மின்மினியின் மின்சாரக் காதலன் Tamil Novels 37


 

அத்தியாயம் 37

விஷயம் அறிந்த சிபியின் ஆட்கள் அனைவரும் கொஞ்சம் பக்பக் மனதுடன் அருந்ததியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதோ அமைச்சரை நெருங்கி விட்டாள். அடுத்து அவரை நெருங்கி சென்று குழந்தையோடு பரிசை வாங்கப் போவது அவள் தான். சிபியின் கண்களில் ஒரு நொடி கொடூர பாவனை ஒன்று தோன்றி மறைந்தது. எதையோ செய்வதற்கு அவன் கரங்கள் துணிந்த வேளையில் தான் யாருமே எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தேறியது.

மேடையில் இருந்த அருந்ததி மயங்கி விழுந்தாள். சட்டென அந்த இடமே பரபரப்பாக பெண் காவலர்கள் அவளை சூழ்ந்து கொண்டு கைத் தாங்கலாக அழைத்து சென்றார்கள். அதே ஹோட்டலிலேயே ஒரு அறைக்குள் அவளை அழைத்து செல்ல... பின்னோடு சென்று பார்க்க முடியாமல் அங்கேயே நின்று விட்டான் சிபி.

‘என்ன கேடு வந்துச்சு இவளுக்கு? இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு மயங்கி தொலைச்சு இருக்க கூடாதா?’  அவளை திட்டித் தீர்த்தான்.

அவனது ஆட்களில் ஒருவனை அங்கே அனுப்பி வைத்து என்னவென்று விசாரித்து வர சொல்ல, அவனோ போன வேகத்திலேயே திரும்பி வந்தான்.

“பாஸ் அங்கே போலீஸும், பத்திரிக்கைக்காரங்களும் குமிஞ்சு கிடக்குறாங்க... அவங்களை எல்லாம் தாண்டி உள்ளே போகவே முடியல.”

“முட்டாள்.. அங்கே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டு கூட வர முடியாதா?”

“யாரோ டாக்டரை வர சொல்லி செக் பண்ணிட்டு இருக்காங்க பாஸ்...” என்று சொல்ல அருகில் இருந்த மற்றொருவனை அழைத்தான்.

“டேய்! நீ போய் என்ன நிலவரம்னு பார்த்துட்டு வா. ஒரே ஆள் போனா சந்தேகம் வரலாம்.”

அவனும் போய் சில நிமிடங்கள் கழித்து வந்து சேர்ந்தான்.

“பாஸ்... அந்த பொண்ணு பசி மயக்கத்துல மயங்கி விழுந்துடுச்சாம்.. டாக்டர் குளுக்கோஸ் ஏத்தி விட்டு இருக்கார்.”

“சை!... டேய் அவ நம்ம கிட்டே வந்த பிறகு அவளுக்கு சாப்பிட ஏதாவது கொடுத்தீங்களா இல்லையா?”

“பாஸ்.. நம்மளே அவளை கொல்றதுக்குத் தானே கடத்திட்டு வந்தோம். அப்புறம் எதுக்கு சாப்பாடெல்லாம்?”

“முட்டாள்... அவ ஒழுங்கா சாப்பிடலைனா மயங்கி தொலைச்சிடுவா...சரி இப்போ நீ போய் அவ பக்கத்துலேயே இரு”

“பாஸ்... நானா?” எச்சில் விழுங்கினான் அவன்.

நீயே தான் செய்யணும். சொல்றத வாய மூடிட்டு செய்டாஎன்ற கடுப்பாக கத்தினான் சிபி. மயக்கம் தெளிந்து அவள் உடனே எழா விட்டால் மொத்த திட்டமும் பாழாகி விடுமே என்ற எண்ணமே அவனை  ஆத்திரத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது.

ஓநாய் போல பற்களை கடித்துக் கொண்டே கைகளை பிசைந்தபடி குறுக்கும் மறுக்கும் நடந்தான் சிபி. நேரம் கடந்து கொண்டே இருந்தது. இன்னும் சில நிமிடங்களில் விழா முடிந்து அமைச்சர் உட்பட எல்லோரும் கிளம்பி விடுவார்கள். அதற்குள் ஏதாவது செய்தாக வேண்டும். என்று எண்ணியவன் இந்த முறை தன்னுடைய ஆட்களை நம்பாமல் அவனே அருந்ததி இருக்கும் அறையை நோக்கி சென்றான்.

