அத்தியாயம்
41
அங்கே அரங்கினுள்
சஹானா அலங்காரம் எல்லாம் முடித்து தயாராகி வெளியில் வந்தாள்.அப்பொழுது தான் அறை
வாசலில் கண்ணீரோடு நின்று கொண்டு இருந்த தாயை பார்க்கவும் என்னவோ ஏதோ என்று பதறிக் கொண்டு தாயின் அருகில் வந்து தாயின் தோளை
தொட்டாள்.கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தாலும் உதடுகளில் சிரிப்போடு மகளிடம்
அவளுடைய அரங்கேற்றத்திற்கு என்று அச்சடிக்கப் பட்டு இருந்த இன்விடேஷனை
நீட்டினார்.அதில் அவளது பெயருக்கு கொஞ்சம் மேலே நடுநாயகமாக பெரிய எழுத்தில்
பரதநாட்டிய குரு என்ற இடத்தில் மேகலா என்று அவளுடைய அன்னையின் பெயர் அச்சிடப்பட்டு
இருந்தது.
தாய் மகள் இருவர்
கண்களில் இருந்தும் கண்ணீர் வழிய ஒருவரை ஒருவர் ஆனந்தத்தோடு அணைத்துக் கொண்டு நின்றனர்.அந்த நேரம் உள்ளே வந்த அபிமன்யு
அவர்களையும் கையில் இருந்த இன்விடேஷனையும்
பார்த்துவிட்டு அவர்களின் அருகில் சென்று மெல்ல தொண்டையை கனைத்துக் கொண்டு பேச
ஆரம்பித்தான்.
“சஹானா
இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு...நீ தயாரா இருக்க இல்லை...பதட்டம் இல்லாம
ஆடு...உங்களுடைய இத்தனை வருஷ கஷ்டமும் இதோ இந்த இப்ப நீ ஆடப் போறதில் தான் அடங்கி
இருக்கு.நல்லா ஆடு.மேடைக்கு போவதற்கு முன்னாடி முகத்தை சரி பண்ணிக்கோ.அழுததில்
கொஞ்சம் மேக்கப் கலைஞ்சு போய் இருக்கு...சீக்கிரம் ரெடியாகு.”
என்று சொன்னவன் சட்டென்று நகர்ந்து அடுத்த வேலையை கவனிப்பதற்காக நகர்ந்தான்.
வேகமாக செல்ல
முயன்றவனை தடுக்கும் வகை தெரியாது சட்டென்று அபிமன்யுவின் கைகளை பிடித்து
நிறுத்தினாள் சஹானா.கண்கள் மின்ன அவள் புறம் திரும்பியவன் சட்டென தன்னை
கட்டுக்குள் கொண்டு வந்தான்.ஏனெனில் அருகில் சஹானாவின் அம்மாவும்
இருக்கிறார்களே...சஹானா அம்மாவை அப்பொழுது மறந்தே போனாள்.
“அவ்வளவு
தானா? என்கிட்ட சொல்ல வேற ஒண்ணும் இல்லையா...ஒண்ணுமே சொல்லாம போறீங்க?”கண்களில் எதிர்பார்ப்போடு கேட்டாள்
சஹானா.
“நீ
முதலில் அரங்கேற்றத்தை முடித்து விட்டு வா”
தன்மையாக பேசினான் அபிமன்யு.
“உம்ஹும்
மாட்டேன்...இப்பவே சொல்லுங்க...”குழந்தையென
சிணுங்கினாள் சஹானா.
சஹானாவின் அம்மா
இருவரையும் கேள்வியாக பார்ப்பதை கவனித்த அபிமன்யு அவளிடம் மென்மையாகவே பேசினான். “என்ன இது சின்ன பிள்ளை மாதிரி
விளையாடிக்கிட்டு இருக்க...இன்னும் அஞ்சு நிமிஷத்தில் நீ மேடையில்
இருந்தாகணும்.பேசிக்கிட்டே இருக்காம போய் முகத்தை சரி
பண்ணிக் கொண்டு மேடைக்கு போ”
கலங்கிய கண்களை
கட்டுப்படுத்திக்கொண்டு தன்னுடைய தாயிடம் திரும்பி பேசத் தொடங்கினாள். “அம்மா அரங்கேற்றம் முடிந்த பிறகு நான்
மறுபடி ஊருக்கு திரும்பி வரப்போறதில்லை.நான் இங்கேயே இருக்கலாம்னு முடிவு பண்ணி
இருக்கேன்.”
‘என்ன
காரணம்’ என்று கண்களால் வினவிய தாய்க்கு , “அடுத்து நான் கதகளி கத்துக்கப் போறேன்.
