மின்மினியின் மின்சாரக் காதலன் Tamil Novels 39

அத்தியாயம் 39

அன்னிக்கு அந்தாளு அங்கே இல்லவே இல்ல. அக்காவுக்கு டெலிவரில நிறைய பிரச்சினைகள் இருந்ததால முன்கூட்டியே ஒரு தேதி சொல்லி அப்போ சிசேரியன் பண்ணிட்டாங்க. அந்தாளுக்கு அப்போ ஏதோ முக்கியமான வேலை வந்துருச்சுன்னு சொல்லி ஊருக்கு ஓடி போய்ட்டான். ஃபிராடு...

அப்போ எனக்கு ஒரு பதினாலு வயசு இருக்கும். முதன்முதலா அக்காவோட குழந்தையை நான் தான் வாங்கினேன். அழகா... பொம்மை மாதிரி ஒரு குட்டி ஏஞ்சல். எனக்கு அவளை யார் கிட்டயும் கொடுக்கவே மனசு இல்ல. என் கைலயே வச்சு இருந்தேன்.

என் அம்முக்குட்டி”  அன்றைய நாள் நினைவில் நெகிழ்வாய் நெஞ்சை வருடிக் கொடுத்துக் கொண்டான் சிபி.

“அதுக்கு அப்புறம் உங்க அக்காவை அவர் முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டாரா?”அக்னி அவனை தொடர்ந்து பேச வைத்தான்.

“இல்ல... எங்க யாராலயும் அது முடியலை. எவ்வளவோ போராடி பார்த்தோம். ஆனா அக்காவே எங்களோட முடிவுக்கு எதிரா நின்னாங்க. கல்யாணம் நடந்தா அவரோட உயிருக்கு ஆபத்தாகிடும்... அப்படி அவருக்கு ஏதாவது ஆனா அடுத்த நிமிசமே நானும் தற்கொலை பண்ணிப்பேன்னு எங்களை மிரட்டி வச்சு இருந்தாங்க.

அம்மு பிறந்த பிறகு அக்காவோட டெக்ஸ்டைல் பிசினஸ் அப்போ ஓரளவுக்கு லாபம் வந்துச்சு. அக்காவுக்கு குழந்தையை விட்டுட்டு போய் பிசினஸை பார்க்க விருப்பமும் இல்லை. தொழிலை வேலைக்கு ஆள் வச்சு பார்த்துக்கிட்டாங்க. பெருசா லாபம்னு இல்லைனாலும் நட்டமும் இல்ல. அப்போ அதைப் பத்தி எங்க அக்காவுக்கும் கவலையும் இல்லை.

அவங்க  தான் பிறந்ததே அந்தாள் கூட வாழவும், குழந்தையை வளர்க்கிறதுக்கும் மட்டும் தான்னு நினைக்க ஆரம்பிச்சாங்க.. அக்காவோட  உலகத்துல எனக்கும், அம்மாவுக்கும் கூட ஒரு சின்ன இடம் மட்டும் தான்.

அம்மு வளர்ந்த பிறகாவது அக்காவோட நிலைமை மாறும்... அம்மு கிட்டே அவரோட  வேலை எல்லாம் நடக்காது , அவ கேட்கிற கேள்விகளுக்கு பயந்து அந்தாளு அக்கா கழுத்துல தாலி கட்டுவார்னு நாங்க நினைச்சோம்.. ஆனா  அந்தாளு அக்காவை நடுவுல கேடயமா வச்சுக்கிட்டார். அவரை எந்த கேள்வியும் அம்முவும் கேட்க முடியலை.

விவரம் தெரிஞ்ச பிறகு அம்மு வீட்டுல எல்லார் கிட்டயும் பேச்சை குறைச்சுக்கிட்டா. வெளியவும் அவளுக்கு பிரண்ட்ஸ்ன்னு யாரும் இல்லை. ஒருவேளை யாராவது தன்னை நெருங்கினா தன்னோட குடும்பத்தைப் பத்தி தெரிய வந்துடும். அதுக்கு அப்புறம் தன்னை அசிங்கமா பார்ப்பாங்கன்னு நினைச்சு எல்லாரையும் ஒதுக்கியே வச்சா.

