அத்தியாயம்
1
வான வீதியில் பொன் தோரணங்களை கட்டி விட்டது போல தன்னுடைய
கதிர்களால் அழகு படுத்திக் கொண்டிருந்தான் கதிரவன். இன்னும் முழுமையாக வெளிவராமல்
லேசாக எட்டிப் பார்த்த சூரியனின் பார்வையில் முதலில் பட்டது அக்னிபுத்திரன் தான்...
‘ஒரு
நாளாவது இவனுக்கு முன்னாடி நாம வரணும்னு நினைச்சா நடக்காது போலவே... எப்பொழுதும் என்னை முந்திக் கொள்கிறான்’ என்று சூரியனும்
எண்ணியது போலும்... அவனை ஜெயிக்க முடியாத கோபத்தில் சுள்ளென பூமியைத் தாக்க...
அதன் வெப்பத்தால் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் தன்னுடைய ஜாகிங்கை செய்து முடித்தான்
அக்னி.
உடலில்
ஒரு இடத்தில் கூட அதிகப்படியான சதை இல்லாமல் ஒரு இராணுவ வீரனுக்கே உரிய
மிடுக்குடன் இருந்தான் நம்முடைய கதையின் நாயகன் மேஜர் அக்னிபுத்திரன். நெருப்பு
அவன் பேரில் இருப்பதாலோ என்னவோ அவனும் நெருப்பாகவே இருந்தான். யாராலும் அணுக
முடியாதவனாக... தன்னை நெருங்கி வர நினைப்பவர்களை தன்னுடைய அக்னியால் சுடுபவனாக...
கோபம் வந்தால் எரிமலை போல வெடித்து சிதறுபவனாக...
தவறுகளை
பொறுத்துக் கொள்ள முடியாதவன். எந்த வேலையையும் அரைகுறையாக முடிக்காமல் எடுத்த
காரியத்தை பூரணமாக செய்து முடிப்பவன்.
“நீமோ
... சிட்” (Nemo Sit) என்ற அவனது ஒற்றை
வார்த்தையில் நல்ல பிள்ளையாக வாலை ஆட்டி அவன் முன்னால் வந்து அமர்ந்தது அவனது உற்ற
நண்பன் ... இப்பொழுது அவனுக்கு இருக்கும் ஒரே துணை நீமோ...
“பைக்கில்
ஏறு” என்று சொன்னதும் அடுத்த நிமிடமே தாவிக் குதித்து பைக்கின் பின் சீட்டில்
அமர்ந்து கொள்ள... கொஞ்சம் கொஞ்சமாக அதிவேகமெடுத்து ஓடத் தொடங்கியது அந்த ராயல்
என்பீல்டு புல்லட்.
புயல்
வேகத்தில் கிளம்பிய அந்த புல்லட் ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்த வீட்டிற்கு வந்து
சேர்வதற்கு அரைமணி நேரம் ஆனது. வண்டியை நிறுத்தியதும் வண்டியில் இருந்து
குதித்துக் கொண்டு இறங்கிய நீமோ வாசல் கேட்டுக்கு அருகே மீண்டும் ஓடிப் போய் அங்கே
இருந்த அன்றைய தினசரி செய்தித்தாளை வாயில் கவ்விக் கொண்டு வந்து அவனிடம்
கொடுத்தது.
அதன்
வாயில் இருந்த பேப்பரை வாங்கிக் கொண்டவன், “குட் பாய்” என்று கூறி அதன் நெற்றியில்
லேசாக தடவிக் கொடுக்க.. அவனது அந்த ஒற்றை பாராட்டுக்கு துள்ளிக் குதிக்கத்
தொடங்கினான் நீமோ.
தனக்கு
காபியையும், நீமோவுக்கு பாலையும் கொண்டு வந்தவன் பருகி முடித்தவுடன் குளிப்பதற்கு
தயாராக அதைப் பார்த்ததும் சடுதியில் ஓடி ஒளிந்து கொண்டது.
