அத்தியாயம் 3
இல்லாத வேலைகளை எல்லாம் செய்வது போல பாவனைக் காட்டியபடி
மேலும் சில மணித் துளிகளை அங்குமிங்கும் அலைந்து கடத்தியவளால் ஒரு கட்டத்திற்கு
மேல் அது முடியாமல் போனது. சித்தார்த் மாடியில் இருந்து அவளை இரண்டு முறை எட்டிப்
பார்த்து விட்டான்.
கௌரி ‘மாடிக்கு போ’ என்று கண்ணாலேயே சைகை செய்தார்.
‘இதோ போகிறேன்’ என்று பதிலுக்கு தலை அசைத்தவள் யாரும்
அறியாமல் வேகமாக தோட்டத்திற்குள் புகுந்து
கொண்டாள்.
அவள் அந்த அறைக்குள் செல்வதற்கு இப்பொழுது தயங்கிக் கொண்டு
இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.
முதலாவது அது சித்தார்த்தின் அறை... இரண்டாவது காரணம் அதில்
அவன் செய்து வைத்திருக்கும் வேலை.
சித்தார்த் பற்றி உங்களுக்கு தெரியாது இல்லையா... அவன்
தமிழக அளவிலும், இந்திய அளவிலும் ஆணழகன் போட்டியில் பங்கெடுத்து அந்த போட்டியில்
வென்றவன். இப்பொழுது அந்த போட்டியில் கலந்து கொள்ள முயற்சி செய்பவர்களுக்காக
அகாடமி ஒன்றை தொடங்கி திறம்பட நடத்தியும் வருகிறான்.
அப்படி வென்ற பொழுது எடுத்துக் கொண்ட போட்டோவை தன்னுடைய
அறையில் உள்ளே நுழைந்ததும் கண்ணில் படும் விதமாக மாட்டி வைத்து இருப்பான். அங்கே
அவனது அறைக்குள் வேலையாட்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. அவன் அன்னை, தந்தை,
பாட்டி மூவர் மட்டுமே உரிமையோடு வந்து செல்வர். மற்ற உறவினர்களோ , வேலையாட்களோ
உள்ளே நுழைவதை அவன் விரும்புவதில்லை என்பதை அறிந்த பிறகு வீட்டினரும் யாரையும்
அங்கே அனுப்பி வைத்ததில்லை.
அந்த காரணத்தை எல்லாம் அறியாத சீதா வீட்டினர் அவர்களின்
கல்யாணப் பேச்சை எடுத்த பொழுது அதை தடுத்து நிறுத்துவதின் பொருட்டு யாரும்
அறியாமல் ஒரு நாள் இரவு அவனது அறைக்கு சென்றாள்.
ஊரே உறக்கத்தின் பிடியில் இருந்த நேரம் வீட்டில் அனைவரும்
உறங்கி விட்டதை உறுதி செய்து கொண்டு மெல்ல பூனைப் பாதம் வைத்து மாடி ஏறினாள் அவள்.
அறையை மெலிதாக இரண்டு முறை தட்டினாள். உள்ளிருந்து எந்த
சத்தமும் வரவில்லை. ஒருவேளை உறங்கிக் கொண்டிருப்பானோ என்று நினைக்கவும் வழியின்றி
அறைக்குள் இருந்து மெலிதாக இசை ஒலித்துக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியே வெளியே வந்த
வெளிச்சக் கீற்று அவன் இன்னும் உறங்காததை உறுதி செய்ய கொட்டும் முரசாய் ஒலித்த இதயத்தை
ஒரு கையால் தடவி சமாளித்தபடி அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
அறையின் உள்ளே நுழைந்ததும் நடுநாயகமாக கண்ணில் படும் விதமாக
மாட்டி வைக்கப் பட்டிருந்த அந்த ஆளுயர புகைப்படங்களைப் பார்த்ததும் அப்படியே
அதிர்ந்து போய் நின்று விட்டாள்.
உடனே வெளியே ஓடி விட வேண்டும் மனம் பரபரத்தாலும் அவள்
கால்கள் அதற்கு ஒத்துழைக்காமல் போனது.
அதே நேரம் அவளுக்கு பின்னால் யாரோ வரும் அரவம் கேட்டது...
