அத்தியாயம்  36
அறைக்குள் குறுக்கும்
நெடுக்குமாக நடை பழகிக் கொண்டு இருந்தாள் அஞ்சலி. 'எப்படி இந்த சஹானாவை வெளியேற்றுவது?
அவளை எவ்வளவு வெறுப்பேற்ற முடியுமோ அவ்வளவு முயற்சி செய்தாயிற்று...கொஞ்சமும் அசைய
மாட்டேன் என்கிறாளே' யோசனையில் நகத்தை கடித்து துப்பியவாறே நடந்து கொண்டு இருந்தாள்.
அவளுடைய சிந்தனையை கலைத்தது அவளுடைய போன்.
அழைப்பது மனிஷா என்பதை
அறிந்ததும் கொஞ்சம் தயங்கி தயங்கியே போனை எடுத்தாள் அஞ்சலி.
"என்ன அஞ்சலி இன்னும்
அந்த பட்டிக்காட்டை ஊரை விட்டு அனுப்பவில்லையா நீ"
"முயற்சி
பண்ணிக்கிட்டு தான் இருக்கேன் மனிஷா"              
"என்ன பெரிசா முயற்சி
செய்து தொலைத்தாய்... கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் உன் இஷ்டத்துக்கு ஊர் சுற்றிக்
கொண்டு இருக்கிறாய்" 
அவளின் குற்றச்சாட்டில்
அஞ்சலியின் மனம் துணுக்குற்றது. 'இவள் முதன்முதலாக அண்ணனை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக
சொன்ன பொழுது என்னிடம் பேசிய முறை என்ன? இப்பொழுது பேசும் முறை என்ன?' மனதில் யோசனை
இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள் அஞ்சலி.
"என்ன மனிஷா இப்படி
சொல்றீங்க.நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு முயற்சி செஞ்சுக்கிட்டு தான் இருக்கேன்."
"எனக்கென்னமோ அப்படி
தோணலை.நீயும் அந்த பட்டிக்காடு பக்கம் சேர்ந்துகிட்டியோனு தோணுது எனக்கு"
அஞ்சலிக்கு சுறுசுறுவென
கோபம் பொங்கியது. "என்ன மனிஷா உங்க பேச்சு ஒரு விதமா இருக்கு"
"ஹி.. ஹி... அப்படி
எல்லாம் இல்லை அஞ்சலி. என்னிடம் ஒரு சூப்பர் ஐடியா இருக்கு. அதை மட்டும் செஞ்சா போதும்.அவ
இந்த ஊரை விட்டு ஓடிடுவா"சட்டென்று பேசும்
தொனியை மாற்றிப் பேசினாள் மனிஷா.
"அப்படி என்ன ஐடியா?
சொல்லுங்க மனிஷா"சஹானாவை துரத்த வேண்டும் என்ற தன்னுடைய
எண்ணம் ஈடேறுவதற்கு என்ன செய்யவும் தயாராக இருந்தாள் அஞ்சலி.
"நீ எப்படியாவது
அவளை நான் சொல்லும் இடத்திற்கு அவளை கொண்டு வந்து சேர்த்து விடு.அதன் பிறகு நான் பார்த்து
கொள்கிறேன் அவளை"குருரமாக பேசினாள் மனிஷா.
"என்ன ஆள் வைத்து
மிரட்டப் போகிறாயா? அப்படி எதுவும் செய்து விடாதே...அண்ணன் காதிற்கு விஷயம் போய்டுச்சுன்னா
அப்புறம் ரொம்ப கஷ்டம்... இதுவரை எப்படி அண்ணனுக்கு தெரியாம செஞ்சோமோ அதே மாதிரி அண்ணனுக்கு
சந்தேகம் வராத மாதிரி செய்யணும். அண்ணனுக்கு தெரிஞ்சா காரியமே கெட்டுடும். புரிஞ்சுதா"
'உன்னை போல நானும் உன்
அண்ணனை நினைத்து பயந்து கிட்டே இருந்தா இப்போதைக்கு அவள் இங்கே இருந்து கிளம்ப மாட்டாள்.அவள்
அங்கே இருக்கும் வரை என்னுடைய காரியம் நிறைவேறாது.ஏற்கனவே உன்னுடைய வீட்டில் உன்னை
தவிர எல்லாரும் அவள் பக்கம் சேர்ந்து விட்டார்கள். இதற்கு மேலும் பொறுக்க முடியாது'என்று
நினைத்தவள் தன்னுடைய குரலை குழைத்து பேச ஆரம்பித்தாள்.
"அதை எல்லாம் பார்த்தால்
வேலைக்கு ஆகாது அஞ்சலி.அப்புறம் அந்த பட்டிக்காடு தான் உனக்கு அண்ணி...நன்றாக யோசித்துக்
கொள் உன்னுடைய நட்பு வட்டாரத்தில் இவளை உன்னுடைய அண்ணி என்று அறிமுகப் படுத்தினால்
உன்னுடைய கௌரவம் என்ன ஆகும் என்பதை யோசித்துக் கொள்" இது தான் மனிஷாவின் துருப்புச்
சீட்டு.அடிக்கடி இதை சொல்லியே தன்னுடைய இஷ்டத்திற்கு அஞ்சலியை ஆட்டி வைத்துக் கொண்டு
இருந்தாள்.
"சரி அவளை அங்கே
அழைத்து வந்த பிறகு என்ன செய்வதாய் உத்தேசம்?"
"உனக்கு கிரி என்பவரை
தெரியுமா?"
"யார் அண்ணனோட அகாடமில
வேலை பார்த்தாரே அவரா? அவரை கூட அண்ணன் வேலையை விட்டு அனுப்பி விட்டதாக சொன்னாரே!"
