தீண்டாத தீ நீயே Tamil Novels 35

 


ஒரு நொடி தான்... அவன் நினைத்தால் அவள் கேட்கும் கேள்விகளுக்கு ஒரே நொடியில் பதிலைக் கூறி விட அவனால் முடியும்.ஆனால் அதற்குப் பிறகு என்ன நடக்கும்? இத்தனை நாட்கள் இவளிடம் எதற்காக சொல்லாமல் மறைத்தானோ அந்தக் காரணம் கொஞ்சமும் மாறாமல் அப்படியே தானே இருக்கிறது. என்று எண்ணிக் கொண்டவன் சுளித்த புருவங்களுடன் அவளது மடியில் இருந்து எழுந்து கொண்டான்.

“வெளியில் பனியா இருக்கு... உள்ளே போகலாம் சில்லக்கா” என்று இறுகிய குரலில் சொன்னவன் அவள் பின்னோடு வருகிறாளா இல்லையா என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவன் பாட்டிற்கு உள்ளே செல்ல ஆத்திரத்தில் அவளுக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கியது.

‘சித்திரை மாசம் வெயில் கொளுத்துது... இந்த நேரத்தில் பனியா இருக்குனு சொல்லிட்டா போற... பொய் புளுகா... ராட்சசா’ என்று அவனுக்கு வசை மாரி பொழிந்தவள் வீட்டுக்குள் செல்ல மனமில்லாமல் தோட்டத்திலேயே தேங்கி நின்றாள்.

மனதின் புழுக்கம் தோட்டத்தில் கொஞ்ச நேரம் இருந்தால் குறையுமோ என்று எண்ணி அப்படியே அவள் அமர்ந்து விட... சில நிமிடங்கள் கழித்து அவளை அழைத்து செல்ல பவுனம்மா வந்தார்.

‘அவன் வேலை தான்.... கொஞ்ச நேரம் கூட தனியா இருக்க விட மாட்டானே’ என்று பற்களை கடித்தவள் பவுனம்மாவிடம் கோபத்தை காட்ட விரும்பாமல் அவருடன் சென்று விட... நேராக அவளை சாப்பிட அழைத்து சென்றார்.

சாப்பிட்டு முடிக்கும் வரை அவனது தலை எங்குமே தென்படாமல் போக.... நிம்மதியாக அறைக்குள் நுழைந்தவள் தூங்க முயன்றாள்.அதற்குள் மனதின் எண்ணங்கள் வரிசையாக ஊர்வலம் போகத் தொடங்கின.

ஈஸ்வர் இன்று சொன்ன அவரது கடந்த காலத்திற்கும் எனக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? அவரையும் அறியாமல் ஏதாவது தகவலை என்னிடம் உளறி இருக்கிறாரா என்ற யோசனையில் மூழ்கி இருந்தவள் பால்கனி கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவனை கவனிக்காமல் போனாள்.

வந்தவன் ஒன்றுமே பேசாமல் அவள் அருகில் படுத்தவன் அவளை அணைத்தவாறே உறங்க முயல.... அவனின் ஸ்பரிசத்தால் தன்னுணர்வுக்கு வந்தாள் வானதி. அவன் கைகளை விலக்க முயல... அவன் பிடியோ மேலும் இறுகியது. அவனது அணைப்பை இயல்பாக ஏற்றுக் கொள்ள முடியாமல் அவள் கொஞ்சம் பிடிவாதம் செய்ய... அவளை கொஞ்சம் தள்ளி நிறுத்தியவன் அவள் முகத்தை கேள்வியாக பார்த்தான்.

