Kadhal Kathakali tamil novels 7

 


அத்தியாயம் 7

டைரக்டரிடமும் மற்றவர்களிடமும் தன்னுடைய  கருத்தை உறுதியாக கூறிவிட்டு தனக்காக அளிக்கப்பட்டு இருந்த அறையின் உள்ளே நுழைந்து கதவை சாத்திக் கொண்டான் அபிமன்யு.ஹீரோவும் ஹீரோயினும் தங்களது கேரவனில் தங்கி ஓய்வெடுக்க கையோடு எடுத்து வந்து இருந்த மெத்தை தலையணையை விரித்து அதில் படுத்துக் கொண்டான்.

 

நேரம் மாலை நான்கு மட்டுமே  ஆகி இருந்த நிலையில் அவனுக்கு தூக்கமும் வரவில்லை. இப்படியே அறைக்குள் அடைந்து கிடப்பானேன் என்ற எண்ணம் தோன்ற தன்னுடைய உதவியாளர்களிடம் சொல்லிவிட்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.

 

கையில் மொபைல் போனை மட்டும் எடுத்துக் கொண்டு வெயிலுக்கு இதமாக தலையில் ஒரு தொப்பியை அணிந்து கொண்டு கண்களை வெயில் உறுத்தாமல் இருக்க ஒரு கூலிங் க்ளாசையும் மாட்டிக் கொண்டு அவன் பாட்டிற்கு அந்த ஊரை  வலம் வர தொடங்கினான்.

 

இதமான அழகிய மாலை பொழுதில் சுற்றிலும் வயலும் வரப்புமாக இருந்த அந்த ஊரைப் பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு.ஒவ்வொரு இடத்தையும் ஆழ்ந்து ரசித்து பார்த்தவாறே நடந்து போனான்.

 

பொதுவாக அபிமன்யு இயற்கையை அந்த அளவிற்கு ரசிப்பவன் இல்லை. அவனுக்கு அதற்கு எல்லாம் நேரமும் கிடையாது.ஒரு வேளை தப்பி தவறி நேரம் கிடைத்தாலும் அதில் அவனுக்கு இயற்கையை ரசிக்க தோன்றியது கிடையாது.கொஞ்ச நேரம் ஓய்வு இருந்தாலும் நடனத்தில் புதிதாக எதை செய்யலாம் என்று மட்டுமே அவன் சிந்திப்பான். அவனுடைய எண்ணத்தில் முதன்முதலாக ஏற்பட்ட மாறுதலை நினைத்து லேசாக சிரித்தவாறே ஊரை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

இது எல்லாம் யாரால்? அவளால் தான் என்று அவனுடைய உள்மனம் அவனுக்கு தெளிவாக பறை சாற்றியது.புதிதாக அவனுள்ளே முளைத்த அந்த காதல் அனுபவத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டியே அவன் தனிமையை நாடி வந்தான்.இப்பொழுது இயற்கையின் எழிலும் சேர்ந்து கொள்ள லேசாக விசில் அடித்தவாறே அந்த இடத்தை சுற்றி வந்தான்.

 

ஏற்கனவே டைரக்டரிடம் பேசிய பொழுது இந்த ஊரில் ஒரு அருவிக்கரை இருக்கிறது என்று அவர் பேச்சுவாக்கில் சொல்லி இருந்தார்.இப்பொழுது அங்கு போனால் என்ன என்று நினைத்தவன் உள்ளூர் ஆட்களிடம் வழியை விசாரித்துக் கொண்டு அருவிக்கரையை நோக்கி நடந்தான்.

