சதிராடும் திமிரே 22

 



அத்தியாயம் 22

அஞ்சலியின் கையில் பால் சொம்பை கொடுத்தவர், அவளது தலையை ஆதுரத்துடன் தடவி கொடுத்தார்.

“பாரு அஞ்சலி.. இது நீ விரும்பி ஏத்துக்கிட்ட வாழ்க்கை. இதுல நீ என்னென்ன சங்கடத்தை எல்லாம் எதிர்கொள்ளப் போற அப்படிங்கிறது உனக்கே நல்லா தெரிஞ்சு இருக்கும். புரிஞ்சு நடந்துக்கோ.. என்னைக்கும் பொறுமையை மட்டும் விட்டுடாதே... அதே நேரம் உன்னோட சந்தோசமும், நிம்மதியும் எனக்கு ரொம்ப முக்கியம். உனக்காக இந்த அத்தை எப்பவும் துணை நிற்பேன்.” என்றவர் சத்யனின் அறைக்கு அனுப்பி விட்டு கணவனுக்காக காத்திருக்கத் தொடங்கினார்.

சொந்த பந்தங்கள் யாரையும் இரவு அங்கே தங்க விடாமல் எல்லாரையும் துரைசாமிக்கு பயந்து கிளப்பி விட்டிருந்தார் மேகலா.

என்னவோ தெரியவில்லை. திருமணம் முடியும்வரை அமைதியாக இருந்தவர்... திருமணம் முடிந்து சில மணியில் என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை. அவரது நடவடிக்கையே மாறி விட்டது. யாரைப் பார்த்தாலும் வம்புக்கு இழுப்பது போலவே பேசிக் கொண்டிருந்தார். குறிப்பாக அஞ்சலி வீட்டினரை... அவரது உறவுகளே யாராவது பேசினாலும் கூட அவர்களிடமும் அஞ்சலி வீட்டினரை மட்டம் தட்டி பேசிக் கொண்டிருந்தார்.

நல்ல நாளும் அதுவுமாக வீட்டில் எதுவும் சண்டையை கிளப்பி விடுவாரோ என்று பயந்தே அவரை யாரும் நெருங்காமல் பார்த்துக் கொண்டார் மேகலா.

அஞ்சலியின் பிறந்த வீட்டினர் கிளம்பிய சிறிது நேரம் கழித்து கொஞ்சம் பரபரப்பாக எங்கோ கிளம்பி போனார். எங்கே என்று சொல்லிவிட்டும் போகவில்லை அவர்.

‘அப்படி எங்கே தான் போனாரோ’ என்ற யோசனையுடன் அமர்ந்து விட்டார் மேகலா.

அறைக்குள் நுழைந்த அஞ்சலியின் கண்கள் சத்யனைத் தேட அவனோட கட்டிலில் அமர்ந்திருந்தபடி அவள் வந்ததைக் கூட உணராமல் ஏதோ தீவிர யோசனையில் இருந்தான்.

பாலை அருகில் இருந்த டேபிளில் வைத்து விட்டு தொண்டையை லேசாக செருமினாள் அஞ்சலி.

“ம்ஹும்..”

அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன் எழுந்து அவளுக்கு அருகில் வந்து நின்று, அவளை கூர்ந்து பார்த்தான். அவனது பார்வையில் ஒரு விதமான ஆராய்ச்சி இருக்க, கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் அஞ்சலி.

“எ..என்ன? இப்படி பார்க்கறீங்க?”

“வா..உட்கார்ந்து பேசலாம்” என்றவனின் குரலில் இருந்த தொனி அவளை மேற்கொண்டு எதையும் கேட்க விடாமல் செய்ய, அமைதியாக அவனுக்கு அருகில் போய் அமர்ந்து கொண்டாள்.

