Theendatha Thee Neeye Tamil Novels 14

 


அத்தியாயம் 14
அடிபட்ட புலியை விட அதிக ஆக்ரோசத்துடன் அந்த இடத்தையே தன்னுடைய வேக நடையால் அளந்து கொண்டு இருந்தான் சம்ஹார மூர்த்தி. அவன் அருகில் சென்று பேசவே எல்லாருக்கும் பயமாக இருந்தது. இருந்தாலும் எவ்வளவு நேரம் தான் அப்படி அமைதியாக இருந்து விட முடியும். அவனது தூரத்து உறவுப் பையன் ஒருவன் துணிந்து அவனிடம் பேசினான்.


“அந்தப் பொண்ணு தான் ஓடிடுச்சே…அதுக்காக அப்படியே இருக்க முடியுமா தம்பி…ஆகுற வேலையை பார்க்கலாமே…நீங்க சரின்னு சொன்னா இதே முஹூர்த்தத்தில் உங்க கல்யாணம் நடக்கும்.நம்ம சொந்தத்தில் பெண்களுக்கா பஞ்சம்…ஓடிப் போனவளையே நினைச்சுக்கிட்டு…” அவன் பேசி முடிக்கும் முன் அவன் கழுத்தை ஆவேசத்துடன் நெறிக்கத் தொடங்கி இருந்தான் சம்ஹார மூர்த்தி.


“அவ ஓடிப் போனதை நீ உன்னோட கண்ணால பார்த்தியா? இன்னொரு முறை என்னோட வானதியைப் பத்தி தப்பா பேசின..சொந்தக்காரன்னு கூட பார்க்க மாட்டேன். சங்கைப் பிடிச்சு திருகி கொன்னு போட்டுடுவேன். அவள் என் வானதி…பேசும் போது ஜாக்கிரதையா பேசணும்… இல்லைனா தொலைச்சுடுவேன்.தொலைச்சு…”என்று கண்கள் கொவ்வைப் பழமாக சிவந்த படி எச்சரிக்க பேசியவன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஒடி விட…மற்றவர்களுக்கு அவனிடம் பேசவே வார்த்தை தைரியம் எழவில்லை.


எப்படி பேச முடியும்? வேங்கையின் ரௌத்திரத்திற்கு கொஞ்சமும் குறையாத ஆக்ரோசத்துடன் இருந்தவனைப் பார்த்தவர்களது உள்ளம் சில்லிட்டுப் போனது.


அவனது ஆட்கள் சிலர் கும்பலாக மண்டபத்திற்குள் திபுதிபுவென நுழையவும் மண்டபத்திற்குள் இருந்தவர்கள் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டனர்.


“சார்…ஊருக்குள் எல்லா இடத்திலையும் நம்ம ஆட்களை நிறுத்தியாச்சு.பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்,பாரஸ்ட் (Forest) செக் போஸ்ட்…இப்படி ஒரு இடம் பாக்கி இல்லாம நம்ம ஆட்கள் சல்லடை போட்டு தேடிக்கிட்டு இருக்காங்க…பொண்ணை எப்படியும் சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம்” என்று அவன் பேசிக் கொண்டே போக சம்ஹார மூர்த்தி ஓங்கி விட்ட உதையில் பேசியவன் தூரப் போய் விழுந்தான்.


“முட்டாள்…அவன் என்ன சாதரணமானவன்னு நினைச்சியா…பஸ் ஸ்டாண்ட் வழியா பொண்ணை கடத்திட்டு போக…அவன் ஈஸ்வர்டா…நான் எப்படி துறைமுகத்துக்கு ராஜாவோ அதே மாதிரி அவன் கடலுக்கு ராஜா…அவனை நீங்க தேடணும்னா கடல்லயோ இல்லை துறைமுகத்துலயோ தான் தேடணும்.அதை விட்டுட்டு பஸ் ஸ்டாண்டில் தேடினா கிடைச்சுடுவானா அவன்.


தேடுங்க…ஊரில் இருக்கிற எல்லா கப்பலையும் தேடுங்க…அது போக ஏர்போர்ட், பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒண்ணையும் விடாதீங்க…என் வானதிக்கு மட்டும் ஏதாவது ஆச்சு…உங்களில் ஒருத்தனும் உயிரோட வீடு போய் சேர மாட்டீங்க…சொல்லிட்டேன்” என்ற அவன் கர்ஜிக்க அவனது ஆட்களின் கண்களில் மரண பயம் தெரிந்தது.


