அத்தியாயம் 37
ஒருபுறம் சஹானாவின் அரங்கேற்றத்திற்கான
வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டு இருக்க மறுபுறம் அஞ்சலியும் மனிஷாவும் தங்கள் வேலையை
கண்ணும் கருத்துமாக செய்து கொண்டு இருந்தனர்.சஹானாவின் அரங்கேற்றத்திற்கு இன்னும் ஒரு
வாரம் மட்டுமே மிச்சம் இருந்த சூழ்நிலையில் நிஷாவை தடுத்து விட்டு தானே நேரடியாக பயிற்சி
அளிக்கத் தொடங்கினான் அபிமன்யு.
எந்நேரமும் அவன் கூடவே
இருக்கும் சூழ்நிலையை சஹானா வெறுப்பது போல
காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவனின் அருகாமையை ரசிக்கவே செய்தாள்.தான்
இங்கே இருக்கப் போவது இன்னும் ஒரு வாரம் மட்டுமே. அதற்கிடையில் தேவை இல்லாமல் அபிமன்யுவுடன்
சண்டை போட்டால் தன்னுடைய அரங்கேற்றம் பாதிக்கப்படும் என்பதாலேயே அவனின் அருகாமையை தான் ஏற்றுக் கொண்டு இருப்பதாக அதற்கு ஒரு சப்பை கட்டும் கட்டிக் கொண்டாள்.
மனிஷாவை பற்றியும் அஞ்சலியை
பற்றியும் தெரிந்து கொண்டதாலோ என்னவோ அபிமன்யு அவளை எந்த சூழ்நிலையிலும் தனித்து விடவில்லை.சொந்த
வீட்டில் கூட அவளை யாரும் நெருங்க முடியாதபடி அவளை பாதுகாப்பாய் பார்த்துக் கொண்டான்.
எப்பொழுது சந்தர்ப்பம் அமையும் என்று காத்துக் கொண்டு இருந்த கயவர் கூட்டத்திற்கு வாய்ப்பு
ஒன்று வந்தது.
கிரியை தன்னுடைய அகாடமியில்
வைத்து எல்லோர் முன்னிலையிலும் அடித்த காரணத்திற்காக கிரி டான்சர்ஸ் அசோசியேஷனில் அபிமன்யுவின்
மீது கம்பிளைன்ட் ஒன்று கொடுக்க, அதை பற்றி விசாரிக்க அபிமன்யுவை நேரில் வருமாறு சொல்லி
நோட்டீஸ் வந்து இருந்தது.
அன்று அவளை அகாடமியில்
இறக்கி விட்டு தன்னுடைய அறைக்குள் நிஷாவை அழைத்து அவளிடம் சஹானாவை பார்த்துக் கொள்ளுமாறு
ஆயிரம் முறை சொல்லி விட்டு நிஷாவை மட்டும் கிளம்பி டான்ஸ்
அறையில் காத்திருக்க சொன்னான் அபிமன்யு.
"சனா...எனக்கு உன்னை
தனியே விட்டுட்டு போறதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. ஆனால் இதை தவிர்க்க முடியாது.
நேரில் போய் ஒரு முறை விளக்கம் சொல்ல வேண்டும் அது தான் மரியாதை" என்று சொன்னவன்
கொஞ்சம் தயங்கி, " நான் போய்ட்டு வரவா? நீ அதுவரை சமாளிச்சுக்குவ தானே"கண்களில்
பரிதவிப்போடு கேட்டான் அபிமன்யு.
'எதற்காக இத்தனை பயம்...என்னை
யார் என்ன செய்து விட போகிறார்கள்... இவ்வளவு பயமும் ஏற்படக் காரணம் என் மீது இருக்கும்
அன்பா?'என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டு கொண்டவள் , தன் பதிலுக்காக காத்திருக்கும்
அபிமன்யுவின் முகத்தை பார்த்தவள் வழக்கம் போல சில நொடிகளில் அவனுடைய விழி வீச்சை சந்திக்க
முடியாமல் குனிந்து கொண்டாள்.
"கேட்கிறேனே...
நான் போகட்டுமா" எழுந்து அவளின் அருகில் வந்து நின்றான் அபிமன்யு.
ஏனோ சஹானாவால் அவனை கிளம்பி
செல்ல அனுமதிக்க முடியவில்லை. மனதிற்குள் ஏதோ இனம் புரியாத பயம்.கண்களில் கலக்கத்தோடு
அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
சட்டென்று அவளை நெருங்கி
அவளின் தோளில் கை வைத்து ஆதரவாக பேச ஆரம்பித்தான்.
