அத்தியாயம் 28
அன்றைய பொழுது புலர்ந்ததும் சத்யனின் கை அணைப்பில் இருந்து
விலகி எழுந்த அஞ்சலி, குளித்து முடித்து அன்றாட வேலைகளை
கவனிக்கத் தொடங்கினாள். வெளியே அமைதியாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அன்றைய
தினம் அவள் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை உள்ளுக்குள் பட்டியலிட்டுக் கொண்டாள்
அஞ்சலி. சமையல் அறையில் வேலை ஆட்களுக்கு காபி கலந்து கொண்டிருந்த மேகலா அஞ்சலியைப்
பார்த்ததும் லேசாக சிரித்து விட்டு அவளுக்கு ஒரு டம்ளரை நீட்டினார்.
“உங்களுக்கு முன்னாடி எழுந்து ஒரு நாளாவது இதை எல்லாம் நான்
செய்யணும்னு பார்க்கிறேன். ஆனா தினமும் நீங்களே முந்திக்கறீங்க...போங்க அத்தை...”
செல்லமாய் குறை பட்டுக் கொண்டாள் அஞ்சலி.
“அதெல்லாம் பொறுமையா பார்த்துக்கலாம் அஞ்சலி... இப்பவே இந்த
பாரத்தை எல்லாம் நீ தூக்கி சுமக்கணுமா என்ன?
இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்... உங்க வீட்டுல நீ எவ்வளவு வசதியா வளர்ந்த
பொண்ணு... அதுவும் மாப்பிள்ளை உன்னை தரையில் கால் படாம இல்ல வளர்த்தார். அதுல
கொஞ்சமாவது இங்கே நான் பார்த்துக்க வேண்டாமா?”
என்று கூறி சிரித்தார்.
“என்னம்மா நான் சொல்ல வேண்டிய வசனத்தை எல்லாம் நீங்க
சொல்றீங்க” கேலி செய்தபடி உள்ளே வந்தான் சத்யன்.
“உன்னை விட அவளை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கோ என்னவோ”
“ஆஹா... அம்மா என் பெண்டாட்டி மேலே எனக்குத் தான் அன்பு
அதிகம்.”
“அப்போ அம்மா மேல...”வேண்டுமென்றே மகனை சீண்டினார் மேகலா.
“அம்மா தான் முதல்ல... ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் முதல்ல
பெண்டாட்டி..அடுத்தது அம்மா...”
“எதே...”கரண்டியை மகன் மேல் அடிப்பது போல ஓங்கினார் மேகலா.
“அப்படித் தான் இருக்கணும்னு என்னோட அம்மா சொல்லி இருக்காங்க.
நான் அம்மா பேச்சை மீறாத புள்ளைமா” என்றான் அப்பாவியாக
“பொழைச்சுக்குவ மகனே”
“அத்தை... அவர் நான் தான் முக்கியம்னு சொல்றார். உங்களுக்கு
வருத்தமா இல்லையா?”
“மகனும், மருமகளும்
சந்தோசமா இருக்கிறது தானே பெத்தவங்களுக்கு வேணும். அதுக்கு நேர்மாறா நினைச்சா
அவங்க பெத்தவங்களே கிடையாது அஞ்சலி”என்று கூறியவரை நெகிழ்ச்சியுடன் பார்த்தாள்
அஞ்சலி.
“அம்மா எனக்கென்னவோ இந்த அஞ்சலி உங்களை ரொம்ப லவ் பண்றதால
தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு நினைக்கிறேன்.”
“ஹா... ஹா...”
“என்னம்மா சிரிக்கறீங்க”
“இந்த டுயூப்லைட் இவ்வளவு மெதுவா எரியுதுன்னு தான்” என்று
அஞ்சலியும் உடன் சேர்ந்து கொள்ள அந்த இடமே சிரிப்பு களை கட்டியது.
சட்டென எதோ நினைவு வந்தவராக மேகலா அஞ்சலியிடம் விசாரித்தார்.
