அத்தியாயம் 40
சஹானா அவளுடைய
அறையில் அழுதே கரைந்து கொண்டு இருந்தாள்.இத்தனை நாள் ஆசைப்பட்ட பரதநாட்டிய
அரங்கேற்றம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் பொழுது அதை தவற விட்டு
விட்டாளே.எவ்வளவு பாடு! எத்தனை கஷ்டம்! அத்தனையும் வீணாகி விட்டதே...அது மட்டுமா தான் மட்டுமே உணர்ந்து கொண்ட தன்னுடைய காதலை
அபிமன்யுவின் முகம் பார்த்து இன்னும் அவள் சொல்லவே இல்லையே.தன்னுடைய காதல் கை
கூடாவிட்டாலும் அதை சொல்லக் கூட தன்னால் முடியவில்லையே என்று எண்ணி எண்ணி
வருந்தினாள் சஹானா.அவள் துடைக்க துடைக்க கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டு
இருந்தது.கதறும் சஹானாவை தேற்றும் வழி அறியாது சத்யன் அவளுக்கு அருகில் அமர்ந்து
அவளது தலையை ஆறுதலாக தடவிக் கொடுத்த படியே பேசிக்
கொண்டு இருந்தான்.
“இது எப்படி
நடந்துச்சுன்னு எனக்கு தெரியலை விஷ்வா...நான் ரொம்ப ஜாக்கிரதையா தான் இருந்தேன்.நீ
அழாதேடா.நமக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கு.நான் ஏதாவது
முயற்சி செய்யுறேன்.இந்த முறை உன்னுடைய அரங்கேற்றத்தை நீ
முடித்தே ஆக வேண்டும்.அதுக்கு என்ன செய்யணுமோ அதை செஞ்சே தீருவேன்.”
“வேண்டாம்
அண்ணா...நீ ஏதாவது முயற்சி செய்தால் அது அம்மாவை தான் பாதிக்கும்.விட்டுடு.அம்மா
பாவம் ஏற்கனவே ரொம்ப நொந்து போய் இருக்காங்க.இனியும் அவங்களை நோகடிக்க வேண்டாம்.”
இவர்கள் பேசிக்
கொண்டு இருக்கும் போதே, “சத்யா” என்று அழைத்தபடியே உள்ளே வந்தார்
துரைசாமி.
“சத்யா
இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்க? இந்நேரம் நீ நம்ம வாழைத்தோப்புல
தானே இருக்கணும்.இன்னைக்கு அங்கே உரம் வைக்க சொல்லி இருக்கோம்.நீ இங்கே இருந்தா
அங்கே வேலை எப்படி நடக்கும்...கிளம்பு போ”அவனை
அங்கிருந்து வெளியேற்ற முயற்சித்தார்.
“அப்பா...ப்ளீஸ்
சஹானாவை சென்னைக்கு அனுப்பலாம்.அவ பெருசா ஒண்ணும் ஆசை படலையே.சின்ன
பொண்ணுப்பா.அவளோட ஆசையை நிறைவேத்துறது நம்ம பொறுப்பு தானே...உங்களுக்கு தெரியாம நான் தான் இதை எல்லாம் செஞ்சேன். தப்பு தான்.அதுக்காக என்னை
தண்டிச்சுடுங்க.அவ ரொம்ப பாவம் .அவ போகட்டும்ப்பா ப்ளீஸ்!.”
“எதுக்கு?என்னை
தோற்கடிக்கவா?” கூர்மையாக வந்து விழுந்தன வார்த்தைகள்.“என்ன நினைச்சுக்கிட்டு இருக்கிற நீ உன்
மனசில? புதுசா எதிர்த்து எல்லாம் பேசுற...என்னோட முடிவில் எந்த மாற்றமும் இல்லை
சத்யா...நீ கிளம்பி வாழை தோப்புக்கு போ”
“அப்பா
இதுவரை உங்களை நான் எதிர்த்து பேசியது இல்லை.இனியும் நான் நல்ல பிள்ளையாகவே
இருக்கணும்னா நீங்க ஒரு நல்ல அப்பாவாக இருங்க...உங்களால ஒரு நல்ல கணவனா தான்
இருக்க முடியலை அட்லீஸ்ட் ஒரு நல்ல அப்பாவா இருங்க...”
