Minminiyin Minsara Kadhalan Tamil novels 3

 



அத்தியாயம் 3

வெளியே அக்னிபுத்திரனுடன் முகம் மலர கிளம்பி சென்ற அருந்ததி சில மணி நேரங்கள் கழித்து வீட்டுக்குள் நுழைந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போனார் சிவநேசன்.

“என்னடி இப்படி வந்து நிற்கிற...” என்று மகளின் தோற்றத்தை பார்த்து அதிர்ந்து போய் கேட்டார் அருந்ததியின் அம்மா கோகிலா.

“அம்மாஆஆ....”

“சொல்லித் தொலைடி.. ஒழுங்கா தானே போன.. இப்ப என்னன்னா ரயில் எஞ்சினுக்கு கரி அள்ளி போட்டவ மாதிரி வந்து இருக்க...”

“அம்மா... அது வந்து...”

“அய்யோ!.. என்ன தான் நடந்துச்சுன்னு சொல்லித் தொலைடி... பெத்த மனசு பக்கு பக்குன்னு அடிச்சுக்குது”

“நாங்க ரெண்டு பேரும் கிளம்பி போனோமா?”

“ஆமா ஒண்ணா தானே போனீங்க...அதுக்கு என்ன?”

“ஒண்ணா எல்லாம் போகலைமா?”

“அப்புறம்?...”

“நான் வண்டியில் ஏறப் போகும் பொழுதே அவர் கூட இருந்த நாய் என்னை முறைச்சு பார்த்துச்சும்மா...”

“ஐயோ ராமா... கதை அளக்காம சீக்கிரம் என்ன நடந்ததுன்னு சொல்லுடி...” என்று கோகிலா அதட்ட.. சிவநேசனும் மகள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். நடந்ததை தெரிந்து கொள்ள...

அருந்ததி ஜீன்ஸ் மாட்டிக் கொண்டு கீழே செல்லும் முன்னரே புல்லட்டில் ஏறி அதை கிளப்பி தயாராக வைத்திருந்தான் அக்னி.

அவனுக்கு பின்னால் நீமோ அமர்ந்து இருக்க, கிளம்பி வந்த அருந்ததி எங்கே அமர்வது என்று தெரியாமல் யோசிக்கத் தொடங்கினாள்.

“நாயை வேணும்னா இங்கேயே விட்டுட்டு போகலாமா?” என்று கேட்டவளை அனல் தெறிக்க முறைத்துப் பார்த்தான் அக்னி.

“உன்னை எல்லாம் என்னோட பைக்கில் கூட்டிட்டு போக முடியாது... வேணும்னா உன் வீட்டு காரில் வா... இல்லைன்னா ஆட்டோவில் வா” என்று சொல்லி விட்டு அவன் நகர... வேகமாக வந்து அவன் பாதையை மறித்தாள்.

“எங்கே வரணும்னு சொல்லாமலே போறீங்களே?”

‘எங்கே வர சொல்லலாம்’ என்று அவன் யோசிக்க அந்த நேரத்தில் அருந்ததியின் மூளை மின்னல் வேகத்தில் யோசித்தது.

‘அவர் நம்ம ஊருக்கு புதுசு இல்லையா.. அதான் யோசிக்கிறார் போல’ என்று எண்ணியவள் வேகமாக ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டலின் பெயரை சொன்னாள்.

