Kadhal kathakali tamil novels 33

 

 

 

 

 

 

 

அத்தியாயம்  33

அன்று சஹானாவை காலையில் நேரே அகாடமிக்கு அழைத்து செல்லாமல் கார் வேறு பாதையில் செல்வதை பார்த்த சஹானா கேள்வியாக புருவத்தை உயர்த்தி அபிமன்யுவை பார்த்தாள்.

அவளுடைய பார்வையின் பொருளை உணர்ந்தவன், “உனக்கு  பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்யும் பொழுது அதற்கு  ஏற்றார் போல கொஞ்சம் டிரஸ், நகை எல்லாம் எடுக்கணும் அதுக்கு தான் கூட்டிட்டு போறேன்.”என்றவன் மேலும் சில நிமிடங்கள் அவள் எதுவும் சொல்வாளோ என்று அவளது முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தவன் அவள் ஒன்றும் பேசாததால் நீண்ட பெருமூச்சை வெளியேற்றி விட்டு மீண்டும் கார் ஓட்டுவதில் கவனமானான் அபிமன்யு.

இங்கே வந்த இத்தனை நாட்களில் சஹானாவிடம் சில மாற்றங்கள் இருந்தாலும்,தேவை இல்லாமல் எதையும் செய்து அதை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை அபிமன்யு.தன்னுடைய காதல் தன்னவளை தன்னோடு சேர்த்து வைக்கும் என்று முழுமையாக நம்பினான்.

அதே சமயம் தன்னுடைய தந்தை தன்னிடம் சொன்னதையும் மனதில் வைத்து இனிமேல் எதற்காகவும் அவளை வற்புறுத்தக் கூடாது என்ற முடிவுக்கும் வந்து இருந்தான்.எனவே மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் மௌனமாகவே காரை ஒட்டிக் கொண்டு வந்தவன்  ஒரு பிரபல துணிக்கடையின் முன்னே போய் வண்டியை நிறுத்தினான்.

காரை பார்க் செய்துவிட்டு கீழிறங்கி லிப்ட்டில் ஏறி எட்டாவது மாடியை நோக்கி இருவரும் பயணித்தனர்.லிப்ட்டில் மூன்றாவது மாடியில் புதிதாக ஏறிய ரோமியோ ஒருவன் சஹானாவை பார்த்ததும் பார்க்க சகிக்க முடியாத அவனது முகத்தை ரொமாண்டிக் லுக் விடுகிறேன் பேர்வழி என்ற பெயரில் அஷ்ட கோணலாக்கி பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனின் செய்கையில் சஹானா எவ்வளவோ முயன்றும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் ஒரே ஒரு நிமிடம் இதழ் பிரியாமல் சிரித்து விட்டு, எங்கே அவனையும் அவன் செய்யும் குரங்கு சேஷ்டைகளையும் பார்த்தால் மறுபடி சிரித்து விடுவோமோ என்று எண்ணி முகத்தை திருப்பிக் கொண்டாள்.அந்த காட்சி அவன் கண்ணிற்கு வெட்கப்படுவது போல் இருக்க மேலும் உற்சாகமாகி சஹானாவிடம் நெருங்கி நிற்க முயன்றான்.

அதுவரை அந்த காட்சிகளை கண்டும் காணாதது போல இருந்த அபிமன்யு, ஒரே எட்டில் சஹானாவிற்கும் அந்த ரோமியோவிற்கும் இடையில் போய் நின்று கொண்டு சஹானாவிடம் மென்குரலில் பேசினான்.