“என்னடா
ரொம்ப பேசுற...அப்படி என்ன செய்யலை நான்.இருப்பதை விட்டு விட்டு இல்லாததை நினைத்து
அவள் தான் தன்னை தானே வருத்திக்கிறா.இதுக்கு நான் எப்படி பொறுப்பு ஆவேன்?
இங்கே என்ன குறை அவளுக்கு?மாளிகை மாதிரி வீடு,கூப்பிட குரலுக்கு ஓடி வர
வேலையாட்கள்,அள்ள அள்ள குறையாத பணம்,விதவிதமான நகை,புடவை,முத்துப் போல நீங்க
ரெண்டு குழந்தைங்க...இன்னும் என்ன குறை அவளுக்கு...அவளுக்கு தான் பைத்தியம்
பிடிச்சு இருக்குனா நீயும் என்னவோ அவ கூட சேர்ந்து பேசறியா?போ...போய் வேலையை
பார்.”எரிச்சலாக சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறப் போனவரை தடுத்து நிறுத்தியது
மகனின் குரல்.
“முடியாது
அப்பா...இந்த வீட்டில் ஏற்கனவே ஒரு பெண்ணுடைய அழுகை குரல் இரவெல்லாம் ஒலித்துக்
கொண்டு இருக்கிறது.அதுவே போதும்.இந்த நிலை சஹானாவுக்கு வர நான் ஒருபோதும்
அனுமதிக்க மாட்டேன்.”தீர்மானமாக சொன்னான்
சத்யன்.
“என்னையே
எதிர்த்து பேசறியா? அந்த அளவுக்கு துணிந்து விட்டாயா நீ...வேண்டாம் நீ பாட்டுக்கு
எதையாவது செய்து வைக்காதே.அப்புறம் உன் அம்மாவின் நிலைமையை கொஞ்சம் நினைத்துப்
பார்”
இப்பொழுது சஹானா இடையில் புகுந்து சத்யனிடம் கெஞ்சத்
தொடங்கினாள். “அண்ணா வேண்டாம்.இந்த பிரச்சினையை
விடு.அம்மா பாவம்”
“நானும்
அதையே தான்மா சொல்றேன்.அம்மா பாவம்.இதுவரை இவரால அவங்க அனுபவிச்சது போதும்.இனியும்
அவங்க கண்ணீர் சிந்த நான் ஒத்துக்க மாட்டேன்.”
“என்ன
செய்து விடுவாய்”திமிராக வெளிவந்தது துரைசாமியின் குரல்.
“இன்னைக்கு
ராத்திரியே சஹானாவை சென்னைக்கு அழைத்துப் போகப் போகிறேன்”
“அப்படி
நீ அவளை அனுப்பி வைத்தால் உன்னுடைய அம்மாவை நிம்மதியாக விட்டு வைப்பேன் என்றா
நினைக்கிறாய்?” அவர் குரலில் அத்தனை அகங்காரம்
இருந்தது.
“தங்கையின்
ஆசையை நிறைவேற்ற உங்களை எதிர்க்க துணிந்த எனக்கு என்னுடைய அம்மாவை
காப்பாற்றவும் தெரியும்”
“வேணாம்
சத்யா...அப்புறம் மகன்னு கூட பார்க்க மாட்டேன்.என்னை எதிர்த்தா அப்புறம் விளைவுகள் மோசமா இருக்கும்”இறுகிய குரலில் மகனை
எச்சரித்தார்.
“நான் உங்க
பையன்...உங்ககிட்டே இருக்கிற அதே வீம்பு எனக்கும் இருக்குப்பா.இத்தனை நாள் உங்களுக்கு தெரிந்தால்
அதை தடுக்க முயற்சி செய்வீர்கள்.அம்மாவிற்கு மேலும் பிரச்சினை வரக் கூடாது என்று
தான் நான் அமைதியாக இருந்தேன்.இனியும் என்கிட்டே அதை எதிர்பார்க்காதீங்க.இந்த முறை
என் தங்கை தோற்கணும்னு நீங்க நினைக்கிறதை நான் நடக்க விட மாட்டேன்.”
