அத்தியாயம் 26
“அபி” பார்வதியின் அலறல் வீடு முழுக்க எதிரொலித்தது.
“உங்களுக்கு இங்கே என்ன வேலை?”கண்ணசைவில் அங்கிருந்த வேலையாட்களை
வெளியேற்றினான் அபிமன்யு.
“அபி நான் உன் அம்மாடா!”
“கரெக்ட்.உங்களுக்கு ஏதாவது பேசணும்னா என்கிட்ட பேசுங்க.இங்கே சஹானாவிடம் என்ன
பேச்சு உங்களுக்கு?நான் உங்கள் மகன் என்னை கேள்வி கேட்க உங்களுக்கு எல்லா
உரிமையும் இருக்கு.அவளை கேள்வி கேட்க நீங்கள் யார்?”
“அப்பா காலையில் இவளை பத்தி கேட்டதற்கு நீ சொல்ல மறுத்து விட்டாயாமே”அவருடைய
மனத்தாங்கல் அதில் வெளிப்பட்டது.
“அகாடமியில் சொல்ல முடியாத சூழ்நிலை இருந்து இருக்கலாம்.வீட்டிற்கு வந்ததும்
என்னிடம் மறுபடி கேட்டு இருக்கலாமே.அதை விட்டு இங்கே வந்து இவளிடம் என்ன பேச்சு
உங்களுக்கு?”
“சரி அபி நான் உன்னிடமே கேட்கிறேன்.இவள் யார்?”
“அது தான் சொன்னேனே!!!”
“கல்யாணமே செய்து கொண்டாயா அபி” உச்சக்கட்ட அதிர்ச்சி இருந்தது அவரது
கேள்வியில்.
“இல்லை...இவர் பொய் சொல்றார்.எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.” அபிமன்யுவை
முந்திக்கொண்டு பதில் அளித்தாள் சஹானா.அவளின் பதிலை கேட்ட அபிமன்யு திரும்பி அவளை
ஒரு பார்வை பார்த்தான்.அந்த பார்வையில் இருந்தது என்ன என்று அங்கிருந்த யாருக்கும்
புரியவில்லை.அது கோபமா,வருத்தமா இல்லை வலியா? என்று புரியாமல் ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டு இருந்தனர்.
“இதோ பாருங்க மாம்.அவள் சொல்றதும் உண்மை தான்.நான் சொல்றதும் உண்மை தான்.”
தெளிவாக குழப்பினான் அபிமன்யு.
“அவளுக்கும் எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை.ஆனா எனக்கு கல்யாணம்னு ஒண்ணு
நடந்து மனைவின்னு ஒருத்தி வந்தா அது அவ மட்டும் தான்” என்று அழுத்தம் திருத்தமாக
சொன்னான் அபிமன்யு.
“இல்லை” சஹானாவின் குரல் நடுக்கத்தோடு வெளிவந்து அந்த வீடு முழுக்க
எதிரொலித்தது.
“இதோ பார்.நான் என்ன உன்கிட்ட வந்து நீயும் என்னை காதலின்னு சொன்னேனா? நான்
உன்னை காதலிக்கிறேன்.அதில் உனக்கு என்ன பிரச்சினை?” என்று விதண்டாவாதம் செய்தவனை
அங்கிருந்த அனைவரும் புரியாமல் பார்த்தனர்.
“நீ என்னை காதலிக்கணும்னு உன்னை நான் கட்டாயப் படுத்தலை சனா.அதே நேரம் நான்
உன்னை காதலிப்பதை தடுக்க யாராலும் முடியாது.”
“டேய் அபி என்னடா உளர்ற!” பார்வதி தான் மகனின் பேச்சை கண்டித்தார்.ஏதோ ஒரு
வகையில் மகனின் பேச்சில் இருந்த சோகம் அவரை தாக்கியது.
“ஆமா மாம்.உளறிகிட்டு தான் இருக்கேன்.இன்னைக்கு இல்ல.எப்போ இவளை முதல்முறையா
கடற்கரையில் வச்சு பார்த்தேனோ அப்போ இருந்து”
‘கடற்கரையில் என்னை பார்த்தானா?’ இந்த செய்தி சஹானாவிற்கு புதிது.
“ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுகோங்க மாம்.இவளை பார்த்த நாளில் இருந்து நான் தான்
இவள் பின்னால் சுற்றிக் கொண்டு இருக்கிறேன்.இவள் இந்த நிமிடம் வரை என்னையும் சரி
என்னுடைய காதலையும் சரி கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளவில்லை.”