அதுவும் காதல் கதகளி.அதையும் இவர்கிட்ட தான்
கத்துக்கணும்னு முடிவு பண்ணி இருக்கேன்.சொல்லித் தர முடியுமா? முடியாதான்னு கேட்டு
சொல்லுங்க.அப்படி அவருக்கு இஷ்டம் இல்லேன்னா சொல்ல சொல்லுங்க நான்
அவருக்கு சொல்லித் தருகிறேன் ” என்று சொன்னவள் அதற்குள் மேடையில்
அவளுடைய பெயர் அழைக்கப்படவும் நொடியில் முகத்தை சீர் செய்து கொண்டு மேடைக்கு
சென்று விட்டாள்.
அபிமன்யு
சிறகில்லாமல் வானில் பறந்தான்.அவனுடைய காதலை அவனது தேவதை ஏற்றுக் கொண்டு
விட்டாள்.இனி உன்னை விட்டு போக மாட்டேன் என்று அவள் வாயாலேயே சொல்லி விட்டாள்.இதை விட வேறு என்ன வேண்டும். ‘நீ எனக்கு சொல்லித் தரப்
போகிறாயா...எதை காதலையா?’உள்ளம் மகிழ்ச்சியில் பூரிக்க நின்று கொண்டு இருந்தவன்
அப்பொழுது தான் சஹானாவின் அன்னையை பார்க்க அடுத்து அவர் என்ன நினைப்பாரோ என்ற
பதட்டம் தொற்றிக் கொள்ள தயக்கத்தோடு அவரை நிமிர்ந்து பார்த்தான். அவரோ முகம்
எங்கும் புன்னைகையில் விரிந்து இருக்க தன்னுடைய கையை எடுத்து அபிமன்யுவின் தலையில்
ஆசீர்வதிப்பது போல வைத்து தன்னுடைய சம்மதத்தை தெரிவித்தார்.
தன்னுடைய காதலை அவள்
தெரிவித்த அந்த நொடியில் இருந்து அவளை எப்பொழுது தன்னுடைய கை வளைவிற்குள் கொண்டு
வருவது என்று துடித்துக் கொண்டு இருந்தான் அபிமன்யு .அதே நேரம் மேடையில் பாடல்
ஒலிக்கவும், துரைசாமி அரங்கினுள் நுழையவும் சரியாக இருந்தது.
“போ சம்போ! சிவசம்போ! ஸ்வயம்போ!
கங்காதர சங்கர கருணாகர
மாமவ பவ சாஹர தாரக.”
பாடல்
ஆரம்பமானது.சஹானா உடலை வளைத்து வில்லென ஆட ஆரம்பித்தாள்.மொத்த அரங்கமும் நிறைந்து
வழிந்தது.அரங்கினுள் நுழையும் போதே துரைசாமிக்கு பாடல் கேட்க ஆரம்பித்ததும்,கோபமாக
திரும்பி அஞ்சலியிடம் பேச ஆரம்பித்தார்.
“என்ன இவ்வளவு லேட்டா கொண்டு வந்து சேர்த்து இருக்க...அவ ஆட ஆரம்பிச்சுட்டா
போலயே”
“ஆமா
அதுக்கென்ன”அலட்டல்
இல்லாமல் பதில் சொன்னாள் அஞ்சலி.
“கொஞ்சம்
முன்னாடியே கொண்டு வந்து விட்டு இருந்தால் அவளை நாலு அரை விட்டு ஊருக்கு இழுத்து
போய் இருப்பேன்ல.இந்த அரங்கேற்றமும் நடந்து இருக்காது.இப்ப என்னடானா?”அவர் குரலில் கோபம் கொஞ்சமும்
குறையவில்லை.
“நான்
எப்போ உங்ககிட்ட அரங்கேற்றத்தை
நிறுத்த உதவி செய்றதா சொன்னேன்.நான் இவங்க எங்கே இருக்காங்கனு சொல்றதா மட்டும்
தான் உங்ககிட்ட சொன்னேன்.”
இப்பொழுதும் அதே பாவனை அஞ்சலியின் குரலில்.
“உன்னை” என்று பல்லை கடித்தவர் அரங்கினுள்
வேகவேகமாக சென்று அதை பாதியிலேனும் நிறுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளே
போக முயற்சித்தார்.ஆம்! முயற்சி செய்ய மட்டும் தான் அவரால் முடிந்தது.
அரங்கத்தினுள் நுழைய
பலமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திரைத்துறை பிரபலங்கள் வந்து
கலந்து கொண்டதால் போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு இருந்தது. பத்திரிக்கை
இருந்தால் மட்டுமே அரங்கினுள் அனுமதிக்கப் பட்டனர். பத்திரிக்கை இல்லாதவர்கள்
பொதுவாக ஒரு இடத்தில் அமர வைக்கப்பட துரைசாமியும் அங்கே தான் அமர வைக்கப் பட்டார்.
