தீண்டாத தீ நீயே Tamil Novels 36

 

அத்தியாயம் 36

“இதை சாப்பிட்டு பார் வானதி... ரொம்ப நல்லா இருக்கும்” என்று அவன் பார்த்து பார்த்து பரிமாற... வானதிக்கோ உணவு தொண்டைக் குழியை தாண்டி இறங்க மாட்டேன் என்று சண்டித்தனம் செய்து கொண்டு இருந்தது. உணவை சாதாரணமாக சாப்பிடக் கூட முடியாமல் வெளிப்படையாகவே அவள் கைகள் நடுங்கிக் கொண்டு இருக்க... அவளின் அருகில் அமர்ந்து இருந்தவனோ எந்த கவலையும் இல்லாமல் உணவை உள்ளே தள்ளி கொண்டு இருந்தான்.

“சாப்பிடு வானதி” உத்தரவாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

‘எப்படி சாப்பிடறது? சாப்பாடு மேசையில் எதிரில் உட்கார்ந்து என்னை கொல்லணும்கிற வெறியோட என்னை ஒருத்தர் முறைச்சு பார்த்துக்கிட்டு இருக்கும் பொழுது எப்படி சாப்பிடுவேன்?’

“சாப்பாடு ரொம்ப காரமா இருக்கோ?” காரணம் அறியாதவன் போல அவன் பேசிய விதம் சற்றே அவளுக்கு எரிச்சலூட்டியது.

“...”

“கொஞ்ச நாள் போனா சரியாகிடும் வானதி சாப்பிடு” என்று அவன் சொன்னது வெறும் சாப்பாட்டிற்க்காக என்று நம்ப அவள் தயாராக இல்லை. அரைகுறையாக சாப்பிட்டு முடித்தவள், எதிரில் அமர்ந்து இருந்த மனிதரின் உஷ்ணப்பார்வையை தாங்க முடியாமல்  வேகமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அறைக்குள் சென்று விட, கீழே பேசிக் கொண்டு இருந்த ஈஸ்வரின் அடங்காத குரலும், அவளை எரித்து விடுவது போல பார்த்த ஜமினின் திவான் பூபதியின் குரலும், ஈஸ்வரின் தாத்தா வைத்தீஸ்வரனின் தீனமான குரலும் மாறி மாறி கேட்டது.

வைத்தீஸ்வரனின் கையும், காலும் செயலிழந்து போயிருந்தது. வாயும் ஒரு பக்கம் லேசாக கோணிக் கொண்டு அவர் பேசும் வார்த்தைகள் எதுவும் வானதிக்கு புரியவில்லை. அவர் தன்னுடைய தீனமான குரலில் தன்னால் முடிந்த மட்டும் அவர்கள் இருவரின் சண்டையை தீர்த்து வைக்க முயல்கிறார் என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது.

ஜமீனில் திவானாக வேலை பார்க்கும் ஒருவருக்கு தன்னுடைய வரவு ஏன் பிடிக்காமல் போக வேண்டும்? அதுவும் தங்களின் வருகை பிடிக்காமல் வாளினை எடுத்து எறியும் அளவிற்கு? அதை விட முக்கியமான விஷயம் , ஈஸ்வரின் தாத்தா அவரின் செய்கைகளை கண்டிக்காமல் இருந்தது தான். அவருடைய பார்வை இருவரையும் பார்த்த பிறகு ஒரேயொரு நொடி மொத்த முகமும் ஜொலித்தது. அடுத்த நிமிடமே இருள் பூசிக் கொண்டது.

அதன் பிறகு சொந்தப் பேரனின் முகத்தைக் கூட பார்க்கப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார் என்றால் எந்த அளவிற்கு என் மேல் அவருக்கு வெறுப்பு இருக்க வேண்டும் என்று எண்ணி வருந்தத் தொடங்கினாள். அவரது கோபத்தில் தவறு இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை.

