காதல் கதகளி தமிழ் நாவல் அத்தியாயம் 25

அத்தியாயம்  25

 

நம்ம அபியா அப்படி சொன்னான்?” நம்ப மறுத்து கட்டிய கணவனையே கேள்வி கேட்டது அந்த தாயுள்ளம்.

 

“என் மேல் நம்பிக்கை இல்லையா பார்வதி?”

 

“ஐயோ அப்படி எல்லாம் இல்லைங்க....நம்ம அபி இப்படி பேசுறான்னா அந்த அளவிற்கு அவளிடம் மயங்கி போய் இருக்கிறானா... இல்லை... இல்லை என் பையன் அப்படிப்பட்டவன் கிடையாது.அவள் தான் என் பையனை மயக்கப் பார்க்கிறாள்.”கதறித் துடித்தது தாயுள்ளம்.

 

“அப்படி எல்லாம் பேசாதே பார்வதி.நமக்கும் ஒரு பெண் இருக்கிறாள்.அந்த பெண்ணுக்கு என்ன பிரச்சினையோ? எனக்கு என்னவோ அபி நம்மிடம் மறைக்கிறான் என்று அதற்கு வேறு காரணம் இருக்கும் என்று தோன்றுகிறது.கொஞ்சம் பொறுமையாக இரு.இன்று இரவு அபி வீட்டிற்கு வந்ததும் அவனிடம் பேசிக் கொள்ளலாம்.”

 

“இன்னும் என்ன பேச வேண்டி இருக்கிறது.அவளை இங்கே அழைத்து வந்து நம்முடைய கெஸ்ட் ஹௌசில் தங்க வைத்து இருக்கிறான்.அகாடமியிலும் வேலைக்கு சேர்த்து இருக்கிறான்.ஆனால் நம்மிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.”

“நீங்கள் கேட்டபோது கூட சொல்ல மறுத்து விட்டான் என்றால் எந்த அளவிற்கு அவள் நம்முடைய மகனை மயக்கி இருக்க வேண்டும்.இனியும் தாமதிக்க வேண்டாம்.அஞ்சலி காலேஜ் முடிச்சுட்டு வரதுக்குள்ள நாம போய் அவளை பார்த்து முதலில் இந்த ஊரை விட்டு துரத்தனும்.”

 

“வேண்டாம் பார்வதி.அந்த அளவிற்கு எதுவும் செய்து விடாதே...அந்த பெண்ணை பற்றி நான் கேள்வி கேட்டதையே அபிமன்யுவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.அப்படி இருக்கும் போது இப்படி ஏதாவது செய்தால் அபிமன்யு கண்டிப்பாக  கோபப் படுவான்.”

“இப்போ நீங்க என்னோட கிளம்பி வரீங்களா இல்லை நான் மட்டும் போய் அவளை ஒரு வழி பண்ணட்டுமா?”தனியே பார்வதியை அங்கே அனுப்பி வைப்பதை விட கூட தானும் சேர்ந்து செல்வது நல்லது என்ற முடிவுக்கு வந்தவர் மறக்காமல் அபிமன்யுவிற்கு தாங்கள் அங்கே செல்வதை மொபைலில் மெசேஜ் அனுப்பிவிட்டு  மனைவியுடன் கிளம்பி கெஸ்ட் ஹௌசிற்கு போனார்.

 

கெஸ்ட் ஹௌசிற்கு இவர்கள் இருவரும் நுழைந்ததும் பவ்யமாக கதவை திறந்து அவர்களுக்கு வழிவிட்டு நின்றனர் வேலையாட்கள். எப்பொழுதும் இந்த வீட்டிற்கு விருந்தினர்கள் மட்டுமே வருவார்கள் அபிமன்யுவின் வீட்டில் இருந்து யாரும் வந்து எட்டி பார்த்தது கூட கிடையாது.

