Siragilla Devathai Tamil Novels Episode 8

 

அத்தியாயம் 8

 

நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஹரிஹரன். விடியலின் போது உறக்கத்தை தழுவியதால் விடிந்தும் எழ மனம் இன்றி உறங்கிக் கொண்டு இருந்தான் ஹரிஹரன். அவனுடைய தாயார் ஈஸ்வரி காபி கொடுப்பதற்காக வந்தவர் மகனை எழுப்பி காபியை ஹரிஹரனின் கையில் திணித்த பிறகே அங்கிருந்து நகர்ந்தார்.

 

சோம்பலாக கண்ணை விழித்தவன் காபியை அருந்தியவாறே மெல்ல படுக்கையை விட்டு கீழே இறங்கி ஜன்னல் பக்கம் நின்று வேடிக்கை பார்த்தவாறு காபியை குடிக்க ஆரம்பித்தான்.



 

சுற்றுப்புறத்தை தன்னை மறந்து வேடிக்கை பார்த்தவாறே மெல்ல குடித்துக் கொண்டு இருந்தவனின் தலையில் எங்கிருந்தோ வந்த ஒரு பொருள் விழுந்து பலமாக தாக்கியது. ‘என்ன அது’ என்று சுற்றும் முற்றும் பார்த்தவனின் பார்வையில் அவனின் காலுக்கு அருகேயே விழுந்து கிடந்த அந்த கல் சிக்கியது.

 

‘வீட்டிற்குள் எப்படி கல் வந்தது’ என்ற யோசனையில் சுற்றி பார்த்தவனின் பார்வையில் பட்டது காம்பவுண்ட் கேட் அருகே நின்ற அந்த சண்டி ராணியும் அவளது கூட்டாளிகளும் தான்.

 

‘இவளுக்கு இந்த நேரத்தில் இங்கே என்ன வேலை’ என்ற யோசனையுடன் அவசர அவசரமாக ஓடி வந்தவன் தாய் தந்தைக்கு தெரியாமல் மெல்ல காம்பவுண்ட் அருகே சென்றான். நேற்று இரவு இனி அவளை பார்க்கவே கூடாது என்று அவன் எடுத்து இருந்த அந்த உறுதிமொழி அவளை பார்த்ததும் காற்றில் கரைந்த கற்பூரமாய் காணாமல் போனது.

 

ஏன்மா பரதேவதை தோப்புக்கு வந்தா தான் அடிக்குறன்னு வீட்டில இருந்தா இங்கேயும் தேடி வந்து அடிக்கறியே! இது நியாயமா?” அலுத்துக் கொண்டாலும் ஹரிஹரனின் மனதில் அவளை பார்த்ததும் ஒரு வித பரவசம் தோன்றியது உண்மையே.

 

பதிலுக்கு பதில் வாய் பேசும் அந்த சண்டி ராணியோ முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு ஒரு கையில் தாவணியின் நுனியை விரல்களில் சுற்றுவதும் பின் பிரிப்பதுமாக லேசான கலக்கத்துடன் இருந்தாள்.

 

என்னம்மா? என்ன ஆச்சு?” கனிவாக விசாரித்தான் ஹரிஹரன்.

 

அது... அது வந்து...

 

‘இவளுக்கா வார்த்தை வராமல் தடுமாறுகிறாள் என்ன விஷயமாக இருக்கும்?’ என்ற யோசனையுடன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் ஹரிஹரன்.

 

நாங்க இன்னைக்கு காலையில வழக்கம் போல தோப்புக்கு மாங்காய் அடிக்க போனோமா... அப்போ அங்கே இருந்த கார் கண்ணாடியில் என்னோட கல் பட்டு கண்ணாடி உடைஞ்சுருச்சுஅவள் குரலில் லேசான அழுகை இருப்பது போல ஹரிஹரனுக்கு தோன்றியது.

 

உதடு லேசாக பிதுங்கி,கொஞ்சம்  விட்டால் அழுது விடுவாள் போல அவள் நின்ற தோற்றம் அவனின் மனதை வருத்த அவளை சமாதானம் செய்வதே முதல் வேலை என்று தோன்றி விட்டது ஹரிஹரனுக்கு.

