அழகான ரம்மியமான விடிகாலை பொழுது........ மக்கள் இன்னும்
விழித்து எழவில்லை என்பதை கடற்கரையின் ஆழ்ந்த அமைதி பறை சாற்றியது.கடற்கரையில்
அலைகளின் ஓசை ஒன்று மட்டுமே ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது. அந்த அமைதியை
கலைத்தது ஒரு ஆடவனின் வலிமையான பாதங்கள்.கடற்கரையோரம் தனது ஜாகிங்கை
விடியற்காலை ஐந்து மணிக்கு செய்து கொண்டு இருந்தான் நம்முடைய கதையின் நாயகன்
அபிமன்யு.
அபிமன்யு முப்பது வயதே ஆன கட்டிளங்காளை.பார்த்ததும் வசீகரிக்கும் அழகினை
உடையவன்.சிரித்தால் ‘என்னோடு கூட சேர்ந்து சிரி’ என்று மற்றவர்களை வசியப்படுத்தும்
மாயக் கண்ணனை போல அவனது சிரிப்பு இருக்கும்.யாருடனும் எளிதில் நட்பாகி விடக்
கூடியவன்.எல்லாரையும் எளிதில் கவர்ந்து விடுவான்.பழகுவதற்கு இனியவன்...... இன்னும்
இன்னும் ஆயிரம் உண்டு அவனுள் .... அதை ஒவ்வொன்றாக நாம் இனி காணலாம்.
விடிகாலை நேரம் என்பதால் பறவைகளின்
சத்தமும், லேசான குளிரும் உடம்பை துளைக்க, அதை எல்லாம் கண்டு கொள்ளாது
ஜாகிங்கை செய்து முடித்து தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான்.காரை
விட்டு கீழிறங்கியவன் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த தாயையும்
தந்தையையும் பார்த்ததும் வீட்டின் உள்ளே
செல்லாமல் அவர்களை நோக்கி சென்றான்..
“ஹாய் மாம்... ஹாய் டாட்....குட் மார்னிங்”
“குட் மார்னிங் அபி....என்ன வழக்கம் போல சூரியன் வருவதற்கு முன்னாடியே உன்
ஜாகிங்கை முடித்து விட்டாய் போல ..... அப்படி எதுக்கு இப்படி விடியற்காலை
நேரத்தில் போய் உடம்பை கெடுத்துக் கொள்கிறாய் ......நல்லா தூங்கி மெதுவா எழுந்து
போயேன்....” பெற்ற தாயாக மகன் சரியாய் தூங்குவதில்லையோ என்ற கவலையோடு பேச
தொடங்கிய பார்வதி அம்பது வயதை தாண்டியவர்
என்பதை சொன்னால் நம்பத்தான் முடியாது.... அவரது தோற்றம், பேச்சு ,நடவடிக்கை
அனைத்திலுமே ஒரு பணக்காரத்தனம் தெரிந்தது.ஆனால் அதை நினைத்து அவரிடம் ஒரு துளி
அளவு கூட கர்வம் இல்லை.பெரிய வீட்டை
நிர்வகிக்க வேண்டியது மட்டும் அல்லாது சமுதாயத்தில் தன்னை வைத்து தான் தன்
குடும்பத்தை மதிப்பார்கள் என்று கணவன் எடுத்து சொல்லியதால் அவர்
விரும்பாவிட்டாலும் கணவனுக்காகவும் மகனுக்காகவும் தன்னை இந்த பகட்டான வாழ்வுக்கு
பழக்கி இருந்தார் பார்வதி.வெளித்தோற்றத்தில் ஒரு பணக்காரத் தனம் இருந்தாலும்
உண்மையில் அவர் தன்னுடைய குடும்பத்தார் மீது மிகுந்த பாசம் கொண்டவர்.அவருக்கு
அவருடைய குடும்பம் தான் உயிர்.
“மாம்....எல்லாம் தெரிஞ்சே நீங்க இப்படி பேசினா எப்படி....விடிந்த பிறகு போனா
என்னால் ப்ரீ ஆக ஜாகிங் போக முடியாது மாம்..... ஃபேன்ஸ் நிறைய பேர் வந்து சுத்தி
வளைச்சுப் பேச ஆரம்பிச்சுடறாங்க... அவங்களை அவாய்டு பண்ணவும் முடியாது... பசங்களை
கூட சமாளிச்சுடலாம், ஆனா இந்த பொண்ணுங்களை தான் சமாளிக்கவே முடியாது.என்னுடைய
ஜாகிங் வேலையே கெட்டு போய்டும் அதுக்காக தான்.இத்தனை சீக்கிரம் போய்ட்டு
வந்துடறேன்.” மெலிதான ஒரு கர்வம் அவனது பேச்சில் வெளிப்பட்டது.
