அத்தியாயம் 15
விடியும் வரை ஒரு நிமிடம் கூட கண்ணயராமல் எல்லா இடங்களிலும் விசாரித்துக் கொண்டு இருந்தான் சம்ஹார மூர்த்தி.மணி காலை எட்டு மணியைத் தாண்டி விட்டது. இரவு வானதி காணாமல் போனதில் இருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அவன் குடிக்கவில்லை. இரவு முழுவதும் அவனும் தூங்கவில்லை. மற்றவர்களையும் அவன் தூங்க விடவில்லை.
அவனுக்கும் வானதிக்கும் குறிக்கப்பட்ட முஹூர்த்தம் ஏழு மணிக்கு…இந்நேரம் வானதி அருகில் இருந்து இருந்தால் அவனது மனைவி ஆகி இருப்பாள்.அந்த எண்ணமே அவனது ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.
‘எவ்வளவு ஆசையாக இருந்தேன்…எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தேன்…கடைசி நேரத்தில் இப்படி நடந்து விட்டதே…அவனிடம் மாட்டிக் கொண்டு அவள் என்ன பாடுபடுகிறாளோ தெரியவில்லையே.அந்த பைத்தியக்காரன் அவளை என்ன பாடு படுத்துகிறானோ தெரியவில்லையே.’ என்று எண்ணியவனின் நெஞ்சம் முழுக்க ஈஸ்வரின் மீதான வன்மத்தில் நிறைந்து இருந்தது.
‘இத்தனை நாள் பாடுபட்டு அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டு என்ன பயன்? கடைசி நேரத்தில் அந்தப் பைத்தியக்காரனிடம் தன்னுடைய வானதியை இழந்து விட்டோமோ’ என்ற குற்ற உணர்வு அவனை ஆட்டி வைத்தது.
‘விடக்கூடாது … அவனிடம் இருந்து அவளை மீட்டே ஆக வேண்டும்’ என்ற எண்ணம் தோன்ற மீண்டும் புது உத்வேகத்துடன் தேடுதல் வேட்டையைத் தொடங்கினான்.
முதல் நாள் இரவு துறைமுகத்தில் இருந்து கிளம்பிய சம்ஹார மூர்த்தியின் கப்பல்கள் அனைத்தைப் பற்றிய தகவல்களும் அவனுக்கு வந்து சேர்ந்து விட்டது. எட்டு சரக்குக் கப்பல்,பதினைந்து பயணிகள் சொகுசுக் கப்பல், இருபது மீன்பிடி படகுகள் அது தவிர அவனது சொந்தப் பயன்பாட்டிற்காக வைத்திருக்கும் இரண்டு அதிநவீன சொகுசுக் கப்பல் எல்லாமே நேற்று இரவில் துறை முகத்தை விட்டு கிளம்பி இருந்தன.
‘என்னை குழப்புறதுக்காகவே இப்படி செஞ்சு இருக்கான்’என்று பல்லைக் கடித்தான் சம்ஹார மூர்த்தி.
அவன் இருக்கும் நிலை பார்த்து அவனது அடியாள் சேகருக்கு பரிதாபம் தான் வந்தது. அதே நேரம் அவனது தயக்கத்தின் காரணமும் புரியாமல் அவன் முன்னே சென்று நின்றார்.
“சார் நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க? அந்த ஈஸ்வர் என்ன உங்களை விட பெரிய ஆளா…நீங்க நினைச்சா அவனை என்ன வேணா செய்யலாமே…ஏன் இப்படி தயங்கிக்கிட்டு இருக்கீங்க…”
“சேகர்…நாம எடுத்த விஷயத்தில் ஜெயிக்கணும்னா முதல் பாடம் எதிராளியை குறைச்சு மதிப்பிடக் கூடாது. அவனோட பலத்தை குறைச்சு எடை போட்டாலே நாம தோத்துடுவோம். இப்போ சிக்கல் அவனை தோற்கடிக்கிறது மட்டும் இல்லை…அவனிடமிருந்து என்னோட வானதியை பத்திரமா மீட்கிறது…நாம ஆத்திரத்தோட ஏதாவது செய்யப் போய் அது வானதியை பாதிச்சுடக் கூடாது.புரியுதா?”என்று விளக்கம் கொடுத்தவனின் கண்ணுக்குள் பயந்து கொண்டே புத்தகத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்ட வானதியின் முகம் கண் முன்னே வந்து போனது.