 

அப்படி இருக்கையில் இவர்களின் இந்த திடீர் வருகைக்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தோடு அவர்களின் முகத்தையே கேள்வியாக பார்த்துக் கொண்டு இருந்தனர்.ஆனால் சம்பளம் கொடுக்கும் முதலாளியிடம், “எதற்காக வந்து இருக்குறீர்கள்” என்று வாயை திறந்து கேட்டு விட முடியுமா?வேலையாட்கள் மௌனம் காத்தனர்.

“எங்கே அவள்?”

 

“யாருங்க அம்மா?” பவ்யமாக கேட்டாள் சின்னாத்தா

 

“அது தான் புதிதாக ஒருத்தி இங்கே தங்கி இருக்கிறாளே ... அவள் தான்”

 

“சஹானா அம்மாவா... அவங்க ரூம்ல தூங்கிட்டு இருக்காங்க”

 

“அவள் அம்மாவா உனக்கு...அப்படினா நான் யார்?” என்று ஆவேசமாக கேள்வி கேட்ட முபார்வதியை புரியாத பார்வை பார்த்தாள் சின்னாத்தா.

 ‘இந்த அம்மா எதுக்கு இப்போ சம்பந்தமே இல்லாம இப்படி பேசுறாங்க’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு திருதிருவென விழித்தாள்.

 

“இன்னொரு முறை அவளை அம்மா என்று முறை வைத்து சொன்ன உனக்கு இங்கே வேலை கிடையாது புரிந்ததா?” என்று காட்டமாக பேசலானார் பார்வதி.அதன் பிறகும் கூட புரியவில்லை என்று சொன்னால் தனக்கு அங்கே வேலை இல்லை என்பதை நன்கு புரிந்து கொண்டு வேகவேகமாக தலையை ஆட்டினார்கள் வீட்டில் உள்ள ஒட்டுமொத்த வேலையாட்களும்.

 

“போய் அவளை கூட்டிக் கொண்டு வா”

 

“அவங்களுக்கு உடம்பு சரி இல்லைமா...அவங்களை யாரும் தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு அபிமன்யு அய்யா சொல்லி இருக்காங்க”

 

“இப்போ நீ போய் கூட்டிட்டு வரியா? இல்லையா?” அவர் முகத்தில் அடக்கப்பட்ட ஆத்திரம் இருந்தது.தன் மகனுக்கு இவள் மேல் அவ்வளவு அக்கறையா என்ற எண்ணத்தில் தோன்றியது தான் அது.பார்வதி என்ன தான் வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவருக்கு அஞ்சலியை விட அபிமன்யுவின் மேல் தான் அதிகமான பாசம்.

 

அதனால் தான் பெற்ற தாயான தன்னை மறந்து அஞ்சலியை அவன் அதிகம் நாடும் போதெல்லாம் அவருடைய மனத் தாங்கல் அவரை அறியாமல் வெளிப்படும்.அவரது இந்த எண்ணம் அவருடைய கணவரான ராஜேந்திரன் மட்டுமே அறிவார். அபிமன்யுவிற்கோ அஞ்சலிக்கோ இப்படி ஒரு எண்ணம் தாயிற்கு இருப்பது இதுவரை தெரியாது.

 

மனைவியின் எண்ணப் போக்கை உணர்ந்து கொண்ட ராஜேந்திரன் அவரின் கைகளை பிறர் அறியாமல் லேசாக அழுத்தினார்.கணவரின் கை அழுத்தத்தில் முயன்று தன்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தவர் சின்னாத்தாவை அழுத்தமான ஒரு பார்வை பார்த்தார். அவர் பார்த்த பார்வையில் அரண்டு போய் வேகவேகமாக போய் சஹானாவின் அறைக் கதவை தட்டினார் சின்னாத்தா.

