Kadhal kathakali Tamil novels 39 - pre final

 

அத்தியாயம்  39

கார் நேராக அபிமன்யுவின் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தது.காரில் இருந்து ஒருவர் பின் ஒருவராக அஞ்சலி,சஹானா,அபிமன்யு மூவரும் இறங்கி வீட்டின் உள்ளே சென்றனர்.அஞ்சலி கண்ணாலேயே அபிமன்யுவிடம் மன்னிப்பை வேண்டினாள். அவளுடைய பார்வைகள் எதையும் அவன் உணர்ந்து கொண்டது போலக் கூடக் காட்டிக் கொள்ளவில்லை.

அபிமன்யுவின்  முகம் இரும்பென இறுகிப் போய் இருந்தது.அபிமன்யுவின் இந்த நடவடிக்கை கண்டு உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள் அஞ்சலி. தனித்து இருக்கும் பொழுது அண்ணனை சமாதானம் செய்து விட்டால் எல்லாம் சரி ஆகி விடும் என்று நம்பினாள் அஞ்சலி. வீட்டின் உள்ளே நுழைந்தவர்களை முதலில் எதிர் கொண்டது துரைசாமி தான்.அதாவது சஹானாவின் தந்தை.

அங்கிருந்த ஒருவரிடமும் ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை.அங்கிருந்த யாருமே அவர் கண்களுக்கு தெரியாதது போல ஒரு பாவனை அவரிடத்தில். கூர்மையான பார்வையோடு சஹானாவையே பார்த்துக் கொண்டு இருந்தவர், இன்னும் அரை மணி நேரத்தில் ஊருக்கு ட்ரைன் ஏற வேண்டும்.போய் உன்னுடைய பெட்டியை எடுத்துக் கொண்டு வா அவரின் குரலில் இருந்தது அதிகாரமா,ஆத்திரமா பிரித்தறிய முடியவில்லை ஒருவராலும்.

மாடிக்கு செல்லாமல் ஒரு நொடி சஹானாவின் நடை தேங்கி நின்று அபிமன்யுவை ஒரு பார்வை பார்த்தாள்.அபிமன்யுவின் கண்களில் அத்தனை வேதனை இருந்தது.சஹானாவின் கண்களில் இருந்து இதோ கண்ணீர் வழியப் போகிறேன் என்பது போல எந்நேரமும் வழிய தயாராக இருந்தது.

அவளுடைய கண்ணீரை துடைக்க நீண்ட கைகளை பெரும்பாடு பட்டு கட்டுப்படுத்திக் துரைசாமியிடம் பேச முயற்சித்தான்.

அய்யா...

அபிமன்யு பேச முயற்சிப்பதை தெரிந்து கொண்டு வேண்டுமென்றே அபிமன்யுவை புறக்கணித்துவிட்டு மகள் புறம் திரும்பி பேசலானார் .“இன்னும் கிளம்பாமல் நின்று கொண்டு இருக்காதே விஷ்வா...கிளம்பு நமக்கு நேரமில்லை.அங்கே ஊரில் உன்னுடைய அம்மா காத்துக் கொண்டு இருப்பாள்.நினைவு இருக்கிறது இல்லையா? அதுவரை எப்படி கிளம்புவது என்று தயங்கியபடி நின்றவள் அம்மா என்ற வார்த்தையில் உடல் விறைப்புற வேகமாக மாடிக்கு சென்று நிமிடங்களில் தன்னுடைய பெட்டியை எடுத்துக் கொண்டு கீழே வந்து விட்டாள் சஹானா.

கீழே வந்தவுடன் துரைசாமி அவளை அழைத்துக் கொண்டு வாசல்படியை தாண்டும் முன் ஒரே ஒரு நொடி அபிமன்யுவை மட்டும் ஒரு பார்வை பார்த்து விட்டு,கண்களில் இருந்து கண்ணீர் வழிய வேகமாக தன்னுடைய தந்தையை பின் தொடர்ந்தாள் சஹானா.

