“எங்கேம்மா உங்க மருமகளைக் காணோம்... ஒட்டுப்புல் மாதிரி உங்க பின்னாடியே திரியுவா... ஆளைக் காணோம்?” கேள்வி அவரிடம் இருந்தாலும் பார்வை வீடு முழுக்க அஞ்சலியை தேடி அலசியது.
“நான் தான் அவளை அறைக்குள்ளேயே கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க சொன்னேன் சத்யா... அவளுக்கும் களைப்பா இருக்கும்ல... அது சரி... என்னடா மகனே வந்த உடனே பொண்டாட்டியைத் தான் உன் கண்ணு தேடுது...” என்றார் குரலில் கேலி இழையோட...
“சு... சும்மா தான் மா...” என்றவன் முகத்தை வேறு பக்கம் திருப்பி பிடறியை வருடிக் கொள்ள, மேகலா சிரித்துக் கொண்டார்.
“போய் குளிச்சிட்டு வா சத்யா... இரண்டு பேரும் சாப்பிடுவீங்க” என்று சொல்ல அரை மனதோடு மனைவி இருந்த அறையை பார்த்துக் கொண்டே தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டான்.
அவனுக்கு குளித்து முடித்து வேறு உடையை மாற்றிக் கொண்டு வரும் பொழுது இரவு உணவிற்காக அஞ்சலியும் அமர்ந்திருந்தாள்.
அவனைப் பார்த்ததும், முகம் மலர சிரிப்போடு அவனை எதிர்கொண்டவளின் பார்வையில் ஒரு நிமிடம் அசையாமல் நின்று விட்டான்.
தாலி கட்டிய பிறகும் கூட துரைசாமி அடித்த கூத்துக்களில் அவள்புறம் திரும்பக் கூட இல்லை அவன். அவளை ரசிக்கும் மனநிலையும் அப்பொழுது அவனிடம் இல்லை. இப்பொழுது நிறுத்தி நிதானமாக மனைவியின் அழகினை கண்களால் பருகினான்.
“அம்மா ஏற்கனவே கல்யாணத்தப்போ சாப்பிட்டதே ஒரு மாதிரி வயிறு நிறைஞ்சு இருக்கு.. சும்மா கொஞ்சமா பால் மட்டும் கொடுங்கம்மா” என்றபடி அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான் சத்யன்.
பார்வை அவ்வபொழுது அஞ்சலியை தீண்டி சென்றது. அஞ்சலி அப்படி எந்த கள்ளத்தனமும் இல்லாமல் நேரடியாகவே அவனை பார்த்து இயல்பாக சிரித்து வைத்தாள்.
“வெறும் பால் மட்டும் எப்படி போதும் சத்யா... இரண்டு இட்லி சாப்பிடுங்க” என்று இயல்பாக அவன் பேரை சொல்ல.. மேகலாவும், சத்யனும் ஒரு சேர அதிர்ந்து அவளைப் பார்த்தார்கள்.
“அஞ்சலிமா.. கிராமத்துல புருசன் பேரை இப்படி சபையில் வச்சு சொல்ல கூடாதுடா... தனியா இருக்கும் பொழுது எப்படி வேணா இருந்துக்கோங்க.. அதுவும் மாமா இருக்கும் பொழுது மறந்து கூட பேர் சொல்லிடாத கண்ணு”அவரது குரலில் அக்கறையும், பயமும் சரிபாதியாக கலந்து இருந்தது.
“சரி அத்தை...” உடனே பவ்யமாக கேட்டுக் கொண்டவளை புரியாத பார்வை பார்த்தான் சத்யன்.
“மாமா எங்கே அத்தை? அவர் குரலே கேட்கலை.. ஒருவேளை தூங்கிட்டாரோ?”
“என்னன்னு தெரியல அஞ்சலி.. கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு போன் வந்துச்சு.. அதை எடுத்து பேசிட்டே வெளியே போனார். இன்னும் திரும்பி வரலை... ஏதாவது அவசர வேலையா போயிருப்பார். வந்துடுவார்.. நீ சாப்பிடு”
“அப்போ உட்காருங்க அத்தை... எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்”
“வேண்டாம் அஞ்சலி.. நான் அவரோட சாப்பிட்டுக்கிறேன்”
கருத்துரையிடுக