அத்தியாயம் 7
எதற்காக அழுகிறாள் என்பது அவளுக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவளின் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்தது. ஏன் இந்த கண்ணீர்? முதல் நாள் தனக்கு தாலி கட்டியவன் ஏமாற்றுப் பேர்வழி என்று எண்ணியதாலா? இல்லையே…
அவளுக்குத் தான் அவனுடனான அந்த திருமணமும் சரி… அவனையும் சரி அந்த அளவிற்கு பிடித்தம் இல்லையே… ஆயினும் என்ன? முதல் நாள் இரவில் இருந்து அன்று காலை இந்த ஊருக்கு வரும் வரையிலும் கணவன் காட்டிய அன்பை நிஜம் என்று எண்ணி ஏமாந்து போனோமே என்று தான் அழுதாள்.
கட்டிய கணவனும் பொய்த்துப் போனதை தாங்க முடியாமல் அழுதாள். ஏமாற்றம் அவளுக்கு புதிதில்லை தான். ஆனால் ஏனோ இந்த முறை அவளால் தாங்க முடியாமல் போனது. அழுது கரைந்தவள் உணவை மறுத்து விட ரேவதி அறைக்கே வந்து அவளை அழைத்துப் பார்த்தாள்.
“கோவிலுக்கு போன போது அப்படியே பக்கத்தில் இருக்கும் ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போய் இருந்தேன் அம்மா… அங்கே கொஞ்சம் பலகாரம் சாப்பிட்டோம்… அதுதான் அவளுக்கு பசியில்லை போல… எனக்கும் கூட அப்படித் தான் இருக்கும்மா… நீங்க ரெண்டு பேருக்கும் பால் மட்டும் கொண்டு வாங்க” என்று சரளமாக சரடு விட்டவன் அவளது அருமைக் கணவன் பாண்டியனே தான்.
‘இப்படி புளுகுகிறானே’ என்று கோபத்துடன் நிமிர்ந்து கணவனைப் பார்க்க… அங்கே அவளறியாமல் அவனுக்கும், அவனது அன்னைக்கும் ஏதோ நாடகம் நடந்து கொண்டிருந்தது. இருவரின் கண்களும் ஒரு நொடி சந்திந்து மீண்டது. நொடிகளில் நடந்து முடிந்து விட்ட இந்த நாடகத்தின் பொருள் என்ன என்பது அவளுக்கு புரியவில்லை.
“சரி தம்பி” என்று சொன்னவர் அதற்கு மேல் எதுவும் பேசாமல் பாலை கொண்டு வந்து தர… அதை கைகளில் வாங்கிக் கொண்டவன்… கதவை அழுந்தப் பூட்டி விட்டு அவளை நெருங்க… ராசாத்தியின் இதயம் தாறுமாறாக துடிக்கத் தொடங்கியது.
“பாலைக் குடி” அதட்டியவன் அவள் கரங்களில் டம்ளரை திணிக்க… மறுத்து பேசவும் அஞ்சியவளாக அதை வாங்கி ஒரே மூச்சில் குடித்து விட்டு கட்டிலில் ஏறி போர்வையை தலை முதல் கால் வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள். சற்று நேரம் அந்த அறையில் நிலவிய அமைதி அவளுக்கு அச்சத்தையே கொடுத்தது.
‘கிட்டே வருவானோ’ அஞ்சி நடுங்கியது பெண்ணுள்ளம்.
“முட்டாள்” என்று பாண்டியன் திட்டியதும் அவள் காதுகளில் தெளிவாக விழுந்தாலும் போர்வையை விலக்கி விட்டு எழுந்து அவனிடம் விளக்கம் கேட்கவோ, சண்டை போடவோ அவள் தயாராக இல்லை. அவளை போர்த்தி இருந்த போர்வையை நொடிப்பொழுதில் பறித்து தூர எறிந்தான் பாண்டியன்.
“இப்படி போர்த்திக்கிட்டா மட்டும் நான் விலகிடுவேன்னு உனக்கு யார் சொன்னது?” என்றவன் மின்னலாய் நெருங்க… பயத்தில் ராசாத்தியின் இதயம் தொண்டையில் வந்து துடிக்கத் தொடங்கியது.
