Theendatha Thee Neeye Tamil Novels 37

 

அத்தியாயம் 37

போனில் மூர்த்தியின் குரலைக் கேட்டதும் பதட்டத்துடன் திரும்பி ஈஸ்வரைப் பார்த்தாள். ஈஸ்வர் மும்மரமாக பால்கனியில் நின்று கொண்டு தொழில் தொடர்பாக யாரிடமோ பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருக்க, கொஞ்சம் ஆசுவாசமாமானாள்.

‘இவனுக்கு எப்படி இந்த நம்பர் கிடைத்தது? இவனிடம் கண்டிப்பாக பேசி விட வேண்டும். இல்லைனா மறுபடியும் இதே மாதிரி போன் செஞ்சு தொல்லை கொடுத்துக்கிட்டே இருப்பான். அது நல்லதுக்கு இல்லை’ என்று எண்ணியவள் கறாரான குரலுடன் பேசத் தொடங்கினாள்.

“மூர்த்தியா?... எந்த மூர்த்தி? எனக்கு அப்படி யாரையும் தெரியாது” என்று பட்டென்று சொல்லி விட ஒரு சில நொடிகள் எதிர்புறம் மௌனமாக இருந்தது.

“வச்சுட்டான் போல’ என்று எண்ணிக்கொண்டே அவள் போனை வைக்க முயல தொடர்ந்து பேசினான் மூர்த்தி.

“என்னை உனக்கு தெரியலையா வானதி? அதுக்குள்ளே என்னை மறந்துட்டியா? உனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன்? உன்னை காதலிச்சு, முறைப்படி உன்னை கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்டு எல்லா ஏற்பாடும் செஞ்சேனே... அந்த பாவி உன்னை கடத்திட்டு போன பிறகும் கூட உன்னை எப்படி எல்லாம் தேடித் திரிஞ்சேன் தெரியுமா? 

அடிபட்டு,ஜெயிலுக்கு போய், கடைசியில் அந்த ஈஸ்வர் எனக்கு கரண்ட் ஷாக் வச்சு கொல்ல வேற முயற்சி செஞ்சான்... அது அத்தனையும் தாங்கிட்டு மறுபடியும் உன்னோட காலை சுத்தின நாய் மாதிரி வர இந்த மூர்த்தியை உனக்கு தெரியலையா? சொல்லு வானதி? சொல்லு” ஆக்ரோஷம் நிறைந்த அவனது பேச்சிற்கு மறுத்து பேச முடியாமல் மௌனியானாள் வானதி.

‘ஆயிரம் தான் இருந்தாலும் மூர்த்தி இப்பொழுது சொன்ன எதுவுமே பொய் இல்லையே... எல்லாமே நிஜம் தானே? எல்லா தவறையும் செய்த ஈஸ்வரை மன்னிக்க முடிந்த என்னால் மூர்த்தியின் தவறை மன்னிக்க முடியாதா?’

“உனக்கு என் மேல கோபம் இருக்கலாம் வானதி.. ஆனா அதுக்காக நான் யார்னே தெரியலைன்னு சொல்ல உனக்கு எப்படி மனசு வந்துச்சு வானதி சொல்லு?”

“...”

“எல்லா அக்கிரமத்தையும் செஞ்சு... உன்னையும் என்னையும் பிரிச்சு உன்னை ஏமாத்தி கல்யாணம் செஞ்சுகிட்டவனை கல்யாணம் செஞ்சு நீ குடும்பம் நடத்துவ? ஆனா... நான் மட்டும் உன்னை மறந்துட்டு இருக்கணுமா? என்ன நியாயம் இது? அவன் படபடவென்று பேச வானதிக்கு அவனை எப்படி சமாளிப்பது என்றே புரியவில்லை. ஈஸ்வர் எந்த நொடி வேண்டுமானாலும் போன் பேசி முடித்து விட்டு அவளிடம் வரும் அபாயம் இருப்பது அவளுக்கு புரிந்தது.

ஈஸ்வருக்கு மட்டும் தான் போனில் பேசிக் கொண்டு இருப்பது  மூர்த்தியிடம் என்பது தெரிந்தால் கண்டிப்பாக விளைவுகள் விபரீதமாகத் தான் இருக்கும் என்பது புரிய அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அவள் மனம் குழம்பத் தொடங்கியது.

போனில் மூர்த்தி.... எதிரில் புன்னகை மாறாமல் ஈஸ்வர்... இரண்டுமே ஆபத்தாயிற்றே...

“இப்போ உங்களுக்கு என்ன வேணும் மூர்த்தி?”