“அஞ்சலி இந்த மாசம் நீ இன்னும் தலைக்கு குளிக்கலை தானே?”
என்று கொஞ்சம் ஆர்வத்துடன் கேட்க... சத்யனும் அவள் முகத்தையே ஒரு வித
எதிர்பார்ப்புடன் பார்த்தான்.
“ஆ...ஆமா அத்தை...” எதையோ சொல்ல வந்தவள் அதை விடுத்து மாற்றி
சொன்னாள்.
“இந்த வீட்டுல மட்டும் உன்னை மாதிரியே ஒரு குழந்தை
வந்துடுச்சுன்னு வச்சுக்கோ...”
“இருக்கிற தரித்திர்யம் போதாதா?
புதுசா வேற ஒன்னு வரப் போகுதோ?” என்று கேட்டபடி
உள்ளே வந்த துரைசாமியைப் பார்த்து மேகலா அதிர... சத்யனின் முகம் கோபத்தை
தத்தெடுத்தது.
“அப்பா...” கண்டிப்புடன் சத்யன் பேசத் தொடங்க... அவனை
மறித்துக் கொண்டு முன்னே வந்தாள் அஞ்சலி.
கண்களால் வேண்டாம் என்று இறைஞ்சிய மனைவியை முறைத்து விட்டு
அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
“ஏய்! மேகலா உடனே இதை டாக்டர் கிட்டே கூட்டிட்டுப் போய்
என்னனு பாரு”
“சரிங்க...” என்று புன்னகைத்த மேகலா அஞ்சலியைப் பார்த்து
ஆதுரமாய் தலை அசைத்தார்.
‘என்ன தான் கோபமாக இருந்தாலும் பேரப் பிள்ளை என்று வரும்
பொழுது கணவர் தன்னுடைய கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி விட்டு அஞ்சலியை
மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொன்னதே அவருக்கு போதுமானதாக இருக்க... அவரது
எண்ணத்தில் ஒரு கூடை நெருப்பை வாரி இறைப்பது போல பேசினார்.
“உள்ளே ஏதாவது அழுக்கு இருக்குனு சொன்னாங்கனா அங்கேயே இருந்து
சுத்தம் செஞ்சு கூட்டிட்டு வா” என்று சொல்ல... முதன்முறையாக கணவனின் உருவத்தில்
அரக்கனின் சாயலை உணர்ந்தார் மேகலா.
ஓரக்கண்ணால் அஞ்சலியைப் பார்த்தார் துரைசாமி. இப்பொழுது கூட
அவள் கண்களில் அதிர்வில்லை. வலி இல்லை. அவரை நிமிர்ந்து பார்க்காவிட்டாலும் அவளது
உடல்மொழி கொஞ்சமும் மாறவில்லை. அதிலும் ஒரு நிமிர்வை உணர்ந்தவர் பல்லை நறநறவென்று
கடித்தார்.
கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி அறைக்குள் நுழைந்தவரின்
பின்னாலேயே சென்றார் மேகலா.
“இப்படி பேச எப்படிங்க உங்களுக்கு மனசு வந்துச்சு?”
“ஏய்! பேசாம போடி... நானே செம கடுப்புல இருக்கிறேன்”
“வீட்டுக்கு வாரிசு வரப் போற நேரம் . நாங்க எல்லாரும் எவ்வளவு
சந்தோஷத்தில் இருக்கோம். நீங்க மட்டும் ஏங்க இப்படி இருக்கறீங்க?”
“இன்னொரு வார்த்தை பேசின... அடிக்கிற அடியில் ஒரு வாரத்துக்கு
வாயை திறக்க முடியாது.”