“அஞ்சலி... கல்யாணம் ஆன பிறகு எங்க அம்மாவோட வாழ்க்கையே தலைகீழா மாறி போச்சு. இத்தனைக்கும் அப்பாவை ரொம்ப விரும்பி கல்யாணம் செஞ்சுகிட்டவங்க அவங்க. அப்பாவுக்கும் அவங்களை ரொம்பவே பிடிக்கும். ஆனா கொஞ்சம் வீம்பு பிடிச்சவர்...

‘இதெல்லாம் தான் எனக்கு ஏற்கனவே தெரியுமே.. இப்போ எதுக்கு இந்த பேச்சு’ என்பதைப் போல அவள் ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

“நானும் காலையில் இருந்து உன்னை பார்த்துட்டு தான் இருக்கேன். அப்பா பேசும் பொழுது கூட நீ அமைதியாவே இருக்க... இது உன்னோட குணம் இல்லையே.. முன்னாடி எல்லாம் நீ அப்பா கிட்டே அப்படி மல்லுக்கு நிற்ப்பே... இப்போ என்னவோ பெரிய மாற்றம் உனக்குள்ளே” அவன் சொல்ல... அவள் இதழ்களில் வெளியே கண்ணுக்குத் தெரியாதபடி ஒரு புன்னகை வந்து போனது.

“அப்பா கிட்டே நீ மரியாதை இல்லாம நடந்துக்கிறது எனக்கும் பிடிக்காது தான். ஆனா அதுக்காக அப்பா கிட்டே திட்டு வாங்கிட்டு, அவர் குட்ட குட்ட, நீ குனிஞ்சு அதை வாங்கிக்கணும்னும் நான் எதிர்பார்க்க மாட்டேன். எப்படி அப்பாவோட மரியாதை எனக்கு முக்கியமோ, அதே மாதிரி என்னோட மனைவியோட மரியாதையும் எனக்கு முக்கியம். நீ இயல்பா இருக்கலாம்” என்று சொல்ல அவளோ குரலை சரி செய்து கொண்டு பேசத் தொடங்கினாள்.

“கல்யாணப் பொண்ணாச்சே... இன்னிக்கு ஒருநாள் அன்பா, அடக்க ஒடுக்கமா இருக்கலாம்னு நினைச்சேன்...”என்று கிண்டல் செய்ய, அவனோ அவளை முறைத்து வைத்தான்.

“எல்லாத்துலயும் கிண்டல் தானா உனக்கு?” என்று பேசியபடி அவள் காதை பிடித்து திருக, வலிப்பதாய் பொய்யாய் அலறினாள் அவள்.

“பிடிவாதம் பிடிச்சு கடைசியில நினைச்சதை சாதிச்சுட்ட போல...”அவளையே இமைக்காது பார்த்து வைத்தான் சத்யன்.

“பின்னே இந்த மாதிரி ஒரு அம்மாஞ்சி பையன் எங்கே தேடினாலும் கிடைக்க வாய்ப்பு இல்லையே”

“ஓய்! யாரைப் பார்த்து அம்மாஞ்சி சொல்ற?”மெதுவாக அவளின் கன்னம் கிள்ளினான்.

“உங்களைத் தான். நான் தான் உங்களை விரும்பி... நீங்க தான் வேணும்னு இரண்டு வீட்டு பக்கமும் போராடி கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். நீங்க கல்யாணம் முடிஞ்ச பிறகு கூட ஆசையா என்னை ஒருமுறை கூட பார்க்கலை” வருத்தம் மேலோங்கி இருந்தது அவள் குரலில்.

“உண்மையை சொல்லணும்னா உன்னோட கழுத்துல தாலி கட்டப் போற அந்த நிமிஷம் வரை இந்த கல்யாணம் நின்னுட்டா நல்லதுனு நினைச்சுட்டு இருந்தேன்” என்று சொல்ல... அவள் வேகமாக அவனிடம் இருந்து விலகி அமர முனைய , அவளை இழுத்து தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டான்.