“ஒரு ஐந்து நிமிடம் சனா.நாம் இறங்கி விடுவோம்.அந்த குரங்கு மூஞ்சி காரனை விட என் முகம் கொஞ்சமே கொஞ்சம் நல்லா தான் இருக்கு.அதனால் இறங்கும் வரை உனக்கு பாதுகாப்பாக நான் இருக்கேன்.அதற்கு மட்டும் அனுமதி கொடு” என்றவன் அப்படியே திரும்பி அந்த ரோமியோவை ஒரு பார்வை பார்த்து கண்ணாலேயே எரிக்க, அவனும் ‘நமக்கு எதுக்கு வம்பு’ என்று நல்ல பிள்ளையாக ஒதுங்கி நின்று அடுத்த மாடியிலேயே இறங்கிக் கொண்டான்.

எட்டாவது மாடியில் இறங்கும் முன் அவளது கண்களை நேராக பார்த்து, “தேங்க்ஸ் சனா.ஒரே ஒரு நிமிடம் உன்னை நான் பாதுகாப்பேன் என்று என்னை நம்பி அமைதியாக இருந்ததற்கு” என்று கூறிவிட்டு லிப்ட் திறந்ததும் அதை விட்டு வெளியேறி விட்டான்.

சனா உள்ளுக்குள் குழம்பிப் போனாள். ‘நான் எப்படி இவன் சொன்னதும் இவனை நம்பி இவனது அருகாமையை ஏற்றுக் கொண்டேன்.இவன் சொல்வதை வைத்துப் பார்த்தால் இவனை நான் நம்புகிறேனா?’ என்று பல்வேறு எண்ணங்களுடன் அவனை பின் தொடர்ந்து போனாள்.

அங்கே ஒரு கடைக்குள் நுழைந்தவன் அவளுக்கான துணியை தேர்ந்தெடுத்து முடித்தான். லேசான பச்சையில் கருநீலம் கலந்த நிறத்தில் உடையை தேர்வு செய்தவன்,அங்கிருந்த பணிப்பெண் அளவு எடுத்து முடித்ததும் அவளை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த நகைக்கடைக்கு அழைத்து சென்று அவளுக்கு வேண்டிய ஒட்டியாணம்,வங்கி போன்ற நகைகளையும் வாங்கினான்.

வாங்க வேண்டியது அனைத்தையும் வாங்கி முடித்து விட்டு மீண்டும் அதே துணிக்கடைக்குள் நுழைந்தான்.அதற்குள் அவளது உடை தைத்து தயாராக இருக்க, சஹானா வியப்பில் விழி விரித்தாள்.கொஞ்ச நேரத்திற்கு முன் வெறும் துணியாக மட்டுமே இருந்த ஒன்று இப்பொழுது அவள் கைகளில் அழகிய ஆடையாக மின்னியது.

“இது என் பிரண்டு கடை.அதனால தான் இத்தனை வேகமா ரெடி ஆகிடுச்சு” என்று அவள் கேளாமலே பதில் அளித்தான். ‘இப்பொழுதெல்லாம் நான் எதையும் வாய் திறந்து கேட்க வேண்டியதற்கு அவசியமே இல்லாமல் எப்படி இவன் நான் மனதில் நினைப்பதை எல்லாம் சரியாக கணித்து பதில் சொல்லி விடுகிறான்’ என்று நினைத்துக் கொண்டாள் சஹானா.

 “அங்கே ட்ரையல் ரூம் இருக்கு சஹானா.அங்கே போய் இதை போட்டு பார்த்து அளவெல்லாம் சரியாக இருக்கிறதா சொல்” என்று அவளுடைய கைகளில் அந்த உடையை திணித்தான்.

ஏற்கனவே கடையின் பிரமாண்டத்தில் கொஞ்சம் மிரண்டு போய் இருந்தவள் இப்பொழுது கொஞ்சம் தயங்கி அங்கேயே நின்றாள்.அவளின் தயக்கத்தை உணர்ந்தவன் அவளை பின் தொடருமாறு பார்வையில் பணித்து விட்டு அதன் மூலையில் இருந்த ஒரு அறைக்கு அவளை அழைத்துச் சென்றான்.