மிக சரியாக அந்த நேரம் நர்ஸ் ஒருவர் அறையை விட்டு வெளியே வர, அவருக்கு பணத்தை நீட்டி தனக்கு வேண்டிய தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டான்.

“சார்... சாதாரண மயக்கம் தான். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க”

“சரியா எவ்வளவு நேரம் ஆகலாம்?”

“மிஞ்சிப்போனால் ஒரு கால் மணி நேரம்.”

“சூப்பர்... நீங்க போகலாம்” என்றவன் தன்னுடைய போனை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

“என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது. அமைச்சர் இன்னும் அரைமணி நேரம் இங்கே இருந்தாகணும்.”

“...”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. எப்படியாவது இருக்க வை...”

“...”

“இந்த மாதிரி எல்லாம் கேட்பேன்னு தெரியாமலா என்கிட்டே கை நீட்டி பணம் வாங்கின... சொல்றதை மூடிட்டு  செய்... இல்லேன்னா குடும்பத்தோட அழிச்சிடுவேன்” என்று மிரட்ட... எதிர்முனையில் அவனது வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாமல் இருந்ததே அவனுக்கு போதுமானதாக இருந்தது.

மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்து  விழா நடக்கும் இடத்திற்கு வந்தவன் அருந்ததியை நிறுத்தாமல் திட்டித் தீர்த்தான்.

“சை! சனியன்... இந்த நேரத்துலயா மயங்கி விழணும். இவளால மொத்த திட்டமும் வீணாக பார்த்துச்சு. நல்லவேளை என்னோட புத்திசாலி தனத்தால் தப்பிச்சேன். இல்லேன்னா இத்தனை வருச முயற்சி எல்லாம் தோல்வியில் முடிஞ்சு இருக்கும்”

அமைச்சர் பேச வரும் நேரம்... கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் முதல் எல்லோரும் விழா நடக்கும் இடத்தை நெருங்கி , கத்தி ஆரவாரம் செய்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அந்த நேரத்தில் ஏற்பட்ட ஜன நெருக்கடியில் தெரியாமல் நடுவில் மாட்டிக் கொண்ட சிபி கும்பலில் நன்றாக மாட்டிக் கொண்டு வெளியே வர முடியாத அளவிற்கு சிக்கிக் கொண்டான்.

சுற்றிலும் யாருமே அவனை கவனிக்காமல் கத்தி கூச்சல் போட்டுக் கொண்டிருக்க, வெளியேற முயன்று கொண்டிருந்த சிபியின் முயற்சிகள் அனைத்தும் படுதோல்வி அடைந்தது.

பத்து நிமிடங்கள் வெகுவாக போராடி அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறினான் சிபி. அணிந்திருந்த உடை எல்லாம் கசங்கி, தலை கலைந்து நலுங்கிய தோற்றத்துடன் இருந்தவன் எரிச்சலுடன் தன்னை சரி செய்து கொள்ள பாத்ரூம் நோக்கி சென்றான்.

சில நிமிடங்கள் கழித்து இவன் வெளியே வரவும், அருந்ததி  அந்த ஹாலுக்குள் வரவும் சரியாக இருக்க, ஏற்கனவே நடந்த நிகழ்வுகளால் கோபத்தின் உச்சியில் இருந்தவன் தன்னை மறந்து அருந்ததியை நெருங்கி பட்டாசாய் பொரியத் தொடங்கினான்.

“அறிவு இருக்கா உனக்கு? மயங்க உனக்கு வேற நேரமே கிடைக்கலையா? நிஜமாவே மயங்கி விழுந்தியா இல்ல மயங்கி விழுந்தா என்கிட்டே இருந்து தப்பிச்சிடலாம்னு நினைச்சியா?”