முடிந்தது...எல்லாம் முடிந்தது என்ற எண்ணம் நெஞ்சில் எழ சோர்ந்து போய் அப்படியே  சோபாவில் தொப்பென விழுந்தான் அபிமன்யு.

அண்ணா என்று கூவியபடி ஓடி வந்த அஞ்சலியை நோக்கி ஒரு வெறுமையான பார்வையை செலுத்தி விட்டு ஒன்றுமே பேசாமல் எழுந்து தன்னுடைய அறையை நோக்கி செல்ல தொடங்கினான்.

அபிமன்யுவின் வெறுமையான பார்வை நெஞ்சை தாக்க எப்படியாவது அண்ணனை சமாதானப் படுத்த வேண்டும் என்ற நினைவுடன் பேச தொடங்கினாள் அஞ்சலி.

அண்ணா...நான் செஞ்சது தப்பு தான். உனக்கு மனிஷாவை மனைவியா ஆக்கணும்னு நினைச்சு நான் செய்த எல்லாமே தப்பு தான்.நான் ஒத்துக்கிறேன்.ஆனா அதுக்காக நீ ஏன் இவ்வளவு வருத்தப்படற? இவளை விட்டா வேறு பெண்ணா இல்லை...நான் பார்க்கிறேன் அண்ணா...உனக்கேத்த மாதிரி ஒருத்தியை.இவளை விட அழகா, பணக்காரியா...இதுக்காகவா நீ இவ்வளவு தூரம் உடைஞ்சு போய் இருக்க.அந்த பட்டிக்காட்டை விட...

அவள் பேசி முடிக்கும் முன் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான் அபிமன்யு. ஒற்றை விரலை உயர்த்தி அஞ்சலியை எச்சரித்தான்.

“இதை நான் முன்னாடியே செய்து இருக்கணும்.ஏதோ சின்னப் பொண்ணு உலகம் தெரியாதவ.நாளாக நாளாக நீயே புரிஞ்சுப்பன்னு நினைச்சேன் அது என் தப்புன்னு இப்ப தான் புரியுது. என்ன சொன்ன பட்டிக்காடா? அவள் பண்பாடு தெரிஞ்சவ.அதனால தான் இந்த வீட்டிலும் சரி வெளியிலும் சரி நீ அவ்வளவு தொல்லை கொடுத்தும் உன்னை காயப்படுத்தாமல் இருந்தாள் அவள்.நீ தேடி அலைந்து பார்த்து வைத்தாயே மனிஷா, அவளிடம் நீ இதே வேலையை செய்து இருந்தால் இந்நேரம் நீ செத்த இடத்தில் புல் முளைத்து இருக்கும்.”

இத்தனை நாள் நிஷாவை உன்னோடு கூட்டு சேர்த்துக் கொண்டு நீ செய்த எதுவும் எனக்கு தெரியாது என்றா நினைக்கிறாய்?நிஷா இங்கே வந்து இறங்கிய அன்றே என்னிடம் சொல்லி விட்டாள்.அது அத்தனையும் தெரிந்தும் ஏன் உன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் இருந்தேன்?ஏன்னா எனக்கு நீ முக்கியம்...உன்னோட விருப்பம் முக்கியம்னு நான் நினைச்சேன்.ஆனா நீ அப்படி நினைக்கவே இல்லையே..

நான் உன்னோட அண்ணன் அஞ்சலி.என் மனசுக்கு ஒரு பெண்ணை பிடிச்சு இருக்குன்னு நான் சொன்னா அந்த பெண் நல்லவளான்னு நீ பார்த்து இருந்தால் உனக்கு என் மேல் அக்கறை இருக்குனு நான் சந்தோசப் பட்டு இருப்பேன்.ஆனால் நீ...சே!”