“வானதி” அவன் குரல் மென்மையாக ஒருமுறை சொல்லிப் பார்த்தது.அடுத்த நிமிடம் தன்னுடைய கையில் இருந்த லிஸ்டை பார்க்கத் தொடங்கினான்.அதில் இருந்த பயணிகளின் கப்பலை தனியே ஒதுக்கி விட்டான்.
“ஏன் சார்…அந்த கப்பல்ல அவங்க இருக்கலாம் இல்லையா?”
“நோ…அதுக்கு வாய்ப்பு இல்லை…பயணிகள் கப்பல்ல நிறைய பேர் இருப்பாங்க.யாராவது ஒருத்தர் பார்த்தாலும் அது அவனுக்குத் தான் ஆபத்து…அதனால கண்டிப்பா அங்கே வச்சு இருக்க மாட்டான்”என்று சொல்லி விட்டு மத்த லிஸ்ட்களை பார்வையிட, விமானம் வழியாக அவன் எங்கேயும் செல்லவில்லை என்பதை உறுதி செய்தான் அவனது வேலையாள்.இருப்பினும் ஈஸ்வர் திருட்டுத்தனமாக வேறு நபரின் பாஸ்போர்டை பயன்படுத்தி சென்று இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் விமான நிலையத்தின் சிசிடிவி ரெக்கார்டிங்கையும் வாங்கி வைத்துக் கொண்டான்.
“சேகர்…ஊரில் இருக்கிற முக்கியமான எல்லா ஸ்டார் ஹோட்டல்…நம்ம ஊர் மட்டும் இல்லை..வெளியுர்லயும் எல்லா ஹோட்டல்லயும் நம்ம ஆளுங்களை விட்டு விசாரிக்க சொல்லு…எல்லா இடத்துக்கும் அந்த ஊரில் இருக்கிற நம்மோட ஆளை அனுப்பி விசாரிக்க சொல்லு.நமக்கு நேரம் கம்மியா இருக்கு…சீக்கிரம் ஆகட்டும்”என்றவன் அடுத்தடுத்த வேலைகளை ஆரம்பித்து விட்டான்.
அதன் பிறகு விமான நிலையத்தின் சிசிடிவிக்களை ஓட விட்டுப் பார்த்தான்.அதில் இருந்தும் அவனால் எந்த தகவலும் கண்டுபிடிக்க முடியாமல் போனது.அதில் சந்தேகப்படும்படி எந்த விஷயமும் இல்லாததால் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றான்.
‘மீன்பிடி படகுகள் அதிக தொலைவு கடலுக்குள் செல்ல முடியாது…அடிக்கடி ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருப்பவர்களின் கவனத்தைக் கவரும்’என்று தனக்குள்ளாகவே எண்ணிக் கொண்டவன் அந்த லிஸ்டையும் தூக்கி தூர வைத்தான்.
மீதம் இருப்பது அவனது சரக்கு கப்பல்களும்,அவனது சொகுசு கப்பலும் தான்…
‘எட்டு சரக்குக் கப்பல்…இரண்டு சொகுசுக் கப்பல்… இதில் எந்தக் கப்பலில் அவளை அடைத்து வைத்திருப்பான்?.’ சம்ஹார மூர்த்திக்கு குழப்பமாக இருந்தது.
‘இயல்பான மனநிலை உள்ள ஒரு மனிதன் என்றால் அவளை சொகுசுக் கப்பலில் தான் அடைத்து வைத்திருப்பான்.ஆனால் இவன் தான் பைத்தியமாயிற்றே…வேண்டுமென்றே அவளை சரக்குக் கப்பலில் அடைத்து வைத்து கொடுமை செய்தாலும் செய்வானே’என்று எண்ணியவன் இறுதியில் இரண்டையும் சரி பார்க்க முடிவு செய்தான்.
சரக்குக் கப்பல் எந்தெந்த நகரத்திற்கு செல்கிறது என்பதை பார்த்தான். இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா,அமெரிக்கா,அந்தமான்,சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா இந்த எட்டு இடங்களுக்கும் அன்றைய தேதியில் கப்பல் புறப்பட்டு இருந்தது.அந்தக் கப்பல்களை பின்தொடர்ந்து வேறு கப்பலில் சென்றாலும் பிடிக்க முடியாது.