“இவ்வளவு பணம் இருந்து என்ன பிரயோஜனம் ... என் பையனால ஒழுங்கா தூங்கி
எழுந்திருக்க முடியுதா?” மகனுக்காக கவலைப் பட்டாலும் அதிலும் பார்வதிக்கு பெருமை
தான் இருந்தது மகனை நினைத்து. அபிமன்யுவின் தந்தை ராஜேந்திரன் ஒரு சினிமா நடன
இயக்குனர்...தந்தையை போலவே சிறு வயதில் இருந்தே நடனத்தில் பெரும் ஆர்வம் கொண்ட
அபிமன்யு எல்லா வித நடனங்களையும் கற்று தேர்ந்தான்.சினிமாவில் கால் பதித்து
ஆரம்பத்தில் சற்றே தடுமாறினாலும் தந்தையின் உதவியை நாடாமல் தானாகவே உழைத்து
முன்னேறி தந்தையை விட பேரையும் புகழையும் சம்பாதித்தான்.
அபிமன்யுவின் திறமையை கண்டு தமிழ்,தெலுங்கு,கன்னடம், இந்தி என்று திரையுலகின்
எல்லா பக்கத்தில் இருந்தும் அபிமன்யுவை அழைத்து
கொண்டாடினர். அபிமன்யுவின் நாடி, நரம்பு, எண்ணம்
அனைத்திலும் நடனம் மட்டுமே நிரம்பி வழிந்தது.
அவனுடைய அழகான தோற்றத்தினால் கவரப்பட்டவர்கள் அவனை ஹீரோவாக ஆக்குவதாக கூட
எத்தனையோ முறை ஆசை வார்த்தை கூறிய போதும் கூட அதை அனைத்தையும் மறுத்து விட்டான்
அபிமன்யு.அவனே சொந்தமாக “அபி டான்ஸ் அகாடமி” என்ற பெயரில் டான்ஸ் அகாடமி ஒன்றை
ஆரம்பித்து இருந்தான்.
அதை உலகிலேயே முதல் தரமான டான்ஸ் அகாடமியாக மாற்றுவதே அபிமன்யுவின் வெகுநாள்
லட்சியம்.எனவே தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வருடத்திற்கு இரண்டு அல்லது
மூன்று படம் மட்டுமே ஒத்துக்கொள்வான்.அதற்கு மேல் யாருடைய சிபாரிசின் பேரில்
வந்தாலும் அதை எடுத்துக் கொள்ள மாட்டான்.வருடத்திற்கு இரண்டு படத்தில் நடன
ஆசிரியராக இருந்தாலும் எப்படியும் ஒவ்வொரு வருடமும் திரை உலகின் உயரிய விருதுகள்
அனைத்தும் அபிமன்யுவின் வீட்டை தேடி வந்துவிடும் அளவிற்கு அபிமன்யுவின் திறமை
இருந்தது.அதை குறித்து அவனுக்குள் எப்பொழுதும் ஒரு கர்வம் உண்டு.
ஆம்! கர்வம் தான்...வித்யா கர்வம் மட்டும் இல்லை...தன்னுடைய அழகைக்
குறித்தும்,தன்னுடைய புகழைக் குறித்தும் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே அவனுக்கு
கர்வம் இருந்தது.எதுவாக இருந்தாலும் சுலபமாக தனக்கு கிடைத்து விடும் என்று
நம்பினான்.தன்னுடைய சுண்டு விரலை அசைத்தால்
மொத்த பூமியும் தன்னுடைய காலடியில் பணிந்து விடும் என்று நம்பினான்.
பார்வதியின் மனமோ மகனை நினைத்து பெருமைப் பட்டதோடு மட்டும் அல்லாமல் மகனை
நினைத்து கவலையும் கொண்டது.மகன் என்ன தான் வளர்ந்தாலும் பெற்றவளின் கண்களுக்கு
என்றுமே அவன் ஒரு குழந்தையாக தானே தெரிவான்.எனவே எப்போழுதும் போல மகனின் உடல்நலனை
மனதில் நிறுத்தி தன்னுடைய கருத்துக்களை சொல்ல தொடங்கினார் .
“அப்படியானால் நீ வீட்டுலேயே ஜாகிங் செய்யலாமே அபி...நம் வீட்டு தோட்டம் தான்
இத்தனை பெரிதாக இருக்கிறதே............இன்னும் என்ன யோசனை உனக்கு!...பேசாமல்
நாளையில் இருந்து நீ நம் வீட்டுலேயே உன் உடற்பயிற்சியை செய்து கொள்....சரிதானா”
“நோ மாம்...வீட்டுக்குள்ளேயே ஜிம்
ஆரம்பிப்பதாக இருந்தால் நான் ஏன் இத்தனை நாள் இப்படி விடிகாலையில் கிளம்பி ஓட
வேண்டும்?... எனக்கு இது தான் பிடித்து இருக்கு மாம்... விடியற்காலை நேரத்தில்
கடற்கரை காற்று முகத்தில் சில்லுன்னு வீச ஜாகிங் செய்வது தான் பிடித்து
இருக்கிறது....இதை நான் பிடித்து போய் மிகவும் ரசித்து தான்
செய்கிறேன்...சோ..ப்ளீஸ் மாம்....” என்று கூறி தாயின் தாடையை பிடித்து
செல்லம் கொஞ்சினான்.
