அத்தியாயம் 10
ஒரு வாரம் கடந்திருந்தது. அபிமன்யுவின் மொத்த குடும்பமும் ஹாஸ்பிடலே கதி என்று இருந்தது. சஹானாவிற்கும் மயக்கம் தெளிந்திருக்க அபிமன்யுவின் வேண்டுகோளுக்கு இணங்க இருவரையும் ஒரே அறைக்கு மாற்றி விட்டார்கள்.
அபிமன்யு ஒரளவு உடல் அளவில் தேறி விட்டான். மனம் முழுக்க சஹானாவை எண்ணி கவலையும் இதை செய்தவர்கள் மீது ஆத்திரமும் நிரம்பி வழிந்தது.
சஹானா காலில் அறுவை சிகிச்சை செய்ததால் பெரும்பாலும் தூக்கத்திலேயே இருந்தாள்.
உறவினர்கள், நண்பர்கள், தொழில்துறையை சேர்ந்தவர்கள் எல்லாரும் மாறி மாறி வந்து அபிமன்யு, சஹானா இருவரையும் பார்த்து நலம் விசாரித்து சென்றார்கள்.
மேகலா கூட படுக்கையில் இருந்து எழுந்து கொஞ்சம் தெளிவுடன் மகளையும், மருமகனையும் பார்த்துக் கொண்டார். எல்லோரின் முகமும் ஒருவித அமைதியில் இருக்க ஒருவரின் முகம் மட்டும் கடுவன் பூனையாக இருந்தது. அது துரைசாமியின் முகம் என்று சொல்லித் தான் தெரிய வேண்டுமா?
முதல் நாளைத் தவிர யார் முகத்திலும் கடுகளவு கூட அழுகை இல்லை. எல்லாருமே அந்த அதிர்வில் இருந்து வெளியேறி அடுத்து என்ன என்பதைக் குறித்து சிந்திக்க தொடங்கி விட்டார்கள். மேகலா கூட தூங்கி எழுந்ததும் முதலில் அழுதாலும் உடனே தன்னை தேற்றிக் கொண்டார்.
இதற்கு எல்லாம் காரணம் அஞ்சலி மட்டுமே… மொத்த குடும்பமும் கலங்கி இருந்த நிலையில் எல்லோரின் கவலையையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டாள். துரைசாமியின் மீது இருக்கும் ஆத்திரத்தை எல்லாம் வெளியே காட்டாமல் இறுக்கமாக இருந்து கொண்டாள். அவளின் மனநிலையும், தெளிவுமே மற்றவர்களை சீக்கிரம் இயல்புக்கு கொண்டு வந்தது. அவளைப் பற்றி அறியாதவர்களை பேசிக் கரைத்தாள். அறிந்தவர்கள் அவளின் இரும்பென தோன்றிய முகபாவனையில் தாங்களாகவே மீண்டு கொண்டார்கள்.
எல்லாரையும் உண்ண வைத்து, உறங்க வைத்தவள் தான் மட்டும் உறக்கம் தொலைத்து நின்றாள். பகல் முழுக்க மருத்துவமனையில் இருப்பவள் இரவில் வீடு திரும்பி விடுவாள். மேகலா அப்பொழுது தான் கொஞ்சம் உடல்நலம் தேறி வந்ததால் அவரை மருத்துவமனையில் தங்க அனுமதிக்கவில்லை. சத்யன், பார்வதி,ராஜேந்திரன் என்று மூவரும் மாறி மாறி இரவில் தங்கி பார்த்துக் கொண்டார்கள்.
இதில் துரைசாமியை மருத்துவமனையில் தங்கி பார்த்துக் கொள்ளும்படி யாருமே அவரிடம் கேட்கவில்லை என்பது அவருக்கு இன்னும் ஆத்திரமாக வந்தது. கேட்டாலும் அவர் பார்த்துக் கொள்ள மாட்டார் என்பது வேறு விஷயம். ஆனால் அந்த முடிவை அவர் அல்லவா எடுக்க வேண்டும். அவரிடம் கேட்டு… கெஞ்சி… அவர் பிகு செய்து… என்று எத்தனையோ அவர் யோசித்திருக்க யாருமே அவர் பக்கம் கூட திரும்பவில்லை. அதற்கு காரணமும் அஞ்சலி தான்.
