அத்தியாயம் 9
துரைசாமி அய்யாவின் வீட்டிற்குள் எப்படியோ நுழைந்து விட்ட அபிமன்யு இது
தன்னுடைய தேவதையின் வீடு தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டி இருந்தது.ஒருவேளை
இவர்கள் சொல்வதும் தான் பார்த்ததும் வேறு வேறு பெண்ணாய் இருந்து விட்டால் என்ன
செய்வது என்ற எண்ணமே அதற்கு காரணம்....
வேலையாள் கீழே சென்றதும் இது தான் சமயம் என்று மின்னெலென அறைக்குள் புகுந்து
விட்டான்.தன்னவளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமே என்ற துடிப்பு மற்றவர்களின்
எச்சரிக்கையை கூட புறம் தள்ளி இருந்தது.கீழே தண்ணீர் எடுக்க சென்று இருக்கும்
வேலையாள் திரும்பி மேலே வருவதற்குள் அந்த அறையை விட்டு வெளியேறி ஆக வேண்டுமே என்ற
எண்ணம் ஒருபுறம் தோன்ற அறைக்குள் நுழைந்ததும் அவசர அவசரமாக அறையினுள் தன்
பார்வையால் அலசினான்.
அங்கே அறையினுள் பார்வையை தொடர்ந்தவன் ஒரு நிமிடம் இமை சிமிட்ட மறந்தான்.அங்கே
அவனை கவர்ந்தது அந்த அறையின் ஆடம்பரமோ இல்லை அழகோ கிடையாது.அவனை அசைய விடாமல்
செய்தது அவனின் தேவதை...
இளம் மஞ்சள் நிற புடவையில் ஆங்காங்கே வெளிர் நீலத்தில் புள்ளியிட்ட புடவையில்
பார்க்கும் பொழுது ஏதோ மஞ்சள் நிற பூவை
போலவே இருந்தாள் அவள்.புடவை கட்டிக்கொண்டு எங்கேயோ கிளம்பிக் கொண்டு இருந்தாள்
போலும்.ஈரமான கூந்தலை கட்டாமல் தென்றலென தவழ விட்டு இருந்தாள். அது அவளின் இடை வரை
நீண்டு அவள் அசையும் போதெல்லாம் அதுவும் அசைந்து கொண்டு இருக்க தன்னவளின் அழகில்
மெய் மறந்து ரசிக்க தொடங்கினான்.நீண்ட கூந்தல் காற்றில் அசைந்தாட நடந்தவள்
அவளுக்கு அருகில் இருந்த கண்ணாடியை
பார்த்து அவளின் கண்ணுக்கு மை தீட்டிக் கொண்டு இருந்தாள்.
அவளிடம் எப்படியாவது ஒரு வார்த்தை பேசி விட வேண்டும் என்று
முடிவெடுத்தவன்.அறையின் கதவை மிக நாசுக்காக விரலால் மெதுவாக தட்டினான்.தன்னுடைய
வீட்டிற்குள் வீட்டு வேலையாட்கள் மட்டும் தான் அனுமதி கேட்டு வருவார்கள் என்பது
அவள் அறிந்ததே.... மூன்றாம் மனிதர்களை தன் தந்தை வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டார்
என்பதால் வீட்டு வேலையாள் கல்யாணியாக தான் இருக்கும் என்று நம்பியவள் “உள்ளே
வாங்க” என்றாள்.
அவளின் குயில் போன்ற குரலை ஒரு
நிமிடம் கண்ணை மூடி ரசித்தவனை பார்க்காமல் அவள் மேலும் பேச தொடங்கினாள்.
“கல்யாணி அக்கா அம்மா தலைக்கு சாம்பிராணி போடுறேன்னு சொன்னாங்க .... கொஞ்சம்
கீழே போய் எடுத்துகிட்டு வர்றீங்களா?”
.................
பதில் இல்லாது போகவும் திரும்பி பார்த்தவள் அதிர்ந்து போனது அவளது முகத்தில்
அப்பட்டமாக தெரிந்தது.பின்னே தன்னுடைய அறையில் முன்னே பின்னே அறியாத ஒருவன்
நிற்பதை பார்க்கவும் அவள் பயந்து அரண்டு போய் சுவரோடு சுவராக ஒட்டிக் கொண்டாள்..
