Kadhal kathakali tamil novels 23

 

அத்தியாயம்  23

மகனின் மாற்றத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன் போனை எடுத்து மகனின் எண்களை அழுத்திவிட்டு அந்த பக்கம் மகன் எடுப்பதற்காக காத்திருக்க தொடங்கினார் ராஜேந்திரன்.

 

“ஹலோ..”

 

“அபி எங்கே இருக்கே?”

 

“இது என்ன கேள்விப்பா...அகாடமிக்கு தான் போய்ட்டு இருக்கேன்”

 

“உடனே வீட்டுக்கு வா”

“என்ன ஆச்சு டாடி...இப்போ தானே வீட்டில் இருந்து கிளம்பி வந்தேன்.” அபிமன்யுவின் பேச்சில் லேசான எரிச்சல் வெளிப்பட்டது.

 

“நீ செய்வது கொஞ்சம் கூட சரி இல்லை அபி...உனக்கு அஞ்சலியை பற்றி நல்லா தெரியும்.தினமும் அவளை நீ தானே காலேஜில் டிராப் பண்ணுவ.இன்னைக்கு அது கூட உனக்கு மறந்து போச்சா?”

 

சஹானா பற்றிய எண்ணங்களில் உழன்று கொண்டு இருந்தவனுக்கு அப்பொழுது தான் செய்த தவறு புரிந்தது.இருப்பினும் தந்தையிடம் சமாளிப்பாக பேச முயன்றான்.

“அப்பா எனக்கு இன்னிக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குப்பா அதான் அவளை டிரைவர் கூட போக சொன்னேனே...?”

 

“நீ டிரைவர் கூட போக சொன்னால் அவள் போய் விடுவாளா? அவள் இன்னிக்கு காலேஜ் போக மாட்டேன்னு சொல்லிட்டு அவ ரூம்குள்ள போய் புகுந்துகிட்டு அழுதுகிட்டே இருக்கா.நீ செய்றது தப்பு அபி.உனக்கு அவளை பற்றி நல்லா தெரியும்.இத்தனைக்கும் அவளுக்கு செல்லம் கொடுத்து அவளை கெடுத்தது நீ..இப்ப திடீர்னு நீ மாறுனா அவ என்ன செய்வா?”ராஜேந்திரனின் குரலில் நீ மாறி விட்டாய் என்ற குற்றச்சாட்டு  இருந்தது.

 

“நான் உடனே வரேன்பா” என்றவன் காரை வீடு நோக்கி திருப்பினான்.மனம் முழுக்க சஹானாவை பற்றி நினைத்த தான் தங்கையின் மனதை புண்படுத்தி விட்டோமோ என்ற குற்ற உணர்வுடனே வண்டியை அவசர அவசரமாக ஒட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

 

வாசலில் எதிர்கொண்ட தந்தையின் குற்றம் சாட்டும் பார்வையை கண்டும் காணாமல் வேகமாக அஞ்சலியின் அறையை நோக்கி சென்றான்.அங்கே தாயின் மாடியில் படுத்து அழுது கொண்டு இருந்த தங்கையை பார்த்ததும் மேலும் வருந்தினான்.

 

தங்கை அழுவதற்கு தான் காரணமாகி விட்டோமே என்ற குற்ற உணர்வும் தோன்ற எப்படியாவது தங்கையை சமாதானப்படுத்தி விட வேண்டும் என்ற முடிவுடன் அவளின் கட்டிலுக்கு அருகே சென்றவன் தாயிற்கு அருகேயே முழங்காலிட்டு அமர்ந்தான்.

 

“அஞ்சு”

 

அவனின் குரல் கேட்டதும் ஒரு நொடி அழுகையை நிறுத்தியவள் அதன் பிறகு கொஞ்சம் கூட நிமரவேயில்லை.அவளுடைய அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.நன்றாக விசும்பல்கள் அடங்கும் வரை பொறுத்தவன் மெல்ல அவள் அருகே குனிந்து பேசலானான்.

 

“வா பேபி காலேஜ் போகலாம்”

 

“நான் வரலை நீ உன் வேலையை பார்த்துக்கிட்டு போடா” விசும்பல்களின் இடையே அவன் புறம் திரும்பாமல் கூறினாள் அஞ்சலி.

