அத்தியாயம் 7
மதியம் அவனுடைய தாய் ஈஸ்வரி முனியன் மூலமாக அனுப்பி இருந்த உணவு வகைகளை அங்கேயே இருந்த ஒரு குடிசையில் அமர்ந்து உண்டு விட்டு காவக்கார முனியனின் கயிற்றுக்கட்டிலில் அப்படியே படுத்து உறங்க தொடங்கினான். சிலுசிலுவென்ற காற்றும் எந்த விதமான இரைச்சலும் இல்லாமல் அமைதியாக இருந்த சூழ்நிலையும் அவன் மனதை கவர இனி அடிக்கடி இந்த ஊருக்கு வர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.
‘அழகான ஊருக்காக வருகிறாயா இல்லை அந்த சண்டி ராணிக்காக வருகிறாயா’ என்று கேள்வி கேட்ட அவனின் மனசாட்சியை பார்த்து சட்டென கோபம் மூண்டது அவனுள். ‘எதற்காக வந்தால் உனக்கென்ன உன் வேலையை பார்’ என்று அதட்டி அதை அடக்கி விட்டு மீண்டும் தூங்க முயன்றான்.
எங்கே சுற்றினாலும் அவனின் மனம் இறுதியில் அவளிடம் தான் வந்து நின்றது. அவள் பேசியது, நின்றது, ஜடையை கையில் சுற்றியது, அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே அந்த பொடியர்களிடம் பேசியது, அவனை மிரட்டியது, காவக்காரன் சொன்னதும் முகம் வாட அங்கிருந்து சென்றது, தான் பழம் பறித்துக் கொடுக்க சொன்னதும் பூப்போல மலர்ந்தது, கடைசியில் தன்னையே திருடனாக்கியது என்று ஒவ்வொன்றாக நினைத்துக் கொண்டே இருந்தவன் அவளின் நினைவிலேயே உறங்கி விட்டான்.
மாலையில் அவனுடைய அன்னை வந்து எழுப்பியதும் தான் தூக்கம் கலைந்து எழுந்தான். மீண்டும் ஒரு முறை தாய், தந்தையுடன் அந்த தோப்பை சுற்றி வந்தான். இதமான மாலை பொழுதில் கொஞ்சம் கூட இடைவெளி இன்றி அவர்களுக்கு ஏதேனும் உண்ணக் கொடுத்துக் கொண்டே இருந்தான் முனியன். எல்லாம் அந்த தோப்பின் பழங்கள் தான் ஒவ்வொன்றும் ஒரு வித புது ருசியில் இருந்தன. ‘அந்த மண்ணின் மகிமை அது’ என்று முனியன் சொல்லி சொல்லி அவ்வளவு பெருமைப் பட்டுக் கொண்டான்.
இரவு பொழுது வரை அங்கேயே கழித்து விட்டு தங்களுடைய வீடு நோக்கி சென்றனர் மூவரும். வீட்டிற்கும் தோப்பிற்கும் அதிக தொலைவு கிடையாது. முனியனின் அளவுக்கு அதிகமான அன்பினால் மறுக்க முடியாமல் எல்லாரும் உண்டதன் விளைவு இன்னும் கொஞ்சம் நடந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றவே வீட்டில் இருந்து எடுத்து வந்த காரை தோப்பிலேயே விட்டு விட்டு மூவரும் பேசியபடியே நடந்து சென்றனர்.
அவளை பற்றி சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தவன் சற்று நேர சிந்தனைக்கு பிறகு வேண்டாம் என முடிவு செய்து வேறு பேச்சுக்கு தாவி விட்டான். திருமண வயதில் இருக்கும் ஒரு ஆண் ஒரு பெண்ணை பற்றி பெற்றவர்களிடம் பேசினால் அவர்களின் நினைப்பு எந்த திசையில் பயணிக்கும் என்று அறிந்ததாலேயே அவன் அவளை பற்றி சொல்லாமல் மறைத்து விட்டான். அவனே எதிர்பாரா வண்ணம் அவனுடைய தாய் ஈஸ்வரி ஹரிஹரனின் திருமண பேச்சை எடுத்தார்.