"சீக்கிரமே வந்து
விடுவேன் சனா...இதை தவிர்த்தால் சங்கத்தில் இருக்கும் பெரியவர்களை அவமதித்தது போல்
ஆகி விடும்.முடிந்த அளவு சீக்கிரம் வந்து விடுகிறேன். நீ தனியாக எங்கேயும் போக வேண்டாம்.நான்
வரும் வரை நீ ப்ராக்டிஸ் செய்து கொண்டு இரு. நிஷா உனக்கு துணையாக இருப்பாள்.இங்கே இருக்கும் வரை உன்னை நெருங்க யாராலும் முடியாது." குரலை குழைத்து மென்மையாக பேசினான் அபிமன்யு.
'நிஷாவாம் நிஷா !அவள்
ஒன்றும் எனக்கு அருகில் இருக்க வேண்டாம். எனக்கு
உங்கள் அருகில் இருந்தால் தான் பாதுகாப்பாக இருக்கிறது என்று நினைத்தவள்' அதன் சாராம்சம்
உணர்ந்து அதிர்ந்து போனாள்.
கண் கலங்க எதிரில் நின்றவனை
நிமிர்ந்து பார்த்தாள். 'என்னை விட்டு போகாதே' என்று கெஞ்சல் நிறைந்த ஒரு பார்வை.அபிமன்யு
அவளின் பார்வையின் பொருளை நொடியில் உணர்ந்து கொண்டான்.
அவளை மேலும் அவனால் அவளை விட்டு விலகி நிற்க முடியவில்லை.நொடியில் அவளை
நெருங்கி நின்று
அவளுடைய கன்னத்தை தன்னுடைய கைகளில் தாங்கி கண்களை நேராக பார்த்து பேச ஆரம்பித்தான்.
"சனா... நீ எதையோ
நினைத்து பயப்படுகிற மாதிரி இருக்கு.அது என்னன்னு எனக்கு தெரியாது. அது எதுவா இருந்தாலும்
சரி ...நீ கவலை படாமல் இரு.நான் பார்த்துக் கொள்வேன்.இப்போ நான் போய்ட்டு உடனே வந்துடுவேன்."
மெல்ல தயங்கி தயங்கி
அவனிடம் கேட்டாள் சஹானா. " அந்த கிரிக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை? ஏ...ஏதோ
பெண் விஷயம்ன்னு..." பேசிக் கொண்டே போனவள் அபிமன்யுவின் அழுத்தமான பார்வையில்
வாயை மூடிக் கொண்டாள்.
தன்னை சமாளித்துக் கொண்டு
மீண்டும் பேச ஆரம்பித்தாள் சஹானா. "சந்தேகப்பட்டு
எல்லாம் கேட்கலை.சும்மா ...சும்மா தான் கேட்டேன். நான்
தெரிஞ்சுக்க கூடாதுனா சொல்ல வேண்டாம்"என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு பார்வையை
தரையில் பதித்துக் கொண்டாள்.
சிறுமுறுவலுடன் அவளின்
முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தினான் அபிமன்யு. "சொல்ல கூடாதுனு இல்லை சனா...சொன்னா
நீ நம்புவியா இல்லையான்னு தான் தெரியலை.
அதான்" தன்னுடைய தயக்கத்திற்கான காரணத்தை அவளிடம் எடுத்து சொன்னான்.
இதை பற்றி இதற்கு மேல்
எப்படி கேட்பது என்று புரியாமல் அமைதி காத்தாள் சஹானா.அபிமன்யு தன்னிடம் காதலை சொன்ன
பிறகு தான் இன்னும் அவனுக்கு சாதகமான பதிலை தர முடியாத பட்சத்தில் அபிமன்யுவிடம் இதை
பற்றி மேலும் தோண்டித் துருவ அவளுக்கு மனமில்லை.அவள் கேட்காவிட்டாலும் அவளுடைய மனம்
போகும் போக்கு அபிமன்யுவிற்கு புரியாதா என்ன!
"சனா என்னிடம் எப்பொழுதும்
உனக்கு தயக்கம் வேண்டாம் . எங்கே இவனிடம் கேள்வி கேட்டால் அதை தவறாக எண்ணிக் கொண்டு
மேலும் உன்னை தொந்தரவு செய்வேனோ என்ற குழப்பம் வேண்டாம்.எனக்கு என்னுடைய காதல் முக்கியம்
தான். ஆனால் அதை விட முக்கியம் உன்னுடைய நிம்மதியும், சம்மதமும்.எனவே உன்னை நீயே வருத்திக்
கொள்ளாமல் இரு" என்று சொன்னவன் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் பேச ஆரம்பித்தான்.