யாரோ என்ன சித்தார்த் தான். மெல்ல திரும்பி அவனைப் பார்த்தாள்.
குளியல் அறையில் இருந்து இருப்பான் போலும்... கண்கள்
கோபத்தில் சிவக்க இடுப்பில் டவலுடன் நின்றவனைப் பார்த்ததும் அவளுக்கு குளிர் ஜுரம்
வருவதைப் போலிருந்தது. அடுத்த நொடியே “அவுட்” என்று கர்ஜனையாக ஒலித்த அவன் குரலில்
திரும்பி அவனைப் பார்த்தவள் இன்னமும் அரண்டு போய் பின்னங்கால் பிடறியில் தெறிக்க
ஓடி வந்து விட்டாள்.
அந்தப் புகைப்படங்கள் எல்லாமே அவன் விருது வாங்கும்போது
எடுக்கப்பட்டவை. ஆணழகன் விருது வாங்கும் போது எடுக்கப்பட்டவை எல்லாம் என்ன கோட்
சூட்டிலா இருக்கும்? எல்லாமே அவன் உடல் முழுக்க எண்ணையுடன் வெறும் உள்ளாடையுடன்
இருக்கும் போட்டோ. அதைப் பார்த்து அவள் அலறாமல் என்ன செய்வாள்?
பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவளின் தலையில் பலமாய் ஒரு
கொட்டு விழுந்தது.
“ஆஆஆஆ” என்ற அலறலுடன் கோபமாக முகத்தை திருப்பியவளின்
பார்வையில் இடுப்பில் கை வைத்து அவளை முறைத்துக் கொண்டிருந்த மங்களம் பட அவளது
கோபம் எங்கோ சென்று மாயமாய் மறைந்து விட்டது.
“இங்கே என்ன செஞ்சுட்டு இருக்க”
“கொஞ்சம் புழுக்கமா இருக்கு.. அதான் காத்தாட...” குனிந்த
தலை நிமிரவில்லை அவள்.
“என் பேரன் ரூமில் ஏசி இருக்கு.. அங்கே போ குளுகுளுன்னு இருக்கும்”
இடக்காக பேசினார் மங்களம்
“நேத்து வரை என்னை இந்த வீட்டில் இருந்து வெளியே போக
சொல்லிட்டு இருந்தீங்க” அவருக்கு நினைவூட்ட முயன்றாள்.
“அது தான் என் பேரன் உன்னை ஏத்துக்கிட்டானே...” என்று
சொன்னவரின் பார்வை அவளை மேலும் கீழும் அளந்தது.
“இன்னும் கொஞ்சம் மல்லிப்பூ வச்சு இருக்கலாம்.. சரி போ
நேரமாவுது. என் பேரன் காத்துக்கிட்டு இருப்பான்” என்று சொன்னவர் அவளை கையோடு
இழுத்து சென்று பேரனின் அறை வாயிலில் தள்ளிய பிறகே ஓய்ந்தார்.
அவளது கேள்விக்கு அவர் அளித்த பதில் அவள் எதிர்பார்த்தது
தான் என்றாலும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அறையின் வாசலிலேயே தயங்கி நின்றவள் உள்ளே போகிறாளா இல்லையா
என்பதை கொஞ்சம் தள்ளி இருந்த மங்களம் பார்த்துக் கொண்டே இருக்க.. வேறு வழியின்றி
ஆழமாக மூச்சை வெளியிட்டு தன்னை நிலைபடுத்திக் கொண்டவள் அறைக் கதவை இரண்டு முறை
மெல்ல தட்டினாள்.
“உள்ளே வா சீதா” என்ற அவனின் பதில் குரல் கேட்டதும் குனிந்த
தலை நிமிராமல் உள்ளே வந்தாள்.
‘நிமிர்ந்தா போட்டோ கண்ணில் படுமே’
“உட்கார் சீதா... கொஞ்சம் வெயிட் பண்ணு” என்று சொன்னவன்
மேலும் சில நிமிடங்கள் தன்னுடைய லேப்டாப்பில் ஏதேதோ வேலை பார்த்துக்
கொண்டிருந்தான்.
வேலைகளை முடித்து விட்டு அவன் பார்க்கும் வரையிலும் அவள்
நின்று கொண்டே தான் இருந்தாள். பார்வையும் தரையிலேயே தான் இருந்தது.
