சதிராடும் திமிரே 23

 



அத்தியாயம் 23

சத்யன் குளித்து முடித்து விட்டு வெளியே வருகையில் அறைக்கு வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியை நெருங்கியவன் அவளது தோள் வளைவில் முகம் பதித்தான்.

“என்ன மேடம்? இயற்கையை ரசிக்கறீங்களா?”

“ம்ஹும்... என்னோட புருசன் வளர்ந்த இடத்தை ரசிக்கிறேன்”

“ஹ்ம்ம்.. பார்றா... என் பொண்டாட்டி லவ்வுல பின்னி பெடல் எடுக்கிறா?” அவன் கைகள் அவள் இடையை வருட.. கூசி சிலிர்த்து அவன் கைகளில் பாந்தமாய் அடங்கினாள் அஞ்சலி.

“நான் போய் குளிச்சிட்டு வர்றேன்... என்னை வெளியே கூட்டிட்டு போங்க... இன்னிக்கு முழுக்க என் கூடவே இருக்கணும்.. நாளையில் இருந்து உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்... இன்னிக்கு மட்டும் ப்ளீஸ்!” கண்கள் சுருக்கி கேட்ட மனைவியை மறுக்கத் தோன்றவில்லை அவனுக்கு.

“அதென்ன இன்னிக்கு மட்டும்...”

“உங்களுக்கு வேலை இருக்குமே... வேலை நேரத்தில் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன். இந்த மாதிரி எப்பயாவது எனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கினா போதும்.”

“அஞ்சலி... நீ இவ்வளவு நல்ல பொண்ணா”அவளையே ஆழ்ந்து பார்த்தான்.

“நான் நல்ல பொண்ணானு எனக்குத் தெரியலை.. ஆனா நல்ல பொண்டாட்டியா இருக்கணும்னு ஆசைப்படுறேன்”என்றவள் அவனிடம் இருந்து விலகி குளித்து விட்டு வெளியே வந்தாள்.

அவள் வரும் பொழுது சத்யன் அங்கே இல்லை. சுடிதாரை அணிந்து கொண்டு தயாராகி கீழே சென்றாள் அஞ்சலி.

தாயும் மகனும் டைனிங் டேபிளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

“நைட் எங்கே போனாராம் அம்மா?”

“தெரியலை தம்பி.. எதுவும் சொல்ல மாட்டேங்கிறார்... கேட்டா கடிச்சு குதருறார்”

“இப்போ எல்லாம் அவரோட நடவடிக்கையே வித்தியாசமா இருக்கும்மா.. எனக்கு என்னவோ சரியா படலை”

“உங்க அப்பா எப்பவும் இப்படித் தானே சத்யா... எனக்கு பழகிடுச்சு... விட்டுத் தள்ளு... ஆமா அஞ்சலி எதுவும் வருத்தப்பட்டாளா?”

“அதெல்லாம் இல்லை மா.. அவ என்னை தான் கோபப்பட வேண்டாம்னு சமாதானம் செஞ்சா”

“நல்ல பொண்ணுடா...”

“நான் கூட அவ இப்படி பொறுத்துப் போவான்னு நினைக்கவே இல்லைமா... அவ கிட்டயும் நிறைய மாற்றம் தெரியுது”

“அந்தளவுக்கு உன்னை விரும்புறாடா ... அவளை தங்கம் மாதிரி பார்த்துக்கணும். புரிஞ்சுதா”

“போதும்... போதும்... அவ சரியான வாலு... ஏதோ கல்யாணம் ஆகி இருக்கிறதால கொஞ்சம் அடக்கி வாசிக்கிறா... எப்பவும் இதே மாதிரி இருக்க மாட்டா... அதுவும் அப்பா கிட்டே அவ அடங்கி போக வாய்ப்பே இல்லை”

“அப்படி எல்லாம் சொல்லாதடா... நீ வேணும்னா பாரேன்... எப்படி அவளால உங்க அக்காவோட ஆசையும், என்னோட லட்சியமும் நிறைவேறுச்சோ அதே மாதிரி நம்ம வீட்டுலயும் பெரிய மாற்றம் வரத் தான் போகுது”

“என்ன அத்தை யாரைப் பத்தி பேசிட்டு இருக்கீங்க?” ஒன்றுமே அறியாதவள் போல கேட்டாள் அஞ்சலி.