உன்னை விட அந்த மனிஷாவும் எவ்வளவோ மேல்...இப்போ கூட சஹானாவை என்னை விட்டு பிரிச்சுட்டன்னு நான் உன்னை அடிக்கலை...நீ என்னுடைய காதலை பிரித்து இருந்தால் கூட அதை நான் பொறுத்துக் கொண்டு இருப்பேன்.ஏன்னா உன் மேல நான் அவ்வளவு பாசம் வச்சு இருக்கேன்.உனக்கு சஹானாவை கொஞ்சமும் பிடிக்காத பட்சத்தில் அவளை திருமணம் செய்து  இருக்க மாட்டேன்.அதே நேரம் வேறு ஒரு பெண்ணையும் மனதாரக் கூட நினைத்து இருக்க மாட்டேன்.உன்னுடைய சம்மதத்திற்காக காத்து கொண்டு இருந்து இருப்பேன்.

அப்புறம் எதுக்கு என்னை அடிச்சன்னு தானே கேட்குற?அது நீ சஹானாவின் இத்தனை வருட கனவு நனவாக விடாமல் தடுத்தாயே அதற்காக...எத்தனை கஷ்டப்பட்டேன் தெரியுமா?அவளை இங்கே வர வைத்து,நம் வீட்டிலேயே தங்க வைத்து, ஊரில் யாருக்கும் எந்த விவரமும் தெரிந்து விடாதபடி அவளை என் பாதுகாப்பிலேயே ஒவ்வொரு நிமிடமும் வைத்து இருந்தேனே எதற்காக? யாரிடமும் அவள் மாட்டக் கூடாது என்று இரவும் பகலும் அவளை பாதுகாத்தேன்.நல்லபடியாக அவளுடைய அரங்கேற்றம் முடிய வேண்டுமே என்று எத்தனை போராட்டம்.அத்தனையும் அவளுக்காக தானே செய்தேன்.எல்லா முயற்சியையும் ஒரு நொடியில் பாழ் அடித்து விட்டாயே...இனி அவளால் எப்படி அரங்கேற்றம் செய்ய முடியும்?

அவ உனக்கு அண்ணியா வர்றதை தடுக்க வேணா உனக்கு உரிமை இருக்கலாம்.அவளோட இலட்சியத்தையோ கனவையோ அழிக்க உனக்கு என்ன உரிமை இருக்கு...சொல்லு உனக்கு என்ன உரிமை இருக்கு?.இப்போ கூட சஹானா போக மாட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் கண்டிப்பா அவளை போக விட்டு இருக்க மாட்டேன்.அவங்க அப்பா என்ன அவங்க ஊரே வந்து தடுத்து இருந்தாலும் அவளை இங்கேயே தங்க வைத்து இருப்பேன்.நான் அதை செய்வேன்னு அவளுக்கும் தெரியும்.ஆனா மறந்தும் அவ அதை செய்யலை ஏன் தெரியுமா? அவளோட அம்மாவுக்காக...”

“பேச்சு வாக்கில் அவங்க அப்பா சொன்னாரே உன்னோட அம்மா காத்துக்கிட்டு இருப்பாங்கனு ஒரு வார்த்தை சொன்னாரே.அந்த வார்த்தைக்காக...கூடப் பிறந்த அண்ணன் என்னோட சந்தோசம் முக்கியம்னு நினைக்காத நீ எங்கே? பெற்ற தாய்க்காக போராடுறாளே அவ எங்கே?”

அபிமன்யு பேச பேச அவமானத்தில் கூனிக்குறுகி நின்று கொண்டு இருந்த அஞ்சலி ,அவனுடைய கடைசி வாக்கியத்தில் திகைத்துப் போனாள்.

என்ன அண்ணா என்ன சொல்றீங்க...

அபிமன்யு கண்களை இறுகக் மூடிக் கொண்டான்.அவன் கண்களில் சஹானாவை ஊருக்கு அழைத்து வரும் முன் சத்யனிடம் பேசியது நினைவில் ஆடியது.

 

“உங்கள் தங்கச்சியை எதற்கு இப்பொழுது என்னோடு அழைத்துக் கொண்டு போக சொல்றீங்க.... கண்டிப்பா வேலை பார்த்து சம்பாரிப்பதற்காக அல்ல...வேறு என்ன காரணம்?”