“அதெப்படி வேணும்னே மயங்கி விழுவாங்க. அப்படியே நான் மயங்கி விழுந்தா நீ அப்படியே விட்டுடுவியா என்னை... எங்க இரண்டு பேர் வீட்டுப் பெரியவங்க எல்லாரையும் நீ பிடிச்சு வச்சு இருக்கும் பொழுது நான் எதுக்காக அப்படி ரிஸ்க் எடுக்கப் போறேன். நான் ஏதாவது செய்யப் போய் பதிலுக்கு நீ அவங்களை ஏதாவது செஞ்சுடுவியே”

“கரெக்ட்.”

“இப்போ நான் என்ன செய்யணும்?”

“என்ன குரல்ல கொஞ்சம் கூட பயமே இல்லை.” என்றான் அவளை உற்று நோக்கியபடி.

“இப்போ நான் பயந்து என்ன ஆகப் போகுது.. இப்போ என்ன செய்யணும் நான்? உடம்புல நீ கட்டி இருக்கிற இந்த பாமோட நான் மேடைக்கு ஏறி அமைச்சர் பக்கத்துல போகணும். அப்போ வந்து நீ எல்லாரையும்  காப்பாத்தி ஹீரோ ஆகணும். என்னை எல்லாரும் அசிங்கமா பேசி என்னை ஜெயிலில் தள்ளணும். அதானே.. நான் முன்னாடி போறேன்.” என்றவள் அவனது பதிலை எதிர்பாராமல் வேகமாக செல்ல சிபிக்கு மனதில் ஏதோ தவறாக பட்டது.

“நில்லு” அவளுக்கு முன்பாக கைகளை நீட்டியவன் அவளது முகத்தையே ஆராய்ச்சியாய் பார்த்தான்.

“எதுக்கு இப்படி பார்க்கிற?”

“மறுபடியும் மயங்கி விழுந்துட மாட்டியே...”

“சீ!...பே!” என்று அவள் ஒற்றை எழுத்தில் திட்டி விட்டு நகர, சிபிக்கு உறுதியாக தெரிந்து போனது எதுவோ சரியில்லை என்று. என்ன ஏது என்று யோசிக்கும் முன்னரே... அந்த இடம் பரபரப்பாக மாறி அமைச்சர் உள்ளிட்ட அத்தனை பொது மக்களையும் வேகமாக அங்கிருந்து வெளியேற்றினார்கள் போலீஸ்.

கூட்டத்தில் அருந்ததி எங்கே போனாள் என்று தெரியாமல் சிபியும் அவனது ஆட்களும் குழப்பத்துடன் ஒரு ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டார்கள். எல்லோரும் வெளியேறி அந்த இடமே அமைதியாகி விட, சிபி கோபத்தில் பற்களை கடித்துக் கொண்டே அவன் ஆட்களைப் பார்க்க, அவர்கள் பரபரப்புடன் அருந்ததியை தேட ஆரம்பித்தார்கள்.

ஏதோ நினைவு வந்தவனாக சிபி அங்கே காவலுக்கு வைத்திருக்கும் ஆட்களுக்கு அழைக்க எண்ணி, தன்னுடைய மொபைலை தேட, அவனது பாக்கெட்டில் அது இல்லை. சிபியின் முகத்தில் அதிர்வு நீங்கி மெல்ல சிரிப்பு வந்தது.

“என்ன ஹீரோ சார்... பொண்டாட்டியை காப்பாத்த ஓடி வந்துட்டீங்க போல..” என்று நக்கலுடன் இதழ் வளைத்து கேட்க விஸ்வரூப சிவனாய் அங்கே வந்து நின்றான் அக்னி. மொத்த போலீஸும் அவனுக்கு பின்னால். அவனது கை வளைவில் பாதுகாப்பாய் அருந்ததி.

“பின்னே நீ செய்றது எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு சும்மா வேடிக்கை பார்ப்பேன்னு நினைச்சியா?” அங்கே இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் இன்னமும் அருந்ததியை பிடித்திருந்த பிடியை தளர்த்தாமல் அவளையும் தனக்கு அருகில் இருத்திக் கொண்டான்.

“ரொம்ப வருசம் கஷ்டப்பட்டு பார்த்து பார்த்து போட்ட பிளான். எங்கே என்னோட கவனம் சிதறுச்சுனு தெரியலை. எப்படி தப்பிச்சே?” என்று கேட்டவன் சாவகாசமாய் அவனது கோட்டில் இருந்த காஸ்ட்லியான மினி லிக்கர் பாட்டிலை எடுத்து ஸ்டைலாக ஒரு மிடறு அருந்தி விட்டு அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான்.