“உங்களுக்கு உங்க பிள்ளை வேணும்னா அவன் பொண்டாட்டியையும்,
புள்ளையையும் நீங்க ஏத்துக்கிட்டு தான் ஆகணும். இல்ல இப்படியே அவளை கரிச்சுக்
கொட்டிக்கிட்டு இருந்தீங்கனா அப்புறம் உங்க பையன் உங்க கையை மீறிப் போய்டுவான்”
“என் புள்ளையை எப்படி தக்க வச்சுக்கணும்னு எனக்குத்
தெரியும்டி... உன் வேலையைப் பாரு.. வந்துட்டா ... பொட்டச்சி நீ வந்து புத்தி சொல்ற
அளவுக்கு ஒன்னும் நான் அறிவு கெட்டுத் திரியல”
“வேணாம்ங்க இந்த அளவுக்கு வன்மமும் ஆத்திரமும்
குடும்பத்துக்கு நல்லது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாவது மாறிடுங்க... இல்லேன்னா நீங்க
கொஞ்சம் கூட மதிக்காத இந்த பொம்பளை ஜென்மங்கள் வந்து உங்களுக்கு பாடம் சொல்லித்
தர்ற மாதிரி ஆகிடும்.”
“அந்த
அளவுக்கு உங்களுக்கு எல்லாம் புத்தி ஏதுடி?
ஆம்பிளைங்க நாங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சு ஒன்னை நூறாக்குவோம்.. ஆனா நீங்க எல்லாம் அடுப்படியில் சோறாக்க மட்டும்
தான் லாயக்கு.”
“இத்தனை நாள் என்னோட வாழ்ந்த வாழ்க்கையில் உங்களுக்கு என்னைப்
பத்தி இப்படித் தான் ஒரு எண்ணமா?”
“நீ என்ன ஊருல இல்லாத பெரிய ஓவியமோ?
பொம்பளைங்கிற குட்டையில் நீயும் ஒருத்தி...” வெளியே சொல்ல முடியாத கோபங்கள்
அத்தனையையும் அவர் மீது காட்டினார் துரைசாமி.
‘இந்த பாருடி... ஒழுங்கா அவளை யாருக்கும் தெரியாம
ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போய் நான் சொன்ன மாதிரி செய்யல.. அப்புறம்...”
“ஏங்க... நம்ம வீட்டு பொண்ணு அங்கே வாயும் வயிறுமா
இருக்கிறா... அவளை அந்த வீட்டுல எப்படி தாங்குறாங்க தெரியுமா?
ஆனா நீங்க ? அஞ்சலி வயித்துல இருக்கிறது நம்ம வீட்டு வாரிசுங்க... நம்ம பேரக்
குழந்தை.. அதைப் போய்...” எடுத்து சொன்னால் புரிந்து கொள்ளக் கூடுமோ என்று
நினைத்து பேசத் தொடங்கினார் மேகலா.
“நான் சொல்றதை சொல்லிட்டேன். மீறி உங்க இஷ்டத்துக்கு இவன்
என்ன சொல்றது... நம்ம என்ன கேட்கிறதுன்னு அசால்ட்டா இருந்தீங்கனா அப்புறம் என்னோட
வேலையை காட்டிடுவேன்.. என்னைப் பத்தி தெரியும்ல” என்று மீசையை முறுக்கி விட்டுக்
கொண்டவரை... முதன்முறையாக கொஞ்சம் வெறுப்புடன் பார்த்தார் மேகலா.
அவருக்கு நெஞ்சமெல்லாம் நடுங்கியது. இன்னும் பிறக்காத ஒரு
குழந்தை... அதுவும் தன்னுடைய வீட்டு வாரிசு. அதையே அழிக்கத் துணியும் அளவுக்கு
கொடூர மனம் கொண்ட அரக்கனாக தன்னுடைய கண் எதிரில் இருக்கும் கணவனைக் கண்டு அவரது
கண்கள் இரத்தத்தை கண்ணீராக வடித்தது.
அவரது பேச்சை ஏற்றோ அல்லது மறுத்தோ அஞ்சலியை மருத்துவமனைக்கு
அழைத்து செல்ல கூடாது என்பதில் திட்டவட்டமாக முடிவெடுத்து இருந்தார் மேகலா.