“உனக்கு என்னைப் பத்தி நான் சொல்லித் தான் தெரியணும்னு அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன். நான் சொல்றதை நீ கேட்கிற வரை நான் நல்லவன். கேட்காத பட்சத்தில் அதை விட ரொம்ப நல்லவனா நடந்துப்பேன். அதாவது எனக்கு மட்டும் நல்லவனா நடந்துப்பேன்.”என்று அவன் அழுத்தம் திருத்தமாக கூற அவளால் அவனை முறைப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

அவளை நெருங்கிப் படுத்தவன் முன்தினத்தை போலவே அவளை அள்ளி நெஞ்சில் போட்டுக் கொண்டான். அவளது நெற்றியில் மென்மையான முத்தம் ஒன்றைப் பதித்து விட்டு உறங்கிப் போனான்.

‘இவன் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்கிறான்.சரியான திமிர் பிடித்தவன்...நான் கேட்ட கேள்விக்கு எல்லாம் இவன் பதில் சொல்ல மாட்டானாம்.ஆனால் இவன் காரியத்தை மட்டும் பிடிவாதமாக நிறைவேற்றிக் கொள்வானாம்’என்று அவனை திட்டியபடியே உறங்கிப் போனாள் வானதி.

நடு இரவில் அவளை எழுப்பி ... தூக்கக்கலக்கத்தில் காக்காய் குளியல் குளிக்க வைத்து  ஆறு மணி விமானத்திற்கு நான்கு மணிக்கே அவளை கிளப்பி இருந்தான் ஈஸ்வர்.அவன் முகம் ஒருவிதமான இறுக்கமான நிலையிலேயே இருந்ததால் வானதி அவனிடம் எதுவும் பேசவில்லை. அவர்கள் இருவரும் மட்டுமாக கிளம்பி ஏர்போட் செல்ல... வீட்டை காவலாளியிடம் ஒப்படைத்துவிட்டு பவுனம்மாவை டிரைவருடன் காரில் அனுப்பி வைத்து விட்டான் ஈஸ்வர்.

எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்த வானதி வாசலில் இருந்த சிவப்பு நிறக் காரைப் பார்த்ததும் அவளையும் அறியாமல் பயத்துடன் அவள் கைகள் ஈஸ்வரின் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டது.நடுங்கிய அவள் கைகளின் மூலம் அவளது பயத்தை உணர்ந்தவன் கேள்வியாக அவளைப் பார்க்க... அவள் பார்வையோ அந்த காரை விட்டு இம்மியும் நகரவில்லை.

உடல் எல்லாம் வேர்த்து.... எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் அவள் மயங்கி விழலாம் என்று அவள் நின்று கொண்டு இருந்த கோலம் அவனை இரக்கம் கொள்ள செய்ய... என்ன நினைத்தானோ சட்டென்று பொருட்களை வேறு காரில் ஏற்ற சொல்லி.... அவளையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

காரில் ஏறிய பிறகும்கூட அவளது நடுக்கம் குறையாமல் இருக்க, அவளது தோளை சுற்றி கைகளை போட்டுக் கொண்டான்.

“விடியற்காலை எழுந்து உனக்கு பழக்கம் இருக்காது சில்லக்கா... அதான் கொஞ்சம் பதட்டமா இருக்க போல... ஏதாவது சாப்பிடறியா?”

“வேண்டாம்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தவள் காருக்குள் சுருண்டு கொண்டாள்.அவளை அப்படியே மடியில் படுக்க வைத்துக் கொண்டவன் அவள் முகத்தையே யோசனையுடன் பார்த்துக் கொண்டு வந்தான்.

ஏர்போர்ட் வந்ததும் அவளை பிரியாமல் கை அணைப்பிலேயே வைத்து இருந்தான் ஈஸ்வர்.ஏர்போட்டில் அவளுக்கு குடிப்பதற்கு காபி வாங்கிக் கொடுத்தவன் அவள் குடித்து முடிக்கும் வரை அவள் முகத்தையே ஆராய்ச்சியாக பார்க்க... அவளோ அதை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையிலேயே இல்லை.