அவன் முகத்தில் ஆரம்பத்தில் அதிர்ச்சி தெரிந்தாலும் உடனே அதை மறைத்து சமாளித்துக் கொண்டதையும், போலீஸ் வந்தாயிற்று இனி தப்பிக்க வழியே இல்லை என்று தெரிந்தும் அவனிடம் பயம் இல்லாமல் இருப்பதையும் பார்த்தவன் அவனை இன்னும் அதிகமாக கூர்ந்து நோக்கினான்.

“சும்மா சொல்லுங்க ஹீரோ சார். நான் இனி என்ன செஞ்சிடப் போறேன்? எப்படி தப்பிச்சீங்க?”

“நீமோ” என்றான் ஒற்றை சொல்லாக...

“ஷிட்... அந்த நாயை மறந்துட்டேனே...”

“ஆமா நீ மறந்து தான் போய்ட்ட... அவனும் எங்க கூடவே தான் பிளைனில் வந்தான். வெளியே உன்னோட ஆட்களைப் பார்த்ததுமே நான் கண்ணனுக்கு சிக்னல் காட்டிட்டேன். அவனும் நீமோவை தனியா அவிழ்த்து... அவன் கழுத்துல வீடியோ ரெக்கார்டர் வித் ஜிபிசை(video recorder with GPS) மாட்டி விட்டான்.

அந்த மெஷின் ஆன் ஆனதுமே என்னோட கார்ட்ஸ்க்கு அலர்ட் சிக்னல் போய்டும். நீமோ எங்க கார் பின்னாடியே வந்து நாங்க இருக்கிற இடத்தை அவங்களுக்கு காட்டி கொடுத்துட்டான். என்னோட டீமும், போலீஸும் அந்த இடத்தை சுத்தி வளைச்சு எங்களை விடுவிச்சுட்டாங்க.”

“ஸோ.. உனக்கு வேலை இல்லாம போச்சு.. எல்லாரையும் காப்பாத்தி உன்னோட நாய் ஹீரோ ஆகிடுச்சு.”

“அவனுக்கு ட்ரைனிங் கொடுத்ததே நான் தான்.”

“அப்போ உன் பொண்டாட்டி மயங்கி விழுந்தது?”

“எல்லாமே செட்டப் தான். பாம் ரிமூவ் செஞ்சு டீ ஆக்டிவேட் செய்ய எங்களுக்கு கொஞ்சம் டைம் வேணும்ல. அதுவரைக்கும் உனக்கும் எந்த சந்தேகமும் வந்துடக் கூடாதே...அதான்... இப்போ எல்லாமே முடிஞ்சுடுச்சு. உன்னோட ஆட்டத்தையும் சேர்த்து”அக்னியின் கண்கள் அவன் முக பாவனைகளையே கூர்ந்து அளந்து கொண்டிருந்தது.

“இருந்தும் என்ன பிரயோஜனம்.. இப்பவும் நீ முழு கிணறை தாண்டலை.”

“புரியல...”

“எதுக்கும் ஒரு சேப்டிக்கு இருக்கட்டும்னு இந்த ஹோட்டலையே இன்னொரு பாமும் வைக்க சொன்னேன். அதை நீங்க இன்னும் எடுக்கலை போல” நக்கலாய் சொன்னவன் இதழ் வளைத்து கண்களில் குரூரம் மின்ன சிரித்தான்.

“நீ பொய் சொல்ற... அப்படியே இங்கே பாம் இருந்தாலும் நீயும் இங்கே தானே இருக்க.. செத்தா நீயும் தான் சாவே”

“அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை. எனக்கு தேவை வெற்றி மட்டும் தான்” என்றவன் அங்கிருந்த அனைவரையும் மிதப்பாய் பார்த்து வைத்தான்.

