அத்தியாயம் 3
“வெளியே போடா” கர்ஜனையாக ஒலித்தது
அபிமன்யுவின் குரல் .
அடி வாங்கியவன் மட்டும் அல்லாது சுற்றி நின்று கொண்டு இருந்த மாணவர்களும்
ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டு நின்றனர்.
“என்ன சார்?என்ன ஆச்சு...?” என்று கேட்டபடி அடித்து பிடித்து மூச்சு வாங்க
அங்கே ஓடி வந்து நின்றார் டான்ஸ் அகாடமியின் மேனேஜர் உதயன்.
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்து இருந்தா எனக்கு கீழே வேலை பார்த்துக் கொண்டு
இப்படி ஒரு காரியத்தை செய்வாய்?????.... தொலைச்சு கட்டிடுவேன் ராஸ்கல்....
உதயா..... நன்றாக கேட்டுக் கொள் ..... இந்த ராஸ்கலுக்கு இனி இங்கே வேலை
கிடையாது....இவனை முதலில் இங்கிருந்து வெளியேற்று..... மறந்தும் இனி இந்த
அகாடமிக்குள் அவன் நுழைய கூடாது .இனி இவன் என் கண்ணில் படவே கூடாது.....மீறி
பட்டால் உன் வேலை உனக்கு இல்லை....புரிந்ததா?” என்று கூறிவிட்டு யாரையும்
திரும்பியும் பாராமல் விறுவிறுவென அங்கிருந்து சென்று விட்டான்.
“மிஸ்டர் கிரி....என்ன நடந்தது???? என்ன செய்து தொலைத்தீர்கள்?” அனாவசியமாக
திட்டு வாங்கி விட்டோமே என்ற எரிச்சலில் பேச தொடங்கினான் உதயன்.
“நா.... நான் ஒன்றும் செய்யவில்லை உதயன்....”
“நீ ஒன்றுமே செய்யாமல் தான் மாஸ்டர் இப்படி நடந்து கொள்கிறாரா .... அவர் எதை
செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும்....உண்மையை சொல் கிரி”
“அது .... அது... காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் உதயன்,அது எப்படி
அவர் என்னை கை நீட்டி அடிக்கலாம்.நான் இதை சும்மா விட மாட்டேன் உதயன். சங்கத்தில்
அவர் மேல் கம்ப்ளைன்ட் பண்ண போகிறேன்.யாருன்னு தெரியாம என் மேலேயே கை வைத்து
விட்டார் ”
“ஓ! சரி ஒரு நிமிடம் பொறு மாஸ்டரை கூப்பிடுகிறேன் அவரிடமே இதை நேரில் சொல்”
அபிமன்யுவிடம் இதே வசனத்தை நேரில் சொன்னால் என்ன ஆகும் என்பதை அறிந்து
இருந்ததால் உள்ளுர உதறல் எடுக்க அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் திருதிருவென
முழிக்க தொடங்கினான் கிரி.
“சொல்லுங்கள் கிரி....ஏன் மௌனமாகிட்டீங்க....என்ன நடந்துச்சுன்னு சொன்னா
என்னால் முடிந்த உதவியை செய்வேன் இல்லையா?”
“அது தான் வேலையை விட்டு போக சொல்லி விட்டாரே....அப்பறமும் எதற்கு உங்களுக்கு
நான் விளக்கம் சொல்ல வேண்டும்....நான் கிளம்புகிறேன்...என்னுடைய அக்கௌண்டை
செட்டில் பண்ணுங்க”
“உன்னை அடித்ததில் தப்பே இல்ல கிரி ....தப்பு செய்யாதவனா இருக்கிற பட்சத்தில்
உன்னுடைய தரப்பு விளக்கத்தை நீ சொல்லி இருக்கலாம் .... ஆனா நீ திமிரா பேசுவதிலேயே
தெரியுது...நீ ஏதோ வில்லங்கமா செய்து வைத்து இருக்கன்னு.....போ இங்கிருந்து
உன்னுடைய கணக்கை சரி பார்த்து உனக்கு செட்டில் பண்ணுகிறேன்.முதலில் இங்கிருந்து
கிளம்பு. மறுபடியும் உன்னை பார்த்தால் மாஸ்டர் என்னை தான் திட்டுவார்.கிளம்பு...கிளம்பு”
கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக அவரை அங்கிருந்து வெளியேற்றினான் உதயன்.