கிரி தன்னிடம்
வேலைக்கு சேர்ந்தது முதல் கடைசி நாள் நடந்தது வரை சொன்னவன் அவளை ஒரு பார்வை
பார்த்தான்.“நடந்தது இது தான் சனா...இதை நீ
நம்புவாயா இல்லையோ எனக்கு தெரியாது.ஆனால் இது
தான் உண்மை....”
என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அவனை முந்திக்கொண்டு பேசத் தொடங்கினாள் சஹானா.
“நான்
நம்புறேன்...”அவளுடைய மனக்கண்ணில் அன்று அந்த கடையில்
நடந்த நிகழ்வு ஒருமுறை வந்து போனது.அவளின் பதிலை கேட்ட அபிமன்யுவின் கண்களில்
மின்னல் மின்னி மறைந்தது.
“தேங்க்ஸ்டா
...நீ பத்திரமா இரு.நான் போய்ட்டு வந்திடறேன்”
என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியேறும் முன் அவனுக்கு முன்னே சென்று அவனது
பாதையை மறித்து நின்ற சஹானாவை வியப்பாக பார்த்தான் அபிமன்யு.
இதற்கு முன்
அபிமன்யுவிடம் சஹானா இப்படி நடந்து கொண்டது இல்லை.சமீப காலமாக அவள் அவனை மனதளவில்
நெருங்கி இருந்தாலும் இப்படி வெளிப்படையாக எதையும் செய்ததில்லை.இன்று அவளுடைய
செயல்கள் எல்லாம் புதிதாக இருப்பது போல அபிமன்யுவிற்கு தோன்றவே அவளை ஆழ்ந்த ஒரு
பார்வை பார்த்தான்.
சஹானாவின் கண்களில்
பயம் இருந்தது.அதை உணர்ந்தவன் மெல்ல அருகில் வந்து அவள் கண்களை உற்று
நோக்கினான்.பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டு பேசலானாள். “இன்னைக்கு எங்கேயும் போக
வேண்டாமே...எனக்கு காலையில் இருந்தே மனசு
என்னவோ ஒரு மாதிரி இருக்கு.”
அவளது கண்களை
உற்றுப் பார்த்தவன் அதில் குடி கொண்டு இருந்த கலக்கத்தை உணர்ந்து கொண்டு
மேலும் அவளை நெருங்கி , “தப்பா
எடுத்துக்காதே சனா” என்றவன் அவள் என்ன ஏது என்று உணரும்
முன்னே அவளை அணைத்து இருந்தான்.காதலோ காமமோ இன்றி கனிவோடு ஒரு அணைப்பு.நான்
இருக்கிறேன் உனக்கு.எதை நினைத்தும் பயப்படாதே என்று தைரியம் மூட்டும் ஒரு
அணைப்பு.சஹானாவும் அதை உணர்ந்தாளோ என்னவோ ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றாள்.
“சொன்னா
கேளு பேபி...இந்த பிரச்சினையை வளர விடுறது நல்லது இல்லை...இதனால் உன்னுடைய
அரங்கேற்றத்திற்கு ஏதேனும் பாதிப்பு வரலாம்.அதுக்கு தான் நான் இப்போ
போறேன்.புரிஞ்சுக்கோ பேபி...நீ இப்படி நிஜமாகவே பேபி மாதிரி நடந்துக்கிட்டா
அப்புறம் எப்படி நான் கிளம்பி போறது...ஏற்கனவே கிளம்பவே மனசில்லாம தான்
கிளம்பறேன்.
“ஹ்ம்ம்
நீ வேற என் மேலே நம்பிக்கை இருக்குனு சொல்லிட்ட அதான் யோசனையா இருக்கு.முதன்முதலா
என்னை பத்தி நல்ல விதமா யோசிக்கிற...அதை கெடுத்துக்க நான் விரும்பல...இப்போ
போயிட்டு எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ வந்திடறேன் பேபி...ப்ளீஸ்” என்றவன் அவளின் கன்னத்தில் ஒற்றை
விரலால் ஒரு தட்டி விட்டு,அவள் எங்கே மறுபடியும் தடுத்து நிறுத்தி விடுவாளோ என்று
வேகமாக அங்கிருந்து வெளியேறி விட்டான் அபிமன்யு.