“பொம்பளைங்க
ஜெயிச்சு என்ன ஆகப் போகுது சத்யா...வேண்டாம் நீ இதில் தலையிடாதே”
“பொண்ணுங்க
ஜெயிச்சா அந்த வீடே ஜெயிக்கும் அப்பா... பொண்ணுங்களை
தோற்கடிச்சுகிட்டே இருக்கிற வீடு எந்த ஜென்மத்துலயும் முன்னேறாது.புரிஞ்சுகோங்க
அப்பா... ப்ளீஸ்”
“என்னடா
எனக்கே புத்தி சொல்ற அளவுக்கு வந்துட்டியோ...கடைசியா சொல்றேன் சத்யா.ஒழுங்காக
என்னோட மகனா மட்டும் இரு...இல்லேன்னா விளைவுகள் விபரீதமா இருக்கும்.”
“உங்களுக்கு
மகனா மட்டும் இருந்தா என்னுடைய அம்மாவுக்கு நான்
ஒரு நல்ல மகனாவோ,என்னுடைய தங்கைக்கு ஒரு நல்ல அண்ணனாகவோ இருக்க முடியாது.இத்தனை நாள் உங்களுக்கு நல்ல
மகனா இருந்துட்டேன்.இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் நல்ல அண்ணனா
இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். நல்லா
கேட்டுகோங்க இன்னைக்கு ராத்திரி ட்ரைன்ல நான் சஹானாவை ஊருக்கு அனுப்பத் தான்
போகிறேன்.”அழுத்தம் திருத்தமாக உரைத்தான் சத்யா.
“பார்க்கலாம்டா...நான்
உனக்கு அப்பன்...என்ன செய்யணும் எப்படி செய்யனும்னு எனக்கு தெரியும்.இன்னைக்கு
பொழுது சாயுரதுக்குள்ள ஊரை சுத்தி என் ஆட்களை இறக்குறேன்.என்னை எதிர்க்கணும்னு
முடிவு செஞ்ச பிறகு பொண்டாட்டி, பிள்ளை, பொண்ணு யாராயிருந்தாலும் சரி.உங்களை ஒரு
வழி பண்ணாம விட மாட்டேன்”என்று சூளுரைத்தவர்
அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.
“என்ன
அண்ணா...இப்படி செஞ்சுட்ட...”சஹானாவின் குரலில் இனி நடக்கப் போகும் ஆபத்தை எண்ணி
துயரம் இருந்தது.
“இல்ல விஷ்வா இனியும் பொறுத்து இருக்க முடியாது.நீ
சென்னைக்கு கிளம்ப தயாரா இரு...நானும் பார்த்து விடுகிறேன்.இவரா ? நானான்னு?”
என்று கோபமாக சொல்லி விட்டு அறையை விட்டு வெளியேறி விட்டான்.
சஹானா உள்ளுக்குள்
போராடிக் கொண்டு இருந்தாள். ‘சென்னைக்கு
போய் என்னுடைய அரங்கேற்றத்தை முடித்து விடுவேனா இல்லை இங்கேயே இருந்து நானும்
அம்மாவை போலவே மாறி விடுவேனா’அவள்
தனக்குள் போராடிக் கொண்டு இருக்கும் போது அஞ்சலியின் குரல் கேட்க அது எல்லாம்
தன்னுடைய மனதின் பிரம்மை என்று ஒதுக்கி வைத்தவள் சட்டென சுதாரித்தாள். ‘பிரம்மை என்று ஒதுக்கித் தள்ள தனக்கு கேட்பது அபிமன்யுவின் குரல் இல்லையே
அஞ்சலியின் குரல் போல இல்ல இருக்கு.’என்றவள்
அறையில் இருந்து புயலென வெளியேறினாள்.
நடு ஹாலில் நின்று
கொண்டு இருந்த அஞ்சலி இவளை பார்த்ததும், “இன்னும்
இரண்டு நாளில் அரங்கேற்றத்தை வைத்துக் கொண்டு இங்கே என்ன செய்து கொண்டு
இருக்கிறாய்?...ம் சீக்கிரம் கிளம்பு”
‘என்ன
பதில் பேசுவது என்ற தெரியாமல் சஹானா முழித்துக் கொண்டு இருக்கும் போதே உள்ளிருந்து
சஹானாவின் அம்மா வந்தார்.