அரண்மனையைப் போன்ற அந்த வீட்டிற்கு கொஞ்சமும் பொருந்தாத ஒரு அனாதையை மருமகளாக கொண்டு வந்தால் யார் தான் ஏற்றுக்கொள்வார்கள்? என்ற எண்ணம் ஒருபுறம் எழுந்தாலும் அவளுடைய மனதின் மறுபுறம் வேறு ஒரு நியாயமான கேள்வியை எழுப்பத் தவறவில்லை.

‘இந்தக் கல்யாணம் என்ன நான் விரும்பியா நடந்தது? அவரோட பேரன் தான் என்னோட வாழ்க்கையை திசை திருப்பினார். அவரின் கைகளில் பொம்மை போல அவரின் இஷ்டத்திற்கு நான் ஆடிக் கொண்டு இருக்கிறேன். இதில் என் மீது என்ன தவறு?

ஆயிரம் தான் தங்க முலாம் பூசி சொன்னாலும் பூபதி என்பவர் அந்த வீட்டைப் பொறுத்தவரை அந்த வீட்டில் வேலை பார்க்கும் ஒரு நபர். அவருக்கு ஏன் தன் மேல் இத்தனை கோபம்?

நியாயப்படி பார்த்தால் ஈஸ்வரின் தாத்தா வைத்தீஸ்வரனுக்கு அல்லவா அத்தனை கோபம் வந்திருக்க வேண்டும்? ஒருவேளை அவரால் பேச முடியாததால் அவருக்கு பதிலாக அவரது கருத்தை இவர் இப்படி அழுத்தமாக பதிய வைக்க முயல்கிறாரோ? பூபதியைப் பொறுத்தவரை நான் இந்த வீட்டு மருமகள்... அதாவது அவருடைய எஜமானின் மனைவி அப்படி ஒரு ஸ்தானத்தில் இருப்பவளை ஒரு சாதாரணமான வேலையாள் இந்த அளவுக்கு எதிர்க்க முடியுமா?’

மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நின்றது வானதியின் மனது. குழப்பங்களுடன் அறையில் இருந்த சோபாவில் தலையை கைகளால் தாங்கியவண்ணம் அவள் அமர்ந்து விட கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஈஸ்வர். அவள் இருக்கும் நிலையை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தவன் ஒன்றுமே நடக்காதது போல அவள் அருகில் அமர்ந்து பேசத் தொடங்கினான்.

“என்ன சில்லக்கா... வீடு எப்படி பிடிச்சு இருக்கா? அதை விட முக்கியமா இந்த ரூம்... அதையும் விட முக்கியமா கூடவே இருக்க போற இந்த அழகான மாமா...” என்று கிண்டலாக கூறி லேசாக கண் சிமிட்ட, வானதியின் முகத்தில் அப்பொழுதும் குழப்ப ரேகைகள் மட்டுமே மிஞ்சி இருந்தது.

சோபாவில் அவளின் அருகில் அமர்ந்தவன் தலையை தாங்கி இருந்த அவளது கரங்களை எடுத்து தன்னுடைய கன்னத்தில் பதித்துக் கொண்டான். அவளது குழப்பமான பார்வையை சளைக்காமல் எதிர்கொண்டவன் அவளது கண்ணோடு கண் கலந்தவாறு பேசத் தொடங்கினான்.

“பூபதி தாத்தா இந்த ஜமீனோட திவான் மட்டும் இல்லை.. தாத்தாவோட சின்ன வயசு பிரண்டு. அவரும் எனக்கு ஒரு தாத்தா மாதிரி தான். நான் இல்லாத நாளில் பக்கத்தில் இருந்து தாத்தாவை அவர் தான் பார்த்துகிட்டார். தாத்தாவுக்கும் அவர் மேல ரொம்ப அன்பு உண்டு. அதே போலத் தான் பூபதி தாத்தாவுக்கும். அன்பையும் தாண்டி இந்த ஜமீனின் மீது அதிகமான விசுவாசம் உண்டு அவருக்கு”

“விசுவாசம்? எந்த அளவிற்கு? அந்த வீட்டின் வாரிசு முதன்முறையா தன்னோட மனைவியை கூட்டிக்கிட்டு வரும் பொழுது அவங்க மேல வாளை வீசும் அளவுக்கா?” என்றவளின் கேள்வி ஈஸ்வருக்கு புரியாமல் இல்லை.

