மின்மினியின் மின்சாரக் காதலன் Tamil Novels 38

  

 

 


அத்தியாயம் 38

கோர்டில் இருந்து அழுது அழுது முகம் எல்லாம் வீங்கிப் போன நிலையில் காருக்குள் சோகமாக வந்து அமர்ந்த மனைவியை பார்க்கவே வருத்தமாக இருந்தது அக்னி புத்திரனுக்கு. இருந்தும் அவன் என்ன செய்து விட முடியும் இந்த  விஷயத்தில்.

“வீட்டுக்கு போலாமா?”

“வேண்டாம். இப்போ அங்கே போனா சரி வராது. வேற எங்கேயாவது போகலாம்” என்றவளின் பார்வை சாலையில் எங்கோ வெறித்த வண்ணம் இருந்தது.

“பீச் போகலாம்” என்றவன் காரை மிதமான வேகத்தில் ஓட்டி பீச்சிற்கு அவளை அழைத்து சென்றான்.

அவள் அலைகளை வெறித்து பார்த்துக் கொண்டிருக்க, அவளின் அருகில் மணலில் அமர்ந்தவன் அவளை தலையை மெல்ல தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டான்.

சில நொடிகள் அமைதியாக இருந்தவள் தாங்க மாட்டாமல் கதறி அழுதாள் அருந்ததி.

“என்னால இப்பவும் நம்ப முடியலை...”அழுகையினூடே அவள் விசும்பிக் கொண்டே பேச, அக்னியின் கரங்கள் அவள் தலையை வருடுவதை நிறுத்தவில்லை.

“ஆரம்பத்துல நான் கூட ரொம்ப யோசிச்சேன். உங்க  தாத்தா மேல கோபம் கூட வந்துச்சு. எதுக்காக நம்ம இரண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொன்னார்னு. ஆனா இப்போ புரியுது” அவனும் மனதை திறந்து பேசினான்.

“அப்பா செஞ்சது ரொம்ப பெரிய பாவம் தான். ஆனா அது எதுவுமே எங்க வீட்டுல யாருக்குமே தெரியாது. என்னை நீங்க நம்பறீங்க தானே?” அவள் கண்களில் அத்தனை பரிதவிப்பு.

“பெத்த தகப்பன் கிட்டேயும், கட்டின மனைவி கிட்டேயும் இரட்டை வேசம் போட்டவர் உங்க அப்பா. அவங்களாலேயே அவரைப் பத்தி கண்டுபிடிக்க முடியலை. அப்படி இருக்கும் பொழுது உனக்கு எப்படி தெரிஞ்சு இருக்கும்?” அவளை சமாதானம் செய்தான் அக்னி.

“என்கிட்டே எப்பவுமே அவர் ரொம்ப பாசமா தான் இருந்து இருக்கார். ஒரு நாள் கூட கோபமா பேசினதில்லை. அவரா இப்படி?”

“மனுசங்க எப்பவும் அப்படித்தான். எப்போ அவங்களுக்குள்ளே இருக்கிற மிருகம் வெளியே வரும்னு யாருக்கும் தெரியாது. ஒருவேளை இந்த சிபி பிரச்சினை எதுவும் செய்யாமல் இருந்து இருந்தால் அவர் எப்பவுமே நல்ல பாசமான அப்பாவா மட்டுமே இருந்து இருப்பார். ஆனா விதி... எல்லாத்தையும் மாத்திடுச்சு”என்றான் பெருமூச்சுடன்.

இருவரின் நினைவுகளும் அவர்கள் எல்லோரும் கடத்தப்பட்ட அன்றைய தினத்திற்கு சென்றது.

தாராவை அங்கே பார்த்ததும் அதுநேரம் வரை இருந்த நிலை மாறி சிபியின் முகம் மெல்ல பதட்டம் அடையத் தொடங்கியது.

“தாரா... உன்னை தான் நான் சொல்ற வரை உள்ளே வர வேண்டாம்னு சொன்னேன்ல. இப்போ ஏன் இங்கே வந்த?”

“எனக்கு பயமா இருக்கு சிபி.. என்னையும் போலீஸ் பிடிச்சுட்டு போயிடுவாங்களா?”

