தீண்டாத தீ நீயே Tamil Novels 39

 

அத்தியாயம் 39

ஈஸ்வரின் கேள்வியில் தன்னுடைய செவித்திறனைக் குறித்த சந்தேகம் எழுந்தது வானதிக்கு. பின்னே அந்த நேரத்தில் நடந்து கொண்டு இருந்த விவாதத்திற்கு சற்றும் பொருந்தாத வகையில் பேசியவனை எப்படி கையாள்வது என்று திணறினாள் என்று தான் சொல்ல வேண்டும்.

“ஹே! நான் சொன்னது காதில் விழுந்துச்சா இல்லையா?” என்று கூறி அவள் கண்ணுக்கு நேரே ஒற்றை விரலால் அவன் சொடுக்குப் போட வேகமாக சுயநினைவுக்கு வந்தாள் வானதி.

“இ.. இப்போ நீங்க என்ன கேட்டீங்க?” தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பினாள் வானதி.

“உன்னை.. ஒரு.. பாட்டு.. பாட.. சொன்னேன்” என்று அவன் ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாக அழுத்தி உச்சரிக்க, வானதியின் புருவங்கள் மேல்நோக்கி உயர்ந்தது.

“இப்போ எதுக்கு நீ இப்படி ஓவரா ரியாக்ட் செய்யுற? உன்னை ஒரு பாட்டு தானே பாட சொன்னேன்” என்றான் அசட்டையாக பேசுவது போல...

“அது எப்படி உங்களால நொடியில் மாற முடியுது”

“நான் எங்கே மாறினேன்?”

“அது... இப்போ... கொஞ்ச நேரம் முன்னாடி நீங்க... வந்து... என்னை...” அவள் எப்படி நேரடியாக கேட்பது என்று வாய்க்கு வந்ததை உளற அவளது தடுமாற்றத்தை வெகுவாக ரசித்தான் ஈஸ்வர்.

“என்ன சில்லக்கா பேசத் தெரியாம.. வாயில் வார்த்தை எல்லாம் கபடி ஆடுது” என்றான் மந்தகாசப் புன்னகையுடன் ஒற்றை புருவம் ஏற்றி இறக்கி...

‘இவன் வேணும்னே செய்யுறான்’ என்று அவனை மனதுக்குள் திட்டியவள் பதில் பேசாமல் நகர முனைய அவளின் கைபற்றி இழுத்தான் ஈஸ்வர்.

“எனக்கு ஆசை இருக்கு சில்லக்கா... கொஞ்சம் நஞ்சம் இல்லை... கடலளவு... இப்பவும் எனக்கு நீ வேணும் தான். உன்னை என்னோட மனசு எதிர்பார்க்குதுதான். அதை விட அதிகமா உணர்வுகள் தலை விரிச்சு ஆடி பேயாட்டம் ஆடுது தான். நீ கொடுத்தா கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் உன்னை எடுத்துக்குவேன் தான்.

காதலை ஜெயிக்கிற அளவுக்கு ஆசையும், அதையும் விட அதிகமான தாபமும், அதையும்விட அதிகமான மோகமும் இருக்கு தான்.

ஆனா... அதுக்காக உன்னை உன்னோட சம்மதம் இல்லாம எடுத்துக்க எனக்கு இஷ்டம் இல்லை... நீ கேட்கலாம்.. இதுக்கு முன்னைத் நீ அப்படி தானேடா செஞ்சன்னு... எனக்கு அப்போ வேற வழி தெரியலை. அதனால அப்படி செஞ்சேன். ஆனா இனிமேல் நீ எந்த கட்டாயமும் இல்லாம முழுமனசோட என்னோட வாழணும்னு ஆசைப்படுறேன்”

“...”

“என்னைக்கு முழு மனசோட நீ என்னை ஏத்துக்கிறியோ... அன்னைக்கு... நான் உனக்கு காட்டுவேன்... என்னோட காதலை... மோகத்தை... தாபத்தை.... காமம் அப்படிங்கிறது ஒரு சாத்தான் சில்லக்கா... அதுல இருந்து தப்பிக்க தெய்வத்தின் துணை வேணும். அதுக்குத் தான் உன்னை பாட சொன்னேன்” என்றவனை இமைக்க மறந்து பார்த்தாள் வானதி.