அவனது ஆட்கள் எல்லாரையும் நாலாபுறமும் தேடச் சொல்லி அனுப்பினான்.வெறுமனே அடியாட்களை மட்டும் நம்பி இராமல் போலீஸ் துறையிலும் ரகசியமாக அவளை கண்டுபிடிக்க சொல்லி கேட்டிருந்தான்.


கல்யாணத்திற்கு முதல் நாள் மணப்பெண் காணாமல் போன விஷயம் வெளியே தெரிந்தால் அது எவ்வளவு பெரிய அவமானம்.வானதியைப் பற்றி இல்லாத பொல்லாத பேச்சுக்கள் எல்லாம் கிளம்பக் கூடும்.அதை அவன் விரும்பவில்லை என்பதாலேயே அவ்வாறு செய்து இருந்தான் சம்ஹார மூர்த்தி.
மற்றவர்களிடம் சொல்லி இருந்தால் மட்டும் போதுமா…அவன் மனம் அமைதியாகி விடுமா? அவனும் தேடத் தொடங்கினான்.முதலில் மண்டபத்தின் சிசிடிவி கேமராவை ஆராயத் தொடங்கினான்.அதில் சந்தேகப்படும்படி எந்த விஷயமோ அல்லது நபரோ யாரும் இருக்கவில்லை.


சாதாரணமான நேரமாக இருந்திருந்தால் இந்நேரம் அவன் எல்லாவற்றையும் கண்டுபிடித்து இருப்பான்.ஆனால் வானதியை தொலைத்து விட்டதால் ஏற்பட்ட பதட்டத்தின் காரணமாக அவனால் கோர்வையாக எதையுமே சிந்திக்க முடியவில்லை.தலையை இருகைகளாலும் தாங்கி அமர்ந்தவன் அப்படியே உட்கார்ந்து விட அடுத்து என்ன செய்வது என்பதே புரியாமல் சோர்ந்து போய் அமர்ந்து விட்டான்.


ஒரே ஒரு நொடி தான்.அடுத்த நொடி விருட்டென்று சேரில் இருந்து எழுந்தவன் மீண்டும் முதலில் இருந்து சிசிடிவியை ஓட வைத்துப் பார்த்தான்.அதில் அவன் மேடையில் வந்து அமர்ந்த பிறகு நடக்கும் விஷயங்களை ஊன்றி கவனிக்கத் தொடங்கியவனின் பார்வையில் ஒரே ஒரு செயல் மட்டும் உறுத்தலாக பட்டது.


தலையில் முண்டாசு கட்டிய ஒருவன் அவனது முகத்தை மறைத்தவாறு பெரிய ஆள் உயர வாழை இலைக் கட்டைத் தூக்கிக் கொண்டு வந்தவன் சில நிமிடங்களுக்குப் பிறகு சமையலறைக்கு சென்று சேரவே இல்லை.மீண்டும் சில நிமிடங்கள் கழித்து அதே இலைக் கட்டை தோளில் சுமந்தபடி மண்டபத்தை விட்டு வெளியேற சம்ஹார மூர்த்திக்கு புரிந்து விட்டது வானதி மர்மான முறையில் மறைந்தது எப்படி என்று…


அடுத்தடுத்த வேகமாக செயல்படுத்தத் தொடங்கினான் சம்ஹார மூர்த்தி.அவனைப் பொறுத்தவரை இனி தாமதம் செய்யும் ஒவ்வொரு வினாடியும் வானதியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால் விரைந்து செயல்பட்டான்.
காவல் துறையினருக்கு அந்த வீடியோவின் காப்பி ஒன்றை அனுப்பி வைத்து விட்டு அவன் ஆட்களை அனுப்பி அந்த இலைக்கட்டை கொண்டு வந்தவன் யார்?எப்படி உள்ளே வந்தான்… மீண்டும் எப்படி வெளியில் போனான்… என்று விசாரிக்கத் தொடங்கினான்.மின்னல் வேகத்தில் எல்லாரையும் முடுக்கிவிட்டு வேலைகளை துரிதப்படுத்தினான் சம்ஹார மூர்த்தி.