“இவங்க
தான் உங்க அம்மாவா? என்று கேட்டவர் அவளுடைய குழப்பமான தலையாட்டலில், “சீக்கிரம் கிளம்பு நமக்கு நேரம் ரொம்ப கம்மியா இருக்கு.”
‘இவள்
என்ன அவ்வளவு ஈஸியா சொல்றா...இந்த ஊரை விட்டு
அவ்வளவு சீக்கிரம் கிளம்ப முடியாதே’
“உனக்காக எங்க அண்ணன் அங்கே அந்த கிரிகிட்ட கத்தியில் குத்துப்பட்ட பிறகும்
கூட உன்னை காப்பாத்த அப்படி ஓடி வந்தான்.நீ என்னடான்னா உங்க அப்பா வந்து
கூப்பிட்டதும் அவரு பின்னாடியே ஆட்டுக் குட்டி மாதிரி வந்துட்ட...கிளம்பு
சீக்கிரம்...உடம்பில் அவ்ளோ பெரிய காயத்தை வச்சுக்கிட்டு என் அண்ணன் அரங்கேற்ற
வேலையை பார்த்துக்கிட்டு இருக்கார்.நீ என்னடானா ப்ளாக் அண்ட் ஒயிட் ஹீரோயின்
மாதிரி அழுதுகிட்டு இருக்க”
“அய்யயோ! என்ன சொல்றீங்க? அவருக்கு
உண்மையிலேயே அன்னைக்கு காயம் ஆச்சா?”
“ஆமா...யார்
செஞ்ச புண்ணியமோ கத்தி ரொம்ப ஆழமா குத்தலை.அந்த சூழ்நிலையில் கூட நிஷா தகவல்
சொன்னதும் ஹாஸ்பிடலில் இருந்து உன்னை
காப்பாத்த ஓடி வந்தார்.ஆனா நீ...”
“என்னால
அங்கே வர முடியாது.”
“நீ
மட்டும் தனியா வந்தா தானே பிரச்சினை...உன்னுடைய அம்மாவையும் கூட்டிக்கொண்டு வா...”சுலபமாக தீர்வு சொன்னாள் அஞ்சலி.
“அம்மாவையுமா?
அவங்க வருவாங்களான்னு தெரியலையே”
அவளுடைய பார்வை ஏக்கத்தோடு தாயை பார்த்தது.
“கண்டிப்பா
வருவாங்க...அவங்க பொண்ணோட அரங்கேற்றத்தை பார்க்கனும்னு அவங்களுக்கு மட்டும் ஆசை
இருக்காதா என்ன?”
தாய் அறைக்குள்
சென்று நொடியில் தயாராகி வந்ததை கண்டதும் மிகுந்த
மகிழ்ச்சி அடைந்த சஹானா கையில் வேறு எதையும் எடுத்துக்
கொள்ளாமல் வேகவேகமாக அங்கிருந்து புறப்பட்டனர்.வாசலுக்கு அருகில் செல்லும் போது ஒரு நொடி தாமதித்தவள் பின் மீண்டும் தன்னுடைய
அறைக்கு சென்று செல்போனை எடுத்து சத்யனுக்கு தகவல் சொல்லிவிட்டு பின் வாசல் வழியாக
முகத்தை மறைத்தபடி யாருக்கும் சந்தேகம் வராமல் வெளியேற தொடங்கினர்.
சத்யன்
துரைசாமியிடம் அன்று இரவு தான் சஹானாவை ஊருக்கு அழைத்துக் கொண்டு போவதாக சொல்லி
இருந்ததால் துரைசாமி அந்த நேரத்தில் உள்ளுரில் இருந்த தன்னுடைய ஆட்களை எல்லாம் ஒன்றாக திரட்டிக்
கொண்டு இருந்தார்.