“ஹ்ம்ம்ம்....சொல்றது எதையும் கேட்பது இல்லை...கடைசியில் இப்படி வந்து ஐஸ்
வைத்து விட வேண்டியது....”போலியாக அலுத்துக் கொண்டார் பார்வதி.
“என்ன!!!!! ....இந்த வீட்டோட மகாராணி நீங்க ... நீங்க சொல்லி யார் கேட்கலை
இங்கே?????.... சொல்லுங்க... யாரு அப்பாவா?????” என்று தந்தையை முறைப்பது போல்
பாசாங்கு செய்தான்.
“ஏன்டா மகனே...நீ இங்கே வந்து பத்து நிமிடம் ஆகிறது. இந்த பத்து நிமிடத்தில்
ஒரு நிமிடம் கூட நான் வாயே திறக்கவில்லையே.....நான் தான் வீட்டிற்குள் வந்ததும்
மௌன விரதம் இருக்க ஆரம்பித்து விடுகிறேனே... இன்னும் ஏன்டா என்னை வம்பு
இழுக்கிற....நான் எப்பவுமே என் பொண்டாட்டிக்கு ரொம்ப பயந்தவன்டா... அவள் பேச்சை
மீறி எதிர்த்து நான் பேச மாட்டேன்.....உங்க அம்மா நைட்ல சூரியன் தெரியுதுன்னு
சொன்னா கூட ஆமா சாமி போடுறவன் நான்..........என்னை பார்த்து இப்படி ஒரு வார்த்தை
சொல்லிட்டியேடா மகனே...அது தான் என்னால தாங்க முடியலை...இதை கேட்பதற்கு யாருமே
இல்லையா... இறைவா”என்று கூறியவர் பாசாங்காக நெஞ்சை பிடித்துக் கொண்டு நடிக்கத்
தொடங்கினார் ராஜேந்திரன்.
“ஸ்ஸ்ஸ்ஸ்!!!!!!!......சினிமா ஃபில்ட்ல இருப்பதால அப்பாவுக்கும் பிள்ளைக்கும்
நல்லா நடிக்க வருது. அட ... அட... என்னம்மா நடிக்குறீங்க ரெண்டு பேரும்...நான்
யாரை சொல்றேன்னு உங்க ரெண்டு பேருக்கும் நல்லா தெரியும் இருந்தும் நீங்க எல்லாம்
இப்படி செல்லம் கொடுத்து கொடுத்து தான் அவளை கெடுத்து வச்சு இருக்கீங்க”
“யாரை சொல்றீங்க மாம்???? புரியாதவன் போல கேட்டான் அபிமன்யு.
“எல்லாம் உன் தொங்கச்சியை தான் சொல்றேன்....சொல்றதே கேட்க
மாட்டேன்கிறா....நேத்து நைட் கூட பிரண்ட்ஸோட படத்துக்கு போய்ட்டு நைட் பதினோரு
மணிக்கு தான் வர்றா....பொம்பளை பிள்ளைகிற நினைப்பு கொஞ்சம் கூட இல்லை...அவளுக்கு
தான் இல்லை...நீங்க யாராவது எடுத்த சொல்வீங்கன்னு பார்த்தா அதுவும் கிடையாது.”
பார்வதி பேசி முடிக்கவும் வீட்டின் உள்ளிருந்து ஸ்பீக்கர் அலறவும் சரியாக
இருந்தது.உடனே முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு ,”ஆரம்பிச்சுட்டா
பாருங்க.....இன்னிக்கு அவளை உண்டு இல்லைன்னு செஞ்சுடறேன்....நீங்க வந்து இப்ப அவளை
தட்டி கேட்கறீங்களா???? இல்லை நான் கேட்கட்டுமா???”
“மாம் ...நீங்க இருங்க மாம் ....நான் கேட்கிறேன் அவளை” என்று கூறிவிட்டு
தாயின் முன்னே வேகவேகமாக நடந்தான் அபிமன்யு.