“முட்டாள் மாதிரி பேசி.. உன்னை நீயே காட்டிக்காதே தாரா. முதல்ல வெளியே போ”

“நீ என்ன சொன்னாலும் அவ இங்கே இருந்து போக மாட்டா... நான் தான் அவளை இங்கே கூட்டிட்டு வந்து இருக்கேன்.” என்று சொன்னபடி கண்ணன் அங்கே வந்து நிற்க, சிபி மொத்தமாய் தளர்ந்து போனான்.

“என்ன விஷயம் கண்ணா?”

“அது ஒண்ணுமில்லை ப்ரோ... வில்லன் சார் அந்த பொண்ணு கிட்டயும் ஒரு பாமை கொடுத்து வச்சிருந்தார். அதை நான் கண்டுபிடிச்சு எடுத்துட்டேன்.”

“வாட் பாமா?” தாரா அதிர்ந்து போய் நெஞ்சில் கை வைத்துக் கொண்டாள்.

“பின்னே இவன் உங்களுக்கு பரிசா கொடுப்பான்? இவன் உங்களுக்கு தனியா ஒரு போன் கொடுத்தானே... அதுக்குள்ளே தான் பாம் இருந்துச்சு. இப்போ தான் அதையும் பாம் ஸ்க்வாடு ரொம்ப பாதுகாப்பா எடுத்துட்டு போனாங்க.” என்று சொல்லி முடிக்க பாய்ந்து சிபியின் சட்டையை பிடித்தாள் தாரா.

“பாவி.. உன் கூட கூட்டு சேர்ந்ததுக்கு என்னையும் கொல்லப் பார்த்தியா நீ” அவனை போட்டு உலுக்க, நினைத்தது எதுவுமே நடக்காமல் போன ஆத்திரத்தில் அவளை கீழே தள்ளி அவளை உதைக்கப் போனவனை போலீஸ் வந்து இழுத்து செல்ல, கண்ணனிடம் நிம்மதி பெருமூச்சு எழுந்தது.

“ஒரு வழியா எல்லா பிரச்சினையும் முடிஞ்சது...”

“இன்னும் இல்ல கண்ணா” என்று சொன்ன அக்னி, போலீஸ் வேனில் விலங்குடன் அமர்ந்திருந்த சிபியின் அருகில் அமர்ந்து கொண்டான்.

“சார்... எனக்கு இவர் கிட்டே ஒரு அஞ்சு நிமிசம் தனியா பேசணும். வித் யுவர் பர்மிஷன்” என்று சொல்ல, அவன் மீதிருந்த மரியாதையின் காரணமாக அவர்களுக்கு பேச அனுமதி அளித்து விட்டு எல்லோரும் வெளியேறினார்கள்.

சிபியின் முகம் தோல்வி அடைந்த விரக்தியில் இருந்தது.

“சிபி...”

“....”

“சிபி...”

“என்னடா என்னை ஜெயிச்சுட்டேன்னு பெருமையா மார் தட்டி சொல்லிட்டு போகலாம்னு வந்தியா” விட்டால் அக்னியை கொன்று விடும் ஆவேசம் அவன் குரலில்.

“சில விஷயங்கள் உங்க மூலமா தெரிய வந்தா உங்க பக்கம் இருக்கிற உண்மையும், நியாயமும் எனக்குத் தெரிய வரும். ஏன்னா இந்த விஷயம் பத்தி எல்லா உண்மையும் தெரிஞ்சது நீங்களும் என்னோட மாம... ஹுக்கும்.. அருந்ததியின் அப்பாவும் மட்டும் தான். எனக்கு அவர் உண்மையை சொல்வார்னு நம்பிக்கை இல்லை. அதனால தான் உங்க கிட்டே கேட்கிறேன். ஒருவேளை நீங்க சொல்லலைனாலும் என்னால வெளியே விசாரிச்சு தெரிஞ்சுக்க முடியும். ஆனா அதுல எந்த அளவுக்கு உண்மை தெரிய வரும்னு எனக்குத் தெரியலை. அதனால தான் உங்க கிட்டே கேட்கிறேன். சொல்ல விருப்பம் இருந்தா சொல்லுங்க. இல்லேன்னா நான் பார்த்துக்கிறேன்”

அக்னி நெருப்பாய் காய்வான் என்று எதிர்பார்த்து இருக்க, அவனோ இவன் தரப்பு நியாயத்தை கேட்க வேண்டி பொறுமையாய் அவனிடம் பேசினான். அவனது அந்த மாற்றம் சிபியை கொஞ்சம் அசைத்தது.

