அத்தியாயம்  34
அன்றைய இரவு சஹானாவிற்கு உறக்கம் இல்லாத இரவாக இருந்தது.விடிய விடிய அவளை
ஆக்கிரமித்து இருந்தது அபிமன்யு நினைவுகள் மட்டும் தான்.அபிமன்யுவை முதன்முதலாக
சந்தித்த நாள் முதல் இன்று நடந்த வரை ஒவ்வொரு விஷயமாக அவளது மனம் அலசி ஆராய்ந்து
பார்த்தது..
அவன் செய்த ஓவ்வொரு காரியத்திற்கு பின்னும் இருக்கும் காதலை மெல்ல அவள் மனம்
உணர விழைந்தது.என்ன தான் தன்னை கட்டாயப்படுத்தி இந்த வீட்டிற்கு வரவழைத்து
இருந்தாலும் வரம்பு மீறாத அவனது கண்ணியம் அபிமன்யுவின் மீது அவளது கவனத்தை
திருப்பவே செய்தது.அதை எல்லாம் வெளியில் தெரியாமல் மறைத்துக் கொண்டவளால்
நிஷாவையும் ,அஞ்சலி செய்யும் காரியங்களையும் தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அந்த வீட்டில் பார்வதி சொன்ன சொல்லை காப்பாற்றினார்.அந்த வீட்டிற்கு வந்த
பிறகு மகனின் புகழை பாடுவது போல எந்த ஒரு வார்த்தையும் அவர் பேசவில்லை.அதே நேரம்
அபிமன்யுவை பற்றி சஹானா அறிந்து கொள்ளும் வகையில் அவருடைய பேச்சு
இருக்கும்.அதையும் நேரடியாக சஹானாவிடம் சொல்ல மாட்டார்.அவருடைய கணவரிடம் சொல்லுவது
போலத் தான் சொல்லுவார்.
அவர் தான் இப்படி என்றால் அபிமன்யுவின் தந்தை இன்னும் ஒரு படி மேல்.ஒரே
வீட்டில் இருந்தாலும் சஹானாவிடம் வீணாக ஒரு வார்த்தை பேசியதில்லை.இரண்டு
நிமிடத்திற்கு மேல் மனைவி அபிமன்யுவின் புகழ் பாடுவதை தொடர்ந்தால் அவருக்கே
தெரியாத வண்ணம் பேச்சை அழகாக திசை திருப்பி விட்டு விடுவார்.
அதற்காக அவர் சஹானாவின் மீது வெறுப்பு காட்டியதில்லை.அவளுக்கு எதிராக அஞ்சலி
துள்ளும் சமயங்களில் அதை பற்றி அபிமன்யுவின் கவனத்திற்கு கொண்டு வந்து
விடுவார்.ஓரிரு முறை அஞ்சலியின் போக்கை லேசாக கோடு போட்டு காட்டுவது போல
அபிமன்யுவிடம் சொல்லவும் செய்தார்.ஆனால் அபிமன்யு தன்னுடைய தங்கையை கண்டிக்க முன்
வரவில்லை.
அப்படி என்ன தான் தங்கையின் மீது பாசமோ என்று சஹானாவிற்கு கூட ஒரு சில
சமயங்களில் எரிச்சல் வரத் தான் செய்தது.ஆனால் வாயை திறந்து அதை அபிமன்யுவிடம்
சொல்லத் தான் அவள் விரும்பவில்லை.அப்படி அவள் சொல்வதானால் அபிமன்யுவிடம் பேச
வேண்டி இருக்குமே.ஏனோ அபிமன்யுவிடம் அவளால் இயல்பாக பேச முடியவில்லை.
முன்பு அவன் மீது வன்மமாக இருந்த பொழுது கூட அவனோடு சரிக்கு சரி மல்லுக்கு
நின்று பேசி இருக்கிறாள்.அவனது காதலை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கிய பிறகு
அபிமன்யுவிடம் இயல்பாக பேசுவதை எதுவோ ஒன்று தடுத்தது.அந்த ஒன்று என்ன என்பதை அறிய
அறிய மேற்கொண்டு எந்த முயற்சியும் அந்த பேதை 
செய்தாளில்லை.