“உன்னைப் பத்தி தான் தங்கம்... வா உட்கார்ந்து சாப்பிடு வா”

“நீங்களும் உட்காருங்க அத்தை. மூணு பேரும் சாப்பிடலாம்”

“இல்லடா.. நான் எப்பவும் உங்க மாமா சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடுவேன். நீயும்,சத்யாவும் சாப்பிடுங்க...”

“அத்தை சாப்பிட்டு முடிச்சதும் நாங்க இரண்டு பேரும் கொஞ்சம் வெளியே போய்ட்டு வர்றோம்..மதியம் சாப்பிட வந்தா ஓகே தானே?”

“என்ன அவசரம் தங்கம்.. பக்கத்து டவுனுல புது படம் போட்டு இருக்கும். அங்கே போய் படம் எல்லாம் பார்த்துட்டு வெளியே எல்லாம் போய்ட்டு நைட்டு வாங்கடா போதும்.. ஆனா சீக்கிரம் வந்துடுங்க.. சரி தானா”

“என் செல்ல அத்தை...” சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே எழுந்து மேகலாவின் கன்னத்தில் முத்தமிட, அவளையே குறுகுறுவென்று பார்த்து வைத்த கணவனின் பார்வையில் முகம் சிவந்து மீண்டும் அமர்ந்து சாப்பிட துவங்கியவள் மேகலா பார்க்காத  நேரம் சத்யனைப் பார்த்து கண் சிமிட்ட, சாப்பிட்டுக் கொண்டிருந்த சத்யனுக்கு புரை ஏறியது.

“பார்த்து... மெதுவா” மேகலா அவனது தலையை தட்ட, நல்ல பிள்ளை போல தண்ணீர் டம்ளரை எடுத்து அவனிடம் நீட்டினாள் அஞ்சலி.

“உன்னை”மேகலாவிற்கு கேட்காத வண்ணம் அஞ்சலியை செல்லமாய் மிரட்டினான்.

“மாமா சாப்பிட்டாங்களா அத்தை”

“கால் எல்லாம் காயமா இருக்கு அஞ்சலி... இப்போ தான்  டாக்டர் வந்து பார்த்துட்டு மருந்து போட்டுட்டு போனார்.. நீங்க கிளம்புங்க... நான் அவருக்கு ரூமுக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுத்துக்கிறேன்”

“நானும் வர்றேன் அத்தை...”

“வேண்டாம் அஞ்சலி... உங்க மாமா ரொம்ப கோபமா இருக்கார். இப்போ நீ அவரை பார்க்க வேண்டாம்.”

“நான் எந்த தப்பும் பண்ணலையே அத்தை”

“நீ தப்பு பண்ணலை தான் அஞ்சலி. ஆனா அவருக்கு கோபம் வந்துட்டா கண் மண் தெரியாம எதையாவது பேசிடுவார். அப்புறம் நமக்கு தேவை இல்லாத மன வருத்தம் தான் மிஞ்சும்”

“சரி அத்தை. மாமா கோபம் குறைஞ்சதும் சொல்லுங்க. நான் போய் அவரைப் பார்க்கிறேன். அவருக்கு உடம்பு சரி இல்லாதப்ப நான் பார்க்காம இருந்தா நல்லா இருக்காது.”

“அம்மா வேலு அண்ணா வருவார்.. அவர் கிட்டே தோப்பு வீட்டை கொஞ்சம் சரி செய்ய சொல்லி இருக்கேன். பணம் கேட்டு வருவார்... ஒரு ஐம்பதாயிரம் கொடுங்க..”

“சரி தம்பி...”