அவனது ஆட்கள் ஏர்போர்ட்,துறைமுகம் என்று ஒரு இடம் விடாமல் விசாரிக்கத் தொடங்கி இருந்தார்கள்.அன்றைய பொழுதில் கிளம்பி இருந்த பிளைட் லிஸ்ட்,மற்றும் கப்பலின் விவரங்கள் அத்தோடு சேர்த்து சம்ஹார மூர்த்தியின் பண பலத்தை பயன்படுத்தி ஏர்போட்டின் சிசிடிவி ரெக்கார்டிங்கையும் வாங்கி வர ஏற்பாடு செய்திருந்தான்.அனைத்தும் கைக்கு வந்து விடவே மற்றவர்களை நம்பாது அவனே ஒவ்வொரு சிடியாக ஓடவிட்டு பார்த்துக் கொண்டு இருந்தான்.


அவன் அவற்றை சரிபார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே அவனது அடியாள் ஒருவன் அவனிடம் முன்வந்து ஒரு பைலை நீட்ட , ‘என்ன’ என்பது போல விறைப்பாக பார்த்தான் சம்ஹார மூர்த்தி.
“சார்…நீங்க ரொம்ப கோபமா பேசினீங்களா..அதான் அந்த ஈஸ்வரைப் பத்தின தகவலை எல்லாம் எடுத்துட்டு வந்து இருக்கேன்.இதைப் பார்த்தா அவனோட பலம்,பலவீனம் இதைப்பத்தி எல்லாம் உங்களுக்கு ஏதாவது தெரிய வருமே” என்று சொல்லி நீட்ட அந்த பைலை கையில் கூட வாங்காமல் தூக்கி விசிறி அடித்தான்.


“முட்டாளாடா நீ…அவனும் நானும் வேறு வேறு துறையில் இருந்து இருந்தா பரவாயில்லை. இரண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே துறை தான்.அவனைப் பத்தி எனக்கு தெரியாமல் இருக்குமா?அவன் எனக்கு சமமான எதிரி தான்.அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.ஆனா நான் பயப்படுவது எனக்காக இல்லை…வானதிக்காக…அவன் ஒரு சைக்கோ…அவனிடம் மாட்டிக்கொண்டு என்னோட வானதி என்ன பாடு படுறாளோ அப்படிங்கிற பயம் தான்.


நல்லா தெரிஞ்சுக்கோ…அவனைப் பத்தின எல்லா விஷயமும் எனக்குத் தெரியும்.அவனோட பலம்,பலவீனம்,அவனோட வரலாறு…இப்படி எல்லாமும்…ஆனா அதை எதையும் பயன்படுத்த முடியாதபடி வானதி அவன் பிடியில் இல்ல இருக்கா…அவளை மீட்ட பிறகு அவனுக்கு நான் கொடுக்கும் தண்டனையை இந்த மொத்த நாடுமே பேசும்…அவ்வளவு கொடூரமான தண்டனை அவனுக்கு காத்திருக்கிறது.பார்க்கலாம் என்னோட காதலை அவனால் ஜெயிக்க முடியுதான்னு” என்று ஆக்ரோஷத்துடன் சூளுரைத்து விட்டு மீண்டும் அந்த வீடியோக்களை பார்வையிடத் தொடங்கினான்.


உடலெல்லாம் நடுங்கிய வண்ணம் கம்பளிக்குள் சுருண்டு அமர்ந்து இருந்தாள் வானதி. அவளால் இன்னும் நடந்த எதையும் நம்ப முடியவில்லை.தண்ணீருக்குள் தன்னை தள்ளி விட்ட அடுத்த நொடி அவள் உள்ளே மூழ்கத் தொடங்கினாள். சில நிமிடங்களுக்கு முன் அவள் கண்ட கனவு இப்பொழுது நிஜத்தில் நடந்து கொண்டு இருக்க,எப்படி தப்பிப்பது என்றே அவளுக்குப் புரியவில்லை.


நடுக்கடலில் பிடித்துக் கொள்ள பிடிமானம் எதுவுமின்றி தண்ணீரில் மூழ்கத் தொடங்கினாள். தண்ணீருக்கு அடியில் கண்ணைத் திறந்து பார்க்க முயற்சி செய்யும் பொழுது கடல் நீரின் உப்புத் தன்மையின் கண்கள் எரியத் தொடங்க மீண்டும் கண்களை இறுக மூடிக் கொண்டவள் மூச்சு விட சிரமப்பட்ட படியே மயங்கி கடலின் அடிப்பாகத்தை நோக்கி செல்லத் துவங்கியது வரை மட்டுமே அவளது நினைவில் இருந்தது.கண் விழித்துப் பார்க்கும் பொழுது மீண்டும் அதே கப்பலில் அதே படுக்கையில் இருக்கிறாள்.


