அத்தியாயம்
21
மண்டபத்தில்
நடந்த சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாவற்றிலுமே அனைவரும் மகிழ்ச்சியுடனே பங்கு
கொண்டார்கள் துரைசாமியை தவிர... வேண்டுமென்றே ஏதாவது குறை கண்டுபிடித்து பெண்
வீட்டாரை மட்டம் தட்டி பேசிக் கொண்டிருந்தார்.
“இதென்ன
பொண்ணு கல்யாணப் புடவை சிகப்பு நிறத்துல கட்டி இருக்கு... டேஞ்சர் லைட் மாதிரி ...
எங்க வீட்டில் பச்சை பட்டு தான் எடுப்போம்.
வைர
நகையே இல்லாத வீட்டு பெண் மாதிரி இதென்ன கன்றாவியான டிசைன்ல... பார்க்க அப்படியே
கவரிங் மாதிரி இருக்கு...
என்
மவன் சிங்கம் மாதிரி இருக்கான்.. அவனுக்கு பக்கத்துல பொண்ணு கொஞ்சம் குறைவு தான்..
நிறம் வேற கொஞ்சம் மட்டு தான்” என்ற ரீதியில் அவர் பேசிக் கொண்டே போக... சத்யன்
முதன்முறையாக தந்தையை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான்.
அந்த
பார்வைக்கு அவருக்கு அர்த்தம் தெரியும். இதற்கு மேல் வாயைத் திறந்தால் மகன் இத்தனை
பேரின் முன்னிலையிலும் அவரை எதிர்த்துப் பேசிவிடுவான் என்று புரிய... துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டார்.
“இதெல்லாம்
நீங்களே பாருங்க.. எனக்கு அசதியா இருக்கு. நான் வீட்டுக்குப் போறேன்.”என்று
சொல்லிவிட்டு வேகமாக முன்னே நடக்க, மேகலா மட்டும் அவரை பதட்டத்துடன்
பின்தொடர்ந்தார்.
மேகலாவிடம்
என்ன சொன்னார் என்பது மற்றவர்களின் காதுகளில் விழாவிட்டாலும் அவரின் களை இழந்த
முகத்தை பார்த்ததுமே மற்றவர்களுக்கு புரிந்து விட்டது. அவரது மனம் வருந்தும்படி
ஏதோ பேசி இருக்கிறார் என்பது தெரிந்தாலும் யாராலும் எதுவும் செய்ய முடியாத நிலை.
திருமணத்தை முன்னிட்டு ஊரில் உள்ள அனைவரும் கூடி இருக்க, அவர்களின் முன்னிலையில்
எந்த வாக்குவாதமும் வேண்டாம் என்று நினைத்தார்கள்.
அஞ்சலியின்
நன்மையை விரும்பும் அனைவரும் அவளுக்காக வருந்தினாலும் அஞ்சலி மட்டும் புன்னகை
முகமாகவே இருந்தாள். அவளது புன்னகை கொஞ்சமும் மாறவில்லை.
“உனக்கு
கஷ்டமாவே இல்லையாடி...”அஞ்சலியின் தாய் ஆற்றாமை தாங்காமல் அவளிடம் மென்குரலில்
கேட்டு விட்டார்.
“அம்மா
இன்னிக்கு என்னோட கல்யாணம்... இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கு எல்லாம்
வருத்தப்பட்டு இந்த நாளோட அழகை நான் கெடுத்துக்க விரும்பல. நீயும் எதைப் பத்தியும்
யோசிக்காத மா.. இந்த நாளை அனுபவி.. என்று உலக அனுபவங்களை எல்லாம் கரைத்துக்
குடித்த ஞானி போல பேசும் மகளை ஆச்சரியதுடன் பார்த்தவர் சில நொடிகளில் தன்னை
மீட்டுக் கொண்டார்.
மகள்
சொல்வதும் சரி தானே...
துரைசாமியின்
அத்தனை வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் அஞ்சலி அதற்கு எந்தவித
எதிர்வினையும் ஆற்றவில்லை.