 

ஆற்றங்கரை ஓரமாக நடந்து வந்தவன் அங்கே சில இளவயது  பெண்கள் குளித்துக் கொண்டு இருப்பதை பார்த்ததும் அவசரமாக பார்வையை திருப்பி வேறு திக்கில் பார்த்தபடி நடக்க ஆரம்பித்தான்.இதற்கு முன் எத்தனையோ நடிகைகளை சினிமாவிற்காக நடனம் சொல்லி தரும் போது  அரைகுறை ஆடையில் பார்த்தவன் தான் அப்பொழுது எல்லாம் ஏற்படாத ஏதோ ஒரு உணர்வு இப்பொழுது தோன்ற தனக்குள்ளே சிரித்தபடி அவன் பாட்டிற்கு நடந்து கொண்டே இருந்தான்.

 

அவனுக்குள் ஏற்பட்ட அந்த உணர்வு எப்படி பட்டது என்பதை அவனால் வரையறுக்க முடியவில்லை.மற்ற பெண்களை பார்க்க கூடாது என்பதால் திரும்பினானா? இல்லை இதற்கு முன் அவன் மனதில் தோன்றியிராத உணர்வுகள் இப்பொழுது ஏற்ப்பட்டதாலா? புது வகையான இந்த உணர்வின் தாக்கத்தை அனுபவித்தபடியே தன்னுடைய நடையை மேலும் தொடர்ந்தான்.

 

சற்று தொலைவில் அருவியின் சலசலப்பு சத்தம் கேட்க அந்த அருவியை தன்னுடைய மொபைல் கேமராவில் படமெடுக்கலாம் என்று நினைத்து தன்னுடைய காமெராவை ஆன் செய்து காட்சிகளை பதிவு செய்து கொண்டே வந்தான்.

 

அருவியின் இருமருங்கிலும் தண்ணீர் வழிந்து ஓட வெள்ளை நுரையென பொங்கி ஆர்ப்பரித்த அருவியை கண்டவன் ஒரு நிமிடம் தன்னை மறந்து ரசித்தவன் உள்ளுணர்வு உந்த  பார்வையை கொஞ்சம் பக்கவாட்டில் திருப்பியவன் ஆனந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனான்.

யாரை பார்க்க வேண்டும் என்று அவன் துடித்துக் கொண்டு இருந்தானோ...அவனுடைய அந்த தேவதை அருவியின் அருகில் இருந்த சிறு குன்று போல் இருந்த இடத்தில் அமர்ந்து தன் மேல் விழுந்த அருவியின் சாரலில் கைகளை நனைத்து விளையாடிக்கொண்டு இருந்தாள் அவள்.

 

முதல் நாள் பார்த்த பொழுது புடவையில் இருந்தவள் இப்பொழுது சுடிதாரில் இருந்தாள்.அருவியின் சாரல் உடல் முழுக்க தெறித்து உடல் முழுதும் நனைத்து ஈரமாயிருக்க அதை எல்லாம் பொருட்படுத்தாது அவள் பாட்டிற்கு விளையாடிக் கொண்டு இருந்தாள்.

 

விளையாடினாள் என்றால் முகம் முழுக்க மகிழ்ச்சியில் பூரித்து போய் ஒன்றும் அவள் இருக்கவில்லை.கண்களில் மெலிதான ஒரு சோகம் எட்டிப்பார்க்க நினைவுகளை எங்கேயோ தொலைத்து விட்டு கைகளை மட்டும் தண்ணீரின் அருகே நீட்டிக் கொண்டு இருந்தாள்.

 

இது அனைத்தையும் ஒரு நிமிடத்தில் உள் வாங்கியவன் இந்த முறையும் அவளை தவற விட்டு விடுவோமோ என்ற பயத்தில் வேக வேகமாக அவளின் அருகே சென்றான். அபிமன்யு அங்கே வந்ததையோ தன்னை நோக்கி வருவதையோ உணராமல் அவள் பாட்டிற்கு ஏதோ ஒரு உலகத்தில் உழன்று கொண்டு இருந்தாள்.

