அத்தியாயம் 9
சத்தம் இல்லாமல் காரை கொண்டு போய் மெக்கானிக் ஷெட்டில் விட்டு சரி செய்து மீண்டும் பழைய படி தோப்பிலேயே காரை கொண்டு வந்து நிறுத்தி விட்டான் ஹரிஹரன். இடையில் ஒரு முறை காரை எடுப்பதற்காக கிளம்பிய தந்தையை ஏதேதோ காரணங்கள் சொல்லி தடுத்து விட்டான்.
ஒரே நாளில் எப்படியோ வண்டியை சரி செய்து மீண்டும் அதே இடத்தில் நிறுத்தி வைத்து விட்டான் ஹரிஹரன். அன்று காலை பார்த்த பிறகு அந்த சண்டி ராணியை அவன் பார்க்கவே இல்லை. முனியனிடம் கூட அவளை பற்றி குறிப்பிடாமல், “குழந்தைகள் மறுபடியும் பழம் கேட்டு வந்தார்களா?” என்று விசாரித்து பார்த்தான்.
முனியன் ஒரே வார்த்தையில் இல்லை என மறுத்து விட மீண்டும் அவர்களை பற்றி முனியனிடம் விசாரிக்கவோ அந்த பெயர் தெரியாத பெண்ணை பற்றி கேட்கவோ ஹரிஹரனால் முடியவில்லை. அவளை பார்க்க வேண்டும் என்று விரும்பினாலும் தனக்கு தானே விதித்து இருந்த கட்டுப்பாட்டின் காரணமாக அதற்கு மேலும் அவளை பற்றி ஆராய்ச்சி செய்யாமல் விட்டு விட முயற்சி செய்து அதில் ஓரளவு(!) வெற்றியும் கண்டான்.
விஸ்வநாதன் ஊருக்கு வரும் முன்னர் செய்த ஏற்பாட்டின் படி இந்நேரம் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் பக்கத்தில் இருந்த அந்த இரண்டு ஏக்கர் நிலத்தையும் சேர்த்து வாங்கலாம் என்று இங்கே ஊருக்கு வந்த பின் எடுத்த அந்த முடிவு அவரை உடனடியாக ஊருக்கு கிளம்ப முடியாமல் தடுத்தது.
அந்த நிலம் ஒரு வயதானவருக்கு சொந்தம். அவருடைய மகளுக்கு திருமணத்தின் போது சீர்வரிசையாக கொடுப்பதற்காக இந்த நிலத்தை வைத்து இருப்பதால் விற்க விருப்பம் இல்லை என்று அவர் சொல்லி விட்டார்.
விஸ்வநாதனும் புரோக்கர் மூலம் எப்படி எல்லாமோ பேசி பார்த்து விட்டார். நிலத்தின் விலையை விட இருமடங்கு கூடுதல் மதிப்பு பணம் கொடுக்கவும் விஸ்வநாதன் தயாராக இருந்தார்.
ஆனால் அந்த நிலத்தின் உரிமையாளர் கொஞ்சமும் மசியவில்லை. என்ன செய்வது என்ற குழப்பத்தில் ஊருக்கு உடனடியாக திரும்பும் யோசனையை கை விட்டனர் விஸ்வநாதன் குடும்பத்தினர்.
பயணம் தடைப்பட்ட காரணத்தை விசாரிக்கும் போது தான் ஹரிஹரனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது.
“நான் பேசிப் பார்க்கட்டுமா அப்பா?”
“நீ சின்னப் பையன் தம்பி... உனக்கு தொழில் அனுபவம் பத்தாது... அப்பாவே பார்த்துக்கட்டும்.நீ இதிலெல்லாம் தலையிடாதே” மகன் தேவை இல்லாமல் எந்த பிரச்சினையையும் இழுத்து விட்டு விடக் கூடாதே என்ற எண்ணத்தில் ஹரிஹரனை தடுத்தார் ஈஸ்வரி.
“இந்த சின்ன பையனுக்கு தான் கல்யாணம் பண்ற வயசு ஆச்சுனு நேத்து சொன்னீங்க மாம்” பதிலுக்கு தாயை வம்புக்கு இழுத்தான் ஹரிஹரன்.
“அது... அது... அது வேற தம்பி” என்று சமாளிக்க முயன்றார் ஈஸ்வரி.
“நான் ஒரு முறை முயற்சி பண்ணி பார்க்கிறேன் டாடி...ப்ளீஸ்!” கெஞ்சுதலாக தந்தையை பார்த்தான்.
“சரி போயிட்டு வா” உடனே சம்மதம் தெரிவித்தார் விஸ்வநாதன்.
“ஏங்க அவனுக்கு உங்க அளவுக்கு விவரம் பத்தாது. வேணும்னா உங்க கூட கூட்டிட்டு போங்க” கணவர் மூலம் தடுக்க பார்த்தார் ஈஸ்வரி.
“அவன் போகட்டும் ஈஸ்வரி. அவனை தடுக்காதே. என் பையன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அவன் சரியா செஞ்சு முடிப்பான்”
“தேங்க்ஸ்ப்பா... அந்த ப்ரோக்கர் எத்தனை மணிக்கு வருவதாக சொல்லி இருக்கார்?”
“இதோ அவரே வந்துட்டார் பாரு... வாங்க புரோக்கரே. இன்னிக்கு என் பையன் உங்களோட வருவான்.அந்த பெரியவர் கிட்ட இடம் சம்பந்தமாக இவன் பேசுவான். கூட்டிட்டு போங்க...”