சத்யனின்
முகம் தந்தையை நினைத்து லேசாக கடுப்பதை உணர்ந்து யாரும் அறியாமல் அவனை மெல்ல
கிள்ளினாள்.
அவன்
பதட்டத்தோடு அவள் புறம் திரும்ப, ‘ என்ன’ என்று கண்களாலேயே கேட்டாள்.
‘ஒன்னுமில்லை’ என்று அவன் மனதை மறைத்து தலை அசைக்க...
“லேசா சிரிச்ச மாதிரி இருக்கலாமே” அவனுக்கு மட்டும்
கேட்கும்படி அவள் கூற, தலையை ஆட்டிக் கொண்டவன் மனதில்
தந்தையின் மீது எழுந்த கசப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு தொடர்ந்து அதே சிரிப்புடன்
நடமாடினான்.
வீட்டிற்கு
திரும்பும் வரை எல்லோரும் கலகலப்புடன் இருந்தார்கள்.
மணமக்களுக்கு
பாலும், பழமும் கொடுத்து, இன்ன பிற சடங்குகளையும் முடித்து விட்டு அவர்களை
ஓய்வெடுக்க அனுப்பி வைத்து விட்டனர். அவ்வளவு நேரமும் துரைசாமி அறையை விட்டு வெளியே
வரவே இல்லை. அறைக்குள் இருந்தபடியே வேலை ஆட்களை அழைத்து சம்பந்தமே இல்லாமல்
அவர்களை திட்டுவதும், வேலை ஏவுவதுமாக இருந்தார். மேகலாவையும் விட்டு வைக்கவில்லை.
அவ்வபொழுது அழைத்து ஏதேனும் சொல்லி திட்டிக் கொண்டு தான் இருந்தார்.
சஹானாவும்,
அபிமன்யுவும் தங்களின் அறைக்குள் நுழைந்து கொள்ள, அதுவரை இருந்த இன்முகம் மாறி
அபிமன்யுவின் முகம் கடுகடுப்பை தத்தெடுத்துக் கொண்டது.
“சனா..ஆனாலும்
உங்க அப்பா ஓவரா தான்டி போறாரு... நானும் என் தங்கச்சிக்காக தான் இவ்வளவு நேரம் அமைதியா
இருந்தேன். ஆனா எப்பவும் இதே மாதிரி அமைதியா இருப்பேன்னு சொல்ல முடியாது.”
“இதெல்லாம்
நம்ம ஏற்கனவே எதிர்பார்த்தது தானேங்க... கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாளைக்கு இப்படி
தான் கத்துவார். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அஞ்சலியை ஏத்துக்க ஆரம்பிச்சிடுவார்.
அஞ்சலி என்ன தான் துடுக்கா பேசினாலும் ரொம்ப நல்ல பொண்ணுங்க... அப்பாவுக்கும்
சீக்கிரமே இதெல்லாம் புரியும். வீணா மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க...”
“சரி
... சீக்கிரம் எல்லாத்தையும் எடுத்து வை... நைட்டே பிளைட் டிக்கெட் புக்
பண்ணிட்டேன். நம்ம எல்லாரும் கிளம்பணும்”
“சரிங்க...
கல்யாணத்துல உங்களுக்குத் தான் அதிக அலைச்சல்... என்னால தான் உங்களுக்கு எந்த
உதவியும் செய்ய முடியல... நீங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க...”
“ஹலோ
மேடம்... என்ன சென்டிமென்ட் சீனுக்கு பிட்டு போடுறீங்களா? அதுக்கு எல்லாம்
வாய்ப்பே இல்லை... நான் இன்னிக்கு நைட் நமக்கும் பர்ஸ்ட் நைட் கொண்டாட ஏற்பாடு
பண்ணிட்டு இருக்கேன்.”என்று கிண்டலாக பேசியபடி மனைவியை நெருங்கினான்.
கணவன்
தன்னை சமாதானம் செய்வதற்காகத் தான் இப்படி எல்லாம் பேசுகிறான் என்பது சனாவிற்கு
புரியாமல் இல்லை. மெல்ல இதழ் பிரித்து சிரித்தவள் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
“எல்லாம்
சரியாகிடும்... சரியாகிடும் தானே?” அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்த வண்ணம்
கேட்க,அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை மென்மையாய் அணைத்துக் கொண்டான்.
