அத்தியாயம் 27
“நான் வர மாட்டேன்.” தீர்மானமாக மறுத்தாள் சஹானா.
“ஏன்” ஒற்றை கேள்வியில் அவளை எதிர்கொண்டார் பார்வதி.
“நான் எதுக்கு உங்க வீட்டுக்கு வரணும்.நான் இங்கே வந்த வேலை முடியும் வரை
எனக்கு தங்க ஒரு பாதுகாப்பான இடம் வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டும் தான்
என்னுடைய அண்ணன் என்னை இங்கே தங்க வைத்து இருக்கிறார். இல்லையென்றால் வேறு ஏதாவது
ஹாஸ்டலில் தங்கி இருந்து இருப்பேன்.இங்கே தங்கவே எனக்கு பிடிக்கவில்லை.இதில் உங்க
வீட்டில் வந்து தங்குவது என்றால் எனக்கு துளியும் விருப்பம் இல்லை.”
சஹானாவின் பேச்சில் ஒரு விஷயம் பார்வதிக்கு தெளிவானது.’இவளுக்கு என் மகனை
பிடிக்கவில்லை.ஒரு வேளை இவளுக்கு பிடித்து இருக்கும் பட்சத்தில் நான் இப்படி
கூப்பிட்டதும் இவள் இந்நேரம் உடனே கிளம்பி இருப்பாளே...அப்படி இல்லாமல் இப்படி
மறுத்து எதிர்வாதம் செய்துகொண்டு இருக்க மாட்டாள்.’பக்கத்தில் நின்று ஏக்கமாக
சஹானாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த அபிமன்யுவை பார்த்ததும், பார்வதி
இனியும் தாமதிக்க கூடாது என்ற முடிவுக்கு வந்தார்.
“நானும் அதை தான் சொல்றேன் சஹானா.உன்னை எங்களை நம்பித்தானேஉன்னுடைய அண்ணன்
ஒப்படைத்து இருக்கிறார்.ஆனால் இந்த இடம் இப்பொழுது உனக்கு பாதுகாப்பாக இருக்கும்
என்று எனக்கு தோன்றவில்லை.அதனால் தான் என்னுடைய வீட்டிற்கு உன்னை அழைத்து
செல்கிறேன்.”
“ஏன் இந்த வீட்டிற்கு என்ன குறை? சமையலுக்கு சின்னாத்தா இருக்காங்க.காவலுக்கு
வெளியே வாட்ச்மேன் இருக்காங்க.தோட்டத்தை பார்த்துக்க தோட்டக்காரர் இருக்காங்க.நான்
வெளியில் சென்று வர வேண்டிய அவசியமே இல்லை.இது போதாதா?”
“உனக்கு விஷயமே தெரியாதா சஹானா?சின்னாத்தா ஊரில் ஏதோ திருவிழான்னு ஊருக்கு
கிளம்பிக்கிட்டு இருக்கா? திரும்பி வர ஒரு மாசம் ஆகும். தோட்டக்காரன்க்கு ரெண்டு
நாளா டைபாய்டு ஜுரம் அவன் எழுந்து நடமாட முடியுமா? அதனால் அவனுக்கும் லீவ்
கொடுத்து விட்டேன்.மிச்சம் இருக்கிறது வாட்ச்மேன் மட்டும் தான்.அவன் மட்டும்
இருக்கும் வீட்டில் உன்னை தனியாக தங்க வைப்பது எனக்கு பாதுகாப்பாக
தோன்றவில்லை.அதனால் நீ எங்களுடன் இப்பொழுதே கிளம்பு.”அவரின் கண்ணசைவில் அவரின்
எண்ணத்தை புரிந்து கொண்ட அபிமன்யு வேலைக்காரர்களை ஊருக்கும் அனுப்பும் வேலையை சத்தமில்லாமல்
செய்து விட்டு மௌனமாகவே அங்கே வந்து நின்று கொண்டான்.
“அப்படி ஒரு சூழ்நிலை ‘உண்மையாகவே’ இருந்தால் என்னை கொண்டு போய் ஏதாவது ஒரு
ஹாஸ்டலில் விட்டு விடுங்கள்.உங்களுக்கு தொல்லை இருக்காது.”பிடி கொடுக்க மறுத்தாள்
சஹானா.
“கடல் மாதிரி எங்களுக்கு வீடு இருக்கும் பொழுது உன்னை எப்படி ஹாஸ்டலில் தங்க
விட முடியும்?நீ எங்கள் வீட்டில் தங்கினால் தான் எங்கள் பாதுகாப்பில் நீ
இருப்பாய்.ஏதோ ஒரு ஹாஸ்டலில் உன்னை சேர்த்துவிட்டு எந்த நேரமும் உன்னுடைய
பாதுகாப்பை பற்றியே நாங்கள் நினைத்துக் கொண்டு இருக்க முடியுமா?”புருவங்களை
உயர்த்தி அவர் கேள்வி கேட்ட விதத்தில் சஹானா தான் என்ன பதில் சொல்வது என்று
புரியாமல் தடுமாறினாள்.