உட்கார கூட மனமில்லாமல் நின்று கொண்டு இருந்தவளை புதிராகப்
பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் எழுந்து கொண்டான்.
அவள் அருகில் வராமல் குளிக்க சென்று விட அப்பொழுதும் அவள்
தலை நிமிர்த்தினாளில்லை. அவன் குளித்து விட்டு வரும் வரை அங்கேயே நிற்க மனமின்றி
அவன் அறையை ஒட்டி இருந்த பால்கனிக்குள் சென்று புகுந்து கொண்டாள்.
ஒரு டேபிளும் கொஞ்சம் தள்ளி ஒரு ஊஞ்சலும் இருந்தது. அதில்
போய் உட்கார அவளுக்கு மனமில்லை. அதெல்லாம் அவனுடயதாம்! காரணம் சொன்னது அவள் மனது. வானில்
தோன்றிய நிலவு ஒரு பெண்ணாய் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அவளுக்கு.
நிலவு உண்மையில் தேய்வதும் இல்லை... மறைவதும் இல்லை...
ஆனால் மற்றவர் கண்களுக்கு அப்படித் தான் தெரியும்.
இதோ இப்பொழுது இவளைப் போல... அவள் உண்மையில் இந்த
திருமணத்தை விரும்பவே இல்லை. ஆனால் எல்லார் கண்களுக்கும் இப்பொழுது இவள் மிக
விரும்பி தன்னுடைய மண வாழ்க்கையில் முதல் படியை எடுத்து வைக்க வந்து இருக்கிறாள்.
எல்லாமே மற்றவர் எண்ணப்படி... ஆனால் வாழ்க்கை அவளது. அவள்
இஷ்டப்படி வாழ முடியாத வாழ்க்கை... மற்றவர் கை பொம்மையாக ஒரு வாழ்க்கை... இது
எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை என்று கத்த வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
“எனக்கும் இந்த இடம் ரொம்ப பிடிக்கும் சீதா” சித்தார்த்தின்
குரலில் சுயம் அடைந்தவள் மெல்ல தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தாள். ஆர்ம்ஸ்
நன்றாக வெளியே தெரியும்படி ஒரு பனியனும்,
முட்டி தொடும் ஷார்ட்சும் அணிந்து இருந்தான்.
‘அப்படியே ஹல்க் தான்’
“நீ ரொம்ப ஷை டைப்பா சீதா... பேசவே மாட்டேங்கிற” என்று
கேட்டபடி அவளுக்கு அருகில் வந்தவன் அவளது கைப்பிடித்து ஊஞ்சலுக்கு அழைத்து சென்று
அவளை உட்கார வைத்து அருகில் தானும் அமர்ந்து கொண்டான்.
இதுநாள்வரை அவன் ஒருவனுக்கு கச்சிதமாய் இருந்த அந்த ஊஞ்சல்
இப்பொழுது இருவருக்கு போதுமானதாய் இல்லாமல் போனது. நெருக்கிப் பிடித்தபடி தான் அமர
வேண்டி இருந்தது.
“ஊஞ்சல் சின்னதா இருக்கு போல... நாளைக்கு இரண்டு பேர்
உட்காருற மாதிரி பெருசு வாங்கிக்கலாம்” என்று சொன்னபடி அவளது தோளில் கை போட்டு தன்
நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான்.
சீதாவிடம் அதற்கும் பதில் இல்லை. மௌனம் மட்டுமே. ஆனால்
அவனுக்கு அருகில் அவள் அசௌகரியமாக இருக்கிறாள் என்பதை அவனால் உணர முடிந்தது.
“டென்ஷனா இருக்கியா என்ன?” அவள் முகம் பார்க்க முயன்றான்
அவன்.
“...”
“எனக்கும் கொஞ்சம் டென்ஷனா தான் இருக்கு...”
“...”
“ஏதாவது பதில் பேசேன் சீதா... நான் மட்டும் தனியா பேசிட்டு
இருக்க மாதிரி இருக்கு” என்று சொன்னவனின் குரலில் இருந்த அமைதி அவளுக்கு
ஆச்சரியமாக இருந்தது.