தன்னோட அம்மா ஒரு பணக்காரருக்கு தாலி கட்டாத மனைவி அப்படிங்கிற எண்ணமே அம்முவுக்கு எங்க எல்லார் மேலயும் கொஞ்சம் கொஞ்சமா வெறுப்பு வர காரணமாகிடுச்சு.

சின்ன வயசுல அவ அம்மா கிட்டே இருந்ததை விட என் கூட இருந்த நாட்கள் தான் அதிகம். ஓரளவு விவரம் தெரிஞ்சதும் என்னையும் ஒதுக்கி வச்சுட்டா. நாங்க யாருமே அவங்க அம்மாவுக்காகவும், அவளுக்காகவும் அவங்க அப்பா கிட்டே பேசலைன்னு அவளுக்கு கோவம். ஒரு கட்டத்துக்கு மேல வீட்டுல இருக்கப் பிடிக்காம ஹாஸ்ட்டல்ல தங்கி படிக்க ஆரம்பிச்சுட்டா.

அவ லீவுக்கு வீட்டுக்கு வர்ற நாள் தான் எனக்கு பொங்கல், தீபாவளி எல்லாம். நானும் அவ கோவத்தை குறைக்க என்னவெல்லாமோ செஞ்சு பார்த்தேன். ஆனா ஒண்ணுமே வேலைக்கு ஆகலை.

நான் காலேஜ் முடிச்சுட்டு ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்தேன். அம்முவை மனசார காதலிச்சேன். அவ படிப்பை முடிச்சதும் வீட்ல பேசலாம்னு காத்திருந்தேன்.

அவ காலேஜ் படிக்க மறுபடியும் வெளியூர் போகும் பொழுதே அக்கா அவளோட கல்யாண பேச்சை எடுத்தாங்க. அப்பவே நான் உறுதியா சொல்லிட்டேன். அம்முவை நான் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு. எங்களுக்குள்ளே வயசு வித்தியாசம் அதிகம் தான். ஆனாலும் எங்க அக்காவோட வாழ்க்கை இருந்த நிலையில நல்ல குடும்பத்துல இருந்து  வெளியாள் யாரும் வந்து கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பில்லை. அப்படியே நடந்தாலும் அவளோட வாழ்க்கையில் பின் நாளில் பிரச்சினை வர நிறையவே வாய்ப்பு இருக்குனு பயந்து அக்காவும் எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க.

லீவுக்கு வீட்டுக்கு வந்த அம்மு கிட்டே அக்காவும், அம்மாவும் இதைப் பத்தி பேசினப்போ அவ பெருசா எதையும் வெளிக்காட்டிக்கலை.

அவளுக்கு சம்மதம்னு நினைச்சு நானும் ரொம்ப சந்தோசப்பட்டேன். அதுக்கு அப்புறம் அவ கிட்டே ஆசையா பேசலாம்னு நினைச்சு நான் நெருங்கினா.. அவ விலகி விலகி போவா.. வெட்கப்படுறானு நினைச்சேன். படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்தைப் பத்தி  பேசிக்கலாம்னு அம்மு சொல்லும் பொழுது நானும் அவளுக்கு முழு சப்போர்ட்டா இருந்தேன்.

கடைசி வருசம் படிப்பை முடிச்சுட்டு டிகிரி சர்டிபிகேட் வாங்கிட்டு வர்றேன்னு போனவ.. வீட்டுக்கு திரும்பி வரவே இல்லை. நாங்களும் எங்க எல்லாமா தேடினோம். போலீசில் கூட கம்ப்ளைன்ட் பண்ணினோம். அப்புறம் தான் தெரிஞ்சது. அவ கூடப் படிக்கிற பையன் கூட ஓடிப் போயிட்டான்னு.