யாருக்கும் தெரியாமல் சத்யனிடம் சொல்லி பிரகனன்சி கிட்டை வாங்கி வர சொன்னவர் அதை வைத்து அஞ்சலியை
பரிசோதிக்க சொன்னவர் அவளின் பதட்டம் நிறைந்த பார்வையை உணராமல் போனார்.
அடுத்த நாள் காலை மலர்ந்த முகத்துடன் கிட்டை நீட்டிய அஞ்சலியை
பார்த்ததுமே அவருக்கு புரிந்து போனது. கிட்டில் இரண்டு கோடுகள் காட்டியது. முகம்
முழுக்க பூரிப்பு... ஆனால் வெளியே காட்டிக் கொள்ள முடியாத சூழ்நிலையில் அவளை உச்சி
முகர்ந்து ஒரு முத்தமிட்டார்.
அன்று மாலையே அஞ்சலியை அவளது பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைக்க
முடிவெடுத்தவர் சத்யனிடம் கூட சொல்லாமல் எல்லா வேலைகளையும் பார்த்தார்.
அவருக்கு இருந்த பதட்டத்தில் அஞ்சலியின் பரபரப்பை அவர் உணரவே
இல்லை. துரைசாமி வீட்டிற்கு வரும் முன் அவளை பாதுகாப்பாக பிறந்த வீட்டிற்கு
அனுப்பி வைத்து விட வேண்டும் என்பதில் மட்டுமே அவர் கவனமாக இருந்தார்.
பூஜை அறைக்கு சென்று குல தெய்வத்தின் பிரசாதத்தையும்
அம்மனுக்கு வைத்து வழிபட்ட ஒரு புடவையையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தவர்
பார்த்தது மாடியில் இருந்து அஞ்சலியை தள்ளி விட்ட துரைசாமியைத் தான்.
மாடிப்படிகளில் உருண்டு கொண்டே வந்த அஞ்சலி தலையில் இருந்து
ரத்தம் வடிய அப்படியே மயங்கி விழுந்தாள்.
கண் எதிரே கண்ட காட்சியை நம்ப மறுத்தது உள்ளம். கணவரிடம்
நின்று சண்டை போடும் நேரம் இதுவல்ல என்பதை உணர்ந்தவர் வேலை ஆட்கள் உதவியுடன்
அஞ்சலியை காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். துரைசாமி கூப்பிடும்
குரல் காதில் விழுந்தாலும் நின்று பதில் சொல்லவில்லை அவர்.
போகும் வழியிலேயே சத்யனுக்கும் போனில் அழைத்து தகவல் சொல்லி
விட , துடிக்க மறந்த இதயத்தை நிலைப்படுத்திக் கொண்டு வண்டியில் புயலாக
புறப்பட்டான் சத்யன்.
மயங்கிய நிலையில் இருந்த அஞ்சலியை மட்டும் அறைக்குள்
ஸ்டெச்சரில் வைத்து அழைத்து செல்ல, கண்களில் வலிந்து
ஓடும் கண்ணீரைக் கூட துடைக்க மறந்து அப்படியே சிலை போல அமர்ந்து இருந்தார் மேகலா.
புயல் வேகத்தில் உள்ளே வந்த சத்யன் இடிந்து போய் அமர்ந்து
இருந்த அன்னையைக் கண்டதும் அடுத்து என்ன
செய்வது என்று புரியாமல் தடுமாறினான். இதுநாள் வரை
மேகலாவை அப்படி கோலத்தில் பார்த்தது இல்லை.
மனம் உள்ளுக்குள் எரிமலையாக குமுறினாலும் வெளியே காட்டிக்
கொள்ளாமல் தன்னை நிலைபடுத்திக் கொண்டவன் அமைதியாக அன்னையின் அருகில் சென்று
அமர்ந்து அவரது கரங்களைப் பற்றிக் கொண்டான்.
உணர்ச்சி அற்ற விழிகளால் மகனைப் பார்த்தார் மேகலா.