அவர் அமர்ந்து இருந்த இடத்தில் அவருக்கு நேர் எதிரிலேயே மிகப்பெரிய திரையில்
சஹானாவின் நடனம் நேரடியாக ஒளிபரப்ப பட்டுக் கொண்டு இருந்தது.தன்னுடைய கண்
எதிரிலேயே சஹானா ஆடுவதை கண் கொண்டு காண முடியாமல் கொதித்துப் போனார் துரைசாமி.
சுற்றிலும் ஜிம்
பாய்ஸ் நின்று கொண்டு இருக்க என்ன செய்வது எப்படி நிறுத்துவது என்று தெரியாமல்
அவர் யோசித்துக் கொண்டு இருந்தார்.பேசாமல் கௌரவம் பார்க்காமல் கத்தி ஆர்ப்பாட்டம்
செய்து விட வேண்டியது தான் என்று அவர் நினைத்துக் கொண்டு தொண்டையை செருமிக் கொண்டு
கத்த தொடங்கும் முன் அங்கிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் சத்தம் போட துவங்கினார்.
“என்ன நினைச்சுக்கிட்டு
இருக்கீங்க? பத்திரிக்கைக்காரங்களை இப்படி
தனியா ஒதுக்கி வச்சு இருக்கீங்க...இதெல்லாம் கொஞ்சமும் நல்லா இல்லை.”என்று கத்த
தொடங்க அங்கிருந்த ஜிம் பாய்ஸ் கொஞ்சமும் பதறாமல் அவரை அலேக்காக தூக்கி சென்று
அங்கிருந்து வெளியேற்றினர்.அதை பார்த்த பிறகும் வாயை திறக்க அவருக்கு என்ன
பைத்தியமா?
என்ன தான் உள்ளுக்குள் பயந்தாலும் எவ்வளவு நேரம் தான் அவரும் சஹானாவின் நடன
அரங்கேற்றம் அவருடைய கண்ணெதிரே நடப்பதை பொறுத்துக் கொண்டு இருப்பார்.அங்கிருந்து
எழுந்தும் போக முடியாமல்,கண் கொண்டு அவளது நடனத்தை பார்க்க முடியாமலும் தவித்தார்
துரைசாமி.
மேடையில் சஹானா
சுழன்று ஆடி சுற்றி இருந்த அனைவரையும் தன்னுடைய நடனத்தால் கட்டிப் போட்டு
இருந்தாள்.ஒவ்வொரு வரிகளுக்கும் அவளுடைய முகத்தில் தெரிந்த பாவனையில் சுற்றி
இருந்தோர் வீழ்ந்து விட,அபிமன்யுவோ அவளது நடனத்தை பெருமையுடன் பார்த்துக் கொண்டு
இருந்தான்.அப்படியே திரும்பி அவளுடைய அன்னையை பார்க்க அவர் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.தன்னுடைய இத்தனை நாள் தவிப்பு
தீர்ந்து விட்ட ஒரு முகபாவனை அவரிடத்தில்.
சஹானா ஆடி முடித்த அந்த நொடி மொத்த அரங்கமும் கை தட்டலால் நிறைந்தது.மொத்த
அரங்கமும் மகிழ்ச்சியால் நிறைந்து இருக்க ஒரே ஒருவர் மட்டும் உள்ளுக்குள் குமுறிக்
கொண்டு இருந்தார்.ஆனால் அவரால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை.
சஹானா ஆடி
முடித்ததும்,அபிமன்யு மேடைக்கு ஏறி சஹானாவின் நடனத்தை பற்றி வாய் ஓயாமல் புகழ்ந்து பேசிவிட்டு அதன்பிறகு அவளது தாயை மேடைக்கு
அழைத்தான். சஹானாவின் அம்மாவை பற்றி பாராட்டி பேச பேச அரங்கமே கரகோஷத்தால்
நிறைந்தது.அபிமன்யு அவர்களின் சொந்த வாழ்வை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல்
அவர்களின் முயற்சியையும்,உழைப்பையும் பற்றி பேசினான்.அபிமன்யு அவ்வளவு சீக்கிரம்
யாரையும் புகழ்ந்து பேசி விட மாட்டான் என்பதால் மொத்த அரங்கமும் கை தட்டல்களால்
நிறைந்து இருந்தது.அதே அறையில் ஒரு ஓரத்தில் இருந்து இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த
துரைசாமியின் முகம் அவமானத்தில் விழுந்து விட்டது.