இதற்கு முன் சித்தார்த்தை அவள் பார்த்த எல்லா சந்தர்ப்பத்திலும்
அவனது கோபத்தை மட்டுமே அவள் கண்டிருக்கிறாள். அவர்களது திருமணம் முடிவான பொழுதும்
சரி... அதன் பிறகு அவனை சந்திக்க நேர்ந்த பொழுதும் சரி.. தாலி கட்டிய பிறகு அவளைப்
பார்த்த பார்வையிலும் சரி ஒரு துளி கூட சிநேகம் இருந்ததில்லை.
‘இதோ இந்த நிமிடமே உன்னை கொல்கிறேன் பார்’ என்ற பார்வை தான்
பார்த்து இருக்கிறான். அப்படிபட்டவனின் இந்த திடீர் மாற்றம் எதனால். மூன்று ஆண்டுகளாய் வீட்டுக்கு அழைத்து ஒரு போன்
கூட பேசி இராதவன் திடீர் என்று மனம் மாறியது எப்படி? தலையை பிய்த்துக் கொள்ளலாம்
போலிருந்தது அவளுக்கு.
“நாளைக்கு காலையில் ஹாஸ்பிடல் போய் உனக்கு செக்கப்
பண்ணிடலாம் சீதா. அதுக்கு அப்புறம் மத்ததை பார்த்துக்கலாம். எனக்கு என்னவோ நீ
ஹெல்தியா இருக்கிற மாதிரி தோணலை. கொஞ்சம் எனக்காக பொறுத்துப்ப தானே?” என்று கேட்டவன்
மெல்ல அவள் கன்னத்தை கரங்களில் ஏந்தி இருந்தான்.
அவள் கண்கள் எங்கெங்கோ அலைபாய்ந்து ஒரு வழியாய் அவன்
கண்களில் நிலைத்தது.
அவள் பயந்தபடி எதுவுமில்லை.
நட்பாய் ஒரு புன்னகை...
“இப்பவும் பேச மாட்டியா?” என்று கேட்டபடி மெல்ல அவள்
மூக்கோடு மூக்கு உரசினான்.
எழுந்து போக முயன்றவள் முடியாமல் திருதிருக்க அப்பொழுது
தான் கவனித்தாள்.. அவள் இப்பொழுது அவன் மடியில்... பேசிக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக
அவளை தன்னுடைய மடிக்கு கொண்டு வந்திருந்தான்.
அழுத்தமாய் இறுக்கி பிடிக்கவில்லை... ஆனால் அவனாய் விடாமல்
நகர்வது கூட சாத்தியமில்லை என்பது புரிந்து போனது அவளுக்கு.
“ஊஞ்சலில் அப்படி இடம் போதாம இருக்கிறது உனக்கு கொஞ்சம்
அன்கம்பர்ட்டபிளா இருக்கிற மாதிரி தோணுச்சு. அதான்... இப்போ ஓகே தானே?” உனக்காகத்
தான் இப்படி அமர வைத்து இருக்கிறேன் என்ற பாவனையில் அவன் பேச அவளோ வாயடைத்துப்
போனாள்.
“நீ எப்பவுமே இப்படித் தானா சீதா... ரொம்ப யார் கிட்டேயும்
பேச மாட்டியா? இல்லையே அப்பா கிட்டே பேசுவியே நான் பார்த்து இருக்கேனே...”என்றபடி
அவளை ஆராயும் பார்வை பார்த்தான்.
“நா... நான் தூங்கட்டுமா?” என்று தலை நிமிராமலே பேசியவளைப்
பார்த்தவனின் முகத்தில் அழகாய் ஒரு புன்னகை வந்தது.
“பாட்டி சொன்னதையே நினைச்சுக்கிட்டு இருக்கியா? நான் சொன்னத
கவனிக்கலையா? நாளைக்கு டாக்டர் கிட்டே போய் ஒரு செக்கப் பண்ணிட்டு வரலாம்னு
சொன்னேனே...அதுக்குப் பிறகு எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் சரியா? எனக்கும்
ரொம்ப அசதியா தான் இருக்கு... பிளைட்டில் வந்தது வேற... அதுக்கு அப்புறம் கொஞ்ச
நேரம் கூட ரெஸ்ட் எடுக்கவே இல்லை... இப்போ போய் தூங்கலாம் வா”
அவளை கீழே இறக்கி விட்டாலும் கைகளை கோர்த்தபடியே அறைக்குள்
நுழைந்தான் அவளுடன்.