“நா... நான் பார்த்தேன் சத்யா... என் கண்ணாலே நானே
பார்த்தேன். அஞ்சலியை உங்க அப்பா தான் தள்ளி விட்டார்.”
“....”
“ஐயோ! மான் குட்டி மாதிரி என்னை சுத்தி சுத்தி வருவாளே...
அவளைப் போய் இப்படி செய்ய உங்க அப்பாவுக்கு எப்படி மனசு வந்துச்சு சத்யா?”
“அம்மா?”
“அவ தலை எல்லாம் ரத்தம் சத்யா... எவ்வளவு ரத்தம் தெரியுமா?
இங்கே பாரு என்னோட புடவையில், கையில், உடம்பில் எல்லாமே
ரத்தக்கறை.. உங்க அப்பா செஞ்ச பாவம் இப்போ என் மேலே ஒட்டிக்கிட்டு போக
மாட்டேங்குது சத்யா”பேசிக் கொண்டே உடலை அழுத்தி தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார்
மேகலா. தாயின் வினோத நடவடிக்கைகளில் கவலைக்கு உள்ளானான் சத்யன்.
“அம்மா கொஞ்சம் என்னைப் பாருங்க...”
“ஐயோ! அவங்க வீட்டு ஆட்கள் என்னை நம்பி தானே இந்த பெண்ணை
கல்யாணம் செஞ்சு கொடுத்தாங்க. என் பொண்ணு மாதிரி பார்த்துக்கிறேன்னு சொல்லி நான்
வாக்கு கொடுத்து இருந்தேனே?” சத்யனின் பேச்சே
காதில் விழாதது போல அவர் போக்கில் அவர் புலம்பிக் கொண்டிருந்தார்.
“அம்மா... அம்மா” அவரின் தோளைப் பிடித்து பலமாக உலுக்கினான்
சத்யன். அவரிடம் மாற்றமே இல்லை. அவர் போக்கில் புலம்பிக் கொண்டே இருந்தார்.
விரைந்து சென்று மருத்துவரை அழைத்து வந்து அவரை காட்ட... அவருக்கு தூங்குவதற்கு
ஊசி போட்டவர் அவரை ஒரு அறையில் ஓய்வெடுக்க வைத்து இருந்தார்.
அறையின் வெளியே சத்யனுக்கு உலகமே இருண்டு போன நிலை.
எல்லாவற்றையும் தனியாக பார்த்து சமாளித்துக் கொள்ளும் ஆணவனுக்கு அந்த நேரம்
சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவையாய் இருந்தது. தன்னையும் அறியாமல் அவன் கைகள் போனை
எடுத்து அபிமன்யுவிற்கு அழைத்து இருந்தது.
“சொல்லுங்க மச்சான்.. அதிசயமா போன் எல்லாம் பண்ணி இருக்கீங்க?”
கிண்டல் வழிந்தோட பேசினான்.
“மா... மாப்பிள்ளை... நீங்க மட்டுமா கிளம்பி கொஞ்சம்
சீக்கிரமே இங்கே வர முடியுமா?” அவன் குரலில்
இருந்த தடுமாற்றத்தையும், வலியையும்
உணர்ந்து கொண்டான் அபிமன்யு. வேறு எதுவும் கேட்கவில்லை.
“இந்த நேரத்துல பிளைட் இல்ல மச்சான்.. பிரைவேட் ஜெட் ஏதாவது
இருக்கும்.எண்ணி ஒரு மணி நேரத்துல அங்கே இருப்பேன்” என்று சொன்னவன் அதே போல ஒரு
மணி நேரத்தில் அங்கே வந்து சேர்ந்து இருந்தான்.
அஞ்சலியின் உயிருக்கு ஆபத்து இல்லை... இன்னும் இரண்டு மணி
நேரத்தில் கண் விழித்து விடுவாள் என்ற தகவலை மருத்துவர் கூறி இருக்க...
அப்பொழுதும் அவன் முகத்தில் தெளிவு பிறக்கவில்லை.
