அத்தியாயம் 6
தெளிவான ஒரு முடிவிற்கு வந்த பின்பு அபிமன்யுவிற்கு எந்த குழப்பமும்
இல்லாமல் இரவு வரை ஒழுங்காக நடனத்தை
மட்டுமே சொல்லிக் கொடுத்தான்.அதாவது அப்படி காட்டிக் கொண்டான்.ஒரு வழியாக அன்றைய
தினத்தை முடித்தவன் இரவு வெகுநேரம் ஆகி விட்டதால் அங்கேயே தங்கும்படி சொன்ன
டைரக்டரை மதித்தோ அல்லது இஇப்பொழுது தான் இருக்கும் மனநிலையில் வீட்டுக்கு போனால் வாயை வைத்துக் கொண்டு சும்மா
இல்லாமல் எதையாவது வீட்டில் உளறி வைப்போமோ என்ற பபயம் தோன்றவே அன்றைய இரவு அங்கேயே
தங்கினான். ஹீரோவும் , ஹீரோயினும் தங்களது அறைக்குள் சென்று முடங்கி விட தன்னுடைய
படுக்கையில் விழுந்தவன் , ஒரே நாளில் தான் காதலில் விழுந்து விட்டதை எண்ணி சிரித்துக் கொண்டான்.
சிறிது நேரம் படுக்கையில் தூக்கம் வராமல் உருண்டவன் படுக்கையை விட்டு எழுந்து
அங்கே இருந்த பேப்பர் பேனாவை எடுத்து கண்டபடி கிறுக்க தொடங்கினான். அவனுடைய கைகள்
கிறுக்கலில் தொடங்கி எப்பொழுது ஓவியத்திற்கு வந்தது என்பது அவனுக்கு தெரியாது.
ஆனால் கையில் இருந்த பேப்பரில் ஒரு பெண்ணின் உருவத்தை வரைந்து முடித்து
இருந்தான்.வரைந்து முடித்ததும் இதை வரைந்தது தான் தானா என்பதை நம்ப இயலாமல்
அப்படியே சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்தவன் தன்னை மறந்து மீண்டும் வாய்
விட்டு சத்தமாக சிரிக்கத் தொடங்கினான்.
அவன் வரைந்து இருந்த பேப்பரில் ஒரு பெண் கடற்கரையில் நின்று கடலை வெறித்துக்
கொண்டு நிற்க அவளை பார்ப்பதற்காகவே வந்தது போலவே சூரியனும் மெதுவாக உதித்து வந்தது
போல ஒரு காட்சியை தான் அவன் வரைந்து வைத்து இருந்தான். மீண்டும் ஒரு முறை அந்த
ஓவியத்தை உற்று நோக்கியவன் அந்த படத்தோடு பேச தொடங்கினான்.
“ராட்சஸி... ஏன்டி இப்படி இம்சை பண்ணுற? ஒரு மனுஷனை நிம்மதியா வேலை பார்க்க
விட மாட்டியா?” அவன் வரைந்த அந்த படத்தை கையில் வைத்து என்னமோ அவள் அதில் இருந்து
பதில் அளிக்க போவது போல கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தான்.
“நம்ப முடியலைடி ....... உன்னை பார்த்து முழுதாக இன்று ஒரு நாள் தான் ஓடி
இருக்குன்னு....என்னமோ ரொம்ப நாள் பார்த்து பழகின ஒரு பீல்.... மனசு முழுக்க ஒரு
மாதிரி இருக்கு.... எப்படி உணர்கிறேன்னு என்னால வார்த்தைகளால சொல்ல முடியல....
என்னவோ பெரிசா எனக்கு நானே சொல்லிகிட்டேன்.....இன்னும் ஒரு வாரம் வரை உன் நினைவு
வராமல் இருக்கா பார்ப்போம்னு.... ஆனால்
ஒரு நொடி கூட உன்னை நினைக்காம நகர மாட்டேன்ங்குது...
