அத்தியாயம் 34
அந்தக் காரைப் பார்த்ததும் அவள் உடலில் உள்ள மொத்த நரம்புகளையும் பயம் பிடித்துக் கொண்டது. இடையில் எத்தனை நாட்கள் கடந்து விட்டது... ஆனாலும் அவளால் அந்த காரை மறக்க முடியுமா என்ன? அந்த காரை ஓட்டுபவன் யார்? அவனது நோக்கம் என்ன? என்பது எதுவும் அவளுக்கு இப்பொழுது வரை தெரியாதே.
ஆனால் அதை ஓட்டுபவன் ஒரு பயங்கரமான சைக்கோ என்பது மட்டும் அவளுக்கு நன்றாகவே தெரியும். இருள் நிறைந்து இருந்த அந்த ராத்திரி பொழுதுகளில் ரோடெல்லாம் அவளை துரத்திய நாட்களும், மழை நாள் இரவின் பொழுது வெறி பிடித்தவனை போல அவளை துரத்திக் கொண்டு வந்ததும், கீழே விழுந்து அவள் உடம்பெல்லாம் காயம் ஏற்பட்டதை பார்த்து ரசித்து பார்த்த அந்த கொடூர குணமும் இப்பொழுது நினைத்தால் கூட அவளுக்கு குளிர் காய்ச்சல் வரும் போல இருந்தது.
‘இதை பற்றி ஈஸ்வரிடம் சொல்லி விட வேண்டும்’ என்று அவள் மனது பரபரக்க அவளது மனசாட்சியே அவளை தடுத்து நிறுத்தியது.
“அந்த கார் ஒருவேளை ஈஸ்வரோடதா இருந்தா என்ன செய்வ?”
“இல்லை...அவளால் இப்பொழுது அதை உறுதியாக சொல்ல முடிந்தது.இத்தனை நாள் அவனை அருகில் நாள் முழுக்க பார்த்து இருந்ததால் அவனது குணங்கள் அவளுக்கு அத்துபடி...அவனிடம் இருப்பது ரௌத்திரம்...ஆனால் இந்த கார்க்காரன் நிச்சயம் தெளிவான மனநிலையில் இருப்பவனே இல்லை...” என்று அவள் மனம் அடித்துக் கூறியது.
இதைப் பற்றி ஈஸ்வரிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தவள் உள்ளே நுழைந்த பவுனம்மாவை கேள்வியாக எதிர்கொண்டாள்.
“பாப்பா.... தம்பியும் நீயும் ஊருக்கு கிளம்பணும்... உங்களுக்கு வேண்டிய பொருள் எல்லாத்தையும் நானே எடுத்து வைக்கிறேன்”
“ஊருக்கா? எந்த ஊருக்கு?”
“என்ன பாப்பா... இப்படி கேட்டுட்ட... தம்பியோட சொந்த ஊரு ஆந்திராவில் இருக்கிற விசாகபட்டினம் தானே... அங்கே தான் தம்பியோட வீடு... சொந்தக்காரங்க எல்லாரும் இருக்காங்க”
“ஆனா..இப்பவே எதுக்கும்மா? அவர் ஒரு வாரம் கழிச்சு கிளம்பலாம்ன்னு தானே என்கிட்டே சொன்னார்?”
“குல தெய்வ கோவிலுக்கு பூஜை எல்லாம் போடணும் இல்லையா தாயி... அதுவும் இல்லாம அங்கே பெரிய அய்யாவுக்கு உடம்பு முடியாம இருக்குனு தகவல் வந்து இருக்கு. அதனால தான் அய்யா அவசர அவசரமா ஊருக்கு கிளம்புற ஏற்பாட்டை செஞ்சுட்டு இருக்கார். வெளியே உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போறதுக்காக அய்யாவோட சிவப்பு கார் வந்து நின்னு ரொம்ப நேரம் ஆச்சு கிளம்புங்க”
அவர் சொன்ன எந்த வார்த்தையும் அவள் மனதில் பதியாமல் கடைசி வார்த்தை மட்டும் அவள் மனதில் அட்சர சுத்தமாக பதிந்து போனது.
“என்ன கலர் கார்?” தன்னுடைய தவிப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டாள் அவள்.
“சிவப்பு கலர் கார் மா... நம்ம தம்பிக்கு எப்பவும் சிவப்பு கலர் கார்னா ரொம்ப இஷ்டம்..எங்கே போனாலும் அதில் தான் போவார்.”