“அங்கிள் ரொம்ப அதிர்ச்சியில் இருப்பாங்க. அவரை தொந்தரவு செய்ய வேண்டாம். நாமளே பார்த்துக்கலாம்” என்று சொல்ல அஞ்சலியின் பேச்சை அவள் வீட்டில் யார் மறுத்து பேசப் போகிறார்கள்.
இது எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. சஹானாவின் காலில் ஏற்பட்ட காயம் இனி அவளால் பழையபடி நடனம் ஆட முடியாது என்ற நிலைக்குத் தள்ளி இருக்க, அது குறித்த வருத்தம் அங்கே யாருக்கும் பெரிதாக இல்லை. மேகலா உட்பட…
அது அவர் பெரிதாக எதிர்பார்த்த ஒரு நிகழ்வாயிற்றே. அவர் மறுத்த பிறகும் அவர் பேச்சை மீறி, அவருக்குத் தெரியாமல் அவள் செய்த விஷயம்… இனி வாழ்நாளில் அவள் நடனமாடவே முடியாது என்பது அவருக்கு அத்தனை ஆனந்தத்தை கொடுத்தது.
மற்றவர் அனைவரும் அது குறித்து வருந்தும் பொழுது கண்ணாற கண்டு மகிழலாம் என்று நினைத்திருக்க அது நடக்காமல் போனது.
ஒருவேளை எல்லோரும் அந்த வலியை காட்டிக் கொண்டால் அது சஹானாவை மேலும் வருத்தி விடக்கூடும் என்ற அஞ்சலியின் அறிவுறுத்தலின் பேரில் யாரும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை என்பதை மட்டும் அவர் அறிந்திருந்தால் என்னாவாரோ?
இவ்வளவு தூரம் திட்டமிட்டும், பணம் இலட்சக்கணக்கில் செலவு செய்தும் அவரால் மகிழ்ச்சியடைய முடியவில்லை.
காரணம் மூன்று
சஹானாவின் காலுக்கு ஏற்பட்ட இழப்பைக் குறித்து யாருமே வருந்தவில்லை.
அஞ்சலி இந்த நிமிடம் வரை ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை.
அபிமன்யு, சஹானா இருவரும் இந்த நிமிடம் அவரின் கண் எதிரே முழு தேக ஆரோக்கியத்துடன் சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் அவரது திட்டம் படுதோல்வி அடைந்திருந்தது.
யாரிடமும் கோபத்தை அவரால் காட்டவும் முடியவில்லை. அவர் கோபத்தைக் காட்டக்கூடிய ஒரே அப்பாவி ஜீவன் மேகலா மட்டும் தான். அவரையும் அஞ்சலி எந்நேரமும் தன்னுடனே வைத்துக்கொண்டு சுற்றினாள்.
தனியே மாட்டினால் தான் ஏதாவது உப்பு சப்பு இல்லாத காரணத்தை வைத்து அவரை திட்ட முடியும். எல்லாரையும் வைத்துக் கொண்டு திட்டினால் மற்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்குமே!
அங்கே இருந்து அவர்களைப் பார்க்கப் பார்க்க அவருக்கு ஆத்திரம் பெருகியது. பொறுக்க முடியாமல் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்து விட்டார். அப்படி கிளம்பியவரை யாருமே தடுக்கவில்லை என்பது தான் இன்னும் சோகமான விஷயம்.
பார்வதி மட்டும் ஒருமுறை சொல்லிப் பார்த்தார்.
“நீங்க மட்டும் தனியா அங்கே போய் என்ன செய்யப் போறீங்க சம்பந்தி… கொஞ்ச நாள் இங்கே இருந்துட்டு போகலாமே”
ஏற்கனவே மேகலா கொஞ்ச நாள் அங்கே சஹானாவுடன் தங்கி மகளை பார்த்துக் கொள்வதாக முடிவு செய்திருக்க அவரை தன்னோடு அழைத்து செல்ல முடியாத ஆதங்கத்தில் இருந்தார்.
“பரவாயில்லை சம்பந்தி… அங்கே எல்லாம் போட்டது போட்டபடி இருக்கு… சத்யா சின்ன பையன். அவனை மாதிரி நானும் பொறுப்பில்லாம இங்கே தங்கிட முடியாது பாருங்க. அங்கே என்னை நம்பி நிறைய குடும்பம் இருக்கு. அதெல்லாம் நான் தானே பொறுப்பா பார்த்துக்கணும்” என்று பேச்சுவாக்கில் மகனை பொறுப்பு இல்லாதவன் என்று மட்டம் தட்ட, சிறிதளவு கூட முக மாறுதலின்றி அமைதி காத்தான் சத்யன்.