“இப்போ நீ என்னோட மனைவி அஞ்சலி... உன்கிட்டே எதையும் நான் மறைக்க விரும்பல... என்னவோ இந்த கல்யாணம் நடந்தா எனக்கு நெருங்கினவங்க யாராவது ரொம்ப காயப்படுவாங்கனு எனக்கு தோணிட்டே இருக்கு. அது நடக்கக் கூடாதுனு நினைச்சேன். ஆனா அதையும் மீறி இந்த கல்யாணம் நடந்தது எப்படி? ஏன்னா எனக்கு உன்னை பிடிச்சு இருந்துச்சு.. உன்னை விடவும் எனக்கு மனசில்லை. ஆனா இப்போ வரை எனக்கு ஒரு விஷயம் தான் புரியாத புதிராவே இருக்கு”

“என்ன?” அவன் தோளில் சாய்ந்த படி முகத்தில் பார்வையை பதித்தாள்.

“எங்க அப்பாவை எப்படி சம்மதிக்க வச்சே...”

“சொன்னா நம்ப மாட்டீங்க.....”

“நீ சொல்லு நான் நம்புறேன்”அவன் விரல்கள் இப்பொழுது அவளது இமை முடிகளை வருடியது.

“ஆரம்பத்துல கேட்டுப் பார்த்தேன்.. உங்க அப்பா ஒத்துக்கலை. மிரட்டி சம்மதிக்க வச்சேன்”

“ஆஹான்”

“நம்பலை தானே நீங்க” கிண்டலாக அவன் முகம் பார்த்தாள்.

“நீ கொஞ்சம் கெட்ட பொண்ணு தான்... ஆனா என்னோட அப்பா உன்னோட மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டாரே”

“நான் சொல்றேன்... நீங்க தான் நம்ப மறுக்கறீங்க” என்று விளையாட்டு போல பேசினாள்.

“அது என்னவோ தெரியல... இன்னிக்கு நீ என்னோட கண்ணுக்கு கொஞ்சம் அழகா இருக்கிற மாதிரி எனக்கு தோணுது. உனக்கு மேக்கப் போட்டவங்களுக்கு பேசின தொகையை விட கூடுதலாவே கொடுக்கலாம். அவங்க நம்பரை பத்திரமா வச்சுக்கோ... உனக்கு அடிக்கடி தேவைப்படும்” என்று சொல்ல... இப்பொழுது அவன் காது அவள் கைகளில்...

“அப்போ இதுக்கு முன்னாடி நான் அசிங்கமா இருந்தேனா?”

“இப்படி எல்லாம் கேட்டா நான் பயந்து உண்மையை சொன்னாலும் சொல்லிடுவேன் அஞ்சலி”

“உங்களை... என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் சில நேரம் உங்க கண்ணுல ஒரு திருட்டுத்தனம் தெரியும். யாருக்கும் தெரியாம என்னை ரசிச்சு பார்த்துட்டு இப்போ என்னை பிடிக்கவே இல்லாத மாதிரியா பேசுறீங்க?”

“அப்போ நீயும் என்னை கவனிச்சு இருக்க?”

“கவனிச்சதால தான் இந்த நல்லவனை பிடிச்சுப் போச்சு...”

“எனக்கும் பிடிச்சதால தான் இப்போ நீயும் என் கைக்குள்ளே இருக்க” என்று சொல்லி விட்டு அவளை பார்க்க.. அப்பொழுது தான் கணவனின் அணைப்பில் இருப்பதை பார்த்தவள் மேனி சிவந்து அவனிடம் இருந்து விலக முயல, சத்யனோ முதன்முறையாக கொஞ்சம் ஆர்ப்பாட்டமாக சிரித்தான்.

“நல்லவேளை தப்பிச்சேன் அஞ்சலி... உனக்கு கூட வெட்கம் எல்லாம் வருது” என்று சொல்ல... அவள் அவனை முறைக்க முயன்று தோற்றாள்.