“ஏற்றுக் கொள்ளாமலா இங்கே நம்முடைய வீட்டில் அவள் தங்கி இருக்கிறாள்?”இடக்காக
கேள்வி கேட்டார் பார்வதி.
“இது என்னோட வீடுன்னு தெரிஞ்சு இருந்தா இவ நிச்சயம் இங்கே வந்து இருக்க மாட்டா
மாம்.அவ தெரிஞ்சுக்க நான் விடலை.என்னவெல்லாமோ செய்து தான் அவளை நான் இங்கே தங்க
வைத்து இருக்கிறேன். எதற்காக? இங்கே இருக்கும் நாட்கள் எல்லாம் இவள் பத்திரமாக
இருக்கணும்.அவள் போன பிறகு என்னுடைய நினைவடுக்கில் சேமித்து வைத்துக் கொண்டு
மீண்டும் மீண்டும் நினைவு படுத்த வேறு எங்கேயும் நான் போக வேண்டாம்.
இதோ இந்த வீட்டில் தான் அவள் இருந்தாள்,இங்கே தான் அமர்ந்து டீ
குடிப்பாள்,இங்கே இருந்து தான் டிவி பார்ப்பாள். என்று இந்த வீட்டின் ஒவ்வொரு
மூலையிலும் அவளை பற்றிய நினைவுகளை நான் சேமித்து வைத்துக் கொண்டு இருக்கிறேன்.”
அவளையே அழுத்தமாக பார்த்தப்படி பேசிக் கொண்டே போன அபிமன்யுவை ராஜேந்திரனும்
பார்வதியும் வித்தியாசமாக பார்த்தனர்.
“அபி” மகனின் மன உணர்வுகள் பார்வதிக்கு புரிந்தது.அவரால் தாங்க முடியவில்லை.
அவருடைய பிள்ளைக்கு இப்படி ஒரு நிலையா? ஊரில் உள்ள எல்லாரும் அபிமன்யுவை போல ஒரு
பிள்ளை தனக்கு இல்லையே என்று எத்தனை முறை பார்வதியிடமே வந்து பொறுமி
இருக்கின்றனர்.அப்படிப்பட்ட தன்னுடைய அருமை மகன் யாரோ ஒரு பெண்ணுக்காக ஏங்கி
தவிக்கிறான் என்பதை அவரால் நம்ப முடியவில்லை.
தன்னை சுற்றி வந்த அத்தனை பெண்களையும் ஒரு பார்வையில் தள்ளி நிறுத்தியவன் இந்த
பெண்ணின் ஒற்றை பார்வைக்கு தவம் கிடக்கிறானா?அப்படி என்ன இருக்கிறது இந்த
பெண்ணிடம்?” திரும்பி அருகே நின்று கொண்டு இருந்த
சஹானாவை முழுதாக பார்வையிட்டார் பார்வதி.
நல்ல சிவந்த நிறம்,கொடி போன்ற உடல்வாகு,முகத்தில் அறியாமை தெரிந்தது.அழுது
அழுது முகம் சிவந்து வீங்கி இருந்தாலும் அதையும் தாண்டி எந்த விதமான செயற்கை
தனமும் இல்லாத அவளது அழகு குத்துவிளக்கின் சுடர் போல அமைதியாக பிரகாசமாக
ஜொலித்தது.
“கடைசியாக ஒரே ஒரு கேள்வி அபி? இந்த பெண்ணின் வீட்டார்க்கு அவளை நீ
விரும்புவது தெரியுமா?தெரிந்து தான் இங்கே அனுப்பி இருக்கிறார்களா?”
“அவளுடைய அண்ணனுக்கு மட்டும் தான் அவள் இங்கே சென்னையில் தங்கி நம்முடைய
அகாடமியில் வேலை பார்ப்பது தெரியும்.மற்றபடி அவளுடைய வீட்டார்களுக்கு அவள் இங்கே
என்னிடம் வேலை பார்ப்பது தெரியாது.ஒருவேளை இவள் என்னை விரும்பி இருந்தால் இவளை
ஒரேடியாக திருமணம் செய்து என்னுடன் அழைத்து வந்து இருப்பேன் மாம்...எங்கே? எனக்கு
தான் அந்த அளவிற்கு பாக்கியம் இல்லையே .
இவளுக்கு என்னை பிடிக்காத பட்சத்தில் என்னுடைய காதல் இவளது வீட்டிற்கு தெரிய
வேண்டாம் என்று நினைத்தேன். அதனால் இவளுடைய வீட்டில் நான் சொல்லவில்லை.நான் தானே
இவளை விரும்பினேன்.இவள் விரும்பவில்லையே .ஒரு .... ஒருவேளை இங்கிருந்து
புறப்பட்டதும் இவளுக்கு வேறு ஒரு வாழ்க்கை அமைய நான் தடையாக இருக்ககூடாது
இல்லையா?”கடைசி வாக்கியத்தை சொல்லும் போது அவனையும் அறியாமல் அபிமன்யுவின் குரல்
லேசாக நடுங்கியது.