அவள் ஏன் தன்னை பார்த்து பயப்படுகிறாள் என்று அபிமன்யுவிற்கு சுத்தமாக
புரியவில்லை.நான் என்ன அவளுக்கு தெரியாதவனா? இப்பொழுது தானே அருவிக்கரையில் அவளை
பார்த்தேன்.பேசத்தான் முடியவில்லை.அதற்குள் இவளுக்கு என்னை அடையாளம்
தெரியவில்லையா?என்ற கேள்வி உள்ளே எழ அபிமன்யுவிற்கு உள்ளுக்குள் லேசாக வலித்தது.
அவளுக்கு உண்மையில் அபிமன்யுவை அடையாளம் தெரியவில்லை.அருவிக்கரையில் பார்த்த
பொழுது கண்களை மறைக்கும் கூலிங்கிளாஸ்சும் முகத்தை மறைக்கும் தொப்பியும் போட்டு
இருந்தவன் இப்பொழுது வேறு உடையில் வேறு இருந்தான் .அதுவும் ஒரே ஒரு நிமிடம் கூட
அவனை சரியாக பார்க்காததால் அவளால் அபிமன்யுவை இனம் காண முடியவில்லை.அபிமன்யு
பேசாமல் அப்படியே திரும்பி இருக்கலாம்...ஆனால் விதி யாரை விட்டது?
எப்படியாவது அவளிடம் தன்னை புரிய வைத்து விடும் வேகத்தில் அவளிடம் பேச
தொடங்கினான். “டியர்.... நான்...”
அதுவரை அவன் யார் என்று தெரியாமல் பயத்தில் இருந்தவளின் முகம் இப்பொழுது
அவனுடைய ‘டியர்’ என்ற ஒற்றை வார்த்தையில்
முழுமையாக வெறுப்பை காட்டியது.அவளின் பயத்தையே பொறுத்துக் கொள்ள
முடியாதவனால் இந்த வெறுப்பான பார்வையை நிச்சயம் தாங்க முடியவில்லை.
காதலாக தன்னை பார்க்க வேண்டிய அந்த கண்களில் வெறுப்பை பார்த்ததும் அபிமன்யு
அந்த நிமிடத்தை தன் வாழ்நாளிலேயே வெறுத்தான்.அவனுக்கு அவள் ஏன் தன்னை அப்படி
பார்க்கிறாள் என்று புரியவேயில்லை.எந்த கண்கள் தன்னிடம் காதல் மொழி பேச வேண்டும்
என்று விரும்பினானோ அந்த கண்கள் அவனிடம் வெறுப்பை உமிழ்ந்து கொண்டு இருந்தன.
அந்த நேரத்தில் அவளுக்கு தன்னை பற்றி எந்த மாதிரியான ஒரு எண்ணம் இருக்கும்
என்பதை அபிமன்யுவால் உணர முடியவில்லை.எதற்காக தன் மேல் இப்படி ஒரு கோபம்
என்பதையும் அவனால் அறிய முடியவில்லை.அவனை பொறுத்தவரை அருவிக்கரையில் அவனது தேவதையை
பார்த்தான்.
அவனிடம் பேசுவதற்குள் அவள் வெட்கி(!) அங்கிருந்து ஓடி விட்டாள் என்ற கற்பனை
உலகத்திலேயே இருந்து வந்தான்.காதல் கொண்ட அவனின் மனம் விதவிதமான் கற்பனைகளை செய்து
வைத்து இருந்தது.அவளின் வெறுப்பு நிறைந்த பார்வை அப்படி இல்லை என்று தெளிவாக
எடுத்துக் கூறியது.
அவளிடம் பேசி தன்னை புரிய வைத்து விடும் வேகத்தோடு அவளை நோக்கி ஒரு அடி
எடுத்து வைத்தான்.அவள் திகைத்து போய் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தாள்.அவளின்
பார்வையை கண்டதும் அவனின் காதல் கொண்ட மனதில் ஒரு அடி விழுந்தது.எப்படியாவது
அவளிடம் தன்னை பற்றியும் தன் மனதில் இருப்பதையும் அவளிடம் சொல்லி விட வேண்டும்
என்று துடித்தவன் மனதை திடப்படுத்திக் கொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தான்.