 

“அஞ்சு பேபிக்கு என் மேல கோபமா?”

“எதுவும் பேசாத...ஒழுங்கா ஓடிடு...என் கையில சிக்குன உன்னை என்ன செய்வேன்னு தெரியாது...போ என் கண்ணு முன்னாடி நிக்காதே.உனக்கு என்ன விட வேலை முக்கியமா போச்சு இல்ல...போடா” விசும்பல்கள் இன்னும் ஒய்ந்த பாடு இல்லை.

 

“அஞ்சு எனக்கு கொஞ்ச நாளாவே தலை வலிச்சுகிட்டே இருந்தது பேபி.இன்னைக்கு காலையில கிளம்பும் போது கூட தலை மறுபடி ரொம்ப வலிச்சுதா... அதான் ஹாஸ்பிடல் போகலாம்னு கிளம்பினேன்டா.. மத்தபடி உன்னை விட எனக்கு வேலையா முக்கியம்...ப்ளீஸ்டா..என்னை நிமிர்ந்து பாரேன்”சட்டென்று தோன்றிய பொய்யை அவளிடம் கூறினான்.

 

அபிமன்யுவின் தலைவலி என்ற வார்த்தையில் சட்டென தன்னுடைய கோபத்தை மறந்து  நிமிர்ந்து அமர்ந்து விட்டாள் அஞ்சலி.

 

“தலைவலியா? எப்போ இருந்து?டாக்டர் கிட்ட போனியா இல்லையா? என்ன சொன்னாங்க? ஏன் இதுவரை இதை பத்தி என்கிட்டே சொல்லலை?” வரிசையாக கேள்விகளை அடுக்கினாள் அஞ்சலி.

 

“டாக்டர்கிட்ட இன்னும் காமிக்கலடா.அதுக்கு தான் இப்போ காலையில் கிளம்பினேன்.” பொய் சொல்கிறோம் என்று தெரிந்தே சொன்னான்.அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.

 

எப்படியாவது தங்கையை சமாளிக்க வேண்டும் என்று நினைத்தான்.அவனுக்கு நன்றாக தெரியும் காலையில் அவனுடைய புறக்கணிப்பிற்காண உண்மையான காரணம் அஞ்சலிக்கு தெரிய வந்தால் அவள் நிச்சயம் அதை பொறுத்துக் கொள்ள மாட்டாள்.அதுவும் இல்லாமல் அஞ்சலி சஹானாவை அபிமன்யுவை அவளிடம் இருந்து பிரிக்கும் சக்தியாக கருத தொடங்கிவிட்டால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கக்கூடும்.

 

ஒருவேளை திருமணத்திற்கு பிறகு இது போல ஒரு சூழல் வந்தால் அதை சமாளிப்பது எளிது.ஆனால் இப்பொழுது அஞ்சலிக்கு சஹானாவை பற்றி இப்படி ஒரு சூழலில் தெரிவதை அபிமன்யு விரும்பவில்லை.

சஹானாவின் மனதில் இடம் பிடித்து இருந்தால் கூட பரவாயில்லை.ஓரளவிற்கு கோடு காட்டியேனும் சொல்லி விடலாம்.இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் அவளை பற்றி வீட்டில் யாருக்கும் தெரியாமல் இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்து இருந்தான் அபிமன்யு.

“அறிவு இருக்கா உனக்கு?” என்ற தங்கையின் கோபக்குரலில் தன்னுணர்வு வரப் பெற்றான் அபிமன்யு.

 

“அஞ்சலி...அதான் அண்ணன் உடம்பு சரி இல்லைன்னு சொல்றான் இல்ல...அப்பறமும் ஏன் இப்படி அவனை திட்டுற? சரி சரி நீ கிளம்பு...காலேஜ்க்கு டைம் ஆச்சு பாரு” மகளை லேசாக கடிந்தவாறே கிளப்ப முயன்றார் பார்வதி.