அபிமன்யு வந்த பிறகு,
மான அவமானம் பாராமல் திருமணம் முடிந்ததில் இருந்தே நடந்த அத்தனையையும் ஒன்று
விடாமல் சொல்லி முடித்தான் சத்யன்.
முகம் இறுக கேட்டுக் கொண்டிருந்தான் அபிமன்யு.
“முளையிலேயே கிள்ளி எறிஞ்சு இருக்க வேண்டிய விஷயத்தை நல்லா
வளர விட்டு இருக்கீங்க”
“நான் எத்தனையோ தடவை முயற்சி செஞ்சேன் மாப்பிள்ளை. ஆனா உங்க
தங்கச்சியும், அம்மாவும் தான் என்னை அப்பா கிட்டே
பேசவே விடலை.”
“ஸ்கூல் பையன் மாதிரி பேசறீங்க?...
நீங்க என் தங்கச்சியோட புருசன்.. உங்களை நம்பித் தான் அவளை கல்யாணம் செஞ்சு
கொடுத்தேன்” அபிமன்யுவின் குரலில் அழுத்தம் கூடியது.
ஒன்றுமே பேசாமல் அமைதியாகவே இருந்தான் சத்யன்.
சத்யனை திட்டித் தீர்த்தாலும் உள்ளுக்குள் அபிமன்யுவின் மனதை
அரித்த கேள்வி ஒன்று உண்டு. ‘இத்தனை தூரம் பொறுத்துக் கொள்ளும் குணம் அஞ்சலியின்
குணமே இல்லை. அப்படி அவள் தழைந்து போவதாக இருந்தால் அதற்கு என்ன காரணம்
இருக்கக்கூடும்?’ என்ற கேள்வியினை புறம் தள்ளியவன் அடுத்து ஆக வேண்டிய வேலைகளைப்
பார்த்தான்.
அதே ஊரில் மேகலாவின் தந்தை வழி சொத்துக்களில் ஒரு தோப்பு
வீடும் அடக்கம்.... மேகலா , அஞ்சலி இருவரையும் அந்த வீட்டிற்கு அழைத்து சென்றான்
சத்யன்.
உடன் அபிமன்யு வந்திருந்தாலும்,
அவனது முக இறுக்கத்தில் அவனிடம் பேசவே யாருக்கும் துணிவில்லாமல் போனது.
அஞ்சலியின் மீது மட்டும் பார்வையை அழுத்தமாக பதித்தபடி பேசத்
தொடங்கினான் அபிமன்யு.
“இந்த வீடு சத்யன் பேர்ல இருக்கு... உங்க அப்பா இந்த வீட்டை மச்சான் பேர்ல தான் எழுதி
இருக்கிறதா சொன்னார். இனிமே என் தங்கச்சியும்,
இவரும் இங்கேயே இருக்கட்டும். இல்லை அதெல்லாம் முடியாது அந்த வீட்டுக்குத் தான் போகணும்னு
இங்கே இருக்கிற யார் சொன்னாலும் சரி தான். கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன். அஞ்சலியை
இங்கே இருந்து கூட்டிட்டுப் போய்டுவேன். லீகலா டைவர்ஸ் வாங்க என்ன செய்யணுமோ
அத்தனையும் செய்வேன்” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி விட அஞ்சலி தான் அதிகமாக
அதிர்ந்து போனாள்.
“அண்ணா... என்ன சொல்ற?
அவர் எந்த தப்பும் பண்ணலை... அப்புறம் எதுக்காக எங்க இரண்டு பேருக்கும் டைவர்ஸ்?”
“பொண்டாட்டிக்கு நடக்கிற கொடுமையை எல்லாம் பார்த்துக்கிட்டு
அமைதியா இருக்கிற ஒரு புருசன் உனக்கு வேணுமா என்ன?
நீயே சம்மதிச்சாலும் நான் சம்மதிக்க மாட்டேன்” என்று அழுத்திக் கூற அந்த
வார்த்தையில் சத்யன் சுக்கு நூறாக நொறுங்கிப் போனான்.