செக்கிங் எல்லாம் முடிந்த பிறகு பிளைட்டில் ஏறி அமர்ந்ததும் அவளது கைகளை எடுத்து தன்னுடைய கைகளுடன் பிணைத்துக் கொண்டான் ஈஸ்வர்.

“பிளைட்டில் போறது பிடிச்சு இருக்கா சில்லக்கா?”

“முதல் முறையா... கொஞ்சம் பயமா இருக்கு”

“என்னது முதல் முறையா? இது இரண்டாவது முறை மா”என்று சொல்லி அவளை வியப்பில் ஆழ்த்தினான்.

“இல்லை... இது தான் முதல் முறை” என்றாள் அவள் தெளிவாக...

“இல்லை இது இரண்டாவது முறை தான்” என்றான் அவளை விட அதிக தெளிவுடன்.

“...”

“ஏற்கனவே ஒருமுறை என்னோட கப்பலில் இருந்து ப்ளைட்டில் உன்னை வேற ஊருக்கு கூட்டிட்டு போய் இருக்கேன்.அப்ப உனக்கு சுய நினைவு இல்லையா அதான் உனக்கு நியாபகம் இல்லை”

“அது என்ன பழக்கம் எப்பப்பாரு மயக்க மருந்து கொடுக்கிறது?” என்று அன்றைய நாள் நினைவில் முகத்தை சுளித்தாள் வானதி.

“என்னை வேற என்ன செய்ய சொல்ற சில்லக்கா... முழிச்சுக்கிட்டு இருந்தா நீ கத்தி ஆர்ப்பாட்டம் செய்வ... பிடிவாதம் செய்வ... உன்கிட்டே என்னோட பலத்தை காட்டி என்னால ஜெயிச்சு இருக்க முடியும். ஆனா அந்த நிமிடம் நீ அனுபவிக்கும் வலியும் வேதனையும் சாகும் வரை என்னை நிம்மதியா தூங்க விடாது”என்றவனின் பார்வை உணர்த்திய செய்தி கண்டிப்பாக அவன் அவளை மயக்கி பிளைட்டில் அழைத்து போன நாளைப் பற்றி கூறவில்லை என்று புரிய அவனது கரங்களில் இருந்து தன்னுடைய கரத்தை உருவிக் கொண்டவள் வெளியே வேடிக்கைப் பார்ப்பது போல திரும்பிக் கொண்டாள்.

“அந்த நாளில் என்ன நடந்ததுன்னு தெரியாமலே நீ இவ்வளவு கஷ்டப்படுறியே... உனக்கு நினைவு இருந்து இருந்தால்... உன்னுடைய அனுமதி இன்றியே பலத்தை காட்டி நான் ஜெயித்து இருந்தால்? வாழ்க்கையின் இறுதிநாளில் கூட உன்னால் அதை மறந்து இருக்க முடியாது இல்லையா?”

“...”

“அது மட்டும் இல்லை... வேற ஒரு காரணமும் இருக்கு... ஒருவேளை உனக்கு என்னோட வாழப் பிடிக்காமப் போனா... வேற ஒரு நல்லவனுடன் உன்னுடைய வாழ்க்கை அமைஞ்சதுனா இந்த நினைவுகள் உன்னோட நினைவில் இல்லாம இருந்தா வேறு ஒருவனுடன் புது வாழ்வை துவங்குவது உனக்கு ஈசியா இருக்கும்னு நினைச்சேன்.”என்று அவன் கடும்பாறைக் குரலில் கூற அவனையே வியப்புடன் அளவிட்டாள்.

அந்த வார்த்தைகளை கூறும் பொழுது அவன் குரல் தெளிவாக இருந்தது.ஆனால் உடல் அதில் ஓடிய மெல்லிய நடுக்கம்...அவனது உடம்பில் இருந்த இறுக்கமான நிலை... மூடிய அவனது விழிகளுக்குள் அங்குமிங்கும் அலை பாய்ந்த அவனது கருவிழிகளின் மூலம் அவனது தவிப்பையும் உணர்ந்தவள் அவன் அந்த நொடி தனக்குள் வெகுவாக போராடிக் கொண்டு இருப்பதை உணர்ந்தாள்.