“எனக்கு அவர் மேல நிறைய மரியாதை இருக்கு சில்லக்கா... தாத்தா கோமாவில் படுத்து கிடந்தப்போ அவர் தான் தாத்தா கூடவே இருந்து அவரை பார்த்துக்கிட்டார். பவுனம்மா என் கூட இருந்தாங்க. தாத்தாவை கொல்ல எத்தனை பேர் முயற்சி செஞ்சாங்க தெரியுமா? அது எல்லாத்தையும் ஒற்றை ஆளாய் சமாளிச்சு இருக்கார். அவர் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்து இருந்தாலும் தாத்தாவை நான் எப்பவோ இழந்து இருப்பேன்”

‘என்னை புரிந்து கொள்ளேன்’ எனும் கெஞ்சல் தொனி அதில் இருந்தாலும் வானதியின் கோபமும், குழப்பமும் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. அதற்காக அவளை அப்படியே விட்டு விட்டால் அவன் ஈஸ்வர் ஆகி விடுவானா?

“இதோ பார் சில்லக்கா... நம்ம வீட்டில் தாத்தாவும், பூபதி தாத்தாவும் தான் பெரியவங்க...அவங்க யாருக்குமே சொல்லாம அவசரகதியில் நம்ம கல்யாணம் நடந்துடுச்சு... ஊரில் பெரிய குடும்பம். என்னோட கல்யாணத்தை எப்படி எல்லாமோ நடத்தி கண் குளிர பார்க்க முடியலைன்னு அவங்களுக்கு வருத்தம். அது தப்பு இல்லையே?”

“தப்பு இல்லை தான். ஆனா அவரோட வருத்தம் உங்க கல்யாணத்தை பார்க்க முடியலை அப்படிங்கிறது மட்டும் இல்லை...மருமகளாக ஒரு அனாதை வந்ததும் கூடத் தான்” என்று அவள் பார்வையை எங்கோ பதித்து சொல்ல... வேகமாக பாய்ந்து வந்து அவள் வாய் பொத்தினான்.

“இப்படி எல்லாம் பேசக் கூடாது சில்லக்கா... ஆமா.. முன்னாடி எல்லாம் பேசவே மாட்ட.. இப்போ இந்த பேச்சு பேசுற... உன்னோட வாய்க்கு பயந்து நான் தான் யூ டர்ன் (U Turn) போட்டு ஓட வேண்டி இருக்கு”

“என்ன செய்றது... சேர்க்கை சரி இல்லை” என்று ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தபடியே கூறிவிட்டு அவள் நமுட்டு சிரிப்பு சிரிக்க... வலிக்காமல் அவளது காதை பிடித்து திருகினான் ஈஸ்வர்.

“என்னால தான் உனக்கு வாய் ஜாஸ்தி ஆச்சா?”

“தைரியமும் உங்களால தான் ஜாஸ்தி ஆச்சு”

“யாருக்கு உனக்கா? தைரியமா? கொஞ்சம் கூட நம்புற மாதிரி இல்லையே?... சின்னதா ஒரு டெஸ்ட் செஞ்சு பார்த்துடுவோமா?” என்றான் கண்களில் விஷமச் சிரிப்புடன்.

அவனது கள்ளத்தனம் புரியாமல் வானதியும் வேகமாக தலையை ஆட்டிய பிறகே யோசித்தாள்.

‘அய்யயோ... இவரைப் பத்தி தெரிஞ்சும் அவசரப்பட்டியேடி... என்ன செய்யப் போறாரோ தெரியலையே?’என்று பக்பக் என்று துடிக்கும் மனதோடு அவள் காத்திருக்க தங்கள் இருவருக்குள் இருந்த இடைவெளியை கண் இமைக்கும் நேரத்திற்குள்ளாக குறைத்து அவளின் அருகில் நெருங்கி இருந்தான் ஈஸ்வர்.

“இப்போ உனக்கு பயமா இருக்கா?”