“இந்த ரூம் தான் சஹானா...உள்ளே போய் போட்டுப் பார்.நான் இங்கே தான் இருக்கேன்.பயப்படாமல் போ” என்று இருந்தவன் எதிர்புறம் திரும்பி வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான்.

உள்ளே அறைக்குள் நுழைந்த சஹானா அறைக்குள் விளக்கு எரியாததை பொருட்படுத்தாமல் அறைக்குள் உடை மாற்றிக் கொண்டு இருந்தாள்.அவளுக்கு இது போல கடைகளுக்கு வந்து உடை மாற்றி பழக்கம் இல்லாததால் கொஞ்சம் பயம் தோன்றவே வேக வேகமாக உடையை மட்டும் போட்டு பார்த்து விட்டு வெளியேறி விடலாம் என்ற எண்ணத்தோடு உடை மாற்றிக்கொண்டு இருந்தாள்.

உள்ளே போய் இவ்வளவு நேரம் ஆகியும் அறையில் விளக்கு எரியாததை வெளியில் இருந்தே கவனித்த அபிமன்யு சஹானாவிடம் பேச்சுக் கொடுத்தான்.

“சஹானா ஏன் இன்னும் லைட் போட்டுக்காம இருக்கே?அங்கே சுவிட்ச் இருக்கும் பாரு”

அபிமன்யுவின் பேச்சை கேட்டு லேசான அந்த அரையிருளில் தட்டு தடுமாறி அறையில் இருந்த சுவிட்சை தட்டிய அடுத்த நிமிடம் “ஆஆஆஆ” என்ற அலறலுடன் சுவரில் மோதி கீழே விழுந்தாள் சஹானா.

அவளுடைய குரலை கேட்டதும் அபிமன்யு பதறி, “சஹானா என்ன ஆச்சு?ஏன் கத்துற? சொல்லுமா” என்று கதவை பலமாக தட்டி கேட்டான் அபிமன்யு.

ஷாக் அடித்ததால் சுவற்றில் தூக்கி வீசிய அதிர்ச்சியாலும், ஷாக் அடித்ததால் அவளுடைய உடல் லேசாக மரத்துப் போய் இருந்ததாலும் உடனடியாக பதில் சொல்ல முடியாமல் மூச்சுக் காற்றுக்குத் திணறிக் கொண்டு இருந்தாள் சஹானா.

அதற்குள் அங்கே ஓடி வந்த பணிப்பெண், “ஐயோ யார் இந்த ரூமில் இருப்பது? இங்கே சுவிட்ச் சரி இல்லை ஷாக் அடிக்கும் என்று தானே இந்த ட்ரையல் ரூமை பயன்படுத்தாமல் வைத்து இருந்தோம்!உள்ளே இருக்கிறவங்களுக்கு என்ன ஆச்சோ தெரியலையே?”என்று அந்தப் பெண் புலம்பிக் கொண்டே கதவை திறக்க யாரையாவது அழைத்து வரலாம் என்று அவள் நடக்கத் தொடங்க அபிமன்யு நொடியும் தாமதிக்காமல் கதவை உடைத்து உள்ளே புகுந்து விட்டான்.

அரை மயக்கத்தில் இருந்த சஹானாவை கைகளில் ஏந்தி அவள் கன்னத்தில் பலமாக தட்டினான் அபிமன்யு.

“சனா என்னை பாருடா...பேபி என்னை பார்...கண்ணை திறந்து பார்.என்னை சோதிக்காதே சனா.ப்ளீஸ் கண்ணை திறந்து பார்” கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கப்பட்டவனைப் போலக் கத்திக் கொண்டு இருந்தான்.