“இங்கே இருந்து வலது பக்கம் போனா மெயின்ரோடு வரும். அங்கே இருந்து ஜஸ்ட் அஞ்சே நிமிஷத்தில் அங்கே போயிடலாம்... மதிய சாப்பாட்டு நேரம் ஆகிடுச்சு... அந்த ஹோட்டலில் இப்போ புட் பெஸ்டிவல் (Food FESTIVAL) நடக்குது. இந்நேரம் பஃபே ஆரம்பிச்சு இருப்பாங்க. எல்லா விதமான சாப்பாடும் கிடைக்கும்... சாயந்திரம் அப்பா கூட போகலாம்னு நினைச்சேன். பரவாயில்லை அதனால என்ன? இப்போ உங்க கூட வர்றேன். அப்புறம் அப்பா கூட போய்க்கிறேன்” என்று சொன்னவளை அவன் விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ஆக இப்போ கூட நீ சாப்பாட்டைப் பத்தி மட்டும் யோசிச்சுக்கிட்டு இருக்க இல்ல... எந்நேரமும் சாப்பாட்டை பத்தியே நினைச்சுக்கிட்டு இருக்கிறவளை என்னோட தலையில் கட்ட எத்தனை பேர் சேர்ந்து சதி செய்றாங்க’ என்று எண்ணி ஆத்திரப்பட்டவன் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு பேசினான்.

“உனக்கு கார் ஓட்டத் தெரியும் தானே?”

“ஓ.. நல்லா ஒட்டுவேனே... லைசன்ஸ் கூட....”

“ஒரு கேள்வி கேட்டா ஆமா இல்லைன்னு ஒத்தை வார்த்தையில் பதில் பேசிப் பழகு” என்று கறாரான குரலில் சொன்னவன் அவளை பார்த்து அலட்சிய கை அசைவுடன் பேசினான்.

“போய் காரை எடுத்துட்டு என்னை பாலோ பண்ணி வா”

“நான் முன்னாடி போறேன்... நீங்க என்னை பாலோ செஞ்சு...” என்று பேசிக் கொண்டே போனவள் அவனது முறைப்பில் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

“அந்த ஹோட்டலுக்கு உங்களுக்கு வழி தெரியுமோ என்னவோ.. அதான்... ஒரு உதவியா...”

“நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்... ஒழுங்கா சொல்றதை மட்டும் செய்” என்று சொன்னவன் புல்லட்டை எடுத்துக் கொண்டு நொடிகளில் கண்ணில் இருந்து மறைய அடித்து பிடித்துக் கொண்டு காரில் ஏறி அவனை பின் தொடர்ந்து ஓட்டிக் கொண்டு போனாள் அருந்ததி.

ஆனால் அவனோ அவள் சொன்ன பாதையை விடுத்து அதற்கு எதிர் திசையில் பயணிக்க... ‘இந்தப் பக்கம் எங்கே போறார்?’ என்ற குழப்பத்துடன் அவனை பின் தொடர்ந்தாள் அருந்ததி.

காரை ஓட்டிக் கொண்டே அவனிடம் எப்படி பேச முடியும்? அதுவும் அவன் ரோட்டில் புயல் வேகத்தில் போய்க் கொண்டு இருக்கும் பொழுது...

அரைமணி நேர பயணத்திற்குப் பிறகு அவன் இறங்கிய இடத்தைப் பார்த்ததும் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அது ஒரு மைதானம். மதியம் பன்னிரெண்டு மணி வெயிலில் மொத்த மைதானமும் காலியாக இருக்க... ஆங்காங்கே ஓரிருவர்  மர நிழலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

காரை விட்டு இறங்காமல் அவள் யோசித்துக் கொண்டிருக்க, வெளியே வருமாறு கை அசைத்தான் அக்னி.

காரின் கண்ணாடிகளை இறக்கி விட்டவள் தயக்கத்துடன் பேசினாள்.

“கார் உள்ளேயே உட்கார்ந்து பேசலாமா? வெளியே வெய்யில் அதிகமா இருக்கும் போல.. கார்ல ஏசி இருக்கு...” என்று பேசிக் கொண்டே போனவள் அவனது உக்கிரமான பார்வையில் பேச்சை அந்தரத்தில் நிறுத்தி விட்டாள்.

“ஏன் மகாராணி எப்பவும் ஏசிலயே தான் இருப்பீங்களோ... இறங்கி வா” என்று அதட்ட ...