“என்னை பார்க்கும் உன் பார்வை இப்படி பயத்தோடு என் மீது படிவதை நான்
விரும்பவில்லை.... மாறாக காதலோடு ...” அவன் சொல்லி முடிப்பதற்குள் அவள் இடையிட்டு
பேச தொடங்கினாள்.
“வெளியே போ....உன்னை யார் என்னுடைய அறைக்குள் வர சொன்னது??? பொறுக்கி! என்
அப்பா வந்தால் உன் நிலைமை என்ன ஆகும் தெரியுமா? முதலில் இங்கிருந்து போ.... இல்லை
கத்தி ஊரை கூட்டி விடுவேன்”
அவளின் பொறுக்கி என்ற வார்த்தையில் நியாயமாக அபிமன்யுவிற்கு கோபம் தான் வந்து
இருக்க வேண்டும். ஆனால் அவனுக்கு அதற்கு பதிலாக வருத்தம் வந்தது.தன்னுடைய தேவதை
தன்னை தவறாக எண்ணுவது பொறுக்காமல் அவளுக்கு தன்னை விளக்க முற்பட்டான்.
“நீ ஏதோ தவறாக நினைத்துக்கொண்டு பேசுகிறாய் என்று நினைக்கிறேன்...நான்...”
“உன்னுடைய விளக்கம் எதுவும் எனக்கு தேவை இல்லை...முதலில் என்னுடைய அறையை
விட்டு வெளியே போ”அவளின் குரல் நிமிர்வோடு வெளிவந்தாலும் அதையும் தாண்டி அதில்
இருந்த பயத்தையும்,நடுக்கத்தையும் அவன் உணர்ந்து கொண்டான்.
அபிமன்யுவுக்கு தன்னுடைய மனதில் இருப்பதை எப்படியும் இவளிடம் தெரிவித்தே ஆக
வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.அபிமன்யுவின் மனதிற்குள் அவளை பற்றி ஆயிரம்
கேள்விகள் இருந்தாலும் அது எதை பற்றியும் அவன் அப்பொழுது சிந்திக்க தயாராய்
இல்லை.அவள் ஏன் பீச்சிற்கு அந்த அதிகாலை நேரத்தில் வந்தாள்? எதற்காக அழுதாள்?உடன்
வந்தவன் யார்?இப்படி அவனுக்கு தெரிய வேண்டிய பதில்கள் எதையும் அவன் அப்பொழுது
சிந்திக்க தயாராய் இல்லை.ஒருநாள் முழுக்க அவளை தொலைத்து விட்டு அவன் பட்ட அவஸ்தை அவனுக்கு தானே தெரியும்.
அவளின்றி தனக்கு வாழ்க்கை கிடையாது என்று நம்பியவன் அவளுக்காக எதையும் செய்ய
தயாராக இருப்பதையும்,அவளின் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வருவதற்காக எப்பேர்பட்ட
காரியத்தையும் தான் செய்யத் தயார் என்பதை அவளுக்கு உணர்த்த விரும்பினான்.
அவளை அவன் மனமார நேசிக்கிறான் என்று அவனுக்கு தெளிவாக தெரிந்தது. ஆனால் அதை
அவளுக்கு எடுத்து சொல்ல அவனுக்கு இருந்த நேரம் மிக குறைவு.அவன் நினைத்து இருந்தால்
தன்னுடைய காதலை எத்தனையோ முறைகளில் அழகாக அவளிடம் வெளிப்படுத்தி இருக்க
முடியும்.ஆனால் தன்னை பார்த்த அவளின் பார்வையில் இருந்த வெறுப்பை பார்த்தவன் எங்கே
அவள் மறுத்து விடுவாளோ என்ற எண்ணத்தில் படபடவென பேச தொடங்கினான்.