“சகானாவிற்கு நாட்டியம் மிகவும் பிடிக்கும்...இங்கே இருந்தவரை வீட்டில் அம்மாவிடம் கொஞ்சம் கற்றுக் கொண்டு இருக்கிறாள்.அவளுக்கு இன்னும் நிறைய கற்றுக் கொண்டு அவளுடைய அரங்கேற்றத்தை செய்ய வேண்டும் என்று ஆசை...”

‘வாவ்...சகானாவிற்கு டான்ஸ் பிடிக்குமா....இது நல்ல நியூஸ் தான்...’ என்று உள்மனம் ஆனந்த கூச்சலிட அதை அடக்கி சத்யனின் பேச்சில் கவனத்தை திசை திருப்பினான்.

சத்யன் தொலைவில் எங்கேயோ பார்வையை வெறித்து பார்த்துக் கொண்டே சொல்லிக் கொண்டே போனான். “அது அவளின் குருவான எங்கள் அம்மாவிற்கு செய்யும் மரியாதை என்று நினைக்கிறாள்.அதனால் தான்...”

‘இல்லை இன்னும் ஏதோ விஷயம் இருக்கிறது என்று அபிமன்யுவின் உள்மனம் கூவியது.

“இதெல்லாம் சரி தான் .இதை நீங்கள் உங்கள் அப்பாவிடம் சொன்னால் போதுமே அவரே ஒரு நல்ல டான்ஸ் டீச்சர் ஏற்பாடு பண்ணுவாரே...அவரால் முடியாததா?” சந்தேகத்தோடு கேள்வி கேட்டான் அபிமன்யு.

“அப்பாவிற்கு டான்ஸ் பிடிக்காது...”

“என்ன”... ‘அய்யயோ மாமனார்க்கு நம்ம டிபார்ட்மென்ட் பிடிக்காதா...இனி அவரை எப்படி கரெக்ட் செய்வது என்று வேறு யோசிக்க வேண்டும் போலயே’ அதை அப்படியே விட்டு விட்டால் பிறகு எப்படி மாமனாரை சமாளிப்பது என்று நினைத்தவன் மேலும் கேள்விகளை தொடுத்தான் அபிமன்யு.

“ஏன் உங்க அப்பாவிற்கு டான்ஸ் பிடிக்காது.சத்யா? ஏதேனும் காரணம் இருக்கிறதா?”

சத்யன் ஒரு நிமிடம் வெறுமையான ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் பேசலானான்.

“அவருக்கு என் அம்மாவை ரொம்ப பிடிக்கும்...அதனால் தான்...”

அபிமன்யுவிற்கு எதுவோ புரிவது போல இருந்தது.

“உங்க அம்மா நல்லா டான்ஸ் ஆடுவாங்களா சத்யா...”

“ரொம்ப நல்லா தெரியும்...”

அப்படின்னா உங்க அம்மாவை வைத்தே அவங்களுக்கு சொல்லித் தரலாமே

“அதுக்கு வாய்ப்பு இல்லை அபி சார்... அதனால தான் உங்க கிட்ட வந்து இருக்கேன்.”

என்ன சொல்றார் இவர்...ஒண்ணுமே புரியலையே என்று நினைத்துக் கொண்டவன் குழப்பமாக சத்யாவை ஏறிட்டான்.அபிமன்யுவின் பார்வையின் பொருளை உணர்ந்து கொண்டு மேற்கொண்டு விளக்க ஆரம்பித்தான் சத்யன்.

அபி சார் நான் இப்போ உங்ககிட்ட சொல்லப் போறது என்னுடைய குடும்ப விஷயம்...இத்தனை வருடங்களா இந்த ஊரிலும் சரி எங்களுடைய சொந்தகளுக்கும் சரி இதெல்லாம் தெரியாது.அதனால இப்போ நான் சொல்ற விஷயம் உங்களை தாண்டி வெளியே செல்லக் கூடாது.நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்ற நம்பிக்கையின் பேரில் தான் உங்களிடம் சொல்கிறேன் என்று சொல்லிய பிறகே சொல்லத் தொடங்கினான்.