‘எதற்கு இப்படி நெருப்பாக தன்னிடம் காய்கிறான்’ என்பது புரியாமலே காரை விட்டு இறங்கினாள் அருந்ததி.

வேண்டுமென்றே நிழல் இல்லாத இடமாக பார்த்து அமர்ந்தவன் அவளையும் அமருமாறு சைகை செய்ய... தன்னுடைய கைக்குட்டையை தரையில் விரித்து அதன் மேல் நாசுக்காக அமர்ந்து கொண்டாள்.

சுற்றிலும் பார்வையை ஓட விட்டாள் அருந்ததி.

‘அடேய்... உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா... உனக்கும் எனக்கும் கல்யாணம் செய்றதா முடிவு செஞ்சு இருக்காங்க... என்கிட்டே தனியா பேச எப்படியாப்பட்ட இடத்துக்கு கூட்டிட்டு வந்து இருக்கான் பாரு... ஊரில் எம்புட்டு இடம் இருக்கு.. அதை எல்லாம் விட்டுட்டு இங்கே கூட்டிட்டு வந்து இருக்கானே... இவன் தெரிஞ்சு செய்றானா? இல்ல தெரியாம செய்றானா? இவனுக்கும் ரொமான்சுக்கும் ஏணி வச்சா கூட எட்டாது போலவே’

“நான் ஒரு ராணுவ வீரன் தெரியும் தானே உனக்கு?” மௌனத்தை கலைத்து பேசத் தொடங்கினான் அக்னிபுத்திரன்.

“ம்ம்ம்...”

“எனக்கு இந்த வெயில், மழை, பனி எல்லாமே பழகிப் போன ஒண்ணு...”

‘இருந்துட்டு போகட்டும்’

“என்னை கல்யாணம் செஞ்சா... நீ சுகமா எல்லாம் இருக்க முடியாது... நிறைய கஷ்டப்படணும்...”

“நீங்க வேலையை விட்டு நின்னுட்டதா அப்பா சொன்னாரே...”

“ஆமா... ஆனா நான் என்ன உன்னை மாதிரி பரம்பரை பணக்காரனா? நின்னா ஏசி.. நடந்தா ஏசின்னு இருக்க... என் கூட வாழந்தா அந்த வாழ்க்கையில் இப்போ நீ அனுபவிக்கிற சொகுசு கண்டிப்பா கிடைக்காது”

“நா.. நான் அட்ஜஸ்ட் செஞ்சுப்பேன்...”

“அப்படி என்ன அவசியம் உனக்கு?.... அதென்ன அவ்வளவு கஷ்டப்பட்டு சொல்லுற.. அட்ஜஸ்ட் செஞ்சுப்பேன்னு... என் கூட வாழப் போற வாழ்க்கை அவ்வளவு கொடுமையானதா தோணுதோ” என்றான் கூர்பார்வையுடன்.

“நான் அப்படி சொல்லவே இல்லையே...”

“நீ சொன்னாலும் சொல்லலைனாலும் என்னோட உனக்கு கல்யாணம் நடந்தா அதுக்கு அப்புறம் நீ நிறைய கஷ்டப்பட வேண்டி இருக்கும்” அவளை மிரட்டி பயமுறுத்தி ஓட வைக்க முயற்சி செய்தான்.

“எதுவா இருந்தாலும் நான் ஏத்துக்கிறேன்.. ஏன்னா...”