“நான் பாடினா தான் உங்களுக்கு பிடிக்காதே... கப்பலில் ஒருமுறை பாடினப்போ என்னை கொல்ற அளவுக்கு ஆத்திரமா பேசுனீங்க” என்றாள் குற்றம் சாட்டும் பார்வையுடன்.

“இனி அப்படி சொல்ல மாட்டேன் நீ பாடு..ப்ளீஸ்!” என்றான் கெஞ்சலாக...

‘நீ சொன்னா நான் கேட்கணுமா? முடியாது போடா’ என்று முகம் திருப்பிக் கொண்டவளைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

“சில்லக்கா கட்டிலில் கபடி ஆட உனக்கு பிடிக்காதுன்னு நினைச்சு தான் உன்னை பாட சொன்னேன்.. நீ அமைதியா இருக்கிறதை பார்த்தா.. உனக்கு பூரண சம்மதம் போலவே.. அதனால... நீ.. இல்லை வேண்டாம் .. நானே உன்கிட்ட வர்றேன்” என்று அவன் பேசி முடிப்பதற்குள் அவன் புறம் திரும்பியவள்

“பாடி தொலைக்கிறேன்” என்றாள் பல்லைக் கடித்தபடி..

“எனக்கு பிடிச்ச அதே பாட்டு பாடு” என்றவன் ஒன்றுமே பேசாமல் அவளது கை பிடித்து கட்டிலுக்கு அழைத்து சென்று அவளது மடியில் தலை வைத்து கண் மூடி அவளின் பாடலுக்காக கண் மூடி காத்திருந்தான்.

இரவு நேர அமைதி எங்கும் நிறைந்திருக்க... அந்த நேரத்தில் வானதி பாடிய பாடல் தேனாக அவன் செவிகளில் பாய்ந்தது.

கற்பூர பொம்மை ஒன்று 

கை வீசும் தென்றல் ஒன்று

கலந்தாட கை கோர்க்கும் நேரம்

கண்ணோரம் ஆனந்த ஈரம்

முத்தே என் முத்தாரமே சபை ஏறும்

பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

பூந்தேரிலே நீ ஆடவே

உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்

ராஜாங்கமே ஆனந்தமே

நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்

மானே உன் வார்த்தை ரீங்காரம்

மலரே என் நெஞ்சில் நின்றாடும்

முத்தே என் முத்தாரமே

சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

 கற்பூர பொம்மை ஒன்று

கை வீசும் தென்றல் ஒன்று
 

தாய் அன்பிற்கே ஈடேதம்மா

ஆகாயம் கூட அது போதாது

தாய் போல் யார் வந்தாலுமே

உன் தாயை போலே அது ஆகாது

என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்

உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்

முத்தே என் முத்தாரமே

சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா...

முழு பாடலையும் அவள் பாடி முடிக்கும் வரை ஈஸ்வரிடம் ஒரு சின்ன சலனம் கூட இல்லை.

கண்களை மூடி அந்த பாடலை உள்வாங்கிக் கொண்டு இருந்தவன் என்ன நினைக்கிறான் என்பதும் வானதிக்கு புரியாமல் போக, இருளில் அவன் முகத்தையே கூர்ந்தபடி பாடிக் கொண்டு இருந்தவள் அப்பொழுது தான் உணர்ந்தாள் தன்னுடைய மடி ஈரமாவதை... பதட்டத்துடன் ஈஸ்வரின் முகத்தை கைகளில் ஏந்திப் பார்த்தவள் அதிர்ந்து போனாள். அவன் கண்களில் கண்ணீர்...