“ஏற்கனவே என்னோட அம்மா, அப்பா விஷயத்துல நான் தப்பு பண்ணிட்டேன் சிபி. அதே தப்பை மறுபடியும் செய்ய விரும்பல. அதனால தான் உன்கிட்டே வந்து பேசுறேன்”

“…”

நீங்க சொன்னா தான் சிபி எனக்கு சில விஷயங்கள் தெரிய வரும்”

“என்னடா என் வாயில இருந்தே உண்மையை சொல்ல வச்சு கோர்ட்டில் சாட்சி சொல்ல போறியா? இந்த கேஸ் எல்லாம் எனக்கு தூசு மாதிரி உடைச்சுட்டு நாளைக்கே வெளியே வந்துடுவேன்”

“அது எனக்கும் தெரியும் சிபி.. என்னோட நோக்கம் உண்மையை தெரிஞ்சுக்கிறது மட்டும் தான். வேற எதுவும் இல்ல... ஆரம்பத்துல இருந்தே உங்க கோபம் முழுக்க அருந்ததி அப்பா மேல மட்டும் தான் இருந்தது. என்ன காரணம்?”

“என்னோட குடும்பமே சிதைஞ்சு இன்னிக்கு யாருமே இல்லாம நான் அனாதையா இருக்கக் காரணம் அந்தாளு மட்டும் தான்”

“நீங்க...அவருக்கு?”

“சொன்னா நம்புவியா?”

“சொந்தமா?...”

“அவருக்கு மச்சான்.. அதாவது அவர் பொண்டாட்டியோட தம்பி”

“வாட்... நீங்க அருந்ததியோட அம்மா கோகிலாவின் தம்பியா?” நம்ப முடியாத அதிர்ச்சி அக்னியிடம்

“ஹா ஹா.. நான் அவருக்கு மச்சான்... அவர் பொண்டாட்டியோட தம்பி... ஆனா அந்த பொண்டாட்டி கோகிலா இல்ல... என்னோட அக்கா பேரு அம்பிகா.” உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றான் அக்னி.

“நம்ப முடியலை போல...”

“உங்களைப் பார்த்தா நல்ல வசதியா இருக்கிற மாதிரி இருக்கே..அப்புறம் எப்படி உங்க அக்கா இரண்டாம் தாரமா?...” கேட்க வந்ததை மேற்கொண்டு கேட்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தி விட்டான் அக்னி.

“ஏய்!... சிபி கண்கள் சிவக்க ஆத்திரத்துடன் அவனது அவனது சட்டையை பிடிக்க போக, அக்னியோ எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாய் நின்றான்.

அவனது அமைதி ஏதோ ஒருவிதத்தில் சிபியை தாக்க... அப்படியே தளர்ந்து போய் அமர்ந்து விட்டான்.

“என் அக்கா ஒன்னும் இரண்டாம் தாரமில்லை. உங்க மாமியார் அவரோட வாழ்க்கையில் வர்றதுக்கு முன்னாடியே என்னோட அக்கா அவரை விரும்பினாங்க.. இன்னும் சொல்லப் போனா அந்தாளு தான் எங்க அக்கா பின்னாடியே சுத்தி... அவங்களை காதலிச்சார்.”

“அப்புறம் ஏன் அவங்க கல்யாணம் பண்ணலை?”

“அக்கா ஜாதகத்துல ஏதோ தோஷம் இருக்குனு சொல்லி எங்க வீட்டு ஆட்கள் அவங்க கல்யாணத்தை ஒத்துக்கலை. கல்யாணம் முடிஞ்ச ஒரே வாரத்துல புருசன் இறந்துடுவார்னு சொன்னதால அவங்க வீட்டு ஆட்களும் பயந்துட்டு அந்த கல்யாணத்தைப் பத்தி மேற்கொண்டு பேசல. அதுக்கு அப்புறம் தான் சிவநேசனோட அப்பா அவருக்கு கோகிலாவை கல்யாணம் பண்ணி வச்சார்”

“அப்போ உங்க அக்கா...”

