Theendatha Thee Neeye Tamil Novels 24


 அத்தியாயம் 24

“யானை படுத்தா எறும்பு கூட மேலே ஏறி சீண்டிப் பார்க்குமாம்...கையும்,காலும் மட்டும் தான் உடைஞ்சு போய் இருக்கு.நான் இன்னும் சாகலை...இனியொருமுறை அவளை இப்படி பேசினா உன் தலை உன்னோட கழுத்தில் இருக்காது என்று எரிமலையாக வெடித்து சிதறியவன் கண்களால் அவளை அருகே அழைத்தான்.

“உள்ளே வா வானதி” கனிவுடன் அழைத்தான்.

சம்ஹார மூர்த்தியின் அறைக்குள் இருந்த சோபாவில் குமுறிக் குமுறி அழுது கொண்டு இருந்தாள் வானதி.அழுது கொண்டு இருந்தவளையே கூர்மையான பார்வையுடன் அளவிட்டுக் கொண்டு இருந்தான் சம்ஹார மூர்த்தி.

“எதுக்காக இந்த அழுகை வானதி? என்னைப் மறுபடியும் பார்க்க வேண்டி இருக்கேன்னா?”

“ஐயோ..அப்படி எல்லாம் இல்ல”என்றாள் பதட்டத்துடன்

“நினைச்சாலும் தப்பு இல்லை வானதி...கல்யாணம் செஞ்சுக்க போற உன்னை பத்திரமா பாத்துக்காம கோட்டை விட்டவன் தானே”என்றான் சோகம் இழையோட

“அதுல உங்க தப்பு எதுவும் இல்லையே...”என்றாள் அவசரமாக

“அட்லீஸ்ட் உன்னை காப்பாத்தியாவது இருந்தா நல்லா இருந்து இருக்கும்.அதைக் கூட இந்த பாவியால் செய்ய முடியலையே”என்று முகத்தை மூடிக் கொண்டு கதறி அழுதவனை எப்படி தேற்றுவது என்று அவளுக்கு புரியவில்லை.

“உங்களால் ஆன எல்லா முயற்சியும் நீங்க செஞ்சீங்களே...அதுக்காக வருத்தப்படுவானேன்?...அதுதான் நான் பத்திரமா உங்ககிட்டேயே வந்து சேர்ந்துட்டேனே”

கண்களை துடைத்துக் கொண்ட மூர்த்தி வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் மெல்ல தள்ளாடி அவளின் அருகில் வந்து நின்றான்.

“அந்த ராஸ்கல் உன்னை என்ன செய்தான் வானதி? ரொம்ப கொடுமைப் படுத்தினானா? என்ன சொல்லி மிரட்டி உன்னை அந்த மாதிரி போட்டோவும், வீடியோவும் எடுத்துக் கொள்ள வைத்தான்” என்று ஆத்திரத்தில் முகம் இறுக கேட்டவனைக் கண்டு இவளுக்கு கண்ணீர் நிற்காமல் வழியத் தொடங்கியது.

“எதுக்கு அழற வானதி? சொன்னால் தானே தெரியும்?ம்ச்... சொல்லிட்டு அழு” என்றான் சற்றே எரிச்சலான குரலில்.

“இல்லை சார் சொன்னார்...வெளியே போனதும் யாரும் என்னை நம்ப மாட்டாங்க...குறிப்பா நீங்க நம்பவே மாட்டீங்கன்னு சொன்னார்...ஆனா எனக்குத் தான் உங்களையும், உங்க காதலையும் பத்தி முழுசா தெரியுமே...நான் சார் கிட்டே வீறாப்பா சொல்லிட்டு வந்தேன்.