‘இது எப்படி சாத்தியமானது’என்று அவளுக்குத் தெரியவில்லை.ஆனால் அவளது உடல் கடுமையான குளிரில் நடுங்கிக் கொண்டு இருக்க,அதை குறைக்கும் வண்ணம் அவளுக்கு கனமான கம்பளியும்,அறையில் ஹீட்டரும் ஓடிக் கொண்டிருந்தது.
அவளது பற்கள் குளிரின் காரணமாக நடுங்கிக் கொண்டிருந்தது.கதவை திறக்கும் சத்தம் கேட்டதும் திரும்பி யாரென்று பார்த்தவள் உள்ளே நுழைந்தவனைப் பார்த்ததும் வெறுப்புடன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.உள்ளே வந்தவனோ அவளது பார்வையை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.


அவளுக்கு எதிரில் இருந்த மோடாவில் அமர்ந்தவன் வெகுநாள் பழகிய நபரிடம் பேசுவது போல இயல்பான குரலில் பேசத் தொடங்கினான்.முகத்தில் அதே ஒட்ட வைத்த புன்னகையுடன்…


“கடலில் நீந்திய அனுபவம் எப்படி இருந்தது?ரொம்ப ஜாலியா இருந்து இருக்கும் இல்ல…”


“எதுக்கு என்னைக் காப்பாத்தின?”


“கண்டிப்பா உன்னை காப்பாத்துற நோக்கத்தில் இல்லை”


“பின்னே…”


“உனக்கு நேரம் நல்லா இருக்கு போல…உன்னை கடலில் தள்ளி விட்டதை தூரத்தில் வந்து கொண்டு இருந்த ரோந்துக் கப்பல் பார்த்துடுச்சு.அதுல இருந்த ஆபிசர்ஸ் வேகமா கப்பலை நோக்கி வர ஆரம்பிச்சுட்டாங்க… அவங்க வந்து உன்னைக் காப்பாத்திட்டா அப்புறம் நான் என்ன செய்யுறது?

 


அதுதான் நீ கப்பலில் இருந்து கால் தவறி விழுந்துட்டனு சொல்லி அவங்களை நம்ப வைக்குறதுக்காக நானே உன்னை மறுபடி காப்பாத்த வேண்டியதா போச்சு…கவலையே படாதே அடுத்த முறை ஆட்கள் வர்றாங்களா இல்லையானு ஒருமுறைக்கு இரண்டு முறை செக் பண்ணிட்டு தள்ளி விடறேன்.”

 


“நீ எல்லாம் மனுஷன் தானா?”


“நான் எப்போ அப்படி சொன்னேன்?”புன்னகை மாறாமலே அவன் பதில் அளிக்க அவளுக்கு கோபம் வந்தது.


‘திட்டினாக் கூட முகத்தை சிரிச்ச மாதிரி வச்சுக்கிறது என்ன கண்றாவி பழக்கமோ…சிரிச்சுக்கிட்டே அமைதியா இருந்தா நீ என்ன நினைக்கிறன்னு நான் எப்படிடா கண்டுபிடிப்பேன்’என்று அவனை திட்டித் தீர்த்தாள்.


அவனது கழுத்தை இடமும் வலமுமாக மெல்ல அசைத்து டையை சரி செய்தவாறே அவளிடம் தொடர்ந்து பேசினான்.


“எவ்வளவு திட்டுறியோ திட்டிக்கோ…நீ உன்னோட வாழ்நாளின் கடைசி நிமிஷத்தை எண்ணிக்கிட்டு இருக்க…என்ன ஒண்ணு..நீ எப்போ சாகப் போறன்னு உனக்குத் தெரியாது.எனக்குத் தான் தெரியும்.ஏன்னா உன்னோட தலை எழுதுனது பிரம்மா இல்லை…இந்த ஈஸ்வர்…ருத்ரேஸ்வர்.


இனி உன்னோட வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நான் நினைச்ச மாதிரி தான் நடக்கும்…நடக்கணும்..புரிஞ்சுதா?”


“ரொம்ப மிரட்டாதே…அவர் இந்நேரம் என்னைத் தேட ஆரம்பிச்சு இருப்பார்.அவர் கையில் நீ மாட்டுன அடுத்த நிமிஷம் உனக்கு பரலோகம் தான்” குளிரில் பற்கள் தந்தியடித்தாலும் அவனை திட்டாமல் இருக்க முடியவில்லை அவளால்.