“உன் தாத்தாவோட கடைசி ஆசை.. அதானே” என்று கேட்டவனின் இதழ்கள் அலட்சியமாக வளைய... அவள் இனி அவனிடம் பேசவே கூடாது என்ற முடிவுடன் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

“என்னை கல்யாணம் செஞ்சா காரில் எல்லாம் போய்ட்டு இருக்க முடியாது... காசு இருந்தா ஆட்டோ... இல்லேன்னா பஸ் தான்”

‘ஆமாமா... அதுக்காகத் தான் இப்போ இங்கே வந்து இந்த மொட்டை வெயிலில் உன் பேச்சை கேட்டுக்கிட்டு இருக்கேன் பார்’

“உங்க வீட்டில் இருக்கிற மாதிரி உனக்கு சொடக்கு போட்டதும் வேலை செய்ய ஆள் எல்லாம் கிடையாது... என்னை கல்யாணம் செஞ்சுகிட்டா நீ தான் எல்லா வேலையும் செய்யணும்”

‘வெயிலை விட இவன் பேச்சு ரொம்ப கொடுமையா இருக்கே ஆண்டவா.. என்னைக் காப்பாத்துடா...’

“எனக்கு இப்போ வேலை கூட இல்ல... தெரியும் தானே... அதனால ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும்... மொத்தத்தில் உங்க அப்பா வீட்டில் இருக்கிற அளவுக்கு எந்த வசதியும், சுகமும் உனக்கு கிடைக்காது... அதனால நல்லா யோசிச்சு சொல்லு”

“இது எல்லாமே எனக்கு முன்னாடியே தெரிஞ்ச விஷயம் தான். இது தான் விஷயம்ன்னா நாம கிளம்பலாம்... எனக்கு ரொம்ப பசிக்குது” என்று அவள் அலட்சியமாக சொல்ல... அக்னிபுத்திரனின் பொறுமை எல்லை கடந்தது.

‘இவ்வளவு தூரம் சொல்றேன்.. கொஞ்சாமாவது அசையறாளா பார்... இப்போ கூட புத்தி எல்லாம் சோறு மட்டும் நிறைஞ்சு இருக்கு இவளுக்கு... இவளை’ என்று பல்லைக் கடித்தவனின் மூளையில் மெலிதாக ஒரு மின்னல் அடிக்க.. அவன் முகம் பிரகாசமானது.

“என்னுடைய முக்கியமான கண்டிஷனை நான் இன்னும் சொல்லவே இல்லை...” என்று கூறிவிட்டு அவளை அழுத்தமாக பார்க்க...

‘என்ன’ என்று திமிரான ஒரு பார்வையுடன் அவள் அமர்ந்து இருந்தாள்.

“என்னை கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு என்னை மாதிரியே இருக்கணும்... அதாவது மிலிட்டரில வேலை பார்க்கணும்.. அட்லீஸ்ட் போலிஸ் டிபார்ட்மெண்டில் ஒரு கான்ஸ்டபிளாவாவது இருக்கணும். அப்போ தான் நான் கல்யாணம் செஞ்சுப்பேன்” என்று அவன் அவள் தலை மீது இடியை இறக்க.. கண்கள் இரண்டும் வெளியே தெறித்து விடுவது போல அவனையே பார்த்தாள் அருந்ததி.

“இந்த மாதிரி ஏதாவது பொய் சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த பார்க்கறீங்களா?” அவனது கண்ணை நேருக்கு நேராக பார்த்து அவள் கேட்க... சில நொடிகள் தடுமாறியவன் சட்டென சுதாரித்துக் கொண்டான்.

“ஒவ்வொருத்தருக்கும் தனக்கு வரப் போற மனைவி எப்படி இருக்கணும்னு ஒரு ஆசை இருக்கு. எனக்கு என்னோட மனைவி காக்கி யூனிபார்மில் இருக்கணும்னு ஆசை.. அதில் என்ன தப்பு?” என்று அவன் எதிர்க்கேள்வி கேட்க... ஒரு சில நிமிடங்கள் கண் மூடி யோசித்த அருந்ததி அடுத்த நிமிடமே சரியென்று தலை அசைத்தாள்.

“அப்பா கிட்டே சொன்னா... சுலபமா முடிச்சிடுவார்... உங்க நிபந்தனை அவ்வளவு தானே?” என்று அவள் அசராமல் கேட்க... அக்னிபுத்திரனின் ஈகோ தலை தூக்கியது.