ஆனா இங்கே வந்து உங்க வேலைக்காரர் என்னைத் திட்டிப் பேசும் பொழுதே எனக்கு கொஞ்சம் பயம் வந்துடுச்சு...ஆனா உங்களுக்கு என் மேலே துளியும் சந்தேகம் வரலையே...இதை விட வேற என்ன வேணும் எனக்கு”என்றவள் மீண்டுமாக கண்ணீர் சிந்த உரிமையுடன் அவளை அதட்டினான் மூர்த்தி.

“வானதி...அது தான் என்கிட்டே வந்து சேர்ந்துட்டியே....மறுபடியும் எதுக்கு தேவை இல்லாததை எல்லாம் நினைச்சு கவலைப்படற...இனி அதைப் பத்தி எல்லாம் பேசுறது என்ன... நினைக்கக்கூட செய்யக்கூடாது சரியா?”என்றான் ஆதரவாக...

“உங்களுக்கும்,சாருக்கும் இடையில் என்ன பிரச்சினை?”

“ஏன் அவன் உன்னிடம் எதுவும் சொல்லலையா?”

“இல்லையே...ஆங்..ஏதோ சொத்துப் பிரச்சினைன்னு சொன்னார்”என்றாள் குழந்தையாக...

“அவனுக்கு சொந்தமா நிறைய கப்பல் இருக்கு வானதி..அதுல ஒரு கப்பலில் பெண்களை கடத்திட்டுப் போய் கற்பழிச்சுட்டு அதுக்கு அப்புறம் அவங்களை வெளிநாட்டில் விற்கிறதா எனக்குத் தகவல் வந்தது.அப்படி பொண்ணுங்களை கடத்திட்டு போன கப்பலை துறைமுகத்தில் இருந்து வெளியே போக நான் விடலை...அந்த பொண்ணுங்களை எல்லாம் அவங்கவங்க ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செஞ்சிட்டு அந்த கப்பலையும் சீல் செஞ்சு வச்சாச்சு.அந்த கோபம் அவனுக்கு”

மூர்த்தி சொல்லத் தொடங்கியதுமே அவளது மனக்கண்ணில் ஈஸ்வரின் முகம் மின்னி மறைந்தது.

‘இப்படிப்பட்ட கேடு கெட்ட செயலை நிச்சயம் சார் செய்திருக்க மாட்டார்’என்று அவளது உள்மனம் அவனுக்காக வக்காலத்து வாங்கியது.

‘ஒருவேளை இவர் வேறு யாரோ செய்ததை அவர் செய்ததாக நினைத்துக் கொண்டு அப்படி செய்த ஆத்திரத்தில் தான் என்னைக் கடத்திக் கொண்டு போனாரோ’என்று எண்ணி குழம்பினாள் வானதி.

“அதுக்கு ஏன் அவர் என்னைக் கடத்தணும்?”

“ஊரில் இருக்கிற பொண்ணை எல்லாம் நீ காப்பத்தினியே ... கடைசியில் உன்னை கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணை உன்னால் காப்பாத்த முடியாமல் போய்டுச்சு தானே...அப்படின்னு எனக்கு போன் செஞ்சு நக்கலா சிரிச்சான்...வெறுமனே அவளை கடத்திட்டு வந்தது மட்டும் இல்ல...அவளை மயக்கி என்னோடவே இருக்கிற மாதிரி செய்யுறேன் பாரு...அப்படின்னு எல்லாம் என்கிட்டே சொன்னான்”

“சார் அப்படி எல்லாம் சொல்லி இருக்க மாட்டார்... ஏன்னா அங்கே இருந்த நாட்களில் சார் ஒருமுறை கூட என்னிடம் தவறா பேசினது இல்லை.கோபப்பட்டு இருக்கார்.ஆனா கண்ணியம் தவறி நடந்தது இல்லை” என்று வேகமாக மறுக்கவே மூர்த்தியின் முகத்தில் ஆத்திரமும் சோகமும் ஒருங்கே தோன்றியது.