“அவன் என்னை சந்திக்கணும்ன்னு அவன் நினைச்சா பத்தாது..நான் நினைக்கணும்..அப்போ தான் அவனால என்னைப் பார்க்க முடியும்.சும்மா பைத்தியம் மாதிரி உளறாம அடங்கி ஒடுங்கி இரு”


“என்னைக் கொல்றதுன்னு தான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டியே.. அப்புறம் எதுக்கு இந்த வேலை எல்லாம் செய்யுற?” என்றவள் கைகளால் கம்பளியையும்,கண்களால் ஹீட்டரையும் காட்ட,அப்பொழுது அவன் முகத்தில் வந்து போன பாவனையில் அவளது முதுகுத்தண்டு சில்லிட்டது.


“ஹே சில்லக்கா… ஆட்டை வெட்டுறதுக்கு முன்னாடி வரை அதுக்கு ராஜ உபச்சாரம் நடக்கும்னு நீ கேள்விப்பட்டது இல்லையா? அதே மாதிரி தான்…என்னோட காரியம் நடக்கிற வரை உன்னோட உயிரோட வச்சு இருப்பேன்.அதுக்கு அப்புறம்…” என்றவனின் பார்வையை பார்த்து பீதியில் உறைந்து போனாள் பெண்ணவள்.


“எ…என்னை வச்சு மிரட்டி அவர்கிட்டே ஏதாவது பணம் வாங்கப் போறியா?”


“பணமா?…நான் நினைச்சா உனக்கும் , அந்த மூர்த்திக்கும் சேர்த்து ஒரு விலை கொடுத்து வாங்க முடியும்.யாருக்கு வேணும் பணம்?”என்று இகழ்ச்சியாக உதட்டை பிதுக்கினான்.
அவளின் அதிர்ந்த பார்வையை கண்டு கொள்ளாது இண்டர்காமை எடுத்து யாரிடமோ ஏதோ புரியாத மொழியில் பேசினான்.


“சாப்பாடு கொண்டு வர சொல்லி இருக்கேன் …சாப்பிடு” என்றவன் சொல்லி வாய் மூடும் முன் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே ஒரு வெள்ளைக்காரன் ட்ராலியில் உணவை மூடி எடுத்து வர, அதுநேரம் வரை உணவைப் பற்றி கவலைப்படாத வானதிக்கு பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்தது.


‘இவனிடம் இருந்து இப்போதைக்கு தப்பிக்கவாவது தெம்பு வேண்டும்.அதற்கு கொஞ்சம் சாப்பிட்டு கொள்வது நல்லது’ என்று அவசர முடிவுக்கு வந்தவள் வேலையாள் வெளியே சென்றதும் சந்தேகமாக அவனைப் பார்த்தாள்.


“இந்த சாப்பாட்டில் எதுவும் கலந்து வச்சு இருக்கியா?”


“இதுவரை உனக்கு சாப்பாட்டில் விசம் வைத்துக் கொல்லனும்ன்னு நான் நினைக்கலை.நீ சொன்னதுக்கு அப்புறம் தான் தோணுது”என்று அவன் சொல்ல அவளுக்கு வாயைக் கொடுத்து தானே மாட்டிக் கொண்டோமோ என்று எண்ணத் தோன்றியது.


அவனது பேச்சை அசட்டை செய்து விட்டு வேகமாக உணவுத் தட்டைத் திறந்து பார்த்தவளின் முகம் அஷ்டகோணலாக மாறியது. அடுத்த நொடி வேகமாக வாஷ்பேசினுக்கு விழுந்தடித்துக் கொண்டு சென்று வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.


அவளுக்காக கொண்டு வரப்பட்ட உணவு ஏதோ அழுகிப்போன மாமிசம்.அதன் மேலே புழுக்கள் நெளிந்து கொண்டு இருந்தது. வாந்தி எடுத்து முடித்தவுடன் தளர்ந்து போன உடலுடனும், மனதுடனும்,கண்களில் வெறுப்பை கக்கியவாறே அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.


“கண்டிப்பா நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட…”
“ஹ…நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க..இங்கே உன்னை கடத்திக்கிட்டு வந்து மூணு வேலையும் உனக்கு வயிறார சோறு போடுவேன்னு நினைச்சியா? இன்னைக்கு இது தான் உனக்கு சாப்பாடு…இஷ்டம் இருந்தா சாப்பிடு..இல்லாட்டி பட்டினி கிட…” என்று சொல்லி விட்டு அறையை விட்டு அவன் வெளியேற அவன் பரந்த முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி.


தீ தீண்டும்…

Post a Comment

புதியது பழையவை