‘இவளை’ என்று ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்.

“அது அவ்வளவு சுலபம் இல்லை.. நீ முழுக்க முழுக்க நேர்மையான முறையில் தான் போலிஸ் ஆகணும்..  உனக்கு வேண்டிய எல்லா பயிற்சியையும் நான் தான் கொடுப்பேன்... ஏதாவது ஏமாற்று வேலை செஞ்சு அந்த வேலையில் சேர்ந்தா... அப்புறம் இந்த கல்யாணம் நடக்காது சொல்லிட்டேன்” என்று அவன் அழுத்தமாக சொல்ல... அருந்ததியின் முகம் கலவரமானது.

‘இவன் பேச்சை பார்த்தா விளையாட்டுக்கு சொல்ற மாதிரி இல்லையே... இப்போதைக்கு சரின்னு சொல்லி வைப்போம்... வீட்டுக்குப் போய் அப்பா கிட்டே சொல்லி இவர் மனசை மாத்த வேண்டியது தான்’ என்று எண்ணியவள் முகத்தை கெத்தாக வைத்துக் கொண்டாள்.

“எனக்கு தெரிஞ்சது எல்லாம் நேர்மை,கருமை,எருமை... எப்பவும் நேர்வழியில் போய் தான் இந்த அருந்ததிக்கு பழக்கம்” என்று சொல்லி மேலும் அவள் கடுப்பேற்ற... அவனோ அவளை விசித்திரமாக பார்த்து வைத்தான்.

“அப்போ உனக்கு சம்மதம்னு சொல்லுற...”

“ஏன் உங்களுக்கு காது சரியா கேட்காதா” என்று அவள் விளையாட்டாய் கேட்க.. எங்கிருந்து தான் அவனுக்கு அத்தனை கோபம் வந்ததோ தெரியாது... வேகமாக எழுந்து அவளின் அருகில் வந்தவன் அவளின் கையைப் பிடித்து எழுப்பி நிற்க வைத்தவன் உக்கிரமாய் முறைத்து வைத்தான்.

“உன்னோட திமிர் எல்லாம் உன் வீட்டோட வச்சுக்கோ.. என்கிட்டே காட்டினே... தோலை உரிச்சிடுவேன் ராஸ்கல்” என்று சீற அருந்ததிக்கு இதயம் தொண்டையில் வந்து துடிக்கத் தொடங்கியது.

“ஆக மொத்தம் உனக்கு என்னை கல்யாணம் செஞ்சுக்க சம்மதம்  அப்படித்தானே... சரி எழுந்து போய் இந்த க்ரௌண்டை நாலு ரவுண்டு ஓடிட்டு வா” என்று சொல்லி விட்டு அங்கே ஒரு ஓரமாய் அமர்ந்து மொபைலை நோண்டத் தொடங்கினான்.

“என்ன விளையாடுறீங்களா? இவ்வளவு பெரிய கிரவுண்டை நாலு முறை சுத்தி வர்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?”

“உன்னை நான் ஓட சொல்லி சொன்னேன்...” அவன் பார்வை அவள் மீது அதீத அழுத்தத்துடன் படிந்தது.

“கண்டிப்பா செய்ய மாட்டேன்...” என்று கறார் குரலில் சொல்லி விட்டு காரில் ஏற முயல...

“நீமோ” என்று அவன் குரல் கொடுக்க... அவளின் பாதையை மறித்து நின்ற பற்களை வெளியே காட்டி உறுமிக் கொண்டு நின்ற நீமோவை பார்த்ததும் அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

“எ... என்ன செய்றீங்க... இந்த நாயை கூப்பிடுங்க... நான் வீட்டுக்குப் போகணும்” அவள் எவ்வளவோ முயன்றும் அவள் கண்களில் பயம் வெளிப்படையாகத் தெரிய... அக்னிபுத்திரன் அவள்புறம் கூட திரும்பாமல் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான்.

