பார்வை அவளது  வீட்டின் எதிர் சாலையில் மரத்தின் பின் வெளியே தெரியாதபடி மறைத்து வைக்கப்பட்டு இருந்த காரின் மீது படிந்தது.

கார்... சிவப்பு நிறக் கார்... அதே சிவப்பு நிறக் கார்...

தீ தீண்டும்...

Post a Comment

புதியது பழையவை