பூகம்பமே வந்தாலும் சிறு புன்னகையுடன் அதை எதிர் கொள்பவனின் கண்களில் இருந்து கண்ணீர்.... ஆனால் ஏன்? இந்தப் பாட்டு ஏதோ ஒரு விதத்தில் அவனை பாதிப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

‘அன்றும் இதே காரணத்தால் தான் தன்னை பாட வேண்டாம் என்று சொன்னானோ?’ என்று அவள் யோசனையுடன் அமர்ந்து இருக்க, கண் இமைக்கும் நேரத்தில் கட்டிலில் படுத்தவன் வழக்கம் போல அவளை அள்ளி நெஞ்சில் போட்டுக் கொண்டு சில கணங்களில் உறங்கியும் போனான். அவன் கண்களில் இருந்து வழிந்த காய்ந்த கண்ணீர் கோடுகளை பார்த்து யோசித்துக் கொண்டே இருந்தவள் தன்னையும் அறியாமல் உறங்கிப் போனாள்.

விடிந்ததும் அவளுக்கு முன்னதாகவே அவன் கிளம்பி இருக்க, இப்படி தூங்கி விட்டோமே என்ற குற்ற உணர்வுடன் அரக்கபரக்க கிளம்பி வந்தாள் வானதி.

சாப்பாட்டு மேசையில் அவளுக்கு முன்னரே அமர்ந்து இருந்த ஈஸ்வரைப் பார்த்ததும் முதல் நாள் இரவின் தாக்கம் எதுவும் இழையோடுகிறதா என்று கவனித்தபடியே வந்தவள் அவனுக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டாள்.

உள்ளுணர்வு உந்த எதிரே நிமிர்ந்து பார்த்தவள் அப்பொழுது தான் கவனித்தாள் அங்கே இருந்த மற்ற இருவரையும்... வைத்தீஸ்வரன் அவளை பார்க்கவே இல்லாதது போல ஒற்றைக் கையால் தடுமாறி உணவை வாயில் நுழைத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்க, பூபதியின் பார்வையோ அவளைத் துளைத்துக் கொண்டு இருந்தது.

அவர் பார்வையில் ஏதோ ஒரு மாற்றம் இருந்தது... நேற்றைய பார்வைக்கும் இன்றைய பார்வைக்கும் கண்டிப்பாக ஏதோ வித்தியாசம் இருந்ததை உணர முடிந்தவளால், அது என்ன என்பதை அறிய முடியவில்லை.

ஈஸ்வர் கண்ணைக் காட்ட மௌனமாக அமர்ந்து உணவை  உண்ணத் தயாரானாள் வானதி.

“இந்த ஜமீனுக்குன்னு அந்தஸ்து, பாரம்பர்யம் எல்லாம் இருக்கு.. இப்படித் தான் ஆடி அசைந்து எழுந்து வர்றதா?” என்று புகைச்சலுடன் பேசியது வேறு யாராக இருக்கக்கூடும் பூபதியைத் தவிர...

‘என்ன பதில் பேசுவது என்று புரியாமல் அவள் திருதிருக்க அவளுக்காக பரிந்து பேசினான் ஈஸ்வர். ஆனால் அவன் பேசியதை கேட்டு அவளுக்குத் தான் சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

“இது என்ன அவளை கேள்வி மேல கேள்வி கேட்கறீங்க? புதுசா கல்யாணம் ஆனவங்களை பார்த்து இப்படி தான் கேட்கிறதா தாத்தா” என்றவன் பேசி முடித்ததும் யாருமறியாமல் அவளைப் பார்த்து கண் சிமிட்ட வானதி தான் அவசரமாக குனிந்து தட்டில் புதையலை தேட வேண்டியதாயிற்று.

“ஹ்ம்... வீட்டுக்கு வந்ததும் முதலில் பூஜை அறையில் விளக்கேத்தணும்... நேரா டைனிங் ஹாலுக்கு வரக்கூடாது” என்றவரின் பேச்சில் கோபம் அடைந்து வானதி பார்வையை உயர்த்த அவளை முந்திக்கொண்டு அவரை கண்டித்தான் ஈஸ்வர்.

“இது அவ வீடு தாத்தா... எப்போ எந்த வேலையை அவளுக்கு செய்யணும்னு தோணுதோ.. அப்போ செய்வா... அதை எல்லாம் யாரும் அவளுக்கு சொல்ல வேண்டாம். அதுவும் இல்லாம நம்ம வீட்டில் இருக்கிற வேலை எல்லாம் அவளுக்கு உடனே பழகிடுமா? இப்போ தானே வந்து இருக்கா? கொஞ்சம் கொஞ்சமா எடுத்து சொன்னா புரிஞ்சுக்கிட்டு செய்வா” என்றவன் ஆதரவான பார்வையை வானதியின் பக்கம் செலுத்தினான்.