“இனி நம்ம வாழ்க்கையில் எந்த ஒளிவுமறைவுக்கும் இடமில்லை அஞ்சலி. இனி நீயும் நானும் வேற வேற கிடையாது. சரிதானா?” என்று கேட்டவன் வெட்கத்தில் சிவந்து நின்றவளை அணைத்து முத்தாடினான்.

வெட்கம் மேலிட அவள் விலக நினைக்கும் பொழுதெல்லாம் அவளை செல்லமாய் மிரட்டி மென்மையாய் அவளை ஆட்கொண்டான் சத்யன்.

விடியல் வரை ஒருவரையொருவர் அணைத்தபடி பல கதைகளை பேசிய வண்ணமே இருவரும் உறங்கிப் போனார்கள்.

காலை ஆறு மணி வாக்கில் அவர்களது அறைக் கதவு மேகலாவால் தட்டப்பட்டது.

“சத்யா... சத்யா...” குரலில் இருந்த பதட்டம் இருவருக்கும் தொற்றிக் கொள்ள, வேகமாக தங்களை சரி  செய்து கொண்டு கதவை திறந்தார்கள்.

மேகலா தான் மிகுந்த கலக்கத்தோடு நின்று கொண்டிருந்தார்.

“என்னம்மா? என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?

“சத்யா... அப்பா நேத்து சாயந்திரம் வெளியே போனவர் இப்போ வரை வீட்டுக்கு வரவே இல்லைடா...”

“வீட்டுக்கு வரலையா? எங்கே போறதா உங்க கிட்டே சொல்லிட்டு போனார்?”

“என்கிட்டே ஒன்னும் சொல்லலை தம்பி... நானும் பக்கத்துல எங்கேயாவது போய்ட்டு வந்துடுவார்னு நினைச்சேன். ஆனா இப்போ வரை வரல...”

“ஏன்மா விடிஞ்ச பிறகும் அவர் வரவே இல்லை. என்கிட்டே முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல.”

“எப்படிப்பா? உங்களுக்கு நேத்து தான் கல்யாணம் ஆகி இருக்கு. சாந்தி முஹூர்த்தம் இல்லையா? அப்போ போய் உங்களை தொந்தரவு செய்ய முடியுமா? அதுவும் இல்லாம உங்க அப்பா போன் போட்டாக் கூட கட் பண்ணிட்டே இருக்கார். எனக்கு என்னவோ அவர் வேணும்னே இப்படி செய்ற மாதிரி தோணுச்சு. அதான் உன்னை தொந்தரவு செய்யலை. ஆனா விடிஞ்ச பிறகும் கூட அவர் வீட்டுக்கு வராம இருக்கிறது இது தான் முதல் முறை. ”

“இவரை வச்சுக்கிட்டு...சரி சரி.. நீங்க டென்ஷன் ஆகாதீங்க மா... நான் போய் பார்த்துட்டு வர்றேன்” என்றவன் குளிக்க கூட செல்லாமல் சட்டையை சரி செய்து கொண்டு வாசலுக்கு விரைய ... அதே நேரம் சரியாக துரைசாமியின் கார் வீட்டினுள் நுழைந்தது.

காரில் இருந்து அதிக சோர்வுடன் இறங்கினார் துரைசாமி. இரவு முழுக்க கொஞ்ச நேரம் கூட தூங்கி இருக்கவில்லை போல. கண் எல்லாம் சிவந்து... செருப்பு கூட அணியாமல் பாதங்கள் வீங்கி... அவர் நடக்கும் இடம் எல்லாம் ரத்தம் திட்டு திட்டாக தெரிய எல்லாரும் பதைத்துப் போய் அவரிடம் ஓடினார்கள்.

“அய்யோ! என்னங்க.. என்ன ஆச்சு உங்களுக்கு? என்ன கால் இப்படி காயமா இருக்கு... நடக்காதீங்க..  நில்லுங்க,... சத்யா அப்பாவை அப்படியே வீட்டுக்குள்ளே தூக்கிட்டு வாடா...” என்று பதற.. சத்யா நெருங்கும் முன் ஆக்ரோசமாக கத்தினார் துரைசாமி.