 

சரிவான அந்த ஈர பாறைகளின் மேல் ஏறி பழக்கம் இல்லாததால் கால் வலுக்கி கீழே விழ போனவன் கடைசி நொடியில் சுதாரித்து அருகில் இருந்த ஒரு மரத்தின் கிளையை பற்றியபடி  நின்றான். அபிமன்யு கீழே விழும் போது ஏற்பட்ட ஓசையில் தன்னுடைய நினைவு சங்கிலி அறுபட திரும்பி பார்த்தவள் முதல் முறையாக அபிமன்யுவை பார்த்து பயந்து தான் போனாள்.அவன் இருந்த கோலம் அப்படி ! காமெராவும் கையுமாக என்னவோ அபிமன்யு அவளை ஒளிந்து மறைந்து தன்னை வீடியோ எடுப்பது போல அவளுக்கு தோன்றும்படி இருந்தது அந்த காட்சி.

 

ஈர உடையுடன் இருக்கும் தன்னை தவறான நோக்கத்தோடு அவனுடைய செல்லில் வீடியோ எடுப்பதாக நினைத்தவள் என்ன செய்வது என்று நிமிடம் பயந்து போய் நின்றவள் பதட்டத்துடன் அங்கிருந்து ஓட முற்பட்டாள்.

 

அபிமன்யுவிற்கு அவள் தன்னை கண்டு பயப்படுவதோ தன்னை பற்றி அவள் தவறாக எண்ணுவதோ எதுவும் பதியவில்லை.தன்னை விட்டு அவள் கிளம்புகிறாள் என்பது மட்டுமே அவனுக்கு தெரிய எப்படி அவளை தடுப்பது என்று தெரியாமல் ஒரே எட்டில் பாய்ந்து அவள் கையை பிடித்து இழுத்து நிறுத்த நினைத்தான்.

 

அபிமன்யுவின் இந்த செய்கையில் அவள் முற்றிலும் அதிர்ந்து தான் போனாள்.பயத்தில்  முகம் எல்லாம் வெளுத்து போனவள் அபிமன்யுவின் பிடியை உதறி விட்டு ஓட முயன்றாள்.எங்கே ஓடுவது? அபிமன்யு தான் அவளை விட்டால் எங்கே மறுபடியும் காணாமல் போய் விடுவாளோ என்ற நினைவில் அவள் கையை இறுக்கி பிடித்து வைத்து இருந்தானே... அவளுடைய முயற்சிகள் அனைத்தும் வீணானது.

 

அபிமன்யுவிற்கு இந்த கவலை எதுவும் இல்லை...தேடிக் கொண்டு இருந்த தன்னுடைய தேவதையை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் அவன் திளைத்து அவள் முகத்தையே பார்த்த வண்ணம் இருந்தான்.அவனிடம் இருந்து விடுபட போராடிய அவளது மனநிலையோ முற்றிலும் மாறுபட்ட மனநிலையில் இருந்தது.

 

தன் கைகளுக்குள் இருந்த தன் தேவதையையே பருகுவதை போல பார்த்தவன் அவள் முகத்தை மறைத்து இருந்த முடிக்கற்றையை ஒற்றை விரலால் ஒதுக்கியவன் மெதுவாக அவளிடம் குனிந்து  “டியர்” என்ற ஒற்றை வார்த்தையில் தன்னுடைய காதலை எல்லாம் தேக்கி வைத்த குரலில் அவளை அழைத்தான்.

 

அவனின் அழைப்பை கேட்டதும் அவள் முகம் ரௌத்ரமானது. ‘முதன் முதலில் பார்க்கும் ஒரு பெண்ணை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் டியர் என்று கூப்பிடுகிறான்...அது மட்டும் இல்லாமல் அவளை அவனுடைய மொபைலில் வீடியோ வேறு எடுக்கிறான்...அது எல்லாம் பத்தாதென்று அவள் கையை வேறு பிடித்து இழுத்துக் கொண்டு நிற்கிறான்...இவனுக்கு என்ன ஒரு தைரியம்’ என்று நினைத்தவள் அவனை வெறுப்போடு பார்த்து வைத்தாள்.