“நீங்க சாப்பிட்ட பிறகு அவருக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுங்க... அவருக்கு இருக்கிற கோபத்துல உங்களை சாப்பிட விடாம செஞ்சாலும் செய்வார்” என்றான் சத்யன் தந்தையைப் பற்றி அறிந்தவனாய்.

“டேய்! அப்பா ஒண்ணும் அந்த அளவுக்கு மோசமானவரில்லை... சும்மா போடா” கணவரை எங்கேயும் விட்டுக் கொடுக்காது பேசிய மேகலாவை கண்டு உள்ளுக்குள் அஞ்சலி சிரித்துக் கொண்டாள்.

“அத்தை ரொம்ப நல்லவங்க... இவங்களோட அருமை மாமாவுக்கு புரிஞ்சாலும் அவங்களை காயப்படுத்திட்டே தான் இருக்கார். இனி நான் வந்துட்டேன்ல... மாமாவை எப்படி மாத்துறேன் பாருங்க...”

“நீ சும்மா இரு அஞ்சலி...”சத்யன் அவளை அதட்ட மேகலாவும் அதையே தான் சொன்னார்.

“அதெல்லாம் வேண்டாம் அஞ்சலி.. உங்க மாமா பலாப்பழம் மாதிரி... உங்க எல்லார் கண்ணுக்கும் அவரோட முள்ளு தான் தெரியும். எனக்குத்தான் அவருக்கு உள்ளே இருக்கிற இனிமையான மனசு தெரியும்” என்று சொல்லி விட்டு கல்மிஷம் இல்லாத புன்னகை சிந்திய மேகலாவை கொஞ்சம் கவலையுடன் பார்த்தாள் அஞ்சலி.

‘உண்மை தெரிய வரும் பொழுது இவங்க எப்படி தாங்கப் போறாங்களோ... ஆனா அதுக்காக அந்தாளை அப்படியே விடவும் முடியாதே... முடிஞ்ச வரை கொஞ்சம் கொஞ்சமா இவங்களை மனசளவுல இவங்களை தயார் படுத்தி வைக்கணும்’

“அஞ்சலி நீ கொஞ்சம் வெயிட் பண்ணு... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... முடிச்சிட்டு ஒரு அரைமணி நேரத்துல வந்துடுவேன்.”

“ஓகே” என்று அவனுக்கு கையசைத்து வழி அனுப்பி விட்டு உணவை உண்பதைத் தொடர்ந்தாள் அஞ்சலி.

அறைக்குள் இருந்து கால்களை தாங்கி தாங்கி வெளியே வந்தவர், சுடிதார் அமர்ந்து இருந்த அஞ்சலியை கண்கள் சுருக்கி பார்த்தார்.

“இந்தாம்மா... இதென்ன டிரஸ்... இதெல்லாம் இங்கே போடக் கூடாது.. போய் ஒழுங்கா புடவை கட்டிட்டு வா... ஏன்டி அறிவு கெட்டவளே இதெல்லாம் நீ சொல்லிக் கொடுக்க மாட்டியா?”மேகலாவிடம் பாய்ந்தார்.

“சின்ன பிள்ளை தானேங்க... அதுவும் பட்டணத்துல வளர்ந்த பிள்ளை... அதான்...”

“அப்படி சொகுசா இருக்கணும்னா இங்கே வந்து இருக்கக்கூடாது. என் வீட்டுல இருக்கணும்னா நான் சொல்ற மாதிரி தான் இருக்கணும். போய் புடவையை மாத்திட்டு வர சொல்லு... ஆமா எங்கே போனான் உன் சீமந்திர புத்திரன்?”

“ஏதோ வேலை இருக்குனு சொல்லிட்டு இப்போ தான் வெளியே போனாங்க.. உடனே வந்துடுவான்..”

“உடனே வந்துடுவானா? சாருக்கு என்ன அவசரம்? இன்னிக்கு தோப்புக்கு பூச்சி மருந்து அடிக்க ஆள் வருவாங்க... கூட இருந்து பார்க்கணும். வரப் போற திருவிழாவுக்கு சாப்பாடு செலவு எல்லாம் நம்மளோடதுன்னு ஏற்கனவே சொல்லிட்டேன். அது சம்பந்தப்பட்ட ஆட்கள் எல்லாம் வருவாங்க.. அவங்க கிட்டே பேசணும். இன்னும்...”