என்ன தான் வானதிக்கு ஆதரவாக ஈஸ்வர் பேசினாலும் வானதியால் அங்கே இருக்கவே முடியவில்லை.பேருக்கு எதையோ கொறித்தவள் அமைதியாக மாடி ஏறி சென்று விட்டாள்.

தினம் தினம் இந்த திவான் பூபதியின் பேச்சுக்களை சகித்துக் கொள்ள தன்னால் முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை. எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் சுந்தரேசன் அய்யாவிடம் போய் சேர்ந்து விட வேண்டும் என்று எண்ணியவளுக்கு அதன் பிறகு வேறு எதைப்பற்றியும் சிந்திக்க நேரம் இல்லாமல் போனது.

அடுத்து வந்தவர்கள் அன்றைய விழாவிற்காக அவளை அலங்கரிக்கத் தொடங்க... மற்ற எதையும் பற்றி சிந்திக்க நேரம் இல்லாமல் போனது.புடவை அணிந்து அழகிய கண் கூசும் மின்னலென வெளியே வந்தவளின் பார்வை அவளையும் அறியாமல் அவளது கணவனைத் தேட கம்பீரமாக அவளுக்கு எதிரில் நடந்து வந்தவனைக் கண்டு இமைக்க மறந்து போனாள்.

வேஷ்டியை சாதாரணமாக அணியாமல் பின்பக்கம் முடிச்சிட்டு அந்த ஊரின் பாரம்பரிய முறைப்படி அணிந்து இருந்தவன் தலையில் தலைப்பாகையை அணிந்தபடியே அவளைப் பார்த்தவனின் கண்களில் மின்னல் தெறித்தது.

வேகமாக அவளின் அருகில் வந்தவன் அவளை மேலிருந்து கீழாக ஏற இறங்கப் பார்த்தான்.

“நகை கம்மியா போட்டு இருக்கியே...என் கூட வா... இன்னும் கொஞ்சம் நகை போட்டுக்கோ” என்றவன் அவளுடைய பதிலை எதிர்பாராமல் தன்னுடைய அறைக்கு வேகமாக இழுத்து சென்றவன் கதவை சாத்தி விட்டு அவசரமாக அவளை அள்ளி அணைத்தான்.

“ரொம்ப சோதிக்கிறடி” காதோரம் அவன் முணுமுணுக்க , வானதிக்கு அவஸ்தையாக இருந்தது.

“எல்லாரும் வெயிட் பண்ணுறாங்க” அவனை தள்ளி விட முயன்றபடி அவள் பேச... அவன் காதில் அதெல்லாம் கொஞ்சாமாவது ஏறினால் தானே...

“ம்ச்...பண்ணட்டும்”

“புடவை கசங்கிடும்... கீழே போகலாம்” என்றாள் அவனை தள்ளி நிறுத்த முனைந்தபடியே...

“அப்போ புடவை வேண்டாம்” என்றவனின் கைகள் அவள் புடவையை பற்ற... அவன் கைகளை இறுக பற்றிக் கொண்டாள் வானதி.

“ப்ளீஸ்!” தவிப்புடன் அவள் குரல் வெளிவர... ஆழ்ந்து பெரிய மூச்சுக்கள் எடுத்து தன்னை நிலைபடுத்திக் கொண்டவன் அவளை அருகில் இழுத்து நெற்றியில் மென்மையாக ஒரு முத்தத்தை பதித்து விட்டு அவளை தன்னுடைய தோளில் சாய்த்து கொண்டான்.

“மாமான்னு ஒரு தடவை கூப்பிடேன் சில்லக்கா” ஏக்கமும் எதிர்பார்ப்பும் நிறைந்து வழிந்தது அவன் குரலில்.

“ம்கூம் .. மாட்டேன்” என்றவள் அவன் அசந்த நேரத்தில் அறையை விட்டு வெளியேறி விட ஈஸ்வரின் பார்வை யோசனையுடன் அவள் மீதே நிலைத்து இருந்தது.