அதற்குப் பதிலாக மாற்று ஏற்பாட்டை செய்தான் சம்ஹார மூர்த்தி.கடல்படை அதிகாரிகளின் உதவியைப் பெற்றவன் தன்னுடைய ஆட்களை ஒவ்வொருவரையும் ஒரு தனி விமானத்தில் அனுப்பி அவர்களுடன் கடல்படை அதிகாரியையும் அனுப்பி வைத்தான்.
ஏதேனும் சாக்கு சொல்லி கப்பலின் உள்ளே நுழைந்து எந்தக் கப்பலில் ஈஸ்வர் இருக்கிறான் என்பதை தெரிந்து கொண்டால் மட்டும் போதும் என்று எண்ணியவன் அதற்கேற்ப அவனது ஆட்களுக்கு ஆணைகள் பிறப்பித்தான்.
ஒவ்வொருவரும் கையில் துப்பாக்கியுடன் ஒரு விமானத்தில் ஏறி சென்று விட அடுத்து மீதம் இருக்கும் ஈஸ்வரின் இரண்டு சொகுசு கப்பல்களை எப்படி அணுகுவது என்று அவன் யோசித்துக் கொண்டு இருக்க அவனது ஆள் சேகர் மெல்ல அவனை நெருங்கி தயக்கத்துடன் பேசினான்.
“சார்…”
“சொல்லு சேகர்…”
“சார்…உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியணும்ன்னு இல்லை…இருந்தாலும் இதை எல்லாம் சொல்லுறது என்னோட கடமை…”
“பீடிகை போடாம விஷயத்தை சொல்லுங்க சேகர்”என்று சொன்னவன் தலையை பின்னால் சரித்து சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொள்ள சேகர் மடமடவென்று பேசத் தொடங்கினான்.
“சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி இருக்கான்.ஒருவேளை நீங்க தேடுறதை நிறுத்திட்டா…அவங்களுக்கு பதிலா வேற பொண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டா இந்தப் பிரச்சினையில் இருந்து ஈஸியா வெளி வந்திடலாம்.அதுவும் இல்லாம…”சம்ஹார மூர்த்தியின் இமைக்காத பார்வையில் ஒரு நொடி தயங்கியவன் மீண்டும் பேசத் தொடங்கினான்.
“அந்தப் பொண்ணைத் தேடுறதுக்காக இவ்வளவு செலவு செய்யணுமா? இத்தனை விமானம்…இத்தனை ஆட்களுக்கு சம்பளம்…அது தவிர அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் ..அப்படி இப்படின்னு ஏகப்பட்ட பணம் போய்க்கிட்டு இருக்கு சார்.அதான்”என்றவன் சம்ஹார மூர்த்தி எழுந்து வரவும் கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.
தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டவன் அசால்ட்டாக ஒரு துப்பாக்கியை எடுத்து அவனை நோக்கி குறி வைத்தான்.
“ சா…சார்…”
“ஏதோ சொன்னியே…இப்ப சொல்லு”என்று பேசியபடியே துப்பாக்கியை அவனது வாயின் உள்ளே திணித்தான்.
“ஷா…ஷாற்”அவனது வாய் பயத்தில் குழறியது.
“நானே என்னோட வானதியை கடத்திட்டு போயிட்டானேன்னு இருக்கேன்.இந்த நேரத்தில் வந்து பணக்கணக்கு சொல்லுறியே…உன்னை என்ன செய்யலாம்?அவளுக்காக இன்னும் எத்தனை கோடி வேணும்னா செலவு செய்வேன்டா.அவ யார்னு நினைச்ச…அவளோட வாழ்ந்தா தான் எனக்கு அது வாழ்க்கை.. இன்னொரு முறை இப்படி பேசின…கொன்னு கடல்ல வீசிடுவேன்”என்று ஆத்திரத்துடன் கூறியவன் அங்கே நிற்கவும் பிடிக்காமல் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டான்.