அபிமன்யு பேசிய அனைத்தையும் கேட்டாலும் சஹானாவால் உடனே கண்களை திறக்க முடியவில்லை.அவன் குரலில் இருந்த வருத்தம் அவளை என்னவோ செய்ய முதன்முறையாக அபிமன்யுவிற்காக,அவனது அந்த குரலிற்காக மிகுந்த சிரமப்பட்டு கண்களை திறந்தாள்.அந்த நிமிடம் வரை கத்திக் கொண்டே இருந்தவன் அவள் கண்ணை திறந்த அந்த நொடி, “சனா” என்று அவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அபிமன்யுவின் குரலில் இருந்த அப்பட்டமான காதலை அந்த நொடி உணர்ந்தாள் சஹானா.மொத்த காதலையும் குரலில் தேக்கி அவளை அழைத்தான்.அரை மயக்கத்திலும் கூட அதை அவளால் தெளிவாக உணர முடிந்தது.

லேசாக மயக்கம் தெளிந்து தான் அபிமன்யுவின் பிடியில் இருப்பதை உணர்ந்த சஹானா மெல்ல விலக முயற்சிக்க அவளது முயற்சி புரிந்து தானாகவே அவளை விடுவித்தான்.

ஓரளவிற்கு தெளிந்ததும் தான் சஹானா அதை கவனித்தாள்.பாதி உடை மாற்றிக் கொண்டு இருக்கும் போது அபிமன்யு சொன்னதும் சுவிட்சை போடவும் இப்பொழுது அவள் உடலில் பாதி உடை மட்டுமே இருந்தது.அதிர்ந்து போய் அபிமன்யுவை பார்த்தாள்.ஆனால் அவனோ அவளது முகத்தை மட்டுமே பருகு பருகு என்று பார்வையால் பருகிக் கொண்டு இருந்தான்.

அவள் முகத்தில் சட்டென தோன்றிய அதிர்ச்சியை கவனித்தவன் அப்பொழுது தான் அவள் இருக்கும் நிலையை உணர்ந்தான்.ஒரு வார்த்தை கூட பேசாமல்  அவளது கையை ஒரு முறை இறுக்கமாக அழுத்தி அவளை ஒழுங்காக அமர வைத்து விட்டு , “நான் வெளியே இருக்கிறேன் சஹானா.உடையை சரி செய்து கொள்.யாரும் வராமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று கூறிவிட்டு அவனுடைய மொபைலில் இருந்த டார்ச்சை ஆன் செய்து அந்த அறையில் வைத்து விட்டு அவளை பார்க்காமலேயே  அங்கிருந்து வெளியேறினான்.

சஹானா உறைந்து போய் அப்படியே சில நிமிடங்கள் அமர்ந்து விட்டாள்.அந்த நிமிடத்தில் சஹானாவிற்குள் ஆயிரம் கேள்விகள். ‘உண்மையில் இவர் பெண் பித்தனாக இருந்து இருந்தால் என்னை இப்படி ஒரு கோலத்தில் பார்த்து விட்டு அமைதியாக எழுந்து போய் இருப்பாரா?எனக்கு ஏதோ ஆபத்து என்று தோன்றவும் நொடியும் தாமதிக்காமல் அறையை உடைத்து உள்ளே வந்தவர் முதலில் வருந்தியது எனக்காகத் தானே? அதாவது சஹானா என்ற இந்த ஜீவனுக்காக....அவருடைய தேவை உடல் என்று இருந்து இருந்தால் இப்படி ஒரு சூழ்நிலையை அவர் பயன்படுத்திக் கொள்ளத் தானே முயற்சி செய்து இருப்பார்.அப்படி இல்லாமல் கண்ணியத்தோடு விலகி செல்கிறாரே.அப்படி என்றால் அவருக்கு தேவை என்னுடைய காதல் மட்டுமே தானா? என்னுடைய உடல் இல்லையா?

சஹானாவின் மனதில் அந்த நொடி முதல் அபிமன்யு அவன் என்ற இடத்திலிருந்து மாறி அவர் என்ற இடத்திற்கு வந்து நின்றான்.

 

 


Post a Comment

புதியது பழையவை