உண்மையில் ராஜேந்திரனும், பார்வதியும் சத்யனை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். இங்கே மருத்துவமனையில் இருந்தாலும் சத்யன் எப்பொழுதும் போனில் ஊரில் உள்ள ஆட்களுக்கு அழைத்து இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து சொல்லி விடுவான். அவர்களுக்கு உண்டான கூலித் தொகையைக் கூட ஆன்லைனில் அனுப்பி நின்ற இடத்திலேயே திறம்பட வேலை செய்துக் கொண்டிருக்கிறான்.
இப்பொழுது இத்தனை பேரை வைத்துக்கொண்டு அவனை குற்றம் சாட்டியும் எதிர்த்து பேசவில்லை… முகத்தில் சின்ன சிணுக்கம் கூட இல்லாமல் அமைதியாக இருந்த சத்யன் அவர்களின் மதிப்பில் உயர்ந்து நின்றான் என்று தான் கூற வேண்டும். அப்படி இருக்கையில் துரைசாமியின் பேச்சு அவர் மேல் கொஞ்சம் கோபத்தைத் தான் வரவழைத்தது. இருந்தும் என்ன செய்வது சம்பந்தி ஆயிற்றே… அதுவும் அவரது குணத்தைப் பற்றி நன்றாக அறிந்து வைத்து இருந்ததால் எதுவும் பேசாமல் அமைதி காத்தார்கள்.
இவர் இங்கே வந்ததில் இருந்து மேகலாவிற்கு ஒதுக்கப்பட்ட அறையில் பகலும், இரவும் தூங்குவதைத் தவிர வேறொன்றும் செய்து அவர்கள் பார்த்தது இல்லை. அப்படி இருக்க கடும் உழைப்பாளியான சத்யனை இப்படி மட்டம் தட்டுவது அவர்களுக்கே கொஞ்சம் அநியாயமாகத் தான் தோன்றியது. அதை சத்யன் மறுத்தோ, எதிர்த்தோ பேசாதது தான் அவர்களுக்கு இன்னும் ஆச்சரியம்.
நல்ல மகனாக எங்கேயும் தந்தையை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறான் என்பது புரிந்தது. கிளம்பி செல்ல நினைக்கும் துரைசாமியை ஒருவரும் தடுக்கவில்லை. அவர் மட்டிலுமாக கிளம்பி ஊருக்கு சென்று விட்டார். அஞ்சலிக்கு ஒரு வகையில் அவர் அங்கிருந்து சென்றது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் உண்மையை எல்லார் முன்னிலையும் போட்டு உடைத்து விடுவோமோ என்ற பயம் ஒரு பக்கம் இருக்க, கோபத்தில் அத்துமீறி அவரது சட்டையைப் பிடித்து ஏதாவது மரியாதைக் குறைவாக பேசி விடுவோமோ அச்சமும் இருந்தது.
இது இரண்டில் எது நடந்தாலும் அவளது எதிர்கால திட்டங்கள் பாழாகி விடுமே… அஞ்சலி ஓரளவுக்கு இயல்புக்கு திரும்பியதை உணர்ந்து கொண்ட ராஜேந்திரன் மெல்ல மகளிடம் பேச்சுக் கொடுத்தார்.
இரவு உணவை எடுத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனை செல்வதற்காக வந்தவர் மகளிடம் காபி கேட்டு வாங்கி பருகினார்.
“நீ சாப்டியா அஞ்சலி?”
“இதோ… குளிச்சிட்டு சாப்பிடப் போறேன் பா… சத்யனும், மேகலா அத்தையும் ஏற்கனவே சாப்பிட்டு படுத்துட்டாங்க. எனக்கு காலேஜில் நாளைக்கு ஒரு செமினார் எடுக்கணும். அதுக்கு ரெடி ஆகிட்டு இருக்கேன்”
“நல்லா ப்ரீபேர் செஞ்சு இருக்கியா அஞ்சலி?”