“ஹரி உனக்கு கல்யாணம் செய்து வைக்கலாம்ன்னு இருக்கோம் தம்பி...”
“அம்மா விளையாடுறீங்களா எனக்கு வயசு என்ன ஆகுதுன்னு உங்களுக்கு மறந்து போச்சா? எனக்கு இப்ப தான் இருபத்து மூணு வயசு ஆகுது... இன்னும் படிப்பே முடியல... அதுக்குள்ள என்னம்மா அவசரம்?” அவனது கட்டுப்பாட்டையும் மீறி அவனது குரல் லேசாக படபடப்பாக வெளி வந்தது.
“ஏன் தம்பி இப்ப எதுக்கு இவ்வளவு பதட்டம்... நீ இப்போ இந்த படிப்பு படிச்சு மட்டும் என்ன ஆக போகுது? படிப்பை முடிச்சுட்டு உங்க அப்பாவுக்கு ஒத்தாசையா நம்ம குடும்ப தொழிலை தானே பார்க்க போகிற? ஒருவேளை உனக்கு படிப்பின் மீது அவ்வளவு நாட்டம் இருந்தால் நீ கல்யாணம் செஞ்சிக்கிட்டு அதற்கு பிறகு கூட படியேன்... ”
“இல்லைம்மா ... அதெல்லாம் சரி வராது. இப்ப தான் நான் இன்டர் (inter) படிச்சுட்டு இருக்கேன். அதை முடிக்கணும் அதுக்கு பிறகு பைனல் பாஸ் பண்ணனும். அதுக்கு அப்பறம் இதை எல்லாம் யோசிச்சுக்கிலாம். அதுக்கு எப்படியும் இன்னும் ஒரு மூணு வருஷமாவது ஆகும். அதுவரை இந்த பேச்சு வேண்டாம்” ஒரு நிமிடம் இன்று தோப்பில் பார்த்த பெண்ணை பற்றி இவர்களுக்கு தெரிந்து இருக்குமோ என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றி மறைந்தது.
“சரி தம்பி உன் இஷ்டப்படியே செய்யலாம். ஆனால் அதுவரை நாங்க உனக்கு ஏத்த பொண்ணா பார்த்து வெளியில தேடுறோம். இப்போ இருந்து தேடினா தான் ஒரு நல்ல பொண்ணா கிடைக்கும். ஒருவேளை நல்ல பொண்ணா அமைஞ்சா இப்போதைக்கு நிச்சயம் மட்டும் பண்ணிக்கலாம். உன்னோட படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்தை வைச்சுக்கலாம். சரியா?”
தனக்காக இவ்வளவு தூரம் யோசித்து பேசும் தாயை மறுத்து பேசுவது உள்ளுக்குள் வலித்தாலும் ஏனோ ஹரிஹரனால் சரி என்று சொல்ல முடியவில்லை.வெளியிடத்தில் அவனுக்கு பிடித்த பெண் அமைவது கஷ்டம் என்று அவனது மனதுக்கு தோன்றியது.
“இல்லம்மா அதெல்லாம் சரியா வராது. எனக்கு என்னோட படிப்பு ரொம்ப முக்கியம். நீங்க இப்ப பொண்ணு பார்க்கிறது, நிச்சயம் அது இதுன்னு என்னை கூட்டிக் கொண்டு அலைய வேண்டி இருக்கும். அதனால என் படிப்பு தான் வீணாகும். தேவை இல்லாமல் மைன்ட் டைவர்ட் ஆகும். அதனால் என் படிப்பு முடியும் வரை இந்த பேச்சு இருக்கவே கூடாது சொல்லிட்டேன்” என்று முடிவாக சொல்லிவிட்டு அவர்கள் இருவருக்கும் முன்னே நடக்க தொடங்கினான்.