“நீமோ
வெளியில் வா” என்றான் குரலை உயர்த்தாமல்...
‘ஹ்ம்..
தினமும் இந்த பயலுக்கு இதே வேலையா போச்சு... குளிக்க சொன்னா சோபாவுக்கு அடியில்
போய் ஒளிஞ்சுக்கிறான்’ என்று சலித்துக்
கொண்டான். வீடு முழுக்கத் தேடியவன் கடைசியில் பெட்ரூமில் படுக்கைக்கு அடியில்
ஒளிந்து கொண்டு வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவனை கழுத்தில் மாட்டி இருந்த
பெல்ட்டோடு சேர்த்து தரதரவென இழுத்துக் கொண்டு பாத்ரூமிற்கு நுழைந்தான்.
“அப்படி
என்ன தான் பயமோ உனக்கு? குளிச்சா ஒண்ணும் செத்துட மாட்ட.. ஒழுங்கா வா” என்று
அதட்டல் போட்டு அடக்கினான். நீமோவிற்கு குளிப்பது என்றாலே அலர்ஜி... வெகுவாக கத்தி
தொண்டை வறண்டு.. அழுதுவது போல மாறி சத்தம்
போட்ட பின்னாலும் அக்னியிடம் கொஞ்சமும் இளக்கம் இல்லாததால் வேறுவழியின்றி
புலம்பிக்கொண்டே (ஊளையிட்டுக் கொண்டே) குளித்து முடித்தான் நீமோ.
நீமோ
ராணுவத்தில் உள்ள அனைத்து பயிற்சிகளையும் அக்னியின் வாயிலாக கற்றுத் தேர்ந்தவன்.
ஆனாலும் அவனுக்கு தண்ணீர் என்றால் மட்டும் கொஞ்சமும் ஆகாது.
“சை!
இவனை குளிப்பாட்டின நேரத்திற்கு நாலு எருமை மாட்டை குளிப்பாட்டி இருக்கலாம்.
தினமும் இதே வேலையா போச்சு” என்றவன் கடகடவென்று குளித்து முடித்து விட்டு வெளியே
வரவும் காலிங்பெல் ஒலிக்கவும் சரியாக இருக்க... அவசரமாக ஒரு உடையை அணிந்து கொண்டு
போய் கதவை திறந்தான்.
‘இந்த
நேரத்தில் யார்?’ என்ற யோசனையுடன் கதவை திறந்தவன் அங்கே நின்றவரைப் பார்த்ததும்
வாயில் வார்த்தைகள் வராமல் தடுமாறினான்.
இருவரில்
யார் முதலில் பேசுவது என்று இருவருமே தடுமாறிக் கொண்டிருக்க... அந்த தயக்கம், ஈகோ
எல்லாம் மனிதர்களுக்குத் தானே... நீமோவுக்கு என்ன கட்டுப்பாடு? வந்தவரைப் பார்த்த
நீமோ துள்ளிக் குதித்து அவரது தோள் மேல் தன்னுடைய முன்னங்கால்களைப் போட்டு அவரை விளையாட அழைத்தது.
“உள்ளே
வரலாமா தம்பி?” என்று பெரியவர் முதலில் பேச தன்னை மீட்டுக் கொண்டவன் வாசலை விட்டு
நகர்ந்து நின்றான்.
“உள்ளே
வாங்கப்பா... உங்க பையன் வீட்டுக்கு வர்றதுக்கு கூட அனுமதி கேட்கணுமா என்ன?” என்று
கரகரப்பான குரலில் சொன்னவனை ஆழ்ந்து பார்த்தார் நேசமணி...
“அப்பாவா?
அந்த நினைப்பெல்லாம் உனக்கு இன்னமும் இருக்கா தம்பி?”
“வந்த
விஷயத்தை பத்தி மட்டும் பேசுங்கப்பா” என்றவனின் பார்வை எங்கோ தொலைதூரத்தை
வெறித்துக் கொண்டிருக்க... நேசமணி மேற்கொண்டு எதையுமே பேசாமல் சற்று நேர
அமைதிக்குப் பிறகு பேசத் தொடங்கினார்.