“உங்களைத் தான் சொல்றேன்... இந்த நாயைக் கூப்பிடுங்க”

“நான் சொன்னதை செய்... அவனை நான் தள்ளி நிற்க சொல்லுறேன்” என்றான் அவன் கொஞ்சமும் அசராமல்...

“மறுத்தா... என்ன செய்வீங்க?” என்று அவள் கைகளை கட்டிக் கொண்டு பிடிவாதமாக தரையில் கால் ஊன்றி அழுத்தமாக நின்றாள்.

‘முடியாது போடா’ என்னும் பாவனையில்.

நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் சத்தம் இல்லாமல் மனதுக்குள் சிரித்துக் கொண்டு நீமோவின் புறம் திரும்பினான்.

“நீமோ...சேஸ் ஹெர் ( Nemo... Chase her)  என்ற வார்த்தையைக் கேட்டதும், எஜமானின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு ,  நீமோ எல்லா பற்களையும் காட்டிக் கொண்டு பாய்ந்து அவளைத் துரத்தத் தொடங்க... நீமோவிற்கு பயந்து எட்டு கால் பாய்ச்சலில் ஓடத் தொடங்கினாள் அருந்ததி.

“உங்க நாயை நிற்க சொல்லுங்க... ஐயோ கிட்ட வருது... கடிச்சுடும் போலயே... ப்ளீஸ்... என்னால ஓட முடியலை... அதை துரத்த வேண்டாம்னு சொல்லுங்க...” எப்படி எல்லாமோ கேட்டுப் பார்த்தும் துளி கூட அசையாமல் அவன் தன்னுடைய மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான்.

அருந்ததி ஒன்றும் ஒல்லியான உடல்வாகு கொண்டவள் இல்லை. அத்தனை பெரிய மைதானத்தை பாதி தூரம் ஓடிக் கடப்பதே அவளுக்கு பெரிய விஷயம் எனும் பொழுது... தன்னுடைய உடலை வைத்துக் கொண்டு அந்த மைதானத்தை ஓடுவதற்குள் பலமுறை கீழே விழுந்து எழுந்தாள் அருந்ததி.

அப்படியே இருக்க முடியாமல் நீமோ பின்னாலேயே அவளைத் துரத்திக் கொண்டு ஓடி வர... மீண்டுமாய் எழுந்து பயத்துடன் ஓடத் தொடங்கினாள் அருந்ததி.

அவளுக்கு நாய் என்றாலே பயம்... இப்படி ஒரு நாய் குறைத்துக் கொண்டே , அவளை கடித்து விடும் வேகத்தோடு துரத்தினால் அவளும் தான் என்ன செய்வாள்?

முழுதாக ஒரு மணி நேரம் கடந்த பிறகு அந்த முழு மைதானத்தையும் அவள் நான்கு முறை சுற்றிய பிறகு தான் அவளை துரத்துவதை நிறுத்தியது நீமோ.

மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க... எழுந்திரிக்கக் கூட முடியாமல் அந்த மைதானத்தின் மூலையில் சுருண்டு போய் கீழேயே படுத்து விட்டாள் அருந்ததி. கீழே விழுந்து கிடந்தவளை எழுப்பி விடக் கூட மனமில்லாதவன் போல அவளை கடந்து போய் புல்லட்டில் ஏறியவன் அவள் புறம் கூட திரும்பாமல் பேசத் தொடங்கினான்.

“என் கூட நீ வாழணும்னு நினைக்கிற வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்... இப்பவும் உனக்கு சம்மதமா? யோசிச்சு பதில் சொல்லு” என்று சொன்னவன் நீமோவை அழைத்து தன்னுடைய புல்லட்டில் அமர வைத்து அந்த இடத்தை விட்டு மின்னலென மறைந்து போனான்.

அவன் போவதையே கண்கள் கலங்க இமைக்க மறந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி.

Post a Comment

புதியது பழையவை