அப்பாவுக்கு எங்க அம்மாவை ரொம்ப பிடிக்கும்.எங்க அப்பாவோட முறைப்பெண் தான் எங்க அம்மா.சின்ன வயசில இருந்தே அவருக்கு இவங்க தான்னு சொல்லியே வளர்த்து இருக்காங்க.சின்ன வயசில் இருந்தே அவங்க மேலே ரொம்ப பிரியமா இருந்து இருக்காங்க.அம்மாவுக்கு ஒரு பதினாறு வயசு இருக்கும் போது அப்பா வீட்டு ஆட்கள் எல்லாரும் கிளம்பிப் போய் முறைப்படி பொண்ணு கேட்டு இருக்காங்க.ஆனா அதை அம்மா ஒத்துக்கலை

உங்க அம்மாவுக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லையா சத்யா

அப்படியெல்லாம் இல்லை அபி சார்...அம்மாவுக்கு பரதநாட்டியத்து மேல அளவுக்கு அதிகமான ஈடுபாடு.எங்க அம்மாவுக்கு இருந்த அளவுக்கு அதிகமான விருப்பத்தின் பேரில் எங்க தாத்தா,அதாவது எங்க அம்மாவோட அப்பா அந்த காலத்திலேயே ரொம்ப கஷ்டப்பட்டு வெளியூரில் இருந்து வாத்தியார் எல்லார் தேடி கண்டுபிடிச்சு ,இங்கேயே  வரவழைச்சு அம்மாவுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்தாங்க.அம்மாவும் ரொம்ப ஆசையா கத்துக்கிட்டாங்க.ஆனா அரங்கேற்றம் செஞ்சு முடிக்கலை.அப்போ தான் அப்பா வீட்டில் இருந்து பெண் கேட்டு போய் இருக்காங்க...அம்மா அரங்கேற்றம் முடியாம கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு மறுத்துட்டாங்க.அதில் அப்பாவுக்கு ரொம்பவே கோபம். என்னை விட அந்த நாட்டியம் முக்கியமானதாக போய் விட்டதா என்று ரொம்பவே ஆத்திரப்பட்டு இருக்கிறார்.

அப்பா எப்பவும் அப்படித்தான் அபி சார்...அவருக்கு எப்பவும் தனக்கு தான் முதன்மை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.வேறு எதற்காவதோ அல்லது வேறு யாருக்கேனும் முன்னுரிமை அளித்து விட்டால் அதன்பிறகு அப்பாவின் கோபத்தை யாராலும் கட்டுபடுத்த முடியாது”. ‘அது உண்மை தான் என்பதை அபிமன்யுவும் உணர்ந்தே தான் இருந்தான்.இங்கே வந்த புதிதில் வந்த பிரச்சினை அவனுடைய கண் முன்னே வந்து போனது.

“அம்மா மறுத்து பேசிய அன்று இரவே அம்மாவின் வீட்டிற்கு போய் சண்டை போட்டு இருக்கிறார் அப்பா.

“நாளைக்கு விடிஞ்சதும் அவளுக்கும் எனக்கும் கல்யாணம் நடந்து ஆகணும் இல்லேன்னா வீடு புகுந்து தூக்கிட்டுப் போய் கல்யாணம் பண்ணிடுவேன்” என்று மிரட்டி இருக்கிறார்.ஊரில் எல்லாருக்கும் அப்பாவின் குணம் தெரிந்ததால் யாரும் அவரை எதிர்த்து பேசவில்லை.என்றைக்கு இருந்தாலும் அவருக்கு தானே திருமணம் செய்து கொடுக்கப் போகிறோம் என்ற எண்ணம் வேறு.