“இவனை நம்ப முடியாது....நீங்களும் கூட வாங்க என்று கூறி தன் கணவரையும் கையோடு
அழைத்துக் (இழுத்துக்) கொண்டு வீட்டின் உள்ளே சென்றவர் அதிர்ந்து நின்றார் கண்ட
காட்சியில். ஏற்கனவே ஓடிக் கொண்டு இருந்த வெஸ்டர்ன் மியூசிக்கை நிறுத்தி விட்டு
வேலையாட்கள் பார்க்க நடு ஹாலில் அண்ணனும் தங்கையும் சேர்ந்து ஆடிக் கொண்டு
இருந்தார்கள்.மொத்த வீடும் அதிர்ந்து கொண்டு இருந்தது பாட்டால்.
“ஆளுமா டோலுமா
ஐசாலங்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு
கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு கரிக்கல்லு
கொத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது
மிட்டா மேல லோக்கலு”
பாட்டு ஒருபுறம் அலற மகனும் மகளும் நடு
ஹாலில் ஆடிக் கொண்டு இருந்தனர்.கண்டிக்கும்படி சொல்லலாம் என்று கணவரை தேடினால்
அவர் ஏற்கனவே அவர்களோடு சேர்ந்து குத்தாட்டம் போட தொடங்கி இருந்தார். ‘ஆண்டவா!!!!
இவரை வச்சுக்கிட்டு... பெரிய மனுஷனா
லட்சணமா கண்டிக்காம இப்படி அவரும் சேர்ந்து ஆடுறாரே’ என்று மனதுக்குள் நொந்தவர்
பல்லை நறநறவென கடித்தார். வேலைக்காரர்கள் முன் கணவனை கேள்வி கேட்க மனம் இல்லாமல்
மகனை திட்ட தொடங்கினார்.
“டேய் அபி.......... உன்னை என்ன செய்ய
சொன்னேன்?????... இங்கே வந்து இந்த குட்டிசாத்தான்னோட சேர்ந்து நீயும்
ஆடுறியா...உன்னை” என்று மகனை திட்டிவிட்டு மகளை அடிக்க கை ஓங்கினார் பார்வதி.
“மாம்
சும்மா திட்டாதே....என்னுடைய அண்ணனும் அப்பாவும் எவ்வளவு பெரிய டான்சர்கள்
தெரியுமா?...அவர்கள் இருக்கும் வீட்டில் எப்பொழுதும் ஆட்டம் பாட்டம் என்று இருக்க
வேண்டும்...சும்மா பேசி டைம் வேஸ்ட் செய்யாமல் நீயும் வந்து களத்தில் குதி” என்று
கூறிவிட்டு மேலும் ஆட்டத்தை தொடர்ந்தாள் அந்த வீட்டின் முடிசூடா இளவரசி அஞ்சலி
.....
“எது!....நானும் வந்து ஆடணுமா? இந்த வரேன்
இரு ....உனக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சு.....ஏய்...ஓடாதே... நில்லுடி .....”
என்று மகளை துரத்த ஆரம்பித்தார் பார்வதி.
“அய்யோ!...அண்ணா காப்பாத்துங்க...இது என்ன
அண்ணா அநியாயமாய் இருக்கு நம்ம வீட்டில் டான்ஸ் ஆடுவது ஒரு குத்தமா ?” என்று
இல்லாத கண்ணீரை போலியாய் துடைத்துக் கொண்டு அண்ணனின் முதுகின் பின் ஒளிந்து
வெற்றிகரமாக அன்னையின் அடியில் இருந்து தப்பித்தாள் அஞ்சலி.
“விடுங்கம்மா ....நம்ம வீட்டுக்குள்
தானே...அதுவும் வீட்டில் இரண்டு டான்ஸ் மாஸ்டர்களை வைத்துக் கொண்டு அவளை மட்டும்
ஆடக் கூடாது என்று சொன்னால் எப்படி!... நீ ஆடு செல்லம்...”என்று மேலும் தங்கையை
ஊக்கினான் அபிமன்யு.
அபிமன்யு அப்படித்தான் தங்கை கேட்டு
எதையும் மறுக்க மாட்டான்.இதுவரை அவன் மறுக்கும் படியான எதையும் அஞ்சலி கேட்டது
கிடையாது.ஆனால் ஏதாவது வேண்டும் என்றால் அது கிடைக்கும் வரை ஓய மாட்டாள்
அளவுக்கதிகமான பணப் புழக்கமும் வீட்டினரின் செல்லமும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.அன்று
அவளை செல்லம் கொஞ்சாமல், கொஞ்சம் தட்டி வைத்து இருந்தால் பின்நாளில் தன் வாழ்கையை
அது எப்படி எல்லாம் பாதிக்க போகிறது என்று
தெரிந்து இருந்தால் அன்றே அவளை கொஞ்சம் கண்டித்து வளர்த்து இருந்தாலும் இருப்பானோ
என்னவோ ...
கருத்துரையிடுக