அதே
நேரம் அதே கேள்வியைத் தான் ராஜேந்திரனும், பார்வதியைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
“இதோ
பாருங்க... கல்யாணமே முடிஞ்சுடுச்சு... இன்னும் என்ன இப்படி கேட்டுக்கிட்டு...
அதெல்லாம் என் பொண்ணு திறமையா சமாளிச்சு சந்தோசமா இருப்பா... நீங்க களைப்பா
தெரியறீங்க... உங்களுக்கு டீ கொண்டு வரட்டுமா?”
“...”
“என்னங்க..
உங்களைத் தான்”
“எப்படிடி...
எப்பவும் இவ்வளவு அமைதியா எல்லாத்தையும் ஹேண்டில் பண்ற நீ...”
“ஹ்ம்ம்..
அதுக்கெல்லாம் மண்டையில மசாலா வேணும்... உங்களுக்கு எங்கே அது இருக்கு” என்று
கழுத்தை அழகாக வெட்டிக் கொண்டு வெளியே செல்ல... மனைவியின் செல்ல சேட்டையில் சிரித்துக்
கொண்டார்.
அன்றைய
தினம் மாலையே அபிமன்யு குடும்பத்துடன் கிளம்பி விட்டார்கள். அவர்களை மேலும் இரண்டு
நாட்கள் தங்கி விட்டு செல்லும்படி மேகலாவும், சத்யனும் எவ்வளவோ வற்புறுத்தினார்கள்
தான். ஆனால் அபிமன்யு அதற்கு கொஞ்சமும் சம்மதிக்கவில்லை. அவனது வேலை ஒரு காரணம்
என்றாலும்கூட, துரைசாமியின் அடாவடித்தனங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு அமைதியை
கடைபிடிப்பது வெகுநேரம் சாத்தியம் என்று அவனுக்குத் தோன்றவில்லை.
இதற்கு
முன்பானால் அவர் தன்னுடைய மாமனார் மட்டுமே... அவரது கோபத்தால் பாதிக்கபடுவது தான்
மட்டுமே என்று நினைத்திருந்தான். ஆனால் இனி தங்கையின் வாழ்க்கையும் அதில் சேர்ந்து
இருக்கிறதே...முடிந்த அளவுக்கு அவரிடம் ஒதுங்கி இருந்து கொள்ள வேண்டும். வீண்
சண்டைக்கு அவரே அழைத்தாலும் ஒதுங்கி தான் போக வேண்டும் என்று முடிவு
செய்திருந்தான். அதன் விளைவாகத் தான் அங்கிருந்து உடனே கிளம்பும் திட்டமும்..
அவனது எண்ணம் மற்றவர்களுக்கும் புரிந்திருந்ததால் யாரும் அவனை அதற்கு மேல்
தடுக்கவும் இல்லை.
அவர்கள்
கிளம்பும் பொழுது கூட அஞ்சலியின் கண்களில் ஒரு துளி கண்ணீர் இல்லை. சத்யா அவள்
அழுகிறாளோ என்று அவளை உற்றுப் பார்க்க... அவளோ மேகலாவின் தோளில் தலையை சாய்த்துக்
கொண்டு பிறந்த வீட்டினருக்கு விடை கொடுத்து அனுப்பிக் கொண்டிருந்தாள்.
‘தெளிவான
ஆள் தான் இவ’ மனைவியை மெச்சிக் கொண்டவனுக்கு தெரியவில்லை. இதே வார்த்தையை வேறு ஒரு
நாள் வேறு ஒரு கோணத்தில் சொல்லி அவளை வதைக்கப் போகிறோம் என்று..
அபிமன்யு
தங்கையை யாரும் அறியாத வண்ணம் கவனித்துக் கொண்டிருந்தான். காலையில் இருந்து
துரைசாமி அடிக்கும் கூத்துக்களும் ,
அதற்கு எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக இருக்கும் அஞ்சலியும் அவனுக்கு
புதிது.