 

சரி விடு... அவ்வளவு தானே நான் பார்த்துக் கொள்கிறேன்... நீ போஎன்று சொல்லிவிட்டு தோப்புக்கு கிளம்பி செல்வதற்காக வீட்டை நோக்கி திரும்பியவனை தேக்கியது அவளது குரல்.

 

ஒரு  நிமிஷம் நில்லுங்க...

 

என்னம்மா? இன்னும் என்ன? இதோ பார் இங்கே நின்று உன்னுடன் இப்பொழுது நான் பேசிக்கொண்டு இருக்க முடியாது. அப்பா வருவதற்குள் காரை எடுத்து பக்கத்தில் இருக்கும் ஏதாவது மெக்கானிக் ஷெட்டில் விட்டு அப்பாவிற்கு தெரியாமல் இதை சரி செய்தாக வேண்டும். அதற்கு இங்கிருந்து நான் கிளம்பியாக வேண்டும்குழந்தைக்கு விளக்குவது போல அவளுக்கு எடுத்து சொன்னான் ஹரிஹரன்.



 

இல்ல அங்கே தோப்பில் காவக்கார அண்ணன் கணேசனை பிடிச்சு கட்டி வச்சுட்டார். கார் கண்ணாடியை உடைச்சுட்டோம்ன்னு சொல்லி. எங்க அப்பா அம்மா வந்தா தான் கணேசனை விடுவோம்னு சொல்லிட்டார். நீங்க வந்து கொஞ்சம் சொல்றீங்களா... ப்ளீஸ்...

 

அதற்கு மேலும் ஒரு நொடி கூட தாமதிக்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டான் ஹரிஹரன். ‘எங்கே செல்கிறாய்’ என்ற தாயின் கேள்வியான பார்வைக்கு, “தோப்புக்கு போய்ட்டு வரேன்மா... உடனே வந்துடுவேன்...என்று கூறிவிட்டு எங்கே நின்றால் தாய் தடுத்து விடுவாரோ என்ற எண்ணத்தில் உடனே அங்கிருந்து கிளம்பி விட்டான் ஹரிஹரன்.

 

ஓட்டமும் நடையுமாக தோப்பிற்கு ஐந்தே நிமிடத்தில் வந்து சேர்ந்து விட்டனர் அனைவரும். அங்கே ‘முனியன் எங்கே’ என்று பார்வையால் ஹரிஹரன் துளாவிக் கொண்டு இருக்க கணேசனின் அழுகை குரல் அவனை எட்டியது. வேகமாக சென்று பார்த்த பொழுது அங்கே கணேசன் ஒரு மாமரத்தின் கீழே கட்டி வைக்கப்பட்டு இருந்தான்.

 

சட்டென அங்கே சென்று சிறுவனை கட்டுகளில் இருந்து விடுவித்தான் ஹரிஹரன். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல நேராக அவளை தேடி ஓடி அவளின் கரங்களில் புகுந்து கொண்டான் அந்த அரை டவுசர். அவளும் அவனுக்கு கொஞ்சமும் சளைக்காமல் அவன் முகத்தில் மாறி மாறி முத்தங்களை பதித்துக் கொண்டு இருந்தாள். அவளுடைய கண்ணுக்கு அப்பொழுது சுற்றி இருந்த அவளுடைய மற்ற நண்பர்களோ உதவி புரிந்த ஹரிஹரனோ யாரும் தெரியவில்லை.

 

தொலைத்து விட்ட குழந்தையை மீண்டும் கண்டுகொண்ட தாயை போல இருந்தது அவளின் செய்கை. அவளின் கண்களிலும் கண்ணீரின் வழித்தடம். ஹரிஹரன் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. ‘இந்த சிறுவனின் மேல் அவளுக்கு இத்தனை அன்பா?’ லேசான பொறாமையோடு அவளை பார்த்துக் கொண்டு இருந்தான் ஹரிஹரன். ஓரளவிற்கு இருவரும் சமாதானம் ஆன பிறகே நிமிர்ந்து அவனை பார்த்தாள் அந்த சண்டி ராணி.