“அதெல்லாம் பக்கா… ஜஸ்ட் ரிஹர்சல் தான் செஞ்சுட்டு இருந்தேன்”
“இப்போ நீ ஓகே வா அஞ்சலி?” மகளின் கண்களை உற்று நோக்கினார் அவர்.
“நான் எப்பவுமே ஓகே தான் டாடி” அவள் பார்வை கையில் இருந்த போனில் படிந்தது.
“உனக்குத் தான் ரொம்ப கஷ்டமா இருந்து இருக்கும்ல… அண்ணனை , அண்ணியை கவனிச்சு… அப்புறம் ஹாஸ்பிடல் , வீடு எல்லாருக்கும் வேணும்கிறது எல்லாம் நீ தான் பார்த்துக்கிட்டே.. உங்க அம்மாவும் நானும் கூட கொஞ்சம் ஓய்ஞ்சு போய்ட்டோம். நீ வந்து எல்லாத்தையும் கையில் எடுத்த பிறகு தான் எனக்கு மலையளவு தெம்பு வந்துச்சு பேபி” உண்மையான நெகிழ்ச்சி இருந்தது அவர் குரலில்.
“டாடி… என்ன புதுசா என்னென்னவோ பேசறீங்க?” இயல்பாக இருப்பதாய் காட்டிக் கொள்ள முனைந்தாள் அஞ்சலி.
“நிஜமாத் தான் பேபி.. எப்பவும் இந்த மாதிரி ஏதாவது பிரச்சினை வந்தா உன் அண்ணன் ஹேண்டில் செஞ்சுப்பான். நான் ஹாயா இருந்துப்பேன். இப்போ அவனுக்கே இப்படி ஆகவும் என்னால மேற்கொண்டு எதையும் தெளிவா யோசிக்க முடியலை” உள்ளார்ந்த வருத்தம் நிறைந்த தந்தையின் குரலில் துரைசாமியின் மீது கொலை வெறி வந்தது அவளுக்கு.
“அப்பா இதெல்லாம் ஒரு விஷயமா? சில் டாட்”
“நீ நார்மலா இருக்கியா அஞ்சலி?” என்று கேட்டவர் முன்பை விட தீவிரமாக மகளின் முகத்தை ஆராய்ந்தார்.
“எனக்கென்னப்பா…” அவரின் கேள்விக்கு இன்னொரு கேள்வியை பதிலாக தந்து அவரை குழப்ப முயன்றாள் அஞ்சலி.
“எனக்கு உன்னைப் பத்தி நல்லாத் தெரியும் அஞ்சலி. உன் அண்ணன் மேல நீ எந்த அளவுக்கு பாசம் வச்சு இருக்கன்னும் தெரியும். அப்படி இருக்கும் போது நீ எப்படிடா இன்னும் உடையாம அழுத்தமா இருக்க… உன்கிட்டே சொல்றதுக்கு நானும், உன் அம்மாவும் அவ்வளவு பயந்தோம். ஆனா நீ ரொம்ப அழுத்தமா இருக்க… இப்போ வரை உன் கண்ணுல ஒரு சொட்டு தண்ணி வரலை. அதுக்கு என்ன காரணம்? எனக்குத் தெரிஞ்ச என் பொண்ணு அஞ்சலி இப்படி இல்லையே” அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளை முள்ளாய் தைத்தது.
அவருக்கு எப்படித் தெரியும் காரில் அன்று அஞ்சலி அழுத அழுகையும், தினம் தினம் இரவுகளில் யாரும் அறியாமல் அவள் கண்ணீர் வடித்த கதையும். இதை எல்லாம் இப்பொழுது தந்தையிடம் சொல்ல முடியாதே. ஏன்? எதற்கு? என்று ஆயிரம் கேள்விகள் வரும். அதற்கு பதில் சொல்வதைக் காட்டிலும் அம்பை வேறுபுறம் திருப்புவது சுலபம் என்று முடிவு செய்த அஞ்சலி பெற்றவரை தீர்க்கமாக பார்த்தாள்.
“எனக்கு பயமா இருந்துச்சுப்பா?”
“அண்ணனைப் பத்தியா?”
“அப்படியும் சொல்லலாம்” என்று இழுக்க… ராஜேந்திரன் மகளை புதிராகப் பார்த்தாள்.