“அதுதானே அவனது திட்டமும்...இப்போ அவன் நினைச்ச மாதிரியே அவன் நல்லவன்னு உன்னை நம்ப வச்சிட்டான் பார்த்தியா? சரி அவ்வளவு நல்லவன் உன்னுடைய பேருக்கு களங்கம் விளைவிக்கிற மாதிரி ஏன் நடந்துக்கணும்?

உன்னோட பேர்லயே ஒரு பேஸ்புக் அக்கௌன்ட் ஓபன் செஞ்சு உன்னோட வீடியோஸ் ,போட்டோஸ் எல்லாத்தையும் எதுக்கு அதுல போடணும்...ஊரே பார்த்து சிரிக்கத் தானே..இதை எல்லாம் பார்த்து உன்னுடைய கேரக்டரை தப்பா நினைச்சு உன்னை விட்டுட்டு நான் போகணும் அப்படிங்கிறது தான் அவனோட எண்ணம்”

“ஆனா...அதனால அவருக்கு என்ன லாபம்?”

“காதலிச்ச நீயும், நானும் பிரியணும்....அவனுக்கு நல்லாத் தெரியும்...உன்னைத் தவிர வேற எந்த பொண்ணையும் நான் மனதளவில் கூட நெருங்க மாட்டேன்னு...என்னோட திருமண வாழ்க்கையை கெடுக்கத் தான் இத்தனையும் செய்தான்”

“உங்க கல்யாணத்தை நிறுத்தவா இவ்வளவு தூரம் செஞ்சார்?”அவள் குரலில் இன்னும் நம்பிக்கை இல்லை.

“உனக்கு இன்னும் புரியலையா வானதி...என்னோட வாழ்க்கையே நீதான்..நீ எனக்கு கிடைக்கலைன்னா அதுக்கு அப்புறம் எனக்கு வாழ்க்கையே வீண் தானே...இத்தனை நாள் அவன் கூடவே இருந்ததால என்னோட பேச்சைக் கூட உன்னால் நம்ப முடியலை இல்லையா”என்றான் மெலிதான சோகத்துடன்.

“உங்களை நம்பாம வேற யாரை நம்புவேன்...எனக்கு என்னவோ உங்க இரண்டு பேருக்கும் நடுவில் இருக்கும் பிரச்சினை நீங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்காம இருக்கிறது தான்னு தோணுது.உங்க இரண்டு பேருக்கும் நடுவில் வேறு யாரோ இருந்துக்கிட்டு உங்களை மோத விட்டு வேடிக்கை பார்க்கிறாங்கன்னு தோணுது.இரண்டு பேரும் நேருக்கு நேர் பார்த்து ஒருமுறை பேசினா சரியாகிடும்னு என்னோட...”

“போதும் வானதி..நிறுத்து..அவனை மட்டும் நேரில் பார்த்தா கொன்னு புதைச்சுட்டுத் தான் மறுவேலை...இந்த நாலு மாசமா அவன் என்னென்ன செஞ்சு இருக்கான் தெரியுமா?... கப்பல் கப்பலா என்னை பைத்தியக்காரன் மாதிரி அலைய விட்டான்...என்னை கொல்ல முயற்சி செஞ்சான்...என் மேல வீண் பழி சுமத்தி என்னை ஜெயிலுக்கு அனுப்பினான்... உன்னை தேடி கப்பலுக்கு வந்தப்ப என்னை கடலிலேயே சமாதி கட்ட முயற்சி செஞ்சான்...அது அத்தனையையும் தாண்டி நான் உயிரை பிடிச்சுக்கிட்டு இருக்கேன்னா... யாருக்காக? உனக்காகத் தானே வானதி”என்றவன் கோபத்துடன் தள்ளாடி தள்ளாடி அவளை விட்டு ஒதுங்கி நிற்க வானதியின் மனம் வருந்தியது.

‘சே! எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்னு தெரிஞ்சும் நானே இப்படி பேசிட்டேனே’என்று எண்ணியவள் அவனை சமாதானம் செய்ய முனைந்தாள்.