பார்வையை உயர்த்தா விட்டாலும் படுக்கையில் இருந்த மலர்
அலங்காரம் அவள் கண்களில் பட்டது.
ஒரு பெண்ணாய் மெல்லியதோர் நடுக்கம் தோன்றத் தான் செய்தது.
அதை மறுப்பதற்கில்லை. தனி அறையில்... ஒரு ஆணுடன்.. அவர்கள் இருவருக்கும் திருமணம்
முடியும் முன் அவளுக்கும் கூட ஏதேதோ கற்பனைகளும், ஆசைகளும் இருக்கத்தான் செய்தது. இப்பொழுது
அதெல்லாம் ஒரு நொடி மனக்கண்ணில் வந்து மின்னி மறைய அவளையும் அறியாமல் அவள்
கன்னங்கள் சிவந்து போனது.
சட்டென்று நிதர்சனம் உறைக்க , சித்தார்த் பார்ப்பதற்குள்
முக உணர்வுகளை துடைத்து எறிந்தாள்.
“நான் கீழே படுத்துக்கிறேன்”
“பெட்லையே படுத்துக்கோ சீதா”
“இல்ல... இவ்வளவு பூ அலங்காரம் செஞ்சு இருக்காங்க.. அதுல
படுத்தா உடம்பு குத்தும்... எனக்கு தூக்கம் வராது” என்று சொன்னவளை வித்தியாசமாக
பார்த்தாலும் மறுத்து பேசவில்லை அவன்.
வெறும் தலையணையை மட்டும் எடுத்துக் கொண்டு கீழே படுக்கப்
போனவளை தடுத்தவன் , “ இப்படி வெறும் தரையில் படுத்தா நைட் ரொம்ப கஷ்டமா இருக்கும்
சீதா... டைல்ஸ் போட்டுருக்கு.. ஏசி ரூம் வேற” என்றவன் அவளுக்காக ஒரு போர்வையை கீழே
விரித்து படுக்க வைத்தவன் இன்னொரு போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டு
படுக்க வைத்தான்.
முழித்து இருந்தால் மேலும் ஏதேனும் பேசுவானோ என்று அஞ்சி
போர்வையை முகம் வரை இழுத்து போர்த்திக் கொண்டாள்.
அவன் அவளுக்கு அருகிலேயே இன்னமும் நிற்பதை அவளால் உணர
முடிந்தது.
‘எதுக்கு நிற்கிறான்?... போய் தூங்கித் தொலைய வேண்டியது
தானே’ எரிச்சல் வந்தது அவளுக்கு.
“இனி தினமும் இங்கே தான் இருந்தாகணும் சீதா...”
‘இதை எதுக்கு இப்போ சொல்றான்?’
“அந்த போட்டோவை இந்த ரூமில் இருந்து கழட்டி வைக்கும் எண்ணம்
எதுவும் எனக்கில்லை. இப்படி தரையைப் பார்த்தே பேசாம அந்த போட்டோவை... அதுல
இருக்கிற என்னை ... ஏத்துக்க பழகிக்கோ... ஏன்னா அது உன் புருசன் ரொம்ப ஆசைப்பட்டு...
ரசிச்சு ... நேர்மையான முறையில்
கஷ்டப்பட்டு அடைஞ்ச ஒரு விஷயம்... நான் ரொம்பவே பெருமையா நினைக்கிற விஷயம்... என்
பொண்டாட்டியும் அதை அப்படித் தான் பார்க்கணும்னு நினைக்கிறேன்.” என்று சொன்னவன்
மெல்ல நகர்ந்து கட்டிலுக்கு சென்று விட இவளின் மனமோ சிடுசிடுத்தது.
‘ரசிச்ச்ச்சு... பார்க்கணுமாமே... எது அந்த கன்றாவி போட்டோவையா?
ஒரு பொண்ணு கிட்டே இப்படித் தான் பேசுவாங்களா?’ என்று திட்டித் தீர்த்தவள் மறந்து
போனாள். அவள் இப்பொழுது அவன் மனைவி என்பதை.

கருத்துரையிடுக