“எனக்கு இப்பொழுது உன்னிடம் விளக்கமாக சொல்ல
நேரம் இல்லை.அதனால் சொல்வதை இடையில் குறுக்கிடாமல் கேள்... எனக்கு நீ
வேண்டும்... உன்னை அடைய நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். நீ எனக்கு மட்டும்
தான்.உனக்கு நான் மட்டும் தான் .என்னிடம் இருந்து நீ தப்பிக்க முடியாது.நீ
என்னிடம் இருந்து விலகி எங்கு போனாலும்
சரி உன்னை நான் விட மாட்டேன்.. நாளை நான் வருவேன் உன் பதிலுக்காக ... எனக்கு
உன்னிடம் இருந்து சம்மதம் என்ற வார்த்தை மட்டும் தான் வர வேண்டும் புரிந்ததா..” என்று ஒரே மூச்சில் இடைவெளி இன்றி
கடகடவென அழுத்தமாக கூறியவன் படிக்கட்டில்
யாரோ மேலே ஏறி வரும் சத்தம் கேட்டு
உடனடியாக நல்ல பிள்ளை போல அறையை விட்டு வெளியேறி வேடிக்கை பார்ப்பது போல நின்று
கொண்டான்.
அவன் இருந்த அவசரத்தில் வார்த்தைகளை ஒழுங்காக கோர்க்காமல் சொல்லிவிட்டு அவளின்
அறையை விட்டு வெளியேறி விட்டான்.ஆனால் அவனுக்கே தெரியவில்லை தான் அவளிடம் பேசும்
போது காதல் என்ற வார்த்தையை மறந்தும் அவளிடம் சொல்லவில்லை என்பதை...
அவனது வார்த்தைகளை கேட்டவளுக்கோ அவன் மீதான வெறுப்பு மேலும் கூடியதை அவன்
அறியவில்லை.அபிமன்யு அவளிடம் சொல்ல நினைத்தது வேறு அவன் சொல்லிய விதத்தால் அவளால்
வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டது.ஏற்கனவே அபிமன்யுவை பற்றி அவளுக்கு நல்ல
எண்ணம் கிடையாது.இப்பொழுது அவனின் வார்த்தைகளையும் அவள் வேறு விதமாக தான் புரிந்து
கொண்டாள்.
அவளிடம் தன்னுடைய காதலை எப்படியாவது உணர்த்தி விடும் வேகத்தில் வாய்க்கு
வந்ததை சொல்லி விட்டு மேலே வந்த வேலையாள் கொடுத்த தண்ணீரை பருகி விட்டு ஒன்றும்
அறியாதவன் போல வீட்டை சுற்றி பார்க்க ஆரம்பித்து விட்டான்.வீட்டை விட்டு கிளம்பி
வெளியில் வரும் போது மீண்டும் அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றவே மாடி அறையை
நோக்கி பார்வையை செலுத்தினான்.ஆனால் அது சாத்தப்பட்டு இருந்தது கண்டு லேசாக அவனின்
மனம் சிணுங்கியது.
இருப்பினும் அவன் பெரிதாக மனம் கலங்கவில்லை.அது தான் என் மனதில் இருப்பதை
அவளிடம் சொல்லிவிட்டேனே...அவனின் காதல் கொண்ட மனது அவளது செய்கைகளுக்கு ஆயிரம்
சமாதானங்கள் சொல்லிக் கொண்டது. ‘திடீரென்று அவளுடைய அறையில் என்னை பார்த்ததும்
அவள் பயந்து விட்டாள்.அது தான் நான் என் மனதை அவளிடம் தெளிவாக (!)
சொல்லிவிட்டேனே... இனி அவளுக்கு அந்த பயம் இருக்காது... ஒரு வேளை இப்படியும்
இருக்கலாம் பேமஸ் டான்சர் அபிமன்யு தன்னுடைய அறைக்குள் இருந்ததை நம்ப முடியாமல்
ஆனந்த அதிர்ச்சியில் கூட அவள் பேசாமல் இருக்கலாம்.
நாளை அவள் எப்படியும் சம்மதம் சொல்லி விடுவாள்.முடிந்தால் இந்த வாரத்திலேயே
ஒரு நல்ல நாளை பார்த்து திருமணத்தை நடத்தி முடித்து அவளை கையோடு அழைத்து சென்று
விட வேண்டும் என்று அவன் மனது ஆயிரம் கற்பனைகளை செய்து கொண்டே போனது.அபிமன்யு வேக
வேகமாக திட்டமிட்டான்.இனி அவளை பிரிந்து இருந்தால் தன்னால் அதை தாங்க முடியாது
என்பதை அவன் உணர்ந்தே இருந்தான்.