“அவ ஒரு மடச்சி.. அவரையே நினைச்சுக்கிட்டு வேற கல்யாணமே பண்ணிக்கலை”

“அப்புறம்...”

“அக்காவுக்கு இந்த ஊர்ல இருக்கவே பிடிக்கலை... தனியா வெளியூரில் போய் தங்கிட்டா...”

“தனியாவா? நீங்க யாரும் கூட போகலையா?”

“அப்போ நான் சின்ன பையன்... எங்க வீட்டிலையும் அம்மா மட்டும் தான். அவங்களையும் அவ கூட வர வேண்டாம்னு சொல்லிட்டு பெங்களூரில் இருந்த எங்களோட வீட்டுக்கு போய்ட்டா.. துணைக்கு எங்க வீட்டு வேலையாட்கள் மட்டும் இருந்தாங்க”

“...”

“அங்கே போய் மன மாற்றத்துக்காக புதுசா ஒரு தொழில் தொடங்கினாங்க... அப்படியே கொஞ்ச நாள் போச்சு. அந்தாளை மறுபடியும் பார்க்கிற வரை...

ஒருநாள் அந்த ஆள் அந்த ஊருக்கு வந்த பொழுது அவங்களை பார்த்து இருக்கார். அவங்களைப் பார்த்ததுமே ஓடி வந்து அவங்ககிட்டே பேசி... மன்னிப்பு கேட்டு இருக்கார். அதுக்கு அப்புறம் தினமும் வந்து அவங்களை பொது இடத்துல சந்திச்சு பேசி... கொஞ்சம் கொஞ்சமா அவங்க கிட்டே நெருங்கி இருக்கார்.

அவரால அக்காவை விட முடியலை. அக்காவுக்கு கல்யாணம் ஆகாம இருந்தது அவருக்கு வசதியா போச்சு. கொஞ்சம் கொஞ்சமா அக்காவை தன் பக்கம் இழுக்க ஆரம்பிச்சார்.

அக்காவுக்கு நல்லாத் தெரியும். அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சு... ஒரு பெண் குழந்தை இருக்கு எல்லாமே தெரியும். ஆனா காதலிச்ச மனுசன்... மறுபடி மறுபடி தேடி வந்து பேசினதுல மனசு தடுமாறிட்டாங்க. கோகிலாவை விவாகரத்து செய்யவும் அவர் விரும்பல. ஒருவேளை அப்படி செஞ்சா அவங்க அப்பா சொத்துல இருந்து எதுவுமே கிடைக்காதுன்னு நினைச்சு பயந்தார். அதனால அக்காவை கொஞ்சம் கொஞ்சமா மூளை சலவை செஞ்சார்.

ஜாதகத்துல கல்யாணம் ஆனா தானே பாதிப்புன்னு சொல்லி இருக்காங்க. கல்யாணம் செஞ்சுக்காமலே நாம வாழலாம்ன்னு அவங்ககிட்டே சொல்லி... அவங்க மனசை கரைச்சு அவங்களையும் ஒத்துக்க வச்சுட்டார்.

அந்த வீட்டை காலி பண்ணிட்டு அக்காவை தனியா ஒரு வீட்டில் தங்க வச்சார். எங்க அம்மா கிட்டே  அந்த வீட்டில் தனியா இருக்க பிடிக்கலை.. அதனால லேடிஸ் ஹாஸ்டல்ல தங்கி அப்படியே பிசினஸை பார்த்துக்கிறேன்னு அக்காவை வச்சே சொல்ல வச்சார். அவர் சொன்னபடியே கேட்டு எங்க அக்கா நிறைய பொய் சொல்ல ஆரம்பிச்சா.

அம்மா அக்காவை பார்க்க வர்றேன்னு சொல்லும் பொழுதெல்லாம் அக்கா யாரும் வரக்கூடாதுன்னு உறுதியா மறுத்துட்டாங்க... என்னோட மனசு மாறுற வரை உங்க யாரையும் பார்க்க விரும்பலைன்னு அக்கா சொல்லி இருந்தாங்க. அம்மாவும், அக்காவுக்காக கொஞ்ச நாள் விட்டுப் பிடிக்க நினைச்சாங்க. அக்கா மேல இருந்த நம்பிக்கையும் ஒரு காரணம்.  