"ஆமா... அதே ஆள்
தான். அவனுக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்து அவளை மிரட்ட சொன்னால் போதும்.அவள் அதுக்கு
பிறகு இந்த ஊர் பக்கமே தலை காட்ட மாட்டாள்."
"அந்த கிரி பெண்கள்
விஷயத்தில் கொஞ்சம் மோசம்னு நான் கேள்வி பட்டேனே மனிஷா"தயக்கமாக கேட்டாள்.
"அதனால தான் அவனை
தேர்ந்து எடுத்தேன். அவன் தான் இதற்கு சரி..."
"வேண்டாம் மனிஷா...எனக்கு
என்னவோ இது சரியாக வரும்னு தோணலை"அஞ்சலியின் குரலில் குழப்பம் இருந்தது.அதற்கு
காரணம் அந்த கிரியை பற்றி அவள் கேள்விப்பட்ட விஷயங்கள்.ஒரு பொறுக்கியிடம் சஹானாவை எப்படி
தனியே விட்டு செல்வது! என்ன தான் வெறுப்பு இருந்தாலும் அவளது மனசாட்சி அவளை தடுத்தது.
"அதெல்லாம் சரியாக
வரும்.நீ மட்டும் அவளை நான் சொல்லும் இடத்திற்கு கொண்டு வந்து விட்டு விடு...அவளை போன்ற
பட்டிக்காடு எல்லாம் இன்னமும் மானம், மரியாதை என்று ஒன்றுக்கும் ஆகாத விஷயத்தை பிடித்துக்
கொண்டு தொங்கும் ரகம்.அவளை இன்று இரவே ஊரை விட்டு ஓட வைக்கிறேன்... நான் உனக்கு முகவரியை
அனுப்பி வைக்கிறேன் நீ தேவை இல்லாமல் யோசிக்காமல் நான் சொன்னதை மட்டும் செய்"
என்று கூறி விட்டு போனை வைத்து விட்டாள் மனிஷா.
அஞ்சலியால் முழு மனதோடு
இந்த காரியத்தை செய்ய முடியவில்லை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுளும் உண்டு, சாத்தானும்
உண்டு.அஞ்சலி உள்ளுக்குள் போராடிக் கொண்டு இருந்தாள். கடவுள் அவளை தடுக்க, சாத்தான்
சஹானாவை விரட்ட துடிக்க வெகுநேரம் போராடி அவளுள் இருந்த சாத்தானை கடவுள் வென்றது.
மனிஷாவின் பேச்சில் இருந்து
அவள் சஹானாவை அவள் என்ன செய்ய உத்தேசித்து இருக்கிறாள் என்பதை உணர முடிந்தது. அஞ்சலி
பிடிவாதம் நிறைந்தவள் தான். ஆனால் அதற்காக அவளால் இப்படி ஒரு கீழ்த்தரமான காரியத்தை
செய்ய முடியவில்லை. 'இந்த வழி  இல்லை என்றால்
வேறு வழியா இல்லை' என்று முடிவுக்கு வந்தவள் அதன் பிறகு மனிஷாவின் போன் அழைப்புகளை
ஏற்கவில்லை.
மனிஷாவின் இத்தகைய செயல்பாடு
அஞ்சலிக்கு கொஞ்சமும் பிடித்தம் இல்லை. 'அண்ணனுக்கு என்ன குறை...இந்த மனீஷாவை விட்டால்
பெண்ணா இல்லை... அவளை விடவும் அழகான வசதியான பெண்கள் அண்ணனுக்காக காத்திருக்கின்றனர்.இந்த
மனிஷாவின் செயல்பாடுகள் முன்னுக்கு பின் முரணாகத் தான் இருக்கிறது. திருமணத்திற்கு
முன்பே இப்படி என்றால் திருமணத்திற்கு பிறகு அவள் இன்னும் எப்படி மாறுவாளோ தெரியாது.இப்போதைக்கு
இந்த சஹானாவை ஊருக்கு அனுப்ப என்ன வழி என்று யோசிக்க வேண்டும்.அதுக்கு அப்புறம் இந்த
மனிஷாவை  பார்த்துக் கொள்ளலாம்' என்ற  முடிவுக்கு வந்தவள் மனிஷாவை மொத்தமாக புறக்கணிக்க
தொடங்கினாள்.
ஆனால் அதன் விளைவுகள்
அவள் எதிர்பாராத ஒன்று. அஞ்சலி தன்னை ஒதுக்குவதை புரிந்து கொண்ட மனிஷாவின் வன்மம் மேலும்
அதிகரித்தது.ஏற்கனவே சஹானா அந்த வீட்டில் எல்லார் மனதிலும் இடம் பிடித்து விட்டாள்.
இது நாள் வரை அஞ்சலி தன் பக்கம் இருந்ததால் அவளை ஊரை விட்டு விரட்டி விட்டால் பின்
கொஞ்சம் கொஞ்சமாக அபிமன்யுவின் வீட்டிற்குள் நுழைந்து விடலாம் என்ற அவளுடைய கற்பனை
கோட்டை இப்பொழுது அஸ்திவாரமே இன்றி ஆட்டம் காணத் தொடங்கியது. 'இனி அஞ்சலியை நம்பி பயன்
இல்லை.நானே களத்தில் இறங்கி விட வேண்டியது தான்' என்ற முடிவுக்கு வந்தவள் கிரியை அழைத்து
பேசலானாள்.
ஒரு பக்கம் மனிஷா தன்னுடைய
நாச வேலைகளை தொடங்கி இருக்க, மறுபக்கம் சஹானாவை ஊரை விட்டு விரட்ட தன்னுடைய பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்து இருந்தாள் அஞ்சலி.

கருத்துரையிடுக