கல்யாணம்
முடியும் வரை துரைசாமி இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார். எதைக் கேட்டாலும், “உங்களுக்கு
எது வசதியோ அதை செய்ங்க” என்று பட்டும் படாமலும் பேசி ஒதுங்கிக் கொண்டார்.
திருமணம்
முடியும் வரை வாய் பேசிக் கொண்டே இருந்த அஞ்சலி திருமணம் முடிந்த பிறகு பேசாமடந்தை
போல நடந்து கொள்ள அவனுக்கு எல்லாமே கொஞ்சம் புதிராக இருந்தது. ஆனால் யாரிடமும்
எதையும் காட்டிக் கொள்ளவில்லை. உறுதியாக தெரியாமல் எதையும் சொல்லி மற்றவர் மனதை வருத்த
வேண்டாம் என்று நினைத்தான்.
எல்லாரும்
ஊருக்கு கிளம்பும் போது கூட துரைசாமி அறையை விட்டு வெளியே வரவில்லை. அறைக்குள்ளே
சென்று மற்றவர்கள் அவரிடம் சொல்லி விட்டு கிளம்ப முயல, பெரிதாக முகம் கொடுத்தே பேசவில்லை அவர்.
“ஆமா...
கல்யாணம் முடிஞ்ச உடனே அவங்கவங்க வீட்டைப் பார்த்து கிளம்புறது தான் நல்லது.
மாப்பிள்ளை வீட்டில் தங்குறது எல்லாம் எங்க ஊரில் பழக்கம் இல்லை. நானா சொன்ன பிறகு
தான் கிளம்புவீங்கனு நினைச்சேன். நல்லவேளை... உங்களுக்கும் இந்த பழக்கவழக்கம்
எல்லாம் தெரிஞ்சு இருக்கு.” என்று அவர்களை மறைமுகமாக அங்கிருந்து கிளம்ப சொல்ல, மேகலா தான் தவித்துப் போனார்.
‘இவர் எப்போ தான் மாறுவாரோ? கடவுளே நீ தான் எங்க
குடும்பத்தைக் காப்பாத்தணும்’ மேகலாவிற்கு இன்னும் கொஞ்சம்
கணவரின் மீது நம்பிக்கை இருந்தது. மற்றவர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பையும், மரியாதையையும் புரிந்து கொண்டு நல்லவிதமாக மாறி விடுவார் என்று வெகுவாக
நம்பிக் கொண்டிருந்தார்.
அஞ்சலி
வீட்டு ஆட்கள் அனைவரும் கிளம்பி சென்று இருக்க,
அதன் பின்னர் அவரின் குரல் இன்னும்
உயர்ந்து கொண்டே தான் இருந்தது. தேவை இல்லாமல் அஞ்சலியை குத்திக் காட்டிப் பேசுவது
போல வேலையாட்களை திட்டிக் கொண்டிருந்தார்.
சத்யனுக்கு
பண்ணையில் ஏதோ அவசர வேலை வந்து விட அவனுக்கு இவர் செய்யும் அட்டகாசங்கள் எதுவும்
தெரியாமலே போனது. இரவு ஒன்பது மணியை தாண்டிய பிறகு சோர்வுடன் வீட்டிற்கு
திரும்பினான் சத்யன்.
“என்னடா
சத்யா... இன்னிக்குமா வேலை, வேலைனு இருப்ப.. இனி
உன்னை நம்பி ஒரு பொண்ணு வந்தாச்சுடா.. சீக்கிரமா வீடு திரும்பிடணும்” லேசான
கண்டிப்புடன் சொன்ன தாயை பார்த்து மென்மையாய் சிரித்தான்.
“எங்கேம்மா
உங்க மருமகளைக் காணோம்... ஒட்டுப்புல் மாதிரி உங்க பின்னாடியே திரியுவா... ஆளைக்
காணோம்?” கேள்வி அவரிடம் இருந்தாலும் பார்வை வீடு முழுக்க அஞ்சலியை தேடி அலசியது.