 

அவளுக்கு அவனை யாரென்றே தெரியாதே...முதல்நாள் அவன் மட்டும் தானே அவளைப் பார்த்தான்.அவள் அவனைப் பார்க்கவேயில்லையே...தான் அவளைப் பார்த்ததும் தனக்கு அவள் மேல் தோன்றிய ஈர்ப்பு காதலாக மாறியதைப் போல அவளுக்கும் தோன்றும் என்று எண்ணியது தான் அவன் செய்த பெரும் தவறு.

 

அவளது வெறுப்பையோ உணர்வுகளையோ அபிமன்யு கொஞ்சம் கூட உணரவேயில்லை.அன்று தொலைவில் பார்த்த அவளின் அழகை இன்று அருகில் வைத்து அணு அணுவாக ரசித்துக் கொண்டு இருந்தான்.

 

இயற்கையான வனப்பில் மின்னிய அவளின் முகம்,அவனை பார்த்த அந்த நொடியில் இருந்து படபடவென அடித்துக் கொண்ட அவளின் கண்கள்,கோபத்தில் சிவந்து இருந்த அவளின் கூர்மூக்கு,அதிலே மின்னிய ஒற்றை கல் மூக்குத்தி,வனப்பான அவளின் கன்னங்கள், ஸ்ட்ராபெரி போன்ற அவளின் உதடுகள் என்று ஒவ்வொன்றாக அவன் கண்களால் அளந்து கொண்டு இருந்தான்.

 

அவனின் பார்வையில் எரிச்சல் அடைந்தவள் அவன் அவளை ரசித்துக் கொண்டு இருந்த பொழுது , அவன் அசந்த கணத்தில் அவனை கீழே தள்ளி விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு மான் குட்டியென ஓடி மறைந்தாள் அவள்.

 

‘எங்கே சென்று மறைந்தாள்’ என்று கண்களாலேயே துளாவினான் அபிமன்யு.ஆனால் அவனின் பார்வைக்கு சிக்காமல் நொடி பொழுதில் எங்கோ சென்று மறைந்து  விட்டாள் அவள்.

‘சே! இந்த முறையும் அவளை பற்றி ஒன்றுமே கேட்காமல் போய் விட்டேனே’ என்று தன்னையே நொந்தவன் அப்படியே சோர்ந்து போய் அந்த அருவிக்கரையிலேயே அமர்ந்து விட்டான்.

 

கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்து வருந்தியபடியே இருந்தவனின் மூளைக்குள் அப்பொழுதுதான் ஒரு விஷயம் உறைத்தது.அவள் இங்கே இப்பொழுது அவன் இருக்கும் அதே ஊரில் தான்  இருக்கிறாள் என்பது.அவளை எங்கே சென்று தேடுவது என்று நினைத்து வருந்திக் கொண்டு இருந்தவனுக்கு அவள் இங்கு தான் இருக்கிறாள் என்பதை அறியவைத்த கடவுளுக்கு மனமார நன்றியை சொன்னான் அபிமன்யு.

 

‘நீ இந்த உலகத்தில் எங்கே இருக்கிறாய் என்பது தெரியாத பொழுதே உன்னை விட மறுத்தவன் நான்...இங்கே என் கண்ணெதிரிலேயே உன்னை பார்த்த பிறகு உன்னை எப்படி விடுவேன் டார்லிங்... இந்த ஊரை விட்டு புறப்படும் பொழுது உன்னையும் என்னோடு அழைத்துக் கொண்டு தான் போக போகிறேன் டியர்...அது நீ விரும்பினாலும் சரி... விரும்பாவிட்டாலும் சரி’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

 

காதல் என்பது மெல்லிய உணர்வு...அது தானாகவே வரவேண்டும்.கட்டாயபடுத்தி வர வைக்க முடியாது என்பது அவனுக்கு அந்த நிமிடம் புரியவில்லை.அதற்கு காரணம் தன்னை யார் மறுக்கக்கூடும் என்ற ஆணவம் தான்.அரிதாரம் பூசிய நடிப்பாற்றலை வெளிபடுத்தும் பெண்களை மட்டுமே பார்த்து பழகிய அவனுக்கு பெண்ணின் நுண்ணிய உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் போனது.