சத்யன் புத்திசாலித்தனமாக அவர் இருக்கும்
இடத்தை தெரிந்து கொண்டு அவர் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் அவர்கள் பயணிக்க
வழி வகுத்தான்.போனில் சத்யனுடைய வழி காட்டுதலின் படி சஹானாவும் அவளுடைய அம்மாவும்
ஊருக்கு வெளியே வந்து விட அந்த இடத்தில் ஏற்கனவே காத்திருந்த அஞ்சலியின் காரில் போய் ஏறிக் கொண்டனர்.காரில் பயணிக்கும் போது
வழி எல்லாம் சஹானா அபிமன்யுவை பற்றி கேட்ட எந்த கேள்விக்கும் அஞ்சலி பதில் அளிக்கவில்லை.மகளின்
இந்த அதீத பதட்டத்தை ஆராய்ச்சிப் பார்வையோடு பார்த்துக் கொண்டு இருந்தார் மேகலா.
சஹானா அவளுடைய அம்மா
மேகலையுடன் அந்த ஊரை விட்டே சென்று விட்ட பிறகும் அது தெரியாமல் உள்ளுரில் தன்னுடைய ஆட்களுடன்
சேர்த்து திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தார் துரைசாமி.
அந்த மாலை நேரத்தில்
அஞ்சலி இருவரையும் அழைத்துக் கொண்டு ப்ளைட்டில் சென்னை வந்து இறங்கி
விட்டாள்.ஊரில் சத்யன் முகத்தை வெகு சீரியசாகவே வைத்து இருந்தான்.ஏனெனில் இன்னும்
இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய விஷயம் தந்தைக்கு தெரியாது.அவர்கள் பத்திரமாக
சென்று சேரும் வரை இந்த விஷயம் அவருக்கு தெரியாமல் இருப்பதே நல்லது என்ற
முடிவுக்கு வந்து இருந்தான்.
சஹானா அங்கே
சென்னைக்கு போய் சேர்ந்தவுடன் சத்யனுக்கு போன் செய்து தகவலை சொல்லி விட அதன் பிறகே கொஞ்சம் நிதானமானான்.இரவு
நெருங்க நெருங்க சத்யனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்துக்கொண்டே
இருந்த துரைசாமி மறக்காமல் மகளின் அறைக்கு வெளியே இரண்டு பேரை காவலுக்கும்
வைத்தார்.அந்தோ பரிதாபம்! காவலுக்கு ஆட்களை
வைத்தவர் உள்ளே மகள் இருக்கிறாளா இல்லையா என்பதை மட்டும் பார்க்காமல் விட்டு
விட்டார்.
சத்யன் இது எதையும்
கண்டு கொள்ளவே இல்லை.உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே தந்தையை அவன் பார்த்துக்
கொண்டு இருக்க,துரைசாமியின் கண்களுக்கு மகன் தான் அசரும் நேரம் பார்த்து மகளை
சென்னைக்கு அனுப்பப் பார்க்கிறானோ என்ற சந்தேகம் எழவும் கட்டுக்காவலை மேலும்
தீவிரப்படுத்தினார்.விடியும் வரை வீட்டில் ஒருவரையும் தூங்க விடாமல் தான் மட்டும்
நிம்மதியாக தூங்கி எழுந்த சத்யனை எதிர்கொண்டு இறுமாப்புடன் பேச ஆரம்பித்தார்
துரைசாமி.
“என்னடா?
என்னமோ நேத்து என்கிட்டயே சவால் விட்ட...உன் தங்கச்சியை இன்னிக்கு
ராத்திரி ஊரை விட்டு அனுப்பறேன்னு சொன்ன? இப்ப என்ன ஆச்சு பார்த்தியா? இதுக்குத்தான் பெரியவங்க கிட்ட மோதக்
கூடாதுன்னு சொல்றது...போ...போய் வேலையை பாரு.இனி இப்படி பேசிக்கிட்டு
இருக்காதே...போ”ஏதோ பெருந்தன்மையாக பேசுவது போல
காட்டிக் கொண்டாலும் அவரின் குரலும் கண்களும் அவரது அகந்தையை பறை சாற்றியது.