அவங்க வாழ ஆரம்பிச்சு... கொஞ்ச நாளில் அக்கா கர்ப்பம் ஆனாங்க. அப்போ அவங்க ரொம்ப பலகீனமா இருந்ததால அவங்களை ஹாஸ்பிடலில் வச்சு பார்த்துக்க வேண்டிய சூழ்நிலை.

அம்மா அக்கா கிட்டே பேச முயற்சி செஞ்சப்போ... அந்த நம்பருக்கு போன் போட்டா யாருமே எடுக்கலை. அம்மாவுக்கு பயம் வந்துடுச்சு. என்னையும் அழைச்சுக்கிட்டு ஊருக்கு வந்து அவங்க சொல்லி இருந்த ஹாஸ்டலுக்கு போய் விசாரிச்சா..அப்படியே யாருமே இங்கே இல்லைன்னு சொல்ல... அம்மாவுக்கு ஒண்ணுமே புரியலை... நானும் அப்போ எட்டாவது தான் படிச்சுட்டு இருந்தேன்.

அம்மாவுக்கு கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருந்தது. வெளியே யார்கிட்டயும் சொல்லவும் முடியல. கல்யாணம் ஆகாத பொண்ணு காணோம்னு வெளியே தெரிஞ்சா ஊர்ல எல்லாரும் இஷ்டத்துக்கு கதை கட்ட ஆரம்பிச்சுடுவாங்க.. அப்புறம் அக்காவோட வாழ்க்கை மொத்தமா அழிஞ்சு போய்டும்னு பயந்தாங்க. எப்படியோ யாரையோ பிடிச்சு அக்கா இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சாங்க.

ஆனா... அவங்க இருந்த கோலம்...

கழுத்துல தாலி இல்லாம... வயித்துல குழந்தையோட... அம்மா சுத்தமா உடைஞ்சு போய்ட்டாங்க. அக்காவோட உடல்நிலையும் அந்த நேரத்துல கொஞ்சம் மோசமா இருந்ததால அவளை எதுவுமே கேட்க முடியலை. அந்தாளையும் எந்த கேள்வியும் கேட்கக் கூடாதுன்னு அக்கா மறுத்துட்டாங்க. அக்காவோட உடல்நிலையை மனசுல வச்சு... அம்மாவும் உள்ளே அழுதாலும் வெளியே எதுவுமே காட்டிக்காம... அக்கா கூடவே இருந்து அக்காவை பார்த்துக்கிட்டாங்க. ஊர்ல யாருக்கும் சொல்லவும் முடியலை. அம்மா மொத்தமா எல்லா சொத்தையும் வித்துட்டு அக்கா கூடவே வந்துட்டாங்க.

அக்காவுக்கு வளைகாப்பு செய்யணும்னு அம்மாவுக்கு ஆசை... அதையே சாக்கா வச்சு அவங்க கல்யாணத்தையும் முடிச்சிடலாம்னு நினைச்சாங்க. அம்மா எவ்வளவோ எடுத்து சொல்லியும் அந்தாளு அதுக்கு ஒத்துக்கலை. குடும்ப கெளரவம் போய்டும்னு அம்மா கிட்டே ரொம்ப திமிரா பேசினான். ஆனா அக்கா கிட்டே மட்டும் நரி மாதிரி தந்திரமா... இப்போ கல்யாணம் நடந்தாலும் என்னோட உயிர் போகத் தான் செய்யும். நம்ம குழந்தையைப் பார்க்க நான் உயிரோட இல்லைனாலும்  பரவாயில்லை உனக்காக நான் ஒத்துக்கிறேன்னு முதலை கண்ணீர் வடிச்சான்.

அவன் நினைச்ச மாதிரியே அக்காவும் பதறி... கல்யாணம் வேண்டவே வேண்டாம்னு சொல்லி அம்மா கிட்டே ரொம்ப பிரச்சினை செஞ்சாங்க. அம்மாவுக்கு வேற வழி தெரியல. குழந்தை பிறந்த பிறகு இதைப் பத்தி பேசிக்கலாம்னு அப்போதைக்கு அதை தள்ளி வச்சாங்க.ரொம்ப பெரிய போராட்டத்துக்குப் பிறகு சிசேரியன் மூலமா அக்காவுக்கு குழந்தையும் பிறந்துச்சு.

Post a Comment

புதியது பழையவை