எல்லாரும் கடைசியாக வந்து அம்மாவிடம் தான் கெஞ்சி இருக்கிறார்கள்.அம்மா அதிர்ந்து போய் விட்டார்.காரணம் அவருக்கு அப்பாவை பிடிக்கும்.அதே சமயம் இத்தனை நாள் கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்து கற்றுக் கொண்ட கலையை அரங்கேற்றம் செய்ய முடியாமல் போகிறதே என்று வருந்தி இருக்கிறார்.வீட்டில் எல்லாரிடமும் எவ்வளவோ கெஞ்சி இருக்கிறார்.ஆனால் அவருடைய கெஞ்சலுக்கும் கதறல்களுக்கும் அந்த வீட்டில் கொஞ்சமும் மதிப்பு இருக்கவில்லை.அம்மாவின் அழுகையை பார்த்து பொறுக்க மாட்டாமல் தாத்தா வந்து அம்மாவை ஆறுதல் படுத்தி இருக்கிறார்.

திருமணம் முடிந்த பிறகு அப்பாவிடம் பேசி எப்படியாவது அரங்கேற்றத்திற்கு அனுமதி வாங்கித் தருவதாக உறுதி அளித்து இருக்கிறார்.அடுத்த நாளே அவசர அவசரமாக அவர்களுடைய திருமணம் நடந்து இருக்கிறது.திருமணம் முடிந்த பிறகு எந்த பிரச்சினையும் இன்றி இருவரும் சந்தோசமாகத் தான் இருந்து இருக்கிறார்கள். மறுவீட்டு விருந்து எல்லாம் முடிந்த பிறகு தாத்தா அப்பாவிடம் அம்மாவின் அரங்கேற்றத்தை பற்றி பேசி இருக்கிறார் தாத்தா.

அவர்களிடம் ஏதோ மழுப்பலாக சொல்லி அனுப்பிவிட்டு அவர்கள் போனதும் அம்மாவும்  எவ்வளவோ கெஞ்சி பார்த்து இருக்கிறார். அம்மாவின் அரங்கேற்றத்திற்கு அவர் ஒத்துக் கொள்ளவில்லை.அம்மாவும் அப்பாவை எப்படியும் சமாதானப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்து இருக்க,திருமணம் முடிந்த மறு மாதமே அம்மா உண்டாகிவிட அது அப்பாவிற்கு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது.

வயிற்றில் பிள்ளை இருக்கும் போது தையா தக்கா என்று குதித்தால் என்னுடைய பிள்ளைக்கு ஏதாவது ஆகிவிடும் என்று சொல்லியே அவரை ஆட விடாமல் செய்தார். நான் பிறந்த பிறகு குழந்தையை கவனிக்காமல் என்ன ஆட்டம் என்று கேட்டு தாத்தாவை விட்டே அவரை கண்டிக்க செய்தார்.

இப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடியிருக்க ,அதற்கு பிறகு தான் அம்மா கொஞ்சம் சுதாரித்து இவர் வேண்டுமென்றே தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்பதை புரிந்து கொண்டு அப்பாவிடம் இருந்து விலக தொடங்கி இருக்கிறார்.இரவு நேரங்களிலும் இதுவே தொடர் கதையாக அப்பாவின் கோபம் அதிகரித்தது.

 என்னை விட உனக்கு அந்த ஆட்டம் பெரிதாக போய் விட்டதா?குடும்ப பெண்ணாக லட்சணமாக இருக்க கற்றுக் கொள்.ஊரில் கண்டவன் பார்க்க என் மனைவி ஆடுவது எனக்கு கொஞ்சமும் பிடிக்காது.அப்படி ஒரு நினைப்பு இருந்தால் அதை மூட்டை கட்டி வைத்து விடு..இனி உன்னுடைய வாழ்க்கையில் எனக்கு மட்டும் தான் இடம் என்று சொன்னவர் அடுத்த நாளே அம்மாவுக்கு நடனம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரை மிரட்டி ஊரை விட்டே அனுப்பி விட்டார்.