“ஏங்க... அவனுக்கு நேத்து தாங்க கல்யாணம் ஆகி இருக்கு.. பிள்ளைங்க இரண்டு பேரும் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரட்டும்”

“இதென்ன பழக்கம்... கல்யாணம் ஆனதும் பொண்டாட்டி முந்தானையை பிடிச்சிட்டு ஊர் சுத்துறது? அதெல்லாம் எங்கேயும் போகக் கூடாது.புரிஞ்சுதா?” என்று கேட்க... மேகலா அதிர்ந்து போனவராய் அஞ்சலியைப் பார்க்க... அவளோ குனிந்த தலை நிமிரவே இல்லை. ஒன்றுமே பேசாமல் அறைக்குள் சென்று விட்டாள்.

‘அந்த பயம் இருக்கணும்’ துரைசாமியின் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம்.

‘என்னோட வீட்டுல... என் கண்ணு முன்னாடி நீ நிம்மதியா வாழ்ந்துடுவியா? அதையும் தான் பார்க்கிறேன்’

“நீங்க செய்றது கொஞ்சம் கூட சரியில்லைங்க...”

“எது சரி.. எது தப்புன்னு எனக்கு யாரும் அறிவுரை சொல்ல வேண்டாம்”

“உங்க பேச்சுக்கு அஞ்சலி வேணா அமைதியா போவா... சத்யா அமைதியா போக மாட்டான். அதை நியாபகம் வச்சுக்கோங்க”

“எல்லாம் எனக்குத் தெரியும். உன் வேலையைப் பார்”

சில நிமிடங்களில் சத்யா வீடு திரும்பி விட... அவன் மனம் அவனையும் அறியாமல் மனைவியைத் தேடியது.

“அம்மா... நீங்க சாப்பிட்டீங்களா?”

“...”

“அப்பாவுக்கு சாப்பிட கொடுத்தாச்சா?”

“கொடுத்துட்டேன்...”

“ம்ச்! நீங்களும் சாப்பிட்டு இருக்கலாம்ல.. சரி நீங்க சாப்பிடுங்க.. நானும் அஞ்சலியும் போய்ட்டு வர்றோம்... அஞ்சலி” என்று உரக்க கத்தி அழைத்தான் சத்யன்.

“தம்பி...”

“என்னம்மா...” தாயின் முக பாவனையில் துணுக்குற்றான்.

“அப்பா... வந்து அஞ்சலி கிட்டே கோபமா பேசி வெளியே போகக் கூடாதுன்னு சொல்லிட்டார்டா...”

“என்னவாம் அவருக்கு? ஏன்மா இந்த மாதிரி தேவை இல்லாத வேலை எல்லாம் பார்க்கிறார்?”

“உனக்கு என்னவோ நிறைய வேலை இருக்காமே.. அதெல்லாம்  ரொம்ப முக்கியமான வேலை இன்னிக்கே முடிச்சாகணும்ன்னு சொல்லி...” அதற்கு மேல் சொல்ல முடியாமல் நிறுத்தி விட்டார் மேகலா.

“எனக்குத் தெரியாதா அதெல்லாம்.. அதை எல்லாம் முடிச்சு வைக்கத் தானே இப்போ வெளியே போய்ட்டு வந்தேன்... நான் என்ன சின்ன குழந்தையா மா?”

“கோபப்படாதே சத்யா... உனக்கு தான் அப்பா குணம் தெரியுமே...கொஞ்சம் பொறுத்துப்போ தம்பி”

“அவர் இப்படி இருக்கிறதுக்கு நீங்களும் தான் ஒரு காரணம்.. உங்களால தான் அவர் இப்படி எல்லாரையும் காயப்படுத்தி வேடிக்கை பார்க்கிறார்”

“சரி சரி... எல்லா தப்பும் என் மேல தான்... நீ முதல்ல அஞ்சலியை சமாதானம் செஞ்சு வெளியே அழைச்சிட்டு போ தம்பி... அப்புறம் பொறுமையா வந்து என்கிட்டே சண்டை போட்டுக்கலாம்... பாவம் பிள்ளை முகமே வாடிப் போச்சு”

“அம்மா... இந்த கல்யாணம் சரியா வருமாம்மா? கல்யாணம் முடிஞ்ச முதல் நாளே இவ்வளவு பிரச்சினையா இருக்கே?”