கட்டிலில் உருண்டு கொண்டு இருந்தாள் வானதி.பசியில் அடிவயிறு கிள்ளியது.முதல் நாள் மதியம் சாப்பிட்டது.இரவு நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சம்ஹார மூர்த்தியுடன் சாப்பிடலாம் என்று நினைத்து இருந்தததால் இரவு உணவை சாப்பிடவே இல்லை அவள்.அதற்குப் பிறகும் கூட அடுக்கடுக்கான அதிர்ச்சியில் உடலும்,மனமும் சோர்ந்து போய் விட்டது.வயிற்றில் கொஞ்ச நஞ்சம் இருந்த உணவையும் அந்த கடன்காரன் வாந்தி எடுக்க வைத்து விட்டான்.
இப்பொழுது பசி தாங்க முடியவில்லை அவளால்.அனாதையாக ஆசிரமத்தில் வளர்ந்த பொழுது கூட அவளுக்கு மூன்று வேளையும் உணவு கிடைத்து விடும்.ஒருநாள் கூட அவள் பட்டினி கிடந்தது இல்லை.
இந்த ராட்சசனோ அவளுக்கு இன்னும் குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கவில்லை.அவனிடம் போய் கெஞ்சிக் கேட்டு உணவை வாங்கி சாப்பிடவும் அவளுக்கு மனம் இல்லை.முடிந்தவரை பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருக்க முயற்சி செய்தாள்.
அப்படி அவள் நிம்மதியாக இருக்க விட்டு விடுவானா என்ன?
“வாயில் மௌத் ஆர்கானை (mouth organ) வைத்து வாசித்தபடி அறைக்குள் குதூகலமாக நுழைந்தான்.அவனுக்கு பின்னாலேயே வந்த பணியாள் ஒருவன் முகத்தில் மாஸ்க் போன்ற ஏதோ ஒன்றை மாட்டிக் கொண்டு அந்த உணவை அப்புறப்படுத்தி எடுத்து செல்ல,அப்பொழுது தான் அவளுக்கு இயல்பாக மூச்சு விடவே முடிந்தது.
மோடாவை இழுத்து போட்டு அதில் அமர்ந்தவன் வாசிப்பை நிறுத்தவே இல்லை.
‘பெரிய இளையராஜா பேரன்… வாசிக்கிறதை நிப்பாட்டுடா பரதேசி’ பசியினால் அவனை திட்டினாளா அல்லது அவளை கடத்தி வைத்து இருக்கும் ஆத்திரத்தில் திட்டினாளா என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்.
அவளுக்கு தன்னுடைய செய்கை எரிச்சலைக் கொடுப்பதை நன்கு அறிந்து வைத்துக் கொண்டு தான் அவன் அதை மேலும் தொடர்கிறான் என்பது அவளுக்கு புரியவே மேலும் ஆத்திரத்தை முகத்தில் காட்டாமல் இருக்க பெரும்பாடு பட்டாள் வானதி.
“ஹே..சில்லக்கா…சாப்பிடலையா நீ?”என்றான் ஒன்றும் அறியாதவனைப் போல…
“ஏற்கனவே நீ கொடுத்த சாப்பாட்டிலேயே வயிறு ரொம்பி இருக்கு….” என்றாள் குரோதத்துடன்.
“அப்படியா?”என்று அசட்டையாக தோள் குலுக்கியவன் இண்டர்காமை எடுத்து பேசி உணவை கொண்டு வர செய்தான்.
இந்த முறையும் முன்பைப் போலவே ட்ராலியில் வைத்து உணவு வகைகள் கொண்டு வரப்பட அதை எல்லாம் ஒருவித அச்சத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் வானதி.
இவளுக்குத் தான் முன் அனுபவம் இருக்கிறதே… ‘கண்டிப்பாக இவன் நல்லபடியாக எதுவும் செய்து இருக்க மாட்டான்’ என்று அவள் மனம் உறுதியாக நம்பியது.அவனையே வெறித்தவாறு அவள் அமர்ந்து இருக்க அவனோ நிதானமாக மௌத் ஆர்கானை பையில் போட்டு விட்டு இரு கைகளையும் பரபரப்பாக தேய்த்து விட்டுக் கொண்டான்.
“பசிக்குமே…சாப்பிடலாமா?”
“எனக்கு பசிக்கலை…”
“நிஜமாவா?” அளவுக்கு அதிகமாகவே ஆச்சரியம் காட்டினான்.