“இங்கே இருந்து ஒருத்தரும் நகரக் கூடாது. மீறி நகர்ந்தா பாமை வெடிக்க வச்சிடுவேன். நீ புத்திசாலி தான் அக்னி. அருந்ததி உடம்புல கட்டி இருந்த பாமை வெடிக்க வைக்கிறதுக்கு என்னோட போன் மூலமா மட்டும் தான் முடியும்னு தெரிஞ்சுக்கிட்டு எப்படியோ கூட்டத்துல  அதை தூக்கிட்ட... ஆனா என்னை ஜெயிக்க அது மட்டும் போதாது அக்னி...இந்த பாம் நான் நினைச்சா இந்த இடத்துல உட்கார்ந்துகிட்டே வெடிக்க வைக்க முடியும். என்னோட புத்திக்கு முன்னாடி நீ எல்லாம் சின்ன பையன்டா”

“....”

“இப்போ உங்களுக்கு வேற வழியே இல்லை... அருந்ததியை என்னோட அனுப்பி வைங்க. இல்லேன்னா பாம் வெடிச்சிடும்”

“முடியவே முடியாது. செத்தாலும் அவளை உன்கிட்டே அனுப்ப மாட்டேன்.” பயத்தில் இருந்த அருந்ததியை தன்னுடைய கைகளால் இறுக பற்றிக் கொண்டான் அக்னி. கோழிக் குஞ்சை பருந்திடம் இருந்து காக்கும் தாய் போல.

“என்ன போலீஸ் ஆபிசர்ஸ்.. எல்லாரும் அப்படியே சும்மா இருக்கீங்க.. அந்தாளு கிட்டே எடுத்து சொல்லுங்க. எப்படியும் என்னோட இந்த திட்டம் தோல்வி தான். இனி என்னால என்னோட பழைய திட்டத்தை செயல்படுத்த முடியாது. புதுசா ஏதாவது செஞ்சு தான் இவ குடும்பத்தை நான் பழி வாங்கணும். அதுக்கு இவ வேணும். அனுப்பி வைக்க சொல்லுங்க. நான் கொஞ்சம் பாதுகாப்பான இடத்துக்குப் போன பிறகு இவளை திருப்பி அனுப்பி வச்சிடறேன்”என்று சொல்ல, போலீஸ் அருந்ததியின் புறம் திரும்ப அக்னியோ அவளை தன்னுடைய முதுகுப் பக்கம் கொண்டு வந்து அவளை மறைத்தது போல நின்று கொண்டான்.

அந்த நேரம் அங்கே இருந்த தூணிற்கு பின்புறம் மறைவாக நின்று கொண்டிருந்த தாராவை கவனித்து விட்ட அக்னி, தன்னுடைய ஆட்களுக்கு கண்ணைக் காட்ட அவளை அங்கே இழுத்து வந்தார்கள் அவனது ஆட்கள்.

“தா.. தாரா...”

“சிபி ப்ளீஸ்! என்னையும் உங்களோடவே இங்கே இருந்து கூட்டிட்டு போய்டுங்க. எனக்கு பயமா இருக்கு. இந்த பழி வாங்குறது எல்லாம் வேண்டாம். நான் வீட்டுக்கு போகணும். எனக்கு பயமா இருக்கு.” சிபியின் காலில் விழாத குறையாக கதறினாள் தாரா.

“நீ வேற இங்கே என்ன பிரச்சினைனே தெரியாம படுத்தாதே தாரா... முதல்ல இந்த இடத்தை காலி பண்ணு நீ.. வெளியே போய் நில்லு. இதெல்லாம் நான் தான் செஞ்சேன். உன்னை யாரும் எதுக்க்காகவும் பிடிக்க மாட்டாங்க. நீ போ”

“இல்ல சிபி.. பின்னாடி போலீஸ் விசாரிக்கும் பொழுது எப்படியும் எனக்கு இதுல தொடர்பு இருக்குனு கண்டுபிடிச்சுடுவாங்க...எனக்கு பயமா இருக்கு”

“எல்லாத்தையும் நான் மட்டும் தான் தனியா செஞ்சேன்.. உனக்கு இதுல எந்த சம்பந்தமும் இல்லைன்னு நான் சொல்லிட்டா அப்புறம் எந்த சட்டமும் உன்னை ஒண்ணும் செய்யாது. நீ விலகிப் போ” என்று அவளை துரிதப்படுத்தினான் சிபி.

 

 

 

Post a Comment

புதியது பழையவை