அத்தியாயம்  35
“இது எல்லாம் உங்க வேலை தானா?இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி நடிக்கறதா
இருந்தீங்க?உங்களைப் போய் நல்லவர்னு நினைச்சேனே.சே!” என்று ஆத்திரமாக பேசினாள்
சஹானா.
“தேங்க்ஸ் சனா...என்னை நல்லவன்னு நம்ப ஆரம்பிச்சுட்டதா சொன்னியே அதுக்கு”
என்றவன் விஷமமாய் கண்ணடித்தான்.
விதிர்த்துப் போய் பார்வையை அவனிடம் இருந்து திருப்பியவள் , “பேச்சை
மாற்றாதீங்க...இப்போ நிஷா சொல்லிட்டு போனதுக்கு என்ன அர்த்தம்?”தன்னுடைய  சலனத்தை மறைக்க அபிமன்யுவிடம் எரிந்து
விழுந்தாள்.
“கொஞ்சம் உட்கார் சனா...உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லப்
போகிறேன்.ஆனால் கொஞ்சமே கொஞ்சம் பொறுமையோடு நான் பேசி முடிக்கும் வரை எதிர்
கேள்விக் கேட்காது கேட்க வேண்டும் சரி தானா?”
ஒன்றும் பேசாமல் அவனுக்கு எதிரில் இருந்த அந்த ஒற்றை சோபாவில் போய் அமர்ந்து
கொண்டாள் சஹானா.
“இங்கே வந்ததில் இருந்து நிஷா செய்த எல்லா வேலையும் எனக்கு தெரியும்.” என்றவன்
சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.
“ஆனால் இது எதுவும் என்னால்,என்னுடைய 
அனுமதியின் பெயரிலோ அல்லது விருப்பத்தின் பெயரிலோ நடக்கவில்லை.” என்று
சொல்லி முடித்ததும் முழித்துக் கொண்டு நிற்பது சஹானாவின் முறையானது.
“சனா நிஷா அஞ்சலிக்கு மட்டும் இல்லை எனக்கும் பிரண்ட் தான்.அவளை அதிக பணம்
தருவதாக சொல்லி இங்கே அழைத்திருக்கிறாள் அஞ்சலி. 
வந்த பின்பு தான் அவளிடம் உன்னைப் பற்றி சொல்லி இருக்கிறாள்
அஞ்சலி.உன்னுடைய மனது நோகும்படி செய்து நீயாகவே இங்கிருந்து செல்லும்படி செய்து
விட்டால் நான் அதன்பிறகு உன்னை மறந்து விடுவேன் என்று சின்னப் பிள்ளை போல கணக்கு
போட்டு இப்படி எல்லாம் செய்து விட்டாள். அவளை மன்னித்து விடு”
“அப்படின்னா இங்கே நடந்த எதுவுமே உங்களுக்கு தெரியாதுன்னு சொல்ல வர்றீங்களா?”கோபமாக
படபடத்தாள்.
“இங்கே வந்த அன்னைக்கு இராத்திரியே நிஷா என்னிடம் எல்லாத்தையும் சொல்லி
விட்டாள்.நான் தான் அவளுடைய இந்த நாடகத்தை தொடர்ந்து நடத்த சொன்னேன்.நிஷா
இங்கிருந்து சென்று விட்டால் வேறு யாரையாவது இதே வேலை செய்ய மறுபடி அஞ்சலி
கூப்பிடுவாள்.அதனால் தான்” என்று இழுத்தவன் ‘என்னை புரிந்து கொள்ளேன்’ என்ற
கெஞ்சலுடன் வார்த்தைகள் வெளி வந்தது.
தன்னுடைய தங்கை செய்த செயலுக்கு அவன் வருந்துகிறான் என்பது புரிந்தாலும் இதை
இப்படியே விட்டு விட அவளுக்கு மனமில்லை.
“அஞ்சலிக்கு ஏன் என்னை பிடிக்கலை? இந்த அளவிற்கு வெறுப்பு எதனால்?” கேட்கக்
கூடாது என்று நினைத்து இருந்தாலும் அவளையும் மீறி வார்த்தைகள் வெளி வந்தன.
“அஞ்சலி ரொம்ப செல்லமா வளர்ந்துட்டா சனா...சின்ன வயசில் இருந்தே அவள் எதைக்
கேட்டும் நான் மறுத்து பேசியதில்லை.அவள் மனசளவில் இன்னும் குழந்தையாகவே இருக்கா.”