“ஏய்! தள்ளிப் போடி.. வந்துட்டா.. என்னமோ அக்கறை இருக்கிற மாதிரி... ராத்திரி எல்லாம் புருசன் வீட்டுக்கு வரலையேன்னு அக்கறை இருக்கா உனக்கு? இப்போ நேர்ல பார்த்த பிறகு அக்கறை இருக்கிற மாதிரி நடிக்கறியா?”

“மாமா.. அத்தை மேல ஏன் கோபப்படுறீங்க?”அஞ்சலி அவருக்கு பரிந்து கொண்டு வர அவளை தீப்பார்வை பார்த்து வைத்தார்.

“சீ! பேசாத நீ.. சரியான தரித்திரம் புடிச்சவளா இருப்ப போல.. வந்த முதல் நாளே என்னோட கதியைப் பார்த்தியா?” என்று திட்ட அஞ்சலியின் முகத்தில் அதிர்ந்த பாவனை...

“அப்பா...”  என்று சத்யன் கையை இறுக்கிக் கொண்டு முன்னேற மேகலா இருவருக்கும் இடையில் வந்து நின்றார். அஞ்சலியிடம் கண் ஜாடை காட்டி சத்யனை அங்கிருந்து அழைத்து செல்லும்படி சொல்ல... அஞ்சலியும் சத்யனை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

“என்னை விடு அஞ்சலி.. இப்போ எதுக்கு என்னை இப்படி இழுத்துட்டு வர்ற”

“நேத்து தான் நம்ம கல்யாணம் முடிஞ்சு இருக்குங்க.. இப்போ இந்த சண்டை வேண்டாமே...”

“அதுக்காக அவர் உன்னைப் பத்தி பேசுறார். என்னை வாயை மூடிக்கிட்டு இருக்க சொல்றியா? உனக்கு அப்பாவைப் பத்தி தெரியாது... அவரை ஆரம்பத்துலயே சொல்லி வைக்கணும். அம்மா மாதிரி அடங்கி இருந்தா அப்புறம் அம்மாவா நடத்துற மாதிரி தான் உன்னையும் நடத்துவார்.”

‘உங்க எல்லாரை விடவும் எனக்குத் தான் அவரைப் பத்தி அதிகமாகவே தெரியும்...’ என்று நினைத்தவள் கசப்புடன் புன்னகைத்தாள்.

“ப்ளீஸ்! எனக்காக”

சத்யன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வெகுவாக போராடுவது தெரிந்தது அவளுக்கு.

“நீங்க போய் குளிச்சிட்டு வாங்க.. சாப்பிட்டுட்டு என்னை எங்கேயாவது வெளியே கூட்டிட்டு போறீங்களா? ப்ளீஸ்!” கன்னத்தை தடவி கண்களை சுருக்கி கெஞ்சியவளைப் பார்த்தவன் ஒன்றுமே சொல்லாமல் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.

அவன் குளியல் அறைக்குள் சென்று குளிக்க தொடங்கியதை உறுதிபடுத்திக் கொண்டு, ஜன்னல் பக்கமாய் திரும்பி வேடிக்கைப் பார்த்தாள் அஞ்சலி.

சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு காலில் இருந்த புண்ணை ஒரு கையால் பிடித்துக் கொண்டு வலி தாங்காமல் அனத்திக் கொண்டிருந்தவரைப் பார்த்து நக்கலாய் சிரித்தாள் அஞ்சலி.

அவளது சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து அங்கே வன்மம் குடி கொண்டது.

‘எங்க அண்ணனையும், அண்ணியையுமா உயிரை கையில பிடிச்சுக்கிட்டு ஓட விட்ட நீ’ குரூரம் வந்து போனது அவள் விழிகளில்.


Post a Comment

புதியது பழையவை