‘இத்தனை வருடம் போராடி மனைவியை ஆட விடாமல் செய்தும் கடைசியில் அவள் ஜெயித்து
விட்டாளே. ஒன்றுமே சொல்லாமல் அமுக்குணி மாதிரி இருந்து கொண்டு சத்தமே இல்லாமல்
அவளுடைய அம்மாவுக்கு உதவி இருக்கிறாளே இந்த விஷ்வா.அதுவும் எனக்கு தெரியாமல் என்னை
ஏமாற்றி.பொட்டக் கழுத...’ இவளை என்று ஆத்திரத்தில் மனதுக்குள் மகளையும்
மனைவியையும் திட்டி விட்டு அதன்பிறகு அவருடைய மொத்த கோபமும் அபிமன்யுவின் மீது
திரும்பியது.
‘சும்மா ஊரில் இருந்தவர்களை இவன் தானே இப்படி சென்னைக்கு கூட்டி வந்து நடனம்
கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்து இன்று அரங்கேற்றத்தையும் நடத்தி முடித்து
இருக்கிறான்..’ இயல்பாகவே எழுந்த கர்வம் மேலோங்க அவர்களை எப்படியாவது வருத்தியே
தீர வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அங்கு நடந்த
அத்தனையையும் வயிறு எரிய பார்த்துக் கொண்டு இருந்தார் துரைசாமி.அவரால் சஹானாவையோ
,மேகலையையோ நெருங்கவே முடியவில்லை. அவ்வளவு கூட்டம்
அவர்களை சுற்றி.அங்கிருந்த அனைவரையும் சமாளித்து அபிமன்யு தான் அவர்களை
பாதுகாத்தான்.
ஒரு வழியாக மதிய
நேரம் தான் அவர்களை அவரால்
நெருங்கவே முடிந்தது.அவர்கள் அருகே சென்று அவர் மௌனமாகவே
நின்று கொண்டு இருந்தார்.அவர் முகம் அவமானத்தில் சிறுத்து இருந்தது.இத்தனை
வருடங்கள் கடந்து கணவருடனான தன்னுடைய மௌன விரதத்தை அந்த நொடி உடைத்தார் மேகலா.
“வாங்க...எப்போ
வந்தீங்க...முன்னாடியே எங்களை வந்து பார்த்து இருந்தா,முன் வரிசையில் அமர்ந்து
எல்லாத்தையும் பார்த்து இருக்கலாமே”
அவருடைய குரலில் கொஞ்சமும் கேலியோ கிண்டலோ கணவரை அவமானப்படுத்தும் சாயலோ இல்லை.
அவரின் அந்த இயல்பான பேச்சே துரைசாமியின் ஆத்திரத்தை மேலும் தூண்டியது.
“என்னடி
ஜெயிச்சுடோம்ன்னு திமிர்ல பேசறியா”
“இல்லைங்க...உங்ககிட்ட
இத்தனை நாள் பேசாமல் இருந்தது எங்கே கோபத்தில்
எதையாவது பேசி உங்களை வருத்தி விடுவேனோ என்ற பயத்தில்
தான்.ஏன்னா நான் உங்களை உண்மையா விரும்பி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.உங்களை
வருத்தப்பட வைத்தா அது எனக்கு தான் இன்னமும் வருத்தத்தை கொடுத்து விடும்.”
இதுவும் அவருக்கான
இன்னொரு சாட்டையடி.உன்னை நான் காதலித்து திருமணம் செய்து கொண்ட பட்சத்தில் என்னால்
உன் மனம் வருந்த செய்ய முடியவில்லை.ஆனால் நீ அப்படியா நடந்து கொண்டாய்...ஒவ்வொரு
நொடியும் என்னுடைய மனதை வருத்தப்படுத்திக் கொண்டு தானே இருந்தாய்.என்று கேளாமல் கேட்டது
அவரது வார்த்தைகள்.துரைசாமியின் மனசாட்சி அவரை கூறு போட
ஆரம்பித்தது.
“சரி
வா கிளம்பலாம்.ஊருக்கு போகணும்.”ஆத்திரத்தை
மறைத்துக் கொண்டு பேசினார் துரைசாமி.
“இப்போவேவா...ஒரு
ரெண்டு நாள் இங்கே இருந்துட்டு போகலாமே”அபிமன்யு
தன்மையாக பேசினான்.
“இல்லை
தம்பி...ஊரில் ஒரு சின்ன விருந்து வச்சு இந்த சந்தோசத்தை கொண்டாடலாம்ன்னு
இருக்கேன்.இப்போ கிளம்பினா சரியா இருக்கும்.போகலாமா?”தன்னுடைய
கோபத்தை முடிந்த வரை கட்டுக்குள் கொண்டு வந்து இயல்பாகவே பேசி எப்படியாவது அவர்களை
இங்கே இருந்து ஊருக்கு கூட்டிச்சென்று நாளை அந்த திருமணத்தை நடத்தி விட வேண்டும்
என்ற முடிவோடு இருந்தார்.