 

“நீங்க சும்மா இருங்க மம்மி...கொஞ்சமாவது இவனுக்கு ஹெல்த்ல அக்கறை வேணாம்! ஏன்டா தடியா எவ்வளவு நாளா இப்படி தலை வலிக்குது? ஏன் என்கிட்ட சொல்லலை?”அவளின் குரலில் கோபம் இப்பொழுதும் இருந்தது.ஆனால் இது அபிமன்யுவின் உடல்நலனை குறித்த அக்கறையினால் வந்தது.உள்ளுர லேசாக உறுத்தினாலும் வேறு வழி இன்றி அதையே தொடர்ந்தான் அபிமன்யு.

 

“இப்போ தான் ஒரு இரண்டு மூணு நாளா தான்...அது ஒண்ணும் இல்லை அஞ்சு இப்போ ஷூட்டிங்கிற்காக ஒரு கிராமத்திற்கு போனோம் இல்லையா? அங்கே கூட உனக்கு ஒரு அருவியை காண்பித்தேன் நியாபகம் இருக்கா?அதுல போய் தினமும் விடியற்காலை நேரத்தில் குளித்தேன்.அது உடம்பிற்கு சேரவில்லை போல.அது தான் வேறு ஒன்றும் பயப்படும்படியாக இல்லை அஞ்சு.”

 

“ஏன்டா உனக்கு ஆண்டவன் அறிவை கத்தரிக்காய் அளவுக்கு கூட வைக்கலியா?யாராவது விடியற்காலையில் போய் அருவியில் ஆட்டம் போடுவாங்களா?

 

அதெல்லாம் ஒரு ஊரா? உனக்கு  குளிக்கணும்னா இங்கே நம்ம வீட்டில் குளிக்க வேண்டியது தானே ...போயும் போயும் அந்த ஊர் தான் கிடைத்ததா? குளித்தது மட்டும் இல்லாமல் இப்படி உடம்புக்கு வேற வினையை இழுத்துக்கொண்டு நிற்கிறாயே.அந்த அருவி வேற பெருசா இருந்துச்சு...கல்லு விழற மாதிரி இல்ல தண்ணீர் தலையில் விழுந்து இருக்கும்.அது தான் ... சரி சரி வா கிளம்பலாம்” என்று முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு அபிமன்யுவை பற்றி எழுப்பி அவனை துரிதப் படுத்தினாள்.

 

அஞ்சலியின் பதிலில் ‘அந்த ஊரை அவளுக்கு பிடிக்கவில்லை போல’ என்று ஒரு நிமிடம் நினைத்தவன் பிறகு இப்பொழுது அது முக்கியம் இல்லை.தங்கையை மலை இறக்குவது தான் இப்பொழுது செய்ய வேண்டிய வேலை என்பதை உணர்ந்து பேச்சை மாற்றினான்.

“எங்கே?” என்ற அபிமன்யுவின்  கேள்விக்கு  அவனை ஒரு முறை நன்றாக திரும்பி உக்கிரமாக ஒரு பார்வை பார்த்து விட்டு அவனின் கையை பிடித்துக் கொண்டு வெளியே இழுத்து வந்தாள் அஞ்சலி.

 

“டாடி நம்ம பேமிலி டாக்டரை வர சொல்லுங்க...”

 

“நான் ஏற்கனவே அவர்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கிட்டேன் அஞ்சு..அதுக்கு தான் காலையில கிளம்பி போனேன்.நீ கிளம்பி காலேஜ்க்கு போ. நான் பார்த்துக்கிறேன்.” அவளை கிளப்ப முனைந்தான் அபிமன்யு.

 

“அப்படி எல்லாம் உன்னை விட முடியாது ராசா...இத்தனை நாளா நீ இந்த விஷயத்தை என் கிட்ட சொல்லாமலே மறைச்சுட்ட இல்ல. நானும் உன் கூடவே வரேன்.டாக்டரை நேரா பார்த்து பேசினா தான் எனக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.” பிடிவாதமாக மறுத்தாள் அஞ்சலி.

 

“உனக்கு இன்னிக்கு எக்ஸாம் இருக்கு அஞ்சலி...”

 

“இருக்கட்டும்...உன்னை விடவா அந்த எக்ஸாம் எனக்கு முக்கியம்.நீ வா அபி போகலாம்.”