அவளது கைகளைப் பற்றி எழுந்து அமர வைத்தவனின் முகத்தை அருகில் பார்க்கவும் அஞ்சியவளாய் கண்களை இறுக மூடிக் கொண்டாள் ராசாத்தி. சற்று நேரம் வரையிலும் அந்த நிலை அப்படியே தொடர… மெல்ல கண்களை திறந்து பார்த்தாள். புரியாத பார்வையுடன் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பாண்டியன்.
‘அந்தப் பார்வையின் அர்த்தம் என்ன?’
“காலையிலேயே கேட்கணும்னு நினைச்சேன்… ஜாக்கெட் அளவு கொடுத்து தைத்தது தானே… அப்புறமும் ஏன் ஒருபக்கம் லூசாக இருக்கிற மாதிரி இருக்கு” என்று அவளின் வலது பக்க தோளில் இருந்து கீழே விழத் தயாராக இருந்த ஜாக்கெட்டை காட்டி அவன் கேட்க… ‘இதை எல்லாமா கவனிப்பான்!’ என்று தோன்றியது அவளுக்கு. ஆனால் பதில் சொல்லாமல் அவனிடம் இருந்து தப்ப முடியாது என்பது புரிந்து விட… அவனை பாராமலே வேறு திசையில் பார்வையை பதித்து பேசத் தொடங்கினாள்.
“கொக்கி மாட்டுற இடத்திலயும் புண்ணு இருக்கு… அதான்..அ..அங்கே கொக்கி போடாமல் இருக்கேன். அதனால கொஞ்சம் லூசா இருக்குது” என்று தயங்கி தயங்கி சொன்னவளின் முகம் ரத்த சிவப்பிற்கு மாற…
“ஓஹோ… அந்த இடம் தான் நீங்க எனக்கு காட்ட மாட்டேன்னு சொன்ன மர்ம தேசமா?” என்றவனின் குரலில் இப்பொழுது உல்லாசம் நிரம்பி வழிந்தது. அவள் அப்பொழுதும் மௌனத்தையே துணைக்கு அழைக்க பெருமூச்சுடன் எழுந்தான்.
அவனது சட்டைப்பையில் இருந்து முதல் நாள் அவளுக்கு போட்டு விட்ட மருந்தை எடுத்தவன் முன் தினத்தைப் போலவே அவளது திமிறலை கண்டு கொள்ளாமல் காலில் இருந்த காயத்துக்கு மருந்திட்டவன் காயத்தின் தன்மையை நன்கு ஆராய்ந்தான்.
“பரவாயில்லை… காயம் சீக்கிரமே ஆறிடும் போல… சூடு வச்சதும் உடனே எதுவும் மருந்து தடவினாயோ?” என்றான் யோசனையுடன்…
“ம்ம்ம்.. இட்லிக்கு அரைச்சு வச்சிருந்த மாவைத் தடவினேன்”வாயிற்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.
“ஓ… நல்லவேளை கொப்புளம் எதுவும் ஆகவில்லை… இந்தா… மிச்சம் இருக்கிற மருந்தை மற்ற இடத்தில் நீயே தடவிக்கறியா? இல்லை நானே தடவி விடட்டுமா?” என்றவனின் குரலில் இருந்த சரசம் அவளை என்னவோ செய்தது. தலையை நிமிர்ந்து அவனைப் பார்க்கவும் அஞ்சியவளாக மருந்தை வாங்கிக் கொண்டு ஓட்டமாக பாத்ரூமினுள் நுழைந்து மருந்தை தடவிக்கொண்டு வெளியே வந்தாள்.
படுக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டு கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியவாறு அவளையே பார்வையால் தின்று கொண்டிருந்தவனின் அருகில் செல்லும் தைரியம் மட்டும் அவளுக்கு துளி அளவு கூட இல்லை. அடி மேல் அடி எடுத்து வைத்தாலும் கூட… எவ்வளவு நேரம் தான் அவள் தள்ளியே இருக்க முடியும்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்தவன் போல வேக மூச்சோடு எழுந்தவன் அவளை கைகளைப் பற்றி கட்டிலுக்கு இழுத்து வந்து அமர வைத்தான்.