அத்தனை மாணவர்கள் முன்னிலையில் தன்னை அடித்ததை கிரியால் ஏற்றுக்கொள்ளவே
முடியவில்லை. ‘இப்படி எல்லார் முன்னிலையிலும் என்னை அவமானப் படுத்திய உன்னை பழி
வாங்காம விட மாட்டேன்’என்று உள்ளுக்குள் கறுவியவன் சினத்துடன் அங்கிருந்து
சென்றான்.
அன்றைய வேலைகளை முடித்துக் கொண்டு மேலும் ஒரு வாரம் தான் இங்கு இல்லாத
காரணத்தால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தன்னுடைய மேனேஜர் உதயாவிற்கு
தெரிவித்தவன் இந்த ஒரு வாரமும் என்னை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற
உத்தரவையும் பிறப்பித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு
சென்றான்.வீட்டை அடைந்ததும் நேராக தங்கையை தேடி அவளின் அறைக்குள் நுழைந்தான்.
“இங்கே நாம ரெண்டு பேரும் குத்துக்கல்லு மாதிரி இருக்கோம் வந்ததும் நேரா அவன்
தொங்கச்சியை தான் தேடிப் போறான் பாருங்க.....”கணவரிடம் மகன் தன்னை நாடி வரவில்லையே
என்ற வருத்தத்தில் பேசினார் பார்வதி.
“நாம இங்கே இருப்பதை கவனித்து இருக்க மாட்டான் பார்வதி.இப்படி எல்லாமா
யோசிப்பது.அவனை பற்றி உனக்கு தெரியாதா?” என்று கூறி மனைவியை அறுதல் படுத்த
முனைந்தார் ராஜேந்திரன்.
அங்கே தங்கையின் அறைக்குள் நுழைந்த அபிமன்யு படித்துக் கொண்டு இருந்த
தங்கையின் புத்தகத்தை அவள் கையில் இருந்து வாங்கி டேபிளில் வைத்து விட்டு அவளிடம்
வம்பு வளர்க்க தொடங்கினான்.
“ஏய் அஞ்சு....நாளைக்கு நீயும் என் கூட வருகிறாயா... இல்லையா? காலையில்
கேட்டதற்கு ஒன்றுமே சொல்லாமல் விட்டு விட்டாய்.....அந்த ஊரில் லோகேஷன் ரொம்ப அழகாக
இருக்கும் என்று டைரக்டர் என்னிடம் சொன்னார்.நீயும் வாயேன்....”
“கிராமத்தில் வந்து எப்படி அண்ணா ஒரு வாரம் இருப்பது....அங்கே சுத்தமாக
இருக்குமா?...எனக்கு அதெல்லாம் சரி பட்டு வராது...என்னை விட்டுடு ...ப்ளீஸ்!”
“என்னடா இப்படி சொல்ற...அங்கே வந்தா நீ நல்லா என்ஜாய் பண்ணுவன்னு நினைச்சேன்
சரி விடு.....” என்றான் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு.
“அந்த கிராமத்தில் நான் ரசிக்க அப்படி என்ன இருக்கிறது ????” ஆர்வம் இல்லாதவளை
போல கேட்டாள் அஞ்சலி.
“என்ன அஞ்சு இப்படி கேட்டுட்ட...அந்த கிராமம் பக்கத்துல நிறைய மலை
இருக்கு....... காடு மாதிரி பெரிய பெரிய மரங்கள் நிறைய இருக்கும் ....பார்த்தா
உனக்கு பிடிச்சுடும்.....”
“ஐயோ அண்ணா...இதில நான் ரசிப்பது போல எதுவும் இல்லையே....”
“அது தான் சொன்னேனே அஞ்சு...மரம் நிறைய இருக்குன்னு...... நீ நல்லா மரத்துக்கு
மரம் தாவலாம் உன்னை யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க....” என்றான் கண்களில் சிரிப்பை
தேக்கியபடி....
“டேய்...அண்ணா என்னை பார்த்தா குரங்கு மாதிரி இருக்கா உனக்கு????” என்று
அண்ணனின் தலையை பிடித்து உலுக்க ஆரம்பித்தாள்.