“இல்லையே”

அவளிடம் இருந்து அந்த பதிலைத் தான் அவனும் எதிர்பார்த்தான் போலும். கொஞ்சமும் சிரிப்பு மாறாமல் இன்னும் கொஞ்சம் நெருங்கி மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.

“இப்போ உனக்கு பயமா இருக்கா?”

“இ..இல்லையே” லேசாக தடுமாறத் தொடங்கினாள் வானதி.

ஈஸ்வரின் புன்னகை மேலும் அதிகரித்தது. வசீகரிக்கும் புன்னகையுடனும், சுண்டி இழுக்கும் பார்வையுடனும் அவன் பார்வை அவள் மேனியில் அலை பாயத் தொடங்க...வானதியின் உடலில் மெல்லியதோர் நடுக்கம் தோன்றியது.

அவளின் நடுக்கத்தை கண்களால் விழுங்கியபடி மெல்லிய குரலில் அவளின் காதோரம் கிசுகிசுத்தான்.

“இப்போ... இந்த நிமிஷம் இதுக்கு மேல நான் என்ன செஞ்சாலும் உனக்கு பயம் வராது அப்படித்தானே?”

‘பயமா? அது வந்து அரை மணி நேரம் ஆச்சு யுவர் ஆனர்..’ என்ற நிலையில் இருந்தாள் வானதி. ஈஸ்வர் அவளை நெருங்கத் தொடங்கியதுமே அவளின் இருதயம் ரேஸில் ஓடும் குதிரையின் வேகத்திற்கு இணையாக துடிக்கத் தொடங்கி இருந்தது.

அவள் தனக்குள் பேசிக் கொண்டிருந்த நொடிகளில் அவன் கைகள் அவளை வளைத்து தன் வசத்திற்கு கொண்டு வந்து இருந்தன.அவன் பிடி கொஞ்சம் கொஞ்சமாக இறுகத் தொடங்கிய பிறகே அவள் நிலை அவளுக்குப் புரிய தப்பிக்கும் வழி தெரியாமல் திணறத் தொடங்கினாள் வானதி.

“தப்பிச்சு ஓடிடணும் போல தோணுதா?”என்றான் அவளை அறிந்து வைத்தவன் போல...

அவள் ஆமாம் என்றா சொல்ல முடியும்? பேந்த பேந்த விழித்துக் கொண்டு இருந்தாள்.

“சரி நானே விட்டுடறேன்...ஆனா ஒரு கண்டிஷன்” என்று அவன் வார்த்தைகளால் அவளுக்கு வலை வீச... எச்சரிக்கை உணர்வுடன் அவனது பார்வையை சந்தித்தாள் வானதி.

அவளது பார்வையை உணர்ந்து கொண்டவன் அடக்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

“என்ன சில்லக்கா இவ்வளவு பயம் தெரியுது உன்னோட கண்ணில்... நீ இந்த ஈஸ்வர்... ருத்ரேஸ்வரோட பொண்டாட்டி... எதுக்கும் எவனுக்கும் பயப்படக்கூடாது புரிஞ்சுதா?” என்று பேசியபடியே செல்லமாக அவளது மூக்கை பிடித்து ஆட்டினான்.

“இந்த வீட்டில் எல்லாருமே இனி உன்னோட சொல் பேச்சு கேட்டுத் தான் நடந்துக்கணும். எங்க எல்லாருக்கும் நீ தான் எஜமானி... என்னோட குடுமி கூட இனி உன் கையில் தான்.தெரியுமா?” என்று அவன் சொல்ல அவனையே வியப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் வானதி.

முதன்முதலாக அந்த கப்பலில் தான் பார்த்த ஈஸ்வருக்கும், இப்பொழுது இந்த நிமிடம் தான் பார்த்துக் கொண்டு இருக்கும் ஈஸ்வருக்கும் இடையில் தான் எத்தனை வேறுபாடுகள்... திமிரின் உச்சியில் இருந்த அவன் எங்கே? அன்பின் அடி ஆழத்தை ருசிக்க வைக்கும் இவன் எங்கே?