வீட்ல எல்லாரும் சுத்தமா உடைஞ்சு போயிட்டோம். அப்போ கூட அந்தாளு வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. அவரோட பொண்ணு ஆசைபட்டானு குடும்பத்தோட எல்லாரும் வெளிநாட்டுக்கு டூர் போய் இருந்தாங்க. அக்காவுக்கு அப்போ தான் முதன்முதலா தான் தப்பு பண்ணிட்டோமோன்னு தோண ஆரம்பிச்சது.

அம்மு என்ன தான் எங்க விருப்பத்துக்கு மாறா போய் இருந்தாலும், அவ எங்கே போனாளோ, எப்படி இருக்காளோனு எங்க எல்லாருக்கும் கவலை இருந்துக்கிட்டே இருந்தது. அதனால அவ எங்கே இருக்கானு கண்டுபிடிக்கிற வரை போலீஸ் மூலமா விசாரிச்சுட்டே இருந்தேன்.

அவ காணாம போய் இரண்டு மாசம் கழிச்சு ஒரு வழியா அவளை கண்டுபிடிச்சோம். அந்த பையனும் அவளும் ரிஜிஸ்தர் ஆபிஸ்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்ல முறையில வாழ்ந்துட்டு இருந்தாங்க. அந்தப் பையனைப் பார்த்து நானும் பேசினேன். நல்லவனா தான் தெரிஞ்சான். எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு. அவ இஷ்டப்படியே சந்தோசமா  வாழட்டும்னு நினைச்சேன். அப்பப்போ எங்க வீட்ல இருந்து எல்லாரும் போய் பார்த்துட்டு வந்தாங்க.

ஆனா நாங்க அங்கே வந்து அடிக்கடி  அவளைப் பார்க்கிறது அம்முவுக்கு பிடிக்கலை. அதனால தன்னை தேட வேண்டாம்னு  தகவல் சொல்லிட்டு அவ புருஷனோட வெளியூர் போய்ட்டா... அப்போ அவ கர்ப்பமா வேற இருந்தா... அம்மு இப்படி எங்க எல்லாரையும் ஒதுக்கி வச்சதுல இருந்தே அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாம படுக்கையில் விழுந்துட்டாங்க. அம்மு  இப்படி செஞ்சது, அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாம போனது... இந்தாளு கண்டுக்காம ஒதுங்கிப் போனது எல்லாமே அக்காவுக்கு ஆத்திரத்தை வரவழைச்சது. தன்னை இத்தனை நாளா நம்ப வச்சு ஏமாத்திட்டார்ன்னு கோவம் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாச்சு.

எங்க வீட்டில் இவ்வளவு கலவரம் நடக்கும் பொழுது கூட அந்தாளு வரவும் இல்லை... ஒரு போன் செஞ்சு விசாரிக்கவும் இல்லை. அக்கா ரொம்பவும் உடைஞ்சு போய்ட்டாங்க.

ஒருநாள்  எங்க யாருக்கும் தெரியாம கிளம்பி அந்தாள் வீட்டுக்குப் போய் சண்டை போட்டுட்டு வந்துட்டாங்க. ஆனா அந்தாளோட நல்ல நேரம் அப்போ அவங்க அப்பா மட்டும் தான் வீட்டில் இருந்தார். பொண்டாட்டி, பொண்ணு எல்லாம் வெளியூரில் ஏதோ கல்யாணத்துக்குப் போய்ட்டாங்க. அக்காவைப் பார்த்ததும் அவருக்கும், அவரோட அப்பாவுக்கும் பயங்கர அதிர்ச்சி.