தான் இங்கே வந்து இருக்கும் வேலை என்னவோ அதை மட்டுமே நினைக்க வேண்டும் என்ற
உறுதியோடு தன்னுடைய வாய்க்கும், மனதுக்கும் சேர்த்து ஒரு பூட்டு ஒன்றை போட்டுக்
கொண்டாள்.அவளது கவனம் முழுக்க முழுக்க நடனத்தின் மீது மட்டுமே இருக்கும் படி
பார்த்துக் கொண்டாள்.
அபிமன்யுவும் அவளை பேச சொல்லி வற்புறுத்துவது இல்லை.அவன் தான் அவளை தன்
அருகில் இருப்பதே சுகம் என்று வாழ்கிறானே.அவளை எப்பொழுதாவது நேருக்கு நேராக
பார்க்கும் சமயங்களில் எல்லாம் அவள் கண்ணோடு கண் கலந்து தன்னுடைய காதலை பறை
சாற்றத் துடிப்பான்.சஹானாவால் ஒற்றை நிமிடத்திற்கு பிறகு அவனது பார்வையை
எதிர்கொள்ள முடியாமல் போனது.ஆனால் அதை அபிமன்யு கவனித்து விடாதவாறு கவனமாக
இருந்தாள்.இப்படி தனக்குள்ளேயே சஹானா போட்டுக் கொண்ட மௌன வேலியை ஒரு நாள் சஹானாவே
உடைத்தாள்.
ஒருநாள் மதிய இடைவேளையின் போது அபிமன்யு,சஹானா,நிஷா மூவரும் சாப்பிட்டுக்
கொண்டு இருக்க நிஷா வழக்கம் போல அபிமன்யுவிடம் கயிறு திரிக்கலானாள்.
“அபி டார்லிங் இன்னைக்கு நீங்க சஹானாவோட ஆட்டத்தை பார்த்து
இருக்கணும்...அட!அட! அதுக்கு அப்புறம் உங்களுக்கு பரதம் சுத்தமா மறந்தே போய்
இருக்கும்.” என்று சொன்னவள் வாய் நிறைய பிரியாணியை திணித்து அதை விழுங்க சிறிது
அவகாசம் எடுத்துக் கொண்டு மீண்டும் தொடரலானாள்.
“அவளுக்கு முத்திரைகளை பற்றிக் சொல்லிக் கொடுத்து கொண்டு இருந்தேன்
அபி.எல்லாவற்றையும் தட்டு தடுமாறி தான் கற்றுக் கொண்டாள்.அதிலும் அவளுக்கு
சுவஸ்திகா முத்திரையை சொல்லிக் கொடுப்பதற்குள் அப்பப்பா......எவ்வளவு
சிரமப்பட்டேன் தெரியுமா?”சலித்துக் கொண்டாள் நிஷா.
அவளது ஒவ்வொரு பாவனையிலும் உள்ளுக்குள் சஹானா உலைக்களமாக கொதித்துக் கொண்டு
இருந்தாள்.எதுவும் பேசி விடக் கூடாது என்று உணவில் மட்டுமே கவனம் செலுத்துவது போல
குனிந்து அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.
“ஸ்வாதிகா முத்திரைக்காக கையை குவித்து தாமரை போல வை என்றால் இவள் என்ன
செய்கிறாள் தெரியுமா? கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் குடிக்க இரண்டு கைகளையும்
ஏந்துவது போல செய்கிறாள்.இவளை சொல்லி குற்றமில்லை.பட்டிகாட்டில் பிறந்து வளர்ந்த
இவளுக்கு எல்லாம் பரதம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தால் இப்படித்தான்
இருக்கும்”என்று அலட்சியமாக சொன்னவாறு கழுத்தை நொடித்து ஒரு பக்கமாக திருப்பினாள்.
அவளை அதுவரை எத்தனையோ முறை அவமானப் படுத்தி நிஷா பேசி இருக்கிறாள்
தான்.அப்பொழுது எல்லாம் பொறுத்துக் கொள்ள முடிந்த சஹானாவால் இப்பொழுது தான்
பிறந்து வளர்ந்த தன்னுடைய ஊரை பார்த்து ஒருத்தி பட்டிக்காடு என்று சொல்லவும்  ஆத்திரம் அடைந்து தான் அமர்ந்து இருந்த சேரை
விட்டு எழுந்தாள்.