இன்னமும் அவனுக்கு அவளிடம் பேசிய வார்த்தைகளில் தவறாக எதுவும் பேசி விட்டோம்
என்ற உணர்வே இல்லை.அதற்கு ஒரு காரணம் தன்னுடைய ஸ்டார் இமேஜில் அவனுக்கு இருந்த
அசைக்க முடியாத நம்பிக்கை மற்றொன்று அவனது காதலை அவளுக்கு சொல்லிவிட்டதாலேயே அவள்
அவனுடைய காதலை ஏற்றுக் கொண்டு விடுவாள் என்ற அவனின் எண்ணமும் தான்.அவளின் மனதில்
தன்னுடைய காதலை பதிய வைக்காமல் தன்னை பற்றிய தவறான கருத்தை அவளுடைய மனதில் பதிய
வைத்து விட்டோம் என்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் அவன் பாட்டிற்கு கனவில் அவளுடன்
டான்ஸ் ஆட ஆரம்பித்து விட்டான்.
அபிமன்யுவிற்கு இது பழக்கம் இல்லாத ஒன்று.எப்பொழுதும் அவனிடம் தான் நிறைய
பெண்கள் காதல் சொல்லி இருக்கின்றார்கள்.அவர்களில் கண்களில் எல்லாம் இதுவரை அவன்
உண்மை காதலை கண்டதே இல்லை. என்ன தான் திரையில் ஆயிரம் பெண்களுடன் சேர்ந்து நடனம்
ஆடி இருந்தாலும் ஒரு பெண்ணிடம் எப்படி தன் காதலை சொல்வது என்று தெரியாமல்
வார்த்தைகளை மாற்றி சொல்லி அவள் தன்னை தவறாக நினைப்பதை அறியாமல் இங்கே அவன்
காதலில் மூழ்கி இருந்தான்.
அங்கே விஷ்வ சஹானாவின் நிலையோ முற்றிலும் மாறுபட்டு இருந்தது என்பதை சொல்லி
தெரிய வேண்டியது இல்லை.அபிமன்யுவின் மீது அளவு கடந்த ஆத்திரத்தில் இருந்தது அவளது
மனம்.அவள் மட்டும் அவளின் தந்தையிடம் ஒரு
வார்த்தை சொல்லி இருந்தால் போதும் அபிமன்யு அந்த வீட்டை விட்டு வெளியேற முடிந்து
இருக்காது.ஆனால் தந்தையின் குணம் அவளை வாய் மூட வைத்து விட்டது.
அவள் நினைத்தால் அவனை அந்த ஊரை விட்டே கூட வெளியேற்ற முடியும்...ஆனால் அதன்
பிறகு என்ன நடக்கும் என்று நினைத்தவள்
அபிமன்யுவை பற்றி தன்னுடைய வீட்டில் யாரிடமும் மூச்சு கூட விடவில்லை தாயிடம் கூட
.ஏற்கனவே இந்த வீட்டில் தன்னுடைய தாய் படும் வேதனையை பார்க்க முடியாமல் தான்
தந்தைக்கு தெரியாமல் அந்த காரியத்தை செய்ய துணிந்தாள்.இருந்தும் என்ன பயன்...
என்று எண்ணியவள்
ஒரு கணம் ஆழ்ந்து பெருமூச்சை வெளியேற்றி தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாள்.தூங்கலாம்
என்று நினைத்தவளை தூங்க விடாமல் பயமுறுத்தியது அபிமன்யுவின் முகம் .‘நாளை வருவதாக
சொல்லி இருக்கிறானே...’ என்ற எண்ணம் அவளின் உள்ளே தோன்றி மனதில் மூலையில்
தோற்றுவித்த பயத்தோடு உறங்க ஆரம்பித்தாள்.
நாளைய விடியல்
அவர்களுக்கு என்ன செய்ய காத்து இருக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
கருத்துரையிடுக