இருவரையும் சாப்பிட வருமாறு அழைக்கலாம் என்று எண்ணி அவளின் அறைக்குள்ளே நுழைந்த பார்வதியின்
கண்களுக்கு மிக சரியாக இந்த காட்சி சிக்க , “அடியே...ஆரம்பிச்சுட்டியா....அவன்
ஆம்பிளை புள்ளைடி...அவனை போட்டு இப்படி படுத்தி எடுக்கிற ....கையை எடு....”
“முடியாது மம்மி...இந்த தடியன் என்னை பார்த்து குரங்குன்னு சொல்றான்
தெரியுமா????”
“பின்னே நீ செய்யும் வேலைக்கு உன்னை அப்படித்தான் கூப்பிட முடியும்....அதற்கு
ஏனடி என் பிள்ளையை போட்டு இப்படி அடிக்கிறாய்....”மகளின் கையை விலக்க போராடியவாறே
பேசினார் பார்வதி.
“நான் குரங்குன்னா நீயும் குரங்கு தான் ஒத்துக்கிறியா????
சொல்லுடா....சொல்லுடா ” என்று மேலும் தமையனின் தலையை பிடித்து இடமும் வலமுமாக ஆட்டியவாறே பேசினாள் அஞ்சலி.
தங்கையின் அடிகளை வாங்கிக் கொண்டு சிரித்துக் கொண்டே அவளுக்கு அடிப்பதற்கு
வாகாக அமர்ந்து அவளின் அடிகளை வாங்கிக் கொண்டான் அபிமன்யு.அஞ்சலி அப்படித்தான்
அவளுக்கு கோபம் வராத வரை தான் அண்ணா என்று அழைப்பாள் கோபம் வந்து விட்டால் இப்படி
தான் ...... எல்லா விலங்குகளின் பெயர்களையும் சொல்லி அபிமன்யுவை திட்டி ஒரு வழி
ஆக்கிவிடுவாள்.
அபிமன்யுவும் ஒருநாளும் அதற்காக வருந்தியது கிடையாது.என்ன தான் வீட்டிற்கு
வெளியில் மற்றவர் பார்த்து பேச அஞ்சும் ஆளாக இருந்தாலும் அஞ்சலியிடம் அவன் ஒரு போதும் கோபத்தை
காட்டியதில்லை.மாறாக அவளின் செயல்களை ஒரு குழந்தையின் செயலாக எண்ணி ரசிக்கவே
செய்வான்.ஒரு வழியாக அஞ்சலியிடம் இருந்து போராடி அபிமன்யுவை காப்பாற்றினார்
பார்வதி.
சிரித்துக் கொண்டே எழுந்தவன் சற்று தள்ளி நின்று கொண்டு “அப்போ நீ வரலியா அஞ்சு என்கூட...”
“நான் வரலை போ....” என்று அண்ணனிடம் கோபித்துக் கொண்டு தொம் தொம் என்று பூமி
அதிர நடந்து ஹாலில் அமர்ந்து இருந்த தந்தையை நாடிச் சென்று தமையனை பற்றி ஒரு
புகார் பத்திரம் வாசித்து விட்டே சாப்பிட அமர்ந்தாள் அஞ்சலி.
சாக்லேட் தரவில்லை என்று கோபித்து கொண்டு இருக்கும் குழந்தையை போல முகத்தை
வைத்துக் கொண்டு இருந்த தங்கையை பார்த்து சிரித்துக் கொண்டே சாப்பிட அமர்ந்தவன்
மேலும் அவளை சீண்டாமல் அமைதியாக உண்ண ஆரம்பித்தான். அபிமன்யு உணவை முடிக்கும் வரை
ஒன்றும் பேசாமல் அமைதி காத்த ராஜேந்திரன் அவன் சாப்பிட்டு முடித்ததும்
அபிமன்யுவிடம் லேசாக தொண்டையை செருமிக் கொண்டு பேச தொடங்கினார்.
“என்ன ஆச்சு அபி...எதற்காக இன்னிக்கு கிரியை அடித்தாய்? வேலையை விட்டு வேறு
அனுப்பி விட்டாய் போல.....நீ காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டாய் என்பது
தெரியும் இருந்தாலும்...”
“அஞ்சலி சாப்பிட்டு முடிச்சுட்டியா ......ரூமுக்கு போய் படி.....”என்று கூறி
தங்கையை அங்கிருந்து முதலில் கிளப்பியவன் தந்தையின் புறம் திரும்பி பேச
தொடங்கினான்.