“எனக்கு உன்னை நேரில் பார்க்கணும் வானதி... கொஞ்சம் மனசு விட்டு பேசணும்.”

“அது எப்படி முடியும்?”

“முடிஞ்சே ஆகணும் வானதி.நான் சொல்லப் போற விஷயத்தில் தான் உன்னோட வாழ்க்கை அடங்கி இருக்கு”

“எதுவா இருந்தாலும் சரி என்னால எங்கேயும் வர முடியாது.அவர் என்னை தனியா எங்கேயும் அனுப்ப மாட்டார்”

“வானதி...ப்ளீஸ்! இந்த ஒருமுறை மட்டும் என்னைப் பார்க்க வா... அதுக்குப்பிறகு உன்னை நான் தொந்தரவு செய்யவே மாட்டேன்”

அவள் பேசிக் கொண்டே இருக்கும் பொழுதே ஈஸ்வர் போன் பேசி முடித்து விட்டு அவளை நோக்கி வரத் தொடங்க, பதட்டத்தில் மூர்த்தியிடம் வேகமாக சம்மதம் தெரிவித்து விட்டாள்.

“சரி மூர்த்தி... ஒரே ஒரு முறை தான்...”

“சரி வானதி...ரொம்ப சந்தோசம் நீ என்னை சந்திக்க ஒத்துக்கிட்டதுக்கு... எங்கே ... எப்போன்னு நான் முடிவு செய்றேன்.. இடத்தை பத்தி நீ யோசிக்காதே...தகுந்த நேரமா பார்த்து நானே உன்னை சந்திக்கிறேன்” என்று அவன் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே ஈஸ்வர் நெருங்கி விட பட்டென்று போனை வைத்து விட்டாள் வானதி.

“யாரு போன்ல?”

‘அய்யய்யோ... கேள்வி கேட்கிறானே... சமாளி வானதி’ என்றொரு குரல் கேட்க... முகத்தை கொஞ்சம் கோபமாக வைத்துக் கொண்டு அங்கிருந்த படுக்கையில் போய் வேகமாக அமர்ந்து கொண்டாள்.

“என்னாச்சு வானதி... யார் போன்ல? என்ன பேசினாங்க?” என்றான் லேசாக குரலை உயர்த்தி... இப்படி பேசினால் அது ஈஸ்வருக்கு கோபம் வரப் போவதற்கான அறிகுறி என்பதை உணர்ந்தவள் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“யாரோ பேசினாங்க...”

“யாரு?”

“தெரியலை”

“தெரியாத ஆள் கிட்டயா இவ்வளவு நேரம் பேசின?”

“அ... அது வந்து அவங்க தெலுங்கில் ஏதோ பேசினாங்க..எனக்கு ஒரு வார்த்தை கூட புரியலை” என்றாள் மனதை மறைத்து...

“ஓ... அது தான் அப்படி முழிச்சியா?”என்றான் லேசான சிரிப்புடன்...

“ஆமா... ஆமா” என்றாள் வேகமாக... உண்மையை அவனிடம் மறைக்கா விட்டால் மூர்த்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்து வைத்து இருந்ததாலேயே அவ்வாறு செய்தாள்.அவளுக்கு ஈஸ்வரின் கோபத்தைப் பற்றி நன்றாகத் தெரியும்.இத்தனை தூரம் வந்த பிறகும் கூட மூர்த்தி விடாமல் தங்களை பின் தொடர்ந்து வருவது மட்டும் அவனுக்குத் தெரிந்தால் நிச்சயம் மூர்த்தியை சும்மா விட மாட்டான் என்பதாலேயே அவள் உண்மையை மறைத்து பொய்யுரைத்தாள்.

இனி தங்கள் வாழ்வில் மூர்த்தியின் குறுக்கீடு இருப்பதையும் அவள் விரும்பவில்லை. எனவே இறுதியாக ஒருமுறை அவனை சந்தித்து பேசி விடுவது என்று முடிவு செய்து தன்னுடைய மனதில் இருப்பதை மூர்த்தியிடம் தெளிவாக எடுத்துரைத்து தன்னுடைய வாழ்வில் இருந்து  இனி அவனை முற்றிலுமாக ஒதுங்கிக் கொள்ள செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தாள் வானதி.

“சரி வானதி... நாளைக்கு நம்ம கிட்டே வேலை பார்க்கிற ஆட்களுக்கு எல்லாம் விருந்து ஏற்பாடு செஞ்சு இருக்கோம்.அவங்களுக்கு நம்ம கையால டிரஸ் கொடுக்கணும்.அப்புறம் எல்லாருக்கும் ஒரு மாச சம்பளம் போனசா கொடுக்க சொல்லி இருக்கேன்.அதுக்கான விழா நாளைக்கு இருக்கும்” என்றவன் அவள் முகத்தில் பய ரேகைகள் தெரியவும் மறுப்பாக தலை அசைத்தான்.