அக்கா எப்பவுமே வாயை மூடிட்டு இருப்பாங்கனு அவர் நினைச்சுட்டு இருக்க... அவங்களோ நடந்த எல்லா விஷயத்தையும் அவரோட அப்பா கிட்டே சொல்லி நியாயம் கேட்டு இருக்காங்க. ஊரறிய அவங்களை மனைவியா அறிவிக்கணும். இல்லைனா கோர்ட்க்கு போய்டுவேன்னு மிரட்டிட்டு வந்தாங்க. அவரோட அப்பா எதிர்ல எதையும் பேச முடியாம அமைதியா இருந்தாலும், அப்புறமா எங்க வீட்டுக்கு நான் இல்லாத நேரத்துல அடியாட்களோட வந்து அக்காவை மிரட்டிட்டுப் போனார்.

இத்தனை வருசத்துக்கு அப்புறம் , வீட்டுல வயசுக்கு வந்த பொண்ணை வச்சுக்கிட்டு நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்க குடும்ப கெளரவம் என்னாகிறதுன்னு ஒரே மிரட்டல்... தாலி இல்லாம என்னோட இத்தனை வருசம் குடும்பம் நடத்தினவளுக்கு இப்போ மட்டும் எதுக்கு தீடீர்னு இப்படி ஒரு எண்ணம்.. எந்தக் காலத்துலயும் அது நடக்காதுன்னு சொல்லி... அடியாட்கள் முன்னாடியே அக்காவை திட்டி, அடிச்சு... அசிங்கப்படுத்திட்டார்.

அவரை மீறி ஏதாவது செஞ்சா, அக்காவை... அக்காவை யாருனே தெரியாதுன்னு எல்லார் முன்னாடியும் சொல்லிடுவேன். அப்புறம் குழந்தை... என் அம்மு.. அவ கூட வேற யாருக்கோ பிறந்ததுன்னு சொல்லுவேன்னு சொன்னான் அந்தாளு.”சொல்லும் பொழுதே சிபியின் குரலில் அத்தனை வலி இருந்தது.

எத்தனையோ முறை நாங்க எல்லாரும் சொன்னோம். ஆனா அக்கா அந்தாளு மேல இருந்த நம்பிக்கையில் எங்க யார் பேச்சையும் காது கொடுத்து கேட்கவே இல்லை. அது எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு வாரம் ரூமிலேயே அடைஞ்சு கிடந்தாங்க. வெளியே வரவே இல்லை. நாங்களும் யாரும் அவங்களை தொந்தரவு பண்ணலை. அதுக்குப் பிறகு அக்கா என்னை கூப்பிட்டு பேசினாங்க.

என்ன ஆனாலும் சரி... நான் அவரோட மனைவி.அம்மு அவருக்கு மட்டுமே பிறந்த குழந்தை அப்படிங்கிற உண்மை எல்லாருக்கும் தெரியணும்னு என்கிட்டே கேட்டுகிட்டாங்க. நான் ரொம்ப நாளா நடக்கணும்னு ஆசைப்பட்ட விஷயம் அது.

ஆனா உடனடியா இறங்கி நான் செய்ய முடியாது. ஏன்னா அப்போ அவர் கிட்ட பணம், படைன்னு எல்லாமே இருந்தது. நாங்களும் ஓரளவு வசதியானவங்க தான். இருந்தாலும் அவருக்கு முன்னாடி அப்போ அது கம்மி தான்.

யோசிச்சேன். என்னோட வேலையை ரிசைன் பண்ணிட்டு அக்காவோட கம்பெனியை எடுத்து நடத்தினேன். பேங்க் லோன் வாங்கி இன்னொரு யூனிட் விலைக்கு வந்ததை வாங்கி... கொஞ்சம் கொஞ்சமா பிசினஸை பெருசாக்கினேன்.