“நிஜமாவே
நீங்க தான் பேசறீங்களா? என்னால நம்பவே முடியல.எங்க மேல கோபமா இருப்பீங்கன்னு
நினைச்சேன்.ரொம்ப தேங்க்ஸ் அப்பா”சஹானா ஆனந்த
அதிர்சிக்கு உள்ளானாள்.
“சரிமா
கிளம்புங்க...மற்றதை பேசிக்கலாம்.ஊருக்கு போய் எல்லா ஏற்பாடும் செய்யணும் இல்லையா?” இத்தனை நாட்களில் அவர் இத்தனை கனிவாகவே
பேசியது இல்லை என்பதால் அவருடைய நடவடிக்கைகளை அவருடைய மனைவி
கூர்மையான பார்வையால் அளந்து கொண்டு இருக்க அபிமன்யு சட்டென பேசினான்.
“சரி
நீங்க கிளம்புங்க...நான் இங்கே கொஞ்சம் வேலை இருக்கு அதை எல்லாம் முடிச்சுட்டு
அங்கே வந்திடறேன்...எனக்கும் விருந்து உண்டு தானே”கேலியாக
கேட்டான்.
“உங்களுக்கு
இல்லாமலா? உங்களுக்கும் நாளைய விருந்தில் முக்கிய இடம் இருக்கு.” என்றவர் ‘
வாடா வா...நாளைக்கு உன் கண்ணு முன்னாடியே இவளுக்கு வேற ஒருத்தன் தாலி
கட்டப்போறான்.அதை பார்த்து நொந்தே சாவு’
என்று மனதில் கருவிக் கொண்டார் துரைசாமி.
கிளம்புவதற்கு
தயக்கம் காட்டிய மேகலையும்,சஹானாவும் அபிமன்யுவின் ஒற்றை கண் அசைவில் கிளம்புவதை
பார்த்த அவர் உள்ளுக்குள் கனன்று கொண்டு இருந்தார். ‘ஆடுங்க...ஆடுங்க
இன்னும் கொஞ்ச நேரம் தான் ஊருக்கு போனதும் எல்லாம் தலைகீழாக மாறிவிடும்.ஏன்னா அது
என் கோட்டை என்று நினைவில் அவர்களை அழைத்துக் கொண்டு மீண்டும் அவர்களின் காரிலேயே
ஊருக்கு சென்று விட்டார்.
அபிமன்யுவின் காரில்
வீட்டுக்கு வரும் வழி எல்லாம் மனைவி,மகள்,அபிமன்யு, அஞ்சலி என்று அனைவரையும்
மனதுக்குள் ஆன மட்டும் திட்டித் தீர்த்தார்.
ஊருக்குள் நுழைந்து அவர்கள் வீட்டுக்குள்
கார் நுழையும் போதே பட்டாசுகள் வெடித்து தெருவே அமர்க்களமான கொண்டாட்டமாக
இருந்தது. ‘மனுஷனுக்கு இருக்கிற கடுப்பில இது
வேறயா.இவனுங்க எதுக்கு இப்போ என் வீட்டு முன்னாடி இப்படி பட்டாசு வெடிக்கறாங்க’என்று சிடுசிடுப்புடன் காரை விட்டு
இறங்கியவர் அடுத்த நிமிடம் பேச்சே வராதவர் போல அதிர்ந்து நின்றார்.
அவருடைய வீட்டு
வாசலை அடைத்தவாறு பேனர் வைக்கப்பட்டு இருந்தது.அதில் சஹானா பரதம் ஆட மேகலை
அவருக்கு சொல்லித் தருவது போல ஒரு போட்டோ. அதை பார்த்தவர் அந்த
அதிர்ச்சியில் இருந்து மீளும் முன் அடுத்த அதிர்ச்சி அவரை தாக்கியது.அதற்கு
கொஞ்சம் தள்ளி வைக்கப்பட்டு இருந்த அடுத்த பேனர்.அபிமன்யு-சஹானாவின் திருமணத்திற்கு
வாழ்த்து தெரிவித்து நெஞ்சை பிடித்துக் கொண்டார் துரைசாமி.
“என்ன
அப்பா சந்தோசம் தாங்க முடியலையா?இன்னும் ஒரு நாளில் எப்படி கல்யாணத்தை முடிப்பது
என்று மாப்பிள்ளையிடம் கவலைப் பட்டீர்களாமே...ஆண்பிள்ளை நான் ஒருத்தன் இருக்கும்
போது நீங்கள் கவலைப்படலாமா?நீங்கள் இப்படி கவலைப்படக்
கூடாதுன்னு தானே நான் கூட அங்கே அரங்கேற்றத்துக்கு நேரில் வராமல் இங்கேயே இருந்து
கல்யாண வேலைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.”