“மன்னிச்சுடுங்கப்பா” என்றவன் சிறிது இடைவெளி விட்டதும் , “ சரி சரி ஏதோ சின்ன புள்ளை தனமா செஞ்சுட்ட அதை எல்லாம் நான்
மன்னிச்சுட்டேன்.இனி நீயே போய் உன் தங்கச்சிக்கு சமாதானம் சொல்லு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப
நினைத்தவரை தடுத்து நிறுத்தியது சத்யனின் வார்த்தை.
“அவள்
இப்போ எங்கே இருக்கணுமோ அங்கே இருக்கிறாள்”
என்று அவன் சொன்ன வார்த்தை , அவன்
மன்னிப்பு கேட்டது எதற்காக என்பதையும் அவருக்கு புரிய வைக்க இது எப்படி
சாத்தியம் என்ற ஆத்திரத்துடன் மகனைப் பார்க்க அவனுடைய முகத்தில் இருந்த நிமிர்வில்
வேகமாக மாடிக்கு சென்று சஹானாவின் அறையை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவரை
வரவேற்றது காலியான அந்த அறை.
“எங்கேடா
சஹானா? எப்படி இது சாத்தியம்?எனக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பே இல்லையே?”என்று ஆத்திரத்தில் பேசிக் கொண்டே
போனவர் சத்யனின் சட்டையை கொத்தாக பற்றி இருந்தார்.
அவரின் கைகளை தள்ளி
விட்டு விட்டு , “இனி நீங்கள் என்னை கொன்றாலும் என்
வாயில் இருந்து ஒரு வார்த்தை வராது”
என்று சொன்னவன் அமைதியாக மீண்டும் தன்னுடைய அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டான்.
“எங்கே போய் இருக்க போறா...சென்னைக்கு தானே...இன்னும் ஒரு
நாள் இருக்கு.அவளை கண்டுபிடிச்சு மறுபடி இங்கே கொண்டு வந்து சேர்க்காமல் விட
மாட்டேன்” என்று சூளுரைத்தவரை நோக்கி ஒரு வெறுமையான பார்வையை செலுத்தி விட்டு பேச
தொடங்கினான் சத்யன்.
“வாழ்த்துக்கள்...தேடுங்க...சஹானாவை
மட்டும் தேடாம அம்மாவையும் தேடுங்க...அவங்களும் சேர்ந்து தான் போய்
இருக்காங்க...கட்டின பொண்டாட்டியும் பொண்ணும் வீட்டை விட்டு கிளம்பி
இருக்காங்க.அது நான் சொல்லித் தான் உங்களுக்கு
தெரியுது...அருமை போங்க” என்றவன் கதவை அறைந்து
சாத்தி விட்டு வந்து படுத்துக் கொண்டான்.
துரைசாமி அப்படியே
இடிந்து போய் விட்டார். ’இது எப்படி
சாத்தியம்...எங்கே தவறு நடந்தது?மகள் மீது மட்டுமே கவனம் செலுத்தி
மனைவியை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் போய் விட்டேனே...அவருடைய பொண்டாட்டி
அவரிடம் சொல்லாமல் வீட்டை விட்டு எப்படி வெளியே போனாள்?அதுவும் அவள் வீட்டை விட்டு
வெளியே போக மாட்டாளே...இப்பொழுது போய் இருக்கிறாள் என்றால் அதற்கு என்ன
அர்த்தம்?இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் என்ன ஆவது...இல்லை அப்படி நடக்க கூடாது
அவளை நான் இங்கே கொண்டு வந்தே தீருவேன்’
என்று மனசுக்குள் சூளுரைத்தவர்
தன்னுடன் யாரையும் அழைத்துக் கொண்டு செல்லாமல் தான் மட்டுமே தனித்து சென்னைக்கு பயணமானார்.பயணத்தின் போது வழியெங்கும் அவரது நினைவில் இருந்தது
அவருடைய மனைவி மட்டுமே.