தவறு செய்து... செய்த தவறுக்கு பரிகாரமாக தன்னை மணந்து கொண்டு,தன்னிடம் ஏச்சும் பேச்சும் வாங்கிய இத்தனை நாட்கள் ஆன பிறகும் கூட அவன் இந்த அளவிற்கு தவிக்கிறான் என்றால் அந்த தவறை செய்யும் பொழுது அவன் எந்த அளவுக்கு துடித்து இருப்பான்.

அன்றைய இரவு அவன் குடித்துக் கொண்டு இருந்தது அவளின் நினைவுக்கு வந்து போனது.இந்த அளவுக்கு தன்னைத் தானே வருத்திக் கொள்பவன் ஏன் அப்படி ஒரு காரியத்தை செய்தான்? அவளுக்குள் ஆயிரம் கேள்விகள் வந்தாலும் அதை எல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டாள் வானதி.

அவளின் கண் முன்னே அவன் படும் வேதனையை அவளால் சகிக்க முடியவில்லை.

பெண்மையை பறித்த பின் அவளிடம் உன்னை நான் வென்று விட்டேன் என்று வெற்றி முரசு கொட்டி இருந்தால் அவனை எதிர்ப்பது அவளுக்கு சுலபமாக இருந்து இருக்கக் கூடும்.அவளை விடவும் அந்த நாளை நினைத்து வருந்துபவன் அவன் அல்லவா? செத்த பாம்பை அடிப்பது போல...ஏற்கனவே தான் செய்த தவறை எண்ணி எண்ணி வருந்துபவனை மேலும் வருத்துவது சரியாக அவளுக்குத் தோன்றவில்லை.

அப்படி அவனை வருத்தப்படுத்தி அதில் இன்பம் காணவும் அவள் ஒன்றும் இழி பிறவி இல்லையே.ஆசிரமத்தில் வளர்ந்த நாட்களில் அன்பை மட்டுமே படித்து வளர்ந்தவள் ஆயிற்றே...அவளுக்கு அருகில் ஒரு ஜீவன் துடிக்கையில் அவளால் வெறுமனே கைகட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்க்க முடியவில்லை.

மெல்ல அவன் கைகளுடன் தன் கைகளை கோர்த்துக் கொண்டவள் ஆறுதலாக அவன் விரல்களை அழுத்த ஒரு நொடி அவன் மொத்த உடலும் விரைப்புற்றது.அடுத்த நொடி அவளது விரல்கள் கண்ணிப் போகும் அளவிற்கு அவள் விரல்களை இறுக்கியவன் சுற்றி யார் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவளது தோளில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டான்.அவனை விலக்க அவளும் எந்த முயற்சியும் செய்யவில்லை.

சற்று நேரம் கழித்து தானாகவே எழுந்தவன் அவளின் கண்ணோடு கண் கலக்க விட்டு பேசத் தொடங்கினான்.

“என்னோட அப்பாவை என்னோட அம்மா மாமான்னு கூப்பிடுவாங்களாம்...பவுனம்மா சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன். நீயும் என்னை மாமான்னு கூப்பிடறியா சில்லக்கா” என்று ஆசையும் ஏக்கமுமாக கேட்டான் ஈஸ்வர்.

முடியாது என்று தலையை இடமும் வலமுமாக ஆட்டினாள் வானதி.

ஏமாற்றத்தோடு தலையை குனிந்து கொண்டவன் அடுத்த நொடி கண்ணில் குறுஞ்சிரிப்புடன் அவளை நோக்கி கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்.

“ஊரில் இருந்து திரும்பிப் போறதுக்குள்ளே உன்னை மாமான்னு கூப்பிட வைக்கிறேனா இல்லையா பார்” என்றான் சவால் விடுவது போல...