“அப்புறம் அப்பா உங்களுக்கு இன்னும் ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல
போறேன்.நேத்து சஹானாவோட பரதநாட்டிய அரங்கேற்றத்தை இங்கே இருந்தே நம்ம ஊர் ஆட்கள்
எல்லாம் லைவா பார்த்தோம்.அதுக்கு மொத்த ஏற்பாடும் உங்க மாப்பிள்ளையோடது.நிச்சயம்
மட்டும் இதோ கொஞ்சம் நேரம் முன்னாடி தான் எங்களுக்கு வீடியோ கிடைச்சது.அதையும்
எல்லாரும் ஒண்ணா பார்த்து சந்தோசப் பட்டோம்.இனி நீங்க எதுக்கும் கவலைப்பட
வேண்டாம்.ஊர் ஆட்கள் ஆளுக்கு ஒரு வேலையா செஞ்சு தரேன்னு சொல்லி இருக்காங்க...நான்
பார்த்துக்கிறேன்.நீங்க நிம்மதியா ஓய்வு எடுங்க” என்று சொல்லி விட்டு அவன் அடுத்த
அடுத்த வேலைகளில் மூழ்கி விட்டான்.
அதன்பிறகு அவரிடம் பேசிய ஊர் மக்கள் அனைவரும் சஹானாவின் நடனத்தையும்,மேகலாவின் திறமையையும் பாராட்டி பேசியதோடு இதை எல்லாம் அனுமதித்த அவரின் ‘பெரிய
மனதை’ புகழ்ந்து பேசவும் அவர்களிடம் மறுத்து பேச முடியாமல் தவித்துப் போனார்.அன்று
இரவே அபிமன்யுவும் அவனுடைய பெற்றோர்களுடனும் அஞ்சலியுடனும் வந்து இறங்கி விட
அதன்பிறகு வேலைகள் மளமளவென நடந்தேறியது.
தனியே சிக்கிய
அஞ்சலியிடம் தன்னுடைய கோபத்தை காட்டவும் அவர் தவறவில்லை.அஞ்சலி அதை எல்லாம்
கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.தூசியை தட்டுவது போல தட்டி சென்று விட்டாள். “கட்டின மனைவியின் விருப்பத்துக்கே மதிப்பு கொடுக்க தெரியாத
நீங்க இந்த கல்யாணத்தை ஒழுங்கா நடத்துவீங்கனு எனக்கு நம்பிக்கை இல்லை.அது மட்டும்
இல்லை பொண்ணுங்களை கிள்ளுக்கீரையாக நினைச்சு நீங்க நடந்துகிட்ட முறைக்கு உங்களை
இன்னும் கொஞ்சம் வச்சு செய்யனும்னு என் மனசு சொல்லுது.என்ன செய்யலாம்?”அவரிடமே கேட்டாள் அஞ்சலி.
“என்ன
கிண்டலா...நீயெல்லாம் எனக்கு போட்டியா? உன்னை என்ன செய்வேன்னு தெரியாது.என்
கோபத்தை கிளப்பாம ஒழுங்கா உன் வீட்டு
ஆட்களை எல்லாம் கூட்டிக்கிட்டு இங்கே இருந்து போய்டு”
“அதெப்படி
சொல்ல வந்ததை சொல்லாமல் போக முடியும்...என் அண்ணனோட டான்ஸ் அகாடமியில் பரதம்
சொல்லிக் கொடுக்க நிரந்தரமாக அங்கேயே சென்னையிலேயே தங்கி விட முடியுமான்னு
ஆன்ட்டிகிட்ட கேட்கலாம்னு இருக்கேன்.நீங்க இந்த
கல்யாணத்தில் ஏதாவது இடைஞ்சல் செஞ்சீங்கன்னு வச்சுக்கோங்க...அப்புறம் அவங்களை நிரந்தரமா சென்னைக்கு கூட்டிக்கொண்டு
போய்டுவேன்” என்று மிரட்டலாக மொழிந்தவள்
அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
“அய்யரே
மந்திரம் சொல்லுங்க...மாப்பிள்ளை
தாலியை எடுத்துக் கட்டுங்க.”
குரல் கேட்க அபிமன்யு சஹானாவின் சங்கு கழுத்தில் தாலியை கட்டி தன்னில் பாதியாக
அவளை ஆக்கிக்கொண்டான்.அஞ்சலி நாத்தனார் முடிச்சு போட
பார்வதியும் ராஜேந்திரனும் மேடையில் நின்று அவர்களுடைய அருமை புத்திரனின் கல்யாண
வைபோகத்தை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தனர்.