“நான்
தான் அவளை அறைக்குள்ளேயே கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க சொன்னேன் சத்யா... அவளுக்கும்
களைப்பா இருக்கும்ல... அது சரி... என்னடா மகனே வந்த உடனே பொண்டாட்டியைத் தான் உன்
கண்ணு தேடுது...” என்றார் குரலில் கேலி இழையோட...
“சு...
சும்மா தான் மா...” என்றவன் முகத்தை வேறு பக்கம் திருப்பி பிடறியை வருடிக் கொள்ள,
மேகலா சிரித்துக் கொண்டார்.
“போய்
குளிச்சிட்டு வா சத்யா... இரண்டு பேரும் சாப்பிடுவீங்க” என்று சொல்ல அரை மனதோடு
மனைவி இருந்த அறையை பார்த்துக் கொண்டே தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டான்.
அவனுக்கு
குளித்து முடித்து வேறு உடையை மாற்றிக் கொண்டு வரும் பொழுது இரவு உணவிற்காக
அஞ்சலியும் அமர்ந்திருந்தாள்.
அவனைப்
பார்த்ததும், முகம் மலர சிரிப்போடு அவனை எதிர்கொண்டவளின் பார்வையில் ஒரு நிமிடம் அசையாமல்
நின்று விட்டான்.
தாலி
கட்டிய பிறகும் கூட துரைசாமி அடித்த கூத்துக்களில் அவள்புறம் திரும்பக் கூட இல்லை
அவன். அவளை ரசிக்கும் மனநிலையும் அப்பொழுது அவனிடம் இல்லை. இப்பொழுது நிறுத்தி நிதானமாக
மனைவியின் அழகினை கண்களால் பருகினான்.
“அம்மா
ஏற்கனவே கல்யாணத்தப்போ சாப்பிட்டதே ஒரு மாதிரி வயிறு நிறைஞ்சு இருக்கு.. சும்மா
கொஞ்சமா பால் மட்டும் கொடுங்கம்மா” என்றபடி அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான்
சத்யன்.
பார்வை
அவ்வபொழுது அஞ்சலியை தீண்டி சென்றது. அஞ்சலி அப்படி எந்த கள்ளத்தனமும் இல்லாமல் நேரடியாகவே
அவனை பார்த்து இயல்பாக சிரித்து வைத்தாள்.
“வெறும்
பால் மட்டும் எப்படி போதும் சத்யா... இரண்டு இட்லி சாப்பிடுங்க” என்று இயல்பாக
அவன் பேரை சொல்ல.. மேகலாவும், சத்யனும் ஒரு சேர அதிர்ந்து அவளைப் பார்த்தார்கள்.
“அஞ்சலிமா..
கிராமத்துல புருசன் பேரை இப்படி சபையில் வச்சு சொல்ல கூடாதுடா... தனியா இருக்கும் பொழுது
எப்படி வேணா இருந்துக்கோங்க.. அதுவும் மாமா இருக்கும் பொழுது மறந்து கூட பேர்
சொல்லிடாத கண்ணு”அவரது குரலில் அக்கறையும், பயமும் சரிபாதியாக கலந்து இருந்தது.
“சரி
அத்தை...” உடனே பவ்யமாக கேட்டுக் கொண்டவளை புரியாத பார்வை பார்த்தான் சத்யன்.
“மாமா
எங்கே அத்தை? அவர் குரலே கேட்கலை.. ஒருவேளை தூங்கிட்டாரோ?”
“என்னன்னு
தெரியல அஞ்சலி.. கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு போன் வந்துச்சு.. அதை எடுத்து பேசிட்டே வெளியே
போனார். இன்னும் திரும்பி வரலை... ஏதாவது அவசர வேலையா போயிருப்பார். வந்துடுவார்..
நீ சாப்பிடு”
“அப்போ
உட்காருங்க அத்தை... எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்”
“வேண்டாம்
அஞ்சலி.. நான் அவரோட சாப்பிட்டுக்கிறேன்”
இருவரும் உணவு உண்டு முடித்ததும் பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டு பிறகு சத்யனை முதலில் அறைக்கு அனுப்பி வைத்தார் மேகலா.
கருத்துரையிடுக