“தம்பி...
எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணுமே?”
“என்ன
விஷயம்ப்பா” என்றவனின் பார்வை தந்தையின் மீது கூர்மையுடன் படிய.. அவர் சொல்ல
வந்ததை சொல்ல முடியாமல் வெகுவாகத்
திணறினார்.
“சொல்லுங்கப்பா”
என்றவனின் பார்வை கொஞ்சம் கூடுதல் அழுத்தத்துடன் தந்தையிடம் பதிய வேறு வழியின்றி
பேசத் தொடங்கினார்.
“உனக்கு
சுதந்திரப் போராட்ட தியாகி அண்ணாமலை அய்யாவை தெரியும் தானே தம்பி”
“தெரியும்...
அவருக்கென்ன” என்றவனின் முகத்தில் கேள்வி இருந்தது.
“அவர்
போன மாதம் தவறிட்டார்....”
“ஓ...”
அதற்கு மேல் அவன் எதையும் பேசவில்லை. ஊரில் தன்னுடைய தாயை தனியாக விட்டுவிட்டு
இப்படி இங்கே வந்து வெட்டியாக கதை பேசிக் கொண்டு இருப்பவர் அல்ல தன்னுடைய தந்தை
என்பதை உணர்ந்து இருந்ததால் அமைதி காத்தான் அக்னி. தியாகி அண்ணாமலை அவனுடைய தந்தை நேசமணிக்கு
ஆசானைப் போன்றவர். தொண்ணூறுகளை தாண்டிய வயது அவருக்கு என்பது அவன் நினைவில் வந்து
போனது.
‘விஷயம்
ஏதோ பெரிது’ என்று அவன் மனசாட்சி அடித்துக் கூறியது. எதுவாக இருந்தாலும் அவர்
வாயில் இருந்தே வரட்டும் என்று எண்ணியவனாக அமைதி காத்தான்.
“போன
வாரம் தான் அவரோட உயிலை படிச்சு காட்டினாங்க...”
‘ஏதோ
பூதம் வெளியே வரப் போகுது’
“அதுல
அவர் உன்னைப் பத்தி சொல்லி இருக்கார்” என்று எச்சில் விழுங்கியபடி அவர் பேச...
கொஞ்சமும் பார்வை மாற்றாமல் அவரையே பார்த்து இருந்தான் அக்னி.
‘அதனால்
தானே இங்கே வந்து இருக்கீங்க.. இன்னும் விஷயம் என்னனு இவர் சொல்லலியே’ என்று
எண்ணியவன் முகத்தை கறாராக வைத்துக் கொண்டான். எதுவாக இருந்தாலும் அவராக
சொல்லட்டும் என்று அவர் முகத்தையே கூர்மையாக அளவிட்டுக் கொண்டு இருந்தான்.
“அவரோட
பேத்தி பேர் அருந்ததி... அவளுக்கு உன்னை.... ” என்று தயங்கி தயங்கி, அவர் அடுத்து
சொன்ன விஷயத்தில் அவனது நாடி நரம்புகள் அனைத்தும் புடைத்துக் கொண்டு வெடித்து
விடும் அளவிற்கு அவனது உடம்பு முறுக்கேறியது.
உட்கார்ந்து
இருந்த சோபாவில் இருந்து அவன் எழுந்த வேகத்தில் அவன் கோபத்தின் பரிணாமம் புரிய.. தொடர்ந்து பேச முடியாமல் தடுமாறினார் நேசமணி.
“யார்கிட்டே...
என்ன பேசுறோம்னு தெரிஞ்சு தான் பேசறீங்களா அப்பா?”