கோடீஸ்வரனாகவே இருந்தாலும் மனதுக்கு பிடிக்காவிட்டால் அவனை நிமிர்ந்து கூட பெண்கள் மாட்டார்கள் என்பது அவனுக்கு தெரியவில்லை.தன்னிடம் விரும்பி வந்து பேசும் பெண்களையே அதிகப்படியாக சந்தித்து இருந்தவனால் ஒரு பெண் தன்னை வெறுக்கவும் கூடும் என்ற எண்ணமே எழ வாய்ப்பில்லாமல் போனது தான் வேதனை.

 

இப்படி எதையும் உணராது தன்னவளை பார்த்த மகிழ்ச்சியில் பலமாக விசில் அடித்தவாறே நடையில் ஒரு துள்ளலோடு வீடு வந்து சேர்ந்தான் அபிமன்யு.ஷூட்டிங் எப்படி நடக்க போகிறது என்ற கவலையில் இருந்த மொத்த படக்குழுவும் முகம் எங்கும் மகிழ்ச்சியில் பூரிக்க தங்களை கண்டுகொள்ளாது கடந்து சென்ற அபிமன்யுவை விசித்திரமாக பார்த்ததை உணராமல் தன்னுடைய அறைக்குள் சென்று புகுந்து கொண்டான் அபிமன்யு.

 

சற்று நேரம் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன் உடனே மீண்டும் கிளம்பி வெளியே சென்றான். அவனை கேள்வியாக எதிர்கொண்ட யாரையும் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து டீக்கடைக்கு சென்று அமர்ந்து டீ குடிக்க தொடங்கினான்.அவனுக்கு இப்பொழுது அவனவளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமே...

 

மெதுவாக அங்கிருந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தான்.கிராமம் இல்லையா... எடுத்த உடனே ஊரில் இருக்கும் ஒரு பெண்ணை பற்றி விசாரித்தால் தர்ம அடி நிச்சயம் என்பதை அறிந்து வைத்து இருந்ததால் முதலில் ஊரை பற்றியும் ஊரின் சிறப்புகளையும் விசாரித்து வைத்தான். அத்தோடு விடாமல் இந்த ஊருக்கு வந்தது தான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் என்ற விதத்தில் பேசி வைத்தான்.

 

தன்னுடைய ஊரை புகழ்ந்து பேசினால் யாருக்கு தான் பிடிக்காது.அபிமன்யுவின் பேச்சில் உள்ளூர்வாசிகள் மயங்கி தான் போனார்கள்.ஏதேதோ பேசி அவர்களை கரைத்தவன் மெதுவாக அவர்களிடம் பேச்சுக் கொடுத்தான்.

 

“ஏன் சார்...இந்த ஊரில் பொண்ணுங்க யாருக்காவது நடிக்க விருப்பம் இருக்கா?... ஒண்ணும் இல்லை சார் எங்க படத்தில் அம்மன் ஒரு பெண்ணின் மீது இறங்கி அருள்வாக்கு சொல்லுவது போல ஒரு காட்சி இருக்கு.ஏற்கனவே இந்த வேடத்திற்காக சென்னையில் ஏற்பாடு செய்து இருந்த பெண்ணிற்கு திடீரென்று உடம்பு சரி இல்லாமல் போய் விட்டது.இப்பொழுது மறுபடி சென்னைக்கு போய் வேறு ஒரு நடிகையை கண்டுபிடித்து வருவது என்றால் மேலும் தாமதம் ஆகிவிடும்... அது தான் உங்கள் ஊரிலேயே யாராவது இருந்தால் அவர்களை கொண்டு அந்த காட்சியை எடுத்துக் கொள்ளலாம் என்று தான் கேட்கிறேன்” நயமாக பேசினான்.