‘இவனை அடிப்பதற்கு வாகாக இந்த ரூம்ல ஒண்ணுமே இல்லையே’என்ற எண்ணத்துடன் அறையை சுற்றி பார்வையால் துழாவினாள்.
அவளின் பார்வையையும் சுற்றிலும் அவள் தேடுவதையும் கண்டுகொண்டவனின் முகம் ஒரு நொடி இறுக்கமாகி பின் மீண்டும் அதே புன்னகையை பூசிக் கொண்டது.
“சரி எனக்கு பசிக்குது நான் சாப்பிடப் போறேன்”என்று அறிவித்தவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் இரண்டில் ஒரு தட்டை எடுத்து அதில் இருந்த உணவை உண்ணத் தொடங்கினான்.
உணவின் மணம் அவளது நாசியின் வழியே சென்று அவளது பசியை மேலும் தூண்டியது.
“சிக்கன் பிரியாணி….செம டெஸ்ட் …என்ன ருசி…என்ன ருசி” என்று ரசித்து சாப்பிட்டவன் உணவின் ருசிக்காக அப்படி சப்புக் கொட்டி சாப்பிட்டானா இல்லை அவளை வெறுப்பேற்றுவதற்கு அப்படி செய்தானோ..ஆனால் அவனது செய்கையால் முன்பை விட அவளது பசி அதிகமானது மட்டும் நிஜம்.
‘கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் எப்படித் தான் சாப்பிடுகிறானோ’
பிச்சை கேட்பது போல அவனிடம் கெஞ்சி உணவைக் கேட்கவும் அவளால் முடியவில்லை.அவன் உணவின் ஒவ்வொரு கவளத்தையும் தன்னுடைய கண் முன்னே அமர்ந்து ரசித்து ருசித்து சாப்பிட பார்வையை அவன் புறம் கூட திருப்பாமல் பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு கையால் வயிற்றை அழுத்திப் பிடித்து பசியை கட்டுபடுத்த முயன்றவாறே அமர்ந்து இருந்தாள்.
சாப்பிட்டு முடித்ததும் அவளை ஒரு பார்வை பார்த்தவன் மெல்ல தோளை அசட்டையாக குலுக்கி விட்டு அங்கிருந்து நகர அவன் அறையை விட்டு வெளியேறும் வரை காத்திருந்தவள் அடுத்த நொடி மின்னலென பாய்ந்து அந்த உணவுப் பாத்திரத்தை வேகமாக திறந்துப் பார்த்தாள்.
உள்ளே அவளுக்காக காத்திருந்தது அவள் எதிர்பார்த்ததைப் போல சிக்கன் பிரியாணி இல்லை…
செவ்வக வடிவிலான சிறிய கண்ணாடி பாத்திரம் அதன் உள்ளே உயிரோடு ஒரு கருநாகம் படமெடுத்து ஆடிக் கொண்டு இருந்தது.அதைப் பார்த்து பயந்தவள் ‘வீல்’என்ற அலறலுடன் மயங்கி சரிந்திருந்தாள்.
அவளின் நடவடிக்கை அனைத்தையும் தன்னுடைய அறையில் இருந்த கேமரா மூலம் பார்த்துக் கொண்டே இருந்தவன் அவள் மயங்கி விழுந்ததும் கொஞ்சமும் பதட்டம் அடையாமல் போனை எடுத்து பேசினான்.
“டாக்டர் அவ மயங்கிட்டா….நீங்க உங்க வேலையை ஆரம்பிக்கலாம்.எதுக்கும் முதலில் ஒரு மயக்க ஊசியை போட்டுட்டே வேலையை ஆரம்பிங்க…பாதியில் முழித்தால் வீணா பிரச்சினை செய்வா…”என்று கூறியவன் போனை வைத்து விட்டு மயங்கிக் கிடந்தவளையே கேமரா மூலம் பார்க்கத் தொடங்கினான்.
“உன்னோட வாழ்க்கையில் இனி நீ வெறும் பொம்மை தான் சில்லக்கா…உன்னை ஆட வைப்பவனும்…ஆட்டுவிப்பவனும் நான் ஒருவனே”என்று சத்தமாக சொல்லிக் கொண்டவன் மீண்டும் மௌத் ஆர்கானை எடுத்து சலனமேயில்லாமல் வாசிக்கத் தொடங்கினான்.
தீ தீண்டும்…
கருத்துரையிடுக