“சத்யா... என்னடா இப்படி வருத்தமா பேசுற... அப்பாவுக்கு உடம்பு சரியில்லை இல்லையா... வெளிவேலை எதுவும் நின்னுடக் கூடாதேன்னு அக்கறை அவ்வளவு தான். ஆயிரம் தான் இருந்தாலும் நீ அவரோட பிள்ளை... உன்னோட வாழ்க்கையை கெட்டுப் போகணும்னு அப்பா நினைக்கவே மாட்டார். இதெல்லாம் நம்ம எதிர்பார்த்தது தானே சத்யா...”

“எதிர்பார்த்தது தான் அம்மா... ஆனா அவர் அஞ்சலியை திட்டும் பொழுது எனக்கு கஷ்டமா இருக்கு. அதுவும் அவ அமைதியா போகும் பொழுது ரொம்ப  கஷ்டமா இருக்கும்மா... நான் நல்ல புருசனா நடந்துப்பேனா அம்மா...”

“என்னடா சத்யா ... சின்ன பிள்ளை மாதிரி கல்யாணம் ஆன மறுநாளே இப்படி பேசுற... ஏதோ கோபம்... எல்லாமே சரியாகிடும் டா... நீ இப்போ போய் அஞ்சலியை சமாதானம் செஞ்சு வெளியே கூட்டிட்டு போ” என்று சொல்ல... அறையை நோக்கி அவன் வர... அவ்வளவு நேரம் அறை வாசலில் நின்று அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அஞ்சலி நல்ல பிள்ளை போல ஜன்னலின் அருகே சாய்ந்து நின்று கொண்டு முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள்.

“அஞ்சலி... கிளம்பு போகலாம்...முதல்ல நம்ம ஊர் அணைக்கு போகலாம்.. இந்த நேரம் போனா அருமையா இருக்கும்”

“வேண்டாம்ங்க... நான் வரல...”

“ம்ச்! வாம்மா போகலாம்... காலையில ரொம்ப ஆசையா கேட்டியே”

“இப்போ போகத் தோணலைங்க”

“அப்பா சொன்ன வேலை எல்லாம் முடிச்சிட்டு வரத் தான் நான் போய் இருந்தேன் அஞ்சலி. அது தெரியாம அப்பா பேசிட்டார்... அதெல்லாம் மனசுல வச்சுக்காத மா... வா போகலாம்”

“இல்லைங்க மாமா...”தயக்கத்துடன் இழுத்தாள்.

“அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டார் மா.. நான் பார்த்துக்கிறேன். வா போகலாம்.”

“வேண்டாம்ங்க... அப்புறமா மாமா வந்து உங்களை திட்டப் போறார்... என்னால எந்தப் பிரச்சினையும் வேண்டாம்”

“நான் தான் இவ்வளவு தூரம் சொல்றேனே... அப்புறம் என்ன அஞ்சலி... போய் சுடிதாரைப் எடுத்துக்கிட்டு கிளம்பு...... அருவிக்கரையில் குளிச்சிட்டு அதை மாத்திக்கலாம்”

“சுடிதார் வேண்டாம்ங்க...”

“அதை முடிவு பண்ண  வேண்டியது நீயும் நானும் தான்.. வா.. போகலாம்” என்று அவன் அவளை அழைத்துக் கொண்டு வெளியேற... அடுத்த நொடி துரைசாமியின் போன் அலறியது.

அழைப்பு வந்த அந்த எண்ணைக் கண்டதும் அவர் முகம் வெளிறிப் போனது.

Post a Comment

புதியது பழையவை