“அப்பா
அட்சதையை போடுங்க..சந்தோசத்துல திக்குமுக்காடி இருக்கீங்க போல” என்றபடி அவருடைய கையை எடுத்து தானே அட்சதையை தூவச்
செய்தான் சத்யன்.
“எல்லாரும்
சேர்ந்து ஜெயிச்சுட்ட திமிர்ல இருக்கீங்களோ”
“நாங்க
எங்கே அப்பா ஜெயிச்சோம்?நீங்க சொன்ன
மாப்பிள்ளைக்கு தானே தங்கச்சியை கட்டிக் கொடுத்து இருக்கோம்.”பொங்கி
வந்த சிரிப்பை அடக்கி கொண்டே முகத்தை நல்லபடியாக வைத்துக் கொண்டு பேசினான் சத்யன்.
“எனக்கு
என்ன தெரியும்? இவனுக்கு தான் அன்னைக்கு நிச்சயம் செஞ்சாங்கன்னு தெரிஞ்சு இருந்தா
கண்டிப்பா ஒத்துக்கிட்டு இருக்க மாட்டேன்.அன்னைக்கு அவங்க
பேசும் போது கூட மாப்பிள்ளை ஏதோ ஸ்கூல் நடந்துவதாக தானே சொன்னாங்க”
“அது ஒண்ணும் இல்லைப்பா...டான்ஸ் அகாடமியும் ஒரு ஸ்கூல் தானே...அந்த
அர்த்தத்தில் சொல்லி இருப்பாங்க.”நமுட்டு சிரிப்புடன் பேசினான் சத்யன்.
“வேணாம்டா...பேசாம
வாயை மூடிக்கிட்டு போய்டு”
என்று பல்லை நறநறவென கடித்து தன்னுடைய கோபத்தை காட்டினார்.
“மாமா
எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க.”
என்று கூறியபடி சிரித்த முகத்தோடு அபிமன்யுவும் சஹானாவும் அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்.அபிமன்யு காதலியை
கைபிடித்த சந்தோசத்திலும் அவனுக்கு அருகில் கழுத்தில் புதிதாக
கழுத்தில் ஏறிய பொன் மஞ்சள் தாலியுடன் கட்டி இருந்த ரோஜா நிற சேலைக்கு இணையாக
அவளுடைய கன்னங்கள் போட்டி போட மின்னிக் கொண்டு இருக்க சஹானா தேவதையை போல
இருந்தாள்.திருமணம் முடிந்த அடுத்த நொடியில் பிடித்த அவளது கரங்களை ஒரு நிமிடம்
கூட அவன் விடுவிக்கவில்லை.
கணவனின் செய்கையில்
நாணம் ஒருபுறம் தோன்ற அவளது முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைப்பதற்க்காக அபிமன்யு செய்த சின்ன சின்ன
சீண்டல்களில் அவள் மனம் சிணுங்கலாயிற்று.பெரும் முயற்சி செய்து அவனது செய்கைகளை
கண்டுகொள்ளாமல் இருக்க முயற்சித்தாள்.பின்னே நிமிர்ந்து பார்த்தால்தான் அவன் அவளை
பார்த்து கண்ணடித்து வைக்கிறானே.இப்பொழுது மட்டுமா? நேற்று இங்கே ஊருக்கு வந்து
இறங்கியதில் இருந்தே இப்படித் தான்.மற்றவர் முன் கண்ணடித்து வைப்பான்.யாரும்
அறியாமல் சத்தம் இல்லாமல் அவளை கிள்ளி விட்டு நல்ல பிள்ளை போல அமர்ந்து
கொள்வான்.சஹானா தான் வெட்கத்தில் முகம் எங்கும் சிவக்க அங்கிருந்து ஓடிக் கொண்டு
இருந்தாள். ‘இப்பொழுது எங்கே ஓடி விடுவாய் என்ற
பாவனையுடன் தாலி கட்டிய கையுடன் அவளை நோக்கி ஒற்றை புருவத்தை உயர்த்தி அவளைப்
பார்த்து கண்களால் சிரிக்க அவள் தான் வெட்கத்தில் முகம் சிவக்க பார்வையை திருப்பிக் கொள்ள
வேண்டியதாயிற்று.
கல்யாணம்
முடிந்து அனைவரும் சாப்பாட்டு பந்தியில்
சாப்பிட்டுக் கொண்டு இருக்க துரைசாமி மட்டும் சாப்பிடும் உணவு உள்ளேயும் போகாமல்
வெளியே துப்பவும் முடியாமல் முழித்துக் கொண்டு இருந்தார். ‘மேகலை
நிஜமாகவே கிளம்பி சென்னைக்கு போய் விடுவாளோ’
இந்த கேள்வி தான் அவரின் மனதை வண்டாக குடைந்து கொண்டு இருந்தது.