“நல்லா கேட்டுக்கோ ராசாத்தி… நேற்று உன்னை விட்டு நான் விலகி இருந்ததற்கு காரணம்… நான் மிருகம் இல்ல மனுஷன் என்பதால் தான்… உன் உடலில் காயம் இருக்கும் பொழுது அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் உன்னை நெருங்க நான் விரும்பவில்லை… அதனால தான் அந்த காயம் ஆற இரண்டு நாள் அவகாசம் கொடுத்தேன்… அதனால அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை… இன்னிக்கும் நீ நிம்மதியா தூங்கலாம்.” என்று சொல்ல அவளையும் அறியாமல் ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள்.
“என்னிடம் இருந்து உன்னோட கற்பை காப்பாத்திக்கிறதில் இத்தனை சந்தோசமா உனக்கு?”என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டவன் அடுத்த வெடிகுண்டை போட்டான்.
“ ஆனா ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோ.. உன்னோட இந்த சந்தோசத்துக்கு ஆயுசு கம்மி… நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நான் ஒரு மனுஷன்… உணர்வுகள் நிறைஞ்ச மனுஷன்… உனக்காக பாவம் பார்த்து வாழ்நாள் முழுக்க பிரம்மச்சரிய விரதம் எல்லாம் என்னால் இருக்க முடியாது. உன்னுடைய உடலையும், மனசையும் கருத்தில் வச்சுக்கிட்டு இன்னிக்கு ஒருநாள் நான் விலகிப் போறேன்… ஆனா நாளை நான் உன்னை தொட்டு ஆளப் போவது உறுதி” என்று அழுத்தமாக சொன்னவன் அவளை அருகில் இழுத்து நெற்றியில் முத்தமிட்டு, அணைத்தவாறே உறங்கிப் போக… விடிய விடிய உறக்கத்தை தொலைத்து விட்டு நின்றவள் அவள் தான்.
விடிந்ததும் எழுந்து ஓசைப்படாமல் குளித்தவள் நேராக கீழே இறங்கி சமையல் அறைக்கு செல்ல… வீட்டினருக்காக காபி கலந்து கொண்டிருந்த ரேவதி அவளை ஆச்சரியமாக பார்த்தார்.
“என்ன ராசாத்தி இப்பவே எழுந்துட்ட… இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாம் தானே…” என்றார் கரிசனமாக.
“எங்க மாமா வீட்டில் எப்பவும் நாலு மணிக்கே எழுந்துடுவேன் அக்… அத்தை… அவர் வந்து உங்க பிள்ளை தான் இனிமே ஆறு மணிக்கு மேலே எழுந்தா போதும்னு சொல்லிட்டார்.” ஏதோ தவறு செய்தவள் போல சொல்ல… வெள்ளையாக சிரித்தார் ரேவதி.
“இங்கே நீ நாலு மணிக்கு எழுந்து என்ன செய்யப் போற ராசாத்தி… விருந்தாளிகள் கூட நேத்தே கிளம்பிட்டாங்க.. இந்த வீட்டில் நம்ம மூணு பேர் மட்டும் தான். நானே இப்போ தான் எழுந்தேன்… காபியை குடிச்சுட்டு இரு… நான் போய் கோலம் போட்டுட்டு வர்றேன்” என்று சொல்ல.. தடுத்து நிறுத்தினாள் ராசாத்தி.
“நான் கோலம் போடுறேன் அத்தை…” என்று சொல்லி கிளம்ப முயன்றவளை கட்டாயப்படுத்தி காபியை குடிக்க வைத்த பிறகே அனுப்பி வைக்க… பம்பரமாய் சுழன்று வேலையை பார்த்தவள் நொடிப்பொழுதில் திரும்பி விட ஆச்சரியமாக அவளைப் பார்த்தார் ரேவதி.
“அதுக்குள்ளே கோலம் போட்டாச்சா?” என்று கேட்டபடி வாசலில் பார்வையை பதிக்க… வியப்பில் விரிந்தது அவர் கண்கள்…
“இரண்டே நிமிஷத்தில் அழகா ரங்கோலி போட்டு இருக்கே… சூப்பரா இருக்கு… இந்தா காபி இதை உன் புருஷனுக்கு கொடு” என்று சொல்லி கையில் திணிக்க.. அதுவரை இருந்த பாவனை மாறி அவளது முகம் பிடித்தமின்மையை பிரதிபலித்ததை கண்டு யோசனையானார் ரேவதி.