“அபி நீ இந்த அளவுக்கு வருத்தப்பட வேண்டாம்.ஊரில் இவள் ஒருத்தி தான் பெண்ணா?
நீ உம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு நான் உனக்கு இவளை விட அழகான நல்ல பணக்கார வீட்டு
பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன்.”
“மாம் ப்ளீஸ் இன்னொரு முறை இப்படி பேசாதீங்க...என்னுடைய முடிவில் எந்த
மாற்றமும் இல்லை.எனக்கு திருமணம்ன்னு ஒண்ணு நடந்து மனைவின்னு ஒருத்தி வருவதாக
இருந்தால் அது என் சஹானா மட்டுமே”
“அவளுக்கு தான் உன்னை பிடிக்கவில்லை போலயே அபி...அப்புறமும் ஏன்?”
“என்னிடம் ஏதோ குறை இருக்கிறது போல” அசட்டையாக சொல்வது போல சொன்னாலும்
அபிமன்யுவின் குரலில் இருந்த வலியை அவனுடைய தாயும் தந்தையும் நன்கு உணர்ந்து
கொண்டனர்.
“உனக்கு என்ன குறை அபி ராஜா மாதிரி இருக்க...உன்னை போல ஒருத்தன் கணவனாக
கிடைக்க மாட்டானா என்று ஏங்காத பெண்கள் இல்லை தெரியுமா?”
“மாம் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு...உங்கள் கண்களுக்கு என்னுடைய குறை
எதுவும் தெரியாது.அவளுக்கு தெரிந்து இருக்கிறது.”
மகனின் வார்த்தைகளில் தெறித்த வலிகளின் கணம் தாங்க முடியாமல் திரும்பி
சஹானாவிடம் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார் பார்வதி.
“ஏய்...என் பையனிடம் என்ன குறை கண்டாய்?எதற்கு அவனை உனக்கு பிடிக்கவில்லை?”
திடீரென்று இப்படி கேட்பார் என்று எதிர்பார்க்காததால் சஹானா என்ன பதில்
சொல்வதென்று புரியாமல் திருதிருவென முழித்தாள்.
“உன்னை தான் கேட்கிறேன் பதில் சொல்லு”
...............
“ஹ்ம்ம் பதில் சொல்ல முடியலைல...அப்படினா என் பையன்கிட்ட குறை எதுவும்
இல்லைன்னு தானே அர்த்தம்...அப்புறம் ஏன் அவனை உனக்கு பிடிக்காமல் போச்சு.?”
மகன் தன்னுடைய கணவரிடம் யாரோ ஒரு பெண்ணை பற்றி மறைக்கிறான் என்று தெரிந்ததும்
அவளை வீட்டை விட்டு வெளியேற்றும் எண்ணத்தோடு தான் அங்கே வந்தார் பார்வதி.ஆனால்
இங்கே வந்ததும் உண்மை நிலவரம் தெரிந்த பிறகு தன்னுடைய அருமை மகனை ஒரு பெண்
மறுப்பதா? அதுவும் அவன் நேசிக்கும் ஒரு பெண். தன்னுடைய மகன் வருந்துவதை நேருக்கு
நேர் பார்த்ததும் இப்பொழுது மகனின் சார்பாக அவரே சஹானாவிடம் பேசத் தொடங்கினார்.
இது தான் தாயுள்ளம்.பெற்ற குழந்தைகளின் மேல் அவர்களுக்கு கோபம் வரலாம்.ஆனால்
அந்த கோபம் நிரந்தரமானதாக இருக்காது. ‘அது எப்படி என் மகனை பிடிக்கவில்லையென்று
இவள் சொல்லலாம்?மகன் விரும்பி கேட்ட வாழ்வை கொடுக்க முடியவில்லையெனில் பின்
அவனுடைய தாய் என்று நான் எதற்கு இருக்கிறேன்?’ என்று மனதில் கேட்டுக் கொண்டவர்
திரும்பி அபிமன்யுவை பார்த்து முடிவாக ஒரு வார்த்தை சொன்னார்.அந்த வார்த்தையில்
அபிமன்யுவின் முகம் வெளிச்சத்தையும் சஹானாவின் முகம் இருளையும் தத்தெடுத்தது.
“அபி மருமகளை கூட்டிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்து சேர்”
கருத்துரையிடுக