“உங்க பையன் இருக்கிற இடத்தில் இருக்க நான் விரும்பலை”அவருடைய முகத்தையே
தீர்க்கமாக பார்த்தபடி சொன்னாள் சஹானா.
அவளின் பதிலை கேட்ட அபிமன்யுவின் முகம் சொல்லொணா துயரத்தை காட்டியது.விரும்பிய
பெண்ணின் வாயில் இருந்து இப்படிப்பட்ட ஒரு வார்த்தை எப்பேர்பட்ட அஞ்சா நெஞ்சனையும்
கொஞ்சம் வருந்தத் தான் செய்யும்.மகனின் முகத்தை பார்த்த பார்வதிக்கு மகனின்
வருத்தத்தை எப்படியாவது போக்கி அவளை அவனுக்கு மணமுடித்தே தீர வேண்டும் என்ற உணர்வு
வேட்கையாக மாறியது அந்த நொடி தான்.
மகனின் புறம் திரும்பியவர், “அபி சின்னத்தாவுக்கும் தோட்டக்காரருக்கும்
ஊருக்கு போக பணம் தேவைப்படும் இல்லையா? நீ போய் கொடுத்துவிட்டு வா.அவர்கள்
கிளம்பியவுடன் வீட்டை பூட்டிக்கொண்டு நாம் கிளம்ப வேண்டும்.அதற்குள் அவர்களை
கிளம்பச் சொல்.அதற்கு வேறு என்ன உதவி தேவைபட்டாலும் செய்து கொடுத்து விட்டு வா”
என்று மகனுக்கு ஒரு வேலை சொல்லி அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு
சஹானாவின் புறம் திரும்பினார்.
“கொஞ்சம் இங்கே வந்து உட்கார் சஹானா... உன்னிடம் இப்பொழுது ஒரு தாயாக மட்டுமே
பேசப் போகிறேன்.நான் சொல்வதை கேட்டு விட்டு அதன் பிறகு உன்னுடைய கருத்தை சொல்”தணிவாகவே
பேசினார்.
சஹானா ஒன்றுமே பேசாமல் மௌனமாய் அமர்ந்து இருக்க அவளுடைய மௌனத்தையே சம்மதமாக
எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார் பார்வதி.
“ஒரு தாயாக என்னுடைய மனநிலையை நீ கொஞ்சம் புரிந்து கொள் சஹானா.எனக்கு என்
மகனது வாழ்வு முக்கியம்.ஆனால் அதற்காக உன்னை நான் கட்டாயப்படுத்த நினைக்கவில்லை.
உன்னுடைய நினைவுகளை சேகரிக்க அவனுக்கு ஒரு இடம் தேவைப்படுகிறது.அது ஏன் எங்களுடைய
வீடாகவே இருக்கக் கூடாது?
ஒருவேளை நூறில் ஒரு வாய்ப்பாக உனக்கு அவனை பிடிக்காமல் நீ விலகி போய் விடும்
பட்சத்தில் அதன் பிறகு அவனது நிலை என்ன? நீ வாழ்ந்த வீடு என்ற காரணத்திற்காக இவன்
இங்கேயே இந்த வீட்டிலேயே தங்கிவிட்டால் நான் என்ன செய்வேன்?
உனக்கு என் மகனை பற்றி தெரியாது சஹானா.அவன் இப்படி எந்த பெண்ணின் பின்னாலும்
சுற்றியது கிடையாது.அவன் பின்னால் தான் பெண்கள் சுற்றி நான் பார்த்து
இருக்கிறேன்.அப்படி ஆயிரம் பெண்கள் சுற்றினாலும் அவர்கள் யாரையும் இவன்
கண்டுகொண்டது கூட கிடையாது. அப்படிபட்டவன் இன்று உனக்காக பெற்ற தாய் தந்தை எங்கள்
இருவரையும் எதிர்த்து நிற்கிறான் என்றால் நீ கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும்
சஹானா.”
“இங்கேயே இப்படி உங்கள் மகனின் புகழ் பேசுறீங்க...அதையே என்னால் கேட்க
முடியவில்லை.இன்னும் உங்கள் வீட்டில் வந்து இருந்து கொண்டால் முழுநேரமும் உங்கள்
பையனின் கதையைத் தான் நான் கேட்டாக வேண்டும்.உங்கள் பையன் உங்கள் கண்ணுக்கு
வேண்டுமானால் சிறந்தவனாக தோன்றலாம்.எனக்கு இல்லை.எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காத ஒரு
ஆளின் புராணத்தை கேட்க எனக்கு கொஞ்சமும் விருப்பமும் இல்லை.அது மட்டும் இல்லாமல்
அங்கே வந்தால் முழுநேரமும் உங்கள் பையன் முகத்தை நான் பார்த்துக் கொண்டே இருக்க
வேண்டும்.அதில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை.என்னை இப்படியே விடுங்கள்.”கையெடுத்து
கும்பிட்டு பேசினாள் சஹானா.