‘எப்படி
அவளிடம் கேட்பது?’ என்ற யோசனையில் இருந்தவர் சாப்பாடு
பரிமாறுவதற்காக அருகில் வந்த மனைவியின் கைகளை பிடித்து கொண்டார். ‘என்ன என்ற அவரின் கேள்விக்கு எப்படி
பதில் சொல்வதென்றே தெரியாமல் தலையை ஒன்றும் இல்லை எனும் விதமாக இடமும் வலமும்
ஆட்டவும் மேகலா அடுத்த வேலையை கவனிக்க தொடங்கி விட்டார்.
இத்தனை வருடம் கழித்து மனைவியின் முகத்தில் தெரிந்த அந்த
பூரிப்பு,மகிழ்ச்சி, பெருமை அத்தனையும் மகளுடைய திருமணத்தினால் மட்டுமே ஏற்பட்ட
ஒன்று அல்ல என்பதை உணர்ந்தார் துரைசாமி.தான் செய்த செயல் சரியா தவறா என்று
வெகுகாலம் கழித்து அவருடைய மனம் எண்ணத் தொடங்கியது.
திருமணம் முடிந்து
எல்லாரும் துரைசாமியின் வீட்டிற்கு வந்ததும் அஞ்சலி மெதுவாக அந்த பேச்சை
எடுத்தாள். “ஆன்ட்டி அண்ணாவோட அகாடமியில் பரதம்
சொல்லிக் கொடுக்க ஒரு நல்ல ஆள் தேவையா இருக்காங்க...நீங்க விருப்பபட்டா அங்கே
வந்து சேர்ந்துக்கலாம்.உங்களுக்கும் சந்தோசமா இருக்கும்.என்ன சொல்றீங்க”
மனைவி என்ன சொல்ல
போகிறாளோ என்று துடிக்கும் இதயத்தோடு துரைசாமி பார்த்துக் கொண்டு இருக்க,கணவனின்
முகத்தையே பார்த்தவாறு தான் வரவில்லை என்று சொல்லி விட்டார்.
அவர் வரவில்லை என்று
சொன்னதும் சஹானாவின் முகம் கூம்பி விட சட்டென்று அந்த முடிவை எடுத்தான் அபிமன்யு. “இதோ பாருங்கள் அத்தை...உங்களுக்கு அங்கே
வந்து தங்க பிடிக்கலைனா பரவாயில்ல.அதுக்கு பதிலா நான் வேற யோசனை சொல்றேன்.அது
ஓகேவானு பாருங்க...நான் உங்களுக்கு இந்த ஊரிலேயே ஒரு டான்ஸ் ஸ்கூல் ஏற்பாடு செய்து
தருகிறேன்.அதில் உங்க ஊர் பிள்ளைங்களுக்கு நீங்க இலவசமா பரதம் சொல்லிக் கொடுத்தால்
என்ன?” என்ற கேள்வியை கேட்டு முடிக்கும் முன்
அவர் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியே அவரது சம்மதத்தை தெரிவிக்க மொத்த குடும்பமும்
மகிழ்ச்சியில் திளைத்தது.
தன்னுடைய முக
வாட்டம் எதனால் ஏற்பட்டது என்பதை கணித்து நொடியில் அதற்கு ஒரு அழகான முடிவையும்
சொன்ன தன்னுடைய கணவனை கண்களில் காதல் பொங்க பார்வையிட்டாள் சஹானா.அவளுடைய பார்வையை
உணர்ந்த அவளுடைய கணவன் , “என்ன
கதகளி ஆட ரெடியா இருக்கியா...உனக்கு தெரியுமா இல்லை நான் சொல்லித் தரட்டுமா?இல்லை
இல்லை அத்தைகிட்ட நீ எனக்கு சொல்லி தருவதாக தானே சொன்ன...இன்னைக்கு நைட் எனக்கு
சொல்லிக் கொடுக்கணும் மறந்துடாதே”என்று
அவளின் காதோரம் மெல்ல முணுமுணுத்தவன் வெறும் கதகளி இல்லை...காதல் கதகளி என்று தான்
சொன்னது நினைவில் வர செந்தூரமென சிவந்து விட்ட தன்னுடைய முகத்தை எப்படி மறைப்பது
என்று தெரியாமல் குனிந்து கொண்டாள் சஹானா.
இனி அவர்களின் காதல் பயணம் திருமணம் என்னும் பந்தத்தோடு சிறப்பாகவே செல்லும்
என்ற நம்பிக்கையுடன் நாமும் அவர்களிடம் இருந்து விடை பெறுவோம்.
----------------
சுபம் ------------
.jpg)
கருத்துரையிடுக