“என்ன சார் நீங்க பேசி உங்களாலேயே முடியல... தம்பி சின்ன புள்ளையா இருக்கு. அவரை போய் அனுப்பறீங்களே... இது சரியா வரும்ங்களா?” கேள்வியாக இழுத்தார் புரோக்கர்.
“அதெல்லாம் சரியாக வரும் நீங்க தம்பியை கூட்டிக் கொண்டு போங்க” என்று சொன்னதோடு பேச்சை முடித்துக் கொண்டார் விஸ்வநாதன்.
வேறு வழி இன்றி ஹரிஹரனை அழைத்துக் கொண்டு போனார் ப்ரோக்கர்.அவருக்கு ஹரிஹரன் இதை செய்து முடிப்பான் என்று துளியும் நம்பிக்கை இல்லை.படித்துக் கொண்டு இருக்கும் இளைஞன் எப்படி இதை செய்ய முடியும் என்ற எண்ணம் அவருக்கு.
அங்கே இவர்கள் போய் நுழைந்தது ஒரு குடிசை வீட்டிற்கு. அந்த வீட்டில் சொல்லிக் கொள்ளும் படி பெரிதாக வசதி என்று ஒன்றும் இல்லை. கிராமத்திற்கே உரிய வகையில் எளிமையாக இருந்தது. அதே நேரம் கஷ்டப்படும் குடும்பம் என்பது பார்க்கும் பொழுதே நன்றாக தெரிந்தது.
இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும் கூட நிலத்தை விற்க முன்வராத அவர்களின் அந்த நிலைபாட்டிற்கு காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்ற சிந்தனையுடன் இருந்தவனை ஈர்த்தது அந்த சிரிப்பொலி. ஹரிஹரனின் உள்மனது அடித்து கூறியது இது அவளுடைய சிரிப்பொலி என்று. உடல் எல்லாம் ஒருவிதமான பரபரப்பு தொற்றிக் கொள்ள வாசலில் நின்றவாறே மெல்ல பார்வையை சுழற்றினான்.
அவனை கொஞ்சமும் ஏமாற்றாமல் அந்த வீட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தவள் அவளே தான். கூடவே இன்னொரு பெண்ணும் வந்து கொண்டு இருந்தாள். ஹரிஹரனை பார்த்ததும் ஒரு நொடி நடையை தளர்த்தியவள் பிறகு அவனை கண்டும் காணாமல் வீட்டின் உள்ளே போய் விட்டாள். ஹரிஹரனை கடக்கும் போது அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை . அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த ஹரிஹரனுக்கு தான் ஏமாற்றமாக போயிற்று.
உடனே தன்னை சமாளித்துக் கொண்டவன் அந்த நிலத்தின் உரிமையாளரை சந்தித்து பேச ஆரம்பித்தான். அவனும் அவரிடம் ஒரு மணி நேரம் பேசிப் பார்த்தான். அந்த வயதான மனிதர் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து கொஞ்சமும் இறங்கவில்லை. ‘எனக்கு இந்த இடம் வேண்டும். இதை யாருக்கும் விற்க எனக்கு விருப்பம் இல்லை.’ என்ற அதே கருத்தைத் தான் மீண்டும் மீண்டும் சொன்னார் அவர்.
அவர்கள் அத்தனை சூடாக விவாதித்துக் கொண்டு இருக்கும் போதே அவர்களை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே போனவளை அங்கிருந்த யாருமே கவனிக்கவில்லை. ஹரிஹரன் உட்பட...
“இந்த இடத்திற்கு நாங்க நல்ல ரேட் தர்றோம் அய்யா... நல்லா யோசிச்சு சொல்லுங்க... நான் மறுபடி சாயந்திரம் வரேன்” என்று அவரிடம் கூறிவிட்டு, அங்கிருந்து சோர்ந்த நடையுடன் கிளம்பினான் ஹரிஹரன்.
“அந்த ஆள் ஒத்துக்க மாட்டார்னு எனக்கு தெரியும் தம்பி. நானும் அப்பாவும் எவ்வளவு தூரம் பேசினோம் அதில் எல்லாம் இறங்கி வராதவர் இப்பொழுது நீங்கள் வந்து சொன்னால் மட்டும் இறங்கி வந்து விடுவாரா என்ன? சரி தம்பி நீங்கள் வீட்டிற்கு கிளம்புங்கள் எனக்கு வேறு ஒரு வேலை இருக்கிறது. நான் இந்த பக்கம் போகிறேன்” என்று சொன்னவர் ஹரிஹரனுக்கு எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தார்.
‘எந்த முகத்தை வைத்துக்கொண்டு அப்பாவை பார்ப்பது... என்னவோ அவரிடம் வீராப்பாக சொல்லிவிட்டு வந்துவிட்டேன். இப்பொழுது என்னால் முடியவில்லை என்று அவரிடம் சொன்னால்... அப்பா திட்ட மாட்டார் தான் ஆனால் கண்டிப்பாக வருந்துவார்.’
‘என்ன செய்வது’ என்ற யோசனையில் அவன் நடந்துக் கொண்டே இருந்த பொழுது ஒரு கல் அவனது நெற்றியை பதம் பார்த்தது. திரும்பிப் பார்க்காமலே அது யார் என்று அவனது மனம் அறிந்து கொண்டு கும்மாளமிட்டது. இருப்பினும் ரொம்ப வலிப்பது போல நெற்றியை தடவிக் கொண்டே திரும்பியவனின் பார்வையில் தென்பட்டாள் சற்று தொலைவில் இருந்த ஒரு மரத்தின் பின்னே இருந்து வெளிப்பட்ட அவள்.
தேவதை வருவாள்...
கருத்துரையிடுக