‘பார்த்தீங்களா? என்ன மாதிரி பேரை
எனக்கு நீங்க இரண்டு பேரும் சேர்ந்து வாங்கி கொடுத்து இருக்கீங்கனு?’ அவன் பார்வை மேகலாவையும்,
அஞ்சலியையும் குத்திக் கிழித்தது.
“எனக்கு சம்மதம் மாப்பிள்ளை... இவங்க இங்கேயே இருக்கட்டும்...”
“அத்தை... கொஞ்சம் பொறுமையா”
“இரு அஞ்சலி... நான் பேசி முடிச்சிடறேன்... நாளையில் இருந்து
என்னோட சொத்துக்களை மட்டும் நீ பார்த்துக்கிட்டா போதும். உங்க அப்பா சம்பந்தப்பட்ட
எதுலயும் நீ தலையிட வேண்டாம். அவர் சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் அவரே
பார்த்துப்பார். அவரே உன்னைத் தேடி வந்து
எப்படிக் கூப்பிட்டாலும் நீங்க இனி அந்த வீட்டுக்கு வர வேண்டாம். உங்களை
பார்க்கணும்னா நான் வந்து பார்த்துக்கிறேன்”
சத்யன் எதுவுமே பேசவில்லை. அமைதியாக இருந்தான். ஆனால்
அஞ்சலியால் அப்படி இருக்க முடியவில்லை. இன்னும் அந்த வீட்டில் இருந்து முடிக்க
வேண்டிய வேலைகள் இருக்கும் பொழுது இப்படி தனியே வந்து விட்டால் அதை எல்லாம் எப்படி
சாதிப்பது என்பது அவள் கவலையாகிப் போனது.
ஆனால் இப்பொழுது அபிமன்யுவின் முன்னர் எதையும் பேச முடியாது.
அண்ணன் சிறு வயதில் இருந்தே தன்னை பார்த்தவன்... தன்னுடைய ஒவ்வொரு அசைவுக்கும்
அவனுக்கு காரணம் புரியும் என்பதால் அடக்கி வாசித்தாள்.
அந்த நேரத்தில் வக்கீலை அழைத்து வந்து இருந்தவன் மேகலாவின்
சொத்துக்களை பராமரிக்கும் உரிமையை மட்டுமாக சத்யனின் பேருக்கு மாற்றி எழுதி வைக்க
வைத்தான் மேகலாவின் வலியுறுத்தலின் படி..
“அஞ்சலி... இந்த ஊரில் உனக்கு என்ன ப்ராபர்ட்டி வேணுமோ
யோசிச்சு வை.. அடுத்த முறை அது எல்லாமே உன்னோட பேர்ல இருக்கும்.”
“மாப்பிள்ளை..”
“மச்சான்! ப்ளீஸ்! இது அவளோட பிறந்த வீட்டு சீதனம்... இதை
மறுத்து பேச உங்களுக்கு மட்டுமில்லை.. அவளுக்குமே உரிமை இல்லை..” என்றவன் யாரும்
மறுத்து பேசுவதற்கு நேரம் கொடுக்காமல் செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடித்து
விட்டு உடனே கிளம்பியும் விட்டான்.
உடன் வரத் துடித்த சத்யனை தடுத்து விட்டு மேகலா தான் மட்டுமாக
கிளம்பி வீட்டிற்கு சென்று விட்டார்.
இத்தனை கலவரத்திலும் எல்லோரும் மறந்து போன ஒன்று அஞ்சலி
கருவுற்று இருப்பதாக சொன்ன அந்த விஷயம்.
பின் நாளில் ஒரு நொடி மிகப் பெரிய பூகம்பத்தை கிளப்பப் போவது
அது தான் என்பதை அறியாமல் அந்த நொடி தப்பித்த மகிழ்ச்சியை வெளியே காட்டிக்
கொள்ளாமல் இருந்தாள் அஞ்சலி.
கருத்துரையிடுக