 

நிமிர்ந்தவளின் பார்வை வட்டத்தில் முதலில் பட்டது அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்த ஹரிஹரன் தான். ஒரு நிமிடம் தன்னை சமாளிக்க அவகாசம் எடுத்துக் கொண்டு அவனை நேருக்கு நேராக நிமிர்ந்து பார்த்து பேசலானாள்.

 

தேங்க்ஸ்

 

என்ன?”

 

தேங்க்ஸ்ன்னு சொன்னேன்அவள் கொஞ்சம் அழுத்தி சத்தமாக சொன்னாள் அவனுக்கு காதில் விழவில்லையோ என்று.

 

நேத்து சொல்ல மாட்டேனு சொன்ன?” ஆச்சரியமாக கேட்டான் ஹரிஹரன்.

 

இது நீங்க இப்ப செய்த உதவிக்காகஎன்று அழுத்தி சொன்னாள். ‘நேற்று நீ எங்கே உதவி செய்தாய்?’ என்ற மறைமுக கேள்வி அதில் இருந்தது. அவளின் துணிச்சலை மனதுக்குள் ரசித்தவாறே மேலும் அவளிடம் பேச்சுக் கொடுத்தான் ஹரிஹரன்.



 

இப்போ எல்லாம் தைரியமா பேசற? கொஞ்ச நேரம் முன்னாடி எங்கே போய் இருந்துச்சு அந்த வாய்? இந்த பெரிய மனுஷன் மேல அவ்வளவு அன்பா?” அவனையும் மீறி அவன் குரலில் கொஞ்சம் பொறாமை இருந்ததோ என்று அவனுக்கே கொஞ்சம் சந்தேகமாக இருந்தது.

 

அவன் என் தம்பிஉள்ளம் பூரிக்க சொன்னாள்.

 

'உனக்கு இவன் தம்பியா?’ரொம்ப சின்ன பையனாக இருக்கிறானே’ என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

 

ஆமாம். என் சித்தப்பா பையன்... எங்க ஊர்ல சித்தப்பா பையன் தம்பி முறை  தான். உங்க ஊரில் என்ன மாமா முறையா?” இயல்பான துடுக்குத் தனத்துடன் கேள்வி கேட்டாள் அவள்.

 

அவளின் இயல்பு நிலை திரும்பி விட்டதை அறிந்து அவனும் மகிழ்ந்தான். இருவரும் மேலும் என்ன பேசி இருப்பார்களோ திபுதிபுவென ஓடி வந்த முனியனை பார்த்ததும் அவளின் பார்வை நேற்றை போலவே வெளிறியது.

 

தம்பி வாங்க தம்பி... நானே வீட்டுக்கு தான் கிளம்பிக்கிட்டு இருக்கேன். இந்த பசங்க என்ன காரியம் செஞ்சாங்க தெரியுமா?” என்று மேலும் பேச முயன்றவரை கை அசைத்து தடுத்தான்.

 

இதோ பாருங்க... நான் தான் நேற்றே சொன்னேனே... இந்த குழந்தைகள் கேட்டா எவ்வளவு பழம் கேட்டாலும் பறிச்சு கொடுங்கன்னு .அப்புறம் ஏன் இப்படி செஞ்சீங்க?”

 

தம்பி அது நேத்து தானே பறிச்சுக்க சொன்னீங்க... இவங்களை தினமும் விட்டா மொத்தத் தோப்பும் காலி ஆகிடும். அப்புறம் உங்க அய்யனுக்கு நான் தானுங்களே பதில் சொல்லி ஆகணும்முனியனின் இந்த பதிலில் அதுவும் நியாயமாகவே தோன்றியது ஹரிஹரனுக்கு.