என்ன செய்ய? உன்னை எப்படி கண்டுபிடிக்க போறேன்னு எனக்கு தெரியல...உன்னை பற்றிய
எந்த தகவலும் என்கிட்ட இல்ல... ஆனால் என் மனசு சொல்லுது உன்னை கண்டிப்பா
பார்ப்பேன்னு.... உனக்காக இங்கே நான் ஒருத்தன் காத்திருக்கேன்....உனக்கு அது
தெரியுமா? எங்கே இருக்க? எப்படி இருக்க? ஏன் காலையில அழுத? என்ன பிரச்சினை உனக்கு?
உன் கூட ஒருத்தன் இருந்தானே யார் அவன்? இப்படி ஆயிரம் கேள்வி எனக்குள்ள......
இதுக்கெல்லாம் எப்போ பதில் கிடைக்கும்? ஒரு விஷயம் மட்டும் உறுதியா
தெரியுது.என்னால் மனசளவில கூட இனி ஒரு பொண்ணை என்னோட மனைவியா நினைக்க முடியாது.அந்த
அளவுக்கு நீ எனக்குள்ள மாற்றத்தை உண்டு பண்ணிட்ட” அப்படியே ஏதேதோ பேசிக் கொண்டே
இருந்தவன் விடியலின் போது தான் உறங்கினான்.
விடியலின் போது அவனை எழுப்பிவிட்ட அலாரத்தை அணைத்து விட்டு படக் குழுவினரோடு
சேர்ந்து கிளம்பி ஏர்போர்ட்க்கு போய் சேர்ந்தான்.பிளைட் ஏறும் போது அவனோடு செல்பி
எடுத்துக் கொண்ட பெண்களோ இல்லை பிளைட்டின் உள்ளே நவ நாகரீக உடை அணிந்து இருந்த
ஏர்ஹோஸ்டஸ்ஸோ யாரும் அவனை கவரவில்லை.நினைத்ததை எல்லாம் உடனே சாதித்து பழக்கப்
பட்டவன் அன்று அவளை அந்த சிக்னலில் தொலைத்ததை எண்ணி ஆயிரத்து ஓராவது முறையாக தன்
மீதே எரிச்சல் அடைந்தான்.
‘இந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்த வேலை உன்னை தேடி கண்டு பிடிப்பது தான்
கண்மணி’ என்று மனதுக்குள் சூளுரைத்துக் கொண்டான்.
ஒரு வழியாக பயணம் முடிந்து ஷூட்டிங்
நடக்கும் கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர் அனைவரும்.அந்த கிராமத்தின் முக்கியஸ்தரான
தங்கவேல் என்பவருக்கு சொந்தமான வீட்டில் தான் படக்குழுவினர் தங்க வைக்கப்பட்டு
இருந்தனர். வந்து இறங்கியவுடன் மளமளவென ஷூட்டிங் வேலைகள் ஆரம்பமாகியது.ஒரு புறம்
மற்றவர்கள் லொகேஷன் தேட சென்று இருக்க மறுபுறம் வீட்டில் அபிமன்யு உதவியாளர்களை
கொண்டு எல்லாருக்கும் டான்ஸ் ப்ராக்டிஸ் கொடுத்துக் கொண்டு இருந்தான்.
மதிய உணவு இடைவேளையை முடித்துக்கொண்டு எல்லாரும் கிளம்பி ஸ்பாட்டிற்கு செல்ல
அங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகியது.எல்லாரும் மேக்கப் போட்டு தயாராக இருக்க
பின்னணியில் பாடலை ஒலிக்க விட்டு டான்ஸ் ஸ்டெப் சொல்லிக் கொடுத்துக் கொண்டு
இருந்தான் அபிமன்யு.