அம்மா உள்ளுக்குள் மிகவும் சோர்ந்து போன நேரத்தில் தான் சஹானா அவர்களுடைய வயிற்றில் தோன்றி இருக்கிறாள்.தன்னுடைய கவலைகளே நெஞ்சை அரித்துக் கொண்டு இருக்க சரியாக சாப்பிடாமல் அம்மா ரொம்பவும் வீக்காக ஆகிட்டாங்க.பிரசவத்தின் போது ரொம்ப சிக்கலாகி கடைசியில் கருப்பையே எடுத்து விட்டார்கள்.அதில் அப்பாவின் ஆத்திரம் இன்னும் ஜாஸ்தி ஆகி இருக்கிறது. அம்மாவின் கண் முன்னாலேயே அம்மாவின் பரதநாட்டிய சலங்கையை எரியும் நெருப்பில் போட்டு விட்டார்.அந்த நிமிடத்தில் இருந்து  அம்மா வாழ்க்கையே வெறுக்க ஆரம்பிச்சுட்டங்க.

அதன்பிறகு அப்பாகிட்ட இப்ப வரை அவங்க பேசவே இல்லை.அப்பாவும் அதை பெரிசா எடுத்துக்கலை.அவருக்கு அவங்க பரதம் ஆடாம அவர் கூடவே இருக்கணும்னு ஒரு எண்ணம்.அது நடந்து விட்டதால அவர் அவங்களோட வருத்தத்தை பத்தி கொஞ்சமும் கவலைபடலை.

விஷ்வா வளர வளர அம்மா அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமா யாருக்கும் தெரியாமல் பரதம் சொல்லி தர ஆரம்பிச்சாங்க.அம்மான்னா அவளுக்கு ரொம்பவும் இஷ்டம்.அவங்களுக்காகவே ரொம்ப ஆர்வமா கத்துகிட்டா.எப்படியாவது அவளுக்கு பரதம் கத்துக் கொடுத்து அவளுடைய அரங்கேற்றத்தை செய்து முடிக்கணும்னு அம்மா ரொம்பவே ப்ரியப்பட்டாங்க.தன்னால் செய்ய முடியாததை தன் மகளாவது செய்து முடிக்க வேண்டும் என்று அம்மாவுக்கு ஆசை.

அம்மா ரொம்பவும் பாவம் சார்.வீட்டை விட்டு வெளியே எங்கேயும் போக மாட்டாங்க.இத்தனை வருஷமா அந்த வீட்டை விட்டு அவங்க வெளியே வந்தது கிடையாது.அப்பா வீட்டில் இருக்கும் நேரங்களில் அவங்க சமையல் அறையை விட்டு வெளியே வரவே மாட்டாங்க.அப்பா வெளியே கிளம்பியதும் சஹானாவுக்கு அவளோட அறையில் யாருக்கும் தெரியாமல் பரதம் சொல்லிக் கொடுப்பாங்க.இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் எரிந்து போன அந்த சலங்கையை கையில் வைத்துக் கொண்டு விடிய விடிய அழுதுகிட்டே இருப்பாங்க.எப்போ தூங்குவாங்க...எப்போ சாப்பிடுவாங்க...யாருக்கும் தெரியாது

போன வாரம் கூட நான் விஷ்வாவை கூட்டிக்கிட்டு சென்னை வந்தேன்.அங்கே ஒரு டான்ஸ் அகாடமியில் அவளை சேர்த்து விடுவதற்காக.நாங்க எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்தும் அப்பாவுக்கு விஷயம் தெரிந்து விட்டது.நாங்கள் சென்னைக்கு போன மறுநாளே எங்களை கிளம்பி ஊருக்கு வரவழைத்து விட்டார். எப்படி தெரியுமா? ஒரே ஒரு போன்...ஒரே ஒரு வார்த்தை... நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் ஊருக்கு திரும்பி வாருங்கள்.அதுவரை உங்க அம்மாவுக்கு சாப்பாடு கிடையாதுன்னு சொன்னார்.அதுக்கு பிறகு நாங்க எப்படி அங்கே தங்கி இருக்க முடியும்.விடிந்தும் விடியாமலும் கிளம்பி கடற்கரைக்கு வந்து விட்டோம்.அழுகையில் கரைந்த சஹானாவை சமாளித்து மறுபடியும் ஊருக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டேன்.”