உதட்டை சுளித்து கழுத்தை நொடித்தவளை அவன் பார்த்த பார்வையின் வேகம் தாங்காது அவசரமாக பார்வையை திருப்பிக் கொண்டாள் வானதி.

இரண்டு நேரத்திற்குள் ப்ளைட் தரை இறங்கி விட அவளின் கையோடு கை கோர்த்தபடி இறங்கி நடந்தவள் இந்த முறை ஏற்போட்டின் பிரமாண்டமான தோற்றத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டே வந்தாள்.ஊரில் இருந்து கிளம்பிய பொழுது அவள் இப்படி இல்லை என்பதை குறித்துக் கொண்டான் ஈஸ்வர்.

புது இடம் என்பதாலோ ஈஸ்வரைப் பற்றி ஓரளவிற்கு புரிந்து கொண்டதாலோ அவள் உற்சாகத்துடன் அந்த ஊரை வேடிக்கைப் பார்த்தபடியே பயணிக்க அவளை ரசித்தபடியே பயணத்தை மேற்கொண்டான் ஈஸ்வர்.

சில நிமிடங்கள் கழிந்த பிறகு அவர்கள் பயணித்த கார் ஒரு பிரம்மாண்டமான கோட்டையின் முன்னே நிற்க,எதேச்சையாக திரும்பிப் பார்த்தவள் அந்த கோட்டையின் அழகில் மெய் மறந்து போனாள்.

“இது தான் நம்ம வீடு சில்லக்கா” என்று அவன் சொல்லி வாய் மூடும் முன்னரே அந்தக் கோட்டையின் பிரம்மாண்டமான கதவுகள் திறந்து அவர்கள் இருவரையும் உள்ளே வரவேற்பது போல தோன்றியது அவளுக்கு. அவள் வாழ்க்கையில் பங்களாக்களையே பார்த்ததில்லை எனும் பொழுது முதன்முறையாக ஒரு அரண்மனையைப் பார்த்தால் என்ன ஆகும்? பிரமித்துப் போய் நின்று விட்டாள் வானதி.

“சின்ன ஜமீனும், ஜமீனம்மாவும் வந்துட்டாங்க” என்று ஒரு குரல் எங்கேயோ கேட்க....

‘யாரை சொல்றாங்க’ என்ற எண்ணத்துடன் இவள் சுற்றும் முற்றும் பார்க்க... அங்கே ஒரு கிலோமீட்டர் தூரம் அளவிற்கு  தள்ளி இருந்த வீட்டு வாசலில் இருந்து  ஒரு யானை ஆடி அசைந்து கம்பீரத்துடன் வந்து ஈஸ்வருக்கும் , அவளுக்குமாக மாலை அணிவிக்க பிரமிப்பின் உச்சத்தில் இருந்தாள் வானதி.

‘இவன் ஜமீன் வம்சமா?’

“நேரா நில் சில்லக்கா...கொஞ்சம் சிரிச்சுக்கிட்டு நில்லு... ஆரத்தி எடுக்க வர்றாங்க பார்...”என்று மெல்லிய குரலில் அவன் முணுமுணுக்க முயன்று முகத்தை சரி செய்து கொண்டாள்.

அவர்கள் இருவருக்கும் ஆரத்தி எடுத்து முடித்த பிறகு வீட்டின் உள்ளே இருந்து ஏதோ ஒரு பொருள் பறந்து வந்து அவர்களின் பாதையை மறித்துக்கொண்டு வந்து விழுந்தது.

‘என்ன அது’ என்று உற்றுப் பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

அது ஒரு வாள்....

“உள்ளே வந்தே உன்னை வெட்டிப் போட்டுடுவேன்... ஒழுங்கா ஓடிப் போய்டு” என்று உள்ளிருந்த வந்த குரலால் மேலும் கலவரம் அடைந்தாள் வானதி.

தீ தீண்டும்.........

Post a Comment

புதியது பழையவை