“ஆக்ட்சுவலி இதை அண்ணன் மூலமா தான் உங்க கிட்டே சொல்லலாம்னு இருந்தேன். ஆனா இப்போ…” என்று இடையில் நிறுத்த… ராஜேந்திரனோ நீ சொல்லி முடி என்ற பாவனையை முகத்தில் தாங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“அண்ணி ஊருக்குப் போய் இருந்தேன்ல டாடி.. எனக்கு சத்யாவை பிடிச்சது.. ஐ மீன் இ லவ் ஹிம்”
“வாஆஆஆட்… கம் அகைன்” உண்மையிலேயே அதிர்ந்து போனார் ராஜேந்திரன்.
“எஸ் டாடி… இங்கே ஊருக்கு கிளம்புறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சத்யா கிட்டயும், மேகலா அத்தை கிட்டயும் இது பத்தி சொன்னேன். அப்போ தான் நாங்க உடனே இங்கே வர வேண்டியதா போச்சு… நான் லவ் சொன்ன டைம்ல இப்படி ஒரு கெட்ட விஷயம் நடந்து இருக்கு. அது கெட்ட சகுனமா எடுத்துக்கிட்டு எங்கே கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடுவாங்களோன்னு ரொம்ப பயந்துட்டேன்” என்று அவரின் முகம் பார்க்காமல் பேசிய அஞ்சலி அவருக்கு புதிதாகத் தெரிந்தாள்.
அண்ணனின் மேல் உயிரையே வைத்திருக்கும் அஞ்சலி அந்த நேரத்தில் தன்னுடைய திருமணத்தை எண்ணி கவலையில் இருந்தாளா? அதற்காகவா அத்தனை இறுக்கத்துடன் நடமாடினாள். மகளின் பேச்சை நம்ப மறுத்தது அவர் உள்ளம்.
“அவங்க என்ன பதில் சொன்னாங்க”
“அந்த சத்யா இடியட் என்னை ஊருக்கு கிளம்புன்னு சொல்லிட்டான்”முகம் கோபத்தில் சிவந்து போய் நின்ற மகளைப் பார்த்து அவருக்கு கொஞ்சம் சிரிப்பு வந்தது.
“அவர் செஞ்சது சரி தான் பேபி… இந்த கல்யாணம் எந்த விதத்துலயும் சரி வராது. நீயும் கண்டபடி யோசிச்சு குழப்பிக்காம உன்னோட செமினாருக்கு ரெடி செய்”
“ஏன் ஒத்துவராது டாடி…”
“நாளைக்கு உன்னோட செமினாரை நல்ல படியா முடிச்சுட்டு வா … நாம கொஞ்சம் ரிலாக்ஸா பேசுவோம். இப்போ நான் ஹாஸ்பிடல் போகணும்” என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட அஞ்சலி ஒன்றும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இதெல்லாம் அவள் எதிர்பார்த்தது தானே.
தன்னுடைய குடும்பத்தை சமாளிக்க அவளுக்குத் தெரியாதா?
அவள் சமாளிக்க வேண்டி இருப்பது இங்கிருப்பவர்களை அல்லவே. முதலில் சத்யன், பிறகு அந்த வில்லன் துரைசாமி.
இந்த அளவுக்கு யோசித்து எல்லாவற்றையும் செய்த அஞ்சலி ஒன்றை மறந்து போனாள்.
அழகான குடும்ப வாழ்க்கைக்கு காதல் நிறைந்த மனம் ஒத்த தம்பதிகள் வேண்டும். குடும்ப வாழ்கையின் அடிப்படையே அன்பு தானே…
துரைசாமியின் மீதிருக்கும் வெறுப்பை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படப் போகும் அவளது இல்வாழ்க்கை அவளை எங்கே கொண்டு போய் நிறுத்தக்கூடும்?
சத்யனின் வாழ்வும் இதில் அடங்கி இருக்கிறதே… இவள் எடுக்கும் முடிவு முழுக்க முழுக்க அவனது தந்தையை பழி வாங்குவதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட ஒன்றாக இருக்கும் பொழுது… அவனது மனநிலை என்னாகும்?
அவன் மனைவி அவனை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்குள் வந்தது அவனது தந்தையை பழி வாங்கத் தான் என்பது எந்த மகனுக்கும் மகிழ்ச்சியை கொடுத்து விடாதே..
துரைசாமியை பழி வாங்க அஞ்சலி களம் இறங்க… பழி வாங்கப் படப் போவது யார்?
கருத்துரையிடுக