“குழந்தைனா இடுப்பில் தூக்கி வைச்சு கொஞ்ச வேண்டியது தானே” என்று அபிமன்யுவின்
முகம் பார்க்காமல் பொரிந்து தள்ளினாள் சஹானா.
அவள் சொன்னதை கேட்டு லேசாக சிரித்து விட்டு, “இதுக்கு தான் நான் முன்னாடியே
சொன்னேன்.நான் பேசி முடிக்கிற வரை இடையில் பேசக்கூடாதுன்னு.” என்றவன் அவளின்
முறைப்பை கண்டதும் மீண்டும் தன்னுடைய பேச்சை தொடரலானான்.
“அவளுக்கு நான் ஒரு கிராமத்து பெண்ணை திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை
சனா...”
“போங்க! போய் எவளாவது பட்டணத்து சிங்காரியை தேடிப் பிடிச்சு கல்யாணம்
பண்ணிக்கோங்க....இப்ப யார் உங்களை கையை பிடிச்சு தடுத்தா?” படபடவென்று பேசிக்
கொண்டே போனவள் அபிமன்யுவின் கண்களில் தெறித்த மின்னலில் கப்பென வாயை மூடிக்
கொண்டாள்.
“எனக்கு இந்த பட்டணத்து சிங்காரி எல்லாம் பிடிக்கவில்லை சனா...என் மனதுக்கு
பிடித்தவள் இந்த கிராமத்துக் கிளி தான்.எனக்கு வேற யாரும் வேண்டாம்.அவள் தான்
வேண்டும்.அவள் மட்டும் தான் வேண்டும்” அவனின் குரலில் அவனை அறியாமல் கொஞ்சம் தாபம்
எட்டிப் பார்த்ததோ!
“நீ நடிகை மனிஷாவை பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறாயா சனா”
“ம்...அவங்களுக்கென்ன”
“அவங்களுக்கு என் மேல் கொஞ்சம் விருப்பம்.முன்பே ஒரு முறை திருமணம் செய்து
கொள்ள விரும்பி என்னிடம் கேட்டார்கள்.நான் மறுத்து விட்டேன்.நான் மறுக்கவும் அஞ்சு
கிட்டே வந்து பேசி இருக்காங்க...அஞ்சுக்கு அவங்களை பிடிச்சு போய் அவங்க தான்
தனக்கு அண்ணியாக வரணும்னு ஒரு எண்ணம்.”
“முன்பே  ஒரு சில முறை என்னிடம் அவங்களை திருமணம் செய்து
கொள்வதை பற்றி பேசினாள்.அப்பொழுதெல்லாம் நான் மறுத்து விட்டேன்.எப்படியும் என்னை
சம்மதிக்க வைத்து விடலாம் அப்படின்னு அவ நினைச்சுக்கிட்டு இருக்கும் போது தான்
நம்முடைய காதல் அவளுக்கு தெரிய வந்து இருக்கு...அதனால் தான் உன்னை இங்கே விரட்ட
முயற்சி செய்து இருக்கிறாள்.மற்றபடி அவ நல்ல பொண்ணு தான் சனா”
"அவளுக்கு
புரியவில்லை சனா.காதல் நகரமா கிராமமா அழகியா, அழகில்லாதவளா, ஏழையா, பணக்காரியா
என்ற எந்த எண்ணத்தின் அடிப்படையிலும் வருவதில்லை என்று. அவளை
பொறுத்தவரை பணமும் அழகும் நிரம்பிய ஒரு நவநாகரீகப் பெண் மட்டும் தான் தன்னுடைய
அண்ணனின் அன்பை கவர்ந்து அவளுடைய அண்ணியாக இருக்க முடியும் என்று ஒரு எண்ணம்
அவளுக்கு.ஆனால் உன்னை அருகில் இருந்து பார்க்கும் பொழுது
அவளது அந்த எண்ணம் மாறி விடும் என்று தான் 
நான் நிஷாவை அந்த நாடகத்தை நிறுத்தாமல் தொடரச் சொன்னேன் சனா”
அபிமன்யு பேசிக் கொண்டே இருக்கையில் சஹானாவின் மனது நடிகை மனிஷாவின் தோற்றத்தை
மனக்கண்ணில் கொண்டு வந்தது.அவளது பால் போன்ற சருமமும்,கருவண்டு விழிகளும்,அவளது
அழகும் அவளுக்கு சஞ்சலத்தையே உண்டாக்கியது.அவளின் முக மாற்றத்திலேயே சஹானாவின்
எண்ணவோட்டத்தை புரிந்து கொண்ட அபிமன்யு மெல்ல அவளின் அருகில் வந்து நின்றான்.