அவர் பேசிக் கொண்டே இருக்க.... உணர்விழந்து வேரற்ற மரம் போல தரையில் மயங்கி சரிந்தாள் வானதி.
“பாப்பா!” என்று அவர் அலறிய அலறரில் அடுத்த நிமிடம் அங்கே வந்த ஈஸ்வர் பயந்தே போனான்.
மடியில் வானதியை வைத்துக் கொண்டு பவுனம்மா பதற... வேகமாக விரைந்து சென்று அவளை கைகளில் ஏந்திக் கொண்டு படுக்கையில் படுக்க வைத்தான் ஈஸ்வர்.
“என்ன ஆச்சு?” என்றான் அவன் பதட்டமாக... அவனது கவனம் முழுக்க வானதியின் மீது இருந்தாலும்... கை அதுபோக்கில் டாக்டரின் எண்ணை அழுத்தி இருந்தது.
“தெரியலை தம்பி... ஊருக்கு போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்... மயக்கம் போட்டு விழுந்துடுச்சு”
டாக்டரிடம் நிலையை சொல்லி விரைவில் அங்கே வர செய்தவன் டாக்டர் வந்து விட்டு செல்லும் வரை ஒருவித தவிப்பான மனநிலையுடன் தான் இருந்தான்.
“ஒண்ணுமில்லை ஈஸ்வர்... எதையோ பார்த்து பயந்து இருக்காங்க போல... வேற ஒண்ணும் இல்லை... அவங்க கொஞ்சம் ரெஸ்ட்லஸ்ஸா இருக்காங்க... அவங்களை தொந்தரவு செய்யாம நல்லா ரெஸ்ட் எடுக்க விட்டா போதும்.சரியாகிடும்” என்று சொல்ல அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள்...
‘எதைப் பார்த்து இவ பயந்து இருப்பா?’ என்ற எண்ணத்துடன் மீண்டும் பவுனம்மாவை அழைத்து மீண்டுமாக நடந்த விஷயங்களை கேட்டுக் கொண்டவனுக்கு மூளையில் பொறி தட்டியது.
‘ஒரு வேளை அப்படி இருக்குமோ’ என்று நினைத்தவன் அதற்கு மேலும் அதைப் பற்றி யோசிக்காமல் வானதியின் அருகிலேயே இருந்து அவள் கண் விழிக்கும் நொடிக்காக காத்திருக்கத் தொடங்கினான்.
கண் விழித்து அவனை அருகில் பார்த்ததும் அவள் முகத்தில் சில நொடிகள் வந்து போன பயத்திற்கு காரணத்தை யோசித்தான் ஈஸ்வர்.
“என்னடா.... என்ன ஆச்சு? ஏன் சட்டுன்னு மயங்கிட்ட?” என்று மென்மையாக அவள் தலை கோதி கேட்டவனைக் கண்டு உள்ளுக்குள் ஏதோ பொங்கியது அவளுக்கு.
‘இந்த கனிவுக்கும் அந்த சைக்கோவுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாதே’ என்று எண்ணிக் குழம்பியவள் கண்களை இறுக மூடி படுக்கையில் சாய்ந்து கொண்டாள்.
“என்னன்னு சொல்ல மாட்டியா சில்லக்கா? சொன்னா தானே எனக்குத் தெரியும்?” அவள் தாடையைப் பிடித்து செல்லம் கொஞ்சுவது போல கேட்ட விதம் மனதில் ஆழமாக பதிய அவன் கண்களை உற்று நோக்கினாள் வானதி.
‘இந்த கண் பொய் பேசுமா?’ என்று அவள் அவனது கண்ணையே ஆழ்ந்து பார்க்க, அவனும் தீர்க்கமாக அவளையே பார்த்து வைத்தான்.
‘ஆண்டவா இது என்ன சோதனை’ என்று உள்ளுக்குள் அவள் மருக... அவளை லேசாக தன்னுடைய தோளில் சாய்த்து தேற்றினான் ஈஸ்வர்.
“இன்னைக்கு சாயந்திரம் காரில் ஊருக்கு போகலாம்னு நினைச்சேன்மா... ஆனா இப்போ நீ இருக்கிற உடல்நிலையில் கார் வேண்டாம். பிளைட்டில் போய்க்கலாம். நாளைக்கு காலையில் ஆறு மணிக்கு பிளைட்... மூணு மணி நேரம் தான் ஊருக்கு போயிடலாம்” என்று அவன் கனிவுடன் சொன்ன வார்த்தைகள் அவளின் இதயத்தை விட்டு இறங்க மறுத்தது.