திடீரென கிராமத்து ஆட்கள் சில பேர் அங்கே வந்து ஷூட்டிங்கை நிறுத்துமாறு கூறி
பிரச்சினை செய்து கொண்டு இருந்தார்கள்.டைரக்டர் இறங்கி வந்து பேசியும் கூட அந்த
கூட்டத்தினர் ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்த அனுமதி மறுத்து விட்டனர்.அபிமன்யுவின்
காதிற்கும் விஷயம் போக சற்று நேரம் பொறுத்து பார்த்தவன் அவர்கள் இறங்கி வராததால்
தானே போய் பேசத் தொடங்கினான்.இதனால்
அவனுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை தான் .ஆனால் அவனுக்கு அப்பொழுது வேறு வழி இல்லை.
அவனும் தான் என்ன செய்வான்? எப்பொழுது இந்த ஷூட்டிங்கை முடிப்போம் ... அவளை
தேடி உடனே செல்ல வேண்டும் என்று அவன் உடலில் ஒவ்வொரு செல்லும் பரபரத்துக் கொண்டு இருக்க, இங்கானால் ஷூட்டிங்
நடப்பதற்க்கே வழியை காணோமே! இவர்களை நம்பி நான் இருந்தால் எப்பொழுது அவளை தேட
ஆரம்பிப்பது?எப்பொழுது அவளை காண்பது என்று உள்ளுர ஏங்கியவன் அந்த கூட்டத்தினரிடம்
பேசி எப்படியாவது ஷூட்டிங்கை ஆரம்பித்து
விட வேண்டும் என்ற நினைவுடன் அவர்களை நோக்கி முன்னேறினான்.கூட்டத்தினரை விலக்கிக்
கொண்டு அவன் முன்னே வர முயன்ற போது கும்பலில் சிலர் பேசியது அவன் காதுகளில்
விழுந்தது.
“இவனுங்க எப்படி ஷூட்டிங்கை நடத்தி விடுறானுங்கன்னு ஒரு கை பார்த்துப் போடணும்
மச்சான்... அது எப்படி இவனுங்க நம்ம அய்யாக்கிட்ட அனுமதி வாங்காம அந்த
தங்கவேல்கிட்ட அனுமதி வாங்கி இருப்பானுங்க... அந்த தங்கவேல் வேணும்னா இந்த கிராமத்துக்கு ப்ரெசிடென்டா இருக்கலாம்.ஆனா
நமக்கு பெரிய மனுஷன்னா அது நம்ம துரைசாமி அய்யா தானே... அவரை மதிக்காம இவனுங்க
எப்படி இங்கே ஷூட்டிங் நடத்துறானுங்கன்னு பார்த்து விடலாம் மச்சான்!”என்று
தங்களுக்குள் பேசி கொண்டனர்.
‘ஓ! இது உள்ளூர் கோஷ்டி தகறாரா?’ என்று ஒரு நிமிடம் சிந்தித்தவன் கூட்டத்தை
விலக்கி கொண்டு முன்னேறி அங்கே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இருந்த டைரக்டரின்
காதில் முணுமுணுத்து அவரிடம் அனுமதி வாங்கியவன் தன்னுடைய குழுவை சேர்ந்த ஆட்களில் மேலும் சிலரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து
புறப்பட்டான்.
உள்ளூர் ஆட்களிடம் துரைசாமி அய்யாவின் வீட்டிற்கு போகும் வழியை
விசாரித்துக்கொண்டு அங்கே போனான்.பழங்கால முறைப் படி கட்டப்பட்டு இருந்த அந்த
பெரிய வீட்டை கண்ணால் அளந்தவாறே உள்ளே சென்றான் அபிமன்யு. வாசலில் தென்பட்ட
வேலையாளிடம், “துரைசாமி சாரை பார்க்கணும் கொஞ்சம் வர சொல்றீங்களா?” என்று கூற
உள்ளே சென்றான் வேலையாள்.