“ம்ச்... என்ன பார்வை இது... இப்ப தான் தைரியசாலி பெருமை பீத்திக்கிட்ட... அதுக்குள்ளே இப்படி நடுங்கிற..வரப் போறது நம்ம கிட்டே வேலை செய்றவங்களும்... அவங்களோட குடும்பமும் தான்.எல்லாரும் ஏழை மக்கள்.நம்ம கையால அவங்களுக்கு கொடுத்தா.. அவங்களுக்கும் சந்தோசமா இருக்கும்... நமக்கும் புண்ணியம் கிடைக்கும்.மத்தபடி நாளைக்கு யாரும் உன்னை கடிச்சு சாப்பிட மாட்டாங்க... அதனால எதையும் போட்டு குழப்பிக்காதே... புரிஞ்சுதா?” என்றவன் அவளது தலையை செல்லமாக ஆட்டி விட்டு வெளியே வேலை இருக்கிறது என்று சொல்லி சென்று விட... அறைக்குள்ளேயே அடைந்து கிடந்து போரடித்து போய் விட மாலை நேரத்தில் அறையை விட்டு வெளியே வந்தாள் வானதி.

காலையில் வீட்டிற்கு வந்து சேர்ந்த பொழுது இருவரும் அசதியாக இருந்ததாலோ என்னவோ ஈஸ்வர் அவளுக்கு வீட்டை சுற்றிக் காட்டாமல் அவசர வேலை என்று கிளம்பி விட இப்பொழுது அறையை விட்டு வெளியே வந்தவள் ஒவ்வொரு அறையாக நிறுத்தி நிதானமாக வெளியில் இருந்த படியே பார்வையிட்டுக் கொண்டே நடந்து வந்தாள்.

கண்டிப்பாக அந்த வீட்டைக் கட்டி அரை நூற்றாண்டு இருக்கும் என்பது அந்த வீட்டின் அமைப்பில் இருந்தும் அது கட்டி இருந்த அழகை வைத்தும் முடிவு செய்து கொண்டாள்.மிகப்பெரிய ஹால் அதன் இரண்டு புறத்தில் இருந்தும் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள். படிக்கட்டுகள் முழுக்க சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு அதன் ஓரத்தில் தங்க நிறம் மின்னிக் கொண்டு இருந்தது.ஹாலின் மேலே அழகிய மிகப்பெரிய கண்ணாடி சாண்டிலியர் விளக்குகள் ஒளிர்ந்து அந்த இடத்தையே மேலும் அழகாக்கிக் கொண்டு இருந்தது.

அந்த வீட்டின் ஒவ்வொரு தூணிலும் கூட நிரம்பி இருந்த கலை அம்சத்தை ரசித்த படியே வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தவள் ஒரு தனக்கு பின்னால் கேட்ட குரலில் அப்படியே அதிர்ந்து போய் நின்று விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

“இந்த வீடு என்ன விலை போகும்னு பார்வையாலேயே அளக்கிற போல” என்ற அலட்சியமான குரல் திவான் பூபதியோடது என்பது சொல்லாமலே புரிய... மனதில் தோன்றிய அச்சத்தை வெளிக்காட்டாமல் நிதானமாக திரும்பி அவரைப் பார்த்தவள் மென்மையாக புன்னகைத்தாள்.

“உலகத்தில் விலைமதிப்பில்லா விஷயங்கள் சிலது உண்டு..அதில் இதுவும் ஒண்ணு தான்”

“ஆமாமா... கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் இருக்கே” என்றார் வெஞ்சினத்துடன்

“ஆமா.. எல்லாமே பொக்கிஷமா போற்றி பாதுகாக்க வேண்டிய பொருட்கள்...” என்றாள் சிறிதும் அலட்டல் இன்றி...

அவளது அந்த பாவனை அவரை உசுப்பேற்றியது போலும்.. கண்கள் சிவக்க ஆத்திரத்துடன் அவளை நெருங்கினார்.

“பார்த்ததும் எல்லாப் பொருளையும் சொந்தமாக்கிக்க சொல்லி உன்னோட மனசு துடிக்குதோ?” என்று வன்மம் பொங்க அவர் கேட்க வானதியோ சிறிதும் சலனம் இல்லாமல் அவரை எதிர்கொண்டாள்.