 

அறைக்குள் ஏற்கனவே அழுது அழுது முகம் எல்லாம் வீங்கிப் போய் கண்கள் எல்லாம் எரியத் தொடங்க  அப்பொழுது தான் தூங்க தொடங்கினாள் சஹானா.உடனே அறைக்கதவு தட்டப்படவும் எரிச்சலுடன் தான் வந்து கதவை திறந்தாள் சஹானா.

 

கதவை திறந்ததும் வாசலில் இருந்த சின்னாத்தாவை பார்த்ததும் அவளுக்கு எரிச்சல் குறைந்த பாடில்லை. அபிமன்யு ஏற்கனவே அவளுக்கு வேளாவேளைக்கு உணவை வற்புறுத்தியாவது கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்ததால் மீண்டும் வந்து சாப்பிட அழைக்கிறாள் என்று நினைத்து அவளை திட்ட எண்ணி வாயை திறந்தாள்.

 

அவளின் முகபாவத்தில் இருந்தே அவள் திட்ட போவதை உணர்ந்த சின்னத்தா தான் பயந்து போனாள். ‘இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சோம்... இப்படி வரிசையா எல்லார்கிட்டயும் திட்டி வாங்கிட்டு இருக்கேனே’ என்று நொந்தவள் சஹானா திட்டுவதற்குள் அவளை முந்திக்கொண்டு பேசலானாள்.

 

“கீழே அம்மாவும் அய்யாவும் வந்து இருக்காங்க அம்மா...உங்களை வர சொன்னாங்க”

 

“சரி வருகிறேன் போங்க” என்று சொல்லிவிட்டு அறைக்குள் வந்து முகத்தை கழுவி விட்டு வெளியே வந்தாள்.அதற்குள் அவளுடைய மனதில் ஆயிரம் கேள்விகள்.எப்பொழுதும் சின்னத்தா அபிமன்யுவை குறிக்கும் பொழுது அய்யா என்று தான் சொல்லுவாள் அப்படியானால் இப்பொழுது அவன் உடன் வந்து இருக்கும் அந்த அம்மா யார்? ஒருவேளை அவனுடைய மனைவியோ? அப்படியானால் அவனுக்கு கல்யாணம் ஆகி விட்டதா?’

 

‘திருமணம் ஆன பின்னருமா என்னிடம் இப்படி எல்லாம் நடந்து கொண்டான்.சே!!! எவ்வளவு கீழ்த்தரமானவன்...இருக்கட்டும் இன்று அவனுடைய மனைவி முன்னிலையில் அவனை பற்றி ஒன்று விடாமல் சொல்லி விட வேண்டும் என்ற நினைவோடு தான் அவள் அறையை விட்டு வெளியே வந்தாள்.

 

ஹாலுக்கு வந்த சஹானா புதிதாக அமர்ந்து இருந்த அந்த வயதானவர்களை புரியாத பார்வை பார்த்தாள்.யார் இவர்கள்? அய்யா வந்து இருக்காங்கனு தானே இப்போ வந்து சொன்னாங்க? ஒரு வேளை இந்த வீடு உண்மையில் இவர்களுக்கு சொந்தமோ என்று ஆயிரம் ஆயிரம் குழப்பங்கள் தலையை சுற்ற வைத்தது சஹானாவிற்கு.

 

“இவங்க அபிமன்யு அய்யாவோட அம்மா அப்பா “ சாமார்த்தியமாக அவளை அம்மா என்று அழைப்பதை தவிர்த்து சஹானாவிற்கு தெரிய வேண்டிய பதிலை மட்டும் சொன்னாள் சின்னத்தா.

 

நொடியில் தன்னுடைய குழப்பத்தை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு தன் முன்னே அமர்ந்து இருந்தவர்களை பார்த்து கை கூப்பினாள் சஹானா.ராஜேந்திரனும் சரி , பார்வதியும் சரி இருவரும் அவளுக்கு பதில் வணக்கம் சொல்லவில்லை. மாறாக இருவரும் அவளை தலை முதல் கால் வரை ஆராய்ச்சி பார்வை தான் பார்த்துக் கொண்டு இருந்தனர். ‘எதற்காக தன்னை வர சொல்லி இருக்கிறார்கள்’ என்று சஹானா நினைத்துக்கொண்டு இருக்கும் பொழுதே பார்வதி பேச தொடங்கினார்.