“சாரி... இனி உங்களுக்கு கோபம் வர்ற மாதிரி பேச மாட்டேன்”என்றாள் தணிவாக.

“ஹே....எனக்கு நீ திரும்பி வந்ததே ரொம்ப பெரிய சந்தோசம் வானதி...அடுத்து மறுபடியும் நம்ம கல்யாண வேலைகளை பார்க்கணும்...ஆனா இப்ப இருக்கிற சூழ்நிலையில் கல்யாணத்தை யாருக்கும் தெரியாம முடிச்சிட்டு ரிசப்ஷனை மட்டும் நல்லா கிராண்டா வச்சுக்கலாம்..சரிதானே வானதி...”

“உடனேவா...கொஞ்ச நாள்”

“என்ன விளையாடுறியா...ஏற்கனவே நாம ஏற்பாடு செஞ்ச நாளில் நம்ம கல்யாணம் நடந்து இருந்தா இந்நேரம் நீ என்னோட குழந்தைக்கு அம்மாவாகி இருப்ப...ஏற்கனவே ரொம்ப லேட் வானதி..இனியும் தள்ளிப் போட வேண்டாம். ப்ளீஸ்!”

அவன் பேசிய பேச்சில் வெட்கம் சூழ தலையை மெலிதாக அசைத்து சம்மதம் தெரிவித்தாள்.

“எத்தனை நாள் ஆச்சு வானதி உன்னைப் பார்த்து..இன்னிக்கு பூராவும் பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு..ஆனா இப்ப நிறைய வேலை இருக்கு...நாளைக்கு சனிக்கிழமை...அதனால நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை யாருக்கும் தெரியாம நம்ம கல்யாணத்தை முடிச்சிடலாம்...அதுக்கு அப்புறம் உன்னை என்கிட்டே இருந்து யாராலும் பிரிக்க முடியாது

அப்புறம் வானதி...போன தடவையை விட இந்த முறை நம்ம கல்யாணத்துக்கு என்னோட சொந்தக்காரங்க பக்கம் எதிர்ப்பு இன்னும் ஜாஸ்தியா இருக்கும்.அவங்க வாயை வேற அடைக்க வேண்டி இருக்கும்.அதுக்கு என்ன செய்யலாம்னு நான் யோசிக்கிறேன்.நீ இப்போ கிளம்பு.”

“சரி வாங்க...ஆசிரமத்திற்கு போய் சுந்தரேசன் அய்யாவை பார்த்து பேசிட்டு வரலாம்” என்று குதூகலமாக எழுந்தவளை ஒற்றைப் பார்வையில் அடக்கினான் சம்ஹார மூர்த்தி.

“வானதி ..நான் சொல்றதை கவனமா கேளு...நம்ம இரண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கப் போற விஷயம் வெளியே தெரியாம இருக்கிறது தான் நல்லது...நாளைக்கு ஒருநாள் தானே...அதுவரை இந்த விஷயத்தைப் பத்தி யார்கிட்டயும் மூச்சு விடாதே...இப்போ உன்னோட நானோ..என்னோட ஆட்களோ வந்தா மத்தவங்களுக்கு அது சந்தேகத்தைக் கொடுக்கும்.

அதனால நீயே வெளியே போய் ஒரு ஆட்டோவில் ஏறிப் போய்டு...வெளியே போனதும் உன்னைத் தேடி என்னோட ஆளின் ஆட்டோ வந்து சேரும்...ஈஸ்வர் விஷயத்தில் ஒரு முறை நான் ஏமாந்துட்டேன். இனியொரு முறை ஏமாந்து உன்னை இழக்க நான் தயாரா இல்லை புரிந்ததா?” என்று கேட்க அவள் தலை அசைக்கக் கூட தோன்றாமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்.