 

எனக்கு நினைவு தெரிஞ்சு எங்க அம்மா எது மேலயும் இவ்வளவு ஆசைப் பட்டது இல்லை அபி சார்.இது அவங்களோட இத்தனை வருட தவம் சார்.கல்யாணம் ஆனதில் இருந்து எங்க அப்பாகிட்ட தோத்துப் போய்க்கிட்டே தான் இருக்காங்க சார்.அவங்க ஜெயிக்கணும்.இந்த விஷயத்தில் அவங்க ஜெயிச்சே ஆகணும்.அதுக்காக நானும் சரி சஹானாவும் சரி என்ன வேணும்னாலும் செய்ய தயாரா இருக்கோம்.ப்ளீஸ் சார்.இந்த உதவியை நீங்க செய்தால் உங்களை காலம் முழுக்க நாங்க சாமியா பார்ப்போம்”என்று கண்களில் கண்ணீர் மல்க சத்யன் கூறினான்.

 

சஹானாவின் அம்மாவை நினைத்து உள்ளுக்குள் பரிதாபம் தோன்றியது அபிமன்யுவிற்கு.

அதன் பிறகு அபிமன்யு கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லிய சத்யன்.... “இப்பவாவது தங்கச்சியை உங்க கூடவே கூட்டி போறீங்களா?” சத்யனின் கண்களில் இறைஞ்சல் இருந்தது.

“இனி சஹானாவை நான் பார்த்துக் கொள்ளுகிறேன் சத்யன்...சஹானா இனி என் பொறுப்பு என்று சொன்னதும் அபிமன்யுவின் நினைவில் ஆடியது.

இது அனைத்தையும் கேட்ட அஞ்சலி அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் உறைந்து போய் இருந்தாள்.தான் நினைத்தது என்ன? சஹானாவை இந்த ஊரை விட்டே அனுப்ப வேண்டும் என்று தானே நினைத்தேன்.ஆனால் அதில் இப்படி ஒரு பிரச்சினை இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லையே.வீட்டை விட்டு வெளியேறாமல் நான்கு சுவற்றுக்குள் இத்தனை வருடங்கள் முடங்கி இருப்பது என்றால் அது எத்தனை பெரிய சாபம்.அதுவும் தனக்கு தானே ஒரு விலங்கை பூட்டிக் கொண்டு இருக்கும் சஹானாவின் அம்மா.அவங்களோட இத்தனை வருட முயற்சியும் என் ஒருத்தியால தான் கெட்டுப் போச்சா?’

இப்போ நான் என்ன செய்யணும்?இந்த விஷயத்தை இப்படியே விட்டு விடுவதா? இல்லை ஊருக்கு போய் சஹானாவை அழைத்துக் கொண்டு வர வேண்டுமா? இப்படியே விட்டு விட்டால் அண்ணனின் வாழ்க்கை?

தனக்குள்ளேயே குழம்பி தவித்துக் கொண்டு இருந்தாள் இரண்டு நாட்கள் இரவும் பகலும் தனியே சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவள் நேராக அபிமன்யுவின் அறைக்கு சென்றாள்.

அங்கே இரண்டு நாட்களாக மழிக்கப் படாத தாடியுடன்அபிமன்யு அமர்ந்து இருக்க அவனை சாப்பிட வருமாறு அவனுடைய தாயும் தந்தையும் வற்புறுத்திக் கொண்டு இருந்தனர்.தாய் , தந்தையின் குற்றம் சாட்டும் பார்வையை சந்திக்காமல் நேரே அபிமன்யுவிடம் பேச தொடங்கினாள்.

அண்ணா நீ அரங்கேற்றத்திற்கான வேலையை பார்.நான் போய் சஹானாவை கூட்டிக்கொண்டு வருகிறேன்.எனக்கு ப்ளைட் டிக்கெட் மட்டும் புக் பண்ணிக் கொடு.அம்மா, அப்பா ரெண்டு பேரும் கொஞ்சம் என் கூட வாங்க.உங்க இரண்டு பேருக்கும் ஒரு முக்கியமான வேலை இருக்கு.”என்று சொன்னவள் அவர்களின் பதிலை எதிர்பாராது அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

 

 

 

 

 

 


Post a Comment

புதியது பழையவை