“இது எல்லாமே ஏற்கனவே எனக்கு உரிமை உள்ள பொருட்கள் தான் அப்படிங்கிறது ஜமீனோட திவானுக்கு மறந்து போச்சோ?” என்று கொஞ்சம் நக்கலுடனும், நிமிர்வுடனும் அவள் பேசிய விதம் அவரை அளவுக்கு அதிகமாகவே சீண்டி விட , தன்னுடைய வயதுக்கு மீறிய கோபத்துடன் அவளை நெருங்கியவர் ஒற்றை விரல் உயர்த்தி அவளை எச்சரித்தார்.

“ஒழுங்கா மரியாதையா இங்கே இருந்து போய்டு... இது உனக்கான இடம் இல்ல”

“என்னை இங்கே இருந்து போக சொல்ல நீங்க யார்? இது என் வீடு”என்றாள் அழுத்தம் திருத்தமாக...

“எல்லாம் ஈஸ்வர் கொடுக்கிற இடம் தானே? உன்னை இந்த இடத்தை விட்டு துரத்துறேனா இல்லையா பார்” என்று அவர் கடும்கோபத்துடன் சவால் விடுக்க... கொஞ்சமும் தயங்காமல் அவரை நேர்ப்பார்வை பார்த்தாள் வானதி.

“உங்களோட இந்த சவால் எதுக்காக? என்னை இந்த வீட்டில் இருந்து துரத்தவா? இல்லை... ஈஸ்வரோட வாழ்க்கையில் இருந்து அப்புறப்படுத்தவா?” என்றவளின் பார்வை அவரை சுட்டெரிக்க... அவரும் சளைக்காமல் அவளது பார்வையை எதிர்கொண்டார்.

போர்க்களத்தில் சம பலத்தில் இருக்கும் இரு போர் வீரர்கள் மோதிக் கொள்வதைப் போல இருந்த காட்சியை கண்ட வீட்டு வேலையாட்கள் வெலவெலத்துப் போயினர்.

“இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை..இரண்டுக்குமே ஒரே ஒரு அர்த்தம் தான். நீ இந்த வீட்டில் இருந்து கிளம்பினாலே போதும்.உன்னை ஈஸ்வரின் வாழ்க்கையில் இருந்து சுலபமா தூக்கி எறிய வச்சிடுவேன்.”என்றார் மிதப்பாக..

“உங்களால அது முடியுமா?”என்றாள் கொஞ்சமும் கலக்கமின்றி...

“நிச்சயமா முடியும்” என்றார் அசராமல்...

“உங்க முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்” என்று சலனமின்றி சொன்னவளைப் பார்த்து அவர் பல்லைக் கடிக்க வானதி அசட்டையான தோள் குலுக்கலுடன் ஒரு மகாராணியின் கம்பீரத்துடன் வீட்டில் இருந்த மற்ற பகுதிகளை பார்வையிட நகர்ந்து விட பூபதியின் கண்களில் வன்மம் அக்கினி தீம்பிளம்பென கொதித்ததை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டபடியே ஒவ்வொரு இடமாக சுற்றி வந்தாள்.

இறுதியாக வீட்டின் முன் பகுதியில் தோட்டத்தில் வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டு இருந்த சிறு விநாயகர் கோவிலின் உள்ளே நுழைந்தாள்.அவர்கள் வீட்டு மனிதர்கள் மட்டும் கும்பிடுவதற்கு தோதாக கட்டி இருந்த கோவில் போலும்.

கண் முன்னே தெரிந்த ஆனை முகத்தானிடம் தன்னுடைய உள்ளக் குமுறலை கொட்டித் தீர்த்தாள்.

“இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு நான் என்ன அலைஞ்சுகிட்டா இருந்தேன்.எல்லாத்தையும் செஞ்சது அந்த ஈஸ்வர் கடங்காரன்...கடைசியில் பழி மட்டும் என் பேர்லயா?... அவன் இன்னிக்கு வரட்டும்..அவனை”என்று அவள் திட்டித்தீர்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே அவளது முதுகுக்குப் பின்னால் ஈஸ்வரின் குதூகலம் நிறைந்த குரல் கேட்டது.

“ஹே... சில்லக்கா... என்னடா பக்தி முத்திப் போய் கோவிலுக்கு எல்லாம் வந்து இருக்க?”

‘வாடா... வருச நாட்டு வல்லாள கண்டா... உனக்காகத் தான் காத்திருக்கேன்’ என்ற எண்ணத்துடன் கொதிநிலையில் அவனுக்காக காத்திருந்தாள்.

தீ தீண்டும்.

Post a Comment

புதியது பழையவை