சென்னையில்
சஹானாவும் அவருடைய அம்மாவும் அபிமன்யுவின் வீட்டிற்கு வந்து சேர்ந்த அடுத்த
நிமிடம் அபிமன்யு அவர்களுடன் வேறு இடத்திற்கு சென்று விட்டான்.இங்கே இருந்தால்
நிச்சயம் சஹானாவின் அப்பா தங்களை தேடி இங்கே வரக் கூடும் என்ற எண்ணத்தினால்
தன்னுடைய நண்பனின் கெஸ்ட் ஹௌசில் அவர்களை பாதுகாப்பாக தங்க வைத்து விட்டு
அரங்கேற்ற வேலைகளை கவனிக்க புறப்பட்டு விட்டான்.
அபிமன்யுவை பார்த்த
நொடி முதல் அவனுடன் ஒரு நொடி தனித்து பேசி விட மாட்டோமா என்று சஹானா உள்ளுக்குள்
தவித்துக் கொண்டு இருக்க அபிமன்யுவோ அவளது முகத்தை மறந்தும் கூட நிமிர்ந்து
பார்க்கவில்லை...
எப்படி பேசுவது
என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அபிமன்யு அங்கிருந்து வெளியேறி
விட்டான்.அபிமன்யுவிற்கு வேலை அதிகம் என்று தெரிந்து இருந்தாலும்
அவனிடம் தனித்து பேசி அவனுடைய உடல் காயம் ஆறி விட்டதா என்று தெரிந்து கொள்ள
முடியாமல் போனதில் முகம் வாடலானாள்.மகளின் வாடிய முகத்தில் இருந்து மேகலாவுக்கு மகளின்
மன உணர்வுகள் என்னதென்று புரிய ஆரம்பித்தது.
இது ஒருபுறம் இருக்க
மாலை நெருங்கும் நேரத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்த துரைசாமி நேரே அபிமன்யுவின்
வீட்டுக்கு வந்து அவர்களை தேட ஆனால் அந்த வீட்டில் அவரை வரவேற்க வேலையாட்கள்
மட்டுமே இருந்தனர்.அவரின் அதட்டல் மிரட்டல் எதற்கும்
அவர்கள் சிறிதும் அசைந்து கொடுக்காமல் சொல்லி வைத்தாற் போல “எங்களுக்கு தெரியாது”
என்ற ஒரே பதிலை சொல்லி அவரை மண்டை காய வைத்தனர்.
விடிந்தால்
சஹானாவின் அரங்கேற்றம் என்ன செய்வது எங்கே போய் தேடுவது என்று தவித்துக் கொண்டு இருந்தார்.விடிய விடிய எவ்வளவு முடியுமோ அவ்வளவு
அலைந்தார்.ஆனால் அவருக்கு தகவல் தான் கிடைத்த பாடில்லை.
விடிந்த பிறகு அவர்களை தேடியது போதும் இனி அவர்கள் கிடைக்கவே வாய்ப்பு இல்லை
என்று அவர் சோர்ந்து போன அந்த நேரத்தில் தான் அவருக்கு அஞ்சலியின் அழைப்பு வந்தது.அவரை தேடி
அவளே அவர் தங்கி இருக்கும் ஹோட்டலை போனில் விசாரித்து விட்டு வந்தாள்.எந்த வித தேவையில்லாத
அலங்கார வார்த்தைகளும் இன்றி நேரே விஷயத்திற்கு வந்தாள்.
“உங்க
பொண்ணும்,பொண்டாட்டியும் எங்கே இருக்காங்கனு எனக்கு தெரியும்.”
“யார் நீ”
“சுத்தம்...உங்களை சஹானா இங்கே இருக்கும் விஷயத்தை சொல்லி அவளை அழைத்து போக
சொன்னதே நான் தான்”
“ஓ...போனில் பேசிய பெண் நீ தானா...சரி என் பெண்டாட்டியும் பெண்ணும் இப்போ
எங்கே இருக்காங்க...”
“சொல்றேன் அதுக்கு முன்னாடி உங்க கிட்ட கொஞ்சம் டீல் பேச வேண்டி இருக்கு.”
“என்ன சீக்கிரம் சொல்”
“இதோ பாருங்க...நான் உங்க பொண்ணு இங்கே இருக்கிறதை உங்களுக்கு தெரிய
படுத்தினதுக்கு ஒரு முக்கியமான காரணம் அவங்க என்னோட அண்ணனை கல்யாணம் செஞ்சுக்க
கூடாதுன்னு தான்.ஆனா இப்போ நிலைமை நம்ம கையை மீறி போய்டுச்சு...அதனால எனக்கு நீங்க
ஒரு உறுதிமொழி தரணும்...”