 

“அம்மன் வேஷம் போடுற அளவுக்கு அழகான பொண்ணு நம்ம ஊரில நம்ம துரைசாமி அய்யாவோட பொண்ணுக்கு தான் பொருத்தமா இருக்கும்.வேறு யாருக்கும் அந்த வேஷம் எல்லாம் பொருந்தாது.அப்படியே அவங்க அம்மா மாதிரி பார்க்க லட்சணமா இருக்கிறது நம்ம துரைசாமி அய்யாவோட பொண்ணு தான்...ஆனா...அந்த பொண்ணு நடிக்க எல்லாம் வராது தம்பி... நீங்க பேசாம உங்க ஊருக்கே போய் ஆளை ஏற்பாடு பண்ணிக்கோங்க...”

 

“ஏன் சார்...ஊரில் வேற பொண்ணே இல்லையா? அந்த பொண்ணு மட்டும் தான் இருக்கா?”வேண்டுமென்றே கேட்டான் அபிமன்யு.

 

“என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க? எங்க ஊரில் இல்லாத பொண்ணுங்களா...ஆனா பாருங்க நீங்க தான் சாமி வேஷத்துக்கு ஆள் கேட்டீங்க... அதான்... அந்த பொண்ணு சும்மா துடைச்சு வச்ச குத்து விளக்காட்டம் இருக்கும் தம்பி...ஆனா அவங்க அப்பாருக்கு இதெல்லாம் பிடிக்காது தம்பி...நீங்க ஏதும் போய் நான் இந்த மாதிரி சொன்னேன்னு சொல்லி ஏதும் கேட்டு விடாதீங்க....அப்புறம் என் தலை தப்பாது” கெஞ்சுதலாகவே கேட்டுக் கொண்டார் அவர்.

 

“சரி...சரி ...உங்களை பற்றி எதுவும் சொல்லவில்லை” என்று அவருக்கு வாக்கு கொடுத்தவன் மேலும் கொஞ்ச நேரம் அவரிடம் பேச்சு கொடுத்து வேறு ஏதோ பேசியவன் பின்னர் மெதுவாக அங்கிருந்து கிளம்பினான்.

 

அபிமன்யு நினைத்து இருந்தால் இந்த காரியத்தை வேறு யார் மூலமாகவும் செய்து இருக்க முடியும்.அவனது உதவியாளர்கள் மூலமாகவோ அல்லது தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி மூலமாகவோ இதை செய்து இருக்கலாம்.ஆனால் அபிமன்யு அதை விரும்பவில்லை.தன்னுடைய தேவதையை பற்றிய ஒவ்வொரு விஷயமும் தானே நேரில் சென்று அறிந்து கொள்ள விரும்பினான்.

இவர் சொல்வதை வைத்து மட்டும் எந்த முடிவுக்கும் வந்து விட கூடாது.நேரில் ஒரு முறை சென்று பார்த்து இவர் சொல்லும் பெண்ணும் என்னுடைய தேவதையும் ஒரே ஆள் தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் எப்படி அங்கே செல்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

 

வீட்டின் வெளியே வைத்து பார்ப்பதானால் சுலபம் ஆனால் அவள் வீட்டிற்கு சென்று ஒரு முறை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான் அபிமன்யு.காரணம் இல்லாமல் ஊரில் முக்கியஸ்தர் வீட்டிற்கு செல்ல முடியாதே என்று அவன் யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே அவன் சிந்தையில் பளிச்சிட்டது ஷூட்டிங் விவகாரம்தான்.

 

மனதுக்குள் ஒரு நிமிடம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தவன் நேரே படக்குழுவினர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று டைரக்டரையும் தயாரிப்பாளரையும் கையோடு அழைத்துக் கொண்டு துரைசாமி அய்யாவின் வீட்டிற்கு சென்றான்.

 

 

 

 

 


Post a Comment

புதியது பழையவை