ஏகப்பட்ட தடவை சறுக்கினேன். மறுபடி எழுந்து ஓடினேன். அப்போ தான் நாங்க யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்தது. ரொம்ப நாளா கோர்டில் கேஸ் நடந்துட்டு இருந்த எங்களோட பூர்வீக சொத்து எல்லாமே எங்களுக்கே தீர்ப்பாகி  வந்துச்சு. முன்னாடி பெரிய தொகை லோனா கொடுக்க தயங்கின ஆட்கள் கூட அதுக்கு அப்புறம் வலிய வந்து பணத்தை கடனா கொடுத்தாங்க.

தொழிலை இன்னும் பெருசாக்கினேன். அக்காவும் கூட இருந்து உதவினாங்க. அந்தாளை விடவும் அதிகமான பணத்தையும், ஆட்களையும் சேர்த்தேன்.

அதுக்கு அப்புறம் அக்காவை வச்சே அந்தாளுக்கு ஒரு நோட்டிஸ் அனுப்பினேன். பதறி அடிச்சுட்டு ஓடி வந்தான்.

சமாதானம் பேச எங்க வீட்டுக்கு வந்தான். அக்கா அந்தாள் முகத்தைக் கூட பார்க்க விரும்பலை. திருப்பி அனுப்பிட்டாங்க. அப்போ நான் ஒரு தப்பு பண்ணிட்டேன். அம்மு மூலமா டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தா அந்தாளு தப்பிக்கவே முடியாதுன்னு வாயை விட்டுட்டேன்.

எங்கே தான் மாட்டிடுவோமோனு பயந்து அம்முவை தேட ஆரம்பிச்சான். நானும்  ரொம்ப நாளா தேடி அவ இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சுட்டேன். நான் மட்டும் தனியா கிளம்பிப் போய் அவளைப் பார்த்து பேசினேன். நடந்த எல்லாத்தையும் அவ கிட்டே சொன்னேன். சொத்து எல்லாத்தையும் அவ பேர்ல மாத்தி எழுதி வைக்கிறதா அக்காவும், நானும் ஏற்கனவே முடிவு பண்ணி இருந்தோம்.

எல்லாத்தையும் பொறுமையா கேட்டுட்டு அம்மு எதுவுமே சொல்லலை. அமைதியா எழுந்து போய்ட்டா... அவளோட புருசன் தான் அவ கிட்டே பேசினார்.

அம்முவுக்கு விருப்பம் இல்லைனாலும்  அவங்க அம்மாவோட மானத்தை காப்பாத்துறதுக்காக ஒத்துக்கிட்டா... குழந்தை பிறக்க நாள் நெருங்கிட்டதால குழந்தை பிறந்த பிறகு ஊருக்கு வர்றேன்னு சொல்லி எங்களை அனுப்பி வச்சா...

அதுக்கு அப்புறம் நாங்க எல்லாரும் அம்மு கிட்டே போனில் பேசிட்டு தான் இருந்தோம். நடுவுல அந்தாளுக்கு எப்படியோ அம்மு இருக்கிற இடம் தெரிஞ்சு அந்தாளு அம்முவைப் பார்க்க இங்கே இருந்து கிளம்பி போய் இருக்கான். அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல... அம்முவை காணோம். அவளுக்கு என்ன ஆச்சு? எங்கே போனா ?எதுவுமே தெரியலை...

“அம்முவை கண்டுபிடிச்சீங்களா? பதட்டத்துடன் கேட்டான் அக்னி.

“இல்லை..”

“அப்புறம் என்ன ஆச்சு? அவங்க எங்கே போனாங்க?... கோர்ட்டில் கேஸ் நடந்துச்சா? அவங்க வந்து சாட்சி சொன்னாங்களா?”

“அதுக்கு அப்புறம் அம்முவுக்கு என்ன ஆச்சுன்னு ஒருத்தரால தான் சொல்ல முடியும்”

“யாரு?”

“நீங்க எப்படி இவளோ நேரம் என்கிட்டே நேரடியா கேட்டா நிறைய உண்மைகள் தெரிய வரும்னு நினைச்சு கேட்டீங்களோ அதே மாதிரி நானும் இப்போ நேரடியா உங்க கிட்டே கேட்கிறேன். அதுக்கு அப்புறம் என் அம்முவுக்கு என்னாச்சு?”