“சரி உனக்கு நான் ஒரு வாக்கு கொடுக்கிறேன்.அங்கே எங்கள் வீட்டிற்கு வந்த பிறகு
என் மகனின் புராணத்தை உன்னிடம் நான் சொல்லவே மாட்டேன் சரிதானா?உனக்குத்தான் என்
மகனை பிடிக்கவில்லையே.இதை நீ ஒரு சவாலாகவே ஏற்றுக்கொள்.நீ எங்கள் வீட்டில் தங்கி
இருக்கும் காலங்களில் உன்னுடைய மனது மாறவில்லையெனில் அதன் பிறகு உன்னை நான்
வற்புறுத்த மாட்டேன்.”
“இப்படித்தான் ஏதேதோ பேசி என் மகன் என்னை இங்கேயே தங்க வைத்தார்.இப்பொழுது
நீங்களுமா? கொஞ்ச நேரம் முன்பு வரை என்னைப் பற்றி எப்படியெல்லாம்
பேசுனீங்க...ஆனால் இப்போ என் மீது தவறு இல்லை என்று தெரிந்த பிறகு அப்படியே ஆளே
மாறிட்டீங்க... உங்களை மாதிரி பட்டணத்துக்காரங்களுக்கு வேணும்னா ஒரு மாதிரி பேசுவீங்க இல்லைனா வேற
மாதிரி பேசுவீங்க.உங்கள் தாளத்துக்கு நான் ஆட முடியாது.”
தான் பணிந்து பேச பேச சஹானா துள்ளிக் கொண்டே இருக்கவும் இது வேலைக்கு ஆகாது
என்ற முடிவுக்கு வந்தார்.இவளிடம் இப்படி பேசிப் பயன் இல்லை என்று நினைத்தவர்
மெதுவாக அவளிடம் பேச்சுக் கொடுத்தார்.“இதுக்கு முன்னாடி நீ எப்படி ஒத்துக்கிட்ட?”
பார்வதி சஹானாவின் வாயை கிளறினார்.
“என் அண்ணன் சொன்னதால தான் இங்கே தங்கினேன்.
“அதே அண்ணன் இப்போ உன்னை எங்க வீட்டில் தங்க சொன்னால் வந்து தங்குவாயா?”
“என் அண்ணன் கண்டிப்பாக இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்.உங்க பையன் இப்படி
கேட்டா, ஒரு வயசு பையன் இருக்கிற வீட்டில் நான் தங்க அவர் ஒத்துக்கொள்ள
மாட்டார்.”முடிவாக சொன்னாள் சஹானா.
“என் பையன் பேசினால் தானே ஒத்துக்கொள்ள மாட்டார்.நான் பேசினால்?”
“...”
“நான் பேசி உன் அண்ணனிடம் சம்மதம் வாங்குகிறேன்.நீ உன்னுடைய அறைக்கு சென்று
உன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு ரெடி ஆகு.இன்னும் அரை மணியில் நாம்
கிளம்பலாம்.” என்று சொன்னவர் அதற்கு மேல் அவளுடைய பதிலை எதிர்பாராமல்
அபிமன்யுவிடம் சென்று சத்யனின் மொபைல் எண்ணை வாங்கி பேச ஆரம்பித்தார்.
பார்வதி அம்மாள் பேச ஆரம்பித்ததும் முதலில் மறுத்து பேசிய சத்யன் பின்னர் வேறு
வழி இல்லாமல் ஒத்துக் கொண்டான்.அதிலும் வயது பையன் இருக்கும் வீட்டில் எப்படி
தன்னுடைய தங்கையை தங்க வைப்பது என்பது தான் அவனின் பெரும் கவலையாக இருந்தது.பெற்ற
பெண்ணைப் போல தான் பார்த்துக் கொள்வதாக பார்வதி அம்மாள் கொடுத்த வாக்கின் மீது
நம்பிக்கை வைத்து அதற்கு ஒத்துக் கொண்டான் சத்யன்.
பார்வதி அம்மாளிடம் ஒத்துக் கொண்டாலும் சத்யனுக்கு உள்ளுக்குள் ஒரு சின்ன
நெருடல் இருக்கத்தான் செய்தது.ஆனாலும் இப்பொழுது இவர்களை மறுத்து பேச
முடியவில்லை.ஒருவேளை அபிமன்யு பேசி இருந்தால் கண்டிப்பாக மறுத்து தான் பேசி
இருப்பான்.வயதில் பெரியவரான அபிமன்யுவின் அம்மாவிடம் அவனால் மறுத்து பேச
முடியவில்லை.அதே நேரம் வீட்டில் யாரும் இல்லாமல் அந்த வீட்டில் உள்ள வாட்ச்மேனை
மட்டும் நம்பி தங்கையை அங்கேயே தங்க வைக்கவும் அவனுக்கு விருப்பம் இல்லை.
பார்வதி சொன்ன அரை மணி நேரம் என்பது ஒரு மணி நேரம் ஆகி பல வகையான
விவாதங்களுக்கு பிறகு சஹானா வேண்டாவெறுப்பாக தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு
அபிமன்யுவின் காரில் ஏறினாள்.
கருத்துரையிடுக