“உனக்கு குழப்பமா இருக்கும்னு எனக்கு புரியுது வானதி...ஆனா இந்த முறை என்னோட பேச்சை கேளு...நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகு அந்த ஈஸ்வருக்கு நான் ஒரு முடிவு கட்டுறேன்”என்று சூளுரைத்தவன் தனியே வானதியை வெளியே அனுப்ப, அவள் மருத்துவமனை வளாகத்தை தாண்டும் முன்னரே அவள் முன்னே ஒரு ஆட்டோ வந்து நின்றது. குழப்பத்துடனே ஏறி அமர்ந்தவள் ஆசிரம வாசல் வந்த பிறகு தான் தன்னிலை அடைந்தாள்.

நான்கு மாதத்திற்குப் பிறகு ஆசிரமத்துக்குள் அளவுக்கு அதிகமான சந்தோசத்துடன் நுழைந்தவளை முதலில் எதிர்கொண்டது சுந்தரேசன் அய்யா தான்.அவரைப் பார்த்ததும் மூச்சு வாங்க ஓடிப் போய் அவர் முன்னே நின்றவளை அவரது அந்நியத்தனமான பார்வை தள்ளி நிறுத்தியது.

அதை எல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லாதவள் அவரை பார்த்த மகிழ்ச்சியில் வாய் ஓயாமல் பேசித் தள்ளினாள்.

“அய்யா...எப்படி இருக்கீங்க...ஆசிரமத்தில் எல்லாரும் நல்லா இருக்கீங்க தானே? நான் இல்லாத சமயத்தில் புதுசா யாராவது  குழந்தை வந்து சேர்ந்துச்சா? அப்புறம் நம்ம அம்முக்குட்டி இந்நேரம் எழுந்து நடக்க ஆரம்பிச்சு இருப்பா இல்ல..”என்று அவள் போக்கில் அவள் பேச அவளை எரிச்சலுடன் பார்த்தவர் அவளை தாண்டிக் கொண்டு செல்ல முயல வானதியின் முகம் சுண்டிப் போனது.

“என்ன ஆச்சு அய்யா....”

“சீ...”என்ற ஒற்றை வார்த்தையில் மொத்த அருவருப்பையும் முகத்தில் வைத்தபடி அவர் காட்டிய கோபத்தின் காரணம் புரியாமல் தடுமாறினாள் வானதி.

“அய்யா...”

“இங்கே எதுக்கு வந்த?”

“அய்யா...நான்”

‘உன்னை மாதிரி ஒரு மோசமான பெண்ணிற்கு எல்லாம் இங்கே இடமில்லை....உன்னைப் பார்த்து மற்ற பெண்களும் கெட்டுப் போய்டுவாங்க.ஒழுங்கா நீயே வெளியே போய்டு”

“....”

“சொல்றது காதுல விழலியா? இத்தனை நாளா எவனை மயக்கி அவன் கூட ஊர் சுத்துனியோ..அவன் கிட்டவே போ...இங்கே வராதே...இனி இந்த ஆசிரமத்தில் உனக்கு இடமில்லை.இது போகிறதுக்கு இடமில்லாமல் அனாதையா இருக்கிறவங்களுக்கான இடம்.உன்னை மாதிரி ஒரு ஆள் மயக்கிக்கு இங்கே இடமில்லை”

“அய்யா...நீங்க கோபத்தில் பேசறீங்க...ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க”

“என்ன கேட்கணும்..அருமையான பையன் உன்னைத் தேடி வந்து கல்யாணம் செஞ்சுக்க முன் வந்தான். கடைசியில் கல்யாணத்துக்கு முன்னாடி அவனை விட்டுட்டு வேற ஒருத்தன் கூட ஓடிப் போனியே.. இப்ப எந்த முகத்தை வச்சுக்கிட்டு இங்கே வந்து நிற்கிற”

“அய்யா..நான் மூர்த்தி சாரைப் பார்த்து பேசிட்டு தான் வர்றேன்...அவர் என்னை புரிஞ்சுக்கிட்டார்..நாளை மறுநாள் கல்யாணம் செஞ்சுக்கலாம்ன்னு என்கிட்டே சொன்னார்”