‘தன்னை அவள் கணவனாக ஏற்றுக்கொள்ளவே மாட்டாளோ’ என்ற எண்ணம் தோன்றிய அந்த நொடி அவன் உடலில் மின் அதிர்வுகள் தோன்றியது.

‘இல்லை.. அப்படி நடக்காது.. என்னை அவ கண்டிப்பா ஏத்துப்பா.. நாங்க ரெண்டு பேரும் சந்தோசமா வாழத் தான் போறோம்’ என்றவன் அறையை விட்டு வெளியேறி வானதியுடனும் , மற்றவர்களுடனும் சேர்ந்து விழா நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

அது அவர்களுக்கு சொந்தமான இடத்தில் அவர்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு அவன் ஏற்பாடு செய்து இருந்த விழா... அதீத ஆடம்பரங்கள் இன்றி அதே சமயம் எந்த குறையும் சொல்லி விட முடியாதபடி சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

குழுமி இருந்தோர் அத்தனை பேரின் பார்வையும் தன் மீது ஆர்வத்துடன் படிந்து இருப்பதை வானதியால் உணர முடிந்தது. கொஞ்சம் கூட அவள் மனம் பதட்டம் அடையவில்லை.

‘அவர் என்கூடவே இருக்கும் பொழுது எதற்கு பயம்’ என்ற எண்ணம் அவளையும் அறியாமல் தோன்ற அதிர்ச்சியுடன் அருகில் நடந்து வந்து கொண்டு இருந்தவனைப் பார்த்தாள்.

அவன் சுற்றி இருந்த எல்லாருக்கும் பொதுவாக வணக்கம் தெரிவித்தபடி நடந்து செல்ல வானதியோ பரபரப்பானாள்.

‘இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?’ என்று அவள் மனமே அவளிடம் கேள்வி கேட்க அதற்கு பதில் சொல்ல விரும்பாமல் அந்த கேள்வியை ஒதுக்கித் தள்ளினாள் வானதி.

தொழிலாளர்கள் அனைவருக்கும் புது உடைகள் அவர்கள் இருவர் கையாலும் கொடுக்கப்பட வானதி ரொம்பவே மகிழ்ந்து போனாள்.

ஆசிரமத்தில் இருந்த வரை வாங்கி மட்டுமே பழக்கப்பட்டவள்... முதன்முறையாக மற்றவர்களுக்கு கொடுக்கிறாள். அதை எண்ணி எண்ணி ஆனந்தம் அடைந்தாள். அவ்வபொழுது இது போல மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளையும் அறியாமல் அவள் நெஞ்சில் தோன்றியது.

தொழிலாளர்கள் பேசிய மொழி புரியாவிட்டாலும், அவர்களின் கண் வழியே அவர்களின் அன்பை உணர்ந்தாள் வானதி. அவர்களின் பார்வை தங்கள் இருவரின் மீதும் மரியாதையுடனும், அன்புடனும் கலந்து பதிவதை கண்டு கொண்டவளுக்கு அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கத் தொடங்கியது.

கொஞ்ச நேரம் முன்பு அந்த வீட்டை விட்டு கிளம்ப வேண்டும் என்று அவள் எடுத்த உறுதிமொழி காணாமல் போய் இருக்க... மகிழ்ச்சியுடன் இருந்தாள் வானதி.

அவளின் மகிழ்வை எண்ணி ரசித்தவாறே ஈஸ்வரும் எல்லாருடனும் கலந்து பேசிக் கொண்டு இருக்க அந்த இருவரின் மகிழ்ச்சியை கெடுக்கும் வண்ணம் அதே நேரம் அதே இடத்தில் ஒரு திட்டம் உருவாகிக் கொண்டு இருந்தது.

ஆம்! ஜமீனின் திவான் பூபதி தனக்கு நம்பிக்கையான வேலை ஆட்களுடன் யாருக்கும் தெரியாமல் அங்கேயே ஒரு மறைவிடத்தில் வானதிக்கு எதிரான சதி திட்டத்தை தீட்டிக் கொண்டு இருந்தார்.

தீ தீண்டும்...

Post a Comment

புதியது பழையவை