அதுவரை பேசாமல் இவர்கள் இருவரின் பேச்சுவார்த்தையை கேட்டபடியே உடன் வந்து கொண்டு இருந்த விஸ்வநாதன் மெதுவாக பேசலானார்.
“விடு ஈஸ்வரி அவனுக்கு இப்போ என்ன வயசு ஆகிடுச்சு... இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே... அவன் சொல்வதும் ஒரு விதத்தில் சரி தானே...”
“என்னங்க... நீங்களும் அவன் சொல்றதுக்கு இப்படி ஒண்ணுமே பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்? டாக்டர் என்ன சொன்னார் உங்களுக்கு நினைவு இல்லையா? ...
உங்களை ஓய்வு எடுத்துக்க சொல்லி சொன்னார் தானே? நீங்கள் சொன்னால் அவன் கேட்டுக் கொள்வான். இந்த படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து கொண்டான் என்றால் பிறகு அவன் நம்மை விட்டு எங்கும் போகாமல் உங்க தொழிலை அவனே பார்த்துக் கொள்ளுவான். உங்களுக்கும் கொஞ்சம் ஒய்வு கிடைக்கும். நீங்க கொஞ்சம் பேசுங்களேன்...” கணவனின் உடல் நலனில் அக்கறை கொண்டு பேசினார் ஈஸ்வரி.
“ஈஸ்வரி... அவன் ரொம்பவும் ஆசைப்பட்ட படிப்பு இது... அவன் இஷ்டப்படி படிக்கட்டும் விடு... நீ ஏதாவது நல்லது செய்கிறேன் என்று அவனிடம் என் உடல்நிலை பற்றி எதுவும் சொல்லி விடாதே... ஹரி தாங்க மாட்டான்”
“இருந்தாலும் உங்க உடல் நிலை?”
“அப்படி என்ன எனக்கு உடம்புக்கு முடியாம போய்டுச்சு... இப்பக்கூட உன்னை ஒற்றைக் கையில் தூக்குவேன் பார்க்கிறாயா?” என்றபடி விஷமப் பார்வையுடன் மனைவியை நெருங்க அவரை ஒரே பிடியில் தள்ளி நிறுத்தினார் ஈஸ்வரி.
“ஏது கிழவனுக்கு இளமை திரும்புது போல! கல்யாண வயசில் பையன் இருக்கிறான்... அது நினைவில் இருக்கட்டும்” என்று கணவரை இயல்பாக கேலி பேசியபடியே இருவரும் நடந்து வீட்டிற்கு சென்றனர்.
அவர்களுக்கு முன்னரே வீட்டிற்கு வந்து இருந்த ஹரிஹரனோ மாடியில் இருந்த தன்னுடைய அறையில் சென்று முடங்கிக் கொண்டான். ‘ஏன் என்னால் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள முடியவில்லை? உண்மையிலேயே அம்மாவிடம் சொன்னது தான் காரணமா? இல்லை வேறு ஏதேனுமா?’ என்று தனக்குள் கேள்வி கேட்டபடியே மனதை மாற்றும் பொருட்டு அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து தொலைவில் தெரிந்த நிலவை ரசிக்க முயற்சித்தான்.
ஆனால் நிலவிலும் அந்த சண்டி ராணியின் முகம் தோன்றவே திடுக்கிட்டு போய் அவசரமாக அவனுடைய பார்வையை திருப்பிக் கொண்டான். ‘இது என்னடா வம்பா இருக்கு? நாளை முதல் அவள் இருக்கும் திசை பக்கமே போகக்கூடாது என்று நினைத்தவன் விடியற்காலை வரை போராடி விடியலின் போது உறக்கத்தை தழுவினான்.
அவளை பார்க்க கூடாது என்று இவன் மட்டும் முடிவு செய்தால் போதுமா? மறுநாள் காலையிலேயே எழுந்ததுமே அவனுக்கு தேவியின் தரிசனம் கிட்டியது.
தேவதை வருவாள்....
கருத்துரையிடுக