“உங்களுக்கு இந்த விஷயம் எப்படி தெரியும் டாடி?” என்றான் கூர்மையாக அவரது முக
பாவனையை அளவிட்டபடியே.
அவரிடம் இருந்து பதில் வராமல் அவர்
அமைதி காக்கவும், “உதயன் சொன்னானா? அவனுக்கு இதே வேலையாக போச்சு....இருந்தாலும்
நீங்க அவனுக்கு ரொம்ப இடம் கொடுக்குறீங்க டாடி.... உங்க தங்கச்சி பையன் என்பதற்காக
என்னுடைய அகாடமியில் நடப்பதை எல்லாம் உடனே உங்களிடம் சொல்லி விட வேண்டுமா?இல்லை
நான் எப்போது என்ன செய்கிறேன் உளவு பார்ப்பதற்காகவே நீங்கள் அவனை அங்கே வேலைக்கு
சேர்த்து விட்டு உள்ளீர்களா?”காட்டத்துடன் பேசத் தொடங்கினான் அபிமன்யு.
“கூல் டவுன் அபி....எதற்கு இத்தனை கோபம்....இதை அவன் வேண்டும் என்றே
சொல்லவில்லை.கிரியின் இடத்திற்கு புது ஆளை நியமிக்க வேண்டும் இல்லையா? நாளை நீ
வேறு ஊரில் இருக்க மாட்டாய்! எப்பொழுதும் நீ ஊரில் இல்லாத சமயங்களில் நான் தானே
உனக்கு பதிலாக அகாடமி சம்மந்தப்பட்ட வேலைகளை செய்வேன்....புது ஆட்களுக்கான
இன்டர்வியூவை நாளை வைத்துக் கொள்ளலாமா என்பதை கேட்பதற்காக தான் அவன் என்னிடம் பேசினான்.மற்றபடி
ஒன்றும் இல்லை.ஆனாலும் அபி...... நீ கிரியை வேலையை விட்டு அனுப்பி இருக்க
வேண்டாம்.நல்ல டான்ஸ் டீச்சரை நாம் இழந்துவிட்டோம்”
“டாடி ....ப்ளீஸ்! அவனுக்கு எல்லாம் சப்போர்ட் பண்ணி பேசாதீர்கள்....அவன்
செய்த காரியத்திற்கு அவனை அங்கேயே கொன்று புதைத்து இருப்பேன்...ஸ்டுடண்ட்ஸ் நிறைய
பேர் இருந்ததால் தப்பித்து விட்டான்...” என்று கூறிவிட்டு ஆத்திரம் அடங்காமல் காற்றில் கைகளை மடக்கி
குத்தினான் அபிமன்யு.
“என்ன நடந்தது அபி?”மகனின் மீது கூர்மையாக பார்வையை செலுத்தியவாறு கேட்டார்.
“டான்ஸ் கத்துக்கணும்னு தானே ஊரில் எத்தனையோ அகாடமி இருக்க ஏன் என்னுடைய
அகாடமிக்கு வராங்க”.... என் மேல் இருக்கும் நம்பிக்கை..... அந்த நாய் என்ன
செய்தான் தெரியுமா? சின்ன பொண்ணுப்பா......அந்த ராஸ்கல் டான்ஸ் சொல்லி தருகிறேன்
என்ற பெயரில் பெண்களை தேவை இல்லாமல் தொட்டு ........” என்று பாதியில் நிறுத்தியவன்
கண்களை மூடி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்.
“ஓகே டாடி....காலையில் எனக்கு நிறைய வேலை இருக்கு.....இப்போ போய் தூங்கினா
தான் சரியாய் இருக்கும்.குட் நைட்” என்றவன் அதற்கு மேல் அங்கே நில்லாமல் தன்னுடைய
அறைக்கு சென்று உறங்கியும் விட்டான்.
மறுநாள் எப்பொழுதும் போல் விடியற்காலை வீட்டில் இருந்து கிளம்பியவன் தன்னுடையை
ஐபோனில் பாடல்களை கேட்டுக் கொண்டே அந்த அழகான ரம்மியமான காலை பொழுதில் தன்னுடைய
ஜாகிங்கை செய்து கொண்டு இருந்தான்.இருள் இன்னும் முற்றிலுமாக விலகி இராத அந்த விடியற்காலை பொழுதில் தான்
அவன் அவளைப் பார்த்தான்.
கருத்துரையிடுக