“ஹே அஞ்சு என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகிற சாக்கில் எக்ஸாம்க்கு போகாமல் கட் அடிக்க பார்க்கிறியா! ஏன் பிட் எதுவும் இந்த எக்ஸாம்க்கு ரெடி பண்ணிக்கலியா”

 

“டேய் ... பிட் அடிச்சு தான் எக்ஸாம் எழுதனும்னு எனக்கு ஒண்ணும் அவசியம் இல்லை.அதெல்லாம் நான் பாஸ் பண்ணிடுவேன்..” வீராப்பாக சொன்னாள் அஞ்சலி.

 

“எப்படி முன்னாடி இருக்கிறவன் பேப்பரை பார்த்து எழுதியா?”

“அபி உன்னை...” என்று அவனை அடிக்க கையை ஓங்கிக்கொண்டு வீடு முழுக்க ஓடினாள் அஞ்சலி.

 

வேண்டும் என்றே அவளுக்கு போக்கு காட்டி ஓட முடியாமல் அவளிடம் தானாகவே சிக்கினான் அபிமன்யு.

 

“ஓட்டமா ஓடுற? இப்ப மாட்டினியா?” என்று கேட்டு அவனுக்கு சில பல மொத்துகளை கொடுத்த பிறகே ஆசுவாசமானாள் அஞ்சலி.

 

அஞ்சலியும் அபிமன்யுவும் இப்படி இயல்பு நிலைக்கு திரும்பியதை கண்டு அங்கிருந்த அனைவர் உள்ளமும் மகிழ்ச்சி அடைந்தது.

 

“சரி அஞ்சலி நீ கிளம்பு எக்ஸாம் போகலாம்..உன்னை இறக்கிவிட்டு விட்டு அவன் நேராக அவன் ஹாஸ்பிடல் கிளம்பட்டும்.நானும் அதற்குள் கிளம்பி ஹாஸ்பிடல் போய் இவன் ஹெல்த்தை பத்தி நேரடியா டாக்டர் கிட்ட கேட்டுடறேன் சரியா? இப்ப நீ கிளம்புடா...எக்ஸாம்க்கு நேரம் ஆகுது பார்” என்று ராஜேந்திரன் மகனின் உதவிக்கு வந்தார்.

 

“சரிப்பா...இவனை தனியா மட்டும் போக வச்சுடாதீங்க...இவன் சரியான பிராடு...நம்மகிட்ட சொல்லாம விட்டாலும் விட்டுடுவான்.” என்று ஆயிரம் முறை தந்தைக்கு நினைவு படுத்திய பின்பே அபிமன்யுவுடன் காரில் ஏறினாள் அஞ்சலி.

 

எப்படியோ வெற்றிகரமாக தங்கையை சமாளித்தாயிற்று என்ற நினைவுடன் காரில் ஏறப் போனவனை காரில் ஏறும் முன் அபிமன்யுவின் கரத்தை பிடித்து அஞ்சலியின் காதுகளில் விழாத வண்ணம் பேசலானார் ராஜேந்திரன். “உன்னுடைய இந்த திடீர் தலைவலிக்கு காரணம் என்ன என்பதை பற்றி எனக்கு தெரிய வேண்டும் அபி.இது பற்றி நாம் இருவரும் பேச வேண்டும்.அதுவும் இன்றே” என்று ரகசியமாக அபிமன்யுவின் காதுகளில் முணுமுணுத்தவர் , மகளை பார்த்து கை அசைத்து அனுப்பி வைத்தார்.

 

‘அடுத்து இவரை வேறு சமாளிக்க வேண்டுமா?’ என்று உள்ளுர நொந்து கொண்டான் அபிமன்யு.நல்லவேளை அபிமன்யுவிற்கு அப்பொழுது தெரிந்து இருக்கவில்லை.அதை பற்றி பேசுவதற்காக அவனுடைய தந்தை அன்றே அகாடமிக்கு வரப் போகிறார் என்று.ஒருவேளை தெரிந்து இருந்தால் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்து இருப்பான்.இனி....

 

 

 

 

 

 

 


Post a Comment

புதியது பழையவை