“ஏன் கப்பலில் ஒருத்தன் கூட உல்லாசமா இருந்து வீடியோவெல்லாம் போட்டியே..அவனுக்கு என்ன ஆனது? மறுபடியும் அந்த தம்பி வாழ்க்கையை நீ பாழாக்க நான் ஒருபோதும் அனுமதிக்கவே மாட்டேன்...வெளியே போ...என் கண்ணு முன்னாடி நிற்காதே” என்று அவர் கோபத்தில் கத்த வானதியால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“அய்யா ஒரு நிமிஷம் நான் சொல்றதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்களேன்” என்று கைக்கூப்பி கெஞ்சியவளின் நிலையைக் கண்டு கல்லுக்கும் இரக்கம் வந்து இருக்கும். ஆனால் சுந்தரேசனோ பாறையென இறுகிப் போய் இருந்தார்.

“இனியொரு முறை உன்னுடைய முகத்தை பார்ப்பதைக் கூட நான் விரும்பவில்லை...முதலில் இங்கே இருந்து வெளியே போ”

“அய்யா..நா...நான் எங்கே போவேன்? இது தானே என்னோட வீடு”

“இத்தனை நாள் எவனோட சேர்ந்து இருந்தியோ அவன் கிட்டவே போ... இங்கே உனக்கு இடமில்லை.மீறி உள்ளே வந்தா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று சொன்னவர் அவளை வெளியே தள்ளி கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு செல்ல செய்வதறியாது அப்படியே உறைந்து போய் அமர்ந்து இருந்தாள் வானதி.

இதுவரை ஒருநாள் கூட சுந்தரேசன் அவளிடம் கோபமாக பேசியது இல்லை.பெற்ற மகள் போல கனிவுடன் வளர்த்து வந்தவரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் அவள் கண்களிருந்து கண்ணீர் நிற்காமல் வழியத் தொடங்கியது.

வெகுநேரம் அப்படியே அமர்ந்து இருந்தவள் கால் போன போக்கில் நடந்து போய் அருகில் இருந்த அம்மன் கோவிலில் அமர்ந்து கொண்டாள். கைகளில் ஈஸ்வர் கொடுத்த கார்ட் அப்படியே இருந்தது.

‘இதை எடுத்து சார்க்கு போன் பண்ணி நிலைமையை சொல்லி... இன்னைக்கு ஒருநாள் மட்டும் தங்கிக்க ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமான்னு கேட்கலாமா?...ஹும்..கண்டிப்பா அவர் இதை செய்ய மாட்டார். பேசாம அவர்கிட்டவே போய்ட வேண்டியது தான்.ஹாஸ்பிடலில் அவரைப் போய் பார்த்து தங்குவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்து தர சொல்லி கேட்கணும்.வேற வழி இல்ல.’என்று தனக்குள்ளாகவே சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.

கிளம்பலாம் என்று எண்ணி முடிவு செய்த பொழுது தான் சுற்றுப்புறத்தையே கவனித்தாள்.நன்கு இருட்டி விட்டது.எப்படியும் மணி எட்டைக் கடந்து இருக்கும் என்பது புரிய வேகமாக எழுந்து ரோட்டிற்கு வந்தாள்.

‘ஏதாவது ஆட்டோ வந்தா ஏறி ஹாஸ்பிடல் போயிடலாம்’ என்ற எண்ணத்துடன் அவள் இருக்க,அவளை உரசிக்கொண்டு வந்து நின்றது அந்தக் கார்...

“லிப்ட் வேணுமா சில்லக்கா” என்று கேட்டபடி கார் கதவை அவளுக்காக திறந்து விட்டபடி புன்னகையுடன் அமர்ந்து இருந்தான் ஈஸ்வர்.

தீ தீண்டும்...

Post a Comment

புதியது பழையவை