வேறுவழியின்றி காபியை வாங்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்தவள், அங்கே பாண்டியன் இல்லாததைக் கண்டு ஆசுவாசத்துடன் காபியை டேபிளில் வைத்து விட்டு வேகமாக வெளியேற… கீழே இருந்தவாறே அவளை தடுத்து நிறுத்தினார் ரேவதி.
“என்னடா அதுக்குள்ளே கீழே வந்துட்ட… பாண்டியன் எங்கே?”
“அவர் குளிச்சுட்டு இருக்கார் போல அத்தை… அதான் உங்களுக்கு உதவி செய்யலாம்னு…”
“எனக்கென்ன உதவி வேண்டி இருக்கு? இந்த பேப்பரை தம்பி கையில் கொடு… தம்பிக்கு எப்பவும் காபி குடிக்கும்போது பேப்பர் இருக்கணும்… கொடுத்துட்டு உடனே வர வேண்டாம்… இதுல மூணாவது பக்கத்தில் இருக்கிற செய்தியை அவனை கவனிச்சு பார்க்க சொல்லு… மறக்காம சொல்லிடு ராசாத்தி” என்று அவள் உடனடியாக கிளம்ப முடியாதபடி அவளுக்கு அவர் வேலையைக் கொடுக்க… வேறுவழியின்றி மீண்டும் உள்ளே போனவள் பாண்டியனின் இறுகிய அணைப்புக்குள் மாட்டிக் கொண்டாள்.
அப்பொழுது தான் குளித்து விட்டு வந்திருப்பான் போலும்… அவன் மீது இருந்து வந்த சோப்பின் இதமான நறுமணம் அவளுள் ஏதேதோ எண்ணங்களை கிளப்பி விட்டது.
“என்னடி யோசனை” என்று கேட்டபடி அவளை இன்னும் கொஞ்சம் இறுக்கியவன் முத்தமிட ஆவலுடன் அவளது முகம் நோக்கி குனிய…. தடுக்கவும் முடியாமல்… ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தடுமாறி நின்றாள் ராசாத்தி. அவளது கலக்கத்தை எல்லாம் அவன் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
கதவின் மீது சாய்ந்து இருந்த அவளின் முகத்தில் விரலால் கோடு போட்டவன் அவளது இதழில் நீண்ட கவிதையை எழுதினான். நிதானமாக அவளை ரசித்து, ருசித்தவனைக் கண்டு அவளுக்கு மேலும் பயம் தான் உண்டானது. அவன் தொடும் பொழுதெல்லாம் அவளுக்குள் புதிதாக விரியும் அந்த மாய உலகம் அவளை மிரட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.
‘கணவன் தானே என்று ஒரு மனமும்… இவனைப் பற்றிய உண்மைகளை எல்லாம் இன்னும் நீ முழுதாக அறியவில்லை’ என்று மறுமனமும் அவளிடம் சொல்ல.. பெரும் போராட்டத்திற்கு உள்ளானாள் ராசாத்தி.
அவன் கைகளில் இருந்த வேகம் கண்டு மிரண்டவள் மெல்ல நழுவப் பார்க்க… அதற்கு அவன் விட்டால் தானே… அவளை தன்னுடைய மடியில் அமர வைத்துக் கொண்டே காபியை பருகி முடித்தவன் அவள் பார்வை அலைபாய்ந்து கொண்டிருப்பதைக் காணவும் சுவாரசியம் அதிகமாக அவளை சீண்டத் தொடங்கினான்.
“என்னடி… என்னை பார்க்கக் கூட மாட்டேங்கிறே… கொஞ்சமாவது இந்தப் பக்கம் பார்வையை திருப்புறது?”
‘என்னவென்று சொல்வது இவனிடம்.. அடேய் மடையா முதலில் சட்டையை போடுடா’ என்றா?