“நான்
உன்னோட அப்பா தம்பி... இதை செய்ய சொல்லி உன்கிட்டே உரிமையாவோ, கட்டளையாகவோ
சொல்லலை.. கெஞ்சிக் கேட்கத் தான் வந்து
இருக்கேன்.” என்று தாழ்மையாக பேசியவரின் தளர்ந்த முகத்தை சில நொடிகளுக்கு மேல்
பார்க்கப் பிடிக்காமல் பார்வையை திருப்பிக் கொண்டான்.
“அவர்
எழுதின உயிலோட செராக்ஸ் (Xerox) காபி இங்கே வச்சுட்டுப் போறேன்... நீயும்
ஒருமுறை... எனக்காக.. ஒரே ஒருமுறை படிச்சுப் பார்.. அப்புறம் உன்னோட இஷ்டம். நான்
தொந்தரவு செய்ய மாட்டேன்” என்று சொன்னவர் கிளம்ப முற்பட, அவனது பார்வை தனது
காலுக்கு கீழே அமர்ந்து இருந்த நீமோவின் புறம் சென்றது.
அவனது
பார்வையில் அதற்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. எழ முயற்சி செய்தவரின் மடியில்
சட்டமாக ஏறி அமர்ந்து கொண்டு அவரிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டு இருக்க... எதுவுமே
பேசாமல் எழுந்தவன் உள்ளே போய் அவருக்கு காபி கொண்டு வந்து நீட்டினான்.
“உடனே
ஊருக்கு போக வேண்டாம்.. இருந்துட்டு பொறுமையா போகலாம். எனக்கு ஒண்ணும் பிரச்சினை
இல்லை” என்று சொன்னவனின் பார்வை இப்பொழுது அவர் முகத்தில் இல்லை.
“இல்லை
தம்பி.. ஊரில் அம்மா தனியா இருப்பா.. அவளைப் பத்திக் கவலைப்பட இருக்கிற ஒரே ஜீவன்
நான் தானே? நானும் இல்லைனா ரொம்ப கஷ்டம்” என்று சொன்னவரை அவனது பார்வை கூர்மையாக
அளவிட்டது.
“செஞ்ச
பாவம் சும்மா விடுமா.. அனுபவிச்சுத் தான் ஆகணும்” என்றான் துளியும் இரக்கம்
இல்லாமல்.
“உன்னை
பத்து மாசம் சுமந்து பெத்த அம்மாவைப் பத்தி பேசுறோம் அப்படிங்கிறதை கொஞ்சம்
நினைவில் வச்சுக்கிட்டு பேசு தம்பி” அவர் குரலில் லேசான கண்டனம் இருந்தது.
“அப்படியா?
எனக்கு மறந்து போச்சு...” என்று அசட்டையாக தோள் குலுக்கியவனை என்ன செய்வது என்றே
அவருக்கு புரியவில்லை.
“தம்பி..
நடந்ததை எல்லாம் மறக்க முயற்சி செய்யக் கூடாதா?”
“ஹ..
என்னோட மனசில் முழுக்க முழுக்க நிறைஞ்சு இருக்கிறது என்னோட ஜெனிபர் தான். அவளோட
நினைவுகள் இன்னமும் என்கிட்டே இருக்கிறதால தான் நான் உயிரோட இருக்கேன்” என்று
சொன்னவனின் முகம் கற்பாறையாக இறுகிப் போய் இருக்க... மகனின் பிடிவாத குணம்
அறிந்தவர் என்பதால் மேற்கொண்டு பேசாமல் வாசலை நோக்கி சென்றார்.
வெளி
கேட்டைத் தாண்டும் முன் மீண்டும் ஒருமுறை அவனிடம் அந்த உயிலை படித்துப் பார்க்க
சொன்னவர் தோற்றுப் போன பாவனையுடன் கிளம்பி சென்று விட அக்னிக்குத் தான் கொஞ்ச
நேரம் மனம் எதிலுமே பதியவில்லை.