இது தான் நிஜம் என்றால் அன்று அந்த கவசம் ஏன்?’ அவளின் சிந்தனைகளில் இருந்து கலைத்தது ஈஸ்வரின் பேச்சு...

“கொஞ்சம் உங்க கனவுலகில் இருந்து மீண்டு வந்து எனக்கு என்ன வேணும்னு கேளு சில்லக்கா...”மூக்கோடு மூக்கை உரசியபடி அவன் பேச வேகமாக முகத்தை நகர்த்தி கைகளால் மூக்கை அழுந்தத் துடைத்துக் கொண்டாள் வானதி. அவளது சிறுபிள்ளைத்தனமான செய்கை கண்டு சிரித்தவன் கைகளால் அவள் மேனியில் தன்னுடைய தடத்தை அழுந்தப் பதிக்க முயல வானதியின் உடலில் ஏதோவொரு மாற்றம். அவனை தள்ளி விட்டு ஓட முடியாமல் அவன் அவளை சிறைபிடித்து வைத்திருக்க, கெஞ்சும் கண்களால் அவனை ஏறிட்டாள்.

“அப்போ நான் சொல்ற மாதிரி செய்றியா?” உனக்கு வேறு வழியே இல்லை..செய்து தான் தீர வேண்டும் என்ற கட்டளை அதில் மறைமுகமாக தொக்கி நிற்க பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கண்களால் ‘என்ன’ என்று கேட்டாள்.

“எங்க என்னை பார்த்து மாமான்னு கூப்பிடு பார்க்கலாம்” என்று அவன் கூற அவளுக்கு சட்டென்று ஏர்போட்டில் அவன் சவால் விட்டது நினைவுக்கு வர கோபமாக அவனை முறைத்துப் பார்க்க முயன்றாள்.

(நீ கோவப்படுற லட்சணம் தான் எங்களுக்கு தெரியுமே? உதட்டை சுருக்கி,கன்னத்தை கோணி,முட்டைக்கண்ணை முழிச்சு பார்ப்ப... அதுதானே...அப்படிங்கிற உங்க மைண்டு வாய்ஸ் எனக்கு கேட்குது)

அவளின் கோபத்திற்கு ஈஸ்வரின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பது தெரியாதா என்ன? பக்கென்று சிரித்து விட்டான்.

“நீ கோபப்படும் பொழுது ரொம்ப அழகா இருக்க சில்லக்கா” என்று கூறிவிட்டு அவள் கன்னத்தை தட்டி விட்டு, மேலும் அவளை அழுத்தமாக அணைக்க... அந்த நேரம் அவனது செல்போன் ஒலி எழுப்பி அவளை காப்பாற்றியது என்று தான் சொல்ல வேண்டும்.

“உன்னை வந்து பேசிக்கிறேன்” என்று செல்லமாக மிரட்டி விட்டு அவன் நகர... விட்டால் போதும் சாமி என்று நினைத்தவள் அங்கே சுவற்றில் மாட்டி இருந்த ஓவியங்களை ரசிக்கத் தொடங்கினாள்.

அறையின் உள்ளே இருந்த டெலிபோன் ஒலிக்க எட்டிப் பார்த்தான் ஈஸ்வர் .

“எடுத்து பேசு சில்லக்கா... என்ன விஷயம்னு கேட்டு வை..இந்த போனை பேசி முடிச்சுட்டு வர்றேன்”என்றவன் மீண்டும் பிசினெஸ் பேச்சில் மூழ்கி விட சாவதானமாக வந்து போனை எடுத்தாள்.

“ஹலோ..”

“...”

“ஹலோ... யார் பேசுறீங்க?”

“...”

“ஹலோ பேசுறது காதில் விழலியா? யார் பேசுறது?”

“நான் மூர்த்தி பேசுறேன் வானதி... உன்னோட மூர்த்தி” என்ற குரல் செவியைத் தீண்ட, வானதியின் குரல் தொண்டையை விட்டு வெளி வர மறுத்தது.

தீ தீண்டும்.

Post a Comment

புதியது பழையவை