“உங்க சட்டை எல்லாம் இந்த பீரோவில் தான் இருக்கா?”என்று ஒருவழியாக சுற்றி வளைத்து அவனிடம் விஷயத்தை சொல்லி விட.. மறுநிமிடம் அடக்க மாட்டாமல் சிரித்தான் பாண்டியன்.
“ஓ.. அதுதான் மேடம் இந்தப் பக்கமே திரும்ப மாட்டேங்கறீங்களா?.. சரி நீயே போய் உனக்கு பிடிச்ச சட்டையை எடுத்துட்டு வா..”என்று சொல்லி அவளது கன்னத்தில் அழுத்தமாக முத்தமொன்றை பதித்து அவளை விடுவித்தான்.
‘சாக்கு கிடைத்தால் போதும். நொடிக்கு ஒரு தரம் முத்தம் கொடுக்கிறான்’ மின்னலென அவனிடம் இருந்து விலகி பீரோவில் இருந்து அவனுக்கு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றிய சட்டையை எடுத்துக் கொண்டு வந்து டேபிளில் வைத்தவள் இன்னமும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.
“அத்தை… இந்த பேப்பரில் மூணாம் பக்கம் ஏதோ முக்கியமான விஷயம் இருக்காம்… உங்களைப் பார்க்க சொன்னாங்க ”என்று சொல்லி விட்டு வெளியே நகர முனைய.. அவளை தடுத்து நிறுத்தினான்.
“உடனே கீழே போக வேண்டாம்.. காபியை குடிச்ச டம்ளரை வாங்கிட்டுப் போ” என்று சொன்னவன் பேச்சோடு பேச்சாக பேப்பரில் மூன்றாவது பக்கத்தைப் பார்க்க.. அதில் அவனுக்குத் தேவைப்படும் படியாக எந்த விஷயமும் இல்லை என்பதால் மனைவியின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவாறே கேட்டான்.
“இந்த பேப்பரை அம்மா உன்கிட்டே எப்போ கொடுத்தாங்க?”
“காபியை எடுத்துக்கிட்டு இதுக்கு முன்னாடியே ஒருமுறை வந்துட்டு உடனே கீழே போனேன் இல்ல.. அப்போ” என்று சொல்லவும் அவனுக்கு அன்னையின் செயலுக்கான அர்த்தம் புரிந்து விட உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். அதே நேரம் ராசாத்தியிடமும் சொல்லி விட்டான்.
“இதோ பார்… ராசாத்தி… நம்ம இரண்டு பேருக்கும் முதலிரவு நடக்கலை அப்படிங்கிற விஷயம் இன்னும் யாருக்கும் தெரியாது இல்லையா? அம்மா முன்னாடி ரொம்பவும் விலகி இருக்காதே.. அது அவங்களுக்கு தேவை இல்லாத சந்தேகத்தையும், மன வருத்தத்தையும் கொடுக்கும்… இன்னிக்கு ஒருநாள் … அதுவும் பகலில் மட்டும் சமாளி போதும்… இன்னிக்கு ராத்திரிக்குப் பிறகு…” என்று எதையோ சொல்ல வந்தவன் வேண்டுமென்றே பேச்சை நிறுத்தி விட்டு அவளைப் பார்த்து கண் சிமிட்ட… அறையை விட்டு நொடிப்பொழுதில் ஓடி விட்டாள் ராசாத்தி.
‘நடந்த விஷயத்தை எல்லாம் எந்த அளவிற்கு இவளிடம் சொல்லலாம்… சொன்னாலும் புரிந்து கொள்ளக்கூடிய பக்குவம் இவளுக்கு இருக்கிறதா? ஒருவேளை முறுக்கிக் கொண்டு மறுபடியும் அவளது மாமன் வீட்டிற்கு சென்று விட்டால் என்ன செய்வது? அதே நேரம் எதையும் சொல்லாமல் அப்படியே இருந்தாலும் ராசாத்தி அப்படியே விட்டு விடுவாள் என்றும் சொல்ல முடியாது. கண்டிப்பாக அவள் கேள்வி கேட்கத் தான் செய்வாள். என்ன செய்வது?’ என்று தீவிரமாக சிந்தித்தான் பாண்டியன்
கருத்துரையிடுக