“எ... என்கிட்டயா கேட்கறீங்க?”

“ஆமா...”

“அ..அப்படின்னா? நீங்க?” இதயத்தில் யாரோ கனமான இரும்பு குண்டை வைத்து அழுத்தியதைப் போல லேசாக வலிக்கத் தொடங்க... அவனையும் மீறி அவன் கைகள் நெஞ்சை நீவி விடத் தொடங்கியது.

“அம்மு... அதாவது அமிர்தாவோட மாமா...” என்று சொல்லி முடிக்க, நிற்க முடியாமல் அப்படியே தொப்பென தரையில் தடுமாறி விழுந்தான் அக்னி.

“அப்போ... ஜெ... ஜெனி... ஜெனிபர்...”

“எங்க வீட்டு வாரிசு...”அழுத்தமாக சொல்லி முடித்தவன் அக்னியின் நிலை கண்டு கொஞ்சமும் தடுமாறாமல் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அக்னியின் கண்களில் ஜெனிபருக்கான தவிப்பு இருந்ததை அவனால் உணர முடிந்தது.

“அப்ப தாரா?”

“அவ ஜார்ஜோட தங்கச்சி.  அவ அண்ணன் சாவுக்கும், ஜெனிபர் சாவுக்கும் நீ தான் காரணம்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு உன்னை பழி வாங்க வந்தவ. என்னோட ஆதாயத்துக்காக அவளை கொஞ்சம் யூஸ் பண்ணிக்கிட்டேன்.”

மெதுமெதுவாய் தன்னை நிலைபடுத்திக் கொண்ட அக்னி... நடந்த அத்தனையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தவன் கடைசியாக கண்ணன் கொண்டு வந்த வீடியோ ஆதாரத்தைப் பற்றியும் மறைக்காமல் சொல்லி முடித்தான்.

அக்னி, சிபி இருவருக்குமே ஜெனிபரை கொன்றது யாராக இருக்கக்கூடும் என்று தெளிவாக தெரிந்தது.

ஆனால் எப்படி நிரூபிப்பது? அக்னியிடம் இருக்கும் வீடியோவில் கூட அவரது முகம் பதிவாகவில்லை. அதை ஒரு ஆதாரமாக கோர்ட்டில் கொடுக்க முடியாது.

ஜெனிபரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவரை அப்படியே விட்டுவிட அக்னிக்கு மனம் ஒத்துக்கொள்ளவே இல்லை.

சிபியின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டவன்...அவனை அழுத்தமாக பார்த்தான்.

“என்னை நம்புங்க சிபி... அவருக்கு தகுந்த தண்டனை கிடைக்காம நான் ஓய மாட்டேன். இதுவரை வேணா இது உங்க பிரச்சினையா இருக்கலாம். ஆனா இனி இது என்னோட கடமை. என் ஜெனிபரோட சாவுக்கு நியாயம் கிடைக்காம நான் ஓய மாட்டேன்”

“ஹ... உங்க பொண்டாட்டியோட அப்பா... உங்க மாமனார்.. அவருக்கு நீங்க தண்டனை வாங்கித் தரப் போறீங்களா?”ஏளனமும், நம்பிக்கை இல்லாத் தன்மையும் தெறித்தது சிபியின் குரலில்.

சிபியை தீர்க்கமாக பார்த்தவன் அவரை நெஞ்சோடு ஒரு முறை ஆரத் தழுவிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அதன் பிறகு நடந்த எதுவும் யாரும் நம்ப இயலாத ஒன்று. அருந்ததியைக் காப்பாற்றப்பட்டதைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லாமல் வீட்டிற்கு சென்றவன் ஜெனிபருக்காக துணிந்து அந்த நாடகத்தை அரங்கேற்றத் துணிந்தான்.