அவனது
மனக்கண்ணில் ஜெனிபரின் அழகு முகம் மின்னி மறைந்தது... கூடவே அவனது வாழ்வில் மறக்க
முடியாத அந்த கொடுமையான நாளும்.... தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்த
நீமோவைப் பார்த்ததும் அவனது கோபம் இன்னும் அதிகரிக்க வேகமாக சென்று தன்னுடைய
ஜிம்மில் புகுந்து கொண்டான்.
உடற்பயிற்சிக்காக
செய்ய வேண்டியதை ஒரு வித வெறித்தனத்தோடு செய்தான். கையும், காலும் ஓய்வுக்கு
கெஞ்சும் வரை எல்லா பயிற்சிகளையும் செய்தவன் நேரத்தைப் பார்க்க மணி பன்னிரண்டை
நெருங்கிக் கொண்டிருந்தது.
‘சே!..
இவ்வளவு நேரமாவா இங்கே இருக்கேன்... நீமோவுக்கு கூட சாப்பாடு போடலையே’ என்று இனி
வருந்தியவன் மீண்டும் ஒருமுறை குளித்து விட்டு வந்து இருவருக்குமாக சேர்ந்து
ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்தான்.
ஹோட்டலில்
இருந்து வந்த சாப்பாட்டை சாப்பிட்டு முடித்ததும் நீமோ எப்பொழுதும் போல படுக்கையில்
அவனுடன் படுத்துக் கொள்ள... அளவுக்கு அதிகமாக செய்த உடற்பயிற்சியின் விளைவால் அவன்
உடலில் அசதி இருந்தாலும் அவனால் துளியும் உறங்க முடியவில்லை.
அவன்
கண் இமைகளுக்கு நடுவில் ஜெனிபரின் முகம் தோன்றியது. சில நொடிகளுக்கு மேல் தாங்க
முடியாமல் எழுந்தவன் அந்த உயிலை எடுத்து வைத்து மீண்டும் முதலில் இருந்து படிக்கத்
தொடங்கினான். மீண்டும் மீண்டும் படித்தவனுக்கு அதிலிருந்து எப்படி தப்புவது என்ற
வழி மட்டும் புரியவே இல்லை.
நேசமணியால்
அவர்களை மறுத்து பேச முடியாது. தியாகி அண்ணாமலையின் மீது உள்ள மரியாதையின் காரணமாக
இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று எண்ணினான்.
எனவே தந்தை வழியில் இந்த விஷயத்தில் உதவி
எதிர்பார்க்க முடியாது. அதே நேரம் மறுத்து பேசினாலும் தந்தைக்கு தான் அது மன
வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொண்டவன் அமைதியாக சற்று நேரம்
யோசித்தான்.
‘நாம
முடியாதுன்னு சொன்னா தானே பிரச்சினை... அவங்க வாயாலேயே சொல்ல வச்சா’ என்று எண்ணிக்
கொண்டவனின் உதடுகள் அலட்சியத்துடன் லேசாக நெளிய... அவனது அந்த தோற்றத்தில் எதுவோ
சரியில்லை என்பது நீமோவுக்கு புரிந்து போனது.
“லொள்...
லொள்...” என்று குரைக்கவும் திரும்பி ஒரு பார்வை பார்த்து வைத்தான்
அக்னிபுத்திரன்.
“நாளைக்கு
சென்னைக்கு போகணும் நீமோ...” என்று சொன்னவனின் கைகள் ஆணவத்துடன் அந்த உயிலை தூக்கி
தூர எறிந்தது.
‘இராணுவத்தில்
எத்தனை எதிரிகளை சமாளிச்சு இருக்கேன்... இந்த அருந்ததி எல்லாம் எனக்கு ஒரு
மேட்டரா’ என்று எண்ணியபடி அடுத்த வேலைகளை கவனிக்கத் தொடங்கினான்.
பாவம்
அவனுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.
அவன்
கண்களில் விரலை விட்டு ஆட்டி.. அவனை தலையால் தண்ணீர் குடிக்க வைக்கப் போகும்
ஒருத்தியை நாளை சந்திக்கப் போவது....

கருத்துரையிடுக