அவர் வரும் வரை ஏன் சும்மா நிற்க வேண்டும் என்று நினைத்தவன் அந்த வீட்டை
பார்வையாலேயே அளந்தான்.அந்த ஊரில் அவன் பார்த்த வரையில் அது தான் கொஞ்சம் பெரிய
வீடாக தோன்றியது.ப்ரெசிடென்ட் தங்கவேலுவின் வீடு கூட அளவில் இதை விட கொஞ்சம்
பெரிது போல தான் தோன்றியது.ஆனால் அந்த வீடு நவீன முறையில் கிராமத்து அமைப்பிற்கு
சற்றும் பொருந்தாமல் இருந்தது.ஆனால் இந்த வீடு பார்த்ததும் ஏதோ ஒரு விதத்தில்
அபிமன்யுவை கவர்ந்தது. சிறு வயதில் தன்னுடைய தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்ற
நாட்கள் அவனுக்கு நியாபகம் வர தொடங்கியது.தனக்குள்ளே உள்ளார்ந்த சிரிப்போடு நின்று
கொண்டு இருந்தவனின் கவனம் கலைந்தது ஒரு அழுத்தமான
குரலால்...
“வந்தாச்சா? ஆக இப்படி எல்லாம் பிரச்சினை செய்தால் தான் என்னை தேடி என்
வீட்டிற்கு வருவீர்களா? என்ற கேள்வியை கேட்ட அந்த மனிதரை என்ன பேசுகிறார் இவர்
என்ற ரீதியில் மற்றவர்கள் பார்க்க அபிமன்யு பொறுமையாக பேசினான்.
“அது தான் உங்கள் எண்ணப்படி நாங்கள் உங்கள் வீடு தேடி வந்து
விட்டோமே...இன்னும் என்ன இருக்கிறது? ஷூட்டிங்கை ஒழுங்காக நடக்க விடுங்கள்...ஒரு
நாள் ஷூட்டிங் நடக்கலைனா கூட புரோடுயுசருக்கு எவ்வளவு நஷ்டம் ஆகும் தெரியுமா?” நிதானமாக
அவருக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க முயன்றான்.
“அதை பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? அந்த கவலை உங்களுக்கு இல்ல இருந்து
இருக்கணும்? புதிதாக ஒரு ஊருக்கு போகிறோமே அந்த ஊரின் பெரிய மனிதனின் உதவி
வேண்டுமே என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் நேற்று வந்த புது பணக்காரனிடம் போய்
நின்றது உங்கள் தவறு...அதற்கு நான் என்ன செய்ய?” விட்டேற்றியாக பேசினார் அவர்.
“சார் நீங்க பேசுவது நன்றாக இல்லை... நீங்கள் பேசுவதை பார்த்தால் இந்த
பிரச்சினையை நீங்கள் தான் வேண்டும் என்றே ஆரம்பித்தது போல் இருக்கிறது ?” என்று
அபிமன்யுவுடன் வந்த உதவி இயக்குனர் ஒருவர் கோபமாக குரல் கொடுக்க அவரை பார்வையாலேயே
அடக்கினான் அபிமன்யு.
“ஆமா... நான் தான் ஆரம்பித்தேன்.அந்த பய பெரிய ஆளுன்னு அவன்கிட்ட
போனீங்களே...இப்பவும் அவன்கிட்டயே போய் உதவி கேளுங்க ...நானும் பார்க்கிறேன் அவன்
உங்களுக்கு எப்படி உதவி செய்கிறான்னு...” கண்கள் ஆத்திரத்தில் பளபளக்க பேசினார்
துரைசாமி.
“இதை பாருங்க சார்...உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் இருக்கும் பிரச்சினைக்கு
ஏன் எங்களை தொல்லை செய்யறீங்க???உங்களால் எங்களின் ஷூட்டிங் பாதிக்க
படுகிறது...அது மட்டும் இல்லாமல் எத்தனை லட்சம் நஷ்டம் ஆகும் என்று தெரியுமா?” மீண்டும்
அவருக்கு பொறுமையாகவே விளக்க முயன்றான் அபிமன்யு.
“உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள்... என்னுடைய அனுமதி இல்லாமல்
உங்களால் இந்த ஊரில் ஷூட்டிங் நடத்த முடியாது.” என்று தெளிவாக ஒரு முறை அழுத்தி
கூறி விட்டு வீட்டின் உள்ளே வேலையாளுக்கு குரல் கொடுத்தார்.
“கல்யாணி இவங்களுக்கு குடிக்க மோர் கொண்டு வாம்மா... இப்ப வந்துடும்
குடிச்சுட்டு பொறுமையா கிளம்புங்க” என்று இயல்பாக சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்ற
அந்த மனிதரை புரியாமல் பார்த்தான் அபிமன்யு.
‘இவ்வளவு நேரம் விறைப்பாக பேசிவிட்டு கடைசி நொடியில் என்ன விருந்தோம்பல்
வேண்டி கிடக்கு’ என்று மனதுக்குள் அவரை திட்டியவன் நொடி கூட தாமதிக்காமல்
அங்கிருந்து கிளம்பினான்.அவன் கூடவே கிளம்பினாலும் உதவி இயக்குனர்கள் அவனிடம்
தங்கள் கருத்துகளை சொல்லிய படியே வந்தனர்.
“அபி சார் ... என்ன இப்படி சட்டுன்னு கிளம்பிட்டீங்க? அந்த ஆள் சொல்வதை
பார்த்தால் கண்டிப்பாக ஷூட்டிங் நடத்த விட மாட்டார் போல இருக்கிறதே...நாம்
வேண்டுமானால் அவரிடம் கொஞ்சம் இறங்கி கெஞ்சிக் கேட்டு பார்க்கலாமே...அப்படி
பேசினால் அவர் ஒத்துக் கொள்வார் என்று தான் எனக்கு தோன்றுகிறது....” என்று பேசிக்
கொண்டே போனவர் அபிமன்யுவின் முறைப்பில் கப்பென்று வாயை மூடிக் கொண்டார்.
“அவர் கிட்ட இறங்கி போய் பேசணும்னு எனக்கு ஒண்ணும் அவசியம் இல்லை...ஏதோ பிரச்சினை
பெரிசா ஆக வேண்டாம்னு தான் நானே இறங்கி வந்து பேசினேன்.ஆனால் இவர் பேசுவதை
பார்த்தால் அப்படி எல்லாம் இவர் இறங்கி வரமாட்டார் என்று தோன்றுகிறது... மேலும்
நாம் ஏன் இவரிடம் கெஞ்சிக் கொண்டு இருக்க வேண்டும்...
எனக்கு தெரிந்த காவல் துறை அதிகாரிகளிடம் போய் பேசினால் இந்த பிரச்சினையை
எளிதாக தீர்க்க என்னால் முடியும்... அதற்கு தேவை இருக்காது என்று நினைத்து தான்
நான் இவரிடம் பேச வந்ததே...ஆனால் இவரிடம் பேசி இருக்கவே கூடாதோ என்று இப்பொழுது
தோன்றுகிறது... நான் எனக்கு தெரிந்த காவல்துறை நபர்களின் மூலம் இதை சரி செய்ய
முயற்சி செய்கிறேன்.இனி யாரும் இவரிடம் போய் கெஞ்சிக் கொண்டு நிற்க வேண்டாம்.இன்று
ஒரு நாள் போகட்டும் நாளை கண்டிப்பாக இங்கே ஷூட்டிங் நடக்கும்.”என்று உறுதியாக
சொன்னான் அபிமன்யு.
என்ன நேரத்தில் சொன்னானோ...இன்னும் சற்று நேரத்தில் அவனே இவரிடம் மறுபடி வந்து உதவி கேட்டு
கெஞ்சிக் கொண்டு இருப்பான் என்ற உண்மை மட்டும் அவனுக்கு அப்பொழுது தெரிந்து
இருக்கவில்லை.
கருத்துரையிடுக