அவன் சென்ற சில
நிமிடங்கள் கழித்தே சுய உணர்வுக்கு வந்தவள் சோர்ந்த நடையோடு நிஷா இருக்கும்
அறைக்குள் நுழைந்தாள். “என்ன மேடம்...ஹீரோ
சார் பக்கத்தில் இல்லாம மேடம்க்கு ரொம்ப போர் அடிக்குது போலயே” என்று கிண்டல் அடிக்க
ஆரம்பித்தாள்.அவளுடைய கேலி கிண்டல் இதிலெல்லாம் மனம் பதியாமல் தன் போக்கில் நடனப்
பயிற்சியை செய்து கொண்டு இருந்தாள்.அவளின் மனம் அங்கே இல்லவே இல்லை. ‘இன்று போகாவிட்டால் தான் என்ன? அத்தனை
தடுத்தும் கிளம்பி போய் விட்டாரே!’
என்ற சிந்தனையோடு ஆடிக் கொண்டு இருந்தாள் சஹானா.
சற்று நேரத்தில்
நிஷாவின் மொபைலுக்கு வந்த அழைப்பை எடுத்து பேசியதும் சொன்ன செய்தியில் நிஷா,சஹானா
இருவருமே ஆடித் தான் போனார்கள்.அங்கே பேச்சு
வார்த்தை நடக்கும் போது கிரி அபிமன்யுவை கத்தியால் குத்தி விட்டான் என்ற செய்தி
தான் அது.
செய்தியை கேட்டதும் சஹானா அதிர்ச்சியில் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதை
கூட உணராமல் அப்படியே சிலை என அமர்ந்து விட்டாள். ‘இதற்கு தான் காலையில் இருந்தே
என்னுடைய மனது சரி இல்லாமல் இருந்ததா?எத்தனை முறை சொன்னேன்? ஏன் நீங்கள்
கேட்கவில்லை’ என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டு இருந்தாள். அந்த நேரத்தில் நிஷா
முதலில் பயந்தாலும் தெளிவாக சிந்தித்தாள்.
முதல் வேலையாக
அபிமன்யுவின் மொபைலுக்கு கால் செய்து பார்த்தாள்.அதை வேறு யாரோ ஒரு நபர் எடுத்து
அவளுக்கு வந்த தகவலை உறுதி செய்து அபிமன்யு மலர் மருத்துவமனையில் தங்கி இருப்பதாக
தகவல் தந்தார்.விஷயத்தை சகானாவிற்கு சொன்னவுடன் அடுத்த நிமிடம்
அங்கிருந்து புறப்பட தயார் ஆனவளை பிடித்து தடுத்து நிறுத்தினாள் நிஷா.
“சஹானா...அபிமன்யுவை
பார்க்க இப்படி நாம ரெண்டு பேரும் தனியா கிளம்பி போக வேணாம்...கொஞ்சம் வெயிட்
பண்ணுங்க...யாரையாவது துணைக்கு கூட்டிக்கிட்டு போகலாம்.”
அவளின் வார்த்தைகளை
கவனிக்கும் மனநிலையில் சஹானா இல்லை. “எனக்கு
உன் மீது கொஞ்சமும் நம்பிக்கை இல்லை நிஷா.ஆரம்பத்தில் இருந்தே என்னையும் அவரையும்
பிரித்து வைக்க முயற்சி செய்தவள் தானே நீ...உன்னை நான் நம்ப மாட்டேன்.நான் உடனே
போகிறேன்.” என்று கூறிவிட்டு நிஷா எவ்வளவோ
தடுத்தும் கேளாமல் அவளை அறையின் உள்ளேயே வைத்து பூட்டி விட்டு அகாடமியை விட்டு வெளியேறினாள் சஹானா.எங்கே நிஷா பின்னாலேயே வந்து தன்னை போக விடாமல் தடுத்து
விடுவாளோ என்று எண்ணியதால் அவளை பூட்டி விட்டு சென்றது தான் அவளுக்கு பாதகமாக
மாறிப் போய் இருந்தது.
அகாடமியை விட்டு விறுவிறுவென வெளியேறிய சஹானாவின் மனதில் அப்பொழுது
இருந்தது அபிமன்யு மட்டுமே...வேறு எந்த விஷயமும் அவளது மனதில்
இல்லை.அபிமன்யுவிற்கு என்ன ஆயிற்றோ என்ற பதட்டமே அவளது மூளையை ஒழுங்காக சிந்திக்க
முடியாமல் செய்தது.வேகவேகமாக சாலையை கடந்து சென்றவள் எதிரில் வந்த ஆட்டோவில்
ஏறியது மட்டும் தான் அவளுக்கு கடைசியாக
நினைவில் இருந்தது.அதன்பிறகு அவள் முழிக்கும் போது கையும் காலும்
கட்டப்பட்ட நிலையில் சேரோடு சேர்த்து கட்டி வைக்கப் பட்டு இருந்தாள்.

கருத்துரையிடுக