பாதி உணவில் எழுந்தவளை அபிமன்யுவும் நிஷாவும் கேள்வியாக  பார்த்துக் கொண்டு இருக்கும் போதே எழுந்து
சென்று கையை கழுவியவள் தன்னுடைய மொபைலை ஆன் செய்து அதில் பாடலை ஓட விட்டாள்.கட்டி
இருந்த புடவை முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு முதலில் குரு வணக்கம்
செய்தவள் மொபைலில் பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும் சுழன்று ஆட ஆரம்பித்தாள்.
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்
சாவின் ஓசை
கேட்கும்போதும் பாதம் ஆடாதோ
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
கண்ணை சிமிட்டக் கூட செய்யாமல் அபிமன்யு சஹானாவையே ஆர்வமாக பார்த்துக் கொண்டு
இருந்தான்.முதன்முதலாக அவளது நடனத்தை பார்க்கிறான்.அவளது முகத்தில் பாடல்
வரிகேற்றவாறு பாவங்கள் ததும்பி வழிய இமை தட்டாது பார்த்து ரசித்தவன் அவள் ஆடி
முடித்ததும் கைகளை பலமாக தட்டி தன்னுடைய பாராட்டினை வெளிப்படுத்தினான்.
“சூப்பர்...பென்டாஸ்டிக்..எக்ஸலன்ட்”என்று அபிமன்யு புகழ்ந்து தள்ள அதை கேட்டு
உள்ளம் பூரித்தாலும் வெளியே காட்டாமல் நேரே  நிஷாவிடம் போய் நின்று, “ இனிமேலும் இந்த பட்டிக்காட்டுகாரிக்கு
பரதம் ஆடத் தெரியாதுன்னு சொல்வீங்களோ” சஹானாவின் கேள்வியில் சவால் இருந்தது.
அப்படியே பார்வையை திருப்பி அபிமன்யுவை பார்த்து பேச ஆரம்பித்தாள். “இவங்க
ஆரம்பத்தில் இருந்து என்னை பற்றி உங்களிடம் சொன்ன எல்லா விஷயமும் பொய்!என்னை பற்றி
உங்களிடமும் ,உங்களை பற்றி என்னிடமும் தப்பும் தவறுமாக சொல்றாங்க.இவங்க பேச்சை
எல்லாம் நம்பாதீங்க...எனக்கு ஏற்கனவே ஓரளவிற்கு பரதம் தெரியும்.பாதியில் விட்டதை
தொடர்ந்து கற்றுக் கொள்ளத் தான் நான் இங்கே வந்தேன்.இவங்க சொல்ற மாதிரி நான்
ஒண்ணுமே தெரியாம இங்கே வரலை” என்று மூச்சு வாங்க பேசி முடித்தாள்.
“அபி ஒரு வழியா சஹானா வாயை திறந்து பேசிட்டாங்க...ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் அப்பாடா! உன் ஆளை
வாயை திறந்து பேச வைக்கிறதுக்குள்ள எவ்வளவு போராட வேண்டி இருந்தது.முடியலை.அபி
டியர் இதுக்கெல்லாம் சேர்த்து கொஞ்சம் பார்த்து மேலே போட்டு கொடுங்க ஆபீசர்” என்று
கூறிவிட்டு புன்னகை மாறாமல் சஹானாவை பார்த்து கண்ணடித்து விட்டு அறையை விட்டு
வெளியேறும் முன் , “உன்னோட கேள்வி எல்லாத்தையும் நீ அவர்கிட்டேயே கேட்டுக்கோ
தாயே...உன் பார்வையே சரி இல்லை...விட்டா கண்ணாலேயே பொசுக்கிடுவ போல...ஐ அம் பாவம்”
என்று கூறி விட்டு அறையை விட்டு வெளியேறினாள் நிஷா.
‘இவள் என்ன சொல்கிறாள்’ என்று முழித்தபடி நின்றவள் திரும்பி அபிமன்யுவைப்
பார்க்க அவனது பார்வை,  ‘எல்லாம் எனக்குத்
தெரியும்’ என்று அவளுக்கு சொல்லாமல் சொல்லி அவளை மேலும் குழப்பியது.
 

கருத்துரையிடுக