அருந்ததி அங்கே நடந்த குண்டுவெடிப்பில் இறந்து விட்டாள் என்றும் , சிபியை போலீசார் கைது செய்து விட்டார்கள் என்றும் பாதி உண்மையும், பாதி பொய்யையும் கலந்து சிவநேசனை மட்டுமாக தனியாக அழைத்து சொல்ல... அடுத்த சில நிமிடங்களில் அவர் கிளம்பி வந்து சிபியை வைத்திருக்கும் போலீஸ் வைத்திருக்கும் இடத்திற்கே வந்து அவனுக்கு சாபங்களை வாறி வழங்கினார்.

“அவ நல்லா இருக்கணும்னு தானே... அந்த ஜெனிபரை கூட கொன்னேன். கடைசியில் அவளை கொன்னுட்டியே பாவி...”கதறிக் கொண்டே சிபி மீது பாய.. அங்கிருந்த காவலர்கள் உட்பட எல்லோரும் அவரது பேச்சை கேட்டு அதிர்ந்து போய் நின்றார்கள்.

சாமார்த்தியமாய் அவர் வாயாலேயே அவர் ஜெனிபரை கொன்றதை ஒப்புக்கொள்ள வைத்திருந்தான் அக்னி.

எல்லோரும் அமைதியாய் இருக்க தன் வாயாலேயே உளறிக் கொட்டியதை உணர்ந்தவர் பதட்டத்துடன் பார்வையை சுற்றிலும் ஓட விட்டார்.

அக்னியை கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கைகள் அந்த நொடி அவரது கழுத்தை நெறித்து கொன்று விட சொல்லி துடித்தாலும், சட்டத்தை மதிக்கும் ஒரு ராணுவ வீரனாக அமைதி காத்தான்.

அந்த இடத்திலேயே கைது செய்யப்பட்டார் சிவநேசன். ஆனாலும் அமைதியாக நின்றவர் எதேச்சையாக திரும்ப அங்கே உயிருடன் நின்று கொண்டிருந்த அருந்ததியைப் பார்த்ததும் அதிர்ந்து போய் அக்னியைப் பார்க்க... அவன் முகத்திலோ அலட்சியப் புன்னகை.

அவருக்கு புரிந்து போனது. தன்னை ஏமாற்றி தன் வாயாலேயே சொல்ல வைத்து விட்டான் என்று.  அதுநேரம் வரை அமைதியாக இருந்தவர் உடனே திமிர ஆரம்பித்தார்.

“நான் ஒண்ணுமே பண்ணலை... என்னை விடுங்க.. எல்லாரும் சேர்ந்து என்னோட சொத்துக்காக எனக்கெதிரா சதி பண்ணுறாங்க...

ஹலோ சார்... ரீல் அந்து போச்சு” என்று நக்கலாக சொன்னபடி உள்ளே வந்த கண்ணன் சிபியின் சட்டையில் இருந்த அந்த பட்டன் கேமராவை எடுத்து அவர் முன்னே ஆட்டினான்.

“நீங்க பேசுனது எல்லாத்தையும் லைவா எல்லாரும் பார்த்துட்டாங்க... தேவை இல்லாம பேசி வெட்டியா பொழுது போக்காதீங்க... நீங்க செஞ்ச பாவத்துக்கு எல்லாம் உங்களை தூக்கில்  போட்டுடக் கூடாதுன்னு கடவுள் கிட்டே வேண்டிக்கோங்க” என்று சொல்ல அவர் பார்வை திகிலுடன் அங்கிருந்த எல்லோர் மீதும்  படிந்து மீண்டது. அக்னி எதையோ நினைத்து வன்மமாய் சிரிக்க... அதுநேரம் வரை இருந்த தைரியம் எல்லாம் வடிந்து போனது அவருக்கு.