அறைக்கே சாப்பாடை கொண்டு வர செய்தவன் அவள் மறுத்தும் கேளாமல் அவனே ஊட்டி விடத் தொடங்கினான்.
“கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரு.. டாக்டர் உன்னை ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கார்”
தலையை மட்டும் வெறுமனே அவள் அசைத்த விதம் அவனை பாதிக்க அவளை நெருங்கி அமர்ந்து தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டான் ஈஸ்வர்.
“எந்த விஷயத்தையும் யோசிச்சு குழப்பிக்காதே சில்லக்கா... உன்னோட மன அமைதி தான் முக்கியம். சரியா?” என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு அவளை தன்னுடைய நெஞ்சில் போட்டு உறங்க வைத்தான்.
அவள் உறங்கியதும் அவள் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு இருந்தவன் சத்தம் செய்யாமல் கீழே கிளம்பிப் போய் அடுத்து பார்க்க வேண்டிய வேலைகளில் மூழ்கி விட... வேலை அவனை உள்ளே இழுத்துக் கொண்டது.
நன்றாக உறங்கி எழுந்ததாலோ என்னவோ அவள் மனதின் சோர்வு வெளியே தெரியவில்லை. மாலையில் குளித்து வேறு உடை மாற்றியவள் கீழே சென்றவள் அவனது அலுவலக அறைக்குள் நுழைய... அங்கே அவன் இல்லை. ‘அவனது அறையை சோதித்தால் நமக்கு ஏதாவது உண்மை தெரிய வருமோ’ என்று அவள் யோசித்தபடியே அறையை கண்களால் நோட்டம் விட்டாள்.
அறை முழுக்க சுத்தமாக இருந்தது. கம்ப்யூட்டரின் அருகில் இருந்த சேரில் அமர்ந்தவள் மெல்ல டேபிள் மேல் உள்ள பைல்களை எடுத்து ஆராய.. அதில் அவனது பிசினெஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமே இருக்க... ஒரு வித சோர்வு அவளை ஆட்கொண்டது.
“இங்கே என்ன பண்ணுற சில்லக்கா?” என்ற அவனின் குரலில் அவளது மனம் அதிர்ந்தாலும் வெளியே தெரியாத வண்ணம் மறைத்தவாறு அங்கிருந்து செல்ல முயல... அவளின் கைப்பற்றி தடுத்து நிறுத்தினான் ஈஸ்வர்.
“என்னடா ரொம்ப போர் அடிக்குதா....” என்றான் அவளின் தோளோடு தோள் சேர்த்து இணைந்து நடந்தவாறே...
“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை...”
“ஊருக்கு போனதும் உனக்கு போர் அடிக்கவே அடிக்காது. சரியா”என்றவன் அவளை தன்னை நோக்கி திருப்பி... அவள் நெற்றியில் விளையாட்டாக முற்ற... அவள் முகத்தில் வந்திருந்த வெறுப்பின் சாயலில் மனம் துணுக்குற்றாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை அவன்.
“வாயேன்... கொஞ்ச நேரம் தோட்டத்தில் நடக்கலாம். உனக்கும் பொழுது போகும்” என்று அவன் சொல்ல மறுத்து பேசாமல் அவனுடன் கிளம்பினாள் வானதி.
“நாளைக்கு ஊருக்கு போறோம் சில்லக்கா... ஏற்கனவே செஞ்சு இருந்த ஏற்பாடு படி நடக்கிறதா இருந்தா... இன்னும் ஒரு வாரம் கழிச்சு தான் கிளம்பி இருக்கணும். ஆனா ஊரில் தாத்தாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லைன்னு தகவல் வந்துச்சு...அதனால தான் நாளைக்கு கிளம்புறோம்” என்று அவன் போக்கில் அவன் பேசிக் கொண்டே போக... அவள் தனியாக சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
‘பெரிய அய்யான்னு பவுனம்மா சொன்னது இவரோட தாத்தாவையா?... இவங்க அப்பா, அம்மா எல்லாம் என்ன செய்றாங்க?... அவர் வீட்டில் யார் எல்லாம் இருப்பாங்க?’ என்று அவள் தனக்குள்ளாகவே கேள்வி கேட்டுக்கொள்ள... அந்த கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் அவனாகவே விடை அளித்தான் ஈஸ்வர்.