 

அவன் ஒரு வியாபாரியின் மகன். அவனுக்கு தெரியும் தினம் இவர்களுக்கு இப்படி ஓசியில் பழங்களை கொடுத்தால் அது தங்களின் வருமானத்தை பாதிக்கும் என்று. ஆனால் அவனால் உடனடியாக அதை வெளியே சொல்ல முடியவில்லை. ‘அவள் வருந்திவிடுவாளே’ என்று அவளுக்காக வக்காலத்து வாங்கியது அவனின் மனச்சாட்சி.

 

அவளுக்காக பரிந்து பேச முடியாமல் அவன் தடுமாறி நின்ற ஒரு சில நொடிகளில் அவளே ஒரு முடிவுக்கு வந்தவள் போல தெளிவான குரலில்  பேச ஆரம்பித்தாள்.

 

வேண்டாம்... இனி இப்படி தினமும் இங்கே வர மாட்டோம். எப்பொழுதாவது மட்டும் வந்து போகிறோம். எங்களால் உங்களுக்கு தொல்லை வேண்டாம் என்று சொன்னவள் அங்கிருந்து கிளம்ப போனாள். அவளை கண் பார்வையாலேயே தடுத்து நிறுத்தி முனியனை அழைத்தான் ஹரிஹரன்.

 

இவங்களை வெறும் கையோட அனுப்ப வேண்டாம்.பாவம் குழந்தைங்க ஏமாந்து போய்டுவாங்க.இவங்களுக்கு வேணும்கிற பழத்தை பறிச்சு கொடுத்து அனுப்புங்கஎன்று சொல்ல அவளும் அவள் கையில் இருந்த அந்த கணேசனையும் தவிர மற்ற வாண்டுகள் நேற்றை போலவே அவர் பின்னால் சென்று விட்டனர்.



 

சாரிஎன்றாள் மெதுவான குரலில்.

 

எதற்கு?” வியப்பே காணப்பட்டது ஹரிஹரனின் குரலில்.

 

உங்க கார் கண்ணாடியை உடைச்சதுக்கு. அது... அதுக்கு ரொம்ப பணம் செலவு ஆகுமா?” தயங்கித் தயங்கி கேட்டாள்.

 

அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்அவளை சமாதானப் படுத்தினான் அவன்.

எவ்வளவுன்னு சொன்னா நான் எங்க வீட்டில் வாங்கி கொடுத்திடவா?” என்ன தான் கேட்டுவிட்டாலும் வீட்டில் எப்படி கேட்பது என்ற பயம் அவளின் கண்களின் அப்பட்டமாய் தெரிந்தது.

 

அது தான் வேண்டாம்னு சொல்றேனே இன்னும் என்ன? இந்த தோப்பு வேண்டுமானால் என்னுடைய அப்பாவின் வருமானத்தில் வாங்கியதாக இருக்கலாம். அதில் எனக்கு நீ சொல்வது போல உரிமை இல்லாமலும் இருக்கலாம். ஆனால் என்னிடமும் கொஞ்சம் பணம் இருக்கிறது அது போதும் இந்த ரிப்பேரை சரி செய்ய. இன்னொரு முறை இதை பற்றி பேசாதேஎன்று லேசாக சுளித்த முகத்துடன் அவன் சொல்ல வேகமாக தலையை ஆட்டினாள் அவள்.

 

அவளின் செய்கை சிரிப்பை மூட்ட அவளையே கனிவாக பார்த்துக் கொண்டு இருந்தான் ஹரிஹரன். மற்ற பிள்ளைகள் வரவும் அவனிடம் லேசாக தலை அசைத்து விட்டு கிளம்பி போகும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். ‘நேற்று, “உனக்கு எதற்கு சாரி சொல்லணும்? உனக்கு எதற்கு தேங்க்ஸ் சொல்லணும்? என்று கேள்வி கேட்டவள் இன்று கொஞ்சமும் தயங்காமல் சொல்லிவிட்டாளே. என்ன மாதிரியான பெண்ணிவள்?’ என்ற சிந்தனையோடு நடக்க ஆரம்பித்தான்.

 

 

Post a Comment

புதியது பழையவை