கடைசி முயற்சியாக, மனைவி, மகளிடம் திரும்பியவர் அவர்கள் தன்னை ஒரு  புழுவைப் போல பார்த்த பார்வையில் மொத்தமாய் அடங்கி விட்டார். மனைவியின் கண்களில் இருந்து நிற்காமல் பெருகிய கண்ணீர் அவரை வதைத்தாலும், அழ மறந்து அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மகளின் பார்வை அவரை வேர் வரை அசைத்துப் பார்த்தது.

வழக்கு நடைபெறும் பொழுது தாரா முக்கிய குற்றவாளியாக இல்லாததாலும், அருந்ததியை கடத்த முயற்சி செய்த காரணத்திற்காகவும் ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. சிபிக்கும் ஆறு வருட தண்டனை கிடைத்தது.சிபி தரப்பு உறவினர்கள் அனைவரும் அக்னியின் பெரும் முயற்சியின் பேரில் சிவநேசனுக்கு எதிராக சாட்சி சொல்ல, ஒரு வழியாக அவரை சிறையில் அடைத்து இன்று தான் ஜெனிபரின் கொலை குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அம்பிகா அங்கே நின்று தம்பிக்காக மட்டும் கண்ணீர் வடித்தார். அங்கே சென்று விட்டு தான் அருந்ததியும், அக்னியும் வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் இப்பொழுது ஒருவருக்கொருவர் ஆறுதலாய் நேரத்தை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் அருந்ததி அறியாத ஒரு விஷயம் என்னெவெனில் அவருக்கு கிடைக்க வேண்டிய தூக்கு தண்டனையை , ஆயுள் தண்டனையாக மாற்றியது அவளது கணவன் அக்னி புத்திரன் தான். அதை மட்டுமா செய்தான்? அவர் அடைக்கபட்டிருக்கும் அதே சிறையிலேயே சிபியையும் சேர்த்திருந்தான். இருவரும் ஒரே அறையில் இல்லை.. எதிர் எதிர் அறை தான். தான் அடைத்து வைக்கப்பட்டு இருந்த செல்லைத் தாண்டி வெளியே வர துளி அளவு கூட தைரியம் வரவில்லை அவருக்கு.

அந்த நான்கு சுவற்றை தாண்டி வெளியே காலை எடுத்து வைத்தால் சிபி தன்னை நிச்சயம் கொன்று விடுவான் என்று உறுதியாக நம்பினார். அதன் விளைவு... ஜெயிலுக்குள் ஒரு சிறை வாசம். யாரேனும் அவர் மீது பரிதாபம் கொண்டு அவருக்காக உணவு கொண்டு வந்து கொடுத்தால் தான் உண்டு.  அது மட்டுமா? அறைக்குள் வேறு யாராவது புது கைதி வந்தால் அவர்கள் சிபியின் ஆட்களோ... தன்னை கொல்லத் தான் வந்து இருக்கிறார்களோ என்று அஞ்சி நடுங்கினார். ஒரு மன நோயாளியைப் போல மாறினார். அதன் விளைவு யாரைப் பார்த்தாலும் எதையாவது பயன்படுத்தி அவர்களை அடிக்கவோ, காயப்படுத்தவோ முயற்சி செய்தார். அவர் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடியாமல் ஜெயிலில் தனி பகுதியில் அவரை அடைத்து வைத்தார்கள். எங்கும் இருள்.. எதிலும் தனிமை... தாங்க முடியாமல் அவரே ஒரு நாள் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்வதற்காக கரண்ட் கம்பியை பற்களால் கடித்து இழுக்க... அவரின் நல்ல நேரமோ கெட்ட நேரமோ மின்சாரம் தடைப்பட்டு போக.. கை, கால்கள் செயல் இழந்து... மூளையும் பாதிக்கப்பட்டு ஒரு ஜடப் பொருளாய் மாறிப் போனார் சிவநேசன்.

 

 

 

 

 

 

 


 

Post a Comment

புதியது பழையவை