“எனக்குன்னு சொந்தம்னு சொல்லிக்க நேத்து வரை என்னோட தாத்தா மட்டும் தான் சில்லக்கா... இன்னைக்கு தான் நீ வந்துட்டியே?” என்று சொன்னவன் உரிமையுடன் அவள் தோளின் மீது கை போட்டு இறுக்கியபடியே தன்னுடைய நடையை தொடர... மௌனமாக உடன் நடந்தாள் வானதி.
“என்னோட அம்மா நான் பிறந்து கொஞ்ச நாளிலேயே இறந்துட்டாங்க சில்லக்கா.... காரணம் ஏதோ விஷ ஜுரம்னு சொன்னாங்க...” பேசியபடி அங்கிருந்த ஊஞ்சலில் அவளை அமர வைத்து விட்டு அவளின் அருகில் அமர்ந்தவன் சற்று நேரம் ஒன்றுமே பேசவில்லை.
பிறகு என்ன நினைத்தானோ தெரியவில்லை. சட்டென்று அவளது மடியில் படுத்துக் கொண்டான். கண்கள் இறுக மூடி உடலில் ஒவ்வொரு தசைகளும் இறுகும் அளவுக்கு அவன் இருந்த கோலம் அவன் ஏதோ கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறான் என்பதை சொல்லாமல் சொல்ல... அமைதி காத்தாள் வானதி.
“அதுக்கு அப்புறம் அப்பாவும், தாத்தாவும் பிசினஸ் விஷயமா தனியா கிளம்பி போனப்போ அவங்க போன பிளைட் ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. அப்பா.... அப்பாவோட உடம்பு எங்களுக்கு கடைசி வரை கிடைக்கவே இல்லை... தாத்தா கோமாவுக்கு போய்ட்டார். இதெல்லாம் நடக்கும் பொழுது எனக்கு வயசு பத்து தான் இருக்கும்” தொண்டையில் கத்தி திருகின வேதனையுடன் பேசிக் கொண்டு இருந்தவனைக் கண்டு அவளுக்குள் இரக்கம் சூழ்ந்தது.
அன்பை மற்றவர்களுக்கு வாரி வாரி கொடுத்தே பழக்கப்பட்டவள் அவள்... அவளுக்கு வேண்டாத(!) கணவனாகவே இருந்தாலும் அவனுடைய வேதனைகளை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இயல்பாக அவன் முடி கோத உயர்ந்த கைகளை பெரும்பாடுபட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள் வானதி.
“அதுக்கு அப்புறம் கொஞ்ச நாள் அப்பாவை தேடிட்டு அப்புறம் அவர் இறந்துட்டதா போலீசில் அறிவிப்பு செஞ்சுட்டாங்க... அப்போ எல்லாம் என்னைப் பார்த்துக்க யாருமே இல்லை... நானா சாப்பிடுவேன்... நானா குளிக்கணும்...நானே கிளம்பி ஸ்கூல்க்கு போகணும். வீட்டில் எல்லா வேலைக்கும் வேலையாள் உண்டு. ஆனா அன்பா ஆதரவா பேச ஒருத்தரும் கிடையாது.
ஒரு சில சொந்தக்காரங்க வந்தாங்க... யாரும் எனக்காக வரலை.... என்னோட சொத்துக்காக வந்தாங்க... நான் சின்னப் பையன் இல்லையா என்னை ஈசியா ஏமாத்தி சொத்துக்களை அபகரிக்க முயற்சி செஞ்சாங்க.... அந்த நேரத்தில் எல்லாம் எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா? என்று சொன்னவனின் விழிகள் இரண்டும் கலங்கி சிவந்து போய் இருந்தது.
ஆதரவற்ற பத்து வயது சிறுவனைப் போலவே காணப்பட்ட கணவனின் தோற்றம் அவளை கொஞ்சம் அசைத்துப் பார்த்தது என்று தான் சொல்ல வேண்டும்.
தாயின் காலைக் கட்டிக் கொண்டு அழும் குழந்தையைப் போல அவளது மடியை கட்டிக் கொண்டு, அவன் பேச... அவன் தலை கோதி ஆறுதல் அளிக்க சொல்லி அவள் மனம் முரண்டத் தொடங்கியது.