“என்னனு கொஞ்சம் சீக்கிரம் சொல்லு...எனக்கு இன்னைக்கு என் பொண்ணோட அரங்கேற்றம்
நடக்க கூடாது அது மட்டும் தான் வேணும்.” அவர் குரலில் ஆத்திரம்,அவசரம்,பரபரப்பு,
இயலாமை எல்லாம் கலந்து இருந்தது.
“நாளைக்கே உங்க பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும்...அதுவும் நான் சொல்ற
பையனோட...”
“அதெல்லாம் சரியா வராது...நீ சொல்ற பையன் யாரோ என்னமோ...வசதி எப்படி,குலம்
,கோத்திரம் ஒண்ணுமே தெரியாம நான் எப்படி ஒத்துக்கிறது”
“அப்போ உங்க பொண்ணும்,பொண்டாட்டியும் எங்கே இருக்காங்கனு நான் சொல்ல மாட்டேன்”
கிடுக்கிப் பிடி போட்டாள் அஞ்சலி.
சற்று நேரம் இருந்து அவரது முக பாவத்தை வைத்து அவரது மனதை கணிக்க முயன்றவள்
கிளம்புவது போல பாசாங்கு செய்தாள்.
“நில்லு...நில்லு...எனக்கு சம்மதம்...இப்போ என்னை அங்கே கூட்டிக்கொண்டு போ”
“ஹா ஹா...நல்ல விவரமா தான் இருக்கீங்க...உங்க வேலை முடிஞ்சதும் நீங்க அப்படியே
உங்க பொண்ணை கூட்டிக்கொண்டு போயிட்டிங்கன்னா அப்புறம் எங்க அண்ணன் மறுபடி உங்க பெண்ணை தேடி வந்து அவளை
கல்யாணம் செய்து கொண்டு விடுவான்.அது நடப்பதில் எனக்கு துளியும்
இஷ்டமில்லை.அதனால...”
“அதனால...”துரைசாமியின் பார்வையும் கூர்மையானது.
“இப்பவே
இங்கேயே உங்க பொண்ணோட நிச்சயத்தை நடத்தி முடிச்சுடுங்க...”
“இப்பவேவா...அதுவும்
இங்கே எப்படி...பொண்ணும் இல்லை, மாப்பிள்ளையும் இல்லை.எப்படி நிச்சயத்தை
நடத்துவது?”யோசனையாக
தாடையை தடவினார்.
“அதெல்லாம்
நான் பார்த்துக்கிறேன்” என்றவள் அடுத்து
மடமடவென காரியங்களில் இறங்கி மணமகன் வீட்டாரை வரவழைத்து நடந்த நிகழ்வை எல்லாம்
மறக்காமல் தன்னுடைய கேமராவில் வீடியோ
எடுத்துக் கொண்டாள். “நீங்கள் பேச்சு மாறி
விடக் கூடாதே” என்ற வார்த்தையை சொல்லவும் மேற்கொண்டு
எதையும் பேசாமல் வாயை இறுக மூடிக் கொண்டார்.
நொடிகளில் மகளின்
திருமண நிச்சயத்தை நடத்தி விட்டார்.அவருடன் அவருடைய குடும்பத்தார் யாருமே இல்லை.மாப்பிள்ளை பையன் என்ன செய்கிறான் என்று கூட அவர் தெரிந்து
கொள்ள விரும்பவில்லை.அதற்கு காரணம் ஒருவேளை இதை அவர் மறுத்தார் என்றால் அவருடைய
மனைவியிடமே அவர் தோற்க வேண்டி இருக்குமே.பேச்சு வாக்கில் மாப்பிள்ளை ஏதோ ஸ்கூல்
வைத்து நடத்துவதாக அவரது காதில் விழுந்தது.அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர்
நிச்சயத்தை முடித்து விட்டு அஞ்சலியுடன் அரங்கேற்றம் நடக்கும் இடத்துக்கு
விரைந்தார்.

கருத்துரையிடுக