அவளின் கன்னத்தை தன்னுடைய கைகளில் ஏந்தி, “என்னுடைய மொத்த உலகமும் அழகாக
மாறியது உன்னை பார்த்த பின்பு தான் சனா.ஆயிரம் பெண்கள் அருகில் இருந்தாலும் என்
கண்கள் தேடுவது உன்னை மட்டும் தான்.நான் கண்ணோடு கண் கலக்கத் துடிப்பதும் உன்னுடன்
தான்.வேறு யாரையும் நான் மனதளவில் கூட தீண்டியதில்லை சனா”
“நான் டான்ஸ் மாஸ்டர் சனா.எத்தனையோ பெண்களோடு சேர்ந்து வேலை பார்த்து
இருக்கிறேன்.அவர்களை தொட்டு ஆடிப் பாடி நடித்திருக்கிறேன்.ஆனால் அப்பொழுது எல்லாம்
அவர்கள் என்னுடைய கண்களுக்கு பெண்ணாக தெரிந்தது இல்லை.என்னைப் பொறுத்தவரை நடனம்
ஆடும் போது என்னோடு யார் ஆடினாலும் அதனால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டது
இல்லை.ஆனால் உன்னை பார்த்தால் மட்டும் நான் நானாக இருப்பதில்லை சனா.”
“அதுக்கு என்ன காரணம்னு எனக்கு தெரியலை.எப்பவும் என்னை முறைச்சுக்கிட்டே
இருக்கிற இந்த கண்களா? படபடன்னு பேசுற இந்த வாயா? என்னை பார்த்ததும் விடைத்துக்
கொண்டு எப்பொழுதும் சண்டைக்கு தயாராக இருக்கும் இந்த குட்டி மூக்கா?இதோ இப்படி
நான் உன் அருகில் கொஞ்சம் நெருங்கி நின்றாலும் வேர்த்து வழியும் உன்னுடைய இந்த
நெற்றியா” என்று சொன்னவன் தன்னுடைய கர்சீப்பை எடுத்து அவளுடைய நெற்றி வேர்வையை
துடைத்தவன் அவளுடைய கண்களை சந்தித்தான்.
அவன் அருகில் நெருங்கி நின்றதால் அவள்  கண்களில் மெல்லியதாக ஒரு மிரட்சி.அதை கண்டதும்
விலக எத்தனித்தவனின் மூளையில் பளிச்சென மின்னல் வெட்டியது.அவள் கண்களில் பயம்
இருந்தது.ஆனால் அவனை விட்டு தள்ளி நிற்க அவள் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதை
உணர்ந்தவனின் காதல் பெருக்கெடுத்து ஓடியது.
“சனா...அவனுடைய குரலில் இருந்த பேதத்தை உணர்ந்தவள் நிமிர்ந்து அவன் முகத்தை
பார்க்க அவனுடைய கண்களில் இருந்து வழிந்த காதலில் திக்குமுக்காடிப் போய்
நின்றாள்.அவனைப் பார்க்கக் கூடாது என்று தனக்குள்ளே அவள் போட்டு இருந்த அந்த வெளி
அந்த நிமிடத்தில் பொடிப் பொடியாக உடைந்தது.ஆனாலும் அவளுடைய தாயின் முகம் அவள் கண்
முன்னே தோன்றி அவளை தடுக்க கண்களில் வழிந்த கண்ணீரை மறைக்க முடியாமல் கண்களை இறுக
மூடிக் கொண்டாள் சஹானா.
அவளுடைய கண்ணீருக்கு காரணம் நிச்சயம் வருத்தம் இல்லை என்பதை உணர்ந்த அபிமன்யு.
இவள் தன்னை சேரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்ந்து மெல்ல அவளுடைய
நெற்றியில் ஒரு முட்டு முட்டி விட்டு அங்கிருந்து வெளியேறி வெளியே செல்லும் முன்
அவளை பார்த்தான்.
“இதுக்கு மேலே இங்கே தனியா இருக்க வேண்டாம் சனா...என்னால என்னை கண்ட்ரோல்
பண்ணிக்க முடியும்னு தோணலை” என்று சொன்னவன் நிற்காமல் கதவை திறந்து கொண்டு
வெளியேறி விட்டான்.
அவன் சென்ற பிறகே அவன் சொன்னதின் அர்த்தம் உணர்ந்தவளின் கன்னங்களில்
முதன்முறையாக ரோஜாக்கள் போட்டி போட்டுக் கொண்டு முளைத்தது.

கருத்துரையிடுக