“அந்த நேரத்தில் எனக்கு ரொம்பவே உதவியா இருந்தது பவுனம்மாவும், அவங்க வீட்டுக்காரரும் தான். பெத்தவங்களும் இல்லாம வளர்த்தவங்களும் இல்லாம ரொம்பவே நரகத்தில் நான் இருந்த நாட்கள்னா... அந்த நாட்கள் தான்... அவ்வளவு கொடுமையான நாட்கள். பாலைவனத்தில் இருந்த மாதிரி இருந்தேன். என்னை சுத்தி இருக்கிற எல்லாரும் வெறும் ராட்சசர்களா மட்டும் தான் எனக்கு தெரிய ஆரம்பிச்சாங்க.
கொஞ்ச நாள் அங்கே இருந்தேன்.... சொந்தக்காரங்க கையில் இருந்த சொத்தை எல்லாம் மீட்டு சட்டத்தின் உதவியோட கைப்பற்றி எங்க குடும்பத்துக்கு விசுவாசமான ஆட்கள் கிட்டே ஒப்படைச்சேன். அதெல்லாம் நடந்து முடிக்கும் பொழுது எனக்கு வயசு பதினாலு இருக்கும்...
அதுக்கு அப்புறம் தாத்தாவை கவனிச்சுக்கிட்டே படிப்பு தொழில் ரெண்டையும் கத்துக்க ஆரம்பிச்சேன். தாத்தாவை கருணைக்கொலை செஞ்சிட சொல்லி எத்தனையோ பேர் என்கிட்டே சொன்னாங்க.... ஆனா நான் கேட்கலை... ஏன்னா எனக்கு நம்பிக்கை இருந்தது. கண்டிப்பா ஒருநாள் தாத்தா குணமாகிடுவார்ன்னு. அதனால மத்தவங்க சொன்ன எதையுமே நான் காதில் வாங்கிக்கல.
தாத்தாவை கொன்னுட்டு என்னையும் கொல்ல எத்தனையோ பேர் முயற்சி செஞ்சாங்க... அது எதுவும் நடக்கலை... எப்போ உயிருக்கு ஆபத்து இருக்குனு தெரிஞ்சுதோ அப்பவே துப்பாக்கி சுடுறது, கராத்தே இந்த மாதிரி விஷயங்களை கத்துக்க ஆரம்பிச்சேன். படிப்பை முடிச்சு... முழு மூச்சா தொழிலில் இறங்கின பிறகு நான் அந்த வீட்டுப்பக்கம் போகவே இல்லை.
அந்த வீட்டுக்கு போய் மட்டும் என்ன செய்றது? எனக்காக அங்கே யார் இருக்காங்க அப்படிங்கிற ஆதங்கம்... கோபம் எல்லாமே என்னை இத்தனை நாளா அங்கே போக விடாம செஞ்சுடுச்சு.
எனக்கு இருந்த வருத்தம், காயம் எல்லாமே கடலில் பயணிக்கும் பொழுது காணாமல் போன மாதிரி இருக்கும். அதனால தரையிலேயே கால் படாம வெறித்தனமா உழைக்க ஆரம்பிச்சேன். எனக்குன்னு யார் இருக்கா அப்படிங்கிற விரக்தி என்னை மறுபடியும் என்னோட சொந்த மண்ணுக்கு வர பிடித்தம் இல்லாமலே பண்ணிடுச்சு
சமீபத்தில் தான் தாத்தாவுக்கு கோமாவில் இருந்து நினைவு திரும்பிச்சு... அப்ப தான் நான் கடலை விட்டு நிலத்துக்கு வந்தேன்” என்று அவன் தன்னுடைய போக்கிலேயே சொல்லிக் கொண்டு இருக்க... தன்னையும் அறியாமல் அவளது கேசத்தை கோதிக் கொடுத்துக் கொண்டிருந்த அவளது கை அப்படியே நின்று போனது.
“எல்லாம் சரி.... இதிலே நான் எங்கே வந்தேன்? அதையும் சொல்லிட்டா நல்லா இருக்கும்” என்று துளைக்கும் பார்வையுடன் கேட்டவளை அவன் பார்த்த இமைக்காத பார்வை அவளை அச்சம் கொள்ள செய்வதாய் இருந்தது.
தீ தீண்டும்.
கருத்துரையிடுக