 

“யார் நீ”

 

“சஹானா”

 

“எங்கள் வீட்டில்  உனக்கு என்ன வேலை?”

 

அவருடைய கேள்வியில் துணுக்குற்றாலும் “நான் அபிமன்யு சாரோட அகாடமில வேலை பார்க்கிறேன்.இங்கே தான் இரண்டு நாளா தங்கி இருக்கிறேன்.”

“வேலைக்கு வந்தால் எங்கேனும் லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கிக்க வேண்டியது தானே..இங்கே வந்து என்ன செய்கிறாய்?”

 

சஹானாவிற்கு கோபம் துளிர்த்தது. ‘என்னமோ வேணும்னே இங்கே வந்து தங்கி இருக்கிறதை போல இல்ல பேசுறாங்க.அண்ணன் என்னை ஹாஸ்டலில் தான் தங்க வைக்க நினைத்தார்.இவங்க பையன் தானே ஏதேதோ சொல்லி குழப்பி என்னை இங்கே தங்க வைத்தார்.அதற்கு அப்புறமும் இவங்க என்ன இப்படி பேசுறாங்க’ என்று மனதில் நினைத்தவள் அவர்களின் வயதின் காரணமாக  கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு மெதுவாக அவர்களுக்கு எடுத்து சொல்லலானாள்.

 

“நானும் அதை தான் நினைத்தேன்.ஆனால் வெளியே தங்கினால் பாதுகாப்பாக இருக்காது என்று தான் என்னை இங்கேயே தங்க சொல்லி அவர் சொன்னார்” பொறுமையாக எடுத்து சொன்னாள் சஹானா.

 

“ஓ...அவரா!!!...அவர் சொன்னால் என்ன வேண்டும்னாலும் செய்து விடுவாயா? உனக்கு புத்தி இல்லை.இப்படி முன்பின் தெரியாதவர் வீட்டில் வந்து திருட்டுத்தனமாக தங்கி இருக்கிறோம் என்ற எண்ணம் வேண்டாம்? இப்படித்தான் முன்னே பின்னே தெரியாத யார் வீட்டில் வேண்டுமானாலும் போய் தங்கி விடுவாயா?வயதுப்பெண் தானே நீ? அப்படி என்ன உனக்கும் ‘அவருக்கும்’ சம்பந்தம்?” மகன் மேல் உள்ள கோபம் அத்தனையும் சஹானா மீது காட்டினார் பார்வதி.

 

பார்வதி பேச பேச சஹானாவின் முகம் ஆரம்பத்தில் கோபத்தை காட்டி மெல்ல மெல்ல கண்ணீரை தத்தெடுத்தது.அவளின் கண்ணீர் வழியும் முகத்தை பார்த்த ராஜேந்திரன் இடையிடையே இரண்டு முறை மனைவியின் கையை அழுத்தி அவர் கோபத்தை தடுக்க நினைத்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.

 

கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தவாறே பதில் சொல்வதற்கு வாயை திறந்த சஹானாவை முந்திக்கொண்டு வந்தது ஒரு குரல்.

 

“என் பொண்டாட்டி” அழுத்தமான பதிலுடன் அவர்களின் எதிரில் வந்து நின்ற அபிமன்யுவை அப்பொழுது அங்கிருந்த யாருமே எதிர்பார்த்து இருக்கவில்லை என்பது அவர்களின் முக பாவனையில் தெரிந்தது.அபிமன்யுவின் பதிலில் அனைவரும் அதிர்ந்து போய் இருந்தனர்.ராஜேந்திரனை தவிர.

 

 

 

 

 

 

 

 

 


 

Post a Comment

புதியது பழையவை